மலையாள மொழியின் மிகப்பெரிய தனிமனித சாதனைகள் நான்கு என்பார்கள். ஒன்று, ‘ஸ்ரீகண்டேஸ்வரம்’ தொகுத்த மகாநிகண்டு. சம்ஸ்கிருத, மலையாளச் சொற்களுக்கான மாபெரும் அகராதி இது. இரண்டு, கொடுங்கல்லூர் குஞ்சிகுட்டன் தம்புரான் மகாபாரதத்தை முழுமையாக செய்யுளில் மொழியாக்கம்செய்தது. மூன்று வேதங்களை வள்ளத்தோள் நாராயணமேனன் மொழியாக்கம் செய்தது. நான்கு வெட்டம் மாணியின் புராணக் கலைக்களஞ்சியம்.
1964 ல் வெளிவந்த புராணக் கலைக்களஞ்சியம் ஒருவகையில் இந்திய மொழிகளில் உள்ள எந்த ஒரு புராணக்கலைக்களஞ்சியத்தை விடவும் மேலானது, முழுமையானது என்று அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்தியாவின் பிரம்மாண்டமான புராண மரபை மூல சம்ஸ்கிருத,பாலி , பிராகிருத மொழிகளில் இருந்து விரிவாக தொகுத்து படிப்பதற்கு இனிய மொழியில் எழுதப்பட்டது இந்த கலைக்களஞ்சியம்.
மலையாளமொழியின் எக்காலத்திலும் பெரிய வணிக வெற்றிகளில் ஒன்று இந்நூல். இதுவரை இருபத்தைந்து பதிப்புகளிலாக ஒன்றரை லட்சம் பிரதிகள் விற்கப்பட்டுள்ளது இந்த மாபெரும் நூல். அனேகமாக படிக்கும்பழக்கமுள்ள மலையாளிகள் அனைவருமே இந்நூலை அறிந்திருப்பார்கள். இது இல்லாத நூலகம் இல்லை. பலவகையிலும் இந்நூலுடன் ஒப்பிடத்தக்க அபிதான சிந்தாமணி தமிழில் பெற்ற முழுமையான புறக்கணிப்பை நாம் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.
புராணக் கலைக்களஞ்சியம்தின் ஆசிரியரான வெட்டம் மாணி ஒரு சிரியன் கிறித்தவர். கோட்டயத்துக்கு அருகே உள்ள கொச்சுமற்றம் என்ற சிற்றூரில் 1927 ல் ஒரு வேளாண் குடும்பத்தில் பிறந்தார். அப்பா பெயர் புதுப்பள்ளி வெட்டம் உலஹன்னான். அம்மா அன்னம்மா. ஆங்கிலப்பள்ளியில் மெட்ரிகுலேஷன் படித்தாலும் அதை முழுமைப்படுத்த முடியவில்லை. கோட்டயம் அருகே பாம்பாடி என்ற ஊரில் உள்ள விஞ்ஞான சம்வர்த்தினி சம்ஸ்கிருதப் பள்ளியில் ஆசிரியரானார்.
அப்பள்ளியில் போதிய ஊதியம் கிடைக்கவில்லை என்று சண்டைபோட்டு ராஜினாமாசெய்துவிட்டு ராணுவத்தில் சேர்வதற்காக பெங்களூர் சென்றார். அங்கேதான் ராணுவ வாழ்க்கையின் கொடுமைகளை அறிந்து ராணுவத்தில் பயிற்சியை முடிக்காமல் வெளியேறி ஊர் ஊராகச் சுற்றும் நடோடியானார். பல வருடம் அவர் இந்திய நிலப்பகுதியில் அலைந்து திரிந்தார். அப்போது பதினைந்துக்கும் மேற்பட்ட மொழிகளை கற்றார்.
பின்னர் ஊர்திரும்பி கறுகச்சால் என்.எஸ்.எஸ் ஆசிரியர் பயிற்சிபப்ள்ளியில் ஆசிரியரானார். பயிற்சிக்குப் பின்னர் பலவருடங்கள் ஆரம்பப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். புதுப்பள்ளி தறயில் ஆரம்பப்பள்ளி, அரயன்னூர் நடுநிலைப்பள்ளி, கோட்டயம் சி.எம்.எஸ் பள்ளி போன்றவற்றில் ஆசிரியராக இருந்தார்.
