ஒவ்வொருநாளும் விருது

அனைவருக்கும் வணக்கம்,

ஒருநாள் நானும் என் இனியநண்பரும் என் எல்லா பயணங்களிலும் துணையிருப்பவருமான கிருஷ்ணனுடன் பேசிக்கொண்டிருந்தேன்.நாங்கள் லடாகில் கார்துங் லா கணவாயில் நடுக்கும் குளிரில் இந்திய ராணுவத்தால் நடத்தப்படும் ஒரு டீக்கடையில் அமர்ந்து கையில் கஷ்மீரி ஹவாவும் மோமோவும் ஏந்திக்கொண்டு எதிரே கண்கூச ஒளிவிட்டுக்கொண்டிருந்த பனிமலையைப் பார்த்துக்கொண்டிருந்தோம். கிருஷ்ணன் சொன்னார் “இப்டி எங்கெல்லாம் உக்காந்திருக்கோம். சின்னச்சின்னக் கிராமங்களிலே உள்ள டீக்கடைகளிலே. வரலாற்றுச்சின்னங்கள் மேலே. காட்டுக்குள்ள. மலையுச்சிகளிலே… எங்கேன்னே தெரியாத இடங்களிலே.. நினைச்சுப்பாக்கவே பிரமிப்பா இருக்கு!”

நான் அப்போது வேறு ஒருமனநிலையில் இருந்தேன். ஏனென்றால் அப்போதே வெண்முரசின் கற்பனை தொடங்கிவிட்டிருந்தது எனக்குள். கண்ணால் பார்ப்பதற்கும் மேலாக எத்தனை மடங்கு நிலங்களில் நான் கற்பனையில் வாழ்ந்திருக்கிறேன். இது ஒரு மகத்தான பனிமலை. ஓர் அற்புதமான தருணம். ஆனால் இதைபோல எத்தனை ஆயிரம் பனிமலைகள். எத்தனை ஆயிரம் ஒளிவிடும் தருணங்கள்.

ஆச்சரியமாக உடனே என் எண்ணங்களையே கிருஷ்ணன் சொன்னார் “ஆனா, கதைகளிலே நாம போன எடங்கள வச்சுப்பாக்கிறப்ப இதெல்லாம் அங்க போறதுக்கான ஒரு தொடக்கம் மட்டும்தான்னு தோணுது… இந்த எடம் உங்க எழுத்தில நூறா ஆயிரும்” நான் சொன்னேன் “கிருஷ்ணன், ஒரு நிலத்தில ஒண்ணுக்குமேற்பட்ட தடவை தூங்கி எந்திரிக்கிறவன் வாழலைன்னு அர்த்தம்’

இங்கே இவ்விருதைப் பெற்று நின்றிருக்கும்போது இதை நினைக்கக் காரணம் ஒன்றுண்டு. இவ்விருதுபெறும் தகவலை நான் என் இணையதளத்தில் எழுதியபோது கனடா –அமெரிக்கா பயணம் பற்றி மேலும் உற்சாகமாகக் குறிப்பிட்டதை நண்பர்கள் பலர் சுட்டிக்காட்டிக் கடிதம் எழுதினர். உண்மையிலேயே அந்த மனநிலைதான் எனக்கு. எனக்கு இன்று வாழ்க்கை என்பதே பயணம்தான். வெளிப்பயணம் அகப்பயணம். வெளியே கனவு கலந்துபின்னிய நிலவிரிவுகள். உள்ளே நிலமேயாக விரியும் கனவுகள்.

ஊட்டியில் நண்பர்களுடன் மூன்றுநாட்கள் தங்கிவிட்டு உடனே இந்தப்பயணத்தைத் தொடங்கியிருக்கிறேன். இந்தப்பயணம் முடித்து ஊருக்குத்திரும்பியதுமே மீண்டும் மூன்று பயணங்களைத் திட்டமிட்டிருக்கிறோம். நான் சொன்னதுபோல ஒரே நிலத்தில் பிறிதொருமுறை விழித்தெழக்கூடாதென்பதே இன்று என் தவம்.

