‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 78

பகுதி 16 : தொலைமுரசு – 3

விடியற்காலையில் காம்பில்யத்தின் தெருக்கள் முழுமையாகவே பனியால் மூடப்பட்டிருந்தன. பெரியதோர் சிலந்திவலையை கிழிப்பது போல பனிப்படலத்தை ஊடுருவிச்சென்றுகொண்டே இருக்கவேண்டியிருந்தது. அணிந்திருந்த தடித்த கம்பளி ஆடையைக் கடந்து குளிர் வந்து உடலை சிலிர்க்கச்செய்தது. முன்னால் குந்தியின் தேர் சென்றுகொண்டிருக்க பின்னால் சாத்யகி தன் புரவியில் சென்றான். சகட ஒலி மிக மெலியதாக எங்கோ என கேட்டது. வளைவுகளில் அலைபோல திரும்பி வந்து செவிகளை அறைந்தது.

படித்துறையை அடைந்ததும் குந்தியின் தேர் விரைவிழந்து சரிந்து பின்கட்டை ஒலியுடன் மெல்ல இறங்கி பலகைப்பரப்பில் ஏறி அதிர்வோசையுடன் உருண்டு சென்று வளைந்து நின்றது. குதிரைகள் கடிவாளம் இழுபட கழுத்துக்களை தூக்கி குளம்புகளால் மரத்தரையை உதைத்தன. ஏவலர் வந்து அவற்றின் கடிவாளத்தை பற்றிக்கொள்ள இருவர் தேரின் வாயிலை திறந்தனர். நீட்டப்பட்ட மரப்படியில் கால்வைத்து இறங்கிய குந்தி திரும்பி அவனை நோக்கிவிட்டு பனித்திரைக்குள் பந்த வெளிச்சம் தீயாலான சிலந்திவலை போல தெரிந்த சுங்க மாளிகை நோக்கி சென்றாள்.

சாத்யகி தன் புரவியை நிறுத்தி கடிவாளத்தை ஒப்படைத்துவிட்டு அவளை பின்தொடர்ந்து சென்றான். அவர்களுக்கான பன்னிரு பாய்கொண்ட பெரிய படகு துறைமேடையில் காத்து நின்றிருந்தது. பதினெட்டு பாய்களுடன் பெரிய காவலர்படகு முன்னரே கங்கைக்குள் சென்று காத்து நின்றது. இருபடகுகளும் வெண்சாம்பல்நிறமான பனித்திரையில் அருகருகே வரையப்பட்ட ஓவியங்கள் போல தெரிந்தன. துறைமேடையை அறையும் நீரின் ஓசை கேட்டுக்கொண்டிருந்தது.

சுங்கத்தலைவன் வந்து குந்தியை வணங்கி உள்ளே அழைந்த்துச் சென்றான். அவள் அங்கே பெரியபீடத்தில் கம்பளியாடையை போர்த்தியபடி உடல்குறுக்கி அமர்ந்தாள். விடியற்காலையில் விழியிமைகள் சற்று தொங்கி முகம் சுருங்கி அவள் மேலும் முதுமைகொண்டுவிட்டதுபோல தோன்றியது. சாத்யகி அருகே சென்றதும் நிமிர்ந்து பீடத்தை சுட்டிக்காட்டினாள். அவன் அமர்ந்ததும் அவள் உடலை சற்று அசைத்து “இந்தப்பெண்கள் என்றுமே பணிந்துதான் வாழ்ந்தாகவேண்டும் மைந்தா” என்றாள். சாத்யகி நிமிர்ந்தான். அவன் எண்ணிக்கொண்டிருப்பதையே அவள் சொல்லிக்கொண்டிருந்தாள்.

“அவர்களுக்கு வேறுவழியில்லை. இவள் ஒரு வேங்கை. இவளிருக்கும் காட்டில் பிறருக்கு இடமில்லை. அதை எவ்வளவு விரைவாக இவர்கள் உணர்ந்துகொள்கிறார்களோ அந்த அளவுக்கு இவர்களின் வாழ்க்கை இனிதாகும்.” சாத்யகி தலையசைத்தான். ”இவர்களின் எண்ணங்களில் பிறபெண்கள் நுழையவேயில்லை. அதை முதல்நாளே இவர்கள் புரிந்துகொண்டும்விட்டார்கள்.” சாத்யகி அந்தப்பேச்சை தவிர்க்க விழைந்தான். ஆனால் அதை எப்படி சொல்வதென்று அவனுக்கு தெரியவில்லை. ”இவர்கள் அவளை எதிர்க்கமுடியாது. தேக்கப்பட்ட நீர் விரிசல்களில் ஊறுவதுபோல சிறுமையாக அது வெளியாகிவிடக்கூடாது. அதை இப்போது விட்டுவிட்டால் பின்னர் இங்கும் சில இளைய காந்தாரிகள்தான் இருப்பார்கள்.”

