அலைகளென்பவை….

km

1997 முதல் 2000 வரை நான் தக்கலைக்கு அருகில் உள்ள பழைய கேரளத்தலைநகரமான பத்மநாபபுரத்தில் வாழ்ந்தேன். அப்போது பத்மநாபபுரத்தின் கோட்டைவாசலில் உள்ள பேருந்து நிறுத்தத்தின் முன்னால் ஒரு வீட்டுச் சுற்றுச்சுவருக்குள் சிறிய பீடத்தைக் கண்டிருக்கிறேன். அதில் ‘இங்குதான் குரு ஆத்மானந்தா தன் குருவைக் கண்டடைந்தார்’ என்று எழுதப்பட்டிருந்தது. அதில் அந்த வீட்டுக்காரர்கள் தினமும் விளக்கேற்றி வழிபடுவதுண்டு

கிட்டத்தட்ட நான்குவருடம் அனேகமாக தினமும் இருமுறை அந்த நினைவுச்சின்னத்தைப் பார்த்தபடி நான் கடந்துசென்றிருந்தேன். பலமுறை போகிறபோக்கில் அதைப்பற்றிச் சிந்தனை செய்ததுண்டு என்றாலும் ஆத்மானந்தா யாரென அறியமுற்பட்டதில்லை.அந்த வீட்டு உரிமையாளரின் ஏதோ மூதாதையாக இருக்கும் என்ற எண்ணம்தான் என்னிடம் இருந்தது. அது நம்மூரில் வழக்கம்தானே. நமது குடும்பங்களில் எல்லாம் யாரோ சிலர் சாமியாராகச் சென்றபடியேதான் இருந்திருக்கிறார்கள். அவர்களின் நினைவு மெல்லமெல்ல ஒரு நினைவுச்சின்னமாக சுருங்கிவிடுகிறது. என் குடும்பத்தில் பல துறவிகள் உண்டு.

அதற்கு பன்னிரண்டு வருடம் முன்பு நான் என் வாழ்க்கையின் விதியை தீர்மானித்த அகத்திருப்புமுனையை அடைந்தேன். அப்போது கேரளத்தில் காசர்கோடு நகரில் தற்காலிகத் தொலைபேசி ஊழியராக பணியாற்றிக்கொண்டிருந்தேன். பெற்றோரின் அவமரணம், ஆன்மீகமான நம்பிக்கை இழப்பு ஆகியவற்றுடன் நுண்மையான நரம்புச்சிக்கல்களும் சேர்ந்துகொள்ள நாட்கள் ஒவ்வொன்றும் லாரியில் அடிபட்டுச் சதைந்த பாம்புபோல இழுத்து இழுத்து நெளிந்து நகர, என் வாழ்க்கையின் துயரம் கப்பிய இருண்ட காலகட்டம் அது.

ஒருநாள் தற்கொலை செய்துகொள்ளும் நோக்கத்துடன் காசர்கோட்டுக்கு அருகே உள்ள கும்பளா என்ற ஊருக்குச் சென்றேன். காலையின் முதல் ரயிலில் விழுவதற்காக ரயில்பாதையோரமாக சென்றுகொண்டிருந்தேன். அந்தத் தருணத்தை நான் என் உக்கிரமான இலக்கியப்படைப்பு ஒன்றிலேயே மீண்டும் சொல்லில் நிகழ்த்திக்காட்ட முடியும். விடிகாலையின் பேரழகில் தற்செயலாக , அல்லது மிக இயல்பாக ஈடுபட்டேன் என்று சொல்லவேண்டும். காலையொளியில் வைரம்போலச் சுடர்விட்டு இலைநுனியில் அமர்ந்திருந்த புழு ஒன்றைக் கண்டேன். வாழ்க்கை என்பது மாபெரும் வரம் என்று அப்போது என் அகம் அறிந்தது. இந்த உலகின் ஒவ்வொரு துளியும் பேரழகு கொண்டது, மகத்தானது. இதன் ஒவ்வொரு கணமும் அமுதம்.
Atmananda
வாழ்க்கைக்கு அப்பால் ஏதுமில்லை, வாழ்க்கை வழியாகச் சென்றடையக்கூடியதென்றும் ஏதுமில்லை. வாழ்க்கையே தன்னளவில் முழுமையானது. நேற்றிலாது நாளையிலாது இன்றில் வாழமுடிந்தால் அதுவே வீடுபேறு. அதுவே அத்வைதம். இச்சொற்களை இன்று சொல்கிறேன். அப்போது அந்த தரிசனத்தின் அனுபவம் மட்டுமே இருந்தது. சொற்களில்லாமலிருப்பதே உண்மையான பேரனுபவம். இனி என் வாழ்க்கையில் துயரம் இல்லை என அப்போது முடிவெடுத்தேன்.

