விளம்பரம் – பாலா

விளம்பரம்..

விளம்பரம் கட்டுரை படித்து இறும்பூது, புளகாங்கிதம், புல்லரிப்பு இவற்றை வரிசையாக எய்தினேன்.. உடனே பதில் போட முடியாமல் வேலைப் பளு..

கழகத்தின் மூத்த கண்மணியாக, வியாபாரக் கடமையாற்றி வரும் நான் இதற்கு ஏதாவது ஒரு வினையாற்ற வேண்டும் என்று என்னுள் எழுந்த உள்ளொளி (நைட் சாப்பிட்ட சிக்கன் ஒத்துக்கல) காரணமாக இரவு 3 மணிக்கு எழுந்து எழுதுகிறேன். விளம்பரங்கள் மாதிரியே இந்தக் கட்டுரையும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் ஒரு கொலாஜ் மாதிரி இருக்கும்.. (டொமேட்டோ.. ஒழுங்க எழுத வக்கில்லை என்பதை எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு..)

காட்சி:1

90 களில் பெங்களூருவில், ஒரு சமையல் எண்ணெயின் விற்பனை மேலாளராக இருந்தேன். மாதம் மும்மாரி சேல்ஸ் மழை பொழிகிறதா என்று பார்க்க அரிசிக்கிரே என்னும் சிறு நகரம் சென்றிருந்தேன். அங்கே இருந்த ஒரு மளிகை வியாபாரி பிடித்துக் கொண்டார். “ஏன் சார்.. சும்மா இல்லாம, ஒங்க லேபிளில் என்ன ப்ரிண்ட் பண்ணினீங்க.. இங்க ஒரு கஸ்டமர் அம்மா என்னக் காச்சி எடுத்திட்டாங்க..” தப்பி ஓடிவிடலாம் என நினைத்த கணத்தில், “இதோ.. இந்தப் பக்கத்து வீடுதான்.. கூப்பிடுறா அந்த அம்மாவ..” என்றழைத்து வந்து விட்டார்..

அந்த அம்மா, நம் பூம்பட்டினத்து அம்மையின் அடுத்த வாரிசு போல முறைத்துக் கொண்டே வந்தார்.. எங்க அப்பா, சாட்டையை எடுத்ததும் பம்மும் எங்கள் வீட்டு ஜிம்மியைப் போல, பணிவோடு கேட்டேன் “ என்ன அம்மா பிரச்சினை”

“அந்த பாட்டில எடு” என்று கடைக்காரருக்கு உத்தரவிட்டார்.. பாட்டிலை வாங்கி, என்னிடத்தில் கொடுத்தார்.. ஞானப் பழம் பெறும் பணிவோடு பெற்றுக் கொண்டேன்..

”என்ன எழுதியிருக்கு?” என்று கேட்டார்.. “தெரியலையே அம்மா” என்றேன்.

“இதோ பார்.. இது என்ன? “ என்று கேட்டார்.

கொலஸ்ட்ரால் என்பது விலங்குக் கொழுப்பு. எந்தத் தாவர எண்ணெயிலும் இருப்பதில்லை. இந்த உலக உண்மையை, நாங்கள் எங்கள் எண்ணெயின் சிறப்பியல்பாக விளம்பரப் படுத்தியிருந்தோம். அதாவது, கொலஸ்ட்ரால் ஃப்ரீ என. அதில் ஃப்ரீ என்பதைப் பெரிதாக பலூன் போன்ற பிண்ணனியில் அச்சடித்து இருந்தோம்..

”இது என்னன்னு கேட்டாங்க சார்.. எம்பையன் படிச்சிட்டு என்னமோ ஃப்ரீன்னு போட்டிருக்குன்னு சொன்னான்.. அந்த ஃப்ரீ எங்கன்னு கேட்கறாங்க சார்” அன்று வடிவேலு நகைச்சுவை பெரும் phenomenon ஆக வில்லை. ஆனால், இன்று அவரைப் பார்க்கும் போது புரிந்து கொள்ள முடிகிறது..

