சேகர் நினைவுகள்

unnamed

நண்பர்களே,

சந்திரசேகருடைய நண்பர்களிடம் பேசியதில் இருந்தும் மற்றும் எனக்கு தெரிந்த இன்னும் சில நண்பர்கள், நல்ல உடல் நிலையோடு இருந்து, குறைந்த வயதில் இறந்தவர்களின் பழக்கங்களில் இருந்து அறிந்ததை வைத்து சொல்கிறேன், இவர்கள் அனைவருக்கும் முறையான தூங்கும் பழக்கம் இல்லை. லேட்டாக தூங்கி சீக்கிரம் எந்திருப்பவர்களாக இருக்கிறார்கள். இங்கு நம்மில் பலருக்கும் அந்த பழக்கம் இருக்கலாம், எனக்கும் அப்படிதான். புத்தகம் படிப்பது அல்லது இணையத்தில் கணக்கில்லாமல் நேரம் செலவிடுவது என்று தூக்கத்தை தியாகம் செய்கிறோம். நானும் அப்படித்தான், ஒன்று அல்லது இரண்டு மணிக்கு எல்லாம் தூங்கி காலை ஏழு எட்டு மணிக்கு எழுந்திருப்பது.

சந்திரசேகரை பற்றி சொல்லும்போதும் அவரது நண்பர்கள் தவறாமல் இதைத்தான் குறிப்பிடுகிறார்கள். அவர் உடலை ரொம்ப நன்றாக கவனித்து கொண்டிருக்கிறார், தொடர்ந்து யோகா செய்பவர், நேற்று கூட ஜாக்கிங் போய்விட்டுதான் வந்து படுத்திருக்கிறார். தூங்காமல் இருப்பது தான் அவரிடம் இருந்த ஒரே கேட்ட பழக்கமாக இருந்திருக்கிறது.

குறைந்த தூக்கத்தோடு வெகுகாலம் இருப்பது திடீர் என்று நம் உடலில் விளைவுகளை ஏற்படுத்துகிறது, எந்த அபாய அறிவுப்பும் கொடுப்பது இல்லை. எனவே நண்பர்களே, தூக்கத்தை குறைத்து கொள்ளாதீர்கள். எல்லாம் சரியாக இருந்து தூக்கம் மட்டும் குறைவாக இருப்பதே கடுமையான விளைவுகள் ஏற்படுத்துகிறது. நம் எல்லோருக்குமான செய்தி இது.

சிங்கபோரிலேயே, IT ல் இருந்த மூன்று நண்பர்களை பற்றி இப்படித்தான் கேள்விபட்டேன். அதிலும் ஆராய்ச்சி பிரிவில் இருக்கும் எங்களைப்போன்றவர்களுக்கு, நேர கட்டுப்பாடு கிடையாது, எப்போதுவேண்டுமானாலும் ஆபீஸ் போகலாம் வரலாம் என்பதால் முறையான தூக்க கட்டுப்படே இல்லை.இதில் உண்மையிலேயே பயமுறுத்துவது, குறைந்த வயதில் இறந்த இந்த அனைவரும் இதற்க்கு முன் உடல் நல குறைவாக இருந்ததே இல்லை. உடல் நலக் குறைவு ஒரு எச்சரிக்கை, நம்மை நிறுத்தி சிந்திக்க வைக்கும் ஒரு அபாய அறிவுப்பு. அப்படி இல்லாமல் இருப்பது மிகவும் அபாயகரமானது.

குறைந்த தூக்கம் என்பது இப்போது பரவலான மக்களிடம் காணப்படுகிறது. இணையம் நமது பெருவாரியான நேரத்தை எடுத்து கொள்கிறது, எனவே நண்பர்களே, தயவு செய்து இதை ஒரு எச்சரிக்கையாக கொண்டு, தூக்கத்தை முறைபடுத்திக் கொள்ளுங்கள், அதை எக்காரணம் கொண்டும் தியாகம் செய்யாதீர்கள்.நன்றி.

