சாங்கிய யோகம் (26 – 38) : தன்னறம் என்னும் நடைமுறை நுட்பம்

கீதை

‘மனிதன் நானே உயர்ந்தவன் என்று ஆணவம் கொண்டதைக் கண்ட இயற்கை வலியைப் படைத்தது. உடலை வென்ற வலி ஆணவம் கொண்டு கொக்கரித்தபோது இயற்கை தூக்கத்தைப் படைத்தது. தூக்கத்தின் ஆணவத்தை வெல்ல மரணத்தை படைத்தாகவேண்டியிருந்தது இயற்கைக்கு. மரணம் கொக்கரித்தபோது வேறுவழியில்லாமல் இயற்கை காலத்தைப் படைத்தது. காலத்த்தின் கர்வம் அடக்க கடைசியில் முடிவிலியைப் படைத்தது’ கல்பற்றா நாராயணன் ஒருமுறை அவர் வாசித்த இவ்வரிகளைச் சொன்னார்.

”பின்னர் முடிவிலியின் ஆணவத்தை அடக்க முடிவிலி என்ற சொல்லைப் படைத்தது இயற்கை”என்று நான் வேடிக்கையாகச் சொன்னேன்.

அடிப்படைவினாக்கள் அனைத்தும் முடிவிலி நோக்கிச் சென்று முட்டி நின்றுவிடுகின்றன.நாம் அவற்றை கருத்துருவங்களாக ஆக்கி சமாதானம்செய்துகொள்கிறோம். கீதை ஒரு தத்துவ நூலாக உருவாக்கும் அடிபப்டைக்கேள்விகள் அதில் மொழி வடிவில் உள்ளன. திரும்பவும் அவற்றை மொழியில் இருந்து அனுபவமாக ஆக்கவில்லை என்றால் நமக்குக் கிடைப்பவை சில சொற்களே.அனுபவ உண்மைகளை கருத்துருக்களாகக் கொண்டேமென்றால் அதைக் குறுக்குகிறோம். கருத்துகளைச் சொற்களாகக் கண்டோமென்றால் மேலும் குறுக்குகிறோம் . இந்தப் பிழை நிகழாமல் நம்மை நாம் காத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது

தத்துவப்பயிற்சி அனேகமாக இல்லாத ஒருவனாக நான் நித்ய சைதன்ய யதியை அணுகிய நாட்களில் மண்டையில் அடிபடுவதுபோல அவரால் சுட்டிக்காட்டப்பட்டு  பல அடிபப்டைப்பாடங்களைக் கற்றேன் அவற்றில் முதலாவது இது. உதாரணமாக இதைச் சொல்லலாம். ஆத்மா என்ற சொல் காதில் விழுந்ததுமே இந்த நாள் வரை ஆத்மா என்ற சொல் சார்ந்து நாம் என்னென்ன அறிந்தோமோ அவையெல்லாம் சேர்ந்து நம் மனதில் எழுந்து ஒரு பிம்பம் உருவாகிறது. செத்துப்போன பாட்டியின் ஆத்மா வானத்தில் இருக்கிறது என்ற கதை முதல் புராணங்கள் ,சினிமாக்கள் வரை…அதன் பின் நாம் வாசிப்பதும் சிந்திப்பதும் விவாதிப்பதும்  நமக்குரிய அந்தப் பொருளை மட்டும் அச்சொல்லுக்கு அளித்துக்கொண்டுதான்.

இந்த விவாதத்தில் என்ன பொருள் அளிக்கப்பட்டுள்ளது, அதிலிருந்து நாம் பெறச்சாத்தியமான ஆகசிறந்த பொருள் என்ன என்பதே நம் அணுகுமுறையாக இருக்க வேண்டும். அது சாக்ரடீஸாக இருந்தாலும் கண்ணனாக இருந்தாலும். ஆத்ம, முக்தி, பரம்பொருள் எல்லாமே கருத்துருக்களாக,சொற்களாக,  நமக்குள் செல்லுமென்றால் அவை நம்மை தீராத விவாதத்துக்குள் மட்டுமே கொண்டுசென்று செலுத்தும். அவை எவ்வகையான அனுபவ அறிதல்கள் என்று கண்டு அணுகுவதுதான் சிறந்த வழிமுறை. பிரபஞ்ச இருப்பு தனிமனித இருப்பு இரண்டையும் இணைக்கும் ஒரு பொது தத்துவத்துக்கான தேடல் ஆத்மா என்ற உருவகத்தை உருவாக்கியது. பிரபஞ்சசாரமான ஒன்றையே மனித சாரமாகவும் காண்பது அந்த அணுகுமுறை. அந்த கருதுகோளின் சாத்தியங்களை சாங்கியத்தில், அதாவது நடைமுறைத்தளம் சார்ந்து,  அணுகுகிறது இந்த அத்தியாயம். இங்கு அளிக்கப்பட்டுள்ள அர்த்தம் கீதையின் விவாதத்தில் வளர்ந்து உருமாறுவதை பின்னர் காணமுடியும்.

 26. ஆத்மா
எப்போதும் பிறந்து
எப்போதும் இறப்பது என
எண்ணினால் கூட
திண்தோள் கொண்டவனே
இவ்வண்ணம் வருந்த ஏதுமில்லை

27. பிறந்தவன் இறப்பதும்
இறந்தவன் பிறப்பதும்
உறுதி
தவிர்க்க முடியாத
இதில்
நீ வருந்துவது
பொருத்தமன்று. 

28. பாரதனே,
உடல்கள்
அறியப்படாமையிலிருந்து
உருவாகிவந்தவை.
அறியப்படாமைக்கே செல்கின்றன
நடுவே தென்படுகின்றவை ஆகின்றன
இதில்
எதற்கு துயரம்?

29. ஒருவன்
ஆத்மாவை
விந்தைப் பொருளென எண்ணுகிறான்
பிறிதொருவனோ
விந்தையென்று கூறுகிறான்
பிறிதும் ஒருவன்
விந்தையென்று கேட்கிறான்
யாருமே இதை
அறிவதில்லை.

