அழியும் பாரம்பரியம், மார்க்ஸியம்

நான் நம் பெரும்பான்மை மார்க்ஸியர்கள் மேல் சொல்வது இதே குற்றச் சாட்டைத்தான். அவர்கள் தங்கள் மூடத்தனத்தால் ஒரு பழம் பெரும் பாரம்பரியம் அன்னிய ஏகாதிபத்திய சக்திகளால் வேருடன் கெல்லி அழிக்கப்படும் கொடூரமான வரலாற்று அநீதிக்கு துணை நிற்கிறார்கள். அதன் கருவியாகச் செயல்படுகிறார்கள். ஒருநாள் இதற்காகவும் அவர்கள் வருந்துவார்கள்.

இது நீங்கள் எழுதிய வரி. இதை என்னால் சரியாகப்புரிந்துகொள்ள முடியவில்லை. மார்க்ஸியர்கள் பழபெரும்பாரம்பரியத்தை அழிக்கிறார்கள் என்றால் எந்தப்பாரம்பரியத்தை?

அஸீஸ்

அன்புள்ள அஸீஸ்,

இந்துமதம், இந்துசிந்தனை மரபுதான். இந்தச் சொல் காதில் விழுந்த உடனே உங்களுக்குள் தோன்றும் எதிர்மறை எண்ணங்களை மட்டும் தொகுத்துப்பாருங்கள். எவர் ,எந்த அடிப்படையில், எந்த நோக்குடன் இவற்றை உருவாக்கி கடுமையான பிரச்சாரம் மூலம் நிலைநிறுத்தினார்கள்? வலுவாக முன்னெடுக்கிறார்கள்? அவர்களுக்கு இந்துமதம் குறித்தோ இந்துப்பண்பாடுகுறித்தோ இருக்கும் புரிதல் என்ன?

இந்துமதம், இந்துச்சிந்தனைமரபு புனிதமானது, குறையற்றது என நான் சொல்லமாட்டேன். அதன் முதன்மையான ஞானிகள் அனைவருமே அதன்மேல் கடும் விமர்சனங்களை முன்வைத்த சீர்திருத்தவாதிகளே. சங்கரர், ராமானுஜர், ராமகிருஷ்ணர், விவேகானந்தர், நாராயணகுரு ,வள்ளலார், காந்தி அனைவருமே. ஒரு தொன்மையான பாரம்பரியம் என்பதனாலேயே அது பொருத்தப்பாடு இழந்த கடந்தகாலத்து நம்பிக்கைகளையும் ஆசாரங்களையும் கொண்டிருக்கிறது. களைந்தாகவேண்டிய மூடநம்பிக்கைகளையும், அநீதிகளையும் கொண்டிருக்கிறது.

ஆனால் அத்தகைய குறைகள் இல்லாத மதங்கள் எதுவும் இந்த மண்ணில் இல்லை. மதம் என்பது ஆசாரங்களையும் நம்பிக்கைகளையும் சார்ந்தது என்பதனாலேயே அப்படி இல்லாமலிருக்க வழியும் இல்லை. ஆனால் அதன்பொருட்டு மதத்தை நிராகரிக்க முடியாது. ஏனென்றால் ஒரு மரபின் கலை, இலக்கியம், சிந்தனை, பண்பாட்டுச்செல்வம் அனைத்துமே மதமாகவே தொகுக்கப்பட்டுள்ளது. மதத்தை இழப்பவன் மரபை இழக்கிறான்.

வேறெந்த மதத்தை விடவும் இந்துமதம் சில அடிப்படை ஜனநாயக அம்சங்களில் மேம்பட்டது என்பது சற்றேனும் திறந்த மனத்துடன் சிந்திப்பவர்களுக்குத்தெரியும். அது ‘மாற்றுநிலைபாடுகளை’ அழித்தொழிப்பதில்லை. அவற்றின்மேல் வெறுப்பைக்குவிப்பதில்லை. அவற்றுடன் உரையாடவும் அவற்றில் உள்ள ஏற்புள்ளவற்றை எடுத்துக்கொள்ளவும் தான் முயல்கிறது.

