எந்த அடையாளம்?

திரு ஜெ.. எனது பின்னூட்டத்தை வெளியிடவில்லை. சரி உங்கள் உரிமை. ஆனால் நீங்கள் வசனம் எழுதிய அங்காடித்தெரு படத்தில் ப்ராமணரை கொடுமைக்காரர்களாக காட்டி இருக்கிறீர்கள் என்று குறிப்பிட்டது உங்களைக் குத்தியதா என்பதையாவது விளக்குங்கள்!

hayyram

சாதியுடன் புழங்குதல்…

http://www.hayyram.blogspot.com/

அன்புள்ள hayyram

உங்கள் பின்னூட்டங்கள் மட்டுமல்ல உங்களுக்கு நேர் மாறான கோணத்தில் போடப்பட்ட சில பின்னூட்டங்களும் மட்டுறுத்தப்பட்டன. அவை மட்டுறுத்தப்பட்டமைக்கான காரணம் ஒன்றுதான். நீங்கள் இருசாராருமே தெளிவான முன்முடிவுகளுடன் கட்டுரைகளை வாசிக்கிறீர்கள். கட்டுரையில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதென்பது உங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. கட்டுரையின் கைகால்களை ஒடித்து முடமாக்கி நீங்கள் நின்றுகொண்டிருக்கும் இடத்துக்கு இழுத்துக்கொண்டு செல்கிறீர்கள். அங்கே வைத்து ஆர அமர பிய்த்து குதறுகிறீர்கள். இதை நான் விவாதமாகக் கொள்ள முடியாது. விவாதம் நிகழும் தளத்தில் இருந்து வாசகர்களை விலக்கக் கூடியதாகவே அதைக் காண்கிறேன்.

நீங்கள் பிராமணசாதியின் பிரதிநிதியாக உங்களை உறுதியாக அடையாளப்படுத்திக்கொள்கிறீர்கள். ஆகவே பிராமணசாதியைப்பற்றி பெருமிதமாக அல்லாது ஏதாவது சொல்லப்பட்டால் நீங்கள் உடனே புண்படுகிறீர்கள். புண்படுவதற்கான உரிமை உங்களுக்கு இருப்பதாக எண்ணிக்கொள்கிறீர்கள். உடனே எதிர்வினை ஆற்றுகிறீர்கள். இந்த எதிர்வினைகளுடன் நான் உரையாட முடியாது. நீங்கள் ஒரு குழுவடையாளத்தைச் சுமந்து கொள்வதும், அதன் பேச்சாளராக உங்களை எண்ணிக்கொண்டிருப்பதும் உங்கள் மனசிக்கல். அதை நான் அங்கீகரிக்க முடியாது. அங்கீகரித்தால் மட்டுமே அதற்கு எதிர்வினை ஆற்றமுடியும். நான் மனச்சிக்கல்களுடன் விவாதிப்பதில்லை. விவாதம் மூலம் நானும் நீங்களும் பொதுவாக ஏதேனும் அறியும்படி இருக்க வேண்டும்.

நீங்கள் எழுதிய இந்தக் கேள்வியை பலர் என்னிடம் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களை உதாசீனம்செய்யும்போது அது குற்றவுணர்ச்சியின் மௌனம் என்று விளக்கப்படுகிறது. ஒருபக்கம் பிராமணர்களை தூக்கிப்பிடிப்பவன் என்றும் மறுபக்கம் பிராமணர்களை இழிவுபடுத்துபவன் என்றும் நான் வசைபாடப்படுகிறேன். இப்போதல்ல, விஷ்ணுபுரம் வெளிவந்த காலம் முதலே. இந்த ஆட்டம் எனக்குப் பழகிப்போய்விட்டது. இது, உங்களைப்போன்ற அனைவருக்கும் என் பொதுப்பதில் -விவாதம் அல்ல.

