வா,போ,நில்,சாப்பாடு, துணி,மகன், மகள், சாலை,வீடு, வானம், பூமி, ராத்திரி, பகல் எல்லாம் ஓரளவு எளிதாகவே வந்துவிட்டது. நான் தமிழில் அச்சொற்களைச் சொன்னால் பெரியம்மா அவற்றுக்கான ஆங்கிலச் சொற்களைச் சொல்வாள். நான் சொல்வதில் ஓர் ஒழுங்கு இருப்பது நான் பூ என்று சொல்வதற்குள்ளாகவே பெரியம்மா cat என்று சொன்னபோது எனக்குத் தெரிந்தது. ஆகவே அடுக்கை மாற்றினேன். ஆனால் பெரியம்மா என் கண்களைபார்த்தே சொல்லத் தொடங்கினார்கள். நான் அம்மிருகங்களைச் சுட்டிக்காட்டி அவை என்ன என்று கேட்டேன். பெரியம்மா தமிழில் நாய், பூனை, கோழி என்று சொன்னபின் அதை உடனடியாக மொழியாக்கம் செய்தாள். நூறு அடிப்படைச் சொற்களை பெரியம்மா நான் கேட்பதற்குள்ளாகவே சொல்லத் தொடங்கியபின்புதான் நான் கருத்துக்களுக்குச் சென்றேன். அங்குதான் அத்தனை பிரச்சினைகளும் தொடங்கின.
பெரியம்மா எனக்குப் பெரியம்மா இல்லை. எங்கள் ஊரில் அத்தனைபேரும் அவளை அப்படித்தான் அழைத்தார்கள். அவள் வீட்டை பெரியவீடு என்று. ஊரின் நடுவே இருந்த அந்த மாளிகை பெரியம்மாவின் தாத்தா திருவடியா பிள்ளை நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு கட்டியது. பெல்ஜியத்திலிருந்து கண்ணாடிகளும் பர்மாவிலிருந்து தேக்கும் இத்தாலியில் இருந்து சலவைக்கல்லும் இங்கிலாந்தில் இருந்து இரும்பும் அதற்கு வந்ததாகச் சொல்வார்கள். அதற்கு சுதை அரைப்பதற்காக வந்தவர்கள் நிரந்தரமாகத் தங்கியதனால் எங்களூரின் சுண்ணாம்புத்தெரு உருவானது. தச்சர்களும் அப்போது வந்தவர்கள்தான். பெரியம்மாவுக்கு அங்கேதான் திருமணம் நடந்தது. எங்களூருக்கு முதல்முதலாக ஒரு மோட்டார் வந்தது அப்போதுதான். அந்த ஃபோர்ட் காரில்தான் வீதிவலம். அதன்பின் பெரியம்மா அதில் ஏறவில்லை.
பெரியம்மாவின் கணவர் இறந்து நாற்பதாண்டுகள் கடந்துவிட்டன. ஒரேமகன் ஆறுமுகம்பிள்ளை மதுரையில் வழக்கறிஞராக இருந்து இறந்துபோனார். அவரது நான்கு மகன்களும் சென்னையிலும் டெல்லியிலும் கல்கத்தாவிலுமாக இருந்தார்கள். இப்போது யாருமே உயிருடன் இல்லை. முதல்பேரனின் மகள் ஒருத்தி அமெரிக்காவில் டாக்டராக இருந்தாள். அவளுக்குமட்டும்தான் பெரியம்மாவுடன் உறவிருந்தது. பெரியம்மா ஊரில் நான்காவது தலைமுறையைச் சேர்ந்த ஊர்மக்களுக்கு ஒரு சரித்திரச் சின்னம்போல வாழ்ந்தாள். முன்பு அவர்களுக்கு ஆறாயிரம் ஏக்கம் நிலம் இருந்தது. அது பலவகையிலும் குறைந்து நூறு ஏக்கர் நிலமாக எஞ்சியது. அதை முப்பதாண்டுகளுக்கு முன்னரே பங்கிட்டுவிற்றுவிட்டனர். அந்த வீடும் அதைச்சுற்றியிர்ந்த இரண்டுஏக்கர் நிலமும் வங்கியில் ஒரு நல்லதொகையும் நகைகளும்தான் பெரியம்மாவுக்கு எஞ்சியது. ஆனால் அவள் அதிகாரத்துடன் வாழ அதுவே போதுமானதாக இருந்தது
என் அம்மாவுக்கு நினைவுதெரிந்த நாள் முதலே பெரியம்மா அந்த மாளிகையில் மூன்று வேலைக்காரர்களுடன் தனியாகத்தான் இருந்தாள். விடியற்காலையிலேயே உரத்தகுரலில் எல்லாரையும் அதட்டி வேலைவாங்கியபடி முற்றத்தில் நின்றிருப்பாள். தினமும் சாயங்காலம் அவர்களின் வீட்டில் உள்ள மரத்தால் சிறிய கோயிலில் புராண பாராயணம் உண்டு. பெரியம்மாவுக்கு வாசித்துக்காட்டுவதற்கென்றே முத்துசாமிப்புலவர் வருவார். முன்பு அவரது அப்பா வந்துகொண்டிருந்தார். அவரது அப்பாவும் அங்கே பாராயணம் செய்தவர்தான். பாராயணம் முடிந்ததும் பஜனை. அதன்பின் சுண்டல்,சர்க்கரைப்பொங்கல், வாழைப்பழம், பொரி என ஏதாவது பிரசாதம் கிடைக்கும். நான் சிறுவனாக இருந்தபோது ஒருநாள் விட்டதில்லை.
