அப்பாவின் கண்கள் விரிவதை கண்டு வியப்புடன் திரும்பிப்பார்த்தான். அவர் விசைப்பலகையில் கைத்தவறுதாலாக அழுத்தி திரையின் ஓரத்தில் துடித்துக்கொண்டிருந்த சிறியவண்ணப்படத்தை முழுமையாக விரித்திருந்தார். பெரிய முலைகள் கொண்ட ஒரு பெண் கால்களை ஒரு முக்காலியில் தூக்கி வைத்து நின்றிருந்தாள். அவளுடைய மழிக்கப்பட்ட யோனி செந்நிற அடுக்குகளாக விரிந்திருந்தது. இளநீலநிற நகச்சாயம் பூசப்பட்ட விரல்களால் அவ்விதழ்களின் மேல்நுனியை அகற்றியிருந்தாள். இன்னொரு கையில் கரியநிறமான செயற்கை ஆண்குறி. கீழே ஒரு கணத்துக்கு அப்பால் என்ற வரிகள் மின்னி மின்னி அணைந்தன
அப்பா சுட்டுவிரலால் அந்தப்படத்தைச் சுட்டிக்காட்டினார். அவர் பார்வையை திருப்பும்பொருட்டு உரக்க ”மாத்திரை சாப்பீங்களா?’ என்று கேட்டபடி கோப்பையை வைத்துவிட்டு விசைப்பலகையை அழுத்தினான். ஆனால் கணித்திரை செயலற்று உறைந்திருந்தது. இருமுறை அழுத்தியும் அந்தச்சித்திரம் மறையவில்லை. பனிக்கட்டியில் வரையப்பட்ட ஓவியம்போல, அப்பா மீண்டும் சுட்டிக்காட்டினார். மடிக்கணினி என்றால் மூடிவிடலாம். அவன் கைகள் பதறின. அப்பா புருவச்சுளிப்புடன் அதைச் சுட்டிக்காட்டி அவனை ஏறிட்டுப்பார்த்தார்
அவன் அவர் தோளைத்தொட்டு தூக்கி “படுத்துக்கலாம்…ரொம்ப நேரமாயிடிச்சு” என்றான்.அவர் தலையாட்டியபடி எழுந்து வழக்கமாகச் செல்வதுபோல நேராக கழிப்பறை நோக்கிச் சென்றார். அவரது வெண்ணிற பைஜாமாவும் ஜிப்பாவும் மின்விசிறிக்காற்றில் அலைபாய்ந்தன. கூன்விழுந்த முதுகுடன் கைகளை தொங்கப்போட்டபடி நடந்து கழிப்பறைக் கதவைத் திறந்து உள்ளே சென்றார். அவனுடைய பகுப்பறை வீட்டில் இரண்டு கழிப்பறைகள் உட்பட எந்தக்கதவுக்கும் உள்ளே பூட்டிக்கொள்ளும் தாழ் இல்லை. வெளிக்கதவை மட்டும் சாவியால் பூட்டமுடியும். அவன் வெளியே நின்று அப்பா வருவதற்காகக் காத்திருந்தான்
அறை வெளிச்சத்தின் நிறம் மாறியது.கணிப்பொறி அணைந்ததை உணர்ந்து திரும்பிப்பார்த்தான். அப்பாவின் இளமையான கறுப்புவெள்ளை முகம் அதில் காப்புத்திரையாகத் தெரிந்தது. அவரை அந்தக்காலத்தைய இந்தி நடிகர் சஞ்சீவ்குமாரின் சாயல் கொண்டவர் என்பார்கள். ஷோலே வெளியான வருடம்தான் அவன் பிறந்தான்.
உள்ளே எந்த ஒலியும் கேட்கவில்லை. அவன் “அப்பா” என்றான். அவர் பதில் சொல்லவில்லை. “அப்பா…” என்று கதவைத்தட்டினான். பின்னர் மெல்லத்திறந்தான். அவர் கழிப்பறைக் கோப்பைக்கு முன் தொய்ந்த தோள்களும் கூனல்விழுந்த முதுகுமாக நின்றிருந்தார். எப்போதும் தலையை தொங்கவிட்டதனால் மூன்றே வருடங்களில் நன்றகாவே கூன்விழுந்துவிட்டது
அவன் “அப்பா..”என்றான். அவர் திரும்பி அவனை மெல்லிய தசைகள் களைத்து வளையங்களாக விழுந்த பழுத்த விழிகளால் நோக்கி “எனக்கு தூக்கம் வருது” என்றார். “படுத்துக்கலாம். மாத்திரை சாப்பிட்டீங்கல்ல…பாத்ரூம் போய்ட்டு வாங்க” அவர் “ம்?” என்றார். “பாத்ரூம்…பாத்ரூம் போங்க”. அவர் தலையசைத்து பைஜாமாவின் சுருக்கை உருவினார். அவர் சிறுநீர் கழிப்பது வரை அவன் அருகே நின்றிருந்தான். சுருங்கிய ஆண்குறிக்குமேல் புரோஸ்ட்ரேட் சுரப்பியை அகற்றியதன் நீளமான தழும்பு. அவன் பைஜாமாவை முடிச்சிடும்போது அவர் “எனக்கு தூக்கம் வருது” என்றார்.
அவரை படுக்கையில் கொண்டுசென்று படுக்கவைத்தான். ஏஸியை முன்னரே போட்டுவைத்திருந்தமையால் குளிராக இருந்தது. அப்பா “இப்ப நீ ஆபிஸ் போறியா?” என்றார். “இல்லை…இப்ப ராத்திரி” அவர் கண்களை மூடி “கீழே விழுறமாதிரி இருக்கு” என்றார். “தூங்குங்க” என்றான். சற்று நேரத்தில் அவருடைய குறட்டை கேட்கத்தொடங்கியது.
மெல்ல எழுந்து கதவை மூடிவிட்டு கணிணியை அணுகினான். அதன் விசைப்பலகையைத் தொட்டதும் அந்தப்பெண் ஒளியுடன் எழுந்தாள். குறும்பாக உதட்டைச்சுழித்திருந்தாள். விசைப்பலகையை மாறிமாறித் தட்டினான். குனிந்து பித்தானை அழுத்தி கணினியை அணைத்து மீண்டும் இயக்கினான். திரையில் அதன் அடிப்படை நரம்புகளான எழுத்துக்கள் ஓடி அணைந்து அவன் அன்றாடவாழ்க்கையின் வெவ்வேறு பகுதிகளை ஆளும் ஒவ்வொரு மென்பொருளாக மின்னி மின்னி தன்னை நிறுவிக்கொண்டு மெல்ல திரை நிறைந்து நீலநிறமான வானப்பின்னணியுடன் நின்றது
அவன் மோவாயை வருடியபடி திரையைப் பார்த்துக்கொண்டிருந்தான். அந்தப்பெண்ணின் சிரிப்பு நினைவுக்கு வந்தது. மிக இயல்பான உற்சாகமான ஒன்றைச் செய்யும் பாவனை. பள்ளிக்குழந்தைகளின் துள்ளல் கொண்ட சிரிப்பு. அவளை மீண்டும் பார்க்கவேண்டும் போலிருந்தது. திரையின் ஓரத்தை பார்த்தான். அந்த சிறிய அடையாளம் மீண்டும் வந்து மின்னிக்கொண்டிருந்தது. சட்டைப்பித்தான் அளவுக்குச் சிறிய சதுரம். அதற்குள் அவள்தான் தெரிந்தாள். அதை சொடுக்கியதும் பாய்ந்து எழுந்து விரிந்து சிரித்தாள்.
அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். தலையில் தொப்பியும் கால்களில் கரிய சப்பாத்துக்களும் அணிந்திருந்தாள். ஒரு கணத்துக்கு அப்பால். theplace.com. மாசுமருவற்ற வெண்ணிற உடல். அவள் கலப்பினத்தவளாக இருக்கவேண்டும். வெள்ளைக்காரர்களின் சருமம் இத்தனை துல்லியமாக இருப்பதில்லை. கன்னங்கரிய புருவம். பெரிய விழிகள். குருதியாலான உதடுகள். அவள் மார்பகங்கள் சிலிக்கான் ஜெல்லியால் ஆனவையாக இருக்கவேண்டும். அத்தனை கச்சிதமான இணைமுலைகள் இயற்கையாக அமைவதில்லை. காம்புகள்கூட செயற்கையாக வடிவமைக்கப்பட்டவைதான். சரியான வட்டங்களுடன் சுட்டி நின்றன.அவளால் பிள்ளைபெற்றுக்கொண்டு முலையூட்ட முடியாது. அவை வெறும் அலங்காரப்பொருட்கள். அல்லது…
மின்னஞ்சலைத் திறந்தான். நாலைந்து அலுவலகச் செய்திகள். ஒன்று பயணநிறுவனத்தின் வழக்கமான கூட்டுச்செய்தி.லீலா உரையாடலுக்கு தயாராக இருப்பதாகக் காட்டியது. அவன் அழைப்பு விடுத்தபின் காத்திருந்தான். கீழே அந்தப்பெண் தூக்கு தூக்கு என துடிக்கும் குழந்தைபோல அதிர்ந்துகொண்டிருந்தாள்.
