ஜெகெ உரை- கடிதங்கள் 4

Jeyakanthan

அன்பின் ஜெ,

ஜெகெ பற்றிய உரை மிக ஆழமான பதிவு.ஒவ்வொரு முறையும் உங்கள் எழுத்துகள் மூலம் புதிதாக நான் அறிந்து கொண்டே இருக்கிறேன்.அக்கினிப்பிரவேசம் கதையில் சூயிங்கம் மெல்லுவதைப் பற்றி நீங்கள் எழுதிய பிறகே நானும் கவனித்தேன்.

பாரீசுக்குப்போ “சாரங்கன் எப்படி நவ ஐரோப்பிய பிரதிநிதியாக,பாரீசின் பண்பாட்டை புரிந்து கொள்கிறான் எனச் சரியாகப் புரிந்து கொண்டேன்.அந்நாவலை வாசித்த போது எனக்கு அது முழுமை அடையாத படைப்பாகவேத் தோன்றியது.இசை பற்றிய புரிதல்கள் எனக்கு குறைவு என்று எண்ணி விட்டுவிட்டேன்.உங்கள் உரையேத் தெளிவைத் தந்தது.

தனிமனித சுதந்திரம் பற்றி உலகிற்கே பறைசாற்றிய பாரீஸ் என்பதுவரை மிக அருமையாகப் பேசினீர்கள். .சா ரங்கன் தன் தாயை இருண்ட அறையில் கண்டபோது அவனடையும் உணர்வு நம் சமூகத்தின் நிலையத் தெரிய வைக்கிறது.

பாரீசுக்குப் போ என அவனை அனுப்புவது நம் பண்பாட்டின் மேன்மையை உணர்ந்தே என்பது மட்டுமே நான் அறிந்திருந்தது.

ஜெயகாந்தனின் எழுத்துகளை நான் நேசிக்க அவர் நம் சமூகத்தில், தனி ஒருவரின் அந்தரங்கத்தில் குடும்பமும்,சமூகத்தின் அத்தனை அடுக்குகளும் தலையிடும் மீறல்களைத் தவறு என உணர்த்தியதாலே.இன்றளவும் நடுத்தர மக்களின் இம்மனநிலை மாறியதாக எனக்குத் தெரியவில்லை.

ஜெகெ பாரதி,சித்தர் பாடல்கள் பாடுவதை அருமையாகப் பதிவு செய்திருக்கிறீர்கள்.

கம்யூனிசத்தையும்,மரபையும் அவர் எழுத்துகள் இணைத்தது பற்றியும் நன்றாகப் பேசியிருந்தீர்கள்.உங்கள் பேச்சிலேயே சில இடங்களில் உணரச்சிகளை அடக்கிப் பேசியிருக்கிறீர்கள்.

ஜெயகாந்தனினு மறைவில் வந்ந அஞ்சலிகளில் உங்கள் பேச்சு என்றும் நிற்கும் வலிமை கொண்டது.

நன்றி
மோனிகா மாறன்.

===================================================================================

அன்பு ஜெ,

நீங்கள் பேசுவதை கேட்க வேண்டும் என்று விரும்பினேன், மறுநாள் நீங்கள் கோவை வருவதாய் இனயதளத்தில் அறிவிப்பு,
விருப்பம் உண்மை எனின் நிறைவேறும் என மற்றொரு முறை நிருபனமாயிற்று.

ஜெயகாந்தன் நினைவு அஞ்சலி உரை மிக பொருத்தமாக இருந்தது.

நீங்கள் மட்டுமே ஜெயகாந்தனின் எழுத்தை எண்ணத்தை செயலை உங்கள் வார்த்தைகளில் உருவமாய் வார்த்ீர்கள், அவரை எப்படி அணுக வேண்டும் என முன்னுரை ஆற்றினீர்கள்,நான் ஜெயகாந்தனை கண்டதில்லை ஓரிரு கதைகள் மட்டுமே அறிமுகம், உங்கள் உரைக்கு பிறகு படிக்க வேண்டும் என்று முடிவுக்கு வந்தேன்.

நீங்கள் பேசி கேட்கும் பொழுது எதுவும் மிக சுகமாக இருக்கிறது, வீட்டில் பேச பயிற்சி செய்கிறீர்களோ வார்த்தைகள் தேர்ந்து உபயோகம் செய்கிறீர்கள்.

உங்கள் எழுத்தை வாசிக்கும் அனைவரும் உங்களை நேரில் சந்திக்க வேண்டும்,ஒரு முறையாவது உங்களுடன் உரையாட வேண்டும்.

உங்களின் எளிமையும் அன்பும் எவரையும் ஆட்கொள்ளும்,ஈரோடு கிருஷ்ணன், அரங்கசாமி அறிமுகத்திற்கு நன்றி,

உங்களுடன் பெங்களுருவில் இருந்து புணே பயணம் மேற்கொள்ள காத்திருக்கிறேன்.

அன்பு
கிருஷ்ணா.

