பகுதி 17 : வண்ணப்பெருவாயில் – 2
கிருஷ்ணன் உள்ளே மஞ்சத்தறையில் பேரரசியுடன் இருப்பதாக சேடி சொன்னாள். பூரிசிரவஸ் அவளிடம் “என்ன செய்கிறார்?” என்றான். “குழலூதுகிறார்” என்றாள். பூரிசிரவஸ் திகைப்புடன் “என்ன செய்கிறார்?” என்று மீண்டும் கேட்டான். “வேய்குழல் ஊதுகிறார்” என்றாள். பூரிசிரவஸ் அப்போதும் புரிந்துகொள்ளாமல் “சூதர் ஊதுகிறாரா?” என்றான். அவள் “இல்லை, கண்ணன் ஊதுகிறார். மகளிர் அனைவரும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்” என்றாள். “யார்?” என்றான் பூரிசிரவஸ். “கண்ணன்” என்ற சேடி “பொறுத்தருளவேண்டும் இளவரசே. அனைவரும் அப்படித்தான் சொல்கிறார்கள். நான் வாய்தவறி…” என்று அச்சத்துடன் சொன்னாள்.
பூரிசிரவஸ் கையை வீசியபடி “அரசர்கள் இசைக்கருவிகளை இசைக்கலாகாது. படைப்பயிற்சி கொண்டவர்கள் அவற்றை தீண்டுவதும் தகாது” என்றான். “அதெல்லாம் அரசர்களுக்குத்தானே? இவர் யாதவர் அல்லவா?” என்றாள் சேடி. “யாதவர்தான்… “ என்ற பூரிசிரவஸ் “நீ என்ன சொல்லவருகிறாய்?” என்றான். “கண்ணன் ஆயர்குடியில் கன்றுமேய்ப்பவர் அல்லவா? அவர் அரசர் இல்லையே” என்றாள் சேடி. பூரிசிரவஸ் அறியாமலேயே புன்னகைசெய்து “யார் சொன்னது அப்படி?” என்றான். “அவரேதான் சொன்னார். நான் கேட்டேன், இத்தனை ஆடையணிகளுக்கு எங்கிருந்து செல்வம் என்று. எல்லாமே பெண்கள் கொடுத்தது என்று சொல்லி நீ நான் கேட்டால் அந்தத் தோடை கழற்றித் தரமாட்டாயா என்ன என்றார். தருவேன் என்று சொன்னேன். நேரம் வரும்போது கேட்கிறேன் பத்மை என்று சொல்லிவிட்டுச் சென்றார்.”
பூரிசிரவஸ் பற்களைக் கடித்து ஒருகணம் தன் எண்ணங்களை அடக்கியபின் “என்னால் இதைமட்டும்தான் புரிந்துகொள்ளவே முடியவில்லை. எப்படி இத்தனை சிற்றுரையாடல்களில் ஓர் அரசரால் ஈடுபட முடிகிறது?” என்றான். “ஏன்?” என்று அவள் கேட்டாள். பூரிசிரவஸ் மறுமொழி சொல்லாமல் நடந்து இடைநாழியைக் கடந்தபோதுதான் மாளிகையறைகள் காற்றில்லாத உச்சிவேளை காடுபோல அமைதியாக இருப்பதை உளம்கொண்டான். தூண்கள், திரைச்சீலைகள், கொடித் தோரணங்கள், பட்டுப்பாவட்டாக்கள், பீடங்கள் அனைத்தும் அந்த அமைதியில் கடற்கரைப் பாறையில் பதிந்த சிப்பிகள் போல அமைந்திருந்தன.
அதன்பின்னர்தான் அவன் குழலிசையை செவிகொண்டான். அது குங்கிலியச்சுள்ளியின் புகை என சுருளாகி எழுந்து மெல்லப்பிரிந்து பரவிக்கொண்டிருந்தது. அவன் நடை தயங்கியது. நீரில் விழுந்த குருதித்துளி. அசைவற்ற சுனைப்பரப்பில் பரவும் நெய்ப்படலம். கொடிவழியாக செல்லும் செவ்வெறும்பு நிரை. இளவெயிலில் ஆடும் சிலந்திவலை. மலைமடியில் விழுந்த முகில்பிசிறு. பாலையில் தன்னந்தனியாக ஓடும் வெண்புரவி. குட்டியானையின் குறுவால் சுழற்சி. பனிப்புகை படரும் மலைச்சரிவுகள். தேவதாரு. தனித்த பசுங்கோபுரமென எழுந்த தேவதாரு. அது சூடிய ஒளிமிக்க வானம். தனிமையென விரிந்த வானம். தித்திக்கும் வானம். மென்மையான குளிர்ந்த வானம். நெடுநேரமென காலம் சென்றபின்னர் மீண்டபோது அவன் திகைப்புடன் உணர்ந்தான், அந்த இசையை அவன் பார்த்துக்கொண்டிருந்தான்.
