பகுதி 17 : வண்ணப்பெருவாயில் – 5
பூரிசிரவஸ் உள்ளே நுழைந்தபோது துரியோதனன் அருகே கர்ணன் பீடத்தில் அமர்ந்திருக்க கீழே துச்சாதனன் படுத்திருந்தான். பூரிசிரவஸ் ஒருகணம் திகைத்து நோக்க “ஒன்றுமில்லை, இளையோனால் நெடுநேரம் அமரமுடியவில்லை” என்றான் துரியோதனன். துச்சாதனன் புன்னகைசெய்தான். துரியோதனன் கையசைக்க பூரிசிரவஸ் அமர்ந்ததும் “அவர்கள் நேற்று வந்துவிட்டனர்” என்றான். அவன் சொல்வதென்ன என்று புரிந்து பூரிசிரவஸ் மேலே எதிர்பார்த்து அமர்ந்திருந்தான். “தருமனும் அர்ஜுனனும் சகதேவனும் மதுராவிலிருந்து கிளம்பி மாலையிலேயே வந்தனர். பின்னிரவில் பீமனும் நகுலனும் வந்திருக்கிறார்கள்.”
பூரிசிரவஸ் தலையசைத்தான். “அவர்களுடைய மாளிகைகளிலேயே அவர்களை தங்கவைக்க ஆணையிட்டிருந்தேன். அரசரை சந்திக்க ஒப்புதல் கேட்டிருக்கிறார்கள். விப்ரரிடம் செயதியை தெரிவித்துவிட்டேன். அரசர் நேற்றிரவு நெடுநேரம் துயிலவில்லை, காலையில் பிந்தியே விழிப்பார் என்றார். விழித்தெழுந்து பயிற்சி முடித்து உணவருந்தியபின் தெரிவிப்பதாக சொன்னார். நாங்களும் அந்த தருணத்திற்காகவே காத்திருக்கிறோம்” என்றான் துரியோதனன்.
”அவர்களை முறைப்படி முன்னரே நாம் சந்திக்கவேண்டும். ஆனால் அச்சந்திப்பில் என்ன நிகழுமோ என்ற குழப்பம் எங்கள் இருவருக்குமே இருக்கிறது. ஏதோ ஒரு மாயச்செயலால் நம் படைக்கலங்களை எல்லாம் இளைய யாதவன் அவனுடையதாக்கிக்கொண்டிருக்கிறான். ஏற்கெனவே இந்த ஆட்டம் நம் கையைவிட்டு சென்றுவிட்டது” என்றான் கர்ணன்.
“எனக்குப்புரியவில்லை மூத்தவரே” என்றான் பூரிசிரவஸ். “ஒருமுறை நகரத்தெருக்களில் சுற்றிவாரும், புரியும்” என்றான் கர்ணன். “யாதவ அரசியின் வருகை நமக்கெதிராக திரும்பக்கூடாதென்பதற்காக அவரை முன்னிலைப்படுத்தி அதை ஒரு பெருநிகழ்வாக்கினோம். அதை பயன்படுத்திக்கொண்டு பாண்டவர்களின் நகர்திரும்புதலை ஒட்டுமொத்தமாக ஒரு பெருநிகழ்வாக ஆக்கிவிட்டான் யாதவன். அவையில் அவன் பாண்டவர் வருகையை அறிவித்தது முற்றிலும் எதிர்பாராதது. மிகச்சிறந்த அரசியல் சூழ்ச்சி. இன்று நகரில் அத்தனை பேரும் பாண்டவர்களின் வருகையைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.”
பூரிசிரவஸ் தலையசைத்தான். அது அத்தனை மையமானதா என்று அவனுக்குத் தோன்றியது. அவன் உள்ளத்தை அறிந்ததுபோல “மிகச்சிறிய நிகழ்வுகளுக்கெல்லாம் அரசியலில் பெரும்பொருள் உண்டு இளையோனே. ஏனென்றால் நாம் மக்களின் உள்ளத்தை வைத்து இவ்வாட்டத்தை நிகழ்த்துகிறோம். மக்கள்திரளின் உள்ளமென்பது மலையிறங்கும் நதி என்பர். அதற்கென இலக்கு ஏதுமில்லை. அதன் விசையே அதை முன்னெடுத்துச்செல்லும். ஒரு சிறிய பாறையே அதை திசைமாறச்செய்துவிடும்” என்று கர்ணன் சொன்னான்.
“பாண்டவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்ற இரக்கம் மக்களுக்கு வந்துவிடலாகாதென நாம் எண்ணினோம். அவர்களை போற்றினோம். அதைக்கொண்டே அவர்கள் வல்லமை மிக்கவர்கள் பெருந்தன்மையானவர்கள் என்ற சித்திரத்தை யாதவன் உருவாக்கிவிட்டான். இன்றுநகரமெங்கும் பேசப்படுவது பாண்டவர்கள் தங்கைக்கென கொண்டுவந்த பெருஞ்செல்வத்தைப்பற்றித்தான்.” பூரிசிரவஸ் “அவர்கள் இரவில் அல்லவா வந்தனர்?” என்றான். “ஆம், பகலில் வந்திருந்தால் மக்கள் இத்தனை கிளர்ச்சிகொண்டிருக்கமாட்டார்கள். அஸ்தினபுரி பல அணியூர்வலங்களையும் செல்வநிரைகளையும் கண்டது. அவர்கள் காணாத செல்வம் கண்டதை விட மேலானதாகத்தானே இருக்கமுடியும்?”