பின் குறிப்பு: கோவையில் இருந்து திரும்பிய பின் எழுத நினைத்து முடியாமல், இன்று உங்கள் உரையை மறு முறை கேட்டவுடன் எழுதினேன். நன்றி மரபின் மைந்தன் முத்ைய்யா அவர்களுக்கு.
============================================================================

அன்புள்ள ஜெ

நீங்கள் ஆற்றிய உரைகளில் சிறப்பானது இது. வழக்கமான குரல் இல்லை. அவ்வப்போது அடக்கிக் கொள்கிறீர்கள். கொஞ்சம்கூட உணர்ச்சிகளை வெளிக்காட்டக்கூடாது என்பதை முன்னாடியே முடிவுசெய்துவிட்டு வந்திருக்கிறீர்கள் என்றெல்லாம் தெரிகிறது. ஆனால் செறிவான அருமையான பேச்சு

கருத்துக்கள் என்பதைவிட அருமையான படிமங்கள் என்றுதான் சொல்லவேண்டும். ஜெகெயை பல கோணங்களில் நினைக்கத்தூண்டுவது. பருந்தாக முரசாக குதிரைமேல் பாய்ந்து ஏறி போகிறவராக எல்லாம் அவரை நினைத்துக்கொண்டேன்.

அதோடு படைப்புகளின் சப்டெக்ஸ்ட் பத்தி சொல்லிய அந்த படிமமும் அழகானது. நாம் மெலே கலக்கிவைப்பதைத்தான் சப்டெக்ஸ்ட் என்று நம்பி நிறையவே எழுதிக்குவித்து விட்டோம் என்று தோன்றுகிறது

ஜெயராமன்

+================================================================================================

அன்புள்ள ஜெ

உரை அருமை. வேறென்ன சொல்ல. ஒரு கோடாக ஜெகெவின் ஆளுமை, அவர் பேசும் முறை. இன்னொரு கோடாக அவருடைய படைப்புகளின் உள்ளர்த்தம். இன்னொரு கோடாக அவருக்கும் மார்க்ஸியத்துக்கும் இடையே உள்ள உறவு. நாம் அறிந்த சித்தரெல்லாம் செங்கொடி ஏந்தியவர் என்று அவர் சொல்லும்போது அவர் பட்டினத்தாரிலிருந்து மார்க்ஸியம் வரை வந்துவிடுகிறார். தன்னிச்சையான போக்கில் மூன்றையும் சரியாகப் பின்னிப்பின்னி ஓகீராப்ங்சிவ கொண்டுபோகிறீர்கள். ஜெயகாந்தனை கண்ணீருடன் நினைத்துக்கொண்டேன்

செல்வராஜ்

============================================================================================================

அன்புள்ள ஜெ,

ஜெகே அவர்களைப் பற்றிய ஒரு கடிதத்தில் (சுசிலா அம்மாவிற்கான பதிலில்) கீழக்கண்டவாறு குறிப்பிட்டிருந்தீர்கள்.

//இரு முதியவர்களும் நேரில் கண்டதுமே கண்கலங்கி அழத்தொடங்கினர் என்றார் உடன் சென்ற நண்பர்
அதை நாம் வாழும் உலகில் நின்றுகொண்டு புரிந்துகொள்ள முடியாது. அது முதுமையின் உலகம். அங்கே உள்ள உணர்ச்சிகளே வேறு//

இன்று என் தகப்பனார், தன் சகோதர சகோதரிகளை திருமணம் மற்றும் பல நிகழ்ச்சிகளில் சந்திக்கிறார். அனைவருமே எழுபதைத் தாண்டி முதுமைக்குரிய அனைத்து உடல் மன பிரச்சனைகளோடு இருப்பவர்கள்.
சந்தித்ததுமே ஒருவருக்கொருவர் கைகளைப் பிடித்துக்கொண்டு கண்கள் கலங்கி விடும். காரணங்கள் கேட்டால் இராது. அவர்களது மத்திய வயதில் ஒருவருக்கொருவர் கடும் மனஸ்தாபங்களும், கருத்து வேற்றுமைகளும் கொண்டவர்கள். என் அப்பாவும் பெரியப்பாவும் கடுமையான கடிதங்கள் பரஸ்பரம் எழுதிக்கொண்டு வருடக்கணக்கில் பேசாமல், தொடர்பு கொள்ளாமல் இருந்திருக்கிறார்கள். சண்டை ஆரம்பிக்கும் போது பதின்ம வயதில் இருந்த அக்காவை பின் சண்டை முடிந்து சந்திக்கும் போது அத்தானுடன் ஏழு எட்டு வயது மருமகனுடன்தான் பார்த்தேன்.

இன்று அவர்கள் வேறு உலகில், முதுமை உலகில் இருக்கிறார்கள். அன்றைய நிலைப்பாடுகளுக்கு, சண்டைகளுக்கு, மனஸ்தாபங்களுக்கு, அர்த்தம் இழந்த உலகில்…

முதுமை…தூர நின்று நம்மைப் பார்த்துக்கொண்டே இருக்கிறது என்று தோன்றுகிறது. நாம் அதை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கிக்கொண்டிருக்கிறோம். ஒரு கட்டத்தில் அதனுள் நாம் அமிழ்ந்துவிடுவது உறுதி. அதற்குள், அதை நம்மை நைத்துவிடுவதற்குள், நமநமத்துவிடுவதற்குள் செய்யவேண்டியதை செய்ய முடிந்ததை செய்து முடித்துவிட வேண்டும் என்று தோன்றுகிறது…

சிவா கிருஷ்ணமூர்த்தி

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 83
அடுத்த கட்டுரைஇழத்தலின் இனிமை