திருவிக,சிங்காரவேலு முதலியார்:கடிதங்கள்

அன்புள்ள திரு ஜெயமோகன்,

“அபிதான சிந்தாமணி” பற்றிய உங்கள் எழுத்தை  [அபிதான சிந்தாமணி: கடல் நிறைந்த கமண்டலம். ]படித்தேன் !! பிரமிப்பும், சோகமும் ஒருசேர அடைந்தேன் !!

மிக்க நன்றி.

உ.வெ.சாமிநாத்ய்யரின் பணிக்கு நிகரான தேடுதல் பிரமிப்பூட்டுகிறது !! இந்த படைப்பின் இன்றைய நிலை கவலையளிக்கிறது !!

தமிழின் பழைய பொக்கிஷங்களை மீட்டு பாதுகாக்க, அரசுசாரா, பொது நல அமைப்புகள் ஏதேனும் உள்ளனவா ? நம்மால் முடியக்கூடியது ஏதேனும் உளதா ?  தனியார் பல்கலைகழகங்களை இதற்காக முயலவைக்க உங்களைப்போன்ற ஆர்வலர்கள் தூண்டுகோலாக இருக்கவேண்டும் என்பது என் அவா !!

குறிப்பு : தமிழ் தட்டச்சு கணணியை பதிவிறக்கம் செய்து இந்த மின் அஞ்சலை தமிழில் முயற்சித்துள்ளேன் !!

இப்படிக்கு,

வெ. கண்ணன்

பெங்களூர்.

அன்புள்ள கண்ணன்

தமிழ் கல்வித்துறையும் அரசியல் மயமாகியிருக்கிறது. ஒருவகையான வெறி மட்டுமே காணக்கிடைக்கிறது. வெறுப்பை உருவாக்குவதும் அதைப்பரப்புவதுமே தமிழார்வம் என்ற நிலை. நீடித்த உழைப்பு உருவாக்கும் சாதனைகள் என சமீப காலமாக எவையுமே கண்ணில் படுவதில்லை. இந்த வெறுப்பலைகளின் , அரைவேக்காட்டு ஆய்வுகளின் காலம் முடிந்து ஒரு காலகட்டம் வரக்கூடுமென எதிர்பார்க்கலாம்.
ஜெ

**********

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

தாங்கள் எழுதிய திரு.வி.க. அவர்களின் ஓர் அமரகாதல் பற்றியக் கட்டுரையை இன்று தங்கள் இணைய தளத்தில் படித்தேன். மிகவும் சிறப்பாக புதிய பார்வையோடு எழுதி இருந்தது மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தமிழ் உணர்வும், சைவ  தத்துவ ஞானமும் கொண்டு இயங்கியவர், திரு.வி.க. அவர்கள். அவரது தொழிற்சங்கப் பணிகளும் வரலாற்றில் இடம் பிடிக்கத் தக்கவை. பன்முகத் தன்மையோடு தன்னை வரலாற்றில் நிலைநிறுத்திய அறிஞரைத் தாங்கள் இனம் கண்டு எழுதியது தங்கள் எழுத்திற்கு பெருமை சேர்க்கும். தங்களது சங்க சித்திரங்களை ஆனந்த விகடனில் படித்து ரசித்திருக்கிறேன். சங்க இலக்கியங்களுக்கு தாங்கள் கொடுத்த விளக்கங்கள் பண்டைய தமிழ் இலக்கியத்தில் ஒரு புதுவகையான இரசனையை அறிமுகப்படுத்தியது.

தனுஷ்

அன்புள்ள தனுஷ்,

திருவிக போன்றவர்களை நாம் விரிவாக நினைவுகூரவேண்டிய காலம் இது. இரு விஷயங்களுக்காக. ஒன்று அவரது சமரஸப்பார்வை. எதிலும் நடுநிலை எடுக்கும் நோக்கு. பொய்யான தீவிரங்கள் வெறிகள் தூண்டப்பட்டு வரும் இக்காலகட்டத்தில் அவர் ஒரு முன்னோடி விளக்கு போல
ஜெ

************

அன்புள்ள ஜெ,

அமரகாவியம் மறக்கப்பட்ட முன்னோடிகளை உங்கள் மூலம் அறிய இன்னொரு வாய்ப்பு. திரு.வி.க வின் சைவ முகமும், தொழிற்சங்க முகமும் பரவலாக அறியப்பட்ட்து. அவருள் நிறைந்திருக்கும் அமரகாதலை உங்கள் மூலம் அறிய நேரிட்ட்து சிறப்பானது. அவரின் அன்பு கனிய ஆரம்பித்ததே ஆன்மிகத்தை மேலும் அவர் முன்னெடுக்க ஏதுவாயிருந்திருக்கலாம்.தமிழ்ச்சூழல் இடங்கொடுத்து , இதுபற்றியெல்லாம் படிக்கும் ஆர்வம் உள்ள இயக்குனர்களின் பார்வைக்கு இது வருமாயின் , ஒரு மிகச்சிறந்த வாழ்க்கைச் சித்திரம் படமாக்கப் பட காத்திருப்பதாக எனக்குத் தோன்றியது.