அவர்கள் வீட்டு அடித்தளம் மிக உயரமானது. ஆள் நின்றால் தலைக்குமேல் போகும். வாசலிலும் கொல்லையிலும் கல்லில் செதுக்கப்பட்ட பெரிய எட்டு படிகள். பெரியம்மா கொல்லைப்பக்கம் கைகழுவ வந்தபோது தலைசுற்றி கீழே விழுந்து அடிபட்டு எட்டுமாதம் படுக்கையில் இருந்தாள். அமெரிக்கக் கொள்ளுப்பேத்தியின் ஏற்பாட்டில் டாக்டர்கள் வந்து பார்த்துச்சென்றனர். விந்திவிந்தி நடக்கத் தொடங்கினாலும் பழைய வாழ்க்கைக்கு மீளமுடியாது என்று ஆயிற்று. அந்தப்படுக்கை பெரியம்மாவின் மனதை மாற்றியது.அதுவரை அந்த வீட்டைவிட்டு விலகமுடியாது என்று உறுதியாகச் சொல்லிவந்தவள் பேத்தியுடன் அமெரிக்கா செல்லத் தயாரானாள்.
ஆனால் பேத்தியின் கணவர் ஒரு அமெரிக்கவெள்ளையர். இரண்டு பையன்களும் இரண்டு பெண்குழந்தைகளும் வெள்ளை. அந்தக் கொள்ளுப்பேத்திக்கே தமிழ் தெரியாது. நான் தபாலில் எம்.ஏ ஆங்கில இலக்கியம் முடித்து ஊரில் ஒரு சின்ன பள்ளிக்கூடத்தில் ஆசிரியராகவும் அலுவலக உதவியாளராகவும் வேலைபார்த்துவந்தேன். என்னிடம் பெரியம்மாவுக்கு அடிப்படை ஆங்கிலச்சொற்களைச் சொல்லிக்கொடுக்க முடியுமா என்று கொள்ளுப்பேத்தி மின்னஞ்சலில் கேட்டாள். நான்தான் ஊரில் அவளுடன் தொடர்பு கொண்டிருந்தவன். வீட்டை வாங்கி உடைக்க தரகர்களுடன் வணிகர்கள் வந்துகொண்டிருந்தார்கள். விசாவுக்கான வேலைகள் நடந்துகொண்டிருந்தன.
எனக்கு மூன்று மாதம் அளிக்கப்பட்டது. இரண்டுமாதத்தில் நான் அத்தனை சொற்களை பெரியம்மாவுக்குக் கற்பித்தேன். கொசு என்ற சின்ன பூச்சி ஆங்கிலத்தில் மொஸ்கிட்டோ என்ற பயங்கரமான உயிர் என்பது பெரியம்மாவை திகைக்க வைத்தது. மாதுளம்பழம் என்பது தமிழில் பெண்போல ஒலிக்கும்போது பொமெகிரெனேட் என்ற சொல் ஆண்மையுடன் இருக்கிறது என்று அவள் எண்ணினாள். ஆனால் குடையை விட அம்ப்ரல்லா பிடித்திருந்தது. ஏனென்றால் அம்ப்ரெல்லாவை பெரியம்மா மறக்காமலிருக்க நான் சிண்ட்ரெல்லா கதையைச் சொல்லியிருந்தேன். பனானா என்பது கேள்விபோலவும் மாங்கோ என்பது வரவேற்பு போலவும் பொட்டெட்டோ என்பது அலுத்துக்கொள்வதுபோலவும் அவளுக்குத் தோன்றியது. அத்தகைய சிறிய ஆச்சரியங்கள் காரணமாக பெரியம்மா ஒவ்வொரு நாளும் காலையிலேயே நீராடி வெள்ளைச்சேலையும் ஜாக்கெட் போடாத உடலிலும் நெற்றியிலும் விபூதிப்பட்டைகளும் அணிந்து எட்டு மணிக்கு எனக்காகக் காத்திருந்தாள்.
ஆங்கிலக்கல்வி அவளுடைய வாழ்க்கையின் மிகப்பெரிய இன்பமாக இருந்தது. ஏனென்றால், பெரியம்மா பள்ளிக்கே சென்றதில்லை. தமிழில்கூட அவருக்கு எழுதப்படிக்கத் தெரியாது. அந்தக்காலத்தில் உயர்குடிப்பெண்கள் எதையாவது தெரிந்துகொள்வது என்பது வாசலைத் திறந்து வெளியே சென்று முற்றத்தில் நிற்பதுபோல அத்துமீறலாகவும் இழிவாகவும் கருதப்பட்டது. கணவர் இறந்து வெள்ளைப்புடவை கட்டத் தொடங்கியபின்னர்தான் பெரியம்மா புராணக்கதைகளை வாசித்துக்கேட்கத் தொடங்கினாள். ஒவ்வொன்றுக்கும் ஒரு கதை சொல்லுமளவுக்கு அவளுக்கு புராணம் தெரிந்திருந்தது. அத்துடன் புராணக்கதைகளை அவளே உண்டுபண்ணியும் சொல்வாள். ஒருமுறை ஒருகதையை அவள் சொல்லிவிட்டால் மறுமுறை அதை நினைவுகூர்ந்து சொல்லும்போது அது வழிவழியாக வந்த கதை என்றுதான் அவள் நினைப்பாள்.