30. பாரதனே
எல்லா உடல்களிலும் உள்ள
உடல்ஆனவன்
எப்போதும்
அழிவற்றவனாகவே இருக்கிறான்
ஆகவே நீ
எதைப்பற்றியும்
துயரப்படத் தக்கதல்ல.

31. உன் தன்னறத்தை எண்ணினாலும்
அஞ்ச வேண்டியவனல்ல
மறவனுக்கு
அறப்போரை விட
புகழ்தருவதாகப்
பிறிதொன்று இல்லை

32. பார்த்தனே
மறவனுக்கு
தற்செயலாக வந்து சேர்வதும்
திறந்து கிடக்கும்
விண்ணக வாயிலுமான
இத்தகைய போரை

நல்லூழ் கொண்ட மறவர்களே
அடைய முடியும்

 .

33. ஆகவே
நீ இந்த அறப்போரை
செய்யவில்லை என்றால்
அறமும் புகழும் இழந்து
பாவத்தையே அடைவாய்.

34. இவ்வுலகோர் எல்லாம்
உன்னைப்பற்றி
தீங்காப்பழி கூறுவர்
புகழ் கொண்ட உனக்கு
அவச்சொற்களே மரணம்.

35. இப்போரின் தேர்வலர்
நீ அஞ்சிப் பின்வாங்கினாய் என்று
எண்ணுவர்
மதிப்பிற்குரியவனாக இருக்கும் நீ
இழிவடைவாய்

36. எதிரிகள் உன்
ஆற்றலை குறைத்து மதிப்பிட்டு
பேசத்தகாதனவற்றை
பேசுவர்
அச்சொற்களை விடக் கொடிதோ
இப்போரும் பழியும்?

37. குந்தியின் மகனே
போரில் இறந்தால்
சொர்க்கத்தை அடைவாய்
எனவே
போர்புரிய உறுதிபூண்டு
எழுக!

38. இப்போரில் நீ
இன்பதுன்பம்
வெற்றி தோல்வி
ஈட்டல் இழப்பு
அனைத்தையும் நிகராக எண்ணி
போரிடுக.
எப்பழியும் உன்னை அடையாது!

மீண்டும் கவனிக்கவும், இது நடைமுறை மெய்ஞானம் என்ற உணர்வுடன் வாசகர் படிக்க வேண்டிய பகுதி இது. இப்பகுதியில் கிருஷ்ணன் கூறுவது இத்தகையதோர் சந்தர்ப்பத்தில் ஒரு போர்மறவன் இயல்பாகவே சிந்திக்க வேண்டிய சிந்தனைகளையே .அவற்றுக்கு அன்றைய உயர்தத்துவம், நம்பிக்கைகள், வாழ்க்கை முறை சார்ந்து விளக்கம் கொடுக்கிறார் கண்ணன். ஆத்மாவின் அழிவின்மை உயர்தத்துவம். மறுபிறப்பு முதலிய நம்பிக்கைகள். குலமேன்மையும் வீரம் எனும் சுய அடையாளமும் வாழக்கை முறை சார்ந்தவை.

ஆகவேதான் முதலில் உயர்தத்துவ தளம் சார்ந்த ஒரு விளக்கத்தை அளித்த பிறகு சரி, இன்னொரு கோணத்தில் பார்த்தால் கூட என்று விளக்கத்தை மீண்டும் கொண்டு செல்கிறார் கிருஷ்ணன். ஆத்மா நிலையானது, அழியாதது கொல்லப்படாதது என்று கூறிவிட்டு அப்படிக் கொல்லப்படுவது என்றாலும் கூட அது மீண்டும் பிறக்கிறது மீண்டும் இறக்கிறது, இச்செயலில் முடிவின்மையில் மரணம் ஒர் எளிய நிகழ்வே என்கிறார். அதாவது ஆத்மா என்பதை ஒரு கருத்துக்கருவியாகவே இங்கே கிருஷ்ணன் விவாதத்துக்கு எடுத்துக் கொள்கிறார்.

அதன் தொடர்ச்சியாக அர்ஜுனன் என்ற போர் மறவனின் இயல்பே வீரம்தான் என்றும் வீரத்தை அவன் இழந்தால் பழியும் அவமதிப்பும் மட்டுமே விளையும் என்றும் எச்சரித்து, வென்றால் வெற்றியும் தோற்றால் புகழும் அவனைக் காத்திருக்கிறது என்று கூறுகிறார்.

தன்னறமும் பிறப்பும்
இதில் 31ஆவது பாடலில் வரும் வார்த்தையான ‘ஸ்வதர்ம’ என்பதை ‘தன்னறம்’ என்று நேரடியாக தமிழாக்கம் செய்துள்ளேன். பல மொழிபெயர்ப்புகளில் குலதர்மம், குலநெறி என்ற மொழிபெயர்ப்பு உள்ளது. ‘ஸ்வ’ அதாவது ‘சுய’ என்றால் அது குலத்தைக்குறிக்கக்கூடியதல்ல.  அறம் என்ற சொல்லுக்கு ‘வாழ்க்கை நெறி’ என்ற பொருள் உண்டு. துறவறம் இல்லறம் ஆகியவற்றில் பின்னொட்டாக உள்ள அறம் இது.

தன் உள்ளார்ந்த இயல்பால் ஒருவன் தெரிவு செய்யும் செயலே தன்னறம் என்று கூறலாம். சுயதர்மம் என்றும் இதை தமிழாக்கம் செய்யலாம். தன்னுடைய ஆளுமைக்கும் தன் அடிப்படை இச்சைகளுக்கும் ஏற்பவே ஒருவனின் மனநிலைகளும் செயல்பாடுகளும் அமைகின்றன. இதை எளிய உளவியல் தளத்தில் நின்று புரிந்து கொள்வதே போதும். எச்செயலில் தன் உள்ளார்ந்த ஆற்றல் முழுமையாக வெளிப்படுகிறது என்று ஒருவன் எண்ணுகிறானோ அதுவே அவனுடைய தன்னறம் ஆகும். அதில் ஈடுபட்டு, அதை வென்று, அதைக் கடந்து சென்றுதான் ஒருவன் தன் விடுதலையை அடைய இயலும். ஒருவன் போரை, பிறிதொருவன் வணிகத்தை, பிறிதொருவன் கல்வியை, பிறிதொருவன் தொழிலை, பிறிதொருவன் சேவையை தன்னறமாகக் கருதலாம்.