”அரசரை அவர்கள் பார்க்கும்போது என்ன நிகழும் என எத்தனை எண்ணியும் எங்களால் முடிவெடுக்கமுடியவில்லை” என்றான் துரியோதனன். “அரசர் கண்ணீர்விடுவார். தழுவிக்கொள்வார். மயக்கமடையலாம். அதெல்லாம் பெரியதல்ல. ஆனால் உணர்ச்சிமிகுதியால் பெரிய வாக்குறுதிகள் எதையேனும் அளித்துவிடுவாரோ என்ற அச்சம் எங்களுக்கிருக்கிறது.” பூரிசிரவஸ் “ஆனால் அனைத்தும் முடிந்துவிட்டபின் அவர் என்ன செய்யமுடியும்?” என்றான்.
”நம் கருவூலம் இன்னமும் பங்கிடப்படவில்லை. அஸ்தினபுரியின் கருவூலம் பாரதவர்ஷத்திலேயே தொன்மையானது. பாரதவர்ஷத்தின் மொத்தக்கருவூலத்திற்கும் நிகரானது என்பார்கள். அது ஓரளவு உண்மை. கருவூலத்தின் செல்வங்களில் பெரும்பகுதி வைரங்கள். அவை விழிகளால் தொடப்பட்டே தலைமுறைகள் ஆகின்றன. அவற்றை முழுமையாக பங்கிடுவது என்பது இயல்வதல்ல. அதைப்பற்றி அரசர் ஏதேனும் சொல்லிவிடுவார் என்றால் நாம் கட்டுப்பட்டவர்களாவோம்” கர்ணன் சொன்னான். பூரிசிரவஸ் தலையசைத்தான்.
“அவர்கள் அரசரை சந்திக்கையில் நாம் அருகே இருக்கமுடியாது. நம்மை சந்திப்பதையே அவர் விழையவில்லை. எங்கள் விழிகளாக நீர் உடனிருக்கவேண்டும். அவ்வகையில் பேச்சு சென்றது என்றால் உமது சொற்களால் அதை மறித்துக்கொண்டுவர முடியும்.” பூரிசிரவஸ் புன்னகைத்து “இளைய யாதவரிடம் மோதுவதற்காக என்னை அனுப்புகிறீர்கள். நீங்கள் அனுப்பவேண்டியது காந்தாரரை அல்லவா?” என்றான். “உம்மை அவர்கள் இளையோன் என எண்ணலாம். ஆகவே உம்மை மறுக்க முனையமாட்டார்கள்” என்றான் துரியோதனன்.
பூரிசிரவஸ் “தெரியவில்லை. யாதவரை கணிக்க எவராலும் இயலாது. ஆனால் நான் எனக்கிடப்பட்ட ஆணையை செம்மையாகச் செய்ய முயல்கிறேன்” என்றான். “நீர் அவர்களுடன் இருந்தாலே போதும். அதுவே அவர்களை கட்டுப்படுத்தும்” என்றான் கர்ணன். “மூத்தவரே, நாம் என்ன செய்ய முடியும்? எதை நீங்கள் எண்ணுகிறீர்கள்?” கர்ணன் “இதுபோல குழம்பிய நிலையில் நான் என்றும் இருந்ததில்லை. உண்மையில் என்ன செய்வதென்றே தெரியவில்லை” என்றான். “உடனடியாக என் கவலை என்பது பேரரசரை பாண்டவர் சந்திக்கும் தருணத்தை கடப்பது மட்டுமே.”
“அது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதானே?” என்றான் பூரிசிரவஸ். “ஆம், ஆனால் திரௌபதி நகர்நுழையும்போது அவர்கள் வருவார்கள் என எண்ணினேன். நாடு இரண்டாகப்பிரிவதன் சோர்வு நிறைந்திருக்கும் சூழலில் அரசமுறை சந்திப்பாக அதை கொண்டுசென்றுவிடலாமென திட்டமிட்டேன்” கர்ணன் சொன்னான். “இப்போது நாமே உணர்ச்சிமிக்க ஒரு சந்திப்புக்கு களம் அமைத்து அவர்களுக்கு அளித்திருக்கிறோம்.” துரியோதனன் சலிப்புடன் கைவீசியபடி எழுந்து சாளரத்தருகே சென்று “சொல்லப்போனால் தந்தை அறியக்கூடாதென எண்ணிய அனைத்தையும் அவர் அறிந்துகொள்ளட்டும் என்றுதான் இப்போது என் உள்ளம் விழைகிறது. இத்தனை ஆண்டுகளாக நெஞ்சில் எரியும் இந்த அனல் அடங்கட்டும்” என்றான்.