“ஹாய்” என்று லீலா வந்தாள். “எங்கே?” என்றான். “அலுவலகம்” “மைக் எப்படி இருக்கிறான்?” “நார்வே” “ஓ” “தூங்கவில்லையா” “இல்லை. அப்பா இப்போதுதான் படுத்தார்” “இவ்வளவு தாமதமாகவா? பிந்தித் தூங்குவது அவருக்கு நல்லதில்லை” “ஆம், ஆனால் அவரைச் சாப்பிடவைப்பது கடினம்” அவள் “தெரியும்” என்றாள். ”ஒரு சின்ன சங்கடம் இன்று”. “சொல்” “நான் நேற்று பார்த்துக்கொண்டிருந்த பாலியல்தளம் எதையோ என் கணினியில் நிறுவிவிட்டது” ”ஓ…” ’இங்கே எனக்கு அது தேவைப்படுகிறது. மனச்சோர்வு மாத்திரைகளும் அதுவும்இல்லாவிட்டால் தூங்கமுடியாது”. “அதற்கென்ன?”.. “அதை அப்பா அழுத்திவிட்டார். அது திறந்துகொண்டு ஒரு படத்தைக் காட்டியது”
“நல்லது” “என்ன நல்லது? ஒரு பெண் அவள் உறுப்பை விரித்துக் காட்டுகிறாள்…” “அது அவள் தொழில்” “விளையாடாதே. கணினி சிக்கிக்கொண்டது. அப்பா நாலைந்துமுறை பார்த்து சுட்டிக்காட்டினார்”. “நீ இப்போது பள்ளிமாணவன் இல்லை. அவர் பழைய அப்பாவும் இல்லை” “தெரியும்” “கவலைப்படாதே. அவருக்குத் தெரிந்திருக்காது” “இல்லை அவர் கண்கள் விரிவதைப் பார்த்தேன்”. “நீயே கற்பனை செய்துகொள்ளாதே. அவருக்கு நாளை ஒன்றுமே நினைவிருக்காது” “நானும் அப்படித்தான் நம்புகிறேன்”
“தூங்கு, மாத்திரை போட்டுக்கொண்டுவிட்டாயா?” “தூக்கமாத்திரை போடுவதில்லை. அப்பா இரவில் நாலைந்துமுறை அழைப்பார்”. “ஆம்” “மாத்திரை போட்டுக்கொண்டால் தலைசுற்றும்” ”ஓ” “லீலா” “சொல்” “உன்னை நான் தொந்தரவு செய்கிறேனா?” “நாம் நண்பர்கள்” “ஆம்,அதனால்தான்”. “நீ அளவோடு தொந்தரவுசெய்யலாம். சரியா?” “சரி,நன்றி” ”நல்லிரவு”
அவள் மறைந்தபின்னர் மீண்டும் அவன் அந்தப்பெண்ணை பார்த்தான். உண்மையிலேயே உற்சாகமாகத்தான் உணர்கிறாளா? வெறும் நடிப்பில் இத்தனை துள்ளல் வருமா என்ன? கண்களில் எப்படியோ தெரிந்துவிடாதா? பெண்களுக்கு ஆடைகளைக் கழற்றுவது பிடிக்கும், தன் உடலைக் காட்டுவதும் பிடிக்கும் என்கிறார்கள். அது உண்மை என்றால் இதெல்லாம் அந்த மகிழ்ச்சியின் உச்சநிலைகள் அல்லவா? ஆனால் இதில் ஓர் அவமதிப்பு உள்ளது. அவமதிப்பா? அது இங்கு. இங்குள்ள மனநிலை அமெரிக்காவில் இருக்காது. என்றோ ஒருநாள் இது மிகவும் கொண்டாடப்படும் ஒரு செயலாக ஆகிவிடலாம்.
“முட்டாள்தனம்” என்று சொல்லிக்கொண்டான். யாருடனும் மின்னரட்டையில் இல்லை என்று நினைத்ததும் புன்னகைசெய்தான். பெரும்பாலான உரையாடலே அப்படித்தான் நிகழ்கிறது. தொடர்சொற்றொடர்களை உருவாக்குவதையே மறந்துவிட்டிருக்கிறான். கணினியை அணைத்துவிட்டு எழுந்துசென்று தண்ணீர் குடித்தான். அறைக்குள் சென்று அப்பாவைக் குனிந்து பார்த்துவிட்டு படுத்துக்கொண்டான். குளிரூட்டியின் நீலவெளிச்சமும் ரீங்காரமும் கேட்டுக்கொண்டிருந்தது.
காலையில் எழுந்ததும் அந்த நினைவுதான் வந்தது. அப்பா அதை நினைவுகூர்கிறாரா? அவன் காபி போட்டுக்கொண்டிருந்தபோது அவர் எழுந்து கழிப்பறைக்குள் போய் சிறுநீர் கழித்துவிட்டு வெளியே சென்றார். “அப்பா” என்றான். அவர் திரும்பி “கொழாய் தெறந்திருக்கு” என்றார். “நான் இங்க தெறந்து வச்சிருக்கேன்”. அவர் சோபாவில் சென்று அமர்ந்தார். “பேப்பர் வரலை இன்னிக்கு”. அவர் நாளிதழ்களை நெடுநேரம் வாசிப்பதுண்டு. அவன் ஹிண்டுவை எடுத்து அவர்முன் வைத்தான்.. அவர் அதை எடுத்து வாசிக்கத் தொடங்கினார். அவருக்கு நாளிதழ் வெறும் சொற்கள். சொற்களுக்கு இடையே தேவையற்றது தேவையானது எனும் வேறுபாடே இல்லை.
அப்பாவை பல்தேய்க்கச் சொன்னான். அவர் வாயில் பற்தூரிகையுடன் அப்படியே செயலற்று நிற்பது வழக்கம். நாலைந்துமுறை சொல்லி ஊக்குவிக்கவேண்டும். கண்ணாடி முன் என்றால் தன் பிம்பத்தைப்பார்த்தபடி குழம்பியவர் போலவோ பிரமித்தவர் போலவோ நிற்பார்.
அவன் குளித்துக்கொண்டிருக்கும்போது மரியம்மா வந்து அழைப்புமணியை அழுத்தினாள். அவன் திறந்ததும் “ஒரே டிராஃபிக்கு…சங்சனாண்ட” என்றாள். அவன் “அப்பாவுக்கு பிரெக்ஃபாஸ்ட் குடு…நான் கெளம்பணும்” என்றான். அவன் காலையுணவை அலுவலகத்திலேயே சாப்பிடுவது வழக்கம். அவள் சோளத்திவலைகளை பாலில் ஊறவைத்து அவருக்குக் கொடுத்தாள். அப்பா ‘நானே சாப்பிடுவேன்” என்றார். “சிந்திருவார்” என்று அவன் சட்டையை அணிந்துகொண்டே சொன்னான்.
வெளியேவந்து “அப்பா போய்ட்டு வரேன்” என்றான். அப்பா ‘பத்திரமா போ” என்றபின் “எங்க போனான் சுந்து?” என்றார். அவன் அதை கேட்காததுபோல வெளியே சென்று மின்தூக்கியின் பொறியை அழுத்தியபடி சட்டைக்கையின் பித்தான்களைப் போட்டான். மின்தூக்கியின் சிறிய சிறிய சதுரம் அவனை எப்போதும் தனிமையாகவும் சுதந்திரமாகவும் உணரச்செய்யும். கண்ணாடியில் முகத்தைப்பார்த்து தலையை அழுத்திக்கொண்டான். மின்தூக்கி கீழிறங்குவது அவனுக்குப்பிடிக்கும். தரையைத் தொடும் கணத்தில் சிறிய உற்சாகம் எழுவது தவறுவதேயில்லை.
மின்தூக்கி மேலேறியது செந்நிற எண் மின்ன பெண்குரல் “ஏழாவது மாடி” என்றது. மணியோசை. அது அவனை மெல்லிய பதற்றம் கொள்ளச்செய்வது. கதவுகள் விரிந்ததும் வெளியே சென்று பகுப்பறைவீட்டின் அழைப்புமணியை அழுத்தினான். மரியம்மா கதவைத் திறந்தபின் உள்ளே போனபடி “தூங்குறாரு” என்றாள். “சாப்பிட்டாரா?” அவள் பையை எடுத்துக்கொண்டு “ஆமா” என்றாள். “என்ன பண்ணினாரு?’ என்று அவன் சப்பாத்துக்களை கழற்றினான். “பகல் முச்சூடும் அந்த கம்பூட்டர் முன்னாடி சேரிலே ஒக்காந்திருந்தாரு”
அவன் நிமிர்ந்து “அங்கேயா?’ என்றான். “ஆமா, எந்திரிக்கமாட்டேன்னுட்டாரு.” அவன் படபடப்புடன் “என்ன பாத்தாரு?” என்றான். “எங்க பாக்கிறது? அத தெறக்கத்தெரிஞ்சாத்தானே? சும்மா ஒக்காந்திருக்கிறது/’. அவன் சிந்தனையுடன் படுக்கையறையைப் பார்த்துவிட்டு ”சரி” என்றான் ”அடம்புடிச்சாரா?” மரியம்மை “இல்ல, இன்னிக்கு நல்லா இருந்தாரு. அழுவலை…என்னமோ பாட்டுகூட பாடிட்டிருந்தாரு”. “பாட்டா என்ன பாட்டு? தெரியல சார். பழைய தமிழ்பாட்டு. நான் வாறேன். மக வந்திருப்பா இந்நேரம்…” மரியம்மா பையுடன் கிளம்பினாள்.