அவனருகே சேடி நின்றிருந்தாள். அவள் விழிகளை நோக்கி உளம் அதிர்ந்தான். அவை ஆலயத்தின் யக்ஷிகளின் நோக்கை கொண்டிருந்தன. அவன் மெல்ல நடந்து கூடத்தை அடைந்தான். இசை முடிவில்லாமல் சென்றுகொண்டே இருந்தது. ஒரே சுதியில் ஒரே சுவரக்கோவை. திரும்பத்திரும்ப அதுவே ஒலித்தது. அறியாக்குழந்தை ஒன்று கற்றுக்கொண்ட முதல் பண். ஓர் இலை. மீண்டுமொரு இலை. இலைப்பெருவெளி. ஒரு விண்மீன். இன்னொரு விண்மீன். ஓர் இருளலை. ஓர் ஒளிக்கதிர். பிறிதொரு ஒளிக்கதிர். அவனுக்கு சலிப்பதேயில்லையா? அறிவற்ற குழந்தை. அறிவுவிளையாத குழந்தை. அழகு மட்டும் கனிந்த குழந்தை. திரும்பத்திரும்ப. மீண்டும் மீண்டும்…
ஆனால் பின்னர் அறிந்தான், ஒருமுறைகூட இசைக்கோவை மீளவில்லை. ஒவ்வொரு முறையும் சற்றே மாறுபட்டது. மிகச்சிறிய மாறுதல். நுண்மையிலும் நுண்மை. செவிதொட்டு எடுக்கமுடியாத உளம் மட்டுமே தீண்டக்கூடிய நுண்மை. மலரிதழ் நுண்மை. மயிர்நுண்மை. மீண்டும் மீண்டும். பறக்கும் கருங்குழலில் ஒருமயிரிழைக்கும் இன்னொரு மயிரிழைக்கும் என்ன வேறுபாடு? அடுக்கியடுக்கி வைக்கும் இவற்றால் ஆவதென்ன அவனுக்கு?
நுண்மையை உளம் உணர்ந்துகொண்டபின் அது பெரியதாகியது. அது மட்டுமே தெரிந்தது. ஒவ்வொரு சுவரத்திற்கும் இடையே யுகங்கள் விரிந்து கிடந்தன. புடவிப்பெருக்கு அலையடித்தது. ஒன்றிலிருந்து ஒன்றுக்கு செல்ல ஆயிரம் பிறவிகள் தேவையாக இருந்தது. இதிலிருந்து தாவி எழுந்து அப்பால் அப்பால் எனப்பறந்து அஞ்சி அலறி அச்சத்தால் ஆயிரம் முறை இறந்து பிறந்து கண்மூடி கைநீட்டி மறுமுனையைப் பற்றி உவகைகொண்டு கூவிச்சிரித்து மீண்டும் தாவி…
எங்கிருக்கிறேன்? எளிய குழலோசை. அதையா இப்படியெல்லாம் எண்ணங்களாக்கிக் கொள்கிறேன்? மீண்டும் அதே இசைச்சுருள். மாற்றமின்றி நிகழ்ந்துகொண்டிருந்தது. அது மலைகளைப்போல நதிகளைப்போல வான்வெளியைப்போல என்றும் இங்கிருக்கும். மானுடர் வந்து செல்வார்கள். மாநகர்கள் எழுந்து மறையும். காலம் வழிந்தோடிக்கொண்டே இருக்கும். ஒற்றைச்சுருள் மட்டுமே இங்குள்ள மானுடம். இங்குள்ள உயிர்த்தொகை. இப்புடவி. இக்கடுவெளி.
பெருமூச்சுகளாக விட்டுக்கொண்டிருந்தான். எத்தனை மூச்சுவிட்டாலும் நெஞ்சுள் இறுகிய கடுங்குளிர்க்காற்று அழுத்தமிழக்கவில்லை. நெஞ்சைச் சுமந்து நடக்கமுடியாமல் கால்கள் உறைந்திருந்தன. கூடத்தை அணுகும் இடைநாழியின் இருபக்கமும் சுவர்சாய்ந்தும் தூண்தழுவியும் சாளரத்திண்ணைகளில் அமர்ந்தும் சேடிப்பெண்கள் இமைசரித்து கழுத்தும் இடையும் குழைத்து நின்றிருந்தனர். தரையில் முழங்கால் தழுவி அமர்ந்திருந்தனர். தோழிகளின் தோளில் தலைவைத்து கண்மூடியிருந்தனர். ஓரிருவர் மரத்தரையில் உடல் மறந்து படுத்திருந்தனர்.
அவன் அறைக்குள் நோக்கினான். காந்தாரியின் இறகுச்சேக்கை மேல் அமர்ந்து அவள் தலையணையை தன் முதுகுக்கு வைத்து சாய்ந்துகொண்டு விழிகள் ஒளிர கிருஷ்ணன் இசைத்துக்கொண்டிருந்தான். அவனுடைய வலக்காலை காந்தாரி தன் மடிமேல் வைத்திருந்தாள். மஞ்சத்தின் ஓரம் துச்சளை அதன் அணித்தூணைப்பற்றிக்கொண்டு விழிமூடி அமர்ந்திருக்க கீழே அவன் காலடியில் என பானுமதி இருந்தாள். அவள் தோளில் சாய்ந்தபடி அசலை. அந்த அறை முழுக்க இளவரசிகள் செறிந்திருந்தனர். அனைவர் விழிகளும் ஒன்றென தெரிந்தன.
அவன் வந்த அசைவை எவரும் அறியவில்லை. விழிதிறந்திருந்த பெண்கள்கூட அவனை நோக்கவில்லை. கண்ணுக்குத்தெரியாத தேவனாக அவன் அங்கே சென்றுவிட்டதுபோல உணர்ந்தான். இல்லை அவர்கள்தான் அப்பால் இருக்கிறார்களா? ஜலகந்தர்வர்கள் நீர்ப்பாவைகளாகத் தெரிவார்கள் என்று கதைகளுண்டு. தொட்டால் அலையிளகி கரைந்து மறைவார்கள். தன் அசைவால் அந்த பெரும் சித்திரம் மறைந்துவிடும் என்ற அச்சம் எழுந்தது.
