சுஜாதா அறிமுகம்
ஜெ
மனுஷ்யபுத்திரன் உங்களுக்குப் பதிலளித்திருக்கிறார் பார்த்தீர்களா? அதாவது சமஸ் மற்றும் சங்கர ராமசுப்ரமணியனின் செல்வாக்கை கண்டு அஞ்சி அவர்களைப் பாராட்டுகிறீர்கள். வினாயகமுருகன் மற்றும் போகனின் விமர்சனங்களுக்கு அஞ்சி அவர்களை விமர்சிக்கிறீர்கள். கீழே இறங்கிக்கொண்டே இருக்கிறீர்கள்…
சிவராம்
அன்புள்ள சிவராம்,
நான் காலையில் எழுந்ததும் ஒரு பதினைந்து நிமிடம் இவர்களை எல்லாம் அஞ்சி நடுநடுங்கிவிட்டு அந்த அச்சம் நீக்க வடஎல்லை காக்கும் மனுஷ்யபுத்திரச் சாமியிடம் சூடம் சாம்பிராணி காட்டி வேண்டிக்கொண்டுதான் அன்றைய நாளையே தொடங்குகிறேன்.
மனுஷ்யபுத்திரன் ஜூனியர் வெற்றிகொண்டான் ஆகி நிறையநாள் ஆகிறது. இதற்குமேல் அவரால் பேசமுடியாது
விவாதங்களுக்கு அப்பால் இந்த நூல்களை வாசகர்கள் வாசித்துப்பார்க்கலாம். நான் சொல்வதென்ன என்று புரியும். அதில் உள்ள பிரச்சினை ஒரு ஆயிரம் பேருக்குத்தான் புரியும். அந்த ஆயிரம் பேரிடம் மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறேன்.
சுஜாதா விருதுகளை அவர் பிரமோட் செய்ய விரும்பும் பல்ப் ஆட்களுக்கு அளிக்கும்போது கூடவே சீரிய படைப்பாளிகளுக்கும் அளித்து வேறுபாட்டை அழிக்கும் வணிகக் கீழ்மையை மட்டுமே நான் சுட்டிக்காட்டுகிறேன். சுஜாதா விருதுபெற்ற அனைவரையும் விமர்சிக்கவேண்டும் என்பதல்ல அதற்கான பதில்.
இவ்வருடம் விருதுபெற்றுள்ள பாவண்ணனை நான் நடத்திய சொல்புதிது 2001ல் இதழ் அட்டையில் வெளியிட்டு தனி இதழ் வெளியிட்டு கௌரவித்தது. அது அல்ல பிரச்சினை.
இணையம் வழியாக புதியவாசகர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு இலக்கியத்தை, அதற்கும் பிற எழுத்துக்களுக்குமான நுண்ணியவேறுபாட்டை, அதை சென்றடைவதிலுள்ள நுட்பமான இடர்களை சுட்டிக்காட்டுவதென்பது எப்போதும் இலக்கியவாதிகள் செய்துவந்த பணியின் தொடர்ச்சிதான்
உயிர்மை அந்த வேறுபாட்டை அழிக்கும் பெரிய அமைப்பாக இன்று திரண்டு நிற்கிறது. ஆகவே அதைச் சுட்டிக்காட்டவேண்டியிருக்கிறது. அதற்கான ஒரு தருணம் இது.
இலக்கியம் நோக்கி வர முயலும் சிலரிட்ம் மட்டுமே இதைப்பேசுகிறேன். ஙேயிச ரசிகர்களிடமோ செண்டிமெண்ட் ரசிகர்களிடமோ இணையத்தில் வெட்டிச்சண்டை போடுபவர்களிடமோ எனக்குச் சொல்ல ஏதுமில்லை.
ஜெ