சாத்யகி “ஆம்” என்றான். “எளிய அரண்மனை பணிப்பெண்ணாக இருக்குமளவுக்கு இவர்களின் ஆணவம் சுருங்குமென்றால் இவர்களுக்கு வாழ நிறைய இடம் கிடைக்கும். இல்லையேல் ஒவ்வொருநாளும் புண்பட்டுக்கொண்டுதான் இருப்பார்கள்” என்றாள் குந்தி. “நான் சிபிநாட்டிலும் மத்ரநாட்டிலும் மகள்கொள்ள ஒப்புக்கொண்டதே இதனால்தான். அவர்கள் சிற்றரசர்களின் எளிய பெண்கள். காசிநாடும் சேதிநாடும் பெரியவை. அவர்களால் எளிதில் வளையமுடியவில்லை.” “அவர்கள் புரிந்துகொள்வார்கள்” என்றான் சாத்யகி.

குந்தி “ஆகவேதான் இவர்கள் இங்கேயே இருக்கட்டுமென முடிவுசெய்தேன். பாஞ்சாலத்தின் மண்ணில் திரௌபதியின் இளையோள்களாக இருக்கட்டும். அனைத்து அரண்மனைநிகழ்வுகளிலும் பங்கெடுக்கட்டும். மெல்லமெல்ல அவர்களின் ஆணவம் வளையலாம்…” என்றாள். சாத்யகி புன்னகைத்து “வளைந்தால் நன்று” என்றான். “வளையும். ஏனென்றால் பெண்கள் மைந்தரைப்பெற்று வாழவிழைபவர்கள். வளையாமல் வாழமுடியாதென்றாலே வளையத்தொடங்கிவிடுவார்கள்…” என்றாள் குந்தி. “தேவிகையையும் விஜயையையும் நான் கூடுதல் அணுகியறியமுடியவில்லை. இவர்களுடன் இங்கே வரவேண்டியிருந்தது. பீமன் சேதியிலும் காசியிலும் மகள்கொள்ளப்போவதை சொன்னபோதே எனக்கு தெரிந்தது, வேறு வழியில்லை என. மணநிகழ்வுக்கு நான் இங்கே இருந்தாகவேண்டும்.”

வெளியே சகடஒலி எழுந்தது. “நகுலன், அவனை வரச்சொல்லியிருந்தேன்” என்றாள் குந்தி. “அவன் உன்னை தனிமையில் சந்திக்கவேண்டுமென்று தோன்றியது. அவனுக்கு சேதிநாட்டுக்கும் இளையயாதவனுக்கும் இருக்கும் உட்பகைபற்றி இன்னமும் முழுமையாகத்தெரியாது. சுருதகீர்த்தியின் வஞ்சம் அவள் மைந்தன் உள்ளத்தில் மட்டும் அல்ல மகள்களின் உள்ளத்திலும் நிறைந்துள்ளது. ஆண்களைப்போலன்றி பெண்களால் வஞ்சத்தை எளிதில் மறைத்துக்கொள்ள முடியும். நகுலனிடம் நீ அதை சொல்லவேண்டும்” என்றாள். “நானா?” என்றான் சாத்யகி. “ஆம், நீ இளைய யாதவனின் குரல் என அனைவரும் அறிவர். உன் சொற்களுக்கிருக்கும் வல்லமையை நீ அறியமாட்டாய்.”

ஏவலன் வந்து நகுலன் வருகையை அறிவிக்க அவனை வரும்படி சொல்லிவிட்டு குந்தி “அவனிடம் சொல்.பெண்ணிடம் அன்புகொள்வது அவளை புரிந்துகொள்வதும் வேறுவேறு என்று” என்றாள். நகுலன் உள்ளே வந்து வணங்கினான். “உன்னைத்தான் எதிர்நோக்கிக்கொண்டிருந்தேன். நீ காலையில் எழாமலிருந்துவிடுவாயோ என எண்ணினேன்” என்றாள் குந்தி. சாத்யகி அதிலிருந்த முள்ளை உடனே உணர்ந்துகொண்டான். நகுலன் அதை இமையசைவுக்குக் கூட பொருட்படுத்தவில்லை என்று கண்டதும் அவனுள் ஒரு புன்னகை மலர்ந்தது. “யாதவரே, தங்களை நேற்று அவையில் கண்டு முறைமைச்சொல் சொன்னாலும் தனியாக பேசமுடியவில்லை என்ற எண்ணம் இருந்தது. ஆகவேதான் வந்தேன்” என்றான்..”ஆம், அவையில் நான் உங்களிடம் பேசமுடியாது” என்றான் சாத்யகி.