வெட்டம் மாணியின் ஆளுமை வேடிக்கையானது. அவரது தனிவாழ்க்கை பலவகையான தளங்கள் கொண்டது. அவரை ஒரு அதீதமனம் கொண்டவர் [Excentric ] எனலாம். அவருக்கு எதிலெல்லாம் ஆர்வம் இருந்தது என்று சொல்வது கஷ்டம். உச்சகட்ட திறன் கொண்ட அவரது மூளைக்கு அவர் வாழ்ந்த வாழ்க்கை போதவில்லை. ஆகவே ஒரே சமயம் பல வாழ்க்கை வாழ்ந்தார்.
வெட்டம் மாணி கவிதைகள் எழுதினார். அவரது முதல் தொகுதி ‘அந்தியபாஷ்பம்’. அதன் பின் தொடர்ச்சியாக கதைகளும் கவிதைகளும் எழுதினார். கதாபிரஸங்கம் என்ற கலையில் [தனிநபர் நடிப்பும் பாடல்களுமாக ஒருவரே ஒரு கதையை மேடையில் நிகழ்த்துவது]புகழ்பெற்று நிறைய பணம் சம்பாதித்தார். நன்றாகப் பாடுவார். பைபிளில் ஒரு நிபுணர். ஆகவே கிறித்தவப்பேருரைகள் செய்வார். அறிவியலில் பெரும் ஆர்வம் உண்டு.
இதன் நடுவே பள்ளிகள் மாறிக்கொண்டே இருந்தார். மூன்றுவருடத்துக்குமேல் அவர் ஒரு நிறுவனத்தில் வேலைபார்த்தது இல்லை. வேலையைவிடுவதில் அவருக்கு அதிகமான உற்சாகம் இருந்தது. கோட்டயம் எம்.டி பள்ளி,மணார்காடு தேவலாயப்பள்ளி என்று மாறிக்கொண்டே இருந்தார். நடுவே இந்திபயில்வதில் ஆர்வம் எழுந்து முதல் தகுதியில் ராஷ்ட்ர பாஷா விஸாரத் பட்டம்பெற்றார். அதன்பின் ஹிந்தி கற்பிக்க ஒரு தனியார் பயிற்சிப்பள்ளியை ஆரம்பித்து அதை வெற்றிகரமாக நடத்தினார்.
பின்னர் அதை ஒரு பெரிய தனியார் கல்வி நிறுவனமாக வளர்த்தார் வெட்டம் மாணி . பிரகாஷ் கல்வி நிறுவனங்கள் என்ற பேரில் அவர் நடத்திய அந்த அமைப்பு பல கிளைகளுடன் வளர்ந்து ஒரு கட்டத்தில் அதில் இரண்டாயிரம் மாணவர்கள் படித்தார்கள். இந்த காலகட்டத்தில் அவர் ஆங்கிலம் மலையாளம் சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் முதுகலைப் பட்டங்கள் பெற்றார். அக்காலத்தில் மிகமிகப்புகழ்வாய்ந்த ஆசிரியராக அவர் கருதபப்ட்டார். ஆகவே அவரிடம் கற்க மாணவர்கள் குவிந்தார்கள்.
அவரது பள்ளி வெற்றிகரமாக நடந்தகாலத்தில் வெட்டம் மாணி புராணக் கலைக்களஞ்சியத்தின் பணியை ஆரம்பித்தார். ஏறத்தாழ 9 வருடம் கடுமையாக உழைத்தார். தினம் இரண்டுமணிநேரம் மட்டுமே அவர் தூங்குவது வழக்கம். பகலில் பன்னிரண்டு மணிநேரம் வரை வகுப்புகள். இரவில் எட்டுமணிநேரம் வரை புராண ஆராய்ச்சி. ஒருகட்டத்தில் முற்றிலும் தூக்கமிழந்து தூக்கமின்மைநோய்க்கு ஆளானார். அது அவரது உடலை பாதித்தாலும் சிந்தனை தெளிவாகவே இருந்தது.
