அன்புள்ள ஜெ,
‘கறுப்பர் உளவியல்’ கட்டுரையில் அவர்கள் தாழ்வுணர்ச்சி கொண்டிருப்பதற்கான காரணங்கள் சொல்லப்படுவதில்லையே. அதையும்சேர்த்துத்தானே நாம் சிந்திக்க வேண்டும். அவர்களை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதையும் சேர்த்துத்தானே இதைப்பற்றிச் பேசவேண்டும். உங்கள் கருத்து மொத்தையான ஒரு மனப்பதிவு போல இருக்கிறது அல்லவா? என் நண்பர்களிடம் விவாதித்தபோது இதையே சொன்னார்கள். அதே மாதிரி சாதி பற்றிய கட்டுரையிலும் பொதுவான கருத்துக்கள் தான் இருக்கின்றன.
நவீன் வைத்தியநாதன்
அன்புள்ள நவீன்,
என்னைப்பொறுத்தவரை இந்தவிஷயத்தில் வெளிபப்டையாகவும் நேர்மையாகவும் சிந்திக்கவும் பேசவும் மிகச்சிலரால்மட்டுமே முடியும். பெரும்பாலானவர்கள் , குறிப்பாக தங்களை எழுத்தாளர்களாக எண்ணிக்கொண்டிருக்கும் பதிவர்கள் மற்றும் சிற்றிதழ் அரசியலாளர்கள், இந்தமாதிரி எந்த ஒரு விஷயத்தையும் தங்களை முற்போக்கான, அறச்சீற்றம் கொண்ட கொள்கைத்தங்கங்களாகவும் மானுடநேய மாமனிதர்களாகவும் காட்டிக்கொள்வதற்கான சந்தர்ப்பமாகவே பயன்படுத்திக்கொள்வார்கள்.
அதற்குச் சிறந்த வழி பரவலாக மேடையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல்சரிநிலைகளை அப்படியே கண்கள் சிவக்க, முடிந்தவரை அடிவயிற்றை எக்கி கூச்சலிடுவதுதான். அவர்களின் சொந்தவாழ்க்கை சாதிக்குள், மதத்துக்குள் செருகிக்கிடப்பதை மறைப்பதற்கான வழி அது. தமிழகத்தில் கடந்த ஐம்பதாண்டுக்காலமாக எல்லா மேடைகளிலும் இந்த ஓங்கிக் கூச்சல்களை கண்டுவருவதனால் இவர்களை ஒருவகை சருகுப்புயலாக மட்டுமே நான் மதிப்பிடுகிறேன்
அத்துடன் ஒரு கட்டுரையின் ஒட்டுமொத்த தொனியோ, அதன் மையக்கருவோ புரியாவிட்டால் அதற்காக மெனக்கெடாமல் அந்த கட்டுரையின் ஒருவரியைப் பிடுங்கி அதற்கு மனம்போல பொருள் கொடுத்து ‘விவாதிக்க’ ஆரம்பிப்பதும் நம்முடைய ‘அறிவுச்சூழலின்’ மரபு. கணிசமான எதிர்வினைகளில் இதைக் காணலாம். இவற்றுக்கு இந்த சிக்கல்களை எல்லாம் தாண்டித்தான் தமிழ்நாட்டில் எதையாவது பேசமுடிகிறது. உண்மையில் அனைத்தையும் அபத்தமாக பொதுமைப்படுத்துபவர்கள் இந்த இருவகையினர்தான்.