“துருபதர் ஐயமும் கலக்கமும் கொண்டிருக்கிறார்” என்றான் நகுலன். “ஒவ்வொன்றும் கௌரவர்களுக்கு உவப்பதாக மாறிக்கொண்டிருக்கிறது என்று எண்ணுகிறார். சேதிநாட்டு இளவரசிகளை வென்றால் சிசுபாலன் நம்முடன் வந்துவிடுவான் என எண்ணினார். ஆனால் அவன் மகதத்துடன் சேர்ந்துகொண்டிருக்கிறான். கோசலத்திலிருந்து இளையகௌரவர்களுக்கு மகள்கொள்கிறார்கள். அங்கம் அவர்களுடன் இருக்கிறது. வங்கத்தின் இருநாடுகளும் யாதவர்கள் மேல் சினம்கொண்டிருக்கின்றன. துவாரகை எழுந்ததுமே தாம்ரலிப்தியின் வணிகம் சரிந்துவிட்டது என்று அவர்கள் எண்ணுகிறார்கள். அதாவது கங்காவர்த்தத்தின் தென்திசை முழுக்கவே நமக்கு எதிராகிவிட்டது என எண்ணுகிறார்.”

“அதையெல்லாம் இப்போது எண்ணுவதில் பொருளில்லை” என்று சாத்யகி சொன்னான். “இன்னமும் எதுவும் முடிவாகவில்லை. அஸ்தினபுரியின் முடிசூட்டு விழா முடிந்து ஆறுமாதங்கள் கடந்தபின்னர்தான் சித்திரம் தெளிவடையும். அதுவரை நாம் காத்திருக்கவேண்டியதுதான்.” நகுலன் புன்னகைத்து “அப்படி காத்திருக்க அரசர்களால் முடியாதே… அவர்கள் காலத்தைக் கடந்து நோக்கித்தானே வாழமுடியும். துருபதர் இரவும்பகலும் துயில்வதில்லை. அவையிலிருப்பவர்கள் பகல் முழுக்க துயில்கிறார்கள்” என்றான். சாத்யகி சிரித்து “முடிசூட்டுவிழாவுக்குப்பின் இவரை நேரடியாகவே காந்தாரருடன் பகடை ஆட அமரச்செய்யலாம்” என்றான். நகுலனும் உரக்க நகைத்தான்.

சாத்யகி “நாம் படகுக்குச் சென்று அங்கே அனைத்தும் சித்தமாக உள்ளனவா என்று பார்ப்போம்” என எழுந்தான். நகுலன் குந்தியை வணங்கிவிட்டு தொடர்ந்து வந்தான். “நேற்று தங்கள் துணைவியையும் பார்த்தேன்” என்றான். நகுலன் “தெரியும், சொன்னாள்” என்றான். சாத்யகி சிலகணங்கள் தயங்கியபின் “நான் சற்று கூரிய சொற்களை சொல்லவேண்டியிருந்தது” என்றான். “ஆம், நீங்கள் சொன்னதையும் அவளே சொன்னாள்” என்றான் நகுலன். “அது இயல்பே. அவள் தன்னை யாதவகுலத்தவளாக எண்ணவில்லை. தமகோஷரின் ஷத்ரிய குலத்தவளாகவே சொல்லி வளர்க்கப்பட்டிருக்கிறாள். தன் கொடிவழி கௌதமம் என்று முதல்நாள் என்னிடம் சொன்னாள். எப்படி என்றேன். கௌதம தீர்க்கதமஸின் குருதி அவள் என்றாள்.”

சிரித்துக்கொண்டே நகுலன் சொன்னான் “பெண்ணை நான் அணுகியறியாதவன். ஆகவே அது ஒரு புராணக்குறிப்பு மட்டும்தானே என்று சொல்லிவிட்டேன். அன்றிரவு அனைத்துச் சொற்களாலும் பிழைபொறுக்கக் கோரி முடித்து இணக்கமாகும்போது விடிந்துவிட்டிருந்தது.” சாத்யகி “பெரும்பாலானவர்கள் முதல்நாள் அந்தப்பிழையை செய்வதுண்டு என அறிந்திருக்கிறேன்” என்றான். “ஆம், ஆனால் மறுநாள் அவளிடம் அவளுடைய கூந்தல் போதிய அளவுக்கு நீளமில்லை என்று ஏதோ சொன்னேன். அவ்வளவுதான். மும்மடங்கு கொதித்தெழுந்துவிட்டாள். அவளை மண்ணில் இறக்க நான் எனக்குத்தெரிந்த எல்லா சூதர்பாடல்களையும் பாடவேண்டியதாயிற்று.”

“கூந்தல் என்றால் இங்கு பொருளே வேறல்லவா?” என்றான் சாத்யகி. “ஆம், அதை மறுநாள்தான் என் உள்ளம் உணர்ந்தது” என்று சொன்ன நகுலன் “என்னைவிட மேம்பட்ட புரிதல் பெண்களைப்பற்றி உங்களிடமிருக்கிறது யாதவரே” என்றான். “எனக்கா?” என்று சாத்யகி சிரித்தான். “நான் இப்போது வெறும் அரசியல் சூழ்ச்சியாகவே இவற்றை பார்க்கிறேன்.” நகுலன் “அதுதான் சரியான பார்வையோ என்னவோ” என்றான். சாத்யகி “பாண்டவரே, நான் தங்களிடம் யாதவர்களுக்கும் சேதிநாட்டுக்கும் இடையேயான பகையைப்பற்றி சொல்லவிரும்புகிறேன்” என்றான்.