தன்னறம் எதுவென்று அறியாத ஒருவன் இருக்க இயலாது. மிக மிக இளம் வயதிலேயே ஒருவனின் ருசிகள் அதில் சென்று படிகின்றன. சூழலாலும் குலத்தாலும் கல்வியாலும் உருவாவது அல்ல இது. ஆனால் சூழலும் குலமும் கல்வியும் அதில்பெரும்பங்கு வகிக்கின்றன. நம் உள்ளார்ந்த ஒரு விரல்நுனி பல திசைகளிலும் துழாவித்துழாவித் தேடி தனக்குரியதை சுட்டிக்காட்டி விடுகிறது. என் அனுபவத்தில் எனக்கு எப்போது சுயநினைவு தொடங்குகிறதோ அன்றுமுதல் மொழியில், புனைவுலகில் மட்டுமே என் தன்னறத்தை நான் கண்டிருக்கிறேன்.வேறு எந்தச்செயலையும் நான் என் செயலாக எண்ணியதேயில்லை. வேறு எத்துறையிலும் வெற்றியும் புகழும் செல்வமும் இருக்குமென்ற சஞ்சலத்தையும் அடைந்ததில்லை.

விளைவாக என் வாழ்வில் இன்றுவரை எந்நிலையிலும் அலுப்பும் சலுப்பும் உருவாவதில்லை. நான் ஓய்ந்து இருப்பதே இல்லை. ஆகவே எனக்கு வாழ்வு ஒரு தொடர்ந்த களியாட்டமாக உள்ளது. என் வாழ்வு குறித்து எனக்கு ஒரு நிறைவு உணர்வு உள்ளது. என் தன்னறத்தின் மையத்தில் என் அக ஆற்றலை முழுக்கக் குவிக்கிறேன். திசைத் தடுமாற்றங்கள் இல்லை. ஆகவே இழப்புகள் இல்லை. இந்தத் தெளிவுக்கு தடுமாற்றம் நிறைந்து அலைந்து திரிந்த நாட்களில் நான் மீண்டும் மீண்டும் வாசித்த கீதையே முதற்காரணம். இந்நூலை எழுதுவது முதன்மையாக இத்தகுதியினால்தான்.

கீதை குறிப்பிடும் இந்த ‘ஸ்வதர்மம்’ (தன்னறம்) என்ற சொல் இந்தியக் கருத்துலக வரலாற்றில் மீண்டும் மீண்டும் திரித்தும் மழுப்பியும் பொருள் தரப்பட்ட ஒன்று என்று நித்ய சைதன்ய யதி தன் உரையில் குறிப்பிடுகிறார். சாதியவாதிகளின் மிகப் பெரிய ஆயுதமாக இது இருந்து வந்துள்ளது. கீதையின் ஒட்டுமொத்த வேதாந்த நோக்கு இவர்கள் கூறும் அர்த்தத்தை இவ்வார்த்தைக்கு அளிப்பதற்கு முற்றிலும் எதிரானதாக இருந்த போதிலும்கூட இன்று வரை இந்த அர்த்தப்படுத்தல் அளிக்கப்படுகிறது. மூலநூல்கள் மீது செலுத்தப்பட்ட இந்த வன்முறை கடந்த காலத்தில் நம் சமூகத்தில் உள்ள உயர்நிலை சக்திகள் பிறர் மீது செலுத்திய கடும் வன்முறைக்கும் சுரண்டலுக்கும் களம் அமைத்துத் தந்தது.

அதேபோல இன்று கீதையையே ஒட்டு மொத்தமாக நிராகரிக்கும் இடத்திற்கு இது பிறரைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. தெளிவான தர்க்கப்பூர்வமான வாசிப்பு என்பது இன்று ஒரு மாபெரும் பாரம்பரியத்தை அது புதைந்து கொண்டிருக்கும் வகுப்புவாதச் சேற்றிலிருந்து மீட்டெக்கும் பெரும் பணியாகவே பொருள்படும்.

நித்ய சைதன்ய யதி இதை விரிவாக ஆராய்கிறார். ஒரு மாமரத்தில் மாங்காயும் பலாமரத்தில் பலாப்பழமும் உருவாவது போல ஒருவனின் ஆளுமையில் இருந்தே அவனது சாதனைகளும் வேதனைகளும் விளைகின்றன. அவற்றை பிரித்துப் பார்ப்பது சாத்தியமல்ல என்று கூறுகிறார் நித்யா. தன் இயல்பு மூலம் ஒருவன் நாடும் செயலை அவன் செய்யும்போதே அவன் நிறைவடைகிறான், சமூகத்துக்கு உதவிகரமாகவும் அமைகிறான். ஸ்பானரை சுத்தியலாக பயன்படுத்தினால் ஸ்பானருக்கும் கேடு, வேலையும் நடக்காது.

மாமரத்தில் எதன் வேரிலும் இலையிலும் பூவிலும் எல்லாம் மாம்பழத்தில் உள்ள அதே ‘ரசம்’ (சாறு)தான் உள்ளது. மாம்பழத்தில் அது கனிந்திருக்கிறது. ஒருவனின் தன்னறம் அவனடைய சிந்தனையில் மட்டுமல்ல எல்லா இயல்பிலுமே இரண்டறக்கலந்திருக்கும். அவனுடைய அன்,பு காதல், அவன் தேடும் முக்தி அனைத்துமே அந்த அக இயல்பால் தீர்மானிக்கப்பட்டிருக்கும். உப்பிலிருந்து உப்புச்சுவையை எடுத்தால் எஞ்சுவது என்ன? அர்ஜுனனிடமிருந்து வீரத்தை விலக்கினாலும் அதுவே எஞ்சும். அவன் வீரன். ஆகவே ஞானமும் முக்தியும் கூட வீரம் மூலமே அவனுக்கு திறந்து கிடைக்கும் என்கிறார் கிருஷ்ணன்.