கதவை மூடிக்கொண்டு அவன் சில கணங்கள் அமர்ந்திருந்தான். எழுந்து சட்டையை கழற்றி முகம் கழுவி அரைக்கால்சட்டையும் கைபனியனும் அணிந்துகொண்டு சமையலறைக்குச் சென்று காபி போட்டான். காபியுடன் திரும்பி வந்தபோது ஏதாவது புத்தகத்தை எடுத்துக்கொள்ளவேண்டும் என்றுதான் எண்ணியிருந்தான். ஆனால் சற்று தயங்கியபின் கணினியைத் திறந்தான். அந்த படத்துளி இருக்கிறதா என்றுதான் முதலில் பார்க்கத் தோன்றியது. இருந்தது. அவன் சற்றுநேரம் அதையே பார்த்துக்கொண்டிருந்தான். அந்த மிகச்சிறிய துளியிலேயே அவளுடைய பெண்குறி தெளிவாகத் தெரிந்தது. சிரிப்பு,விழிகள்…
அவள் விரிந்து திரையை நிறைத்தாள். அவன் அவள் சிரிப்பைப் பார்த்துக்கொண்டிருந்தான். இளமைக்கு என்றே ஒரு மகிழ்ச்சி இருக்கிறது. இளமையாக இருப்பதனால், இளமையை உணர்வதனால் மட்டுமே வரக்கூடிய மகிழ்ச்சி. அவன் வலையில் சென்று செய்திகளையும் சினிமா விமர்சனங்களையும் தொட்டுத்தொட்டுச்சென்றான். ஃபேஸ்புக்குக் சென்று தொடர்ச்சி இல்லாமல் வாசித்துக்கொண்டே சென்றான். அவனுடைய அத்தனை திரைகளுக்குக் கீழேயும் அந்த சின்னஞ்சிறிய திரை துடித்துக்கொண்டிருந்தது. அதை அழிக்க என்ன செய்யவேண்டும் என்று தெரியவில்லை. இணைய உலாவிகளின் வரலாறுகளை அழித்தான். இரண்டுமுறை திரும்பத் தொடங்கிப்பார்த்தான். அது அப்படியேதான் இருந்தது
மெல்ல அதில் சுட்டியை கொண்டு வைப்பதற்குள் துள்ளி விரிந்தது. படகிலிருந்து வலைவீசுவதை வீராணம் ஏரியில் பார்த்திருந்தான். அது விரிவது அப்படித்தான் இருந்தது. அல்லது ஒரே கணத்தில் முளைத்து மரமாகிவிடும் விதை. அந்த ஒப்புமை சரியில்லை. காலடியோசை கேட்டதும் அவன் அதை சுருக்கி அணைத்தான். அப்பா எழுந்து படுக்கையறைக் கதவைத்திறந்து நின்றபடி “பேப்பர் வந்திட்டுதா?” என்றார். “இப்ப ராத்திரி” என்றான். “எனக்கு காபி குடு”. “இனிமே காப்பிகுடிச்சா தூங்க மாட்டீங்க…” என்று எழுந்து சென்று அவரைப்பிடித்து தொலைக்காட்சி முன் அமரச்செய்தான்.
அவர் கால்களைத் தூக்கி மடித்து வைத்துக்கொண்டார். அவர் வழக்கமாக பார்க்கும் பழைய பாடல்களைப் போட்டான். ஐம்பது அறுபதுகளின் பாடல்களுக்கு மட்டும்தான் அவரது கண்களில் ஆர்வம் தெரியும். ’அதிமதுரா அனுராகா ஜீவிதமே சுகபோகம்…’ அவருக்கு சற்று விரைவான தாளம் கொண்ட பாடல்கள்தான் பிடிக்கும். அவன் அவற்றை தனியாக பதிவுசெய்து வைத்திருந்தான் “ஹார்லிக்ஸ் குடுக்கறேன்” அவர் “மழை பெய்றதா?” என்றார்
அவன் ஹார்லிக்ஸுடன் வரும்போது அப்பா கணினி முன் அமர்ந்திருந்தார். “எங்குமே ஆனந்தம் ஆனந்தமே ஜீவனின் மகரந்தம்’ ஓடிக்கொண்டிருந்தது. அவன் பதறிச்சென்று பார்த்து ஒன்றும் செய்யமுடியாமல் நின்றான். அப்பா அந்தப்பெண்ணைத்தான் பார்த்துக்கொண்டிருந்தார். அவனைப்பார்த்ததும் திரும்பி “வெள்ளைக்காரி” என்றார். அவன் ஹார்லிக்ஸை நீட்ட அவர் ஆவலுடன் வாங்கிக் குடித்து கோப்பையைத் திருப்பித் தந்தார். “வெள்ளைக்காரிடா” என்றார்
என்ன செய்வதென அறியாமல் அவன் சோபாவின் கைப்பிடிமேல் அமர்ந்தான். திரும்பி தொலைக்காட்சியை அணைத்தான். அப்பா அந்தப்படத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். அந்தப்பெண்ணின் சிரிப்பை மட்டும் தனியாக வெட்டி எடுத்து கணினியின் முகத்திரையாகக் கூட வைத்துக்கொள்ளலாம். ஆனால் பெரும்பாலும் கண்டுபிடித்துவிடுவார்கள். எல்லாரும் அதைப்பார்த்திருப்பார்கள். அப்பாவின் முகத்தில் திரையின் வெளிச்சம் விழுந்திருந்தது. அவரது கண்களுக்குள் அந்த ஒளி.
அவன் சற்றுத்தள்ளி சோபாவில் அமர்ந்து ஒரு வார இதழைக் கையிலெடுத்துப் புரட்டினான். சற்று நேரம் கடந்து திரும்பிப்பார்த்தான். அப்பா விழிகொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார். அவரது முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை இருந்தது. “அப்பா” அவர் திரும்பி “ராத்திரி ஆயிடுச்சு என்ன?”என்றார். “ஆமா, தூங்கறீங்களா?”. ‘சரி” அப்பா எழுந்து கைகளை வீசியபடி கழிப்பறைக்குச் சென்றார். கழிப்பறைக்குள் அவர் மெல்ல ஏதோ பாடினார். வலியால் முனகுகிறார் என்றுதான் நினைத்தான்.தசைப்பிதுக்கம் மீண்டும் வந்துவிட்டதா என்ற எண்ணம் வந்த கணமே அவர் பாடுகிறார் என்று தெரிந்துவிட்டது
“Wise men say only fools rush in
but I can’t help falling in love with you
அவருக்குப் பிடித்தமான பாட்டுதான். எல்விஸ் பிரெஸ்லியின் Can’t Hep Falling In Love. மென்மையான இதமான பாடல். அவர் அத்தகையபாடல்களை கவனிக்காமலாகி நெடுநாளாகியிருந்தது.
வெளியே வந்தபோது அவர் முகம் மலர்ந்திருந்தது. “நல்ல மழை. சிலுசிலுன்னு காத்து அடிக்கிறப்பவே நெனைச்சேன்… இப்ப ஒரு டிரைவ் போனா நல்லாருக்கும்”. அவன் “இப்ப ராத்திரி” என்றான். “சரி” என்று அவர் பாடியபடியே அறைக்குள் சென்று படுக்கையில் படுத்து போர்வையை போர்த்திக்கொண்டு “ஏஸிய போடு” என்றார்
நீலவெளிச்சத்தில் அவர் புன்னகை செய்துகொண்டிருந்தார். “எல்விஸ் பிரெஸ்லி! அந்தக்காலத்திலே அவன் என்ன பாப்புலர் தெரியுமா? அழகன்னா அப்டி ஒரு அழகன். நம்ம ராஜேஷ்கன்னா அவனோட சாயல் இருந்ததனாலத்தான் ஓகோன்னு வந்தான். அவன்கூட எல்விஸ் மாதிரியே நெறைய பாட்டுகளிலே நடிச்சிருக்கான். ஹம் தும் ஏக் கம்ரே மெ பந்த்ஹே’ அப்பா அதைப்பாடினார். “கேட்டிருக்கேல்ல? ரொமாண்டிக்கான பாட்டு”
”ஆமாம்பா” என்றான். “நெறைய நல்ல பாட்டு…மேரே சப்னொ கி ராணி…அது என்ன பாட்டு.! இந்தியாவே விழுந்து கெடந்துச்சு.”காலை ஆட்டியபடி “எல்லாமே ரொமாண்டிக் பாட்டுதான். தாயளி, அந்தக்காலத்திலே அவன மாதிரி அழகன் வேற இல்லை. இன்னொரு பாட்டு… ரூப்பு தேரா மஸ்தானா. அதெல்லாம் பெரிய கிரேஸ். ஃபக்கிங் பாஸ்டர்ட்… என்னா ஒரு அழகன். அப்டியே எல்விஸ் மாதிரி. நீ எல்விஸோட ஆல்வேய்ஸ் ஆன் மை மைண்ட் கேட்டிருக்கியா?”