சொற்களில் இருந்து கருத்துக்களுக்குச் சென்றது நான் திட்டமிட்டது அல்ல. சொற்களைக்க் கற்றுக்கொண்டு அவற்றை பயன்படுத்த பெரியம்மா முயன்றபோது அவை தேவைப்பட்டன. ‘இந்தா நிக்குதே நாயி…டாக். நண்ணியுள்ளது. நண்ணிக்கு என்னலே இங்கிலீஸிலே?” என்று கேட்டாள். நான் ‘obedient’ என்று சொன்னேன். இஸ் சேர்க்க அவளுக்கே தெரியும். ‘டாக் இஸ் ஒபீடியண்ட்’ என்று சொன்னபின் ‘ஒபீடியண்டுன்னா நண்ணியாக்கும், இல்ல மக்கா?’ என்றாள். நான் “இல்லை, ஒபீடியண்ட்னா பணிவானன்னு அர்த்தம்’ என்றேன். ‘ஏல கருமத்தம் புடிச்சவனே. இது எங்கலே பணிவா இருக்கு? இந்தான்னு கூப்பிட்டா அஞ்சு நிமிசம் களிச்சு திரும்பிப்பாக்குது… இதப்போயி பணிவுண்ணு சொல்லுதே?’ என்றாள்
நான் வெட்டுமணியை பார்த்தேன். அவள் சொல்வது உண்மைதான். வெட்டுமணி தன்னை ஒரு வயதான அரசனாக எண்ணிக்கொண்டிருப்பது அதன் ஒவ்வொரு அசைவிலும் தெரியும். ”Faithful” என்றேன். அதை விளக்கியபோது “வெளங்கீரும். இத நம்பி ஒரு துண்டு மீனு எடுத்து வைக்க முடியுமா? வாங்கிவச்ச கருவாட எடுத்து உள்ள வைக்கிறதுக்குள்ள கொண்ட்டுட்டுப்போச்சு. சனியன்” நான் மேலும் சிந்தித்து Domestic என்றுசொல்லலாம் என்றேன். “அது என்னது?” நான் விளக்கினேன். “ஏலே கோட்டியால பிடிச்சிருக்கு? இது சோறுதிங்கத்தானேலே வீட்டுக்கே வருது…” எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. Thankful என்று சொல்லலாமா? நாய்களைப்பற்றி அப்படிச் சொல்வதுண்டா? இல்லை grateful? ஆனால் அதெல்லாம் நாயின் குணமா? அச்சொற்களை நான் என் விண்ணப்பக் கடிதங்களில்தான் கையாண்டுவந்தேன்.
நான்குமுனையிலும் தத்தளித்துவிட்டு நான் ஒரு முடிவை எட்டிப்பிடித்தேன். ஒடிஸி புராணத்தில் யுலிஸஸ் இருபதாண்டுக்காலம் வனவாசம் போனபிறகு நாடுதிரும்பும் கதையைச் சொன்னேன். நோயுற்று மெலிந்து பிச்சைக்காரனைப்போல யுலிஸஸ் திரும்புகிறான். அவனுடைய நெருக்கமான நண்பனும் மனைவியும் கூட அவனை அடையாளம் காணவில்லை. ஆனால் யுலிஸஸின் அருமையான நாய் அர்கோஸ் அவனை உடனே அடையாளம் கண்டுகொண்டு வாலை ஆட்டி வரவேற்றது. அப்படியே அர்கோஸ் இறந்துவிடுகிறது. அதைப்பார்த்து யுலிஸஸ் கண்ணீர்விடுகிறான். அவன் யுலிஸஸ் என்று அனைவரும் அறிகிறார்கள். அவன் தன் மனைவியுடனும் மகனுடனும் சேர்கிறான்.தன்னுடைய நாட்டையும் திரும்ப அடைகிறான்.
பெரியம்மா கண்ணீர் சிந்தி “அதாக்கும்லே விதீங்கிறது. எண்ணையப்போட்டு உருண்டாலும் ஒட்டுற மண்ணுதானே ஒட்டும்?” என்றபின் “மகராசன் தருமரு சொர்க்காரோகணம் போனப்ப ஒரு நாயி கூடப்போச்சுல்லா?” என்றாள். ஐந்து தம்பியருடனும் பாஞ்சாலியுடனும் தருமன் இமையமலை ஏறி விண்ணுலகம் செல்கிறான். ஒருநாயும் அவர்களுடன் சேர்ந்துகொள்கிறது. வழியில் அனைவரும் களைத்து விழுந்துவிட திரும்பிப்பார்க்காத உறுதியுடன் தருமன் செல்கிறான். நாயும் அவனுடன் செல்கிறது. அவனும் நாயும் உச்சிக்குச் செல்கிறார்கள். அங்கே விண்ணகத்தேர் வந்து இறங்குகிறது. தருமனை ஏறிக்கொள்ளும்படிச் சொல்கிறார்கள். தன்னுடன் அத்தனை தூரம் வந்த நாயையும் ஏற்றியாகவேண்டும் என்கிறான் தருமன். நாய்களுக்கு விண்ணுலகம் கிடையாது என்கிறார்கள். அப்படியென்றால் எனக்கும் விண்ணுலகம் வேண்டியதில்லை, நான் என்னை இத்தனைதூரம் தொடர்ந்துவந்த நாயை விட்டுவிட்டு வரமாட்டேன் என்கிறான் தருமன். நாய் தர்மதேவனாக மாறி எழுந்து நிற்கிறது. உன் அறவுணர்வை சோதிக்கத்தான் வந்தேன் என்று சொல்லி தருமனின் தம்பியரையும் பாஞ்சாலியையும் உயிர்கொண்டு எழச்செய்து அவர்களையும் நாயையும் விண்ணகத்தேரில் ஏற்றிக்கொண்டு செல்கிறார் தர்மதேவன்.
