அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ,
நெடு நாட்களாக திட்ட அளவில் மட்டுமே இருந்த திரைப்படத்திற்கான ஆய்விதழ் சாத்தியமாகி இருக்கிறது.இது தொடர்பில் ஒரு ஆய்வரங்கு ஒன்றை சென்னையில் நடத்தியபோது உங்களுடன் பேசியதாக நினைவிருக்கிறது.இதழின் பெயர் “காட்சிப்பிழை” .
நொடிக்கு இருபத்திநான்கு சட்டகம் என கேமரா பதிவு செய்யும் நிலைத்தபடங்களை(stills) அப்படியே பார்க்கும் திறன் ிழித்திரைக்கு இல்லை என்பதே சினிமாவை சாத்தியமாக்குகிறது என்பதன் அடிப்படையிலேதான் அதை காட்சிப்பிழை என்றோம்.மற்றபடி அதில் பிழை காண்பதல்ல நோக்கம்.சினிமா ஒன்றுதான்.அதில் வெகுஜனப்படம்,கலைப்படம் என்ற தனித்த பிரிவுகள் ல்லை.தமிழ் ஆளுமையின் இன்றியமையாத கூரான சினிமாவை, அதன் அத்துணை பரிமாணங்களையும் விசாரணை செய்து தொகுத்துக்கொள்வதே நோக்கம்.
இந்த முயற்சியில் இருமாத இதழாக வெளி வருகிறது “காட்சிப்பிழை”.முதல் இதழ் அகஸ்ட்.செப்டம்பர் 2010 ல்.இத்துறை சார்ந்து ஏற்கனவே பெரும் பங்களிப்பு செய்திருக்கும் வெங்கடேஷ் சக்கரவர்த்தி ,எம்.எஸ்.எஸ்.பாண்டியன்,ஸ்டிபன் ஹுயூஸ் ,சுந்தர் காளி ,ராஜன் குறை ஆகியோருடன் நானும் அதன் ஆசிரியராக இருந்து செயல்படவிருக்கிறேன் .
இதுவரை ஆங்கிலத்தில் மட்டுமே செயல்பட்டு வந்த திரைப்படம் சார்ந்த கலாச்சார ஆய்வுகளை நேரடியாக தமிழில் நிகழ்த்த முயற்சிப்போம்.நீங்கள் மற்றும் ராமகிருஷ்ணன் போன்ற படைப்பாளிகள் திரைவெளியில் சாத்தியமாக்கியிருக்கும் திறப்பை காத்திரமான இடையிடுகளின் வழி முன்னகர்த்த விருப்பம் .
முதல் இதழே இதுவரை திரைப்பட விமர்சனங்கள் தொடாத புள்ளிகளை எட்ட முயன்றிருக்கிறது .தொடரும் முயற்சிகளில் உங்களது பங்களிப்பும் பெரிதும் ஊக்கமளிப்பதாய் இருக்கும்.இதழை அனுப்புகிறேன் .ஆலோசனைகள் உதவும்.நன்றி
தhொடர்புக்கு [email protected]