விருதுகள் முக்கியமானவைதான். விருதுகளையும் பாராட்டுக்களையும் பொறுத்தவரை எனக்கு எப்போதும் ஒரு நல்லூழ் இருக்கிறது.நான் எழுதவந்தபோதே அச்சில்வந்த என் முதல்நூலுக்கே விருது கிடைத்தது. ரப்பர் நாவல் அகிலன் நினைவுப்பரிசு பெற்றது. அந்நாவலுக்கு அடுத்தவாரமே கோவை விஜயா வேலாயுதம் பாராட்டுக்கடிதம் எழுதியிருந்தார். தியடோர் பாஸ்கரனின் கடிதம் அதற்குப்பின் வந்தது. கி.ராஜநாராயணன் இந்திரா பார்த்தசாரதி இருவரும் அந்நாவலுக்குப் பரிசளித்த நடுவர்குழுவில் இருந்தனர். இருவருமே பாராட்டிக் கடிதமெழுதினர்.

‘நாவல் எழுதுவது ஒரு கப்பல் கட்டுவதுபோல. முயற்சியில்லாமலேயே அந்தக்கலை உங்களுக்குக் கைவருகிறது. உங்களுக்குரிய வடிவம் நாவலே’ என்று சுந்தர ராமசாமி கடிதமெழுதியிருந்தார் அவரது கடிதம் வந்த அன்றே கோவை ஞானியின் கடிதமும் வந்திருந்தது. சிலவாரங்களுக்குப்பின் சுஜாதா ரப்பரைப் பாராட்டி எழுதியிருந்தார். கோவையில் விஜயா வேலாயுதம் ஒரு பாராட்டுவிழா ஏற்பாடு செய்திருந்தார். அதில் கோவை ஞானி, பேராசிரியர் தாமரைக்கண்ணன் உட்பட பலர் பேசினர்.

ஓர் இளம் தமிழ்எழுத்தாளனுக்கு எண்பது- தொண்ணூறுகளில் அதெல்லாம் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாதவை. எனது முன்னோடிகள் பலருக்கு முதல் விழாவை நான் எடுத்தேன். நாஞ்சில்நாடனுக்கு அவர் எழுதவந்து முப்பதாண்டுகளுக்குப்பின் முதல் பாராட்டுக்கூட்டத்தை நான் நடத்தினேன். ஆ.மாதவனுக்கு ஐம்பதாண்டுக்கால இலக்கியவாழ்க்கை நிறைவுக்குப்பின் விஷ்ணுபுரம் விருதுவிழாதான் முதல் பாராட்டுக்கூட்டம். ஓர் இளம் எழுத்தாளனின் நுழைவு அப்படி ஒரு வரவேற்புடன் தமிழில் நிகழ்ந்ததில்லை என்று சுந்தர ராமசாமி சொன்னார்.

இவ்வளவுக்கும் கறாரான விமர்சனங்களையே முன்வைத்து வந்தேன். அகிலன் நினைவுப்பரிசு பெற்றபின் அதே மேடையில் அகிலனைப்பற்றிய என் கூரிய மதிப்பீட்டை முன்வைத்தேன். சுஜாதாவைப்பற்றிய கடுமையான விமர்சனத்துக்குப்பின்னர்தான் அவர் ரப்பர் பற்றி எழுதினார். 1991ல் ரப்பர் வெளியான அந்தமேடையில் தொடங்கிய இலக்கியச் சர்ச்சைகளில் இன்றுவரை ஈடுபட்டுத்தான் வருகிறேன். இலக்கியப்பூசல்கள் இலக்கியத்தின் இன்றியமையாத செயல்பாடுகளில் ஒன்று என்பது என் நம்பிக்கை. இத்தனை ஆண்டுகளில் தனிப்பட்ட கசப்புகளாக விரிந்தவை மிகச்சிலவே. அவற்றுக்கும் அப்பால்தான் எனக்குரிய அங்கீகாரங்களும் வந்தன.

நான் எழுதவந்தது ஒரு நல்ல தருணம் என்பதே என் எண்ணம். தமிழில் ஓங்கியிருந்த வணிகஎழுத்து தொலைக்காட்சியின் வருகையால் இல்லாமலாகியது. கேளிக்கைக்காக வாசித்துவந்தவர்கள் குறைந்தனர். வாசிப்பு என்பதில் விழுந்த அந்த இடைவெளியை அன்றுவரை சிறுபத்திரிகை வட்டத்திற்குள் மட்டுமே புழங்கிவந்த இலக்கியம் நிறைக்கத் தொடங்கியது. இலக்கியத்தைப் பெருவாரியான வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் நடுப்போக்கு இதழ்கள் வெளிவந்தன. இந்தியா டுடே, தினமணி தமிழ்மணி இணைப்பு, சுபமங்களா ஆகியவை வாசிப்பில் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கின. அந்த அலை என்னை முன்னெடுத்தது. எனக்கு என்றுமே தீவிரமான வாசகர்கள் இருந்தனர். அவர்கள் இக்கணம் வரை பெருகிக்கொண்டேதான் இருக்கிறார்கள்