‘ஆமாம்பா” அப்பா சிரித்து ஒருக்களித்து “என்னா ஒரு பாட்டு. சாவணும் போல இருக்கும். இல்லேன்னா அந்த வக்காளவோளிய போய் கொன்னுடனும்னு தோணும். ஸீ, அது ஒரு ஸ்பிரிட். ஜான் லென்னான ஒரு டைஹார்ட் ஃபேன் தான் கொல பண்ணினான். ஆயிரத்தி தொளாயிரத்தி எம்பதிலே. அப்ப நான் சர்வீஸிலே இருந்தேன். அப்பல்லாம் டிவி இல்ல. நான் பிபிஸி கேப்பேன். அதில நியூஸ் சொன்னதும் கையெல்லாம் குளுந்து போச்சு. டியூட்டி நேரம். அழமுடியாது. மெதுவா பாத்ரூமுக்குப் போயி அங்க ஒக்காந்து அழுதேன்…”
அப்பா பெருமுச்சு விட்டார் “அவன்பேரு சாப்மேன். புகழுக்காக கொல பண்ணினேன்னு பின்னாடி சொன்னான். சுட்டுட்டு அங்கியே ஒக்காந்து சாலிங்கரோட கேச்சிங் இன் த ரை நாவல வாசிச்சிட்டிருந்திருக்கான். பாஸ்டர்ட்”. அப்பா மல்லாந்து படுத்து “ராஜேஷ் கன்னாவுக்கும் ஒரு சாப்மான் வந்திருக்கலாம். எல்விஸ் பிரெஸ்லிக்கும் கூட அப்டி ஒண்ணு நடந்திருக்கலாம். ராஜேஷ் ஆஜ்கா எம்மெல்லே மாதிரி குப்பை எல்லாம் பண்ணி நாசமா போனான். எல்விஸ் தின்னு தின்னு அழிஞ்சான். எதுக்குச் சொல்றேன்னாக்க இந்தமாதிரி சாக்லேட்பாய்ஸுக்கு அந்தச் சார்ம் கொஞ்சநாள்தான். மூஞ்சி முத்தினதும் லைஃப் முடிஞ்சுது…”
அவரது குரலையே அவன் அப்போதுதான் கேட்கிறான் என்று தோன்றியது, அவர் போர்வைக்குள் காலை ஆட்டிக்கொண்டே இருந்தது இரு பூனைக்குட்டிகள் விளையாடுவதுபோலிருந்தது. “ஜான் டிரவோல்டா கூட எல்விஸோட ஒரு சாயலோடத்தான் வந்தான். இல்லே பெரிய கிருதா வச்சிருந்ததனால நமக்கு அப்டி தோணுதான்னு தெரியலை. அவன் டான்ஸிலே எல்விஸோட சாயல் கண்டிப்பா உண்டு. அதேமாதிரி இவன் ரிஷிகபூர் இருக்கானே அவன்கூட ஒரு மினியேச்சர் ராஜேஷ்தான் என்ன சொல்றே?”
அப்பா சிரித்து “என்னை சஞ்சீவ் குமார்னு சொல்வாங்க. எனக்கு புடிக்கவே புடிக்காது அந்தாளை. சும்மா மூஞ்சிய உர்ர்னு வச்சிட்டு.ஷோலேல கூட எனக்கு தர்மேந்திராவத்தான் புடிச்சிருந்தது. அந்த வாட்டர்டாங்கு மேலே ஏறி நின்னுட்டு…நீ பாத்திருக்கேல்ல? ஓரிகன் தியேட்டரிலே பாத்தமே?அந்த டிரெயின் ஃபைட் அப்பல்லாம் பெரிய கிரேஸ்”
அவனுக்குக் கண்கள் சொக்கின. அப்பா பேசிக்கொண்டே இருப்பதைக் கேட்கமுடிந்தது. அவருக்கு ஒன்றிலிருந்து இன்னொன்றாக நினைவுகள் எழுந்து வந்துகொண்டே இருந்தன. அவன் தூங்கிவிட்டான். அரைத்தூக்கத்தில் அவர் ‘டேய், கேக்கிறியா?’ என்று கூப்பிட்டது கேட்டது. காலையில் விழித்ததும் அவர் பேசிக்கொண்டிருந்ததுதான் முதல் நினைவாக எழுந்தது. .
அருகே அப்பா இல்லை. அவன் எழுந்து கூடத்துக்கு வந்தான். அவர் சோபாவில் அமர்ந்து ஹிண்டு வாசித்துக்கொண்டிருந்தார். டீபாயில் காபி இருந்தது. “குட்மானிங்” என்றார். “காலையிலே முழிப்பு வந்தது. காபி போட்டேன். நீ தூங்கிட்டிருந்தே” அவன் அப்பாவை பார்த்தபடி எதிரில் அமர்ந்தான். ”பேப்பரிலே ஒரே ஸ்காம் நியூஸ். எவனுக்கும் வெக்கமே இல்லாம போச்சு” அவன் தலையசைத்தான்.
மரியம்மா வருவதற்குள் அப்பாவே குளித்து சவரம் செய்துகொண்டார். “என்னோட கிரீம் கலர் பேண்டை எடுடா” என்றார். ”எங்கப்பா போறீங்க?” என்றான். “நான் உங்கூட வரேன். சுந்தரேசனைப் பாக்கணும்” .சுந்தரேசன் பெங்களூரில் இருந்தார். “அப்பா, நீங்க வீட்ல இருங்க. நான் சாயங்காலம் உங்களை கூட்டிட்டுப்போறேன்” அப்பா அவனை நோக்கியபடி “என் கண்ணாடிகூட சரியா தெரியலை. மாத்தணும்” என்றார். “சாயங்காலம் மாத்தலாம்.நான் வந்து உங்களைக் கூட்டிட்டுப் போறேன்” அப்பா தலையசைத்துக்கொண்டு ஏதோ முணுமுணுத்தார்.
அவன் மின்தூக்கிக்குள் தனியாக நின்றபோது அவர் முணுமுணுத்த வரி முழுமையாக நினைவில் எழுந்தது,
Hello, misfortune, how’s my old friend “Mr. Misery”?
I’ve been away so long”
எல்விஸ் பிரெஸ்லிதான். All I Needed Was The Rain . அதுதானா? பார்க்கவேண்டும். மின் தூக்கி தரையைத் தொட்டபோது அவனுக்கு ஒரு சிறிய திடுக்கிடல் ஏற்பட்டது.
மாலையில் அவன் திரும்பிவந்தபோது அலுவலகத்தின் அலைக்கழிப்பில் அனைத்தையும் மறந்துவிட்டிருந்தான். மரியம்மா “நல்லா சாப்பிட்டாரு. இப்பதான் தூங்கி எந்திரிச்சாரு. உடம்பு முன்னைக்கிப்ப நல்லாருக்குன்னு தோணுது. பாட்டு பாடீட்டே இருந்தாரு” என்றாள். “நான் நாளைக்கு கொஞ்சம் லேட்டா வருவேன். மகபுருசன் வாறான்” அவன் சரி என்று தலையசைத்தான். அப்பா கழிப்பறையில் இருந்து வெளியே வந்து அவனிடம் ‘ஹாய்’ என்று சொன்னபடி சென்று கணிப்பொறி முன் அமர்ந்தார்.
அவருக்கு அதை தொடங்கத் தெரியவில்லை. அந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டு கைகளைக் கட்டியபடி “ என்னமோ தெரியல, நான் எல்விஸ் பிரெஸ்லிய திடீர்னு இப்ப நினைச்சுகிட்டேன். பாத்ரூம்லே நிக்கிறப்ப. என்னா ஒரு அழகன்!” என்றார். மரியம்மா “வாறேன் சார்” என்று கிளம்பிச்சென்றாள். அவன் இடையில் கைவைத்து அப்பாவைப் பார்த்துக்கொண்டு நின்றான்.”எல்விஸ் இருக்கானே அவனுக்கு ராஜேஷ் கன்னாவோட சாயல் தெரியுமோ? ராஜேஷ் கன்னா அந்தக்காலத்திலே ஒரு வேவ். என்னா ஸ்டைல்” அப்பா கையை வீசி “யே ஜோ மொஹாபத் ஹே” என்று பாடினார்..