உலகமெங்கும் மனிதர்களை அவர்களில் இயல்புகளையொட்டி வகைவபிரிக்கும் ஒரு சிந்தனைப்போக்கு இருந்தபடியேதான் உள்ளது. மனிதனின் ஆதார இயல்புகள் பிறப்பிலேயே உருவாகி வருபவை என்ற புரிதல் எல்லா சமூகத்திலும் உள்ளது. இதை முற்றாக மறுப்பவர்கள் கூட இது ஒரு முக்கியமான கருத்துத்தரப்பு என்பதை மறுக்க மாட்டார்கள். நவீன கால பழக்கவியல் நிபுணர்கள் (Behaviourists) இக்கோட்பாட்டை மறுக்கக் கூடும். ஆனால் இன்றுவரை அவர்கள் விவாதித்து வருவது பிறவிப் பண்புகளை வலியுறுத்தும் நிபுணர்களிடம்தான். புகழ் பெற்ற ‘நாம்சாம்ஸ்கி-பியாகெட்’ விவாதத்தை இங்கே நினைவுகூரும்படி கோருகிறேன். மூளையியல் மற்றும் மொழியியல் நிபுணரான நாம் சோம்ஸ்கி சிந்தனையும் திறனும் பிறப்பிலேயே மூளையமைப்பில் உருவாகிவிடுகின்றன என்பதற்கு அழுத்தம் அளிக்கையில் பியாகெட் அதைமறுத்து சூழலும் பழக்கமும்தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது என்று வாதிடுகிறார்.

தன்னறம் என்பதை குடிப்பிறப்பு அளிக்கும் தொழில் என்றோ, பிறப்பின் அடிபப்டையில் சமூகம் கட்டாயப்படுத்தும் கடமைகள் என்றோ பொருள்தரவேண்டியதில்லை. கீதை என்னும் உயர்தத்துவ நூல் அந்த தளத்தைச் சார்ந்ததே அல்ல. தத்துவ ஆசிரியரான நித்ய சைத்தன்ய யதி மேலைச் சிந்தனையில் அறவியல் குறித்துச் சிந்தித்த இருவரை இங்கு குறிப்பிடுகிறார். ஒருவர் ஏறத்தாழ கீதையின் காலகட்டத்தைச் சேர்ந்தவரான அரிஸ்டாடில். இன்னொருவர் ஐரோப்பிய மறுமலர்ச்சியின் சிந்தனையாளரான இமானுவேல் கன்ட். இவ்விருவரடைய இரு கருதுகோள்களுடன் ஒப்பிட்டு இந்த விஷயம் குறித்து வாசகர்கள் விரிவாக சிந்திக்கலாம். இங்கு எளிய குறிப்பாக மட்டும் அதைக் கூறலாம்.

இரண்டு மேலைக்கோட்பாடுகள்

கீதையின் தன்னறம் என்ற கருத்துக்கு சமானமான இரு மேலைக்கோட்பாடுகளை நாம் இங்கே கவனிக்கலாம். ஒன்று அரிஸ்டாடில் முன்வைக்கும் நிகோமாகிய அறக்கோட்பாடு. இன்னொன்று இமானுவேல்காண்ட் முன்வைக்கும் தன்னியல்பூக்கம் (Catagorical Imperative)

நிகோமாகிய அறக்கோட்பாடு அரிஸ்டாடில் அவரது பிற்கால அறவியல் சிந்தனைகளின் போது முன்வைக்கப்பட்டது. மனித இயல்பு என்பது அறம் மற்றும் ஒழுக்கம் குறித்த எந்தச் சிந்தனைக்கும் அடிப்படையாக அமைவது என்று அரிஸ்டாடில் கூறுகிறார். ஒரு மனிதனின் இயல்புகள் அவனில் தொடர் செயல்பாடுகளாக மாறி மெல்ல பழக்கங்கள் ஆகின்றன. பழக்கம் மூலம் அவனுடைய ஆளுமை உருவாகிறது. ஒருவனுடைய இயல்பை எவ்வாறு அறிவது? 1. அவனுடைய ரசனை என்ன? 2. அவனுடைய தெரிவுகள் என்ன? என்ற இரு வினாக்களின் அடிப்படையில்தான்.

மனிதனின் அறவியல் சார்ந்த தேடல் மற்றும் நிறைவு குறித்து ஆராயும் நிகோமாக்கிய அறவியல் எல்லா மனிதர்களும் ஏதோ ஒரு வழியில் தங்கள் செயல்கள் மூலம் இன்பம், நிறைவு ஆகிய இரண்டையும்தான் தேடுகிறார்கள் என்கிறது. நிறைவு என்பது ஆளுமை முழுமையடைவதில் உள்ளது. அந்த முழுமை இரு அடிப்படைகளில் அமையும் என்பது அரிஸ்டாடிலின் கூற்று. ஒன்று ஒழுக்கம் இன்னொன்று ஞானம். ஒழுக்கம் என்பது ஒருவனுடைய பழக்க வழக்கங்களில் வெளிப்படக்கூடிய அவனுடைய தனித்தன்மையாகும். ஞானம் என்பது அகத்தையும் புறத்தையும் ஒருவன் அறியும்விதம் வழியாக உருவாகும் தன்னிலை அல்லது ஆளுமை.