1992ல் கதா விருது. 1993ல் சம்ஸ்கிருதி சம்மான் விருது கிடைத்தபோது இன்றுபோல அருண்மொழியும் கூடவந்தாள். திருமணமாகி சிலமாதங்களே ஆகியிருந்த அருண்மொழியை தேசிய அளவில் எழுத்தாளர்களின் மேடை ஒன்றில் அமரச்செய்தது அவ்விருது. எழுத்தாளனின் மனைவியாக அன்று அவள் பெற்ற பூங்கொத்து ஒரு முக்கியமான பரிசு என நினைக்கிறேன். அதிகபட்சம் எழுத்தாளன் மனைவிக்குச் செய்யக்கூடியது அதுதான் இன்று யோசிக்கும்போது அவை பெரிய கனவுப்படலம் போல உள்ளன.

விருதுகள் முக்கியமல்ல, அவை எதையும் தீர்மானிப்பதில்லை என்றெல்லாம் அணிச்சொல் சொல்லலாம்தான். ஆனால் விருதுகள் பலதளங்களில் மிகமிக முக்கியமானவை என்பதே என் எண்ணம். தமிழ்ச்சூழலில் எழுத்தாளன் அவனுடைய சுற்றத்தால் அங்கீகரிக்கப்படாதவன். அடையாளம் காணப்படாதவன். ஒரு நல்ல விருது அவனுக்கு ஓர் இடத்தை உருவாக்கியளிக்கும். நான் எழுதவந்த தொடக்கத்திலேயே கதா விருதை இந்திய ஜனாதிபதியிடமிருந்து பெற்றேன். சங்கர்தயாள் சர்மா அவ்விருதை அளிக்கும் படம் எங்கள் அலுவலகமலரிலும் தொழிற்சங்க மலரிலும் வெளியாகியது. அது எனக்கு எழுத்தாளன் என்ற கௌரவத்தை உருவாக்கியது. பின்னாளில் அலுவலத்தில் சுதந்திரத்துடனும் மரியாதையுடனும் செயல்பட அது எனக்கு உதவியது.

உண்மையில் அந்த ஒரு புகைப்படம் இல்லாவிட்டால் நான் இத்தனை எழுதியிருக்கமாட்டேன். என் எழுத்து எதையுமே வாசித்திராத மேலதிகாரிகளில் பெரும்பாலானவர்கள் என்னை முக்கியமான எழுத்தாளன் என்றே நடத்த அது வழிவகுத்தது. பெரும்பொறுப்புகளையோ பணிச்சுமைகளையோ அளித்ததில்லை. வருடத்தில் இரண்டரைமாதம் வரை முறைசார்ந்த விடுப்பு எடுப்பவன் நான். அதற்குமேல் இரண்டுமாதம் சம்பளமில்லா மருத்துவ விடுப்பு. அந்த விடுப்புகளில்தான் நான் எழுத்தாளனாக வாழ்ந்தேன். அந்த விருதுக்கும் அத்தனை அதிகாரிகளுக்கும் இப்போது நான் நன்றிதெரிவிக்கவேண்டும். இன்று மிகுந்த உளஆற்றல் கொண்ட என் இளையநண்பர்கள் பலர் அலுவலகப் பணிச்சுமையில் சிக்கி செயலூக்கமற்றிருப்பதைக் காணும்போது அந்த நன்றியுணர்ச்சி மேலும் விரிகிறது.