அவன் ஆடைமாற்றிக்கொண்டிருக்கையில் உதிரி சிந்தனைகளாக ஓடிக்கொண்டிருந்தது. “சாப்பிட்டீங்களாப்பா?” என்றான். “சாப்பிட்டேன். ஆனா மறுபடி கொஞ்சம் பசிக்குது… ஒரு டோஸ்ட் பண்ணிக்குடு”. அவன் அவரை நோக்கி மீண்டும் நின்றான். பின்னர் கணினியை எழுப்பினான். அப்பாவின் விழிகள் விரிந்தன. உற்சாகமாக “நேற்று பாத்தமே ஒரு பொண்ணு. வெள்ளைக்காரி” என்றார். அவன் அந்த சின்னத்தை சொடுக்கி அவளை விரியவைத்தான். அப்பா முகம் மலர்ந்து “இவள்தான்… நல்ல பொண்ணு. நேத்துகூட வந்திருந்தாளே.” அவன் “ஆமா” என்றான். “வெள்ளைக்காரியா இருந்தாலும் தமிழ் நல்லா பேசறா” என்றார். அவர் எதைப்பார்க்கிறார் என்று அவன் விழிகளைப் பார்த்தான். அவளுடைய பெண்ணுறுப்பைத்தான் பார்த்துக்கொண்டிருந்தார்.
அவன் டோஸ்ட் செய்துகொண்டு வந்தபோது அப்பா அதைத்தான் பார்த்துக்கொண்டிருந்தார். விரலால் அதைத் தொட்டார். அவளுடைய முலைகளை தொட்டுவிட்டு “இதே இவதான். இவளோட செலை கிருஷ்ணாபுரத்திலே இருக்கு. கிருஷ்ணாபுரம் தெரியும்ல? திருநெல்வேலியிலே இருந்து போகணும்”. “ஆமா” என்றான். “இவளேதான். அழகா இருக்கா. சின்னப்பொண்ணு…டேய் என்னமோ தெரியலை. திடீர்னு இப்ப, இதோ நீ வர்ர சத்தம் கேட்டப்ப எல்விஸ் பிரெஸ்லிய நினைச்சுகிட்டேன். நெஜம்மா. ரொம்பநாளாச்சு அவனை நினைச்சு. என்னமா பாடுவான். என்னா ஒரு குரல். அழகண்டா அவன்”
அவரே டோஸ்டை வாங்கிச் சாப்பிட்டார். “எல்விஸ் நடிச்ச படம் ஒண்ணு அந்தக்காலத்திலே இங்க பிராட்வேயிலே வந்திச்சு. Love me Tender. படத்திலே ஒண்ணுமே இல்ல. பாட்டுக்காகப் பாத்தோம். நானும் மஸூதும் சேந்து போனம். அவனும் என்னை மாதிரியே எல்விஸோட ஃபேன். பைத்தியம்னு சொல்லணும்…” அப்பா பேசிக்கொண்டே சென்றார். எல்விஸில் இருந்து ராஜேஷ் கன்னாவுக்கு அங்கிருந்து ரிஷி கபூருக்கு. “ரிச்சர்ட் பர்ட்டன் கூட கொஞ்சம் எல்விஸ் சாயலிலே இருப்பான். அந்தக்காலத்திலே அவன் எலிசபெத் டெய்லர கல்யாணம் பண்ணிட்டது பெரிய நியூஸ். அவங்க நடிச்ச கிளியோபாட்ரா சிக்ஸ்டித்ரீயிலே வந்திச்சு. அடிச்சுப் பொரண்டு போனா கிராப் படம். ஃபோட்டோ ஃபோட்டாவா படம் நின்னுட்டே இருந்தா என்னத்த பாக்கிறது. கிளியோபாட்ரா வேற நீள மூஞ்சி. ஆனா அதிலயும் பர்ட்டன் ஸ்மார்ட்டா இருந்தான்”
அப்பாவை படுக்கவைத்துவிட்டு அவன் தன் படுக்கையில் படுத்துக்கொண்டான். அவர் போர்வைக்குள் கால்களை ஆட்டியபடி “என்னதான் சொல்லு. சவுத் இண்டியால அந்த மாதிரி ஆக்டர்ஸ் அப்ப கெடையாது. சசிகபூர்கூட பாக்க நல்லாத்தான் இருப்பான். டான்ஸ்னா அது ரிஷி கபூர்தான். ஆனா எல்விஸ் அது ஒரிஜினல். அதுக்குண்டான கிரேஸ் வேற…” அவன் தூங்கும்போதும் அவர் பேசிக்கொண்டேதான் இருந்தார்.
மறுநாளும் அவர் முன்னதாகவே எழுந்துவிட்டார். அவன் எழுந்தபோது காபியுடன் அமர்ந்திருந்தவர் “டேய் நம்ம கலெக்ஷனிலே இந்திப்பாட்டே இல்லியே” என்றார். “ஆமாம்பா. நான் சாயங்காலம் ரெக்கார்ட் பண்ணி கொண்டாரேன்” என்றார். “ஏன்னே தெரியல்லை. காலம்பற சட்னு ராஜேஷ் கன்னாவோட ஹம் தும் கேக்கணும்னு தோணிச்சு”. அவன் காபிபோட்டு கொண்டுவந்து அமர்ந்துகொண்டான். அவர் ராஜேஷ் கன்னாவைப்பற்றி பரவசத்துடன் பேசத்தொடங்கினார். அவன் அவரது உணர்வெழுச்சியைப் பார்த்துக்கொண்டே இருந்தான்.
மாலையில் தொலைபேசியில் டாக்டரிடம் பேசினான். அவன் சொல்லி முடித்ததும் “என்ன சந்தேகம்? ரொம்ப நல்ல சைன், ஆணோட மூளைல இருக்கிற அமிக்டலாவ தூண்டுற சக்திகளில் போர்ன் முக்கியமானது. அந்த நரம்புகளிலேதான் புத்திசாலித்தனம் ஞாபகசக்தி எல்லாமே இருக்கு.. ஆக்சுவலி ஒரு டிரீட்மெண்டாகவே அதைச் செய்றதுண்டு.” அவன் அதைப்பற்றியே சிந்தித்தபடி வந்தான். மின்தூக்கி திறந்தபோது முடிவெடுத்துவிட்டான்.
மரியம்மா அப்பா அன்று உற்சாகமாக இருந்ததாகவும் நன்றாகச் சாப்பிட்டதாகவும் சொன்னாள். “வெளியே கூட்டிட்டுப்போன்னு சொல்லி ஒரே ரவுசு.. நாளைக்கு வேணுமானா பீச்சாண்ட கூட்டிட்டுப்போயேன். ஞாயித்துக்கெழமைதானே?” அவன் தலையசைத்தான். “பாட்டெல்லாம் பாடிட்டிருக்காரு”
அவள் சென்றதும் அப்பா எல்விஸ் பிரெஸ்லி பற்றிப் பேச ஆரம்பித்தார். “அவனுக்கு ஏகப்பட்ட லவ்வர்ஸ். அழகான பொண்ணுங்க வந்து காத்துக்கெடக்குமாம். ஒருகட்டத்திலே அப்டியே தீனிய நோக்கி திரும்பிட்டான். ஒரேயடியா பத்துப்பதினஞ்சு பர்கர் வரை திம்பானாம். என்னாச்சுன்னே தெரியலை.. தின்னுதின்னு பூதம் மாதிரி ஆயி செத்தான்” அவர் ஒரு ஹார்லிஸ் குடித்தார். அவன் வழக்கமான ஓட்ஸும் பாலும் சாப்பிட்டான். கணினி முன் அப்பா அமர்ந்து உரக்க “இந்த கம்ப்யூட்டர்ல என்னமோ பிரச்சினை” என்றார்
அவன் அவரை எழுப்பி அமர்ந்தான். அதன் சிறிய படம் மின்னிக்கொண்டே இருந்தது. ஒரு சிறிய துளை வழியாக மறுபக்கம் தேங்கியிருக்கும் ரத்தம் கசிவதுபோல என்று தோன்றியதும் ஏன் அப்படித் தோன்றுகிறது என்ற வியப்பும் எழுந்தது. .அவன் அதை தொட்டதும் அப்பா எழுந்து உற்சாகமாக அருகே வந்தார். “அந்த பொண்ணுதானே? வராளா?” என்றார். “அவ பேசுறது ஒண்ணுமே புரியல்ல. ஆனா அழகா சிரிக்கறா”. அவன் அவளை விரித்தான். தெறித்து வெளியே வந்துவிடுவாள் என்பதுபோன்ற துடிப்புடன் அவள் நின்றாள்.