ஒருவனுடைய ஒழுக்கம் என்பது அவனுடைய அறநோக்கு மற்றும் இச்சை என்ற இரு எல்லைகள் நடுவே உள்ள சமரசப் புள்ளி. அதாவது ஒழுக்கம் அதன் சிறந்த தளத்தில்கூட ஒரு நடுநிலை வழியாக மட்டுமே இருக்க இயலும். கடுமையான புலனடக்கமும் சரி கட்டற்ற போகமும் சரி ஒழுக்கமின்மையே. பொறுப்பற்ற துணிவும் சரி கோழைத்தனமும் சரி தீங்கே. வீரம் என்றால் பொறுப்பும், இடச்சூழல் சார்ந்த விவேகம் உடைய துணிவேயாகும். இவ்வாறு அடிப்படையில் மனித இயல்புகளை பலவாறாக வகுத்துக் கொண்டு அறம் மற்றும் ஒழுக்கத்தை நிலைநாட்டுவது குறித்து ஆராய்கிறார் அரிஸ்டாடில். ஆர்வமுள்ள வாசகர்கள் தன்னறம் என்ற கீதைக்கோட்பாட்டை நிகோமாகிய அறவியலுடன் இணைத்து விரிவாக வாசிக்கலாம்.

ஐரோப்பிய கருத்து முதல்வாத (Idealism) சிந்தனையின் நவீன கால முன்னோடிகளில் ஒருவராக கருதப்படும் இமானுவேல் கன்ட் தூய கரணிய ஞானம் (Pure Reason) சுதந்திர சிந்தனைக்கான விருப்புறுதி (Free will) ஆகிய கருத்துக்களை முன்வைத்தவர். நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு சமூக சிந்தனையை உருவகித்து தனிமனித ஞானம், தனிமனித விடுதலை ஆகிய கருத்துக்களை முற்றிலும் தடுத்து நிறுத்தியிருந்த மத்தியகால ஐரோப்பியக் கிறிஸ்தவத்தின் அடிப்படைகளை தகர்த்து நவீன ஐரோப்பாவை வடிவமைத்த மாபெரும் சிந்தனையாளர். இன்றும் ஐரோப்பாவை ஆளும் தத்துவக் கருத்துக்கள் இவை இரண்டே என்பதைக் காணலாம். ஐரோப்பிய சிந்தனையானது உண்மையை கண்டறிவதற்கு மனிதனுக்கு உள்ள உள்ளார்ந்த ஆற்றல், சுதந்திரமாகச் சிந்திப்பதற்குரிய தணிக்கவோ தடுக்கவோ இயலாத விருப்பமும் உறுதியும் ஆகியவற்றில் வேரூன்றியது என்று கூறலாம்.

கான்ட்டின் ‘தன்னியல்பூக்கம்’ என்பது அவரது அறக்கோட்பாடுகளில் அடிப்படையாக உள்ள ஒரு தரிசனமாகும். ஒரு மனிதன் இயல்பாகவே கடைப்பிடிக்கத்தக்க அறமானது வெளியில் இருந்து அவன் மீது ஏற்றப்பட்டதாக இருக்காது. அது அவனுள் இருந்தே இயல்பாக எழுவதாக இருக்கும் என்று கான்ட் கூறுவதாக சுருக்கிக் கூறலாம். இப்படி மனிதனின் உள்ளார்ந்த சாரத்தில் இருந்து எழும் அறமானது கண்டிப்பாக அனைத்து மானுடருக்கும் உரியதாக, உலகளாவியதாக,மட்டுமே இருக்க முடியும். எல்லா ஓழுக்க, அறநெறிகளும் மாற்ற முடியாதவையாகவும் அவசியமானவையாகவும் அடிப்படையானவையாகவும் காலாதீதமானவையாகவும் இருக்கவேண்டும். அவற்றைக் கடைப்பிடிப்பது மனிதர்களின் இயல்புக்கு மாறானதாக இருக்கலாகாது. இந்த இயற்கையான அறத்துடன் முரண்படாத படியே பிற ஒழுக்க விதிகளும் சட்டங்களும் அமைக்கப்படவேண்டும்.

உதாரணமாக இப்படிச் சொல்லலாம். என்னுடைய இயல்பில் எப்போதுமே நான் அறிந்தவற்றுக்கு அடுத்த கட்டத்தைப்பற்றி சிந்தனைசெய்யும் இயல்பு உண்டு. இது என்னுள் இருக்கும் தன்னியல்பான்ன உந்துதல். ஆகவே இது மானுட அடிப்படை. எப்ப்போதுமே மனிதகுலத்தில் இது இருந்துகொண்டிருக்கும். எந்த புறசக்தியும் இதைக் கற்பிக்க முடியாது. எந்த புறச்சக்தியும் இதை தடுத்துவிடவும் முடியாது. இதுவே என் தன்னறம். நான் உயிரோடிருக்கும் காலம் வரை தாண்டித்தாண்டிச் சிந்தனை செய்தபடியே இருப்பேன். அதிலேயே என் நிறைவை காண்பேன். அதன் மூலமே என் சமூகத்துக்குப் பங்களிப்பேன். ஒரு சர்வாதிகார நாடு அல்லது மதவெறி நாடு எனது இந்த இயல்பை தடுத்தால் நான் அழிவேன்.

இந்தக் கோட்பாட்டுக்கு பிளேட்டோ ஆத்மாவின் அடிபப்டை இயல்பு குறித்து கூறுவதுடன் உள்ள தொடர்பை நாம் கவனிக்க வேண்டும். ஆத்மாவின் அடிப்படை இயல்பு அது நன்மை, அழகு,மேன்மை ஆகியவற்றை  இயல்பாகவே நாடுவதில் வெளிப்படுகிறது என்கிறார் பிளேட்டோ. மனிதனின் தடுக்க இயலாத தன்னறம் என்பது கண்டிபாக மானுட குலத்துக்கு இன்றியமையாத ஒன்றாகவே இருக்க முடியும் என்கிறார் காண்ட். இருவருமே கருத்துமுதல்வாதிகளும் இலட்சியவாதிகளுமாவர்.