அன்றிலிருந்து இன்று வரை இருபத்திரண்டு வருடங்கள் தாண்டிச்சென்றுவிட்டிருக்கின்றன. நான் உண்மையில் வாழ்ந்தேனா என்றறிய விடாது நாட்குறிப்புகள் எழுதி வருகிறேன். நான் சோர்ந்திருந்த நாட்கள் மிக அபூர்வம். நம்பிக்கையிழந்த கணங்களே இல்லை. துயரமடைந்த பொழுதுகள் மிகமிகச்சில. அவற்றை உடனே என் எழுத்தின் கலை மூலம் உவகையாக ஆக்கிக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் இயற்கையுடனான உறவைக் கொண்டாடுகிறேன். ஒவ்வொரு கணமும் என் உள்ளப்படியே வாழ்கிறேன்.

என் திருப்புமுனை நிகழ்ந்த சிலநாட்களில் எனக்கு ஒரு சோதனை நிகழ்ந்தது. என் வேலையை நான் இழக்க நேர்ந்தது. கையில் ஒரு பைசாகூட சேமிப்பு இல்லை. என் அண்ணாவும் வேலையில்லாமலிருந்தமையால் அவருக்கும் நான் பணம் அனுப்ப வேண்டிய நிலைமை. மோசமான அவமதிப்புகளையும் சந்தித்தேன். ‘இல்லை, துயரமில்லை’ என்று சொல்லிக்கொண்டேன். ஆனால் மனதின் ஒரு பகுதி அதை ஏற்காமல் தவித்தது. அப்போது மிக இயல்பாக ஒரு வரி நினைவில் எழுந்தது. ‘Waves are nothing but water, so is the sea’

சிலமாதங்கள் முன்பு ஒரு மலையாள வார இதழின் கட்டுரையில் கவனக்குறைவாக வாசித்த வரி அது. திடீரென அது எனக்குள் பேருருவம் கொண்டுவிட்டது. சில வரிகள் அப்படி நம்மை ஆக்ரமித்து பித்துப்பிடிக்க வைத்துவிடும். நாட்கணக்கில் அந்த வரியைச் சொல்லிக்கொண்டு அலைந்தேன். அது என் ஆன்மாவின் வரியாக ஆகியது. எனக்கான ஆப்த வாக்கியம் அதுவே ‘அலைகளென்பவை நீரன்றி வேறல்ல — கடலும்தான்’

பலவருடங்கள் கழித்து சுந்தர ராமசாமியிடம் அந்தவரியைச் சொன்னேன். சுந்தர ராமசாமி உற்சாகத்துடன் கிட்ட்டத்தட்ட குதித்தெழுந்து ‘என்னை சின்ன வயசில ரொம்ப கவர்ந்த வரி அது. கிருஷ்ணமேனன் சொன்னது… இங்கதான் திருவனந்தபுரத்தில் இருந்தார்… க.நா.சுவுக்கு அவர்தான் பிடித்தமான குரு. அவர்கிட்ட இருந்துதான் க.நா.சு அத்வைதத்தைக் கத்துக்கிட்டார்னு சொல்லணும். ‘பொய்த்தேவு’ ‘ஒருநாள்’ ‘வாழ்ந்தவர் கெட்டால்’ எல்லாத்திலயும் உள்ளோட்டமா இருக்கிற அத்வைதம்கிறது கிருஷ்ண மேனன் சொல்லிக்குடுத்ததுதான்’ என்றார். இந்திய-ஆங்கில எழுத்தாளரான ராஜாராவின் ‘கயிற்றரவு’ ‘காந்தபுரா’ இருநாவல்களும் கிருஷ்ணமேனனின் தத்துவத்தாக்கம் கொண்டவை.