வரலாற்றைத் திரும்பிப்பார்த்தால் எந்த ஒரு நிலப்பகுதியிலாவது ஆதிக்கம் செலுத்திய ஒரு மதம் இன்னொரு பெருமதத்தை இணையாக வாழவிட்டிருக்கிறது என்றால், பிற பெருமதங்களும் ஆயிரமாண்டுக்காலம் அந்த மதத்துடன் இணைந்து நீடித்தன என்றால் இந்தியாவில் இந்துமதம் திகழ்ந்த காலகட்டத்தில் மட்டும்தான். பௌத்தமும் சமணமும் கிமு ஒன்றாம் நூற்றாண்டு முதல் கிபி பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை இணையான இடத்தில் இங்கே இருந்தன. இதற்கு வேறு ஒரே ஒரு உதாரணம் கூட உலகவரலாற்றில் கிடையாது.

அத்தனை மதங்களும் ஒருங்கிணைந்த சமூக உருவாக்கத்திற்காகவே பிறவிகொண்டவை. ஆகவே உதிரிவழிபாட்டுமுறைகளை, தனித்தனி குலஆசாரங்களை இணைப்பதை அவை அனைத்துமே செய்தாகவேண்டும். பிற அத்தனை மதங்களும் அந்தச் உதிரிவழிபாடுகளை . தனித்தனிக் குலஆசாரங்களை முழுமையாக மறுத்து முற்றாக அழித்து தன்னை மட்டுமே நிறுவிக்கொள்பவை. இந்து, பௌத்த, சமண மதங்கள் மட்டுமே உலகவரலாற்றிலேயே உதிரிவழிபாடுகளையும் குலஆசாரங்களையும் உள்ளிழுத்துக்கொண்டு அவற்றுக்கான இடத்தை அளித்து வைத்துக்கொண்டவை. ஆயிரமாண்டுகளுக்குப்பின்னும் அவற்றின் தனித்தன்மையை அழியாமல் வைத்திருந்தவை.

இந்தப்பன்முகத்தன்மை, உரையாடல்தன்மை காரணமாகவே இந்துமதம் மாறக்கூடியதாக எப்போதும் இருந்துவருகிறது. அதில் உருவான ஞானிகளால் அது தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது. ஒருபோதும் அது முற்றுமுடிவாக எந்த நூலையும் எந்த ஞானத்தையும் முன்வைப்பதில்லை. ஏதேனும் ஒரு காலகட்டத்தில், ஏதேனும் ஒரு ஞானியில் அது மானுட ஞானத்தின் பெருக்கைக் கட்டிப்போடுவதில்லை.

ஆகவே ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அவனுக்கான ஆன்மீகசுதந்திரத்தை அது அளிக்கிறது. அவன் தன் அகத்தேடலை முன்னெடுக்கவும் முழுமைசெய்துகொள்ளவும் அது வழிவகுக்கிறது. அவன் மேல் இந்துமதம் விதிக்கும் கட்டுப்பாடுகள் என எவையும் இல்லை.தனிமனிதனாக ஓர் இந்துவுக்கு இருக்கும் சுதந்திரம் இன்று உலகிலிருக்கும் எந்த ஒரு மதநம்பிக்கையாளனுக்கும் இல்லை

இந்தத் தனிமனிதத் தேடலை அனுமதிப்பதனாலேயே இந்துமதம் கிளைவிடும் தன்மைகொண்டிருக்கிறது . அதன் மையத்தரிசனத்தை எல்லா வகையிலும் விரித்தெடுக்க, எந்தவகையான மீறலையும் முன்னெடுக்க அதில் இடம் உள்ளது. ஆகவே நூற்றுக்கணக்கான துணைமதங்களாக அது பிரிந்து வளர்கிறது

இந்த இயல்புகளினால் பல்வேறு ஞானநிலைகளின் வெளிப்பாடுகளைக் கொண்டதாக, மிகமிகநுட்பமான தத்துவசிந்தனைகளின் பெருந்தொகையாக, அழகியல்களின் வெளியாக இந்துமதம் உள்ளது. உலகநாகரீகத்திற்கு இந்துமதம் ஒருபெருங்கொடை. ஒரு மானுட சாதனை.

