மதம் – கடிதம்

ஜெ,

வணக்கம். இன்று தங்கள் வலைத்தளத்தில் அழியும் பாரம்பரியம் பதிவில் இன்னும் 50 ஆண்டுகளில் இந்து மதம் அழியவோ செயலற்ற நிலையை அடையவோ வாய்ப்புண்டு என்று சொல்லி இருந்தீர்கள். இது குறித்த என்னுடைய எண்ணங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

மார்க்ஸியம் பற்றிய எந்தப்புரிதலும் எனக்கில்லை. மதம் மாற்றும் முறைகள் பற்றியும் நானறியேன். என்னைச் சுற்றி மதம் மாறியவர்கள் பெரும்பாலும் வறுமையும் இக்கட்டான கட்டுப்பாடுகளினாலுமே மதம் மாறினார்கள். என் வரையில் நாம் வழி வழியாகக் கைக்கொண்டு வரும் மதத்தை பழக்கவழக்கங்களை வேற்று மதத்தினர் மாற்ற முடியும் என்பதற்கு நாமே காரணம் என்றே நினைக்கிறேன். வறுமையும் அறியாமையும் நீங்கினால் மட்டுமே நம் பாரம்பரியம் பாதுகாக்கப்படும்.

எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் என் பாட்டியோ அப்பாவோ சொன்ன கதைகள் எல்லாமே மதம் சார்ந்தவை. பிரபஞ்சம் என்ற வார்த்தையை முதலில் என் பாட்டியிடமிருந்து தான் கற்றேன். கேரளத்தில் பிறந்த இருவேளைக் குளியலும் தொழுதலும் பழகிய பெண்மணி அவர். இப்பிரபஞ்சத்தின் மூலமென சிவனைச் சுட்டியவளும் அவரே. ஆத்தல் காத்தல் அழித்தல் என முத்தொழிலுக்கான தெய்வங்களையும் அவர்களும் தொழும் அவற்றுக்கும் மூலமான பிறிதொன்றையும் எட்டு வயதுப் பெண்ணுக்கு விளக்க முடிந்தது அவரால்.

தன் வாழ்க்கையின் இக்கட்டான தருணங்களில் தன்னை மிக நேர்மையுடன் நிலை நிறுத்திக் கொண்ட அவருடைய வாழ்க்கை அனுபவப் பகிர்தல் வழியாகவே நேர்மையைக் கற்றேன். மற்ற உயிர்கள் மீதான பிரியமும் என் தந்தையின் மீதான பக்தியும் அவளது கதைகள் மூலம் உருவானவையே. வளர்ந்த பிறகு, நான் படிக்கத்துவங்கிய பிறகு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு போதிய பதில்கள் அவரிடம் இல்லை. அப்போது அவரது அறிதல்கள் குறித்த அவநம்பிக்கையை நான் அடைந்தேன் என்பதும் உண்மையே.

என்னுடைய வாழ்வின் மிக நெருக்கடியான தருணங்களில் கடவுள் என்ற அனுபவத்தை நான் அடைந்த போதுதான் என் பாட்டி சொல்லியவை எத்தனை மகத்தான விஷயங்கள் என்று உணர்கிறேன். அவற்றை இக்காலத்துக்கு ஏற்றவாறு விரித்துச் சொல்ல அவர் கற்றிருக்கவில்லை. மேலும் எத்தனை அழகாக விவரித்தாலும் ஒரு முறை உண்டாலன்றி பொங்கலின் இனிமையை உணர்ந்து கொள்ள இயலாதென்பதே உண்மை.

அவருடைய சிறு சிறு கட்டளைகள் கூட இன்றைய அறிவியலில் நிரூபிக்கப் படும்போது, அவர் சொன்ன அத்தனையையும் அறிவியல் சற்றுக் காலம் கழித்தே கண்டுணரும் எனத் தோன்றுகிறது. ”படுத்த படுக்கையை மிதிக்காதே படுத்தவர் உடம்பு வலிக்கும்.” “சமைத்தவுடன் உண்ணாதே, அதன் ஆவி அமையட்டும்” குழாயில் பிடித்தவுடன் அந்த தண்ணீர் குடிக்காதே, நேற்று பிடித்த பானையிலிருந்து குடி” என அவர் சொன்ன பலவற்றிற்கு இன்று அறிவியல் பூர்வமாக விளக்கங்கள் உள்ளன.

யோகியின் சுயசரிதத்தில் மூன்றில் ஒரு பங்கு கிறித்துவ மதத்தின் கருத்துக்களே விளக்கப்பட்டிருக்கும். கிறித்தவர்களின் புரிதலைக் காட்டிலும் மேம்பட்ட விளக்கங்கள் அவை. அவற்றில் எவையும் இந்து மதத்திற்கு அந்நியமானவை அல்ல. அவற்றை எல்லாம் தாண்டி நம் விருப்பத்திற்கேற்ற தொழுதல் முறைகளையும் வாழும் முறைகளையும் பின்பற்ற இந்து மதத்தில் சுதந்திரம் உண்டென்பதே என் புரிதல்.

நம் மதம் பற்றிய அறிவைக் கற்றுக் கொள்ளாதவரை வேற்று மதத்தினர் நமக்களிக்கும் எவ்வித விளக்கங்களும் வாழ்வியல் முறைகளும் மிக உயர்ந்தன என்வும் நாம் அறிவற்றவர்கள் என்ற பிம்பமும் நிச்சயம் நமக்குள் படிந்திருக்கும்.

கூட்டுக் குடும்ப முறை முற்றாகவே சிதைந்து போன இக்காலகட்டத்தில் குழந்தைகளை சமாளிக்க தொலைக்காட்சி முன் அமர்த்தி பழக்கவே கற்றிருக்கிறோம். நம் மதம் பற்றியோ கலாச்சாரம் பற்றியோ அவர்களுக்கு விளக்கத் துவங்கினால் முதலில் அவற்றை நாம் தெளிவற கற்றுக் கொள்ளும் உழைப்பு தேவையாக இருக்கிறது. நம் மதம் கொண்ட நம்பிக்கைகளில் மூட நம்பிக்கைகளைக் களைந்து சரியான வடிவில நம் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்கிற பொறுப்பு நம் அனைவருக்குமே இருக்கிறது. இதனை யாரோ ஒருவரல்ல நாமே நம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லக் கடமைப்பட்டவர்கள்.

நீங்கள் மிக விரிவாகக் கூறிய பதிலில் என்னைப் பாதித்த அந்த ஒரு வரிக்கு மட்டுமே என் கருத்தைச் சொல்லி இருக்கிறேன். நன்றி

அன்புடன்

மீனாம்பிகை

முந்தைய கட்டுரைஈழ மாணவர்களுக்கு உதவி
அடுத்த கட்டுரைபசியாகி வரும் ஞானம்