கிருஷ்ண மேனனைப் பார்க்க வரும்போதுதான் க.நா.சு முதன்முறையாக நாகர்கோயிலுக்கு வந்து இளைஞர்களான சுந்தர ராமசாமியையும் கிருஷ்ணன் நம்பியையும் பார்த்திருக்கிறார். கிருஷ்ண மேனன் தன் வீட்டு திண்ணையில் தினமும் ஒருமணி நேரம் வேதாந்த வகுப்புகள் எடுப்பார். அதைக்கேட்க உலகின் பலநாடுகளில் இருந்து அறிஞர்கள் வருவார்கள். ஆல்டஸ் ஹக்ஸ்லி, ஜூலியன் ஹக்ஸ்லி, சாமர்செட் மாம், பால் பிரண்டன், ஹென்ரிச் சிம்மர், ஏ.என்.வைட்ஹெட் என அவரது மாணவர்களில் பல ஐரோப்பிய அறிஞர்கள் உண்டு. அவரைக்காண சி.ஜி.யுங் திருவனந்தபுரம் வந்திருக்கிறார்.

கிருஷ்ண மேனனின் ‘சபையை’ காணச்சென்ற கிருஷ்ணன் நம்பி ‘ஐநா சபை மாதிரி இருக்கு’ என்றார் என்று சுந்தர ராமசாமி சொன்னார். கிருஷ்ண மேனனைப்பற்றிய நினைவுகளை நெடுநாட்கள் கழித்து மீட்டெடுத்து உவகையுடன் பேசிக்கொண்டிருந்தார் சுந்தர ராமசாமி. அவரை நான் அப்படி பார்த்த நாட்கள் குறைவு. கிருஷ்ண மேனன் ஒரு துறவி அல்ல, இல்லறத்தில் இருந்தபடி இயல்பாக ஞானி என்ற இடத்தையும் வகித்தார் என்பது தன்னை எப்படி கவர்ந்தது என்று சொன்னார்.

கிருஷ்ணமேனனை பற்றி மேலும் அறிய நான் முயலவில்லை. ஒரு கட்டுரையை பவன்ஸ் ஜர்னலில் வாசித்தேன். அத்வைத சொல்லாடல்களை விட இலக்கியம் தலைக்கேறியிருந்த வருடங்கள். அந்த ஒரே ஒரு சொற்றொடர் வழியாக எனக்கான அனைத்தையும் அவர் அளித்துவிட்டதாக தோன்றியது.

க.நா.சு அக்காலத்தில் ஒரு கருத்தரங்குக்காக திருவனந்தபுரம் வந்தார். க.நா.சுவுக்கும் சுந்தர ராமசாமிக்கும் அப்போது ஆழமான மன வருத்தம் இருந்தது. திருவனந்தபுரத்தில் க.நா.சுவை சந்தித்த சுந்தர ராமசாமி ’கிருஷ்ணமேனனை பாக்க வருவீங்களே…’ என்று கேட்டதும் க.நா.சு மகிழ்ச்சியில் சுந்தர ராமசாமியின் கைகளைப் பற்றிக்கொண்டார் என்றார் சுந்தர ராமசாமி. ‘வீட்டுக்கு வாங்கோ’ என்று சுந்தர ராமசாமி அழைத்ததும் க.நா.சு கூடவே வந்து விட்டார். அவர் முன்பு தங்கிய அதே விடுதியில் தங்க விரும்பினார். அதை இடித்துவிட்டிருந்தார்கள். ஆகவே சுந்தர ராமசாமி வீட்டு மாடியிலேயே தங்கினார்