சம்ஸ்கிருதி சம்மான் விருதை நான் வழிபடும் உருதுப் படைப்பாளியான திருமதி குர்ரதுலைன் ஹைதர் அவர்களின் கைகளிலிருந்து பெறும் பேறு எனக்கு வாய்த்தது. அந்தப்படம் என்னை இப்போதும் உணர்ச்சிவயப்படச்செய்கிறது. கதா விருதை எம்.டி.வாசுதேவன் நாயரும் நானும் ஒரேமேடையில் பெற்றோம். நான் என்றும் என்னை ஒரு அழியாமரபின் தொடர்ச்சி என்றே உருவகித்துக்கொள்பவன். ஆகவே எனக்கு இவை குறியீட்டுரீதியாக முக்கியமானவை. இயல்விருது சுந்தர ராமசாமியும். வெங்கட் சாமிநாதனும், எஸ்.பொன்னுத்துரையும், தியோடர் பாஸ்கரனும், ஐராவதம் மகாதேவனும், ஞானியும், அம்பையும்,நாஞ்சில்நாடனும் பெற்றது. அவ்வரிசை என்னை பெருமிதம்கொள்ளச்செய்கிறது

விருதுகள் வாசகர்களைப் பெற்றுத்ததருகின்றன. அகிலன் விருது அப்படி ஒரு திறப்பை அளித்தது. தொடர்ந்து வந்த விருதுகள் புகழுடன் ஓரு வீம்பையும் அளித்தன. அந்த விருதுகள் உருவாக்கும் அடையாளம் மிகச்சிறியதாக ஆகுமளவுக்கு எழவேண்டும் என்ற இளமைக்கே உரிய வேகம். ஆகவேதான் விஷ்ணுபுரம் போன்ற ஒரு படைப்பை நோக்கி என்னை முழுமையாகக் குவித்துக்கொண்டேன். அதை எழுதியது எனக்கே நான் அளித்துக்கொண்ட விருது. நான் எனக்களிக்கப்பட்ட முந்தைய விருதுகளை மேலதிகத் தகுதியுடன் எனக்கே அளித்துக்கொண்டேன்.

தொடர்ந்து விருதுகள் வந்தபடியே உள்ளன. நான் வணங்கும் இளையராஜா அவர்களின் அமைப்பால் வழங்கப்பட்ட பாவலர் விருதை நான் மதிக்கும் அப்துல்கலாம் அவர்களிடமிருந்து பெற்றது நிறைவூட்டக்கூடிய அனுபவம். அனைத்து விருதுகளையும் பட்டியலிடுவது ஒரு தற்பெருமையாக ஆகக்கூடும். இம்மேடையில் அனைவருக்கும் நன்றிசொல்லவேண்டும்.

விருதுகளைப்பற்றி இப்படித்தான் சொல்வேன். வந்தவிருதுகள் மதிப்புக்குரியவை. வராதவை பொருட்படுத்ததக்கவை அல்ல. ஏனென்றால் ஒரு கட்டத்திற்குப்பின் எந்த வெளிப்புற அங்கீகாரமும் முக்கியமல்ல. எழுதும்போதுள்ள உள்ளக்கிளர்ச்சிக்கு நிகராக எதுவும் இல்லை. எழுதுவது எழுதுபவன் உள்ளத்தை ஒளிகொள்ளச்செய்கிறது. ஒரு சூரியனுக்குக் கீழே ஒரு நிலத்தில் மீண்டும் ஒருமுறை துயிலெழாத ஒரு வாழ்க்கையை அவனுக்கு அளிக்கிறது.

இந்தியச்சூழலில் மிக எளிதில் நம்மை முதுமை நெருங்குகிறது.நம் பிள்ளைகள் கொஞ்சம் வளர்ந்ததுமே நம்மை அவர்களின் தந்தையாக மட்டுமே பார்க்கத்தொடங்குகிறது சூழல். அவர்களின் பொறுப்பை நம் மீது சுமத்துகிறார்கள். பொண்ணு என்ன படிக்கிறா, பையன் என்ன பண்றான் என்பதே நம்மை நோக்கி வரும் முகமனாக இருக்கின்றது. இது இரண்டுமே எனக்குச் சரியாகத் தெரியாது. ’பெத்த அப்பன்னு ஒரு கவலை இருக்கா பாரேன்’ என்பார்கள். கவலையுடன் இருப்பவன் பொறுப்பானவன். முறையானவன். கவலையற்ற மனிதனிடம் ஏதோ சிக்கல் இருக்கிறது என நினைக்கிறார்கள்