1964ல் புராணக் கலைக்களஞ்சியத்தின் முதல் பதிப்பு அவராலேயே பிரசுரிக்கப்பட்டது. 1967ல் இரண்டாம் பதிப்பையும் அவரே பிரசுரித்தார். ஆரம்பத்தில் கவனிக்கபப்டாதுபோன இந்த பெருநூல் மெல்லமெல்ல அறிஞர் மத்தியில் புகழ்பெற்றது. பின்னர் இதன் பகுதிகள் இதழ்களில் பிரசுரமாக ஆரம்பித்த போது இதன் இனிய வாசிப்புத்தன்மை பொதுவாசகர்களைக் கவர்ந்தது. இந்நூல் ஒரு வெற்றிகரமான நிறுவனமாகவே வளர்ந்தது. இன்று வருடம்தோறும் லட்சகணக்கில் பதிப்புரிமை வருமானம் ஈட்டும் ஒரு நூலாக உள்ளது.
1971ல் வெட்டம் மாணி ‘பாவனா’ என்ற இலக்கிய வார இதழை ஆரம்பித்தார். 20 இதழ்களுக்குமேல் அதை நடத்த முடியவில்லை. புராணக் கலைக்களஞ்சியம் தவிர 10 நூல்கள் அவரால் எழுதப்பட்டன.1987 மேமாதம் 29 ஆம் தேதி வெட்டம் மாணி மறைந்தார்.
வெட்டம் மாணியின் மனைவிபெயர் சி.வி.அன்னம்மா. சி.வி.ஜோணப்பா,ஜார்ஜ் வெட்டம், டைட்டஸ் மாணி ஆகிய மூன்று மைந்தர்கள். மூவருமே புகழ்பெற்றவர்கள். சி.வி.ஜோணப்பா,ஜார்ஜ் வெட்டம் இருவரும் கல்லூரி ஆசிரியர்கள், வரலாற்று இலக்கிய ஆய்வாளர்கள்.டைட்டஸ் மாணி கேரளத்தின் முதன்மையான வழக்கறிஞர்களில் ஒருவர்.
கேரளத்தில் மிகவும் ஆர்வமூட்டக்கூடிய ஒரு விஷயம் இந்து புராணங்களில் கரைகண்ட பேரறிஞர்கள் ஏறத்தாழ அனைவருமே சிரியன் கிறித்தவர்கள் என்பது.1934ல் ராவ்பகதூர் ஒ.எம்செறியான் ‘ஹைந்தவ தர்ம சுதாகரம்’ என்ற பெருநூலை தொகுத்தார்.நான்கு பகுதிகள் கொண்ட கலைக்களஞ்சியமான இது இந்து மரபுகள், அறநெறிகள், நம்பிக்கைகள் ஆகியவற்றின் தொகுப்பு. அதைத்தொடர்ந்து பைலோ போள் என்ற பேரறிஞர் இந்து புராணங்களுக்கான அகராதியான ‘புராணகதாநிகண்டு’ வை தயாரித்தார்.
வெட்டம் மாணியின் கலைக்களஞ்சியம் இவ்விரு நூல்களின் வழிநூல். ஆனால் முழுமையானது. ஒவ்வொரு புராண கதைமாந்தருக்கும் கொடுக்கபப்ட்டுள்ள கட்டுரையில் அக்கதாபாத்திரம் முதன்முதலில் எந்த புராணத்தில் தோன்றுகிறது, எந்தெந்த புராணங்களில் அந்தக் கதாபாத்திரம் எவ்விதமெல்லாம் வளர்ச்சி கொள்கிறது, அதன் பல்வேறு தோற்றநிலைகள் என்ன, அந்த பெயரில் வேறு எந்தெந்த புராணக் கதாபாத்திரங்கள் உள்ளன என்றெல்லாம் வரிசையாக விரிவான தகவல்கள் காணபப்டும். சொல்லப்போனால் அத்தலைப்பு பற்றிய முழுமையான ஓர் ஆய்வுக்கட்டுரையாகவே அது இருக்கும். வெட்டம் மானியின் ஒரு தலைப்பையே முனைவர் பட்ட ஆய்வேடாக எழுதிவிடலாம் என்பார்கள்.