நான் காசர்கோட்டில் இருந்து தொலைபேசியில் அழைத்தேன். ’க.நா.சு கிட்ட பேசறீங்களா?’ என்றார் சுந்தர ராமசாமி. தொலைபேசியில் சரளமாகப் பேசமுடியவில்லை. க.நா.சுவுக்கு சரியாக காது கேட்கவில்லை. ’நலமா?’ என்றபின் முடித்துக்கொண்டேன். ‘கிருஷ்ண மேனனைப்பத்தித்தான் பேச்சு’ என்றார் சுந்தர ராமசாமி. சுந்தர ராமசாமியை அத்தனை உற்சாகமாக நான் அபூர்வமாகவே கண்டிருந்தேன். தனக்கும் க.நா.சுவுக்குமான மனக்கசப்புகளைப்பற்றி சுந்தர ராமசாமிக்கே ஆழமான கண்டனம் இருந்திருக்கலாம். ‘சிறுமை தீண்டாத மனிதர்’ என்றுதான் எப்போதும் க.நா.சு பற்றி சுந்தர ராமசாமி சொல்லியிருக்கிறார்

சில மாதங்கள் கழித்து க.நா.சு மரணமடைந்தார். காலச்சுவடில் சுந்தர ராமசாமி உணர்ச்சிகரமான ஓர் அஞ்சலிக்கட்டுரை எழுதினார். ‘க.நா.சு நட்பும் மதிப்பும்’ என்ற அக்கட்டுரை தமிழின் அஞ்சலிக்கட்டுரைகளில் மிக முக்கியமானது. மிக வெளிப்படையாக, தெளிவான இலக்கிய மதிப்பீடுகளுடன் எழுதப்பட்ட அக்கட்டுரையை வியந்துபாராட்டி உணர்ச்சிகரமாக எஸ்.வி.ராஜதுரை ஒரு கடிதம் எழுதியிருந்ததை சுந்தர ராமசாமி காட்டினார்.

ஆனால் வழக்கம்போல அஞ்சலிக்கட்டுரை என்றால் பட்டையான புகழ்பாடலாக மட்டுமே இருக்கவேண்டும், விமரிசனம் இருக்கக்கூடாது என்ற நோக்கில் அக்கட்டுரை க.நா.சுவை அவதூறு செய்கிறது என்று தஞ்சை பிரகாஷ் போன்றவர்கள் வசைபாடினார்கள். எனக்கு அக்கட்டுரை ஒரு முக்கியமான முன்னுதாரணம். அக்கட்டுரையை போன்றே நான் சுந்தர ராமசாமிக்கான அஞ்சலி நூலை எழுதினேன். சுந்தர ராமசாமியின் கட்டுரை எப்படி க.நா.சுவை கண்ணெதிரே நிறுத்துகிறதோ அப்படியே சுந்தர ராமசாமியை கண்ணெதிரே நிறுத்தும் நூல் ’சுரா நினைவின் நதியில்’ அதற்கும் அதே போல விமரிசனங்கள் வந்தன.

சுந்தர ராமசாமி எழுதிய கட்டுரையை நான் தட்டச்சுப்பிரதியில்தான் வாசித்தேன். என் கருத்துக்களைச் சொன்னேன். அச்சான பின் வாசிக்கவில்லை. மேலும் பத்து வருடங்கள் கழித்து சுந்தர ராமசாமி அந்தக்கட்டுரையை விரிவாக்கம் செய்து ‘நினைவோடை’ வரிசையில் ‘க.நா.சு’ என்ற நூலாக வெளியிட்டார். அந்நூலில் எனக்கு ஒரு ஆச்சரியம் இருந்தது. சுந்தர ராமசாமி கிருஷ்ண மேனனை பற்றிச் சொல்லும்போது அடைப்புகுறிக்குள் ஆத்மானந்தா என்று சொல்லியிருந்தார்.

அதே ஆத்மானந்தாவா? நான் உடனே பத்மநாபபுரம் சென்று விசாரித்தேன். ஆமாம், அவரேதான். அவர் பலவருடம் பத்மநாபபுரத்தில் பணியாற்றியிருக்கிறார். ஒருவகையில் அவர் என் மானசீக குரு. அவரது நினைவுச்சின்னம் வழியாகத்தான் அவரது ஆப்தவாக்கியத்தை மனதுக்குள் ஓடவிட்டபடி அவரை அறியாமல் நான்குவருடம் சென்றுகொண்டிருந்திருக்கிறேன்.

மறுபிரசுரம்/முதற்பிரசுரம் 2010

முந்தைய கட்டுரைமுத்துலட்சுமி ராகவன், மற்றும் பெண்கள்
அடுத்த கட்டுரைநற்றுணை சந்திப்பு