பெரியம்மா கண்ணீரைத் துடைத்தபடி “நண்ணியுள்ள மிருகம்லா? அந்தாத்தொலை கூடவே வந்திருக்குல்லா? அதை விட்டுட்டுப்போறது தருமம் இல்லல்ல? அதான் தருமரு அத விடல்ல…அவரு தருமமூர்த்தில்லா?” என்றாள். நான் என் சொல்லுக்குத் திரும்பிவந்தேன். “யுலிஸஸ்க்க நாயி அவன்மேலே காட்டினதாக்கும் நான் சொல்லுதது” என்றேன். “அப்பம் தருமரு நாயி மேலே காட்டினது?” என்றாள். இருவரும் சிந்தனையில் ஆழ்ந்தோம். “அது காட்டின நண்ணிக்கு பதிலுக்கு இவரு காட்டின நண்ணில்லாலே அது?” என்றாள் பெரியம்மா. நான் ஒப்புக்கொண்ட்டேன்.ஆனால் இருசாராரும் மாறிமாறி எப்படி தேங்க்ஃபுல் ஆகவோ ஃபெயித்ஃபுல் ஆகவோ ஒபீடியண்ட் ஆகவோ இருக்கமுடியும்? நான் அதை ஏன் kindness என்று சொல்லக்கூடாது என்று கேட்டேன். அதற்கு என்ன அர்த்தம் என்றாள். நான் அவர்கள் இருவரும் மாறிமாறிக்காட்டிக்கொண்டதுதான் என்றேன். பெரியம்மா ஒத்துக்கொண்டாள். நான் ‘டாக் இஸ் கைண்ட்’ என்றேன். ‘தருமரு இஸ் கைண்ட்’ என்று பெரியம்மா சொன்னாள்.
மறுநாள் பெரியம்மா உற்சாகமாக இருந்தாள். கைண்ட் ஆன கோழியையும் காகத்தையும் வேலைக்காரப்பெண் குஞ்சம்மாவையும் தேங்காய்க்கார அருஞ்சுனை நாடாரையும் பிச்சை எடுக்க வந்த பச்சைத்தலைப்பாகை கட்டிய ஃபக்கீரையும் அவள் எனக்கு சுட்டிக்காட்டினாள். அன்று மேகமூட்டமாக இருந்ததனால் வெயில் இல்லை. குளிர்ந்த காற்றுடன் நீர்த்துளிகள் கலந்திருந்தன. வானத்தை கைண்ட் என்று சொல்லலாமா என்று அவள் என்னிடம் கேட்டாள். சொல்லலாம் ஆனால் ரொம்பவும் சொல்லிவிடக்கூடாது என்றேன். அதற்குரிய சொல்லை ஆராய்ந்து beautiful என்று சொன்னேன். அதன் பொருள் என்ன என்று கேட்டாள். அதன்பின் கோழியையும் காகத்தையும் குஞ்சம்மாவையும் அருஞ்சுனை நாடாரையும் ஃபக்கீரையும் பியூட்டிஃபுல் என்று சொல்லலாமா என்று மெல்லிய தயக்கத்துடன் கேட்டாள். நான் அதைவிடத் தயங்கியபின் “சொல்லலாம்” என்றேன். அந்தச்சொல்லை அடைந்ததும் இருவரும் ஒளியுடன் தெரிந்த கருமேகங்களைப் பார்த்தபடி சற்றுநேரம் பரவசத்துடன் அமர்ந்திருந்தோம். அதன்பின் வானத்தையும் kind என்று சொல்லலாம் என்ற முடிவுக்கு வந்தோம்.