நாம் வாழும் சூழல் எப்படிப்பட்டது? கஸ்தூரிமான் வெளிவந்தபோது பரீக்‌ஷா ஞாநி ஒரு கூட்டத்தில் கர்ஜனை புரிந்தார் – அதில் கதாநாயகியின் அக்காவின் கணவனும் அவள் அன்னையும் கொடூரமானவர்களாக காட்டப்பட்டிருப்பார்கள். அவர்களை தாழ்த்தப்பட்ட சாதியினராகக் காட்டியிருப்பதாகச் சொன்ன ஞாநி ‘தாழ்த்தப்பட்டவர்கள் கொடூரமானவர்கள் என்று எழுதிய ஜெயமோகன் மன்னிப்பு கோரவேண்டும்’ என்றார்

முதல் விஷயம் அவர்கள் தாழ்த்தப்பட்ட சாதியைச்சேர்ந்தவர்களாகக் காட்டப்படவில்லை. என்ன சாதி என்பது படத்திலேயே உள்ளது. அது லோகிததாஸின் வழக்கம், எப்போதும் தெளிவாகச் சாதி சொல்லி படைப்பை எழுதுபவர் அவர். இரண்டு, அப்படத்தின் மலையாள மூலத்தில் லோகிததாஸ் எழுதி உருவாக்கிய கதாபாத்திரத்தின் நேரடியான தமிழ் வடிவம் அது. அதை எழுதி இயக்கியவர் அவர், நான் மொழிபெயர்ப்பாளன். நான் அதில் எதையுமே சேர்க்கவில்லை, ஆகவே அது என் உருவாக்கம் அல்ல. கடைசியாக, லோகிததாஸே தாழ்த்தப்பட்ட சாதியொன்றைச் சேர்ந்தவர்.

அங்காடித்தெரு வந்தபோது ‘அரசியல்’ என்ற வார இதழில் பாமரன் என்பவர் ஒரு கட்டுரை எழுதினார். அதில் கங்காணி கதாபாத்திரம் ‘அருந்ததியப்பயலே’ என்று வசைபாடுவதாகவும் அதை எழுதிய எழுத்தாளர் ஜெயமோகன் உடனே தீண்டப்படாதார் வன்கொடுமைச் சட்டப்படி தண்டிக்கப்படவேண்டும் என்று சொன்னார். படத்தில் திட்டவட்டமாக தெளிவாக ‘அறுதலி’ என்றுதான் வசனம் ஒலித்தது. பாமரனுக்கு அச்சொல் புரிந்திருக்காது, அல்லது அவர் வேண்டுமென்றே அதை எழுதினார்

அறுதலிப்பயல் என்பது தென்னாட்டின் சாதாரண வசை. பொதுவாக ’அவிழ்த்துவிடப்பட்டவன்’ என்று அதற்கு பொருள். அந்த விளக்கம் இயக்குநர் தரப்பில் அளிக்கப்பட்டபோது பாமரன் பேசாமல் இருந்தார். அந்தக்கட்டுரை வெளிவந்ததுமே ஒரு கும்பல் வந்து எழுதியவனை வெட்டியிருந்தால் யார் பொறுப்பேற்பது? இதழா, விமரிசகரா? யாருக்குக் கவலை? மன்னிப்பு கோரும் நாகரீகமெல்லாம் பாமரன் போன்றவர்களிடம் எதிர்பார்ப்பதற்குரியதல்ல.

இங்கே முக்கியமான விஷயம் என்னவென்றால் சம்பந்தப்பட்ட இருவருமே அந்த ‘பாதிக்கப்பட்ட’ சாதியைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதே. ஒரு கலகம் நடந்தால் நல்லதுதானே என நினைக்கும் எளிமையான மனங்கள். அதன் மூலம் தனக்கு ஒரு முற்போக்கு பிம்பம் வந்தால் வரட்டுமே என ஆசைப்படுபவர்கள். இந்தவகையான நெருக்கடிகளுடன் மட்டுமே இங்கே படங்கள் எடுக்கப்படுகின்றன.

கருத்துச் சுதந்திரம் , படைப்புச் சுதந்திரம் எதுவுமே இல்லாத அரைப்பழங்குடிச் சமூகம் நம்முடையது. அதை மேலும் பாமரத்தனமாக ஆக்குவதே அறிவுஜீவியின் பணி என நம்பும் முற்போக்கு சிந்தனயாளர்களே இங்கே பெரும்பான்மையினர். உலகத்தளத்தில் சினிமா ஏன் இல்லை என்று கூவுபவர்களே இவ்வகையான பாமரத்தனத்தின் உச்சத்திலும் நிற்கிறார்கள். இவர்களுடன் போராடியே இங்கே எழுதவேண்டியிருக்கிறது.

