அன்புள்ள ஜே மோ
வாசித்தேன். நல்ல காரியத்துக்காக பிச்சை எடுப்பது உயர்ந்த தர்மம்.
” நண்பர்கள் என நினைப்பவர்களிடம் மட்டும் கேட்பதுண்டு’. என்னை உங்கள் நண்பர்களில் ஒருவராகக் கொண்டதற்கு நன்றி. பெருமை.
மேலும் உங்கள் நண்பர் முத்துராமன் ஈழ குழந்தைகள் கல்விக்காக நிதி திரட்டுகிறார் என்று படித்தேன். விபரம் தரவும். என்னால் முடிந்த தொகை முடிந்த போது அனுப்பி வைக்கிறேன்.
சிவா
அன்புள்ள சிவா
முத்துராமனின் வழி நிதி திரட்டுவது அல்ல. உதவிதேவைப்படுபவர்களைச் சந்தித்து தகவல்களைத் திரட்டி உதவி அளிப்பவர்களிடம் கொண்டுசேர்ப்பது மட்டுமே இலங்கை அகதிக்குழந்தைகளுக்கு இந்தியக் குடியுரிமை இல்லை. ஆகவே இட ஒதுகீடு மற்றும் சலுகைகள் ஏதுமில்லை. அவர்களுக்கு நிதியமைப்புகள் கடன் வழங்குவதில்லை. மிக உயர்ந்த மதிப்பெண் பெற்றாலும் அரசிலோ உயர்தர நிறுவனங்களிலோ வேலை கிடைப்பதில்லை. அந்நிலையிலும் மிகச்சிறப்பாகப் படிப்பவர்கள் இருக்கிறார்கள். அவர் அவர்களுக்கு மட்டும் உதவுகிறார்
மின்னஞ்சல் [email protected]
ஜெ
ஜெ,
இணையப்பிச்சைக்காரன் என்ற உங்கள் கட்டுரையைப் படித்துவிட்டு ஒரு நண்பர் சொன்னார். அவருடைய நண்பர் யாரோ சொன்னதைக்கேட்டாராம். “ஜெயகாந்தன் இந்தமாதிரி எவர் உதவியையும் கேட்காம எப்டி சிங்கம் மாதிரி வாழ்ந்தார். இவர் self pity யா பேசுறார்” என்று. நீங்கள் உங்களுக்காகப் பணம் கேட்கவில்லை, உங்களுக்காகவும் வருந்தவில்லை என்று சொன்னேன். ‘இல்லியே’ என்றார்.ஆச்சரியமாக இருந்தது. நம்மாட்களின் sensibility யை நினைத்து.
இணையம் வழியாக நிறையப்பணம் சேர்த்து பல அறக்காரியங்களைச் செய்கிறார்கள். ஒன்றும் செய்யாத பிளாக்கர்களுக்குக் நிறையப் பணம் வருகிறது என்கிறார்களே.
ஜெயராமன்
அன்புள்ள ஜெயராமன்,
நம்மவர்கள் நிதியளிப்பார்கள். முதன்மையாகக் கோயில்காரியங்களுக்கு. அது புண்ணியம் என்ற எண்ணம் உள்ளது.
அந்தப்பணத்தில் பத்துசதவீதம்தான் அறக்காரியங்களுக்கு வரும். அறக்காரியங்களுக்கு அதிகமாகப் பணம் அளிப்பவர்கள் இஸ்லாமியர்களே.
அறப்பணிகளுக்கு வரும் பணத்தில் அரைசதவீதம் கூட இலக்கியவாதிகள் கஷ்டப்பட்டால் வருவதில்லை. பலகாரணங்கள். ஒன்று இலக்கியவாதிகளுக்காகப் பணம் அளிப்பதற்கு இலக்கியம் என ஒன்று உலகில் உண்டு என்று தெரிந்திருக்கவேண்டும்.அப்படிப்பட்டவர்கள் மிகச்சிலர். அவர்களிடம் பணமிருப்பதில்லை
இன்னொன்று நம்மவர்களுக்கு பெற்றுக்கொள்பவர் கீழ்நிலையில், இரக்கத்தை எதிர்பார்த்து கையறுநிலையில் இருக்கவேண்டும், அவரே கோரிக்கைவிடவும் வேண்டும்.அவ்வாறு குனிந்துபார்க்கும் நிலையில் இல்லாதவர்களுக்கு உதவுவதில் ஆணவநிறைவு இல்லை. எழுத்தாளர்களைப்பற்றிச் சொல்லுபோதே ‘திமிருபுடிச்சவனுக சார்’ என்ற பேச்சு காதில் விழுகிறது. எழுத்தாளனை அவன் எந்தளவுக்கு பரிதாபகரமான வாழ்க்கையில் இருந்தாலும் கொஞ்சம் அச்சத்துடன் அண்ணாந்துதான் பார்க்கிறார்கள். அந்த தாழ்வுணர்ச்சி வந்து தடுக்கிறது
இருதலைமுறைகளுக்கு முன்னால் ‘சரஸ்வதி கடாட்சம்’ என்ற ஒரு நம்பிக்கை இருந்தது. அது கவிஞர்களை சாகவிடாமல் காத்தது. அதை எழுத்தாளர்களே பகுத்தறிவுப்பிரச்சாரம் மூலம் தகர்த்துவிட்டனர். கஷ்டம்தான்
ஜெ