“உம்” என தலையசைத்து கங்கையை நோக்கி நடந்தான். கங்கையிலிருந்து வந்த காற்றில் இளவேது கொண்ட நீராவியை உணரமுடிந்தது. பாசிமணமும் மீன்மணமும் கலந்த நீர்மணம். ”சேதிநாட்டு யாதவ அரசி அன்னை சுருதகீர்த்தி இளைய யாதவர்மீது பெருவஞ்சம் கொண்டவர்… அறிந்திருப்பீர்.” நகுலன் “ஆம்” என்றான். “சிலவற்றை குறுக்குவழியாகச் சென்றால் எளிதில் புரிந்துகொள்ளமுடியும் இளவரசே, அதிலொன்று இது” என்று சாத்யகி தொடர்ந்தான்.

“மதுராபுரிக்கு அரசராக உக்ரசேனர் இருக்கையிலேயே இளவரசர் கம்சர் பெருவீரர் என்று புகழ்பெற்றிருந்தார். ஆனால் உக்ரசேனரை பன்னிரு யாதவப்பெருங்குலங்களும் முழுமையாகவே ஒதுக்கிவைத்திருந்தன. அவரது மூதாதை குங்குரர் தன் தமையன் விடூரதரை மதுராபுரியை விட்டுத் துரத்தி ஆட்சியை கைப்பற்றியதை யாதவர் குலங்கள் ஏற்கவில்லை. உக்ரசேனர் எதையும் பொருட்படுத்தாமல் மதுராபுரியை மகதத்தின் படைகளைக்கொண்டு அடக்கி ஆண்டார். யாதவ குலங்கள் வேறுவழியின்றி மதுராபுரியுடன் வணிகம் செய்துவந்தன. ஆனால் எந்தவகையிலும் அவர்களை தங்களுடன் சேர்த்துக்கொள்ளவில்லை.”

“விருஷ்ணிகுலத்து ஹ்ருதீகரின் மைந்தர் கிருதபர்வரின் மகள் அன்னை சுருதகீர்த்தி. இளமையிலேயே கம்சரின் புகழைக்கேட்டு அவரை தன் கொழுநராக நெஞ்சில் வைத்துக்கொண்டிருந்தாள். அவளுடைய விழைவை அறிந்த தமையன் தந்தையிடம் சொல்ல கிருதபர்வர் யாதவர்களின் குலச்சபையில் மதுராபுரியின் இளவரசர் கம்சருக்கு தன் மகளை மணம்புரிந்து கொடுக்க ஒப்புதல் கோரினார். கிருதபர்வரின் இளையவராகிய சூரசேனர் அதை கடுமையாக எதிர்த்தார். யாதவகுலச்சபையின் முதல்வராக இருந்த அக்ரூரரும் எதிர்த்தார். கிருதபர்வர் பணிந்தார். குலச்சபை சுருதகீர்த்தியை அவைக்கு வரவழைத்து ஆழிதொட்டு சொல்லுறுதி பெற்றுக்கொண்டது, மதுராபுரியுடன் எவ்வுறவும் கொள்வதில்லை என்று.”

“அதன்பின்னர்தான் சேதிநாட்டு தமகோஷர் மணவிழைவுடன் வந்தார். அன்று சேதிநாடும் அங்க வங்க நாடுகளும் ஷத்ரியப்பெருங்குலங்களால் ஏற்கப்படவில்லை. சேதிநாடு மகதத்தை அஞ்சியிருந்த காலம். ஆகவே அவர்களுக்கு யாதவர்களின் உறவு பெரிதெனப்பட்டது. தமககோஷர் சுருதகீர்த்தியை மணந்தார். சுருதகீர்த்தி கம்சர் மீதான தன் விழைவை முழுமையாகவே தன்னுள் அழுத்தி அழித்துக்கொண்டார்” சாத்யகி சொன்னான் “ஆனால் கம்சர் கொல்லப்பட்ட செய்தி வந்தபோது அவருள் விதையாக அணுவாக மாறி புதைந்துகிடந்த பெருங்காதல் பொங்கி எழுந்தது. கம்சரைக்கொன்ற இளையயாதவர் மேல் தீராப்பெருவஞ்சம் கொண்டார்.”

”புரிந்துகொள்ளக் கடினமானது அவ்வஞ்சம் பாண்டவரே” என்று சாத்யகி தொடர்ந்தான். “நான் அதை என் தந்தையிடமிருந்து கேட்டிருக்கிறேன். அவள் கம்சரை மணந்து மைந்தரைப்பெற்று அதன்பின் இளைய யாதவர் கம்சரைக்கொன்றிருந்தால் இந்த வஞ்சத்தில் நூறில் ஒருபங்குகூட இருந்திருக்காது. சுருதகீர்த்தி மணம் கொண்டு சென்ற மறுமாதமே தன் குலத்துடனும் குடியுடனும் அனைத்து உறவுகளையும் வெட்டிக்கொண்டார். அவர் ஒருமுறைகூட யாதவநாட்டுக்கு வந்ததில்லை. யாதவகுலக்குறிகளை சூடுவதோ யாதவச் சடங்குகளை செய்வதோ இல்லை. யாதவர்களின் விஷ்ணுவழிபாட்டை உதறி மகதர்களின் சிவவழிபாட்டுக்குச் சென்றாள். யாதவ குலத்தையே அவள் வெறுத்தாள். இன்று இளைய யாதவர்மீது குவிந்துள்ள அவளுடைய வஞ்சம் அதுதான்.”

