விளம்பரம் கடிதங்கள்

இனிய ஜெயம்,

விளம்பரம் கட்டுரை வாசித்தேன். விளம்பரத்தின் முதல் புரட்சி துவங்கியது பதாகைகள் வைப்பதில் என்று வரலாறு சொல்கிறது. அதன் அடுத்த கட்டம் ஒளியால் ஆன பதாகை. அதுவும் மரத்துப் போனவுடன் மின்னி மின்னி, அணைந்து எரிந்து கவரும் ஒளிப் பதாகைகள் வந்தன.

இன்று உலக குப்பைகளில் கணிசமானவை, விளம்பரம் சுற்றிவரும் பிளாஸ்டிக் கவர்களாக இருக்கக் கூடும். எனது சிறு வயதில் திரை அரங்கில், ஒரு விளம்பரம் வரும், ஒரு நாயகன் ஒரு ஜீப் வாகனம் கொண்டு ,காடு பாலைவனம் எல்லாம் தாண்டிக் குதித்து வந்து, ஒரு இளம் பெண்ணைக் கண்டு….ஊக்கம் கொண்டோருக்கு பரம திருப்தி சிசெர்ஸ். சும்மா ஊதித் தள்ளுவார் விசில் பறக்கும்.

இன்றோ நுரையீரல் பஞ்சு போன்றது எனும் குரல் கனவிலும் துரத்துகிறது. வியாபாரம் இன்னும் அந்த விளம்பரத்தால் அதிகரித்திர்க்கும் என்றே நினைக்கிரே ன்.

எப்போதும் என்னை மிரள வைப்பது, கக்கூஸ் கோப்பை கழுவும் திரவ விளம்பரம். இல்லத்தரசி பளிச்சிடும் கோப்பையை க்ரீச் ஒலி எழ கட்டை விரலால் வழித்துக் காட்டுவார். [உக்காந்து சோறு போட்டு சாப்பிடலாம்].

தேங்காய், மஞ்சள், புதினாவின் நற்குணங்கள் அடங்கிய சோப். [அவசரத்துக்கு சட்னியா மாத்தி இட்லிக்கு தொட்டு தின்னலாமான்னு தோணும்]

எப்போதும் வசீகரிப்பது. விளம்பரக் குழந்தைகளின் தமிழ்.

விளம்பரக் குழந்தைகள் மம்மியை மாமி என்றே விளிக்கிறார்கள்.

”மாஆஆமி ரொம்போ ரொம்போ பசிக்கிதோ”

”சூ மினிட்ஸ்டா கண்ணா”

”மாமி சொல்லிருக்காங்க , சாப்பிட்ட பிறகு கைய ஒரு நிமிடம் வரை சோப்போ போட்டு கழுவநூம்னு ”

இதெல்லாம் போக எப்போதும் என்னுடைய பேவரைட் ” ருக்மில வாங்குனா ஆஹா, இல்லன்னா உங்க பணம் சுவாஹா”

சாபம் கூட விளம்பரமாக கேட்கும்போது நல்லாத்தான் இருக்கு.

கடலூர் சீனு

*
அன்புள்ள ஜெமோ

விளம்பரம் கட்டுரை வாசித்தேன்

விளம்பரம் ஒரு மொழியை உருவாக்குவதை நாம் பரீட்சைபேப்பர் திருத்தும்போது காணமுடியும். சொந்தமாக பசங்கள் எழுதுவதெல்லாம் விளம்பர மொழியில்தான்.

கார்பண்டையாக்சைட் நிறம் மணம் குணம் உடையது

பல்லில் உள்ள உப்பு அதை உறுதியாக பராமரிக்கிறது

கறை நல்லது. அது துணிகளுக்கு உறுதியளிக்கிறது

இதெல்லாம் நானே வாசித்தது

சிவராமன்

*

ஜெ,

ஒருநாள் நானும் என் பெரியம்மாவும் சேலத்தில் இரண்டாவது அக்ரஹாரத்தில் வாசல் திண்ணையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தோம்.பெரியம்மா படிக்காதவர்கள்.2,3 வகுப்பு படித்துஇருக்க‌லாம்.ஆனால் நல்ல கூர்மையான அறிவு.எங்க‌ள் இல்லத்தைக் கடந்துபல கூவி விற்போர் சென்று கொண்டிருந்தனர்.முதலில் ஒரு ஆண் வாழைக் காயும்,பின்னால் ஒரு பெண் வாழை இலையும், அதன் பின்னர் ஒரு ஆண் பாகற்காயும்,
அவருக்குப்பின்னே ஒரு பெண் பாக்கு மட்டையும் கூவிக்கூவிவிற்றுச்சென்றனர்.

முதல் ஆள் ஓங்கிய குரலில் “வாழக்காஆஆஆ வாழக்கா…” என்று கூவினார்பெரியம்மா சொல்கிறார்கள்,”அவன் எந்த அக்காவை வாழச் சொல்கிறான்?”

பின்னால் வந்த பெண் “வாழலை..ய்..ய்.. வாழலெய்ய்ய்” என்று கீழ்ஸ்தாயியில்அழும் குரலில் சொல்கிறாள். பெரியம்மா சொல்கிறார்கள்,”ஓஹோ!இவள் தானோஅவனுடைய வாழாத அக்கா?”

அதன் பின்னர் ஒருவன் “பாருக்காஆஆஆ பாருக்காஆவ்…” என்று பாகற்காயைக்கூவி விற்கிறான்.பெரியம்மா மீண்டும், “எந்த அக்காவை இவன் பார்க்கச்சொல்கிறான்?” என்று கேட்கிறார்கள்.

பின்னாலயே ஒரு பெண் “பாக்க‌மாட்டெய்ங் பாக்கும‌ட்டைய்ய்ய்..”என்றுகூவுகிறாள்.பெரியம்மாவின் மூளை வேலை செய்கிறது. “ஓஹோ!இவள்தானோ அவன் பார்க்கச் சொன்ன அக்கா? ஏன் பார்க்க மறுக்கிறாள்?”என்று சிரிக்காமல்கேட்டார்கள்.

ஒரு சாதாரண நிகழ்வில் நகைச்சுவையை, யாரையும் புண்படுத்தாத வகையில்,இலக்கிய நயம் சொட்டச் சொட்டக் கூறிய பெரியம்மாவின் ஆற்றல் இன்றுநினைத்தாலும் வியக்க வைக்கிறது

கே.எம்.ஆர்.கிருஷ்ணன்

முந்தைய கட்டுரை‘ஜெகே’- கடிதங்கள்
அடுத்த கட்டுரைபின்நவீனத்துவம் – விளையாட்டுக்கையேடு