அவன் விழிகளை கிருஷ்ணன் பார்வை சந்தித்தது. நலமா என்றது. புன்னகையுடன் இதோ ஒரு கணம் என்று சொல்லி மீண்டது. அவன் அனைத்தையும் அறிந்திருக்கிறான். இப்பெண்கள் எதையும் உணரவில்லை. அவன் உள்ளே நுழைந்தபோது கேட்ட அதே இசைக்கோவைதான் அப்போதும் ஒலித்துக்கொண்டிருந்தது. மாற்றமேயில்லை. அப்படியென்றால் அவனுணர்ந்த நுண்வேறுபாடு அவனே எண்ணிக்கொண்டதா? அப்படி எண்ணியதுமே அது உருமாறியது. மெல்ல மீண்டும் மாறியது. மாறிக்கொண்டே சென்றது. மாறுதல் மட்டுமே இருந்தது. மாறுதலின் தகவுகள் முடிவிலாதிருந்தன. எண்ணமும் சித்தமும் சென்றடையா தகவுகளின் பெருவெளி.
அவன் அச்சத்தில் உறைந்து அதை நோக்கி நின்றான். ஒன்று பிறிதிலாது பன்னரும் பெருங்கோடிகளெனப் பெருகுவது இது. ஒன்றுபிறிதிலாததே முடிவிலி. அந்த அச்சம் ஆயிரம் இறப்புக்கு நிகர். பல்லாயிரம் இன்மைக்கு நிகர். பலகோடி வெறுமைக்கு நிகர். ஒன்றுபிறிதிலா வெளியில் சென்று மறைந்த எதுவும் பொருளிலாதாகிறது. பொருளிலாத பெருக்கில் இருப்பென்ன இறப்பென்ன இயல்வதுதான் என்ன? இங்கே நின்றிருப்பது ஏதுமில்லையென்றால் அன்றிருந்ததும் இன்றுள்ளதும் வந்துறுவதும் என்ன?
வெளியே. இங்கிருந்து வெளியே. வெளியேறு. தப்பு. நீ மீண்டும் கண்டடையாதவற்றாலான உலகில் வாழ்வதற்காக ஓடு. பிரத்யட்சம் அனுமானம் சுருதி. சுருதியென ஏதுமற்ற வெளியில் அனுமானமில்லை. அனுமானமில்லாத நிலையில் பிரத்யட்சமென்பதும் இல்லை. எஞ்சியிருக்காத நேற்றால் இன்றை அறியமுடியாது மூடா. ஓடித்தப்பு. உன் சித்தத்தின் எல்லைகள் சிதறி காற்றில் கற்பூரமென நீ ஆவதற்குள் பிடித்துக்கொள் அதை. மீளமீள. மாற்றமில்லாது. என்றுமென. எப்போதுமென. இங்கென. இப்போதென…
பூரிசிரவஸ் மீண்டு வந்து அந்த இசையை பற்றிக்கொண்டான். எந்தப்பண்? பெரும்பாலையின் மணல் அலைகளை காட்டும் பண் அது. காந்தாரத்திற்கு வடக்கே பால்ஹிகநாடுகளுக்கும் மேற்கே காம்போஜத்தில் உருவானது. ஆகவே அதை காம்போஜி என்றனர். தக்கேசி என்று அதை வகுத்தது தென்னக இசை மரபு. ஆனால் அது காம்போஜத்திற்குரியதுமல்ல. காம்போஜத்தில் அது முறைப்படுத்தப்பட்டது அவ்வளவுதான். அதற்கும் வடக்கே மானுடக்கால்கள் படாத மணல்விரிவில் கதிர்ச்சினம் பரவிய வெண்ணிறவெறுமையில் பசித்து இறந்த ஓநாய் ஒன்றின் இறுதிஊளையில் இருந்து உருவானது அது என்பது சூதர்களின் கதை.
அதைக்கேட்ட சூதன் பித்தானான். அவன் பித்திலிருந்து எழுந்தமையால் அதை பித்தின் பெரும்பண் என்றனர். மலையிறங்கும் நதியென அது பாரதவர்ஷம் மேல் பரவியது. ஓடைகளாயிற்று. ஒவ்வொரு கிணற்றிலும் ஊறியது. பசும்புல்வெளியில் துள்ளும்பண் ஆக மாறியது. யதுகுலத்திற்குரிய பண். செவ்வழி. சீர்கொண்ட பெருவழி. செம்மைவழியும் பாதை. குருதியின் வழிவு. குருதியைத் தேடிச்செல்கிறது விழியொளிரும் வேங்கை. மெல்லிய மூச்சு. மென்பஞ்சு காலடிகள். வேங்கையின் உடலில் எரியும் தழல். வேங்கையுடலாக ஆன காடு.
இசை எப்போதோ நின்றுவிட்டிருந்தது. அவன் உடலசைந்தபின்னர்தான் அறைக்குள் இருந்த ஒவ்வொருவராக அசைந்தனர். காற்று வந்த காடு போல உயிர்கொண்டு எழுந்து பெருமூச்சுவிட்டனர். உடலை உணர்ந்து ஆடை திருத்தி அணி சீரமைத்து குழல் அள்ளிச் செருகினர். அணிகளின் ஓசை. பெண்களின் உடலுறுப்புகள் உரசிக்கொள்ளும் ஓசையை அத்தனை தெளிவாக அவன் அப்போதுதான் கேட்டான். கிளர்ந்து துடித்த நெஞ்சின் ஒலியை எவரேனும் கேட்கிறார்களா என்பதுபோல பார்த்தான்.
அத்தனைக்கும் நடுவில் கிருஷ்ணன் தனித்திருந்தான். விழிகளில் சிரிப்புடன் “பால்ஹிகரே, நாம் இப்போதுதான் பார்க்கிறோம் இல்லையா?” என்றான். “நான் பலமுறை பார்த்திருக்கிறேன் இளவரசே” என்றான். “நானும் பார்த்திருக்கிறேன். நாம் இப்போதுதான் பேசிக்கொள்கிறோம்” என்றான். திரும்பி துச்சளையிடம் “மலைமகன் இந்நாட்களில் சற்றே சோர்ந்திருக்கிறார் என நினைக்கிறேன் இளவரசி” என்றான். பூரிசிரவஸ் ஒருகணம் துச்சளையை நோக்கியபின் திரும்பிக்கொண்டான். கிருஷ்ணனுக்கு அனைத்தும் தெரியும் என்று தோன்றிய எண்ணத்தை அதெப்படி என்று சித்தம் விலக்கியது.