ஆனால் வெறும் ஆதிக்கநோக்கில் நூற்றாண்டுகளாக இந்துமதம் வேட்டையாடப்படுகிறது. குறைந்தது எழுநூறாண்டுக்காலமாக அது தொடர்ந்து ஒடுக்கப்பட்டு அழிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. குறுகியகாலத்தில் ஒரு மறுமலர்ச்சி அதற்கு வந்தது, பதினெட்டாம்நூற்றாண்டில். ஆனால் அதன்பின் இன்றும் அது அறிவுலகில் சூழ்ந்து தாக்கப்பட்டு வரும் ஒரு மதம், ஒரு பண்பாடுதான்

நான் என்றுமே வேதனையும் வியப்பும் அடையும் ஒருவிஷயம் இது. உலகில் ஒரே நாட்டில் எஞ்சியிருக்கும் ஒரு மதம், எந்தவகையான ஆதிக்கநோக்கும் அற்றது, பிறிது என எதையும் வெறுக்காத தத்துவம் கொண்டது ஏன் மேலைநாடுகளால் இந்த அளவுக்கு வெறுக்கப்படுகிறது என. என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. ஆதிக்கம் என்பதைத்தவிர வேறு காரணமே தென்படவில்லை.

ஓரளவு வாசிக்கிறவர்கள் அறிவார்கள் இந்துவெறுப்பு என்பது மேலைநாட்டு பண்பாட்டாய்வாளர்களில் அனேகமாக அனைவரிடமும் இருக்கும் ஒரு மனச்சிக்கல். அருவருப்பின் வெறுப்பின் அடித்தளம் அவர்களின் மொழிக்குள் வாழும். அவர்கள் இலக்கியமேதைகளாக இருப்பார்கள், தத்துவ அறிஞர்களாக இருப்பார்கள். நாம் அவர்களை வழிபடுவோம். ஆனால் அவர்களில் இந்த அகஇருளையும் பார்ப்போம். சமீபத்தில் நான் வாசித்து வருந்திய உதாரணம் மானுடவியலாளரான ஆலன் டண்டிஸ்.

நூறாண்டுகளுக்கும் மேலாக ஐரோப்பாவில் செய்யப்பட்ட இந்து எதிர்ப்புப் பிரச்சாரம் இதற்கு ஒரு காரணம். அத்துடன் ஐரோப்பியர்கள், அமெரிக்கர்கள் பிறன் என்றும், பிறிது என்றும் நினைப்பதைபுரிந்துகொள்ளும் மனநிலையை அவர்களின் மதப்பின்னணியில் இருந்து பெறவில்லை என்பது இன்னொரு காரணம்.

இந்துமதம் ஐரோப்பியப் பண்பாட்டாய்வளர்களால் இழிவுசெய்யப்பட்டு, வெறுக்கப்பட்டு ,திரிக்கப்பட்டு அனைத்து வகையிலும் சூழப்பட்டு தாக்கப்படுகிறது. தொடர்ந்து இங்கு கல்வித்துறையையும் அறிவுச்சூழலையும் ஆக்ரமித்துள்ள ஐந்தாம்படை அறிவுஜீவிகள் அச்சிந்தனைகளை நவீனச்சிந்தனைகளாக இங்கே முன்வைக்கிறார்கள். அவற்றை எதிரொலித்துப் பேசுவதே நவீனச்சிந்தனையின் அடிப்படை என்ற நம்பிக்கை இங்கு வலுவாக வேரூன்றப்படுகிறது.