“என்ன சொல்கிறீர்கள்?” என்று கர்ணன் சொல்லவர சினத்துடன் இடைமறித்த துரியோதனன் துச்சாதனனை சுட்டிக்காட்டி “இதோ என் இளையோன் இன்னமும் சீரடையாத உடலுடன் கிடக்கிறான். நீயும் நானும் இறப்பைத் தொட்டு மீண்டிருக்கிறோம். இதற்குமேல் என்ன?” என்றான். கையை வீசி “அவர் அறியட்டும். அறிந்தால் நான் விடுபட்டவன் ஆவேன்” என்றான். துச்சாதனன் “தருமர் அறச்செல்வர் என்றே நான் எண்ணுகிறேன். அவர் ஒருபோதும் சொல்லமாட்டார். அவர் சொல்லை இளையோர் மீறமாட்டார்கள்” என்றான். துரியோதனன் திரும்பி துச்சாதனனை விழிகொட்டாமல் நோக்கினான். “உங்களுக்காக நான் எதையும் செய்வேன். ஆனால் அவரே இக்குடியின் மூதாதையருக்கு இனியவர். நம் குலத்தின் அறம் திகழ்வது அவரிலேயே. அதை சொல்லாமலிருக்க முடியாது” என்றான்.
துரியோதனன் “சொல். நானும் அதை மறுக்கப்போவதில்லை. இது போர், போரில் வெற்றி ஒன்றே கருதப்படுகிறது” என்றான். பூரிசிரவஸ் அவர்கள் சொல்வதென்ன என்றறியாமல் கர்ணனை நோக்க அவன் எரிச்சலுடன் “என்ன வீண்பேச்சு இது?” என்றான். துரியோதனன் ”வீண்பேச்சல்ல கர்ணா. இனி இந்த ஆட்டத்தைத் தொடர எனக்கு உள்ளமில்லை. அவர் அறியட்டும். அறிந்தபின் அனைத்தும் ஒரு தெளிவுக்கு வரட்டும்” என்றான். கர்ணன் “அவர் அறிவார்” என்றான். துரியோதனன் திகைப்புடன் நோக்கினான். “அவருக்குத்தெரியும். ஆகவேதான் அந்தக் கொந்தளிப்பு. அவருக்குத் தெரிந்தவை அனைத்தும் விப்ரருக்கும் தெரியும். அவர் அன்று சொன்ன சொற்களில் அனைத்தும் இருந்தன.”
சில கணங்கள் அமைதிக்குப்பின் துச்சாதனன் “ஆம், நான் அதை நோய்ப்படுக்கையில் கிடந்தபோது முழுமையாகவே உணர்ந்தேன். தந்தையின் முகம் என் கனவில் வந்தபோது எஞ்சிய ஐயமும் அகன்றது” என்றான். மீசையை முறுக்கிய துரியோதனன் கை நடுங்கியது. தாழ்த்திவிட்டு சாளரம் நோக்கி திரும்பினான். அவன் உடலில் ஒரு விதிர்ப்பு இருப்பதை உணரமுடிந்தது. துச்சாதனன் “அவர் அவர்களைப்பார்த்ததும் காலில் விழுவார். அதுதான் நிகழும். நினைத்தால் அவர்கள் அவர் தலையில் கால்தூக்கி வைக்கலாம். அதை தருமர் செய்யமாட்டார். நான் அவரை நம்புகிறேன்” என்றான். கர்ணன் “ஆம், ஆனால் கிருஷ்ணன் செய்யக்கூடும்” என்றான். துரியோதனன் திரும்பி கைவீசி உரக்கக் கூவினான் “செய்யட்டும். அவன் விரும்பியதை கொண்டுசெல்லட்டும். இனி நான் எதையும் காக்கப்போவதில்லை.”
பூரிசிரவஸ் மாறிமாறி நோக்கினான். அவனுக்கு அப்போதும் ஏதும் புரியவில்லை. “இளையோனே, நீ அவர்களுடன் செல்லவேண்டியதில்லை. அவர்கள் அவரை சந்திக்கட்டும். வெல்லட்டும். நான் எதையும் செய்யவிரும்பவில்லை” என்று துரியோதனன் கூவினான். “வாயை மூடுங்கள் இளவரசே” என்று கர்ணன் அதற்குமேல் குரலெழுப்பினான். “போதும். மூடத்தனங்களுக்கும் எல்லை உண்டு.” திரும்பி பூரிசிரவஸ்ஸிடம் “இது ஆணை. நீர் யுதிஷ்டிரனையும் பாண்டவர்களையும் சென்று பாரும். அவர்களை பேரரசரிடம் அழைத்துச்செல்ல உம்மை பொறுப்பாக்குகிறோம். அவர்களுடன் இரும்… புரிகிறதா?” என்றான். பூரிசிரவஸ் தலைவணங்கி “ஆணை” என்றான். “நீர் செல்லலாம்.”
பூரிசிரவஸ் எழுந்து மீண்டும் தலைவணங்கிவிட்டு அறையைவிட்டு வெளியே சென்றான். இடைநாழியில் ஓடிக்கொண்டிருந்த காற்று உடம்பைத் தொட்டதும் உடல் சிலிர்த்தது. உடனே அனைத்தும் விளங்கியது. அறியாமல் அறைவாயிலை திரும்பி நோக்கினான். தலையை அசைத்துக்கொண்டு நடக்கத் தொடங்கினான். புழுதிபடிந்த முகம்போல உள்ளம் ஒவ்வாமையை உணர்ந்தபடியே இருந்தது. சற்று நேரம் சென்றபின் அவன் நின்றான். திரும்ப அறைக்குள் செல்லவேண்டும் என்று தோன்றியது. கண்களை மூடிக்கொண்டபோது துரியோதனனின் விரிந்த பெருங்கரங்களை அண்மையில் என கண்டான். புடைத்த நரம்பு கிளைவிரித்து இறங்கிய புயங்கள். அவன் வியர்வையின் மெல்லிய எரிமணம். விழிகளைத் திறந்தபோது தன் முகம் மலர்ந்திருப்பதை அவனே உணர்ந்தான்.