காந்தாரி அப்போதுதான் விழித்துக்கொண்டவளாக “யார்?” என்றாள். “பால்ஹிகர். உங்கள் மைந்தனின் தோழர்” என்றாள் துச்சளை. அதற்கு ஏதேனும் பொருளிருக்குமா என்று பூரிசிரவஸ் குழம்பினாலும் அவளை நோக்கி திரும்பவில்லை. “பாவம்,போரில் புண்பட்டுவிட்டான்” என்று சொன்ன காந்தாரி அவனுக்காக கை நீட்டினாள். அவன் அருகே சென்றதும் அவன் தலையைத் தொட்டு வருடியபடி “இளையோன். இவனுக்கும் மணநிகழ்வு பற்றி செய்தியனுப்பியிருப்பதாக விதுரர் சொன்னார்…” என்றாள்.
துச்சளை “அவருக்குப் பிடித்த இளவரசியை அவரே சென்று தூக்கி வரக்கூடியவர் அன்னையே. மூத்தவருக்காக காசி இளவரசியை தூக்கிவந்ததே அவர்தான்” என்றாள். கிருஷ்ணன் நகைத்து “அவர் தூக்கிவந்தது பீமனுக்காக அல்லவா?” என்றான். பெண்களனைவரும் சிரித்தனர். பூரிசிரவஸ் அப்போது இளைய யாதவனை வெறுத்தான். முதிர்ச்சியோ சூழலுணர்வோ அற்ற பண்படாத சிறுவன். காந்தாரி “அவன் என்ன செய்வான்? அவனிடமிருந்து பலந்தரை நழுவிச்செல்லவேண்டுமென்பது ஊழ்” என்றாள். “நழுவிச்செல்வதெல்லாமே ஊழால்தான்” என்று சொன்ன கிருஷ்ணன் துச்சளையிடம் “அந்த ஒரு சொல் இல்லையேல் எப்படி வாழ்க்கையை வாழ்ந்து முடிப்பது?” என்றான்.
அங்கிருந்து கிளம்பிச்சென்றுவிடவேண்டும் என்று பூரிசிரவஸ் எண்ணினான். உளத்தால் எழுந்தும் விட்டான். ஆனால் உடலை அசைக்கமுடியவில்லை. தன் உடல் துச்சளையை நோக்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தான். விழிகளை பொருளில்லாமல் முன்னால் நிறுத்தியிருந்தான். அவள் முகமும் உடலும் மேலும் ஒளிகொண்டிருப்பதாக தோன்றியது. காதோரக் குறுமயிர்ச்சுருள் நிழலுடன் சேர்ந்து ஆடிக்கொண்டிருந்தது. கன்னத்தில் ஒரு புதிய பரு தோன்றியிருந்தது. இதழ்கள்… அப்படியென்றால் அவள் மகிழ்ச்சியுடன் இருக்கிறாள். அவனைக் கடந்து நெடுந்தொலைவு சென்றுவிட்டாள்.
அவன் “சிந்துநாட்டரசரின் காவல்படைகள் பரிசுகளுடன் கிளம்பிவிட்டதாக அறிந்தேன்” என்றான். அவளிடமிருந்து வரும் அசைவொலிக்காக அவன் உடலே செவிப்பறையாக மாறி காத்திருந்தது. காந்தாரி “ஆம், அஸ்தினபுரி மக்கள் வியக்குமளவுக்கு பெருஞ்செல்வத்தை கன்யாசுல்கமாக அளிக்கவிருப்பதாக சொன்னார்கள். நாம் அதற்கு மும்மடங்கு கொடுக்கவேண்டும் என மைந்தனிடம் சொன்னேன். இன்றிருக்கும் நிலையில் கருவூலத்திலிருந்து அவ்வளவு செல்வத்தை எடுக்கமுடியாது என்றான்” என்றாள்.
“ஏன்? அந்தக்காலத்தில் காந்தாரத்திலிருந்து வந்த செல்வத்தைப்பற்றி இப்போதும் சொல்கிறார்கள். அதை வெல்லாவிட்டால் எனக்கென்ன மதிப்பு?” என்றாள் துச்சளை. பூரிசிரவஸ்ஸின் உள்ளத்தில் இறுகி நின்ற நரம்புகளெல்லாம் ஒவ்வொன்றாக தழைந்தன. ”கேள் யாதவா, இவள் கேட்பதைப்பார்த்தால் மொத்தக்கருவூலத்தையே கொடுக்கவேண்டும்” என்று காந்தாரி சிரித்தாள். ”நீங்கள் கொடுக்கவேண்டாம். என் இளையவளுக்காக நான் கொடுக்கிறேன். சிந்துநாட்டின் கருவூலத்தை நிறைத்து திணறவைக்கிறேன்” என்றான் கிருஷ்ணன். துச்சளை “பேச்சு மட்டும் பெரிது… உண்மையிலேயே கொடுப்பீர்களா?” என்றாள். கிருஷ்ணன் ”நீ சொல் என்ன வேண்டும் என்று…” என்றான். “சொல்கிறேன். நேரம் வரட்டும்” என்று அவள் சிரித்தாள்.