இவ்விரு அறக்கோட்பாடுகளையும் இங்கு நித்யா சுட்டிக்காட்டியமைக்கு இரு காரணங்கள் உண்டு. ஒன்று மனிதனின் உள்ளார்ந்த அடிப்படை இயல்பு என்பது அவனுடைய பழக்கவழக்கம், அறநோக்கு ஆகியவற்றைத் தீர்மானிப்பதோடு அவனுடைய விடுதலைக்கும் முழுமைக்கும் கூட காரணமாக அமைகிறது என்ற கருத்தாக்கமானது மானுடசிந்தனை உள்ள இடங்களில் எல்லாம் உள்ள ஒன்றாகும். இரண்டு மானுடனின் அக இயல்பு என்பது நிறையையும் விடுதலையையும் நோக்கியே செல்லும் தன்மை கொண்டுள்ளது என்ற நோக்கு கீதை மேலைச்சிந்தனை ஆகிய இரு சிந்தனைகளிலும் பொதிந்துள்ளது.

இவ்வாறு மேலைச்சிந்தனைகளில் சமானமான ஒட்டங்களை கண்டடைவது இந்நூலின் நோக்கம் அல்ல என்பதை இங்கு கூறிவிட வேண்டும். ஏனெனில் அது தொடர்ந்து விரிவாகச் செய்யத்தக்க ஒரு பெரும் பணி. கீதையை விட்டு வெகுவாக விலகிச்சென்றுவிடநேரும். ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக இது தேவையாகிறது. இந்திய சிந்தனைகள் அனைத்துமே ஒரு இனவாதச் சதியின் விளைவாக உருவான முட்டாள்தனமான கருத்துக்கள் என்று வாதிடும் ஒரு கும்பல் என்றுமே இந்தியாவில் உள்ளது. கீதையின் இந்தக் கருத்து குறித்து அப்படி பற்பல பக்கங்கள் எழுதப்பட்டுள்ளன. அவர்கள் ஆதர்சமாகக் கொள்ளும் மேலைச்சிந்தனையின் அடிப்படைகளும் இதே தளத்தைச் சேர்ந்தவையே என்றும் , தத்துவ சிந்தனை எப்போதுமே மானுடப் பொதுவானது என்றும் சுட்டத்தான் இதை இங்கே விவரித்தேன். நித்ய சைதன்ய யதியின் நோக்கமும் இதுவே. அதேசமயம் நித்யா ‘பார்த்தாயா அங்கேயும் இருக்கிறது’ என்றும் தாழ்வு மனப்பான்மைக்கோ ‘எல்லாம் இங்கிருந்து போனதே’ என்ற பெருமிதத்திற்கோ இடம் அளிப்பது இல்லை.

அரிஸ்டாடிலின் நிகோமாகிய அறக்கோட்பாடு மனிதனின் முழுமையை ஒழுக்கம், ஞானம் என்று இரு தளம் சார்ந்ததாகப் பிரிப்பதை வாசகர்கள் ஏற்கனவே நாம் பேசிய கீதையின் கர்மம் ஞானம் என்றும் பிரிவினையுடன் ஒப்பிட்டு யோசிக்கலாம்.

அடிப்படையில் நம்முடைய தொல் குலச்சடங்குகளிலேயே உள்ள ஒன்றுதான் இது. குமரிமாவட்டத்தில் குழந்தைகளுக்கு ஒரு வயது ஆகும் போது ‘சோறு கொடுக்கும்’ சடங்கு உண்டு. முதல் அரிசி உணவு ஊட்டுதல். இந்தச் சடங்கில் உப்பு, காரம், கசப்பு, இனிப்பு, ஆகியவற்றை கலந்து குழந்தைக்கு ஊட்டுவார்கள்- அதுதானே வாழ்க்கை! அதற்குமுன் குழந்தையை தரையில் போட்டு அதன் முன் மலர், பொன், ஆயுதம், ஏடு, பழம், உருத்திராட்சம்  முதலியவற்றைப் பரப்பி வைப்பார்கள். நெல், கிண்டியில் பால் ஆகியவற்றையும் வைப்பதுண்டு. குழந்தை இயல்பாக எதை நோக்கி செல்கிறது என்று பார்ப்பதே நோக்கம். வாளை எடுக்கும் குழந்தை வீரனாவான். நெல்லை எடுப்பவன் விவசாயி. மலர் எடுப்பவன் பித்தன், ருத்திராட்சம் எடுப்பவன் துறவி. உண்மையில் இது ஒருவகை விளையாட்டாகவே இருக்கும். பலசமயம் குழந்தை அதற்கு ஏற்கனவே பழகியதைத்தான் எடுக்கும். நான் தவழ்ந்துபோய் வாழைப்பழத்தை எடுத்து தோலுடன் தின்னமுற்பட்டேன் என்று சொன்னாள் அம்மா. ஆயினும் இதன்பின் மானுட இயல்புகுறித்த, சுயதர்மம் குறித்த, ஒரு புரிதல் உள்ளது. குழந்தை முன் விரிந்துள்ள அனைத்துமே அதன் முக்தி மார்க்கங்கள்தான் எனும் தரிசனமும் உள்ளது.

சாங்கிய-வேதாந்த இணைப்பு

இப்பகுதியில் உள்ள 28 ஆவது பாடலை சில பதிப்புகளில் சற்று எளிமையாக மொழியாக்கம் செய்திருப்பார்கள். அவியக்தாதீனி என்பதை ‘மாயையில் இருந்து உருவாவது’ என்றே நாம் வாசிக்க நேரும். ஆனால் ‘அவியக்தம்’ என்பது சாங்கிய சிந்தனையின் அடிப்படையான கோட்பாடாகும். நாம் காணும் இப்பிரபஞ்சமானது முழுமுதல் இயற்கை (ஆதிப்பிரகிருதி)யில் இருந்து உருவாகி வந்தது என்று சாங்கியம் கூறுகிறது. இந்த பிரபஞ்சமானது மூன்று அடிப்படைக் குணங்கள் உடையது. தமோகுணம், ரஜோ குணம், சத்வ குணம். இவற்றை முறையே நிலைக்கும் தன்மை, செயலூக்கத்தன்மை, சமநிலைத்தன்மை என்று விளக்கலாம். இக்குணங்களின் கோடானு கோடி இணைவுகள் மூலமே பிரபஞ்சத்தின் எண்ணற்ற வடிவங்கள் முடிவின்மை வரை உருவாகி விரிந்துள்ளன என்பது சாங்கியங்களில் கூற்றாகும்.