“நீர் சொல்வது புரிகிறது. அவ்வஞ்சத்தை நான் கரேணுமதியில் உணர்ந்துமிருக்கிறேன்” என்றான் நகுலன். “ஆனால் எதிரியிடம் மகள் கொண்டுவிட்டு அவளை எதிரியின் கூறாகவே எண்ணி மணவாழ்க்கையில் ஈடுபடமுடியுமா என்ன?” சாத்யகி “அதை நான் அறியேன்” என்றான். “ஆனால் இப்படி ஒன்று உள்ளது என்பதை நீங்கள் உணர்ந்திருக்கவேண்டும்.” நகுலன் “அந்த உணர்தலுக்கு மணவாழ்க்கையில் எந்த இடமும் இல்லை இளையோனே” என அவன் தோளில் கை வைத்தான். “இச்சிலநாட்களில் நான் உணர்ந்த ஒன்றுண்டு. மணமான முதல்நாள்முதல் கணவன் மனைவியையும் மனைவி கணவனையும் மாற்றமுயல்கிறார்கள். அவர்களைப்போல அத்தனை அணுக்கமானவர்கள் பிறர் இல்லை என்பதனால் அந்த மாற்றத்தை இருசாராரும் தடுக்கமுடியாது.”

சாத்யகி “நீங்கள் வெல்லவேண்டுமென விழைகிறேன். வேறேது நான் சொல்லமுடியும்?” என்றான். ”சிசுபாலர் தன் உள்ளத்தில் இளைய யாதவருடன் எப்போதும் போரிலிருக்கிறார் என்றார்கள்” என்றான் நகுலன். ”ஆம், அந்தப்போரில் ஒவ்வொருமுறையும் தோற்கிறார். அது அவரை மேலும் வஞ்சம் கொண்டவராக ஆக்குகிறது. இளமைமுதல் இருக்கும் சினம்தான்… ஆனால் எட்டாண்டுகளுக்கு முன்பு விதர்ப்ப மன்னர் பீஷ்மரின் மகள் ருக்மிணியை இளையயாதவர் காந்தருவ மணம் கொண்டபோது அது பெருகிவளர்ந்தது” என்றான் சாத்யகி. “அங்கிருந்தபோது கதைகளை கேட்டிருப்பீர்”

“விதர்ப்ப மன்னருக்கு தன் மகளை இளையயாதவருக்கு மணம்புரிந்தளிப்பதில் விருப்பிருந்தது என்றும் அவரது மைந்தர் ருக்மி விரும்பவில்லை என்றும் அறிந்தேன்” என்றான் நகுலன். “ஆம், துவாரகை அப்போதுதான் எழுந்து வந்துகொண்டிருந்தது. அதன் வல்லமையை அவர் அறிந்திருந்தார். ஆனால் இளவரசர் ருக்மி விதர்ப்பம் இயல்பாகவே மகதத்துடன் இணைந்திருக்கவேண்டிய நாடு என்று எண்ணினார். மகதத்தின் படைகளின் துணையுடன் தெற்கே விந்தியமலையைக் கடந்து சதகர்ணிகளின் நாட்டின்மேல் பரவும் திட்டம் இருந்தது அவருக்கு. ஆனால் அதைவிட முதன்மையானது, அவருக்கு இளைய யாதவர் மேல் இருந்த பொறாமைதான்.”

“பாரதவர்ஷத்தில் கனவுகளும் இலக்குகளும் கொண்டிருக்கும் அத்தனை இளவரசர்களுக்கும் இளைய யாதவர் மேல் வஞ்சம் உள்ளது யாதவரே” என்றான் நகுலன். “ஏனென்றால் அவர்கள் உள்ளூர வழிபடுவது இளைய யாதவரை மட்டுமே. அவர்கள் கனவுகண்டதை நிகழ்த்திக்காட்டியவர் அவர். ஒருபோதும் அவரை அவர்கள் அணுகவும் முடியாது. அவர் இருக்கும்வரை இவர்களின் புகழ் ஒளிராதென்பதும் உறுதி. ஆகவே வேறு வழியே இல்லை, அவர்கள் வஞ்சம் கொண்டுதான் ஆகவேண்டும்.” சாத்யகி “ஆம், அதை அவரும் அறிவார்” என்றான். மெல்ல அவன் முகத்தில் ஒரு புன்னகை எழுந்தது.