உதாரணமாக இந்திரன். இந்திரன் என்ற தலைப்பின் கீழ் முதல் உபதலைப்பு ‘தோற்றம்’ அடுத்தது ‘வம்சாவலி’ அதன் பின் ‘இந்திரனும் கருடனும்’ என்ற தலைப்பில் இந்திரனைப்பற்றிய முதல் தொல்கதை. அதன்பின் கலைக்களஞ்சிய அளவில் 16 பக்கங்களில் இரு பத்திகளில் நுண்ணிய எழுத்தில் 96 உபதலைப்புகளில் இந்திரனைப் பற்றிய மிகவிரிவான தகவல்கள் உள்ளன. அதை ஒரு சிறு நூலாகவே வெளியிடலாம். உடனே அடுத்த தலைப்பு. இந்திரகீலம். ‘இமாலயத்துக்கும் கந்தமாலனுக்கும் முன்னால் உள்ள ஒரு மலை. இந்த மலையின் அதிபன் குபேரனின் உபாஸகன். மகாபாரதம் வனபர்வம் 37 ஆம் அத்தியாயம்’ என்ற ரத்தினச்சுருக்கமான குறிப்பு. அடுத்தது இந்திரஜித் என்ற தலைப்பில் மிக விரிவான கட்டுரை
வெட்டம் மாணியின் இன்னொரு பெரும் நூல் ராமசரிதம் என்ற பிரபலமான கதகளி ஆட்டக்கதைக் காவியத்துக்கு அவர் எழுதிய பேருரை, இரண்டு பகுதிகளிலாக இது வெளியாகியது. கிருஷ்ணகாதை என்ற தொன்மையான நூலுக்கும் அவர் விரிவான விரிவுரை எழுதியிருக்கிறார். காந்தியைப்பற்றி சிறுவர்களுக்காக ‘குழந்தைகளின் காந்தி’ என்றநூலை எழுதியிருக்கிறார்.கம்பராமாயணத்தின் சுந்தரகாண்டத்தை மலையாளத்தில் எழுதியிருக்கிறார் கேரள் இலக்கியவரலாற்றை விரிவாக எழுதியிருக்கிறார். எனினும் வாழ்ந்தபோது வெட்டம் மாணிக்கு அதிக வருமானத்தை அளித்தது அவர் எழுதிய பல ஆங்கில வழிகாட்டி நூல்களே.
வெட்டம் மாணி அடிப்படையில் மத பக்தி கொண்ட கிறித்தவர். பைபிளில் அவருக்கு ஆழமான ஈடுபாடும் படிப்பும் இருந்தது. இந்து புராணங்களை அவர் இந்திய நாட்டின் கலாச்சார அடித்தளமாகவே காண்கிறார், மதநூல்களாக அல்ல. ”எந்த ஒரு பண்பாடும் அது உருவாக்கி எடுத்திருக்கும் புராண இதிகாசங்களின் மீது வேரூன்றியபடித்தான் வளர முடியும். இந்திய இலக்கியமும் அப்படித்தான். மகத்தான மகாபாரதம், ராமாயணம், புராணங்கள், ஸ்மிருதிகள் போன்றவை நம் பண்பாட்டை உருவாக்கும் சக்திகள் ”என்று தன் முன்னுரையில் வெட்டம் மாணி குறிப்பிடுகிறார்.