தன் மாளிகைக்குச் சென்று உடைமாற்றி உணவருந்திவிட்டு அவன் பாண்டவர்களின் மாளிகைக்கு மீண்டான். புரவியில் வரும்போது இருபக்கமும் முகங்களை நோக்கிக்கொண்டிருந்தான். ஒவ்வொரு முகமும் பாண்டவர்களைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறது என்று தோன்றியது. அதை உண்மையில் கணிக்கவேமுடியாது. உள்ளம் விழைவதையே விழிகள் எங்கும் காண்கின்றன. ஒற்றர்களும் விழிகளே. அவர்கள் அரசன் விழைவதையே காண்கிறார்கள்.
யுதிஷ்டிரனின் மாளிகையை அடைந்து தன் வருகையை ஏவலனிடம் அறிவித்துவிட்டு காத்திருப்பறையில் அமர்ந்தான். மேலே தொங்குவிசிறி மயிற்பீலிக்கற்றைகளுடன் ஆடிக்கொண்டிருந்தது. அந்த நிழலாட்டம் பதற்றத்தை அளித்தது. அதை நிறுத்தும்படி சொல்லலாம் என எண்ணினான். ஆனால் அதுவே அச்சத்தை காட்டிக்கொடுத்துவிடும் என்று எண்ணி தவிர்த்தான். உள்ளங்கை ஈரமாக இருந்தது. அதை கச்சையில் துடைத்துக்கொண்டான். இளவயதின் கதைகளில் கேட்டறிந்த யுதிஷ்டிரர். அவர் கருணையும் அமைதியும் கொண்டவராகவே இருப்பார். ஆனால் உடன் அர்ஜுனனும் பீமனும் இருக்கக் கூடாது. பிற இருவரையும் பற்றி அவனுள் சித்திரமே இல்லை.
ஏவலன் வந்து “அவைக்கு வருக!” என்று சொல்ல எழுந்ததும்தான் தேவிகையை நினைவுகூர்ந்தான். குளிர்ந்த அலையொன்று அடித்து பின்னால் சாய்த்தது போலிருந்தது. ஓர் எண்ணத்தை அப்படி பருண்மையான விசையாக உணரமுடியுமா என்ற வியப்பே மறுகணம் எழுந்தது. தன்னை நிறுத்திக்கொண்டான். ஏவலன் “வருக இளவரசே” என்று மீண்டும் சொன்னான். தலையசைத்துவிட்டு நடந்தான். ஒரே கணத்தில் உள்ளம் சீரடைந்த விந்தையையும் பார்த்தான். ஆனால் இடக்கால் மட்டும் நடுங்கிக்கொண்டிருந்தது.
அவளை நினைக்கவேயில்லை. ஒருகணம் கூட. பாண்டவர்களின் வருகை பற்றி அறிந்தபோதும் யுதிஷ்டிரரை சந்திப்பதைப்பற்றி பேசியபோதும். உள்ளம் அத்தனை நுட்பமாக அந்த நாடகத்தை போட்டிருக்கிறது. ஆனால் அலைகளுக்கு அடியில் கருநாகம் அந்த முத்துச்சிப்பியைத்தான் தன் உடலால் தழுவி நெளிந்து கொண்டிருந்திருக்கிறது. அந்த மாளிகையே சிபிநாட்டின் செந்நிறப் பாலைநிலம் சூழ இருப்பதுபோலிருந்தது. சாளரம் வழியாகப்பார்த்தால் மணல் மடிப்புகளின் வளைவுகளை பார்க்கமுடியும் என்று தோன்றியது. காதுகளில் கதிர்வெம்மையின் அலைகள்.
இருண்டு குளிர்ந்த குகைக்குடைவுப்படிகள். விழிக்கு மண் என்றும் கைகளுக்குப் பாறையென்றும் காட்டும் சுவர்கள். “நாம் மண்ணுக்குக் கீழே நூறடி ஆழத்தில் இருக்கிறோம்.” அவளுடைய விழிகள் சிரித்தன. சிரிப்பதற்கே உரியவை போன்ற விழிகள். சற்றே ஒடுங்கிய கன்னம். கூரிய நீண்ட மூக்கு. செவ்வுதடுகளுக்குள் சற்றே மங்கலான நிறம் கொண்ட பற்கள். “காலத்தில் புதைந்து மறைவதென்றால் இதுதான்.” அவன் நின்று இன்னும் எத்தனை தொலைவு என்று பார்த்தான். ஏவலன் இடைநாழியின் மறு எல்லைக்குச் சென்று திரும்பிப்பார்த்தான். ”நீ இன்னும் பெரிய அரசை ஆளக்கூடியவள்… ஐயமே இல்லை.” என்ன குளிர். மண்ணுக்கு அடியில் செல்லச்செல்ல குளிர்தான். ஆனால் மேலும் சென்றால் அனல் என்கிறார்கள். மண்ணுக்குள் விண்ணை ஆளும் ஏழு பெருநெருப்புகளும் கூடுகட்டியிருக்கின்றன. “பெரிய அரசுடன் வருக!”