அன்புடன்,

ம்தி

***

அன்புள்ள மதி

என் நோக்கில் திருவிகவின் காதல் தெய்வீகமாக ஆவது ஒரே விஷயத்தால்தான். ஆன்மீகதளத்தில் சப்ளிமேஷன் என்று சொல்லப்படும் ஒரு விஷயம் உண்டு.அடிபப்டை உணர்வுகளை மேலும் மேலும் நுண்மைப்படுத்தி ஆழமாக்கி ஆன்மீகமான  முழுமைத்தளம் நோக்கிக் கொண்டு செல்லுதல். காமம் காதலாக ஆவதே ஒருவகை உன்னதமாக்கல்தான். வீரம் விளையாட்டுகளாக ஆவதே ஒருவகை உன்னதமாக்கல். இங்கே காதலை மேலும் உன்னதப்படுத்திக் கொள்கிறார் திருவிக. அதை மானுட அன்பாக ஆன்மீக விடுதலைக்கான வழியாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்
ஜெ

****

ஜெயமோகன் அவர்களுக்கு , 

   கமண்டல கடலின் கரையில் நின்று கொண்டு இக்கடிதம். அபிதான சிந்தாமணி என்ற பெயர் மட்டுமே தெரிந்து வைத்திருந்த எனக்கு அதன் பின்னால் ஒரு மனிதனின் நெடிய வாழ்க்கை பயணம் ஈடு வைக்க பட்டுள்ளது என்பதை நினைக்கும் போது  தமிழர்களின் வரலாற்று ஞானம் வியக்க வைக்கிறது. சென்னை பதிப்பு தினதந்தியில் வரலாற்று சுவடுகள் என்று ஒரு தொடர் வருகிறது. அதில் தமிழ் சினிமா உலகின் நடிகர், நடிகைகள் பற்றி விரிவாக எழுதுகின்றனர். அவற்றை படிக்கும் இளைய சமுதாயம் வரலாற்று நாயகர்களாக யாரை கொள்ளும்?. ஒரு பத்திரிக்கை நிருபராக இருந்து கொண்டு நமது சமுதாயம் கடந்து வந்த பாதை கூட தெரியாமல் இருக்கிறேன் என்பதை நினைக்கும் போது நமது கல்வி சூழலின் நிலைமையையும் , என்னுடைய குறுகிய வாசிப்பு தளத்தையும் நொந்து கொள்ள வேண்டியதாய் இருக்கிறது.
அன்புடன்
அரவிந்த் குமார்.
 

அன்புள்ள அரவிந்த் குமார்,

நீடித்த தியாகம் மூலம் உருவாகும் சாதனைகளை இனம் கண்டு அங்கீகரிப்பதுதான் ஒரு உயர்ந்த பண்பாட்டின் அடையாளம். அதை நிகழ்த்த வேண்டியவை ஊடகங்களே. ஆனால் நம் ஊடங்கள் பரபரப்புக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன. ஆகவே ஆழமில்லா அலைகள் அதிகம் கண்ணுக்கு தென்படுகின்றன. ஆழம் மறைந்து விடுகிறது. ஊடகவியலாளராக நீங்கள் அதை உணர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது
ஜெ

****

அன்புள்ள ஜெ

அபிதான சிந்தாமணி என்ற நூலையோ அதன் ஆசிரியரையோ நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை. இத்தனைக்கும் நெடுங்காலமாகவே நான் இலக்கிய வாசகனாக இருக்கிறேன். என்னுஐய குறைபாடா இல்லை நம் கல்வி அமைப்பின் குறைபாடா என்று இதைச் சொல்லத்தெரியவில்லை. உங்கள் கட்டுரை மிக உணர்ச்சிகரமானதாக இருந்தது நன்றி

செல்லம் சிவராஜ்

அன்புள்ள செல்லம்

உண்மையில் கல்வித்துறையே நாம் குறை சொல்ல வேண்டும். இன்றுவரை அபிதான சிந்தாமணி குறித்து எந்தப் பாடத்திலும் எதுவும் இடம்பெற்றதில்லை. காரணம் அது புராணங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம்தான்

ஜெ

**
அன்புள்ள ஜெயமோகன்

திருவிகவைப்பற்றி நீங்கள் எழுதிய வரிகள் மிக மிக உணர்வூட்டுவன. தமிழ் மரபில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற சொல் இருக்கிறதே ஒழிய அந்த வழக்கம் எப்போதுமே இருந்தது கிடையாது. உயர்சாதிகளில் ஒருத்திக்கு ஒருவன் என்ற முறை இருந்தது. ஆகவே விதவைகள் ஒடுக்கப்பட்டார்கள்.

ஒருவனுக்கு ஒருத்தி என்பது தமிழ் சான்றோர்கள் கண்ட ஒரு கனவு. திருவிக அதை ஒரு  ஆன்மீக அனுபவ உண்மையாக மாற்றியிருக்கிறார் என்று படித்தபோது தோன்றியது . ஒரு சமூகத்தின் சான்றோர்கள் எப்போதுமே அந்த சமூகத்தின் மிக உன்னதமான இலட்சியக்கனவான வாழ்க்கையை வாழ்வார்கள் என்று தோன்றுகிறது. சமூகம் அதை தன் முன்னுதாரணமாகக் கொள்ள முயற்சி செய்யும். அதன் செவ்வி தலைப்படுவார் சிலரே. என்றாலும் அந்த வழிகாட்டல் சமூகத்தை ஒரு மேலான பாதையில் இட்டுச்செல்லும்

சண்முகம் 

அபிதான சிந்தாமணி: கடல் நிறைந்த கமண்டலம்.

ஓர் அமரகாதல்

அமரகாதல்:கடிதங்கள்

முந்தைய கட்டுரைஅமரகாதல்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅசோகமித்திரன் சந்திப்பு