“என்ன?” என்றான் நகுலன். “இல்லை” என்றான் சாத்யகி. “சொல்லும்!” சாத்யகி சிரித்து “இளைய யாதவர் உண்மையில் அஞ்சவேண்டிய வஞ்சம் என்றால் அது பார்த்தருடையதாகவே இருக்கும். அதனால்தான் அவரை தன்னுடன் சேர்த்துக்கொண்டாரா என எண்ணிக்கொண்டேன்” என்றான். நகுலன் சிரித்து “நீர் நெடுந்தூரம் செல்கிறீர். அந்த அளவுக்குச் சென்றால் மண் மிகமிகக்கீழே போய்விடும்” என்றான். பின்னர் உள்ளத்தை மாற்றும் முகமாக சால்வையைத் திருத்திவிட்டு “நீர் அன்னையிடம் பேசினீரல்லவா? அன்னை என்ன நினைக்கிறார்?” என்றான். “எதைப்பற்றி?” என்றான் சாத்யகி. “இந்த எல்லைப்பிரிவினை பற்றி?”

“எல்லைகள் எளிதாகவே பிரிக்கப்பட்டுவிட்டன. ஆனால் படைகள் பிரிக்கப்படும்போது அவ்வாறு எளிதாக இருக்காது என அஞ்சுகிறார்கள்…” என சாத்யகி சொல்ல “அஞ்சவில்லை, விழைகிறார்கள்” என்றான் நகுலன். “எல்லைகள் இத்தனை எளிதாக பூசலேயின்றி பிரிக்கப்படும் என அவர்கள் நம்பவில்லை. அது அவர்களுக்கு ஏமாற்றம். ஆகவே இனிமேல் படைகள் பிரிக்கப்படுவதில் இறங்கி பகடையுருட்ட விழைகிறார்கள். படைகளும் எளிதாகப்பிரிக்கப்பட்டால் கருவூலம் பிரிக்கப்படுவதில் ஈடுபடுவார்கள். அதன்பின் குலங்கள் பிரிக்கப்படவேண்டும் என்பார்கள். உளமோதல் நிகழ்ந்து வஞ்சம் எழாமல் அவர்களுக்குள் திகழும் ஏதோ ஒன்று அமைதிகொள்ளாது.”

சாத்யகி ஏதோ சொல்ல வந்து அது சொல்லாக தன்னுள் எழாததை உணர்ந்து முகம் திருப்பிக்கொண்டான். “நாடு பிரிக்கப்பட்டு முடிந்த கணம் முதல் அஸ்தினபுரிமீதான போரைத்தான் திட்டமிடுவார். ஐயமே வேண்டியதில்லை. இந்த முதியவள் பாரதவர்ஷத்தில் குருதி பெருகாமல் அடங்க மாட்டாள்.” சாத்யகி திகைப்புடன் நோக்க குனிந்து மண்ணை நோக்கியபடி நகுலன் சொன்னான் “அவருக்குள் குடியேறியிருக்கும் அறியாபெருந்தெய்வம் ஒன்று பலி பலி என்று கூத்தாடிக்கொண்டிருக்கிறது. இன்று உள்ளே வந்ததும் அவர்களை நோக்கினேன். முதலில் எழுந்த எண்ணம் அதுதான். முதுமையின் வலிமையின்மை நிறைந்த முகம். துயர்நிறைந்த தனித்த முகம். ஆனால் அவருக்குள் இருந்துதான் அனைத்தும் தொடங்குகின்றன.“

“நீங்கள் கசப்படைந்திருக்கிறீர்கள் இளவரசே” என்றான் சாத்யகி. “அன்னை உண்மையில் விழைவது…” நகுலன் இடைமறித்து “எது என்றே அவருக்குத்தெரியாது. அவர் அந்த தெய்வத்தின் களக்கரு மட்டும்தான்” என்று சொல்லி நீள்மூச்செறிந்து “நடப்பது நடக்கட்டும் என்று அவ்வப்போது தோன்றுகிறது. ஆனால் அப்படி விட்டுவிடவும் முடியவில்லை. இளையோனே, இவரிடம் நான் அறியாத பெரும் மந்தணம் ஒன்றிருக்கிறது என்று நான் நினைக்கிறேன். நச்சுமுள் என அவருக்குள் அது சீழ்பிடித்திருக்கிறது. ஒவ்வொருநாளும் அதை எண்ணியபடி துயிலப்போகிறார். அதை எண்ணியபடி விழித்துக்கொள்கிறார்… இப்போது இந்த தேர்ப்பயணம் முழுக்க அதைத்தான் எண்ணிக்கொண்டிருந்திருக்கிறார்” என்றான்.

“எதை?” என்றான் சாத்யகி. “தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒன்று உள்ளது. அதை உறுதியாக இளைய யாதவன் அறிவான். ஆகவேதான் அவனிடம் மட்டும் இவர் அகம் திறந்து சிரிக்கமுடிகிறது. அதை ஒருவேளை நீரும் அறிந்திருக்கலாம். ஏனென்றால் நீரும் யாதவன்.” சாத்யகி “இல்லை” என்றான். “சரி” என்ற நகுலன் “அகத்தே நான் அதை அறிவேன், என் கனவுகளில் மட்டும் அதை நான் புரிந்துகொள்கிறேன். அந்த நாகம் புற்றைவிட்டு எழாமலேயே பார்த்துக்கொள்கிறேன்” என்றான். சாத்யகி அவன் என்ன சொல்கிறான் என்று தெரியாமல் நோக்கினான். ”படகுகள் சித்தமாகிவிட்டன” என்றான் நகுலன் அவன் தோளில் கைவைத்தபடி.