அடுத்த சிலநாட்களில் கதைகள் வழியாகவே நாங்கள் சொற்களை மேலும் எளிதாகப் புரிந்துகொண்டோம். “ஏல,திருச்செந்தூர் முருகன் அருள எப்டிலே சொல்லுதது?” என்று பெரியம்மா கேட்டாள். ஆங்கிலத்தில் முருகன் அருள்புரிவதுண்டா என்று தெரியவில்லை. ஆகவே ஏசு தண்ணீரை திராட்சைரசமாக ஆக்கியதைச் சொன்னே. பெரியம்மா முகவாயில் கைவைத்து வியந்து சொல்லிழந்துவிட்டாள். அதை நான் Compassion என்றேன். அதை விளக்கியபோது “அது மனுஷனும் காட்டுததுல்லா? ஏல நான் அருளைல்லாலே சொன்னேன்” என்றாள். நான் அதை Grace என்றேன். “அது வேற. நான் சொல்லுதது அருளு. அருளுன்னா முருகனுக்க கருணைல்லா?” என்றாள். கருணை கருணை கருணை என்று நான் எனக்குள் சொல்லிக்கொண்டு “mercy’ என்றேன். “அது நம்ம ஏசுவடிமைக்க மகள்லா? நேர்ஸா இருக்காளே?’ நான் அதை விளக்கினதும் “மண்ணாப்போறவனே, அது எரக்கம்லா? நீயெல்லாம் என்ன எளவு சாமி கும்பிடுதியோ? ஏல போலீஸு நம்ம கிட்ட காட்டுதது எரக்கம். முருகன் காட்டுதது கருணை.. அத நாம அருள்னு சொல்லுதோம்” என்றாள்.
நான் மெல்லிய குரலில் “love’ என்றேன். பெரியம்மா என்னை சந்தேகமாக பார்த்தாள். நான் அவள் பார்வையைத் தவிர்த்தேன். “அப்பம் நம்ம செல்லம்மைக்க மக லவ்வு சினிமான்னு சொல்லுதது?” என்றாள். “அதுவேற லவ்வு” என்று நான் சொன்னதும் கிழவி ஆத்திரம் கொண்டு “செத்தசவமே, வாரியலாலே அடிப்பேன்!” என்றாள். நான் அழும்நிலையை அடைந்து “வேற ஒரு கதை இருக்கு” என்றேன். “சொல்லு” கொஞ்சம் இளகினாள். நான் வால்மீகி ராமாயணத்தில் சபரி தன் காட்டுக்கு வந்த ராமனுக்கு பழங்களைப் பறித்து தின்று சுவைபார்த்தபின் எச்சிலைக் கொண்டு போய் கொடுத்ததைச் சொன்னேன். சொன்னபின் அதை ஏன் சொன்னேன் என்று எனக்கே குழப்பமாக இருந்தது. இரண்டு கதையிலும் தீனிபற்றி வருகிறதே என்று சமாதானம் சொல்லிக்கொண்டேன்.
பெரியம்மா என்னை நரைத்த கண்களுடன் உற்றுப்பார்த்தாள். அவள் மூளை சூடேறுவதை என்னால் உணரமுடிந்தது. ‘அவரு ஏழைகளுக்கில்லா திராட்சை ரெசம் குடுத்தாரு?” என்றாள். “ஆமா பெரியம்மா, காட்டுல வந்தப்ப ராமனும் ஏழைதானே? தாகமாட்டுல்லா வந்தாரு?” பெரியம்மா அது உண்மை என்று சம்மதித்தாள். நான் ‘கிருஷ்ணரும் அதைச் செய்தாருல்லா? பாஞ்சாலிக்க வீட்டுக்குச் சாப்பிடப்போனப்ப பாத்திரத்தில ஒட்டியிருந்த கீரைய மட்டும் தின்னு வயறு நெறைஞ்சுட்டு போனாரே” என்றேன். பெரியம்மாவின் முகம் மலர்ந்தது. “ஆமா” என்றாள். மேலும் யோசித்து “சாமிக்கு நாம குடுக்குதத நமக்கு சாமி குடுக்குது… செரிதான்” என்றாள்.
நான் உடனே “Bond” என்றேன். “என்னது அது?” என்றாள் புருவத்தைச் சுருக்கி. “பந்தம்… இப்ப சாமிக்கும் நமக்கும் நடுவிலே இருக்குல்ல்லா? மாறி மாறி அப்டி விட்டிர முடியாதுல்லா?’ என்றேன். கிழவி புன்னகைசெய்து “நீ படிச்சவம்லே மக்கா” என்றாள். ஆக அந்தச்சொல்லை உறுதிசெய்தோம். பக்தி, வழிபாடு,பஜனை, வேண்டுதல்,சுண்டல் எல்லாவற்றுக்கும் அந்த வார்த்தையே போதும் என்று வரையறைசெய்தபோது எனக்கு சற்று ஆசுவாசமாக இருந்தது.
பெரியம்மாவின் கல்வி எப்படிச் செல்கிறது என்று அமெரிக்காவிலிருந்து கோமதி கேட்டாள். ”நன்றாகப் போகிறது கோம்ஸ். நிறைய கற்றுக்கொள்கிறார்கள்”. அவள் ஐயத்துடன் “அப்படியா?” என்றாள். பிறகு “அவர்களுக்குக் கொஞ்சம் மேனர்ஸும் கற்றுக்கொடுக்கவேண்டும்’ என்றாள். “செய்கிறேன்” என்றபின் எனக்கு மேலும் கொஞ்சம் பணம் தேவைப்படுவதை சூசகமாகச் சொன்னேன். அவள் அதை அதிகம் உறுதிப்படுத்தாமல் “பார்க்கிறேன்” என்றாள். பெரியம்மாவின் விசா ஏற்பாடுகள் முடியும் தருவாயில் இருந்தன. அவளுடைய பெயர் செல்லத்தாயி, வெள்ளக்குட்டி, காந்திமதியம்மாள் என வெவ்வேறு ஆவணங்களில் இருந்ததுதான் பிரச்சினை. அதைவிட அவள் கணவர் பெயர் ஏரகம் பண்ணையார், அழகியநம்பியாபிள்ளை, வடுகப்பிள்ளை, சொரிமுத்து, அப்பு என்ற நான்கு பெயர்களுடன் இருந்தது.
