அன்பு ஜெயமோஹன், வணக்கம். நீண்ட இடைவெளிக்குப் பின் உங்களுக்கு எழுதுகிறேன். நடுவில் தங்களை விமர்சித்து, பாராட்டி இணையத்தில் எழுதிய போது நீங்கள் எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள் என்பது ஒருபக்கம். மறுபக்கம் அதற்குள் அரசியல் உண்டா என்னும் கவனம் உங்களுக்கு இருக்கலாம் என்றே தொடர்பில் இல்லாமல் இருந்தேன். பெரியவர் சா.கந்தசாமி தினமணியில் கருத்துச் சுதந்திரம் பற்றி எழுதிய சமாதானமான கட்டுரையை விமர்சித்தேன். என் விமர்சனங்கள் அரசியல் அற்றவை.
இணையப் பிச்சைக்காரன் என்ற பதிவின் மூலமாகவே தாங்கள் செய்யும் எழுத்தாளர்கள் மற்றும் இலங்கைக் குழந்தைகளுக்கான அறப்பணிகள் பற்றி அறிகிறேன். எந்த வங்கிக் கணக்குக்குப் பணம் அனுப்ப வேண்டும் என்று பதிலில் குறிப்பிடுங்கள். மாதம் குறைந்தது ரூபாய் ஆயிரம் அனுப்புகிறேன். போகன், சாரு இருவரிடமும் உங்களுக்கு இருக்கும் பரிவு பெருந்தன்மை மிக்கது.
அன்பு சத்யானந்தன். (முரளீதரன்)
அன்புள்ள சத்யானந்தன்
அறப்பணிகள் என்ற சொல் கொஞ்சம் பெரியது. அதெல்லாம் நான் செய்வதில்லை. என் நண்பர் முத்துராமன் இலங்கை அகதிக்குழந்தைகளின் படிப்புக்காகச் செய்வது ஆதவ் அறக்கட்டளை சார்பாக வானவன் மாதேவி- வல்லபி செய்வது அறப்பணி
நான் பணவிஷயங்களில் நேர்மையானவன், குடி முதலிய சில பழக்கங்கள் இல்லாதவன் . எப்போதும் பணம் தேவையாகும் இடத்தில் இருக்காதவன் எனும் ஒரு சித்திரம் பரவலாக உள்ளது. ஆகவே நான் ஒரு விஷயத்துக்காக கேட்டால் சிலர் உதவுவார்கள். இதை இலக்கியவாதிகளுக்கு உதவுவதற்காகச் செலவிடுகிறேன். இப்போது நண்பர்கள் சேர்ந்துகொள்கிறார்கள். இதில் எல்லாம் என்னுடைய பணி மிகச்சிறியதுதான். செய்கிறேன் என்பதைவிட செய்யாமலிருக்கமுடியாத நிலைக்கு ஆளாகிறேன் என்பதே சரியானது.
விவரங்களை தனி மின்னஞ்சலில் அனுப்பியிருக்கிறேன்
ஜெ
அன்புள்ள ஜெ.,
அனேகமாக இது தமிழுக்கே உரித்தான சாபக்கேடு என்று நினைக்கிறேன். பத்திரிகையாளர் ஞாநி சாருவை இப்படி நக்கலடிப்பது வழக்கம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
இது தொடர்பாக “அப்படியாவது இந்த தமிழினத்துக்கு எழுதித்தொலைக்காமல் வேறு வேலை பார்க்கலாமே” என்று கூட நினைத்ததுண்டு. ஒரு முறை இளையராஜா பற்றி நீங்கள் எழுதின கட்டுரையில் ‘நான் இசையமைப்பாளனாக ஆகாவிட்டால் செத்தாவது போயிருப்பேன், வேறு எந்த வேலையும் செய்திருக்க மாட்டேன். என்னை போஷிக்கவேண்டியது தமிழ் சமூகத்தின் கடமை’ என்பது போல அவர் சொன்னதாக படித்ததும் ஒரு திறப்பு கிடைத்தது.
ஒரு எழுத்தாளனை – நமக்காக சிந்திப்பவனை – அறிவுலக தளத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றவனை நாம் கையேந்தவைக்கிறோமே என்ற சொரணை கிஞ்சித்தும் இல்லாமல் எப்படி அவனை நக்கலடிக்க மட்டும் நாக்கை தீட்டிக்கொண்டு வருகிறோம் என்று புரியவில்லை.
தனது நோய் இன்னதென்றறியாத தற்குறிகள் என்றுதான் தோன்றுகிறது.
அன்புடன்
பொன்.முத்துக்குமார்
பி.கு : சன் டி.வி-யில் காலை முதல் இரவு 11 மணிவரை ஒரு நாளைக்கு பதினெட்டு சீரியல்கள் ஒளிபரப்புகிறார்களாம்.