அந்த அழைப்பு. ஒரு கணத்துக்கு அப்பால். அவன் அதை அழுத்தினான்..பொன்னிறமான கதவு ஒன்று இனிய இசையுடன் திறந்தது. உள்ளே இருபக்கமும் மலர்கள் நிறைந்த நீண்ட பாதை சென்றது. ஒருவன் திரையில் நிர்வாணமாகத் தோன்றினான். தலையில் ஒலிவ இலையாலான கிரீடம் அணிந்து விரைத்த மிகப்பெரிய ஆண்குறியில் மலர்மாலை சுற்றியிருந்தான். “வருக. மன்னிக்கவும் இந்த இடத்திற்குப் பெயர் ஏதுமில்லை. இடம் என்று வைத்துக்கொள்ளுங்கள். இதுதான் நீங்கள் எப்போதும் உண்மையிலேயே விரும்பிய இடம்’ ஆனால் உள்ளே செல்ல கடன்அட்டை கேட்டது. அவன் பணம் கட்டிவிட்டு இளஞ்செந்நிறமான உயிருள்ள தோலால் ஆன கதவை கிழித்துத் திறந்தான்
அந்தப்பெண் நிர்வாணமாக அவனை நோக்கி வந்தாள். “இவதாண்டா. இங்க இருக்கிறா பாரு” அவளுடைய பெரிய முலைகள் அசைந்தன. இடையை சுழற்றி நடந்து வந்து கால்களை பொருத்திக்கொண்டு நின்று நீங்கள் உள்ளே வரலாம்” என்றார். “உக்காருறீங்களா அப்பா?” “ஆமாடா கால் வலிக்குது” அவர் அமர்ந்துகொண்டு மௌஸை பிடித்தார். “இந்த அம்புக்குறியிலே அடியுங்க”. இருமுறை அது தவறியது. அவள் துள்ளிக்குதித்துச் சிரித்தாள். மீண்டும் தவற கைகளை வீசி முலைகள் தாவ சிரித்துக் கூச்சலிட்டாள் “சிரிக்கிறடா”. அவன் அந்த வாசலைத் திறந்துகொடுத்தான். அவள் “ஆஹா , நீங்கள் வந்துவிட்டீர்கள்!’ என்றாள். அழகிய வெண்ணிறப் பல்வரிசை.
உள்ளே பெரிய அரண்மனை ஒன்றின் கூடம் அது. முழுக்க நிர்வாணமான அழகிய இளம்பெண்கள் வளைந்தும் ஒசிந்தும் தழுவியும் பின்னியும் நிறைந்திருந்தனர். முலைகளும் இடைகளும் புடைத்தெழும்படி பட்டுப்படுக்கைகளில் படுத்திருந்தனர். விதவிதமான முலைகள், இடைகள். வளைவுகளாக எழுந்தவை, உந்திப் புடைத்தவை, கரியமுனை கொண்டவை,செந்நிற முனைகொண்டவை. விழிகளிலும் சிரிப்புகளிலும் அழைப்புகள். சுட்டுவிரல் காட்டி அழைத்து தன் பெண்குறியை காட்டினாள் ஒருத்தி. தன் பின்பக்கத்தை கையால் அறைந்து காட்டினாள் இன்னொருத்தி. அருகே ஒருத்தி. முலைகளை தாலாட்டினாள். செவ்விதழ் குவித்து முத்தமிட்டாள். வாய்க்குள் விரலைவிட்டு சப்பினாள்.
சுட்டிகுறி சற்றே திரும்பியபோது மண்டபமும் திரும்பியது. மண்டபத்தின் மூன்றுபக்கமும் திறந்த கதவுகள் வழியாகவும் ஜன்னல்கள் வழியாகவும் தெரிந்த அறைகளிலும் புல்வெளியிலும் நீச்சல்குளத்திலும் எல்லாம் நிர்வாணப் பெண்கள். சிறிய அதிர்ச்சியுடன் அவன் உணர்ந்தான். அந்த மண்டபத்தின் சுவர்கள் கூட பெண்களால் ஆனவை. சுட்டியை அவற்றில் தொட்டதுமே மங்கலான கோட்டோவியமாக அதிலிருந்த பெண் சிரித்தபடி இறங்கி வந்தாள். திரைச்சீலைகள் தூண்கள் விரிப்புகள் என எதைத்தொட்டாலும் பெண்கள் எழுந்து வந்தனர். பெண்களின் நடை என்பதே உடலுறுப்புகளை அசைப்பதற்காகத்தானா? பெண்ணுடலிலேயே ஒரு சவால் இருக்கிறதா?
கால்களைத் திறந்து தங்கள் பெண்ணுறுப்பை அகற்றிக் காட்டிய ஒருத்திக்கு அருகே நாணத்துடன் பொத்திக்கொண்டு திரும்பி இமைதாழ்த்தி இன்னொருத்தி சிரித்தாள். கால்களை அகற்றி நடந்து வந்த கறுப்பின அழகி பெரிய தொங்கும் உதடுகளால் சிரித்து ‘வா’ என்றாள்.. இடையை மெல்ல தாளத்திற்கு ஏற்ப அசைத்தபடி நாக்கைச் சொடுக்கினாள் அவளருகே நின்ற மஞ்சள் இனத்தவள். அத்தனை பெண்களிருந்ததனால் எவரிலும் விழிநிற்கவில்லை. பின்\வாசலுக்கு அப்பால் புல்வெளி நோக்கி சுட்டுகுறியை அப்பா கொண்டு சென்றார்.பளீரென்று இளவெயில் நோக்கி சென்ற காட்சி அங்கே கூட்டம் கூட்டமாக புணர்ந்துகொண்டிருந்தவர்களைக் காட்டியது. வாய்களில் ஆணுறுப்புகளைக் கவ்வியிருந்த பெண்கள் திரும்பி நோக்கி ஓரவிழியால் சிரித்தனர். முன்னும்பின்னுமென பெண்களை புணர்ந்துகொண்டிருந்த ஆண்கள் திரும்பி நோக்கி ‘ஹாய்’ என்றனர்.
அவன் எழுந்து சென்று சோபாவில் அமர்ந்தான். நாளிதழை காலையில் வாசிக்கவில்லை. சில செய்திகளைப் படித்தான். அப்பாவைத் திரும்பிப்பார்த்தான். அவருடைய முகம் கோயில்சிலைகளில் உள்ள பாவனை கொண்டிருந்தது. பரவசத்துடனும் வியப்புடனும் விரிந்த விழிகள். ஒரு சொல் நின்றிருக்கும் வாய். அவன் எழுந்து சென்று சமையலறையை அடைந்து ஒரு தோசை ஊற்றிக்கொண்டான். அப்பா மீண்டும் ஒரு பால் குடிப்பாரா என எண்ணினான்.
பாலை அவர் அருகே கொண்டுவைத்ததும் அவர் ஆர்வத்துடன் எடுத்துக் குடித்தார். மீண்டும் திரும்பிக்கொண்டு புன்னகை செய்தார். அவரது கீழிமை துடிப்பதைக் கண்டான். அத்தனை பெண்களும் அழகிகள். அத்தனை ஆண்களும் அழகர்கள். அறுவைசிகிழ்ச்சை செய்து அவர்களின் உடலுறுப்புகளை மாற்றியிருக்கலாம். ஆனால் அழகு அப்படி உருவாக்கப்படுவதல்ல. அத்தனைபேரை தேடிப்பிடித்திருக்கிறார்கள். அப்படியென்றால் பல்லாயிரம் பேரை வரவழைத்து தேர்வுசெய்திருப்பார்கள்.
அவன் மீண்டும் செய்தித்தாளை வாசித்தான். பின்னர் அதை கண்களுக்குமேல் போட்டுக்கொண்டு படுத்தான். மெல்லிய ஓசை கேட்டுக்கொண்டிருந்தது. இனிய இசையுடன் இணைந்த புணர்ச்சியொலிகள். ஆணும் பெண்ணும் அந்தரங்கமாகப் பேசிக்கொள்பவை. முனகல்கள், ஒற்றைச் சொற்கள், கொஞ்சல்கள். அவன் விழிகளுக்குள் அவை இன்னும் பெரிய காட்சியாக விரிந்தன. பெரியதோர் கோயில் கோபுரத்தின் சிற்பங்களை கீழே இருந்து பார்த்துக்கொண்டிருந்தான். தேவர்கள் கின்னரர்கள் யட்சர்கள் மும்மூர்த்திகள் நடுவே ஆணும்பெண்ணும் புணரும் விதவிதமான சிலைகள். அனைவரும் உயிருள்ள உடல்கள்.
எழுந்து படுக்கையறைக்குள் சென்று டிவியை போட்டான். பழைய பாடல்களை போட்டு அதைப்பார்த்துக்கொண்டிருந்தான். மிகப்பழைய பாட்டு. கதாநாயகி உடையை பலமுறை சுற்றி இறுக்கமாக செருகியிருந்தாள். நாயகன் அவளைத் தொடாமல் சுற்றிச்சுற்றி வந்து பாடினான். ‘ராகமயி ராவே அனுராகமயி ராவே’ நாகேஸ்வர ராவ், அஞ்சலிதேவி.