அறையின் பெரியவாயிலைத் திறந்த ஏவலன் உள்ளே செல்ல கைகாட்டினான். பூரிசிரவஸ் உள்ளே சென்றபோது பீடத்தில் அமர்ந்திருந்த முதியவர் எழுந்து “வருக பால்ஹிகரே” என்றார். ஒருகணம் கடந்ததும் அவர்தான் யுதிஷ்டிரன் என்று உணர்ந்தான். “குருகுலத்து மூத்தவருக்கு வணக்கம். நான் பால்ஹிகனாகிய பூரிசிரவஸ். தங்களை அரசரைக் காண அழைத்துச்செல்லும்படி அஸ்தினபுரியின் இளவரசரின் ஆணை.” யுதிஷ்டிரன் “அமருங்கள் பால்ஹிகரே. மிக இளையவராக இருக்கிறீர்கள். நான் சற்று முதியவரை எதிர்பார்த்தேன்” என்றான். பூரிசிரவஸ் அமர்ந்தான். ”தங்கள் தந்தை சோமதத்தரை நான் இளவயதில் ஒருமுறை மத்ரநாட்டில் கண்டிருக்கிறேன். தங்கள் மூத்தவர் சலன் நலமாக இருக்கிறார் அல்லவா?”
பூரிசிரவஸ் “அனைவரும் நலம். நான் இங்கே கௌரவர் கேண்மையில் உகந்திருக்கிறேன்” என்றான். “அது நன்று. துரியோதனனின் கைகளும் தோள்களும் பெரியதந்தைக்குரியவை. அவன் அணைப்புக்குள் சென்றவர்கள் மீளாமல் அங்கிருப்பார்கள்” என்றான் யுதிஷ்டிரன். “பெரியதந்தையை சந்திக்க நானும் விழைவுடன் இருக்கிறேன். இளையயாதவன் தானும் வருவதாக சொன்னான். அவனையும் உடனழைத்துச்செல்வதாகவே விதுரரிடம் சொல்லியிருந்தேன்.” “ஆம், அவரும் வருவதாக என்னிடம் சொன்னார்கள்.” இது காத்திருப்பதற்குரிய இடம்… அமைதியானது. அருகே எவரோ நின்று காதில் சொன்னதுபோல அச்சொற்றொடர் ஒலித்தது. அவன் உடல் விதிர்த்தான். “என்ன?” என்றான் யுதிஷ்டிரன். “இந்த அறைக்காற்று கொஞ்சம் குளிர்கிறது.” யுதிஷ்டிரன் “ஆம், பெரிய சாளரங்கள்” என்றான்.
அவள் இருக்கிறாளா? இங்கே, உள்ளேதான் இருக்கிறாள். இந்த மரத்தரையில் அவளுடைய கால்களும் தொட்டுக்கொண்டிருக்கின்றன. அவளுடைய மூச்சு இக்காற்றில் கலந்திருக்கிறது. நான் அறிவேன். ”இன்று மாலை அரசவையில் எங்களை முறைமைப்படி அவையமர்த்துவதாக சொன்னார் விதுரர். அதற்குமுன் தந்தையை சந்திப்பது கடமை என்று நான் சொன்னேன்” என்று யுதிஷ்டிரன் சொன்னான். பூரிசிரவஸ் மெல்ல தன்னுள் ஒரு புன்னகையை உணர்ந்தான். அவனுள் நிகழும் எண்ணங்களை சற்றும் உணரக்கூடியவர் அல்ல அவர் என்று தெளிவாகத்தெரிந்தது. விழியிழந்தவர் முன் அமர்ந்திருக்கும் விடுதலையுணர்வு ஏற்பட்டது.
“இளையோர் இருவரும் இங்கில்லை” என்று யுதிஷ்டிரன் சொன்னான். “அர்ஜுனன் காலையிலேயே துரோணரை சந்திப்பதற்காக குருகுலத்திற்கு சென்றிருக்கிறான். பீமன் அவனை இளமையில் வளர்த்த செவிலி அனகை நோயுற்றிருப்பதை அறிந்து அங்கு சென்றிருக்கிறான். அரசரை சந்திக்க எப்படியும் உச்சி கடந்துவிடும் என்று எண்ணி நானும் ஒப்புதல் கொடுத்தேன்.” பூரிசிரவஸ் “ஆம், உச்சி கடந்துவிடும் என்றே எண்ணுகிறேன்” என்றான். “அதற்குள் இளைய யாதவனும் வந்துவிடுவான். அவன் கௌரவர்களிடம் சக்கரப்பயிற்சி செய்யச்சென்றிருக்கிறான்.”
”நகுலன் சூதர்களின் புரவிப்பயிற்சிச் சாலைக்குச் சென்றான்.“ யுதிஷ்டிரன் சிரித்து “நானும் சகதேவனும் மட்டுமே இங்கிருக்கிறோம். எங்களிருவருக்கும் மட்டுமே காலையில் நூல்பயிலும் வழக்கம் இருக்கிறது. ஷத்ரியர்களுக்கு உகக்காத வழக்கம்” என்றான். பூரிசிரவஸ் “நானும் நூல் பயில்வதுண்டு” என்றான். “என்ன நூல்கள்? அரசு சூழ்தலா?” என்றான் யுதிஷ்டிரன். “இல்லை, நான் பயில்வதெல்லாம் காவியநூல்கள்” என்றான். யுதிஷ்டிரன் “காவியம் நன்று. ஆனால் நான் அவற்றில்கூட வரலாற்றை மட்டுமே பார்ப்பது வழக்கம்” என்றான்.