இந்துமதத்தை சற்றேனும் ஏற்றுப்பேசினால் அவன் மதவாதி என்றும் பிற்போக்காளன் என்றும் முத்திரைகுத்தப்படுகிறான். அவன் கல்வித்துறையைச்சேர்ந்தவன் என்றால் முழுமையாகவே ஒதுக்கப்படுவான். எந்தவகையான அங்கீகாரமும் வாய்ப்புகளும் அவனுக்கு அளிக்கப்படமாட்டாது. எழுத்தாளன் என்றால் அவன் முழுமையாகவே அனைத்துவகை அமைப்புகளாலும் நிராகரிக்கப்படுவான். ஒரு எளிய அங்கீகாரத்தைக்கூட அவனால் பெறமுடியாது.

ஆகவே இளைஞர்கள், எதிர்காலக்கனவுகள் கொண்டவர்கள் இந்துஎதிர்ப்பு நிலைபாட்டை மட்டுமே எடுக்கமுடியும் என்ற நிலை இன்றுள்ளது. அதுவே முற்போக்கு, அதுவே நவீனத்தன்மை, அதுவே வெற்றிக்கு வழி. ஐயமிருந்தால் இங்கே விருதுகள், கல்வித்துறை பதவிகள், கருத்தரங்கப்பயணங்கள், மொழியாக்க வசதிகள்பெற்ற எவரை வேண்டுமென்றாலும் எடுத்துப்பாருங்கள். விதிவிலக்கே இருக்காது.

கவனியுங்கள், இந்து என்ற சொல்லே எத்தனை அருவருப்புடன் சொல்லப்படுகிறது. ஒர் அறிவுஜீவி இந்து என தன்னைச்சொல்லிக்கொள்வதற்கு எத்தனை சங்கடப்படவேண்டியிருக்கிறது. ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் மனிதநேய மக்கள் தலைவர்களாக முற்போக்காலர்களால் தூக்கிச்சுமக்கப்படும் சூழலில் இதைப்பொருத்திப்பார்க்கவேண்டும்.

இவ்வாறு நவீனச்சிந்தனைகொண்டவர்களால் முழுமையாக நிராகரிக்கப்படும் நிலையில் எந்தச்சீர்திருத்தமும் சென்று சேராத வெற்று ஆசாரத்தின் குரல்கள் மதத்தில் ஓங்கி ஒலிக்கத் தொடங்குகின்றன. மேலும் அது தேங்கிச்சீரழியத்தொடங்குகிறது.

தென்கொரியா ஐம்பதாண்டுகளுக்கு முன் ஒரு பௌத்தநாடு. இன்று கிராமப்புறங்களில் மட்டுமே பௌத்தம் எஞ்சியிருக்கிறது. இருபதாண்டுகளுக்குள் அங்கே பௌத்தம் முழுமையாக அழியும். இங்கு இந்துமதத்திற்கு நிகழ்வதே அங்கு பௌத்ததிற்கும் நிகழ்ந்தது. பௌத்தம் ஐரோப்பிய அறிவுச்சக்திகளாலும், அவர்களின் உள்ளூர் கூலிப்படையினராலும் சூழ்ந்து தாக்கப்பட்டது. அவதூறு செய்யப்பட்டது. அதன் சாரம் திரிபுபடுத்தப்பட்டது.

விளைவாக பௌத்த நம்பிக்கைக்கு எதிராகப்பேசுவது என்பது ‘நவீனமானது’ என்ற எண்ணம் எண்பதுகளில் வேரூன்றியது. பௌத்தனாகச் சொல்லிக்கொள்வது ஒருவனை நவீனவாழ்வுக்கு எதிரானவன் என்று காட்டும்படி சூழல் மாற்றப்பட்டது. நவீனத்தொழில்நுட்ப உலகுக்கு ஒத்துப்போக பௌத்தத்தை உதறியாகவேண்டும் என்று கற்பிக்கப்பட்டது. விளைவாக பௌத்தம் மெல்ல மெல்ல கைவிடப்பட்டது.