அந்த எண்ணத்தால் நாம் சூழப்படும்போது நம் உள்ளம் அதைப்பிரதிபலிக்கிறது. உள்ளம் முதுமையை அடையும்போது மிக எளிதில் உடலும் முதுமைகொள்கிறது. சமீபத்தில் போர்னோகிராஃபி பற்றிய கதை ஒன்றை எழுதினேன். அதை அஜிதனிடம் வாசிக்கக் கொடுத்தேன். ‘பிரமாதமான கதை அப்பா’ என்றான். ‘ஆனா நம்மூரு ஆளுக கொஞ்சபேரு இதெல்லாம் நீங்க எழுதணுமான்னு ஆரம்பிப்பாங்க. அவங்கள மாதிரி உன்னை கிழவனா ஆக்குற சக்தி வேற இல்லை. அவங்கள நேரில பாக்குறதையே கூட விட்டிரு” என்றான். “நீ முப்பது வயசிலே எப்டி இருந்தியோ அப்டி இருக்கிற வரைக்கும்தாம்பா நல்லா எழுதமுடியும்”

உற்சாகமாக இருந்தது. நான் சரியாகத்தான் வந்திருக்கிறேன். பொறுப்பின் சுமைகள் தேவையில்லை. கவலைகொள்ளத் தேவையில்லை. முதுமையைப்போல கலைக்கு எதிரான ஒன்று வேறில்லை. முதுமை நெருங்கும்போது வரும் உடல்நலிவுகளும் உள்ளச்சோர்வுகளும் இலக்கியத்தை மெல்லமெல்ல பாதிக்கின்றன. சற்று கைசலிப்பதனாலேயே, முதுகு வலிப்பதனாலேயே எழுந்துவரும் படைப்புவேகம் அடங்கிவிடும் என்பது ஓர் உண்மை. என் உடலை விசையுறு பந்தினைப்போல் உள்ளம் விரும்பியபடி செல்வதாக ஆக்கிக்கொள்வதை எப்போது செய்துவருகிறேன்

அத்துடன், உண்மையிலேயே கூர்ந்து அவதானிக்கத்தக்க ஒன்று உண்டு. பாலியல்வேட்கை குறையும்போது படைப்பூக்கமும் குறைகிறது. அவையிரண்டும் ஒன்றுடன் ஒன்று நேரடியாகத் தொடர்புகொண்டவை. அப்படிப்பார்த்தால் பாலியல்வேட்கை என்பது வாழ்வாசையேதான். உயிருக்கு வெளியே உள்ள பருவுலகுடன் உள்ள பற்று அது. இருத்தலுக்கும் எஞ்சுதலுக்குமான உயிரின் ஆதி விழைவு. ரதி என்ற சொல்லால் அதை நம் முன்னோர் சொன்னார்கள்.

சுவைகளாக ஆவது அதுதான். விழியறியும் சுவை. செவி அறியும் சுவை. நாவும் நாசியும் மெய்யும் அறியும் சுவை. சொல்லின் சுவை. கருத்துக்களின் கனவுகளின் சுவை. கொந்தளிப்புகளையும் அறைகூவல்களையும் விரும்புகிறது அது. ரதி என்னும் வேட்கையின் அனல் அவியத் தொடங்கும்போது சுவைகள் எல்லாம் மழுங்கி விடுகின்றன. எங்காவது ’உட்கார்ந்துவிட’ தோன்றுகிறது. அகத்திலும் புறத்திலும் பயணம் நிகழாமலாகிவிடுகிறது.அதன்பின்னர் நிகழும் பயணம் ஒன்றே. கடந்தகால ஏக்கம். அதன் விளைவான தன்னிரக்கம். அதைப்போல நரகம் பிறிதில்லை. செல்லும்போதே அம்பு ஓர் படைக்கலம். அதன் கூரும் இறகும் ஒளியும் விசையும் பொருள்படுவது அப்போதுதான். விழுந்துவிட்ட அம்பு ஒரு குப்பை. இலக்கைத்தாக்கியபின்னர் விழுந்துவிட்டதாக இருந்தாலும்

சுவைகள் மழுங்குமிடத்தில் எஞ்சுவது அகங்காரம் மட்டுமே. அப்போது அகங்காரநிறைவுக்காக மட்டுமே எழுதநேர்கிறது. அது ஒரு பெருந்துன்பம். எழுதுவது என்பது நாமே நமக்கான உலகை உருவாக்கி அதில் திளைப்பதுதான். அந்த இன்பத்தை இழந்துவிட்டால் எழுத்தைப்போல வதை வேறில்லை. அகங்காரத்துக்கான எழுத்துதான் ஒவ்வொருமுறையும் அங்கீகாரத்தைத் தேடுகிறது. அதற்கான பரிதவிப்புகள், வன்மங்கள், தன்னிரக்கங்கள் உருவாகின்றன. முதுமையில் விருதுகளை நோக்கிச்செல்லும் மனநிலை இது.