ஏவலன் வந்து சகதேவனின் வருகையை அறிவித்தான். வரச்சொல்லிவிட்டு “இளையோன் இங்கு வந்ததில் இருந்தே நூல்களில்தான் மூழ்கி இருக்கிறான். இந்த இரண்டாவது வரவின் நிகழ்வுத்தொடர்களைப்பற்றி ஆராய்கிறான்” என்றான் யுதிஷ்டிரன். பூரிசிரவஸ் “அவர் கணிநூல் வல்லுநர் என்றனர்” என்றான். “ஆம், நாங்கள் ஐவருமே ஐந்து வல்லுநர்கள்…” என்றான் யுதிஷ்டிரன். “எதிலும் திறன் கொண்டவராக எங்கள் தந்தை இருக்கவில்லை. அவரது உள்ளம் ஒரு அறநூல் அறிஞனாகவும் மாமல்லனாகவும் விற்கலை மேதையாகவும் புரவிதேர்ந்தவனாகவும் கணிநூலாளனாகவும் தன்னை மாறி மாறி புனைந்துகொண்டது. அக்கனவுகள் எங்கள் வடிவில் உருவம்கொண்டன.”
கதவு திறந்தபோது சகதேவனுடன் பெண்களும் இருக்கும் அணியொலி கேட்டு பூரிசிரவஸ் திரும்பிப்பார்த்து உடனே விழிதிருப்பிக்கொண்டான். முரசை கோல்நீவியதுபோல ஒரு முழக்கம் அவனுள் எழுந்தது. தேவிகையும் விஜயையும் சகதேவனுடன் உள்ளே வந்தனர். “என்ன?” என்று யுதிஷ்டிரன் புன்னகையுடன் அவர்களை நோக்கி கேட்டான். “வந்ததிலிருந்தே காத்திருக்கிறோம். சலித்துவிட்டது. நாம் எங்கும் செல்வதில்லையா?” என்றபடி தேவிகை அருகே வந்தாள். இயல்பாக பீடத்தில் அமர்ந்து “வந்த கணம் முதல் நிகழ்வுகளாக இருக்கும் என எதிர்பார்த்தேன்” என்றாள்.
“அதுதான் சலிப்பூட்டுகிறது. இன்னமும் உச்சிவேளைகூட ஆகவில்லை. அரைநாள்கூட பொறுக்கமுடியாதா என்ன?” என்றான் யுதிஷ்டிரன். விஜயை அமர்ந்தபடி “அக்கா விடிகாலையிலேயே எழுந்து முழுதணிக்கோலம் கொண்டுவிட்டார்கள்” என்றாள். சகதேவன் பூரிசிரவஸ்ஸிடம் இரு கைகளையும் நீட்டியபடி “பால்ஹிகரே, உங்களைப்பற்றி அறிந்திருக்கிறேன்” என்றான். பூரிசிரவஸ் அவனுடைய புன்னகைக்கும் அழகிய முகத்தை நோக்கியபோது மேலும் பதற்றத்தைத்தான் அடைந்தான். “ஆம், நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். சந்தித்ததில் மகிழ்ச்சி. நான் இங்கே…” என்றபின் நாவால் இதழ்களை ஈரப்படுத்தி “தங்களை…” என்றான்.
“இளையோனே, நம்மை தந்தையிடம் கூட்டிச்செல்பவர் இவர். துரியோதனனுக்கு அணுக்கமானவர்” என்ற யுதிஷ்டிரன் திரும்பி தேவிகையிடம் “உங்கள் குலத்திற்கு அணுக்கமானது இவர்களின் குலம். அறிந்திருப்பாய். உங்கள் குலமூதாதை பால்ஹிகர்தான் பால்ஹிகநிலத்தின் பத்து அரசுகளுக்கும் முன்னோடி. இன்றும் அவர் உயிருடன் இருக்கிறார்” என்றான். தேவிகை “ஆம், தெரியும். ஒருமுறை இவரை நான் பார்த்திருக்கிறேன்” என்றாள். பூரிசிரவஸ் அவள் அறியாமல் திரும்பி அவளை நோக்கினான். அவள் முகத்திலும் விழிகளிலும் இனிய சிரிப்பு மட்டும்தான் இருந்தது. “பால்ஹிக மூதாதையை அழைத்துச்செல்வதற்காக சிபிநாட்டுக்கு வந்திருந்தார்.”
“அப்படியா? அது எனக்குச் செய்தி” என்றவன் பூரிசிரவஸ்ஸை நோக்கித்திரும்பி ““மத்ரம், சௌவீரம், பூர்வபாலம், சகம், யவனம், துஷாரம், கரபஞ்சகம், கலாதம், குக்குடம், துவாரபாலம் என்னும் பத்து அரசுகள் இல்லையா?” என்றான். “ஆம் மூத்தவரே. ஆனால் கரபஞ்சகம், கலாதம், குக்குடம், துவாரபாலம் ஆகிய நான்கும் நாடுகள் அல்ல. அவை குலக்குழுக்கள் மட்டும்தான். துவாரபாலம் என்பது ஒரு குடிகூட அல்ல. பன்னிரு குடிகளின் தொகுதி. உண்மையில் மலைக்கணவாயை காவல்காக்கும் குலம். அனைவருமே துவாரபாலர்கள் என்றும் பால்ஹிகரின் குருதி என்றும் சொல்லிக்கொள்கிறார்கள்.”