பானுமதி “பால்ஹிகரே, நீங்கள் வந்த செய்தியை சொல்லவில்லை” என்றாள். பூரிசிரவஸ் உடல் மெல்ல அதிர்ந்துகொண்டிருந்தது. அவன் சிவந்த விழிகளைத் தூக்கி “ஆம், இளவரசரின் செய்தி” என்றான். ”எனக்கா?” என்றாள் காந்தாரி. “இல்லை இளைய யாதவருக்கும் யாதவப்பேரரசிக்கும்” என்றான் பூரிசிரவஸ். “இளைய அரசி இத்தனைநேரம் இங்குதான் இருந்தாள். இவனுடன் வந்தாள். என் மணமகள்களைக் கண்டு திகைத்தே போனாள்.” காந்தாரி உடல் குலுங்கச் சிரித்து “நான் அவளிடம் சொன்னேன். உண்மையிலேயே அறுபத்தெட்டுபேர் இருக்கிறார்கள் குந்தி. நான் ஆடிகளை வைத்து மாயம் காட்டவில்லை என்று. சிரித்துவிட்டாள்” என்றாள்.
“ஒவ்வொருத்தியாக அறிமுகம் செய்தேன். பாரதவர்ஷத்தில் இத்தனை அழகிகளா என்றாள். ஏன் குந்தி என்றேன். என் இளையவன் பெண்களைப் பார்த்துமுடிப்பதற்குள் வயதாகிவிடுமே என்றாள். சிரித்துக்கொண்டே இருந்தோம். அவளுடன் இணைந்து அத்தனைதூரம் சிரிக்க என்னால் முடியும் என்று நேற்று சொல்லியிருந்தால்கூட நம்பியிருக்கமாட்டேன். அவளால் அத்தனை இனிதாகப் பழகமுடியும் என்பதும் என்னால் எண்ணிப்பார்க்கக் கூட முடியாததாகவே இருந்தது” காந்தாரி சொன்னாள். “அவளுக்கு என் மேலிருந்த வஞ்சமெல்லாம் வயதானபோது கரைந்துவிட்டது என்று நினைக்கிறேன்.”
”வஞ்சமா?” என்று பூரிசிரவஸ் கேட்டான். “நீ அதை முழுதாகப் புரிந்துகொள்ளமுடியாது இளையோனே. அடைந்தவர்களை அடையாதவர்கள் ஒருபோதும் மன்னிப்பதில்லை” என்ற காந்தாரி “அவளுக்கா செய்தி? மந்தணமா?” என்றாள். “இல்லை. முறைமைச்செய்திதான்” என்றான் பூரிசிரவஸ். “நாளை மறுநாள் சுக்லபட்ச சதுர்த்தி நாளில் பேரவை கூடுகிறது. அஸ்தினபுரியின் இளவரசிகளுக்கு வாழ்த்தளிக்க வந்துள்ள யாதவ அரசிக்கும் இளைய யாதவருக்கும் அஸ்தினபுரியின் அரசவையும் குலச்சபையும் இணைந்து ஒரு பெருவரவேற்பை அளிக்கும். அதையொட்டி களியாட்டு மேலும் தொடரும். அதற்கான முறையான அழைப்பை சௌனகர் அளிப்பார். அதுதான் செய்தி.”
“மிகநல்ல செய்தி. மிகநன்று” என்று காந்தாரி சொன்னாள். “ஒருவழியாக என் மைந்தனுக்கும் அரசனுக்குரிய முதிர்ச்சி வந்துள்ளது. இந்த நிகழ்வில் அனைத்து ஐயங்களும் அகலவேண்டும். நதிகள் கலப்பதுபோல இருகுடிகளும் கலக்கவேண்டும். அரசவையும் குலச்சபையும் கூடி யாதவ அரசியை வரவேற்பது ஒரு சிறந்த தொடக்கம்…” துச்சளையை நோக்கி “எங்கே அந்த பரிசுகள்?” என்றாள். துச்சளை “இங்கே இருக்கின்றன” என்று ஒரு பெரிய சந்தனப்பெட்டியை காட்டினாள். “அவள் கொண்டுவந்த பரிசுகள். இவற்றை அவையில் வைப்போம். குடிமூத்தார் முன்னால் அவள் என் மகளிரை வாழ்த்தட்டும்… என்ன சொல்கிறாய் யாதவனே?”
“அன்னை தன் மகளிரை வாழ்த்த அவை எதற்கு? ஆனால் அவர்கள் இனிமேல் இன்னொருநாட்டுக்கு பேரரசி என்பதனால்தான் கணிகர் அம்முடிவை எடுத்திருக்கக் கூடும். அது முறைமைசார்ந்ததுதான். நன்று.” பூரிசிரவஸ் அவன் ஒரு சொல் மிச்சமில்லாமல் அனைத்தையும் புரிந்துகொண்டதை உணர்ந்தான். அவன் விழிகளை நோக்க அவனால் முடியவில்லை. சற்றுமுன் மூடச்சிறுவனாகத் தோற்றமளித்தவன். படபடப்புடன் காந்தாரியை நோக்கி “இளவரசர் இம்முடிவை எடுத்தது தங்கள் விழைவால்தான் பேரரசி. அஸ்தினபுரியில் இதற்கிணையான நாட்கள் இதற்கு முன் வந்ததில்லை. இத்தனை மணநிகழ்வுகள்…” என்றான்.
அசலை ”அவையில் அத்தனை மணமகள்களுக்கும் யாதவப் பேரரசி தனித்தனியாக மங்கலப்பொட்டிட்டு மலர்சூட்டி மஞ்சளரிசி தூவி பரிசளித்து வாழ்த்துவார்கள் இல்லையா?” என்றாள். “அதெப்படி…” என்று பூரிசிரவஸ் சொல்லவந்ததுமே அவள் கண்களை சந்தித்து அதிலிருந்த சிரிப்பைக் கண்டு தானும் சிரித்துவிட்டான். ”அய்யோடி, நீ என்ன பேரரசியை கொல்லவா திட்டமிடுகிறாய்?” என்று துச்சளை கூவ பெண்கள் வெடித்துச்சிரித்தனர். காந்தாரியும் சிரித்தபடி “ஆமாம், நாளை வருபவர்களையும் சேர்த்தால் எண்பத்தெட்டுபேர் அல்லவா?” என்றாள்.