நான் முதலில் மேனர்ஸ் என்றால் என்ன என்று விக்கிபீடியாவில் வாசித்துத் தெரிந்துகொண்டேன்.வெள்ளைக்காரர்கள் உண்மையிலேயே அதில் கொஞ்சம் கறாராகத்தான் இருக்கிறார்கள் என்பது தெரிந்தது. பெரியம்மாவிடம் மேனர்ஸ் என்றால் நாகரீகம் என்று விளக்கினேன்.“ஆமா, இந்தவயசிலே நான் இனிமே சில்க்குசாரியும் சீலைக்குடையுமா நடக்குதேன்… போலேய் வெளங்காதவனே” என்று சொல்லிவிட்டாள். மெதுவாக நான் அதைக் குறிப்பிடவில்லை என்று சொன்னேன். எதுவெல்லாம் மேனர்ஸ் என்று சொல்லலாம் என்று தோன்றியது. ‘மொதல்ல சத்தம்போட்டு பேசக்கூடாது” என்றேன்.”அப்ப அங்க ஊமையனுங்களாலே சீமானுங்க?” என்றாள். விருந்தினர் வந்தால் அவர்களை இனிமையாக வரவேற்கவேண்டும் என்றேன். “நல்ல சாதியிலே பிறந்தகுணம்னு சொல்லு….அது நமக்கு உண்டுல்லா?”
நான் மேற்கொண்டு என்ன சொல்வதென்று தெரியாமல் தயங்கினேன். சில ஆங்கில சொற்களைச் சொல்வதுதான் மேனர்ஸ் என்றுதான் எனக்கும் தோன்றியது. Thanks, very kind of you, please அப்படி ஒரு எட்டுச் சொற்களை பெரியம்மாவுக்குக் கற்பித்தேன்.பற்களில்லாததனால் அவளால் excuse me ஐ வெறும் காற்றுப்பீரிடலாகவே ஒலிக்கமுடிந்தது. “இம்புட்டையும் ஞாபகம் வச்சுகிட்டு என்னண்ணு சொல்லுதது? ஒத்தச்சொல்லு சொல்லிக்குடு” என்றாள். நான் கொஞ்சம் யோசித்துவிட்டு sorry என்ற சொல்லைச் சொல்லிக்கொடுத்தேன். அதை எதைச்சொன்னாலும் கூடவே சேர்த்துக்கொண்டால்போதும் எல்லாமே மேனர்ஸ் ஆகிவிடும். அதன் அர்த்தம் என்ன என்று கேட்டாள். துக்கம் என்று சொன்னேன். பெரியம்மா “அப்பம் எப்பமுமே துக்கமாட்டு இருக்கணுமாக்கும்… ஏம்லே?” என்று குழப்பமாக கேட்டாள். “பெரியம்மா இப்ப சீதை எப்பமும் துக்கமாட்டுதானே இருந்தா?” என்றேன்
பெரியம்மா அனைத்தையும் ஒரே கணத்தில் புரிந்துகொண்டாள். “சீதை மகராசில்லா? ராசாவீட்டுப் பொண்ணு … என்ன ஒரு அடக்கமா இருந்த எடம் தெரியாம இருந்தா அவ! எங்க என்ன சொல்லணுமோ அதை மட்டுமில்லா சொன்னா…” என்றாள் “பாவம் அவளுக்கு வாய்ச்ச வாழ்க்க அப்பிடி” .நான் உற்சாகமாக “அதான் நான் சொல்லுதது.சீதையாக்கும் மேனர்ஸ் உள்ளவ …” என்றதுமே எனக்குள் வேறு ஒரு நினைவு ஓடியது. ”ஆனா அங்க உள்ள பொண்ணுங்க சீதை மாதிரி கெடையாது பெரியம்மா” என்றேன். “பின்ன? இப்பம் சொன்னியே”. நான் மையமாக “சீதைமாதிரித்தான். ஆனா சீதைமாதிரி கற்பு அவங்களுக்கு இல்ல“ என்றேன் “பொறவு?” என்றாள். “அவங்களுக்கு இருக்கது வேற ஒண்ணு. கற்புமாதிரித்தான். ஆனா கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்”
“என்னது அது?” என்றாள். பெரியம்மா பலவிதமான குழப்பங்களுக்குள் சென்றுவிட்டாள் என்று தெரிந்தது. அதை எப்படிச் சொல்வது? chastity என்றேன். இன்னும் கொஞ்சம் நகர்ந்து piety என்றேன். அர்த்தம் சரியாக உட்காரவில்லை. ‘அதெல்லாம் அந்த ஊரு கற்பு” என்றேன். பெரியம்மாவின் கண்கள் குழம்பியிருந்தன. ஆகவே கதைக்குள் சென்றேன் “சீதை மாதிரி அங்கயும் ஒரு புராணம் இருக்கு பெரியம்மா” என்றேன். “சொல்லுலே, கதையச்சொல்லாம போட்டு முறுக்கு திங்குதே…”.