இந்தவகையான ஒரு கும்பல் மனநிலையில் நின்றே நீங்களும் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். நான் எப்போதும் எதிர்கொண்டு வரும் மனநிலை அது. எந்தச்சாதியினராக இருந்தாலும் இந்த மனநிலை புறக்கணிப்புக்குரியது, பண்பாட்டுச்செயல்பாட்டுக்கு எதிரானது என்றே எண்ணுகிறேன். ஆகவே அது விவாதத்துக்குரியதே அல்ல.

இந்தக் கும்பல் மனநிலையின் தர்க்கமே அபத்தமானது. ஒரு தலித் அல்லது தேவர் அல்லது பிராமண கதாபாத்திரம் எதிர்மறையாகக் காட்டப்பட்டால் உடனே ஒட்டுமொத்த தலித் அல்லது தேவர் அல்லது பிராமணர்களையும் அது குற்றம்சாட்டுவதாக எண்ணிக்கொள்கிறார்கள். அங்காடித்தெரு எங்கே ’பிராமணர்களை’ காட்டுகிறது? ஒரு பிராமணப்பெண்ணை காட்டுகிறது. உங்கள் வாதம் சரி என்றால் ஒரே ஒரு பிராமணர்கூட அப்படி இலலமல் இருக்க வேண்டும். அப்படி நம்பும் மனக்கோளாறு உங்களுக்கு இருக்கலாம். நான் ஏன் அதை ஏற்கவேண்டும்?

அந்த தர்க்கத்தின்படி எந்த சாதியையும் மதத்தையும் சேர்ந்தவராக எதிர்மறைக் கதாபாத்திரம் இருக்கக்கூடாது. பழைய எம்ஜியார் படங்களில் நம்பியார் வருவதுபோல ‘எங்கோ’இருக்கும் கொள்ளைக்கூட்ட தலைவனாக இருக்க வேண்டும், உள்ளங்கையை முஷ்டியால் குத்தி ‘ஜ்ஜ்ஜக்கூ’ என்று கூவ வேண்டும் இல்லையா? இந்த தர்க்கமே அதற்கடுத்தபடிகளுக்குச் செல்கிறது. எதிர்மறைக் கதாபாத்திரம் எந்த தொழிலையும் செய்வதாகக் காட்டக்கூடாது, சம்பந்தப்பட்ட தொழிலைச் செய்பவர்கள் புண்படுவார்கள். போராடுவார்கள். இனி இதே தர்க்கம் இடங்களுக்கு பரவும். எந்த ஊரையும் குறிப்பிடக்கூடாது. ஆக, எதைத்தான் திரையில் காட்டவேண்டும் என்கிறீர்கள்?

அங்காடித்தெருவில் அப்பட்டமாக எல்லாருக்குமே சாதி காட்டப்படுகிறது. படம் முழுக்க முற்றிலும் எதிர்மறைக் கதாபாத்திரமாக வருபவர்களுக்கும்கூட. இன்று தமிழில் வெளிவரும் எல்லா யதார்த்தப்படங்களிலும் சாதி தெளிவாகவே உள்ளது. அச்சாதிகளின் மூர்க்கமும் அறியாமையும் வன்முறையும் காட்டப்படுகிறது. எவரும் கொதித்தெழவில்லை. அவர்களுக்கு இருக்கும் பொறுமையும் நாகரீகமும் கூட பண்பட்டவர்கள் என்று தங்களைக் கருதிக்கொள்ளும் உங்களைப்போன்றவர்களிடமில்லை என்பதை காலத்தின் கோலம் என்றே கொள்ளவேண்டும்.

அங்காடித்தெரு காட்டுவது ஒரு சமூக யதார்த்தத்தை. ஒருபக்கம் மதம் தீட்டைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கிறது, மறுபக்கம் தீட்டை புனிதமாகவும் அதே மதம் நினைக்கிறது. அதன் ஒரு கடவுள் சாந்தமானவர், இன்னொரு கடவுள் உக்கிரமானவர். உங்கள் சாதிப்பித்தை விட்டுவிட்டு படம் பார்த்தால் அந்தக்காட்சியில் ஒடுக்கப்பட்ட ஒரு பெண் தீட்டையே தகுதியென ஏற்றுக்கொள்ளும் ஒரு உக்கிரமான கடவுளைச் சார்ந்து தன்னை தைரியமானவளாக மாற்றிக்கொள்ளும் பரிணாமத்தின் கதையை காணமுடியும்.