அந்தத் தேர்வில் தோல்வியடைந்த பெண்களும் ஆண்களும் என்னவானார்கள். மிகமிகச் செலவேறிய இணையதளம் இது. ஒரு நுழைவுக்கு ஐநூறு டாலர். இங்கு தவறிய அவர்கள் சிறிய இணையதளங்களுக்குச் சென்றிருப்பார்கள். அப்படியென்றால் இதற்குக்கீழே பலபடிகளாக நூற்றுக்கணக்கான தளங்கள் இருக்கலாம். ஏன் ஆயிரக்கணக்கில்மேலே கூட.அப்படி ஏராளமான இணையதளங்கள் இருக்கலாம்.எதிலுமே தேர்வாகாதவர்கள்? அவன் சிரித்துக்கொண்டு அவர்கள் திருமணமாகி பிள்ளைபெற்றிருப்பார்கள் என நினைத்துக்கொண்டான்.
மடிக்கணினியைத் திறந்தான். லீலா இல்லை. அவன் மின்னஞ்சல்களை பார்க்காமல் காத்திருந்தான். பச்சை தெரிந்ததும் அவளை அழைத்தான். “ஹாய்” “என்ன தூங்கவில்லையா?” “இல்லை. மைக் எப்படி இருக்கிறான்?” “நான் ரெஸ்டாரெண்டில் இருக்கிறேன். மைக் இசைக்குழு அருகே போய் நின்றிருக்கிறான்” “ஓ” “அப்புறம்?” “அப்பா அந்த பாலியல்தளத்தை பார்த்தார் என்று சொன்னேனே” “ஆமாம்” ”அதை அவர் பார்க்கலாம் அவருக்கு நல்லது என்று டாக்டர் சொன்னார்” “ஓ” “அவர் அதைத்தான் இப்போது பார்க்கிறார்” “வீண்வேலை” ‘இல்லை, அவர் அற்புதமாக மாறிவருகிறார்”
“அது நிரந்தரமானது இல்லை” “எப்படி இருந்தாலும்…” “பார், இது உன் நரகம். நான் இதில் பங்கெடுக்க விரும்பவில்லை என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறேன்” “ஆமாம்” “பிறகென்ன?” ஒற்றைச் சொல் உரையாடல் மூச்சுத்திணறச்செய்தது. எத்தனை மூச்சுவிட்டாலும் ஆக்ஸிஜன் போதாமலாகும் ஆஸ்துமா போல. அவனுக்கு மழைக்காலத்தில் ஆஸ்துமா வரும்.“ஆனால் நான் உன்னிடம்தான் சொல்லமுடியும். உனக்குத்தான் அவரைத் தெரியும். அவரைத்தெரியாதவர்களிடம் நான் எப்படி இதையெல்லாம் சொல்லமுடியும்?” வேகமாக தட்டச்சு செய்ததனால் எழுத்துக்களெல்லாம் பிழையாக இருந்தன “மேலும் எனக்குத் தனிப்பட்ட முறையில் நண்பர்களும் இல்லை”
அவள் “அவரை எனக்குத் தெரியாது” என்றாள். “மன்னித்துவிடு” “சரி” “நான் அழைத்திருக்கக் கூடாது” ”பரவாயில்லை” “,மறுபடியும் மன்னிப்பு “மைக் வருகிறான்” ”நான் மறுபடியும் கூப்பிடலாம் இல்லையா?” “அடிக்கடி வேண்டியதில்லை” “சரி…கண்டிப்பாக” “நன்றி” ”பார்ப்போம்” “நல்லிரவு”
அவன் எழுந்து அப்பாவை சென்று பார்த்தான். திரைமுழுக்க ஓர் ஆணும் பெண்ணும் உடல்பின்னி மெல்லிய நடுக்கத்துடன் இயங்கிக்கொண்டிருந்தனர். அது நடிப்பு அல்ல. நடிப்பில் அந்த உயிரின் அதிர்வு நிகழாது. “அப்பா” அவர் திரும்பி பார்த்து சிரித்து திரையைச் சுட்டிக்காட்டினார். “தூங்கலாமா? நேரமாச்சு” அவர் உடனே எழுந்து கழிப்பறை நோக்கி பாடியபடியே சென்றார். “Am I Ready” எல்விஸ் பிரெஸ்லிதான். அவன் அவர் உள்ளே பாடுவதை கேட்டுக்கொண்டு நின்றான்.
வெளியே வந்து உற்சாகமாக பாடியபடியே படுக்கையறைக்குச் சென்றார். அவரே படுத்துக்கொண்டு போர்வையை இழுத்தார். கால்களை ஆட்டியபடி “பிரெஸ்லி கூட ஒருத்தி நடிச்சா ஜூடி டெய்லர். அவ ஒருத்திதான் அவன் கூட நின்னா அப்டி சரியா இருக்கும். ராஜேஷ் கன்னாவுக்கு பாத்தேன்னா ஷர்மிளாடாகூர்தான். மத்த யார்கூட அவங்க நின்னாலும் இவங்க ஞாபகம் வருதுல்ல. அதைச் சொன்னேன்…” அவன் அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே தூங்கிவிட்டான்.
அப்பா மறுநாளும் காலையில் எழுந்துவிட்டார். அவரே காபியுடன் வந்து அவனை எழுப்பினார். “சமைக்கலாம்னு கூட தோணுதுடா. மும்பைலே சர்வீஸிலே இருந்தப்ப நான் காலையிலே சமைச்சு எடுத்துட்டுதான் ஆபீஸுக்கே போவேன். உங்க அம்மா இங்க மெட்ராசிலே இருந்தா..” அவர் வெளியே சென்று பேப்பரை எடுத்துவந்து அவனிடம் தந்தார். “இருபத்தஞ்சு வருஷமா காலம்பற வாக்கிங் போய்ட்டிருந்தேன். இப்ப போக முடியலை. மறுபடியும் ஆரம்பிச்சாக்கூட நல்லாத்தான் இருக்கும்னு நினைக்கறேன்”. அவன் “போலாம்….” என்றான்
அன்று அப்பாவை அழைத்துக்கொண்டுசென்று மூக்குக்கண்ணாடியை மாற்றினான். புத்தகக் கடைக்குச் சென்று ‘wintage collection’ ல் எல்விஸ் பிரெஸ்லியின் பாடல்களையும் ராஜேஷ்கன்னா பாடல்களையும் தேடி வாங்கிக்கொண்டு திரும்பியபோது கண்ணாடியை பொருத்திக் கொடுத்துவிட்டார்கள். அப்பா அதைப்போட்டுக்கொண்டு “துடைச்சு விட்டமாதிரி இருக்கு எல்லாம்…தோ அந்த காக்காவைக்கூட பாக்கமுடியுது” என்றார். ஒரு மாலுக்குப்போய் அவருக்கு பர்கரும் காபியும் வாங்கிக்கொடுத்தான். “டிஷ்யூ பேப்பர் கொஞ்சம் கைல எடுத்துக்கறேன். கர்சீப மறந்துட்டேன்” என்று எடுத்துக்கொண்டார். கடற்கரைக்குப்போய் சற்றுநேரம் அலையருகே நின்றான். ”முன்னைக்கிப்ப கடல் கொஞ்சம் நாத்தமா இருக்கு” என்றார் அப்பா “ஆனா அதுகூட நல்லதுதான். கடலோட நாத்தம்ல அது?”