இந்த முக்குணங்களும் முழுமுதல் இயற்கையில் முற்றிலும் சமநிலையில் உள்ளன. ஆகவே அது செயல் வடிவமே இல்லாத தூய இயற்கையாக உள்ளது. அந்நிலையில் அது அறியப்பட முடியாததாக, கிட்டத்தட்ட இன்மையாக உள்ளது. இதுவே பிரகிருதியின் அவியக்த (தெளிவற்ற, வெளிப்படாத) நிலை. அதன்பின் ஒரு தளத்தில் முக்குணங்களின் சமநிலை சீர்குலைந்தமையால் மூலஇயற்கை செயல்வடிவமாக ஆகியது. இன்றைய பிரபஞ்சநிகழ்வு உருவானது. அவியக்தாதீனி என்று கிருஷ்ணன் சொல்வது சாங்கியர்களின் இந்த கோட்பாட்டையே.

இந்த சிந்தனை நீரீஸ்வர சாங்கியம் எனப்பட்டது. இதுவே சாங்கியத்தின் தொடக்க கால வடிவம். இக்காலத்தில் சாங்கியர்கள் பிரபஞ்சத்தை முற்றிலும் பருப்பொருளின் செயல்பாடுகளைக் கொண்டே விளக்க முயன்றனர். புறத்தேயுள்ள எந்த கருத்தியல் சக்தியின் தூண்டுதலும், காரணமும் பிரபஞ்ச உருவாக்கம் மற்றும் இயக்கத்திற்கு தேவையில்லை என்றனர்.

அடுத்தகட்டத்தில் சாங்கியம் முக்கியமான வினாவை சந்தித்தது. குணங்கள் ஒருவரால் உணரப்படுபவை. இயற்கையின் குணங்களை உணர்வது யார்? உணர்ந்தால்தானே குணங்கள் இருக்க இயலும்? இதற்கு விடையாக சாங்கியர்கள் ‘புருஷன்’ என்ற கருத்தை உருவாக்கினர். இயற்கை எப்படி ஆதியிலிருந்தே இருக்கிறதோ அதே போலவே இயற்கையை ‘பார்த்து’ அதன் குணங்களை ‘அறியும்’ (அல்லது உருவாக்கியறியும்) ஒரு இருப்புதான் புருஷன். ஒவ்வொரு மனிதனிலும் ஒவ்வொரு உயிரிலும் உறையும் அந்தப் பார்வையாளன் புருஷனின் ஒரு துளியே. இந்த ஆதிபுருஷனை பரம புருஷன் என்று வகுத்துக்கொண்டு பிற்காலத்தைய சாங்கியர்கள் சாங்கியத்தை இறைவன் உள்ள சாங்கிய ஆக மாற்றினார். இதுவே ‘சேஸ்வர சாங்கியம்’ என்று கூறப்படுகிறது.

சாங்கிய கோட்பாட்டின்படி பிரபஞ்சம் படைக்கப்பட்டது அல்ல. ஆகவே படைத்தது யயார் படைத்தது எவ்வாறு என்னும் வினாக்களுக்கு இடமில்லை. பிரபஞ்சம் என்றும் உள்ளது. அழிவற்றது. அது முன்பு அவியக்தமாக, அறியப்படாததாக, இருந்தது. பிறகு முக்குணங்களின் சமநிலை தவறி செயல் வடிவம் கொண்டபோது அறியப்பட்டது. இன்றைய வடிவத்தை அடைந்தது. சமநிலை மீளும் போது மீண்டும் அவியக்த-அறியப்படாத-வடிவத்தை அது அடையும். புருஷனும் இவ்வாறுதான்.

இதையே இங்கு கிருஷ்ணன் கூறுகிறார். சாங்கியம் பிற்பாடு முதிர்ந்து ஒரு முழுமையான தரிசனமாக மாறுவதற்கு முன்பிருந்த ஒரு கருத்து நிலையாக இங்கு கீதையில் அது முன்வைக்கப்படுகிறது. ‘நடைமுறை ரீதியாகப் பார்த்தால் கூட…’ என்று பேசத் தொடங்கும் போது கிருஷ்ணன் சாங்கியத்தை உள்ளே கொண்டுவருகிறார். ஏனென்றால் அவரது காலத்தில் மிகச்சிறந்த நடைமுறை தத்துவஞானமாக கபிலரின் சாங்கியதரிசனம் இருந்திருக்கிறது.

30வது பாடலிலும் இந்த சாங்கியக் கருத்து தொடர்கிறது. இங்கு ‘தேஹி’ என்ற சொல் கீதையில் கையாளப்பட்டுள்ளது. பல நூல்களில் ‘ஆத்மா’ என்றே அது மொழியாக்கம் செய்யப்படிருக்கும். ஆனால் இங்கு பண்டைய சாங்கியம் பேசப்பட்டிருப்பதனால் அதைவிட நுன்மையான பொருள் தரும் தேஹி பயன்படுத்தப்படுகிறது. அதாவது, தேகத்தில் உள்ளவன், தேகம் ஆக உள்ளவன், தேகமாக தன்னை உணர்பவன் தான் தேஹி. ஆகவே ‘உடல் ஆனவன்’

சாங்கிய கோட்பாட்டின்படி எதற்கும் தொடக்கம் இல்லை. எல்லாமே எப்போதும் உள்ளன. ஆகவே உடலுள் வாழும் புருஷன் (இது ஆத்மா என்ற கருதுகோளில் இருந்து நுட்பமான வேறுபாடு உடைய கருத்து. ஆத்மா உடலின் சாரம் ஆக உள்ளது. தேஹி உடலில் இருந்தபடி அனைத்துக்கும் சாட்சியாக விளங்கி புறம்பொருளின் குணங்களை அறிகிறது.) அழியாதவன். இந்தக் கருத்தை இப்பகுதியில் கிருஷ்ணன் கூறும் விதமே இந்திய தத்துவ ஆய்வாளர்களில் ஒரு சாராருக்கு கடும் சினத்தை உருவாக்கி கிருஷ்ணனை ஒரு கருத்துத் திருடர் என்றும் கீதையை ஒரு பெரும் கருத்தியல் மோசடி என்றும் கூறவைத்திருக்கிறது. முக்கியமாக இதைச் சொன்னவர் மார்க்சியரான டி.டி.கோசாம்பி.