“இதையே அன்று என்னிடமும் இவர் சொன்னார்” என்று தேவிகை சிரித்தாள். “இந்தக் குலக்கணக்குகளை விட்டு மலைக்குடிகள் மேலே எழுவதே இல்லை என்று என் தந்தை சொன்னார்.” பூரிசிரவஸ் அவளை ஒருகணம் நோக்கிவிட்டு விழிதிருப்பினான். அவன் உடல் முழுக்க குருதி வெம்மைகொண்டு ஓடியது. மூச்சிரைக்காமலிருப்பதற்காக அவன் வாயை மெல்லத்திறந்தான். திரும்பி விஜயையை நோக்கினான். விஜயை அவனை நோக்கி புன்னகை செய்து “எல்லா மலைக்குடிகளும் குடிப்பெருமையால் மட்டும் நிற்பவர்கள் அல்ல என்று சொல்லுங்கள் இளவரசே” என்றாள். “மத்ரநாட்டின் குருதி அஸ்தினபுரியை அடைந்து ஒருதலைமுறை கடந்துவிட்டது.”
யுதிஷ்டிரன் “ஆம், அன்னை மாத்ரியை எப்படி மறக்கமுடியும்?” என்றான். விஜயை “பால்ஹிக இளவரசர்கூட அஸ்தினபுரியின் இளவரசியை மணக்கவிருப்பதாக மலைநாடுகளில் ஒரு பேச்சிருந்தது” என்றாள். தேவிகை “இவரா? வியப்பாக இருக்கிறதே? பிறகென்ன ஆயிற்று?” என்றாள். “தெரியவில்லை. அவர்தான் சொல்லவேண்டும். துரியோதனருடன் மற்போரில் வெல்லவேண்டும் என்று சொல்லிவிட்டார்களோ என்னவோ?” என்றாள் விஜயை. தேவிகை உரக்க சிரித்துவிட்டாள். யுதிஷ்டிரன் சிரித்தபடி “பெண்கள் நகைக்க விரும்பினால் ஒருவரை பிடித்துக்கொள்கிறார்கள் பால்ஹிகரே. பொருட்படுத்தவேண்டியதில்லை” என்றான்.
பூரிசிரவஸ் திரும்பி சகதேவனை பார்த்ததும் அவனுக்கு ஏதாவது தெரியுமா என்று எண்ணிக்கொண்டான். அது அவன் தவிப்பைக் கூட்டியது. எழுந்து சென்றுவிடவேண்டும் என்று தோன்றியது. ”இளையவர் ஒருவரைக் கண்டால் நகையாடுவதில் என்ன பிழை? அவர் ஒன்றும் பிழையாக எண்ணமாட்டார்” என்றாள் தேவிகை. “மேலும் அவர் இங்கு நமக்கு பணியாற்ற அனுப்பப்பட்டவர். நம்மை மகிழ்விப்பது அவரது கடமை. என்ன சொல்கிறீர் பால்ஹிகரே?” பூரிசிரவஸ் “ஆம் இளவரசி” என்றான். விஜயை “அதற்காக அவரிடம் பாடச் சொல்லிவிடவேண்டியதில்லை” என்றாள். இருவரும் மேலும் சிரித்தனர்.
சகதேவன் “போதும்” என்றபின் பூரிசிரவஸ்ஸிடம் “நாம் எப்போது மூத்ததந்தையை பார்க்கிறோம்?” என்றான். “அவரது அணுக்கர் செய்தியனுப்பியதுமே சந்திக்கலாம். நான் இங்கிருப்பதை அறிவித்துவிட்டுத்தான் வந்தேன்” என்றான். “நாம் அரசரை சந்தித்தபின்னர்தான் இளவரசிகள் பேரரசியை சந்திக்கவேண்டும். அதற்காகவே காத்திருக்கிறார்கள்.” பூரிசிரவஸ் “நாம் கிளம்பியதுமே இவர்களும் செல்லலாம். மாலை அரசவைக் கூட்டம் கூடுவதற்குள் சந்திப்புகள் முடியவேண்டும் அல்லவா?” என்றான். “நம்முடன் யாதவரும் விதுரரும் வருவார்கள்” என்ற சகதேவன் “உண்மையில் மூத்த தந்தையை எப்படி சந்திப்பது என்ற பதற்றம் எனக்கு இருக்கிறது. அவர் இந்நாட்களில் நினைவில் மறைந்து மூதாதையர் வரிசையில் ஒருவராக மாறிவிட்டிருக்கிறார்” என்றான்.
”நம் கடமை அது இளையோனே. நமக்கு அவரளித்த நற்கொடையே இந்திரப்பிரஸ்தமாக அமையவிருக்கும் மண் என்று கொள். அவரது பாதங்களைத் தொட்டு வணங்குவதன் மூலம் நாம் தந்தையின் வாழ்த்துக்களையும் பெற்றுக்கொள்கிறோம்.” சகதேவன் “ஆம்” என்றான். தேவிகை “பால்ஹிகரே, நீங்கள் துச்சளையை பார்த்தீர்களா?” என்றாள். பூரிசிரவஸ் அவளை தன்னையறியாமல் பார்த்துவிட்டான். “பார்க்காமலா மணமுடிக்க எண்ணினார்?” என்றாள் விஜயை. அவன் திரும்பி விஜயையை நோக்க “அஸ்தினபுரியின் இளவரசியை மணமுடிக்க எண்ணுபவர்கள் அவளை பார்க்கவேண்டும் என உண்டா என்ன?” என்றாள் தேவிகை. பூரிசிரவஸ் தலைகுனிந்தான். “நான் கேட்பதற்கு நீங்கள் மறுமொழி சொல்லவில்லை பால்ஹிகரே.”