“இன்று மாலை கொற்றவை ஆலயத்தில் பூசெய்கை இருக்கிறது. அதற்கும் யாதவ அன்னையை அழைத்திருக்கிறேன்” என்று பானுமதி சொன்னாள். “அவர்களும் வருவதாக சொல்லியிருக்கிறார்கள். கிருஷ்ணா நீயும் வருவாய் அல்லவா?” யாரோ ஒரு பெண் “அவருக்கென்ன? எங்கு பெண்களிருந்தாலும் அங்கே இருப்பார்” என்றாள். பெண்கள் சிரிக்க கிருஷ்ணன் “முத்ரை, எங்கு அவியுண்டோ அங்கு தேவர்கள் உண்டு என்றல்லவா வேதம் சொல்கிறது?” என்றான். மீண்டும் சிரிப்பு.
ஒருத்தி “கோமதிநதியை ஏன் துவாரகைக்கு கொண்டுவருகிறீர்கள் என்று இவள் சொன்னாள்” என்று சொல்ல அவளருகே இருந்தவள் “அய்யய்யோ, நான் சொல்லவில்லை. நான் ஒன்றுமே சொல்லவில்லை” என்றாள். “என்ன சொன்னாய் மாயை?” என்றான் கிருஷ்ணன். “நான் ஒன்றுமே சொல்லவில்லை கண்ணா.” “பிரபை, நீயே சொல்” அவள் “சொல்லமாட்டேன்” என்றாள்.
பூரிசிரவஸ்ஸால் அங்கே இருக்கமுடியவில்லை. அவன் விழிகளை சந்தித்த பானுமதி “இளவரசே, நீங்கள் சற்று வரமுடியுமா? என்னென்ன செய்யலாமென்று பேசுவோம்” என்றாள். பூரிசிரவஸ் எழுந்து கிருஷ்ணனுக்கு தலைவணங்கி விடைபெற்று அவளுடன் அடுத்த அறைக்குச் சென்றான். அவள் ஒரு பீடத்தில் அமர்ந்தபின் அவனிடம் அமரும்படி கைகாட்டி “முறைமைகளுக்காக யாதவ அரசியை நாம் நமது பேரரசியாக எண்ண வேண்டுமா இல்லை, பிறிதொரு நாட்டின் அரசியென எண்ணவேண்டுமா?” என்றாள். பூரிசிரவஸ் “இன்னும் அஸ்தினபுரி இருநாடாக பிரியவில்லை. ஆகவே அவர் பிறிதொரு நாட்டின் அரசி இல்லை” என்றான்.
“ஆம், நானும் அவ்வாறே எண்ணினேன். ஆனால் யாதவர் இன்னொருநாட்டின் அரசர். ஆகவே நாம் அவரை விருந்தினராகவே கொள்ளவேண்டும். அவருக்கு முறைமைப்படி நீங்கள் வரவேற்பளிப்பீர்கள். யாதவ அரசியை முதலில் மகளிர் அறைக்குக் கொண்டுவந்து அங்கிருந்து அன்னையுடன் சேர்த்து அவைக்குக் கொண்டுவருவோம். விருந்தினருக்குரிய பாதை அவருக்குத் தேவையில்லை” என்றாள் பானுமதி. அவள் அதை வெறுமனே பேசவேண்டுமே என்பதற்காகத்தான் சொல்கிறாள் என்று பூரிசிரவஸ் எண்ணினான்.
அவள் ஒரு சுவடியை எடுத்து “இதில் முறைமைகளை எழுதியிருக்கிறேன். வாசித்து சொல்லுங்கள், சரிதானா என்று… இங்கே இனிமேல் முறைமைகளை முழுமையாகவே கடைப்பிடித்தாகவேண்டியிருக்கிறது. இளவரசிகளின் வயதோ அவர்களின் அரசோ எதுவானாலும் அவர்களின் கணவர்களின் வயதின் வரிசைப்படியே அவர்கள் அவைக்கு அழைக்கப்படுவார்கள்” என்றாள். பூரிசிரவஸ் ஓலையை வாங்கிக்கொண்டான்.
அவன் குனிந்து எழுதத் தொடங்கியதுமே அவள் மெல்லிய குரலில் “பட்டத்து இளவரசருக்கு தெரியுமா? அவர் அனுமதிக்கவில்லையா?” என்றாள். அவள் குரலில் இருந்தே அவள் கேட்கவருவதென்ன என்று பூரிசிரவஸ் புரிந்துகொண்டான். கைகள் நடுங்க “நான்…” என்றான். “துச்சளையைப்பற்றித்தான் கேட்டேன்” என்று அவள் சொன்னாள். அவன் ஓலையை பீடத்தில் வைத்துவிட்டு “தெரியாது” என்றான். உடனே “தாங்கள் எண்ணுவது போல ஏதுமில்லை இளவரசி. உண்மையில்…” என தொடங்கினான்.
“நீங்கள் விரும்பினீர்கள். அவளும் விரும்பினாள்…” என்று தொடங்க பூரிசிரவஸ் பதற்றத்துடன் “உண்மையில் அவர்கள்தான். நான் ஒன்றும்…” என்றான். பானுமதி “சரி, அவள் விரும்பினாள். நீங்களும் அதை ஏற்றுக்கொண்டீர்கள். அதை அவரிடம் சொல்லியிருக்கலாமே” என்றாள். ”இல்லை, நான்…” என்ற பூரிசிரவஸ் தலைகுனிந்து “சொல்வதற்கு என்னால் முடியவில்லை…” என்றான்.