ஏன் அங்கே பிராமணப்பெண் காட்டப்படுகிறாள் என்றால் அவ்வாறு தீட்டை ஒரு சமூக அமைப்பாக நிறுவிய மதத்தரப்பு பிராமணர்களால் தொடர்ச்சியாக நூற்றாண்டுகளாக நிலைநாட்டப்பட்டது என்பதனாலேயே. இன்றும் அந்த தீவிரமான தீட்டை கடைப்பிடிக்கும் பிராமணர்களை நான் நாகரீகச் சென்னையில், திருவல்லிக்கேணியில் கண்டிருக்கிறேன். ஆம், வேலைக்காரியை கொல்லைப்பக்கம் படுக்கவைப்பதையே கண்ணால் கண்டிருக்கிறேன் -போதுமா?

இந்தப்புண்படுதல் சங்கதியை நீங்கள் கொஞ்சம் அடக்கிக்கொள்ளத்தான் வேண்டும். நான் தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள பிராமண வெறுப்பை ஏற்றுக்கொண்டவன் அல்ல. அது அடுத்தகட்ட சாதியப்படிகளில் நின்றவர்கள் அரசியலதிகாரத்தை கைப்பற்ற கையாண்ட உத்தி மட்டுமே என நினைப்பவன். இன்று தங்கள் சொந்த சாதிவெறியை மறைக்கவே அவர்கள் அதைக் கூச்சலிடுகிறார்கள். நாளை தலித் அரசியல் வலுப்பெறும்தோறும் அந்த வேடம் கலையும்.

இந்தியப் பண்பாட்டுக்கு பிராமணர்களின் பங்களிப்பு மிகமிக முக்கியமானது என்று நினைப்பவன் நான். அதை இந்த இணையதளத்தில் மிக வலுவாக எழுதியுமிருக்கிறேன். இந்து ஞானமரபின் ஒரு முக்கியமான பகுதி என்றே பிராமண மதத்தை [பூர்வமீமாம்சம்] நினைக்கிறேன். இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பிராமணர்களின் பண்பாட்டு, அரசியல், சமூகவியல் பங்களிப்பு முக்கியமானது. அதை மறந்தோ மறுத்தோ பேசுபவர் நேர்மையானவர் அல்ல.

பிராமணர்கள் இந்துப்பண்பாட்டின் நிலைச்சக்திகள். இந்துப் பண்பாடு அதன் அமைப்பையும் கட்டுக்கோப்பையும் தக்கவைத்துக்கொள்வதற்காக பல்லாயிரம் வருடங்களாக அவர்கள் ரத்தமும் கண்ணீரும் சிந்தியிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்து என உணரும் எவரும் கடமைப்பட்டிருக்கிறார்.

ஆனால் எந்நிலையிலும் பிராமணர்களுக்கு எதிரான கடும் விமரிசனம் இந்து ஞான மரபுக்குள் இருக்கும். கீதையில் இருக்கிறது, உபநிடதங்களில் உள்ளது. விவேகானந்தரில் உள்ளது. அது நாளையும் இருக்கும். காரணம் நிலைச்சக்திக்கு எதிரானதாகவே செயல்சக்தி, மாற்றத்தின் விசை இருக்க முடியும். அது தவிர்க்கமுடியாதது. அது புண்படுத்துகிறது என்றால் அது வரலாற்றின் புண். நீங்கள் பிராமணராக உணரும் வரை அந்த அம்புகள் வந்து தைத்தபடியேதான் இருக்கும்.

ஆகவே நீங்கள் ஒரு மதிப்பீட்டின் அடையாளமாக இருப்பீர்கள், அதேசமயம் அந்த அடையாளத்தை விமரிசித்தால் புண்படுவீர்கள் என்று சொல்கிறீர்கள். மரபின் புனிதப்பசுக்களாக வாழும் உரிமை உங்களுக்கு உண்டு என நினைக்கிறீர்களா என்ன?