”உலக இதிஹாச நாயகர்களான ஹோமர் போன்றவர்களையெல்லாம் வாமனர்களாக சிறுத்து காலடியில் கைகூப்பி நிற்கச்செய்யும் பேருருவமான வியாசனைப் புறக்கணித்து என்ன நவீன இலக்கியம் உருவாக முடியும்?” என்று சொல்லும் வெட்டம் மாணி அதன்பொருட்டே இந்த பெருநூலை உருவாக்கினார். ஒரு மொழியின் இலக்கியம் அப்பண்பாட்டிற்கே உரிய படிமங்களால்தான் உருவாக முடியும். அவையே இலக்கிய ஆக்கத்துக்கான மூலமொழி [Proto language] யை கட்டமைக்கின்றன. இந்திய இலக்கியத்துக்கு அது புராண இதிஹாசங்களே என்கிறார் வெட்டம் மாணி
பன்மொழி அறிஞரும், செவ்விலக்கியங்களில் ஊறியவருமான வெட்டம் மாணி ”மானுடகுலத்தின் அனைத்து தளங்களையும் தெளிவுபடுத்தும் தன்மையை வைத்துப்பார்த்தால் மகாபாரதத்தைவிட மேலான ஒரு இலக்கிய ஆக்கம் இந்த புவிமீது இதுவரை உருவானதில்லை என்று நான் உறுதியாக எண்ணுகிறேன். இவ்விஷயத்தில் ஆதிகவிஞரான வான்மீகி கூட வியாஸனுக்கு மிகமிகப் பின்னால் வரக்கூடியவனே. பிறகல்லவா ஹோமர்? வியாஸனுக்கு மானுட இலக்கிய வரலாற்றில் அளிக்கப்படவேண்டிய இடம் இன்றுவரை நம்மால் பெறபப்டவில்லை. வியாஸசரஸ்வதியின் தாய்ப்பால் குடித்து வளர்ந்த பாரத மக்கள் அடுத்த தலைமுறையிலாவது அந்த உரிமையை நிலைநாட்டுவார்கள். இலக்கியத்துக்கு ஒரு நீதிமன்றம் உள்ளது என்றால் இப்புவியில் இதுவரை பிறந்த கவிஞர்களில் வியாசனே முதன்மையானவரென்று அது தீர்மானிக்கவே செய்யும்” என்கிறார்.
தன் முன்னுரையில் வெட்டம் மாணி புராணங்களின் முக்கியத்துவத்தை விரிவாகவே விளக்குகிறார்.இந்தியாவில் உள்ள இலக்கியநூல்களில் எல்லாமே புராணத்தின் செய்திகளே பல்வேறுவகைகளில் படிமங்களாகவும் உருவகங்களாகவும் மறு ஆக்கங்களாகவும் இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் செவ்வியல்கலைகள் மட்டுமல்ல நாட்டுப்புறக் கலைகள்கூட புராண இதிஹாசங்களை அடிப்படையாகக் கொண்டவையே. நவீன இலக்கியங்களில்கூட முக்கியமான ஆக்கங்களில் இதிகாச,புராணக் கதைகளின் நேரடியான பாதிப்பைக் காணலாம். ஆகவே ஏதாவது ஒரு வகையில் இலக்கியத்தில்செயல்படும் ஒவ்வொருவருக்கும் புராண இதிகாசப் பயிற்சி இன்றியமையாதது’ என்கிறார் வெட்டம் மாணி
1955ல் இந்நூலை எழுத ஆரம்பித்ததாகச் சொல்லும் வெட்டம் மாணி இதிலுள்ள தலைப்புகளை உருவாக்கிமுடிக்கவே இரண்டுவருடம் ஆயிற்று என்கிறார். பின்னர் ஏழுவருட உழைப்பினால் நூலை எழுதி முடித்து வெளியிட்டார். ஏராளமான மூலநூல்களையும் சுவடிகளையும் இதற்காகப் படிக்கவேண்டியிருந்தது. ஒரு புராண கதாபாத்திரத்தின் வம்சாவலியை முழுமைசெய்ய குறைந்தது பத்து நூல்களை ஆராயவேண்டியிருந்தது என்கிறார். இந்நூல் உண்மையில் இந்திய இலக்கியத்தின் படைப்புமொழியைப் புரிந்துகொள்வதற்கான ஒரு அகராதி என்றுகூடச் சொல்லலாம்.
திருவிக,சிங்காரவேலு முதலியார்:கடிதங்கள்
ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளை:சைவசித்தாந்த முன்னோடி