“பார்த்தேன்” என்றான் பூரிசிரவஸ் குனிந்தபடி. “இந்த மணநிகழ்வில் அவளுக்கு மகிழ்ச்சியா என்ன?” என்று தேவிகை கேட்டாள். “இதென்ன கேள்வி? சிந்து அரசர்கள் தொன்மையான குலம். சிந்துநாடு ஏழுநதிகளின் படுகை. சிபிநாட்டை விட ஐந்துமடங்குபெரியது. பால்ஹிகநாட்டைவிட பன்னிருமடங்கு பெரியது” என்றாள் விஜயை. “பால்ஹிகநாடா? மலைகளையும் சேர்த்து சொல்கிறாயா?” என்றாள் தேவிகை. “மலைகளில் உள்ள இருபத்தேழு சிற்றூர்களைத்தான் பால்ஹிகநாடு என்கிறார்கள். ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை அவர்கள் பெருவிழவன்று ஒன்றாகக் கூடும்போது மொத்த பால்ஹிகநாட்டையும் ஒரே இடத்தில் கண்ணால் பார்த்துவிடமுடியும், இல்லையா பால்ஹிகரே?” பூரிசிரவஸ் தலைதூக்கி “ஆம் இளவரசி” என்றான்.
“பால்ஹிகநாடுகளை இணைத்து ஒன்றாக ஆக்கவேண்டுமென்பது எந்தையின் கனவு” என்றாள் விஜயை. ”இந்திரப்பிரஸ்தம் அமைந்ததுமே விஜயர் வில்லுடன் வருவதாக சொல்லிவிட்டார். யார்கண்டது, மறுமுறை வரும்போது பால்ஹிகர் நம் நாட்டுக்குள் அமைந்த சிற்றரசொன்றை ஆள்பவராகக் கூட இருப்பார்.” பூரிசிரவஸ் “ஆம், அவ்வாறு நிகழ்ந்தால் என் பேறு” என்றான். “நான் ஒருமுறை இமயமலையடுக்குகளில் பயணம்செய்ய விழைகிறேன். பால்ஹிகர் எனக்கு அகம்படி வந்தாரென்றால் அச்சமின்றி செல்லமுடியும்” என்று தேவிகை சொன்னாள். யுதிஷ்டிரன் “இமயமலைமுடிகளை நிலத்தில் வாழ்பவர்கள் எளிதில் அணுகமுடியாது, தேவிகை” என்றான்.
பூரிசிரவஸ் கால்களால் தரையில் போடப்பட்ட மரவுரி விரிப்பை நெருடிக்கொண்டிருப்பதை உணர்ந்து நிறுத்தினான். கீழிருந்து ஏவலன் வந்து வணங்கி “செய்தியாளன் வந்திருக்கிறான். இன்னும் ஒருநாழிகையில் பேரரசர் இளவரசர்களைப் பார்க்க சித்தமாக இருக்கிறார்” என்றான். யுதிஷ்டிரன் கையில் இருந்த சுவடியை வைத்துவிட்டு “நன்று. உச்சிப்பொழுதின் நான்காம் நாழிகை வரை நல்லநேரம்தான்” என்றபின் சகதேவனிடம் “செல்வோம் இளையோனே” என்றான். தேவிகை “நீங்கள் சென்றதுமே நாங்கள் கிளம்பலாமா?” என்றாள். ”நாங்கள் தந்தையை சந்தித்தசெய்தியை உங்களுக்கு அறிவிக்கச் சொல்கிறேன். உடனே நீங்கள் கிளம்பலாம்” என்றான் யுதிஷ்டிரன்.
”பால்ஹிகரே, எங்கள் தேர்கள் புஷ்பகோஷ்டத்திற்கு வரும்போது அங்கே முற்றத்தில் இடமிருக்கவேண்டும்” என்றாள் தேவிகை. அவன் திரும்பி அவளை நோக்க பீடத்தில் நிமிர்ந்து அமர்ந்தபடி “நீர் முன்னரே அதை ஒழுங்குசெய்திருக்கவேண்டும்” என்றாள். கட்டுக்குழலில் இருந்த மணிச்சரம் நழுவி முகத்தில் சரிய அதை விலக்கியபடி “காலை கொற்றவை ஆலயத்திற்குச் சென்றபோது முற்றத்தில் இடமில்லை என்று சற்றுநேரம் நிற்கவைத்துவிட்டனர். அது மீண்டும் நிகழலாகாது” என்றாள். பூரிசிரவஸ் “ஆணை இளவரசி” என்றான். சகதேவன் “பால்ஹிகரே, நாம் ஒன்றாகவே செல்வோம். நீர் கூடத்தில் காத்திருக்கலாம்” என்றான். பூரிசிரவஸ் எழுந்து தலைவணங்கினான்.