வெள்ளையானையும் மீட்கப்பட்ட கப்பலும்

salvage_5_3267613b

மரியாதைக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். கடந்த வருட இறுதியில் வெள்ளையானை படித்ததும் அதன் தொடர்ச்சியாய் சிங்கை நூலகத்தில் திரு. ராயின் The Great hedge of India படித்தேன். வரலாறு என்பது நான் இதுவரை படித்தது அல்ல. எந்த உண்மையும் அவ்வளவு எளிதில் நம் கவனத்திற்கு வருவதில்லை என ஏக்கமாக இருந்தது. எம்.என். ராய், கோஸாம்பி, ராமச்சந்திர குகா புத்தகங்களுடன் Mark Lindley, எழுதிய J.C. Kumarappa: Mahatma Gandhi’s Economist ஆகியவற்றை வாசிக்கத் தொடங்கியுள்ளேன்.

பொருத்தமான நேரத்தில் “1942 ஆம் ஆண்டு மும்பையிலிருந்து இங்கிலாந்திற்கு 50 மில்லியன் மதிப்புள்ள வெள்ளி நாணயங்களை ஏற்றிச் செல்லும்போது கடலில் மூழ்கிய கப்பல் மீட்கப்பட்டது” என்ற செய்தியும் வெளியாகியுள்ளது. பெரிய விவாதமாக இது மாறும் என எதிர்பார்த்தேன் அப்படி எதுவும் நடக்கவில்லை. நடந்தால்தான் ஆச்சரியம். உங்களோடு பகிர்ந்து கொள்ளவிரும்புகிறேன்.

மீட்கப்பட்ட ஒவ்வொரு நாணயமும் நம் மூதாதையரின் குருதி அல்லவா? இதுபோல இரு நூற்றாண்டிற்கும் மேலான ஆங்கிலேய ஆட்சியில் எத்தனை கப்பல்களில் நமது செல்வம் கடத்தப்பட்டிருக்கும் என நினைக்கும்போது வருத்தமாயிருக்கிறது.

தொடர்புடைய பத்திரிகைச் செய்தி: http://www.telegraph.co.uk/news/worldnews/africaandindianocean/sainthelena/11536661/British-salvage-boat-recovers-treasure-from-wreck-of-SS-City-of-Cairo.html

http://edition.cnn.com/2015/04/15/europe/world-war-ii-shipwreck-silver-recovered/
அன்புடன்,
BALA.R
சிங்கப்பூர்.

அன்புள்ள பாலா

பொதுவாக இந்த ‘நம் செல்வம் கொள்ளை போனது’ என்பதில் எனக்கு முழுமையான உடன்பாடு இல்லை. கொள்ளைபோனது உண்மை. அது நமது சொந்த இழிவினால் என்பதும் உண்மை

ஆனால் சென்ற காலகட்டத்தில் இங்கே நிகழ்ந்தது என்ன? அடிமட்டத்தில் இருந்து சுரண்டப்பட்டு செல்வம் அரசுகளாக குவிக்கப்பட்டது. அரசுகள் போரிட்டுக்கொள்ள அந்தச் செல்வம் அழிந்துகொண்டே இருந்தது. எத்தனை நகரங்கள் மீண்டும் மீண்டும் கொளுத்தப்பட்டன. எத்தனை கோட்டைகள் அழிககப்பட்டன!

இந்த பெரும் செல்வம் இரு பெருநகரங்களாக ஆகி இங்கேயே இரண்டு ஆட்சியாளர்கள் போரிட்டுக்கொண்டதனால் முழுமையாக அழிந்தால் பரவாயில்லை என்று சொல்லமுடியுமா என்ன?

ஜெ

வெள்ளையானை விமர்சனங்கள்

முந்தைய கட்டுரைதெரளி
அடுத்த கட்டுரைசுஜாதா விருதுகள்