படகின் சங்கு ஒலித்ததும் சுங்கத்தலைவன் சென்று சொல்ல குந்தி போர்வையை நன்றாகப்போர்த்தியபடி உடல் ஒடுக்கி வந்தாள். நகுலனிடம் “நான் அஸ்தினபுரியில் இருந்து ஒவ்வொரு நாளும் செய்தியனுப்புவேன்” என்றபின் திரும்பி சாத்யகியிடம் “செல்வோம்” என்றாள். சாத்யகி நகுலனிடம் தலைவணங்கி “சென்று வருகிறேன் இளவரசே” என்றான். “நலம் திகழ்க!” என அவன் வாழ்த்தினான். இருவரும் சென்று நடைபாலம் வழியாக படகில் ஏறிக்கொண்டனர்.

படகின் சங்கு ஒலித்தது. மும்முறை அதை ஏற்று காவல்படகும் சங்கொலி எழுப்பியது. புகைக்குவை எழுவதுபோல ஓசையில்லாமல் வெண்ணிறமான பாய்கள் மேலே எழுந்தன. காற்று அவற்றைத் தொட்டதும் படகு மெல்ல உயிர்கொண்டு தவிப்புடன் கட்டு வடங்களை இழுத்துக்கொண்டு ஆடியது. வடங்கள் அவிழ்க்கப்பட்டதும் மெல்ல கங்கைக்குள் சென்றது. சாத்யகி கரையில் நின்றிருந்த நகுலனை நோக்கினான். குந்தி திரும்பி கரையை நோக்காமால் நீர்வெளியை மூடிய பனிப்படலத்தை நோக்கிக்கொண்டிருந்தாள்.

நீருக்குள் சென்று முழுமையாகவே பனியால் மூடப்பட்டதும் சாத்யகி சென்று குந்தியின் அருகே அமர்ந்தான். “சொல்லிவிட்டாயா?” என்றாள். “ஆம்” என்றான் சாத்யகி. “இளமையில் இருவரையும் ஒருகணம்கூட நான் பிரிந்திருந்ததில்லை. இப்போது எப்படியோ மிக விலகிச்சென்றுவிட்டார்கள்…” குந்தியின் இதழ்கள் சற்று வளைந்து புன்னகைபோல் ஒன்றை காட்டின. “அது இயல்பும் கூட. நாம் செய்வதற்கென ஒன்றுமில்லை.” சாத்யகி “ஆம்” என்றான். “இளையோனும் இவனும் ஆடிப்பாவைகள் போல” என்ற குந்தி பெருமூச்சுடன் “மாத்ரி இருந்திருந்தால் அவளும் இப்படித்தான் அயலவளாக உணர்ந்திருப்பாள்” என்றாள். சாத்யகி அதற்கு என்ன மறுமொழி சொல்வதென்று தெரியாதவனாக அமர்ந்திருந்தான்.

“அஸ்தினபுரியில் என்ன நிகழ்கிறதென்றே தெரியவில்லை” என்று குந்தி சொன்னாள். அவள் பேசவிழைவதை சாத்யகி உணர்ந்துகொண்டான். ஆனால் அவள் வெளிப்படுத்த விரும்பாத எதையோ ஒன்றிலிருந்து தன் அகத்தை விலக்கிக்கொண்டுசெல்லவே பேசுகிறாள் என்றும் தெரிந்தது. ”அங்குள்ள ஒற்றர்கள் சொல்லும் செய்திகள் மேலோட்டமானவை. ஒற்றர் செய்திகள் முற்றிலும் உண்மை என்றாலும்கூட அவற்றிலிருந்து நாம் அடையும் அகச்சித்திரம் பிழையாக இருக்க முடியும். ஏனென்றால் செய்திகளுடன் இணைந்த சூழல் முதன்மையானது. அச்செய்தி சொல்பவனின் முகம் உடல் மட்டுமல்ல அது ஒலிக்கும் அக்காற்றே கூட பலவற்றை நமக்கு சொல்லிவிடும்.”

“இங்கிருந்து வீணாக எண்ணங்களைத்தான் பெருக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. நுரைபோல பொங்கி அவை நம் சித்தத்தை மூடிவிடுகின்றன. பயனற்ற அச்சங்கள். பொருளற்ற தயக்கங்கள்” என்று குந்தி சொன்னாள். “துவாரகையின் ஒற்றர்கள் என்ன சொன்னார்கள்?” சாத்யகி அவள் எதை கேட்கிறாள் என்று புரியாமல் “எதைப்பற்றி அன்னையே?” என்றான். “அஸ்தினபுரியில் என்ன நிகழ்கிறது? ஏன் பேரரசர் காட்டுக்குச் சென்றார்?” சாத்யகி “தாங்கள் அறிந்ததற்கு அப்பால் ஒன்றும் இல்லை” என்றான். “அவர்கள் அன்று அவரை அவரது அறைக்கூடத்தில் சந்தித்திருக்கிறார்கள். எதிர்பாராதபடி பேரரசர் சினம் கொண்டுவிட்டார்.”