நான் டிராய் நகரத்து ஹெலன் கதையைச் சொன்னேன். அவள் ஸீயஸ் கடவுளின் மகள் என்பது பெரியம்மாவுக்குப் பிடித்திருந்தது. “தேவகுமாரில்லா” என்று மோவாயில் கைவைத்தாள் “அவதான் பெரியம்மா அங்க உள்ள கதையிலேயே பெரிய அளகி” என்றேன். பெரியம்மா “இருக்காதா பின்னே? ஏல அவ கெந்தர்வ கன்னியாக்குமே” என்றாள். அவளை ஸ்பார்ட்டாவின் அரசன் மெனிலாஸ் திருமணம் செய்துகொண்டதைச் சொன்னபோது எனக்குக் கொஞ்சம் படபடப்பாகவே இருந்தது. அவள் டிராய் நகரத்து இளவரசன் பாரீஸை பார்த்ததையும் அவனைக் காதலித்து அவனுடன் டிராய்க்கு சென்றுவிட்டதையும் சொன்னேன். பெரியம்மா கதை ஆர்வத்தில் கண்கொட்டாமல் பார்த்திருந்தாள்.
மைசீனிய அரசர்களின் படைகிளம்பி டிராய் நகரை முற்றுகையிட்டதையும் அக்கிலிஸ் அகமெம்னான் இருவரின் தலைமையில் போர் நடந்ததையும் விவரிக்கத் தொடங்கியபோது எனக்கே உற்சாகமாக இருந்தது “அக்கிலீஸு அர்ச்சுனன் மாதிரில்லாடே இருக்கான்!” என்று பெரியம்மா வியந்தார். போரில் ஹெக்டர் கொல்லப்பட்டதை பெரியம்மா கண்ணீருடன் கேட்டுக்கொண்டார். “கர்ணமகாராசன் செத்தது மாதிரி” என்று முனகிக்கொண்டார். கடைசியில் டிரோஜன் குதிரையை வைத்து ஏமாற்றி டிராய்நகரை வென்றதைப்பற்றிச் சொன்னபோது பெரியம்மா அமைதியாக சற்றுநேரம் அமர்ந்தபிறகு “சிகண்டிப்பயல காட்டில்லா பீஷ்மர கொன்னாங்க பாண்டவனுக…யுத்தம்னா அப்டித்தான். கையூக்குள்ளவன் காரியக்காரன். நாக்குள்ளவன் நாடுபிடிப்பான்.” என்றார்.
நான் இப்போது மையமான இடத்தை வந்தடைவதை உணர்ந்தேன். “அவள அவளை கட்டின ராஜா திருப்பி கூட்டிட்டு வந்து மறுபடியும் ராணியாக்கிக்கிட்டான்” பெரியம்மா தலையசைத்தாள். ”பெரியம்மா, இப்பிடியாப்பட்ட பொம்புள அவங்களுக்கு நம்ம சீதை மாதிரியாக்கும்” என்றேன் என்னை பார்த்தபின் “சீதைமாதிரின்னு சொல்லாதே கோட்டிக்காரா, பாஞ்சாலீன்னு சொல்லு. அவளும் பத்தினிதானே?” என்றாள்.
நான் பெருமூச்சு விட்டு சற்று உடல் தளர்ந்து “உங்க கொள்ளுப்பேத்தியும் பாஞ்சாலிமாதிரியாக்கும். ஒண்ணுதான் கொறவு” என்றேன். “என்னது?” என்றாள் பெரியம்மா. “இப்ப அவகூட இருக்கது நாலாவது புருஷனாக்கும். மூணுபேருக்குமா சேத்து நாலுபிள்ளைக” என்றேன். பெரியம்மா “அவ அங்க உள்ள குட்டியில்லா? அந்த ஊரிலே பொம்புளைக மனசுக்குப் பிடிச்சவன கெட்டிகிட்டு மானம் மரியாதயா சந்தோசமா இருக்காளுக” என்றாள். கையை ஊன்றி எழுந்து முதுகை நிமிர்த்தி “செந்தியாண்டவா, வேல்முருகா” என்று முனகியபின் “அது இங்கியும் இருந்திருக்கே. குந்திக்கு ஆறு புருசன்லா?” என்றாள்
உண்மையில் எனக்குக் கொஞ்சம் ஏமற்றமாக இருந்தது. பெரியம்மா மறுபடியும் “அத என்னன்னு சொன்னே?” என்றாள். “கற்பு” என்றேன். “போலே மயிராண்டி” என்றாள். “இல்ல பெரியம்மா பொம்புளைக்கும் ஆம்புளைக்கும் ஒரு ஒரு இது இருக்குல்லா? அது” என்றேன். வேறு சொற்கள் ஏதும் எனக்கு ஞாபகம் வரவில்லை. ”இப்ப ஆம்புளத்தனம்னு சொல்லுதோம்லா அதுமாதிரி பொம்புளைத்தனம்” என்றேன். “அது உண்டுல்லா… அதுக்கு அவன் என்னண்ணு சொல்லுதான்?” நான் தவித்து thinking என்றேன். அதைச் சொன்னதும் “போல மயிராண்டி. திங்குதாக…” என்று அவள் ஒதுக்கிவிட்டாள். கொஞ்சம் யோசித்து brave என்றேன். எனக்கே மடத்தனமானகத் தோன்றியது. சட்டென்று virginity என்று சொல்லப்போனவன் அடக்கிக் கொண்டேன்.