அன்று அவரே கணினியை திறந்துவிட்டார். அவரே பார்க்க ஆரம்பித்தார். அவன் பாத்திரங்களைக் கழுவிக்கொண்டிருந்தபோது ஒலி சற்று மாறுபட்டது. அவன் எட்டிப்பார்த்தான். “அடுத்த கட்டத்திற்குச் செல்ல விரும்புகிறீர்களா?” என்று ஒரு கருப்பின நிர்வாண அழகன் கேட்டான். அவன் ஆண்குறியை இரு பெண்கள் பற்றியிருந்தனர். “வேணாம்பா.” என்றான் “போடு” என்று அவர் சொன்னார். அவன் மேலும் இருநூறு டாலர் பணம்கட்டி அதை திறந்து கொடுத்தான். ஒருகணம் தான் அவன் பார்த்தான். உடல்களை ஊடுபாவாக பின்னி உருவாக்கிய ஒரு பரப்பு. அதில் எங்கு சுட்டியை வைத்தாலும் முழுத்திரையிலும் அந்த உடலுறவு நெளிந்தது. இத்தனை வகைகள் என்றால் இதற்காகவே கற்பனைசெய்திருக்கவேண்டும்
அவன் படுக்கையறைக்குச் சென்று தொலைக்காட்சியை போட்டு பாடல்களைப் பார்த்துக்கொண்டிருந்தான். பழைய கறுப்புவெள்ளைப்பாடல்கள். எல்லாபாடல்களிலுமே சரசங்கள். ஒரு கணத்தில் அவையனைத்துமே ஆடையணிந்த பாலியல் செயல்பாடுகள் என்ற எண்ணம் வந்தது. ஒவ்வொரு நிகழ்ச்சியாக மாற்றி மாற்றிப் பார்த்தான். பெரும்பாலும் எல்லா நிகழ்ச்சிகளிலுமே பாடலுடன் ஆண்பெண் சரசம்தான் நிகழ்ந்துகொண்டிருந்தது. பலபெண்கள் ஒரு ஆண். ஒரு பல ஆண்கள் ஒரு பெண். ஆண்களும் பெண்களும் கூட்டம் கூட்டமாக. காட்சிகளில் இல்லாதவை வரிகளில் இருந்தன. வரிகளில் இல்லாதவை முகபாவனைகளிலும் சிரிப்பிலும் இருந்தன. மனிதர்கள் மகிழ்ச்சி என்று நினைப்பது இதைத்தானா என்று நினைத்துக்கொண்டான். அப்படியென்றால் அதை ஏன் அத்தனைதூரம் அஞ்சி ஒளிக்கிறார்கள். ஆடையணிந்துகொள்கிறார்கள், அறைக்குள் ஒடுங்குகிறார்கள், விளக்கை அணைக்கிறார்கள். அதை எதிர்கொள்ள என்ன தயக்கம்?
அவன் மடிக்கணினியை எடுத்து திறந்து தன் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்த்தான்.அதில் அன்றைய அரசியல் செய்தியின்மேல் அவனுடைய கவலையைத் தெரிவித்து ஒரு பதிவிட்டிருந்தான். பெண்பெயரில் ஒரு போலிப்பக்கம் வைத்திருந்தான். அதை திறந்து அந்தப் பக்கத்தில் அதை எழுதினான். செவ்வாய் கோளிலிருந்து ஓர் உயிரினம் வந்து நம் இணையதளங்களை ஆராய்ந்தால் நம்மைப்பற்றி என்ன நினைக்கும்? இந்த பாலியல்தளங்கள் எல்லாம் இணையத்தின் ஆழ்மனம் இல்லையா? நாம் அனைவருக்கும் பொதுவான ஒரு ரகசியமான இடம். கொஞ்சம் சிந்தித்தபின் எழுதி முடித்தான்.நாமெல்லாம் அங்குதானே வாழ்கிறோம்? வெளியே ஆடையுடன் அதைத்தானே செய்துகொண்டிருக்கிறோம். நமது கலைகள் கேளிக்கைகள் எல்லாம் வேறென்ன?
அதை போட்டுவிட்டு ஒரு படத்தையும் சேர்த்தான். பெண்குறியை விரித்துக்காட்டும் ஓர் அழகி. அந்தப்பக்கத்தையே பார்த்துக்கொண்டு காத்திருந்தான். அந்தப் பெண்பெயருக்கு முன்பு நூறு நண்பர்கள் வரை இருந்தனர். ஆனால் அதை அவன் திறந்து ஒருவருடத்துக்குமேல் ஆகிறது. அவன் எழுந்து அப்பாவை கூப்பிடலாம் என்று திரும்பியபோது அதில் யாரோ கருத்து போட்டிருந்தார்கள். ஏஞ்சலின் ஸாரா என்ற பெண். ‘நீயும் என்னைப்போல் தூக்கம்பிடிக்காத நாற்பது வயதுக்காரன் தானா? அனுதாபங்கள்’ அவன் சிரித்துவிட்டான்
அப்பா அன்று தூங்க நீண்டநேரமாகியது. மறுநாள் அவரே அவனுக்கு காபி போட்டுத்தந்தார். கார்ன்ஃப்ளேக்ஸையும் அவரே பாலில் போட்டு கொண்டுவந்து வைத்தார். அவர் மெல்லிய குரலில் பாடிக்கொண்டே இருப்பதை கவனித்தான். கணினியின் தொடர்புகளை எடுத்துவிட்டுவிட்டு அப்பாவை அதைத் தொட அனுமதிக்கவேண்டாம் என்று சொல்லிக்கொண்டு கிளம்பிச்சென்றான். அலுவலகத்தில் அவன் நினைவெல்லாம் அப்பாவாகவே இருந்தது. ஒரு சந்திப்பின் நடுவே தூக்கம் வந்து அழுத்தியது. சொற்கள் செவிக்குள் சுழன்று ரீங்கரித்தன. எல்விஸ் பிரெஸ்லியின் ஒரு பாடல் You saw me crying in the chapel.
அப்பா முழுமையாகவே மாறிவிட்டிருந்தார்.இரவில் நெடுநேரம் அந்த தளத்தில்தான் இருந்தார். காலையில் விடிவதற்குள் சுறுசுறுப்பாக எழுந்துகொண்டார். மதியம் படுத்து அவன் அந்தியில் வருவதுவரை தூங்கினார். முகமே மாறிவந்தது. கண்களுக்குக் கீழே அந்த தொய்ந்த தசைவளையங்கள் மறைந்தன. பதறியது போலவோ வேறெங்கோ இருப்பது போலவோ தெரியும் பார்வை மறைந்தது. அவனுக்கு நன்கு தெரிந்த, மறந்துவிட்டிருந்த, புன்னகை திரும்பி வந்தது
அடுத்த கட்டத்திற்குச் செல்லவேண்டும் என்று சொல்லி அப்பா அவனை அழைத்துவந்து காட்டினார். மெல்லிய ரத்தநிறமான சருமத்தால் ஆன வாசல் தெரிந்தது. அவன் கடன் அட்டை எண்ணை அனுப்பி பணம் கட்டியதும்தான் அது பெண்குறியின் அண்மைச்சித்திரம் என்று தெரிந்தது. உணர்ச்சியுடன் மிகநுட்பமாக அது துடித்துக்கொண்டிருந்தது. அப்பா அமர்ந்துகொண்டு அதைச் சுட்டிக்காட்டினார்.
அவன் மடிக்கணினியைத் திறந்து அந்த ஃபேஸ்புக் கணக்கில் நுழைந்தான். சாராவின் பக்கத்திற்குச் சென்றான். விதவிதமான பெண்ணூடல்கள். பூக்கள். மீன்கள். புல்வெளிகள். கூடவே கவிதை போன்ற குறிப்புகள். ”நீ மணமுறிவு பெற்றவனா?” என்று ஒரு பதிவின்கீழே எழுதிவிட்டு காத்திருந்தான். “Fuck You” என்று அவனுடைய பதில் வந்தது. அவன் புன்னகையுடன் அதை மூடினான்
அப்பா தூங்கும்போது நள்ளிரவு. அவன் சற்று தூங்கி விழித்துக்கொண்டு அவர் இன்னமும் தூங்கவில்லை என்பதை உணர்ந்து வெளியே சென்று அழைத்துவந்தான். ”இப்பதான் சட்டுன்னு ராஜேஷ் கன்னா நெனைப்பு வந்துது. ஏன்னே தெரியலை. அவன் டிம்பிள் கபாடியாவ கல்யாணம் பண்ணிட்டான். ஏன்னு சொல்லு பாக்கலாம். அவ ரிஷிகபூரோட ஜோடி. அவன் யாரு? குட்டி ராஜேஷ் கன்னா. அவன் வந்ததோட இவன் காலி. அதான் அடிச்சு தூக்கிட்டான். ஆனா என்ன பிரயோசனம்?” அப்பா போர்வைக்குள் காலை ஆட்டியபடி ”குச்சு தோ லோஹ் கரேங்கே’ என்று பாடினார் ‘அவ வர்ரதா சொல்றாடா. வரட்டுமான்னு கேட்டா. எஸ்னு சொல்லிட்டேன்” என்றார்.
அவன் தூக்கக் கலக்கத்துடன் “யார்?” என்றான். ”அவதாண்டா…அந்தப்பொண்ணு. நல்ல பொண்ணு. அழகான கண்ணு அவளுக்கு. மே ஐ கம்னு ஒரு ஆப்ஷன். எஸ்னு சொன்னா ஆர்யூ ஷ்யூர்னு மறுபடியும் கேட்டா. எஸ்னு சொன்னேன். ஸே இட் ஃபைனலின்னு மறுபடியும். எஸ்னு ஒரே குத்தா குத்தினேன். சிரிச்சுட்டு யூ ஆர் ஸோ நைஸ்னு சொன்னா. நல்ல பொண்ணு. அவ கண்ணப்பாத்தேல்ல என்னா கருப்பு?” அவனுக்கு அவர் சொல்வது பாதிதான் கேட்டது. “தூங்குங்க…வெளக்க அணைச்சிடறேன்” அப்பா “குச்சி ரீத் ஜகத் கீ ஐசீ ஹே” என்று காலை ஆட்டியபடி பாடியதை மயங்கிவரும் உள்ளத்தால் கேட்டான்.