“சினம் கொண்டால் ஏன் அங்கநாட்டரசனை தாக்கவேண்டும்?” என்றாள் குந்தி. சாத்யகி திரும்பி அவள் முகத்தை நோக்கி ஓர் அதிர்வை அடைந்தான். அவனறியாத புதியவள் ஒருத்தி அங்கே அமர்ந்திருப்பதாக தோன்றியது. “அவர் அங்கரை தாக்கவில்லை. ஆனால்…” என அவன் சொல்லத்தொடங்க அவள் சீற்றத்துடன் “அவன் ஏழுநாட்கள் படுக்கையில் கிடந்திருக்கிறான். தட்சிணத்து மருத்துவர்களின் முயற்சியால் உயிர்பிழைத்திருக்கிறான். அவன் இறந்திருந்தால்….?” என்றாள். “அவரது மைந்தரை அவர் கொல்லட்டும். அவர்கள் செய்தபிழைக்கு அது உரியதுதான். கர்ணனை எப்படி அவர் தண்டிக்கமுடியும்?”

அவளே அவள் சொற்களை உணர்ந்தமை விழிகளில் தெரிந்தது. ஆனாலும் அவளால் கட்டுப்படுத்திக்கொள்ளமுடியவில்லை. “அவன் அங்கநாட்டின் அரசன். அப்படியென்றால் அஸ்தினபுரிக்கு அவன் அரசவிருந்தினன். அவன் நமக்கும் விருந்தினனே. நம் விருந்தினனை தாக்கியிருக்கிறார் விழியிழந்த மூடர்.” அவள் முகம் சிவக்க, கழுத்துத்தசைகள் இழுபட்டு அதிர பற்களைக் கடித்தபடி சொன்னாள் “அவருக்குத்தெரியும்… வேண்டுமென்றே செய்யபப்ட்டது அது.” சாத்யகி வியப்புக்குரிய எச்சரிக்கை உணர்வொன்றை அடைந்தான். மெல்ல முன்னகர்ந்து “அவர்களின் அனைத்துத் தீமைக்கும் அங்கரே பின்புலம் என்கிறார்கள்” என்றான்.

“யார்?” என்றாள் குந்தி. “யார் அப்படி சொல்கிறார்கள்?” சாத்யகி “பெரும்பாலும்…” என்று சொல்லத்தொடங்க “பெரும்பாலும் என்றால்? வாரணவத மாளிகையை எரித்தது கர்ணனா? அப்போது அவன் அஸ்தினபுரியில் இருந்தானா என்ன? அவனை தங்கள் கருவியாக ஆட்டிவைக்கிறார்கள் காந்தாரத்து நச்சுக்கூட்டத்தினர்” என்றாள். அவள் மூச்சிரைப்பதை அவன் வியப்புடன் நோக்கினான். அவள் தன் கைவிரல்களை நோக்கிக்கொண்டு சற்றுநேரம் அமர்ந்திருந்தாள். மெல்லமெல்ல அவள் அடங்குவது தெரிந்தது. “அங்குதான் இருக்கிறான். நாம் நேரில் பார்த்தால் அனைத்தும் தெளிவாகிவிடும்” என்றாள்.

பின்னர் திரும்பி பனிப்புகையை நோக்கிக்கொண்டு அமைதியில் ஆழ்ந்தாள். சற்றுநேரம் நோக்கியபின் சாத்யகி எழுந்து சென்று மறுபக்கம் கரையாக வந்து கொண்டிருந்த பனிநிழல் மரக்குவைகளை நோக்கிக்கொண்டிருந்தான். “மைந்தா, திருதராஷ்டிரர் முடிசூட்டுக்கு வருவாரல்லவா?” என்றாள். சாத்யகி “ஆம்” என்று சொன்னான். அணங்கு விலகிவிட்டது என்று எண்ணிக்கொண்டான். “அவர் வராமலிருந்தால் பிறகெப்போதாவது இந்த முடிமாற்றமே அவருக்கு ஒப்புதல் இல்லாதது என்றுகூட இவர்களால் சொல்லமுடியும்” என்றாள். சாத்யகி தலையசைத்து “வருவார் என்றார்கள்” என்றான். “அதை தெளிவாகவே பீஷ்மபிதாமகரிடம் பேசிவிடவேண்டும்” என்றாள் குந்தி.

முந்தைய கட்டுரைமுத்திரைகள்
அடுத்த கட்டுரைகாலமும் இடமும் கடந்தாய் போற்றி(விஷ்ணுபுரம் கடிதம் பத்தொன்பது