“ஏன்?” என்றாள். “நான் மலைமகன். இளவரசி என்றால்…” பானுமதி “நீங்கள் உங்கள் விழைவைச் சொன்னால் அதை பட்டத்து இளவரசர் மறுப்பார் என எண்ணுகிறீர்களா?” என்றாள். பூரிசிரவஸ் உள்ளம் பொங்க பேசாமலிருந்தான். “இதோ இப்போது சொன்னால்கூட சிந்துமன்னரை வரவேண்டாம் என்று சொல்லிவிடக்கூடியவர் அவர். அவர் உள்ளத்தில் நீங்கள் கொண்டிருக்கும் இடமென்ன என்று நீங்கள் அறிந்திருக்கவில்லை என்பதே வியப்பாக உள்ளது பால்ஹிகரே.”
“தெரியும். அதனால்தான் சொல்லவில்லை” என்றான் பூரிசிரவஸ். “அந்தப் பேரன்பை நான் பயன்படுத்திக்கொள்ளலாகாது. அதற்கு நான் ஏதேனும் கைமாறு செய்யவேண்டுமென்றால் எதுவுமே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளக்கூடாது. என் வாழ்வையும் உயிரையும் அவருக்கு முழுதாக அளிக்கவேண்டும். அதுவே நான் செய்யக்கூடுவது.” பானுமதி “மடமை” என்றாள். “இதை அறிந்தால் அவர் உள்ளம் எத்தனை வருந்தும் என என்னால் உணரமுடிகிறது. உம்மை இத்தனை மெல்லுணர்வு கொண்ட கோழை என்று நினைக்கவில்லை.”
பூரிசிரவஸ் உதடுகளை இறுக்கிக்கொண்டான். கண்களில் ஊறிய நீரை அடக்கமுடிந்தது. மேலே ஒரு சொல் பேசினாலும் அழுதுவிடுவோம் என்று அறிந்தான். ”சரி, அதை ஊழ் என எண்ணி கடக்க முயலுங்கள். இத்தருணம் என எண்ணாமல் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் அகத்தில் கொண்டுவந்து பார்த்தால் மிகச்சிறியதாகவே அது தென்படும்… மறப்பதையும் கடப்பதையும்போல இவ்வுலகில் எளியது எதுவும் இல்லை.”
அவளுடைய குரலில் அவன் எந்தப்பெண்குரலிலும் அறிந்திராத இனிமை இருந்தது. “காதலை இழந்த ஆண்கள் இறுதிவரை உள்ளூர சற்று கனிவுடன் இருப்பார்கள் என்று முதுசெவிலியர் சொல்லி கேட்டிருக்கிறேன். உங்களை மணப்பவள் அதற்காகவே உங்களை விரும்புவாள்.” அவன் நிமிர்ந்து அவள் சிரிப்பைப் பார்த்து முகம் மலர்ந்து “ஏளனம் செய்கிறீர்கள்” என்றான். “இல்லை, உண்மையாகவே சொல்கிறேன்” என்றாள்.
அவள் முகமும் சிரிப்பும் கனிவுடனிருந்தன. அந்தக்கனிவு அவள் உடலெங்குமிருந்தது. பெண்மையின் குழைவும் நிறைவும் மட்டுமே கொண்டவள் போல. திரண்ட வெண்ணிறமேனி. பெரிய தோள்கள். ஆனால் கழுத்தும் உதடுகளும் மிகமெல்லியவை. அதனால்தான் அந்த இன்குரலா? அவளுடலில் எலும்புகள் கூட கடினமாக இருக்காது என எண்ணிக்கொண்டதும் அவன் சிரித்து “உங்கள் குரல் மிக இனிமையானது இளவரசி. அது ஏன் என்று இப்போது தெரிகிறது” என்றான்.
“நான் முறைப்படி இசை கற்றவள். நன்றாகவே பாடுவேன்” என்றாள் பானுமதி. “குரலை பயிற்றுவித்தால் எவரும் பாடமுடியும். பெரும்பாலான பாடகிகள் பேசும்போது இனிமையாக இருப்பதில்லை” என்றான் பூரிசிரவஸ். “புகழப்போகிறீர்கள். புகழுங்கள். ஓர் அரசியாக நான் புகழுரைகளைக் கேட்டு பழகவேண்டுமல்லவா?” என்று அவள் சிரித்தாள்.
பூரிசிரவஸ் “புகழுரை அல்ல. உண்மையாகவே உணர்ந்ததை சொல்கிறேன். உங்கள் உள்ளத்தில் அனைவர் மேலும் கருணை நிறைந்திருக்கிறது” என்றான். அவன் உள்ளம் பொங்கியது. கட்டுப்படுத்திச் சொல்லவேண்டுமென்ற தன்னுணர்வை இழந்து “சக்கரவர்த்தினி என்னும்போது ஏதேதோ சொல்கிறார்கள். நிமிர்வும் அறிவும் முழுதாட்சி செய்ய முடியாது. அனைத்தையும் அணைக்கும் கருணையின் கையிலேயே செங்கோல் அசையாது நிற்கமுடியும். நீங்கள் உங்கள் கைநிழல் அணையும் அனைவருக்கும் அன்னை” என்றான்.
பானுமதி உதடுகளைக் கூட்டி சிரித்து உடலை மெல்லக் குறுக்கினாள். புகழுரை கேட்டு அவள் இயல்பாக மகிழ்ந்ததுகூட அவளுடைய இயல்புக்கேற்ப இனிதாகவே தெரிந்தது. “நீங்கள் என்மேல் கருணையுடன் இருக்கிறீர்கள் என்பதே என் துயரை போக்கிவிட்டது” என்றான். “போதும்” என்று அவள் கையைக் காட்டி “ஓர் உறவு உடையும்போது ஆண்கள் பெரிதும் துயரமடைவது அதை பிறர் எப்படி கொள்வார்கள் என்று எண்ணிக்கொள்வதனால்தான்” என்றாள். “ஆனால் பெண்கள் அந்த ஆண்களை விரும்பவே செய்வார்கள். அதைத்தான் சொல்லவந்தேன்” என்றாள்.