இன்னொன்று, நாம் அமர்ந்ததுமே நம்முடைய மொழி தேய்வழக்காகிறது. அசைவற்றதில் தூசியும் பாசியும் படிவதைப்போல. நாமே உருவாக்கிய அழகுகளே நம் தேய்வழக்குகள் ஆகின்றன. நம் எல்லைக்குள் நம் மூச்சை நாமே மீண்டும் சுவாசிக்க ஆரம்பிக்கிறோம்.

ஆகவே நான் எண்ணிக்கொள்வது இதையே. இந்த வாழ்வாசையை, வேட்கையை, ரதியை எப்போதும் தக்கவைத்துக்கொள்வதுதான் உண்மையான வாழ்க்கை. வாழ்வெனும் தவம் அதுவே. பயணங்கள் மூலம் நட்புகள் மூலம்,வாசிப்பின் மூலம், விவாதங்கள் மூலம் வாழ்க்கையின் வண்ணங்களை ஒளிகுன்றாமல் வைத்துக்கொள்கிறேன். ஆகவேதான் என்னால் சலிப்பில்லாமல் எழுத்தில் திளைக்கமுடிகிறது. எழுத்தில் திளைக்காத ஒருவனால் இத்தனை எழுதமுடியாது.

இக்கணம் வரை எழுத்து எனக்கு அந்தரங்கமான கொண்டாட்டமாகவே உள்ளது. அது புதியதாக இருப்பதனாலேயே தேய்வழக்குகளாக ஆவதில்லை. நான் என்ன எழுதக்கூடும் என்பதை என்னாலேயே ஊகிக்கமுடியாதபடி வைத்திருக்கிறேன். நான் எதையும் எழுதுவேன் என எனக்குநானே சொல்லிக்கொள்கிறேன். எனது எந்த எல்லையையும் நான் உடைத்து திறந்து மீறிச்செல்வேன். இந்தத் தன்னுணர்வே இன்று எனக்கு உற்சாகமூட்டுவதாக இருக்கிறது. ஒவ்வொருநாளையும் ஒளியுடன் விரியச்செய்கிறது. உண்மையில் அதுவே மிகப்பெரிய விருது. ஒவ்வொருநாளும்.

உண்மையிலேயே ஒவ்வொரு நாளும் நான் ஒவ்வொரு நிலத்தில் கண்விழித்தெழுகிறேன். வெண்முரசில் வரும் நிலங்கள். பால்ஹிகநாடு. காந்தார நாடு. அஸ்தினபுரி. இந்திரப்பிரஸ்தம். அல்லது உண்மையிலேயே புத்தம்புதிய நிலம். அஸாம், மணிப்பூர், தமிழ்நாடு, கேரளம், கனடா அமெரிக்கா…ஒவ்வொருநாளும் புதியசூரியன். புதிய காற்று. ஒவ்வொரு நாளையும் ஒரு கொடையாக அடையமுடிந்தவனுக்கு அதற்குமேல் எதுவுமே முக்கியமல்ல என்று தோன்றுகிறது. இலக்கியம் எனக்கு ஏன் முக்கியமானது என்றால் அப்படி என்னை ஆக்குவது அது என்பதனால்தான்

என் மதிப்பிற்குரிய நண்பர்களால் வழங்கப்படும் விருது இது. இவ்விருதைப் பெறவேண்டிய என் முன்னோடியினர் பலர் உள்ளனர். அவர்களை நான் தொடர்ந்து இவ்விருதுக்காகப் பரிந்துரைசெய்திருக்கிறேன். இவ்வருடம் நான் பெறவேண்டும் என்ற நண்பர்களின் வற்புறுத்தலால்தான் சற்றுத் தயங்கி இதைப்பெற்றுக்கொள்கிறேன். ஏனென்றால் வாழ்நாள்சாதனை விருது இது. நான் என் வாழ்நாள்சாதனையை இன்னமும் செய்யவில்லை. இதை எனக்களித்ததை என் நண்பர்களின் அன்பு என்றே எடுத்துக்கொள்கிறேன். கனடா இலக்கியத்தோட்டம் அமைப்புக்கு என் நன்றி


[கனடா இலக்கியத்தோட்டம் வழங்கும் இயல்விருது பெற்றுக்கொண்டு ஆற்றிய ஏற்புரை]

முந்தைய கட்டுரைஒழுகினசேரி
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 15