12 வது பாடல் முதல் கிருஷ்ணன் கூறும் அழியாத ஆத்மா குறித்த கருத்துக்கள் சாங்கியத்திற்கும் ஏற்புடையவை. அதாவது புருஷனும் பிரகிருதியும் பிறப்பிறப்பு இல்லாமல் எப்போதுமிருப்பவர்கள் என்ற அளவில் சாங்கியம் இந்த நிரந்தரத்தன்மையைப் பற்றிப் பேசுகிறது. கிருஷ்ணன் அதை அழியாத என்றுமுள்ள எங்குமுள்ள ஆத்மா என்ற உபநிடதக் கருத்துடன் இங்கே இணைக்கிறார். இந்த இணைப்பு இயல்பாக 12வது பாடலில் நடக்கிறது. அங்கு அது வேதாந்தக் கருத்தாகவே உள்ளது. 16வது பாடலில் சட்டென்று சாங்கிய கருத்தாக மாறிவிடுகிறது. 17, 18 வது பாடல்களில் சாங்கியமாகவே உறுதி செய்யப்பட்டு முப்பதாவது பாடலில் வலியுறுத்தப்படுகிறது. இப்பாடல்களை மட்டும் தனியாகப் படித்துப் பார்த்து இவ்விணைப்பை கீதை நிகழ்த்துவதை வாசகர் ஆராயலாம்.

கோஸாம்பி முதலிய மார்க்ஸிய ஆய்வாளர்கள் கூறுவது போல சாங்கியத்தை மழுப்பி ஆத்மவாதத்தின் அருகே கொண்டுவரவில்லை கிருஷ்ணன். இரு தத்துவ தரிசனங்களுக்கும் பொதுவாக உள்ள ஒரு தளத்தைக் கண்டடைந்து அதை தர்க்கபூர்வமாகவும், கவித்துவமாகவும் இணைத்து ஒரு ‘யோகத்தை’ உருவாக்குகிறார். கீதையின் தத்துவப் பங்களிப்பே இதுதான். கீதையின் காலகட்டத்தில் சாங்கியம் பிரம்மத்தின் பங்களிப்பு உள்ள ஸேஸ்வர சாங்கிய வடிவத்தை எடுக்கவில்லை. புருஷன் என்ற கோட்பாட்டை அது ஓரளவு ஏற்றுக்கொண்டிருக்கிறது. கீதை பிரம்மத்தை சாங்கியத்துடன் இணைப்பதற்கான வழியை தெளிவாக அமைத்துவிடுகிறது. இதற்காகவே முரணியக்க நோக்கை கீதை கையாள்கிறது.

சாங்கியதரிசனத்தை கீதை மழுப்புகிறது, கீதை அதை திரிக்கிறது என்றெல்லாம் கூறப்படும் குற்றச் சாட்டுகளை எப்படி எதிர்கொள்வது என்பது வாசகர்களின் விருப்பம். பொதுவாக தத்துவத்தரப்புகள் பிரபஞ்சம் மற்றும் மனிதவாழ்க்கை சார்ந்த தரிசனங்களை தர்க்கபூர்வமாக விளக்க முயலும் முயற்சிகளே. அத்தரிசனங்கள் முக்கியம் என்று கொண்டால் அத்தரிசனங்கள் வேறுவகையில் வேறு தர்க்கங்களுடன் வெளிப்படும் தத்துவத் தரப்புகளும் முக்கியமானவையே. அவற்றுக்கு இடையேயான பொதுவான இடங்களை ஆராய்வதும் இணைத்துப் பார்க்க முயல்வதும்தான் உண்மையான சிந்தனையாக அமைய இயலும்.

கீதையின் இவ்விணைப்பைப்பற்றி ஆராய்வோம். சாங்கியம் பருப்பொருளின் அழிவின்மை, முடிவின்மை, தொடக்கமின்மை பற்றி பேசுகிறது. அதன் குணங்களும் அப்படிப்பட்டவை. ஆகவே குணங்களைக் காணும் புருஷனும் தொடக்கமும் முடிவும் அற்றவன். மறுபக்கம் வேதாந்தம் ஆத்மா அழிவற்றது எங்கும் பரவியுள்ளது எப்போதுமுள்ளது என்கிறது. இருதரப்பிலும் உள்ளது ஒரு நிரந்தரத் தன்மையைப்பற்றிய தரிசனமேயாகும். நாம் காணும் பிரபஞ்சம் கடல் போல அலையலையாக நம்மை வந்து தாக்கும் ஓயாத நிகழ்வாக உள்ளது. அலைகளை கடலாகக் காண்போமெனில் அது ஒரு நிலைத்த பேரிருப்பாகத் தோன்றவும் செய்கிறது. சாங்கியம், வேதாந்தம் இரண்டுக்கும் பொதுவான நிரந்தரத்தன்மை என்ற தரிசனத்தையே இங்கு இணைப்புக்கான தளமாக கிருஷ்னன் எடுத்தாள்கிறார்.

கீதை ஒரு யோகநூல். யோகம் என்றால் முரணியக்கம் சார்ந்த இணைவு. இங்கே கீதை தன் வேதாந்த நோக்கில் சாங்கிய தரிசனத்தை கவித்துவமாக இணைத்துக்கொள்கிறது என்பதே எனது நோக்கு.

முந்தைய கட்டுரைதீபாவளி:கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇஸ்லாம்: மிரட்டல்கள், அவதூறுகள்