”பெரியம்மா, உங்கள மாதிரி ஏல நானும் ஒரு ஆளாக்கும்னு நினைக்குதது இருக்கே அதாக்கும்” என்றேன். ”மலையாளத்தானுக தன்றேடம்னு சொல்லுதானுகள்லா?” என்றாள் பெரியம்மா. சரியான சொல் என எனக்குத் தோன்றியது. தன் இடம். My place. சரியாக இல்லை. ஏன் இடம்? தான் போதுமே. நான் “self” என்றேன். “அது அலமாரல்லா?” என்றாள். “அதுவேற. அது ஷெ. இது ஸெ” “அது செரி” என்றபின் பெரியம்மா “ஸெல்ஃப்” என்று மெல்லச் சொல்லிக்கொண்டாள். பிறகு என்னைப்பார்த்து “மொள்ளமாச் சொல்லணும் என்ன?”என்றாள், ‘ஆமா”. பெரியம்மா ஓசையின்றி உதட்டைக்குவித்து சொல்லிப்பார்த்தாள் “இந்தப் பொட்டக்குட்டிக படுவர் போடுததுக்கு பஞ்சில பூமாதிரி ஒண்ணு வச்சிருப்பாளுகளே?” நான் “அது பஃப்லா” என்றேன். பெரியம்மா தலையசைத்து “Self” மீண்டும் சொல்லிக்கொண்டாள்
மேலும் ஆறுவாரம் பெரியம்மாவுக்கு நான் கதைகளுடன் ஆங்கிலம் சொல்லிக்கொடுத்தேன். Love என்ற சொல்லில் இழிவான ஏதோ உள்ளடங்கியிருப்பதாகப் பெரியம்மா சந்தேகித்ததை என்னால் மாற்ற முடியவில்லை. ஆகவே அதை dear என்று சொல்லலாம் என முடிவுசெய்தோம். near என்று பெரியம்மா அதை மறுநாள் மாற்றிக்கொண்டிருப்பதைக் கண்டேன். அதைத் திருத்தியமைக்க எனக்கு நேரமில்லை. விசா வந்துவிட்டது. நிலமும் வீடும் விற்கப்பட்டுவிட்டன. மருத்துவ காப்பீடு செய்யவும் மருத்துவ சீட்டுகளும் மருந்துகளும் பெற்றுக்கொள்ளவும் பெரியம்மாவை நான்தான் கூட்டிக்கொண்டு சென்றேன்.
அந்த அவசரத்தில்தான் மேலும் நிறையச் சொற்கள் மிச்சமிருப்பதை தெரிந்துகொண்டு பதற்றம் அடைந்து குறுக்குவழிகளைச் சொல்லிக்கொடுத்தேன். பல உணர்ச்சிகளுக்கு ஒரு சொல் என்ற முறையைக் கையாண்டேன். தேவையில்லை, புரியவில்லை, தெரியவில்லை என்பதையெல்லாம் nice என்றும் மகிழ்ச்சி,நல்லது, சிறந்தது என்பதற்கெல்லாம் calm என்றும் சொல்வது அவளுக்கு எளிதாக இருக்கும் என்றும் தோன்றியது. பிடிக்கவில்லை, ஒப்புதல் இல்லை என்பனவற்றை well என்று சொல்லச்சொன்னேன். ஒருவாரத்தில் அப்படி மேலும் நாற்பது கருத்துக்களை பன்னிரண்டு வார்த்தைகளாக ஆக்கிக்கொண்டோம்
பெரியம்மாவை நான்தான் சென்னை விமானநிலையத்திற்குச் சென்று ஏற்றிவிட்டேன். தனியாகத்தான் சென்றாள். கிளம்பும்போது மனக்கிளர்ச்சியடைந்து மெதுவாக நடுங்கிக்கொண்டிருந்தாள். விமான நிலையத்திற்குள் அவளை பணிப்பெண் சக்கரநாற்காலியில் அழைத்துச்செல்லும்போது என்னை அருகே அழைத்து “you is bond’ என்று சொன்னாள். நான் அவள் கைகளை என் கண்களில் ஒற்றிக்கொண்டு “You is kind’ என்றேன். தன் நெஞ்சில் கைவைத்து “self” என்று சொல்லிவிட்டு புன்னகையுடன் கிளம்பிச்சென்றாள்.
அன்றே நான் கோம்ஸிடம் மின்னஞ்சலில் கறாராகப் பேசி என் பணத்தை வாங்கிக்கொண்டேன். பெரியம்மா பேசுவது புரியவில்லை என்று அவர்களின் மின்னஞ்சல் ஒருவாரம் கழித்து வரும் என்பது எனக்கு உறுதியாக இருந்தது.
ஆங்கில மொழிபெயர்ப்புக்கு விருது
Jeyamohan’s Periyamma’s Words short story – English translation by suchithra
http://www.asymptotejournal.com/special-feature/b-jeyamohan-periyammas-words/