இன்று தென்கொரியா கிறிஸ்தவநாடு. செறிவான தத்துவ அடித்தளம் கொண்ட பௌத்தம் அழிக்கப்பட்ட இடத்தில் மிகமூர்க்கமான மூடநம்பிக்கைகள் மிகுந்த கிறிஸ்தவ மதமரபுகள் வந்து சேர்ந்துள்ளன. கிறிஸ்தவமதத்திற்குள்ளேயே ஐரோப்பா அடைந்த எந்த மறுமலர்ச்சியும் நிகழாத பதினாறாம்நூற்றாண்டுக் கிறிஸ்தவமே அவர்களுக்கு வந்தது. ஏனென்றால் அதுவே தாக்கும்தன்மை கொண்டது. பிற பண்பாடுகளை வெல்லும் வேகமும் ஆதிக்க சக்திகளின் ஆதரவும் கொண்டது. இன்று ஆசியா முழுக்க ஆவிக்குரிய எழுப்புதல்களையும் பேயோட்டுதல்கலையும் செய்யும் பாதிரிகளை கொரியா தயாரித்து அனுப்புகிறது.

இந்தியாவில் அடுத்த ஐம்பதாண்டுகளில் இந்துமதம் அழியவோ, செயலற்ற நிலையை அடையவோ வாய்ப்புண்டு என நான் நினைக்கிறேன். இப்போதே இந்தியாவின் பல மாநிலங்களில் கிறிஸ்தவமயமாக்கம் மிக வலுவாக நிகழ்கிறது. வடகிழக்கு பெரும்பாலும் கிறிஸ்தவ நிலம்.ஆந்திரா, சட்டிஸ்கர், பிகார் போன்ற மைய மாநிலங்கள் பெரும் மாற்றத்துக்குள்ளாகின்றன. அரசின் கணக்குகள் பெரும்பாலும் பொய்யானவை. இந்துமதம் அழியும் என்ற எண்ணத்தைத்தான் என் பயணங்கள் காட்டுகின்றன.

இருதலைமுறைக்குப்பின் மிகச்சிறுபான்மையினரின் ஆசாரநம்பிக்கையாக இந்துமதம் எஞ்சும். அதன் ஞானத்தொகை எகிப்தியவியல் போன்ற ஒரு சிறப்பு ஆய்வுப்பொருளாக அறிஞர் நடுவே இருக்கும். ஒரு சுற்றுலாக்கவர்சியாக அதன் ஆலயங்கள் மாறும். இன்றைய நிலையில் நாம் செல்லும் பாதை இதுவே

அப்படி ஓர் அழிவு நிகழுமென்றால் அது மானுடத்திற்கு இழைக்கப்படும் அழிவு. உலகசிந்தனைக்குப் பேரிழப்பு. அதற்காக ஒருநாள் உலகம் வருந்தும் என்றே நினைக்கிறேன்.

என் குற்றச்சாட்டு இதுதான். இந்த ஒட்டுமொத்தத் தாக்குதலில், ஏகாதிபத்தியம் நிகழ்த்தும் போரில், கூலிப்படையினருடன் இணைந்து செயல்படுகிறார்கள் இங்குள்ள மார்க்ஸியர்கள். அதற்காக அவர்கள் வருந்துவார்கள். பொதுவாக இடித்துக்குவித்துவிட்டு பின்னர் அது ஒரு தவறான கொள்கைமுடிவு என்று சொல்வதே அவர்களுக்கு வழக்கம்

ஜெ

முந்தைய கட்டுரைபெண்களின் நகரம்
அடுத்த கட்டுரைஅனல் காற்றின் உணர்வுகள்