இது போன்ற சங்கடங்களைச் சமாளிக்கத் தான், உலகில் எம்.பி.ஏ என்னும் படிப்பைச் சொல்லிக் கொடுக்கிறார்கள்..

”அம்மா.. நீங்கள் பெரும் புத்திசாலி.. அருமையாகக் கேட்டீர்கள் எனத் துவங்கி, கொலஸ்ட்ரால் வந்தால், என்னென்ன பிரச்சினை, எவ்வளவு செலவு என அவரைப் பீதியில் அமிழ்த்திவிட்டு,

“இருந்தாலும், இவ்வளவு புத்திசாலித்தனமாகக் கேள்வி கேட்ட உங்களுக்கு, கம்பேனி சார்பில் (சரோஜா தேவி உபயோகித்த சோப் டப்பா டெக்னிக்தான்..) அரை லிட்டர் கொலஸ்ட்ரால் ஃப்ரீ எண்ணெயைப் பரிசாக அளிக்கிறோம் “ என்று ஒரு அரை லிட்டர் சாம்பிளைக் கொடுத்தேன். பூம்பட்டினத்தம்மை, ஒரே கணத்தில், திருவிளையாடல் கேபிஎஸ் ஆக மாறி, என் கம்பேனியைப் பற்றி ஒன்று இரண்டு என வரிசைப் படுத்தி பாடல் பாடிவிட்டுச் சென்றார்.. இன்னும் என் கம்பேனி எண்ணெயை உபயோகித்துக் கொண்டிருப்பார் என்பது என் உறுதியான நம்பிக்கை.

காட்சி-2:

பேரீட்சை, சிறு அங்காடி நடத்திய ஒருவரை பெரும் வியாபார காந்தமாக்கியது இந்தியத் தொழில் வரலாறு.. இதில் நாமும் பங்கெடுத்துப் புரட்சி செய்தே ஆக வேண்டும் என்று முடிவெடுத்து, இறக்குமதிப் புள்ளி விவரங்களைப் பீராய்ந்தோம். 99 சதம் பேரீட்சை ஈரானில் இருந்து வருகிறது என இந்தியப் பேரரசின் புள்ளி விவர அறிக்கை சொன்னது.. “வண்டிய எட்றா சின்ராசு,. வுட்றா டெஹ்ரானுக்கு..” எனப் போய்ச் சேர்ந்தோம்..

அடுத்த நாள் எம்மைச் சந்தித்த வியாபாரத் தொடர்பு நாங்கள் கொண்டு சென்றிருந்த சாம்பிளைப் பாத்துவிட்டு, “சார்.. இது இந்த நாட்டில் விளையும் பேரீட்சை இல்லை.. இது ஈராக்கில் விளைவது.. “

“இல்லையே.. எங்க இறக்குமதிப் புள்ளி விவரம் ஈரான் அப்படீன்னு தான் சொல்லிச்சு”

”சார்.. ஈராக்கில் இருந்து எதுவுமே இறக்குமதி பண்ன முடியாது.. ஐ.நா சபையின் தடை இருக்கு.. அதனால, ஈராக்கில் இருந்து எல்லா பேரீட்சையும் துபாய் போய் அங்கிருந்து, இரானில் விளைந்தது என்னும் சான்றிதழோடு இந்தியாவுக்குப் போகும்.. தெரியாம இங்க வந்து தேடறீங்களே..” என்றவர், “ஆமா.. இத எதுக்கு இறக்குமதி செய்றீங்க” எனக் கேட்டார்.