“எப்படி அறிந்தீர்கள்?” என்றான் பூரிசிரவஸ். “அறிவதற்கென்ன அது பிரம்மமா? பெண்கள் கூடிய அவையில் ஓர் ஆண் ஒரு பெண்ணை மட்டும் பார்க்காதபடி அமர்ந்துகொண்டான் என்றால் அதற்கு என்ன பொருள்? அப்போதே தெரிந்துவிட்டது. உங்கள் உள்ளம் கலங்கியதை கண்களில் பார்த்ததும் உறுதியும் கொண்டேன்.” பூரிசிரவஸ் “பிறர் அறிவது கூச்சமளிப்பதுதான். ஆனால் நீங்கள் அறிந்தது ஆறுதலையே தருகிறது” என்றான்.
“அவளை வெறுக்கவேண்டாம்” என்றாள் பானுமதி. பூரிசிரவஸ் “நான் வெறுப்பேன் என எப்படி நினைக்கிறீர்கள்?” என்றான். “அது ஆண்களின் வழி. அந்தப்பெண்ணை வெறுக்கத்தொடங்கி அவ்வெறுப்பு வழியாகவே அவர்கள் வெளியேறிச்செல்வார்கள். ஆனால் அப்படி வெறுப்பை நிறைத்துக்கொண்டால் உங்கள் வாழ்நாளெல்லாம் ஆழ்ந்த கசப்பொன்றை சுமந்தலைவீர்கள். உங்கள் வாழ்க்கையின் இனிமையை இழப்பீர்கள். உங்களை நம்பிவரும் பெண்ணுக்கும் அந்தக் கசப்பையே பகிர்ந்தளிப்பீர்கள்.”
“இல்லை, எனக்கு கசப்பேதும் இல்லை” என்றான். “நன்று” என்று அவள் புன்னகைசெய்தாள். “ஆனால் உங்கள் நெஞ்சுக்குள் ஓடுவதை நான் அறிகிறேன். அவள் உங்களை எப்படி எளிதில் மறந்தாள் என்ற வியப்பு. அவள் மணக்கவிருப்பவரை அவள் உண்மையிலேயே விரும்புவதைக்கண்டு சினம்.” பூரிசிரவஸ் “இல்லை” என்று தொடங்க “ஆம்” என்றாள் அவள். “என்னால் அதை மிக அண்மையிலென பார்க்கமுடிகிறது. அவள் உங்களை விழைந்தது எத்தனை உண்மையோ அத்தனை உண்மை இப்போது ஜயத்ரதரை விரும்புவதும். பெண்களில் உள்ளத்துள் இருப்பது தன் குழந்தைக்குத் தந்தையாக மாறி கனியும் ஒரு முகமற்ற காதலன் மட்டுமே.”
“ஆகவே ஒரு முகத்தை அழித்து இன்னொன்றை வைக்க அவர்களால் எளிதில் முடியும்” என்றாள் பானுமதி. “அக்காதலுக்கு தடையாக இருப்பதனால் உங்களை அவள் ஏளனத்துக்குரியவராக மாற்றி மெல்லமெல்ல சிற்றுருவமாக ஆக்கிக்கொள்வாள். இன்று அதைத்தான் துச்சளை அவையில் செய்தாள். அது அவள் கொழுநனின் குருதி அவளுக்குள் முளைப்பதுவரைதான். அதன்பின் நீங்கள் மீண்டு வருவீர்கள். அவளுடைய இனிய இறந்தகாலத்தின் பகுதியாக மாறுவீர்கள். தாய்மையின் சுமையை இறக்கிவைத்து அவள் வந்து இளைப்பாறவிரும்பும் பகற்கனவில் நீங்கள் வாழ்வீர்கள்.” உதட்டை மடித்துச் சிரித்து “அங்கே உங்களுக்கு என்றும் இளமைதான்” என்றாள்.
பூரிசிரவஸ் புன்னகைத்து “நன்று” என்றான். “அவ்வளவுதான். மிகமிக எளிய உயிர்கள். ஆணும் பெண்ணும். மிகமிக பழகிப்போன நாடகம். அதைமட்டும் உணர்ந்துகொண்டால் சினமும் வஞ்சமும் நெஞ்சில் எஞ்சியிருக்காது. இனிமை மட்டும்தான். அதைத்தான் இன்று கண்ணனின் இசையில் கேட்டுக்கொண்டிருந்தேன்.” பூரிசிரவஸ் சற்றுநேரம் சாளரத்தை நோக்கியபடி அமர்ந்திருந்தான். தன் முகம் மலர்ந்திருப்பதை உணர்ந்து அவளை நோக்கினான். “ஆயிரம் வயதான மூதன்னை வந்து சொன்னது போலிருக்கிறது இளவரசி” என்றான். “அய்யோ, எனக்கு அத்தனை வயது ஆகவில்லை” என்றாள் அவள்.
சிரித்துக்கொண்டே “நான் யாதவ அரசியை பார்க்கவேண்டும்” என்று பூரிசிரவஸ் எழுந்தான். அவள் “சென்று வருக! கொற்றவை பூசைக்கு அவர் கிளம்பவேண்டும். அதை அவருக்கு நினைவூட்டுக!” என்றாள். அவன் தலைவணங்கி விடைபெற்று வெளியே வந்தபோது மீண்டும் குழலிசை தொடங்கியிருந்தது. அதே சொல். ஒற்றைச் சொல்.