ஒரு நாகரீக மனிதன் தன்னை எந்த ஒரு இனக்குழு அடையாளங்களுடனும் பொருத்திக்கொண்டு அதன் உணர்ச்சிகளை அப்படியே பிரதிபலிக்க மாட்டான். புறவயமான பார்வையுடன் அதை பரிசீலித்து சென்றகால அடையாளமாக அவன் அந்த பண்பாட்டு அம்சங்களை அவன் எடுத்துக்கொள்ளலாம். மாறாக ’நாங்கள்லாம் பிறாமணாள்’ என்று நீங்கள் சொன்னீர்கள் என்றால் நீங்கள் இருப்பது நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில். நவீன காலகட்டம் வந்து உங்களை மோதிக்கொண்டேதான் இருக்கும். நீங்கள் தலைமுதல் கால்வரை புண்பட்டபடியேதான் இருப்பீர்கள்.

’அந்தச் சாதியைச் சொல்வாயா? இந்த மதத்தைச் சொல்வாயா?’ என்ற பாமரத்தனமான கேள்வி எழுந்து வருவதை கண்டிருக்கிறென். ஆம், நேரடியான விமரிசனங்களை எதிர்கொள்ளும் மனப்பயிற்சி இல்லாத மூர்க்கமான இனக்குழுக்கள் பல உள்ளன. அவற்றுடன் போய் மோதுவது பலசமயம் பொருளற்றதுதான். ஆனால் நான் பிராமணர்களை அப்படிப்பட்டவர்களாக நினைக்கவில்லை. உங்களைப்போன்ற சிலர் இருந்தாலும் பிராமணர்கள் பொதுவாக இன்னமும் அறிவுத்தளச் சமநிலை கொண்ட மென்மையான மனிதர்கள்தான்.

சென்னையில் ஒருமுறை பேருந்தில் சென்றுகொண்டிருந்தேன், கையில் ’பின் தொடரும் நிழலின்குரல்’ இருந்தது. பெரிய நாமமும் குடுமியும் பூணூலுமாக ஒரு பழுத்த வைணவ முதியவர் ‘குடுங்கோ’ என்று வாங்கி புரட்டிப்பார்த்தார். என் படத்தை பார்த்துவிட்டு ‘நீங்கதானா?’ என்றார். ‘என் பையன் படிப்பான். விஷ்ணுபுரத்தை குடுத்து படிக்கச் சொன்னான்.நன்னா இருந்தது’ என்றார். அவர் ஒரு வைணவ அறிஞர்.

நான் கொஞ்சம் துடுக்காக ’அதிலே நிறைய பிராமண கண்டனம் இருந்ததே’ என்றேன். ‘ஆமா’ என்றார் சிரித்துக்கொண்டு ‘அது நம்ம மதத்திலே எப்பவும் இருக்கறதே… வாதமும் பித்தமும் கபமும் சமமா இருக்கணுமே’ என்றார். நான் ’அதிலே பிராமணர்கள் சாப்பிடுற காட்சி பத்தி என்ன நினைக்கிறீங்க?’ என்றேன். ‘பிரமாதம்’ என்று சிரித்தார். கிளம்பும்போது ‘நல்லா இரு..எல்லா ஷேமமும் வரட்டும். குரு இருக்காரோ இல்லியோ’ என்றார். ‘ஆமாம்’ என்றேன். ‘நினைசேன்.நல்லா இரு’ என்றார்.

நான் பிராமணன் என நினைப்பது அவரை, உங்களை அல்ல. நீங்கள் பெரும்பாலானவர்களப்போல் கற்றும் செய்தும் ஒரு சுயத்தை உருவாக்க முடியாமல் நீங்கள் பிறக்க நேர்ந்த இனக்குழுவையே உங்கள் அடையாளமாகக் கொண்டிருக்கும் பாமர ஆத்மா

ஜெ

காந்தமுள்

காந்தமுள் ,இருகடிதங்கள்


http://www.jeyamohan.in/?p=3863 சம்ஸ்கிருதம் யாருடைய மொழி?

முந்தைய கட்டுரைபழையபாதைகள்
அடுத்த கட்டுரைவாசகர் சந்திப்பு