சரவணன் விவேகானந்தன்

===============================================================================================

அன்புள்ள சீனு

தொழிலாளர் தின வாழ்த்துக்கள்!

எழுத்தாளர் ரமேஷை சந்தித்தீர்களா?

அத்தியாயம் 88 ன் கடைசியில் திருதா “நெடிது வாழ்க என துரியன், துச்சாதனை வாழ்த்தியபின் உடனே கையை எடுத்துவிட்டு வேகமாக உள்ளறை செல்கிறார்”

அவர் உள்ளுணர்வின் மூலம் ஏற்கனவே அவர்களிருவரின் குறுகிய ஆயுளை அறிந்திருந்ததால் அக்கணத்தில் ஏற்பட்ட மன வெறுமையில் அப்படி செய்கிறார் என நான் புரிந்து கொண்டேன்.

ராமராஜன் மாணிக்கவேல் இன்னொரு கோணத்தில் கருவறை குருதியின் மணம் மூலம் பிள்ளை பாசத்துடன் அவர்களை இணைக்கிறார்.
http://venmurasudiscussions.blogspot.in/2015/05/blog-post_51.html

நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்?

மேலும் தீர்க்கசியாமன் அங்கிருப்பவர்களில் கிருஷ்ணனை தனித்து உணர்வதும் முக்கியமாகப்பட்டது.

நேரமிருக்கும் போது பதில் போடுங்கள்.

அன்புடன்
சேகர்

இனிய ஜெயம்,

எனது தோழமைகளில் பலர் உங்களுடன் பேசத் தயங்கி அல்லது பயந்து என்னுடன் உங்கள் படைப்புகள் குறித்து பேசிக் கொண்டிருப்பவர்கள். அவர்களுக்கு நீங்கள் என்னுடன் பகிர்ந்துகொன்டத்தை பகிர்ந்து கொள்வது எப்போதும் என் வழாக்கம்.

அப்படி தோழமை கொண்டோர் பலரின் முகம் இன்றும் கூட நான் அறியாதவை. அப்படிப்பட்ட தோழமைகளில் ஒருவராகத்தான் சேகரும் எனக்கு அறிமுகம் ஆனார்.

நமது முகாம் ஒன்றினில் ஓர் இரவு முழுக்க முழுக்க அவரை என்னுடன் பகிர்ந்து கொண்டார். வெண் முரசு துவங்கிய நாள் தொட்டு தொடர்ந்து என்னுடன் மின்மடல் உரையாடலில் இருக்கும் மிக சிலரில் அவரும் ஒருவர்.

இரண்டு தினம் உங்களுடன் இருந்து விட்டு வந்ததும்தான் அவரது மடலைக் கண்டேன். வழக்கம் போல பதில் இட்டேன். வாசித்தாரா தெரியவில்லை. இலக்கியத்தில் ஒரு இலக்கியத் தோழமையின் முதல் இழப்பு. சிந்தனை ஸ்தம்பித்து நீன்றிருக்கிறது.

நினைவில் வாழ்தல். என்றொரு சொற்றொடர் உண்டு. முற்றான மரணம் என்பது என்ன? மானுட மனோ மண்டலத்திளிருந்தே மொத்தமாக ஒரு ஆளுமையின் நினைவுகள் மறைந்து போவதே அது.

நினைவுகள் கூட அழிந்து போம். யாக்கை போல நிலையாமை கொண்டது. ஆனால் அவரும் நானும் நிகத்திய உரையாடல் இந்த சைபர் வெளியில் எங்கோ அகாலத்தில் நின்று துடித்துக் கொண்டிருக்கும். சாஸ்வதமாக.

என் வாழ்வின் சில கணங்களை இலக்கிய உரையாடல் என்ற உவகையால் நிறைத்த அந்த நண்பர்க்கு நன்றி.

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைஇசைக்குள் பிராமணர்கள் எப்போது வந்தனர்?
அடுத்த கட்டுரைபிரயாகை செம்பதிப்பு அனுப்பப்பட்டுள்ளது