நான் அவருக்கு பேரீட்சையின் குணநலன்களை விவரித்து, அதில் இருக்கும் இரும்புச்சத்து மற்றவையும் இந்தியாவில் போற்றப்பட்டு உடல் உறுதிக்காக உண்ணப்படுகிறது என விளக்கிச் சொல்லத் தொடங்கினேன்.. கேட்டுக் கொண்டே இருந்தவர், அடக்க முடியாமல் சிரிக்கத் துவங்கினார்.. அவரின் ஈரானிய ஆரஞ்சுக் கன்னம் ரத்தச் சிவப்பாகியது..

நான் அவர் சிரித்து அடங்கும் வரை காத்திருந்து, “ஏன் சிரிச்சிங்க”ன்னு கேட்டேன். மீண்டும் சிரிக்கத் துவங்கி, சிரிப்பினூடே சொன்னார், “சார்.. இந்த பேரீட்சம் பழத்த இங்க ஒட்டகத்துத்தான் கொடுப்பாங்க”.. மீண்டும் தட் வடிவேலு மொமெண்ட்..

வீழ்ந்தாலும் அதை ஒரு வியாபாரத் தந்திரமாக மாற்றுவதுதான், வியாபாரியின் குணமல்லவா? நாம், நம்ம பிராண்டை. “ஒட்டகம் போல் ஸ்ட்ரெங்த் எனக்கு” என்னும் வாக்கியத்தோடு விளம்பரப்படுத்தினால் என்ன என யோசிக்கத் துவங்கினேன்.

காட்சி-3:

ஒரு பார் சோப் (501 ந்னு நெனக்கிறேன்) விளம்பரத்தில், அதன் குணநலன்களை விளக்க, பாய்ந்து வரும் ஒரு வெள்ளை நிறக் காளையை உபயோகித்து இருந்தார்கள்.. திடீரென ஹரியானாவில், சோப் விற்பனை எகிறியது.. விளம்பரத்தை உருவாக்கியவர், தன் கற்பனைத்திறனின் செயலை எண்ணி வியந்தார்.. அவருக்கு இன்கிரிமெண்ட், பிரமோஷன் சாங்கியங்கள் கோலாகாலமாக நடந்தன..

ஆனால், இந்த அளவு சேல்ஸ் வேறு எங்கும் இல்லை.. ஏன் என்று ஆராய ஒரு குழு சென்றது.. அங்கு சென்றவர்களுக்கு ஒரு இனிய அதிர்ச்சி காத்திருந்தது. அவர்களின் சோப்புகளுக்கு ஒரு புது வகையான வாடிக்கையாளர்கள் உருவாகியிருந்தார்கள்.. அவர்களுக்குக் கொம்பு இருந்தது..

ஆனால், பதிலை எழுதி முடிக்கும் போது தான் புரிகிறது, நீர் நகைச்சுவை என்னும் பெயரில், எங்கள் துறையக் கிண்டல் செய்கிறீர்கள் என்று.. இப்படி உலகு, பிறவிப் பயனை எய்தும் ஒரு துறையை, நகைச்சுவை என்ற பெயரில் இழிவு படுத்துவதை, இதை வைத்து பிழைப்பு நடத்தும் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இதனால், நாங்கள் மனம் புண்பட்டு, சொல்லொணாத் துன்பங்களுக்கு ஆளாகியிருக்கிறோம். கோடிக்கணக்கில் பண நஷ்டமும், மான நஷ்டமும் ஏற்பட்டுள்ளது. நாங்கள் ஏன் உம் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக்கக் கூடாது எனக் கேட்டு வக்கீல் நோட்டிஸ் அனுப்பியிருக்கிறோம். உம்மோடு கிரிமினல் கிருஷ்ணன் என்னும் பேர்வழி உள்ளாராமே.. முடிந்தால் அவரோடு வந்து, எம்மைக் கோர்ட்டில் சந்தியும்..

பாலா

முந்தைய கட்டுரைஃபோர்டு பவுண்டேஷனும் மத்திய அரசும்
அடுத்த கட்டுரைஇணையப் பிச்சைக்காரன்