நீங்கள் சொன்ன இரு கட்டுரைகளும் ஆய்வுக்கட்டுரைகள் அல்ல. அவ்வாறு அவை சொல்லிக்கொள்ளவுமில்லை. என்னுடைய சாதிகுறித்த கட்டுரை தனியனுபவ தளத்தில் மட்டுமே நின்று எழுதப்பட்டது. அதன் கருத்துக்களுக்கான ஆதாரம் என்பது தனியனுபவம் மட்டுமே. அதை வாசிக்கும் ஒருவர் நேர்மையாக தன் தனியனுபவத்துடன் அதை பொருத்திக்கொண்டு யோசித்தாரென்றால் ஒரு உரையாடல் சாத்தியமாகும்
ஒவ்வொருவரும் தங்கள் தனியனுபவங்கள் சார்ந்து நேர்மையாக இந்த விஷயங்களை பேச ஆரம்பிக்கும்போது வழக்கமான வரலாற்று, கோட்பாட்டு விவாதங்களில் விடப்படும் ஓர் இடைவெளி நிரப்பப்படும். நம் சமூகத்தில் நாம் சந்திக்கும் விஷயங்களை நாம் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் ஏன் பேசக்கூடாது என்பதே என் வினா
தனியனுபவம்சார்ந்து பேசும்போது நாம் பொதுமைப்படுத்துவதில்லை. ‘இதுவே அறுதி உண்மை’ என்றல்ல ‘என் வரையில் நான் அறிந்தது இது’ என்றே அந்த பேச்சின் தொனி உள்ளது. தமிழ்ச்சூழலில் இருபதாண்டுக்காலமாகச் செயல்படும் எனக்கு எங்கும் எதிலும் சாதியே உள்ளது என்பது ஓர் அனுபவம். சாதியைப்பற்றிய கவனம் இல்லாமல் செயல்படுவது பொதுவெளியில் சாத்தியமாக இல்லை. தனிமனித உறவுகளில் அது ஒரு உட்சரடாக ஓடுகிறது.
அதேசமயம் சாதியைப்பற்றி பேசவேகூடாது என்ற இறுக்கமான இடக்கரடக்கலும் நம்மிடம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனால் பலசமயம் இறுக்கமும் அன்னியத்தன்மையும் உருவாகிறது. எல்லா விவாதங்களும் இடக்கரடக்கல்களின் மேல்தளத்திலேயே நிகழ்ந்து முடிகின்றன. அதைக்களைவதற்கு சாதியின் தோற்றம், அதன் இன்றைய செயல்பாடு ஆகியவற்றைக் குறித்த வெளிப்படையான புறவயமான சமூக,வரலாற்று ஆய்வுகள் தேவை என்பதே நான் சொல்லவந்தது.
நெருக்கமான நண்பர்களுடனான பேச்சுகளிலாவது சாதியை ஒரு வேடிக்கையாக ஆக்கிக்கொள்வது அந்த எல்லைகளை தாண்டுவதற்கு உதவும். சமூக இடைவெளிகளை தாண்டுவதற்கு உலகமெங்கும் எல்லா தளத்திலும் இயல்பாக கடைப்பிடிக்கப்படும் வழிமுறையும் அதுவே. சாதியைப் பேணுவதற்காக அல்ல, அதை சாதாரணமாக ஆக்கி சிறுமையாக்கி கடந்துசெல்லவே நான் அது சார்ந்த கிண்டலை பயன்படுத்தலாமென சொல்கிறேன்.
என் தனிவாழ்க்கையில் சாதி இல்லை. நான் சாதி மாறி மணம்செய்துகொண்டவன். என் குடும்பத்திலும் பெரும்பாலும் அப்படியே. நாளை என் குழந்தைகளும் அப்படியே. சாதியின் சமூக அந்தஸ்து எனக்கோ என் பிள்ளைகளுக்கோ தேவை இல்லை என்பதே என் கொள்கை. எதை நான் சொல்கிறேனோ அதுவே நான். ஆனால் என் சாதி சார்ந்தே என் முன்னோரின் வரலாறும் அவர்கள் உருவாக்கிய பண்பாடும் உள்ளது என்பதனால் அதன் சாதகமான அம்சங்களை மட்டும் என் குழந்தைகள் சுவீகரித்துக்கொள்ளவேண்டும் என்று சொல்வேன். இன்றைய அடையாளமாக அல்ல, நேற்றைய பின்புலமாக.
அதேபோலவே கறுப்பர்களைப்பற்றி சிவா எழுதியதும். அவர் அவர்களிடையே வாழ்கிறார். அவரது சொந்த அனுபவம் சார்ந்து சில அவதானிப்புகளைப் பேசுகிறார். அவை தவறா சரியா என விவாதிக்கலாம். ஆனால் அவற்றைப் பேசுவதே ‘அபச்சாரம்’ என்ற மனநிலை என்பது நாம் எப்படிப்பட்ட மூடிய சமூகத்தில் வாழ்கிறோம் என்பதற்கான அடையாளம். எதையும் நம்மால் இப்படி மதமாக மாற்றியே பார்க்க முடிகிறது. ‘முற்போக்கு’ கூட ஒரு அடிப்படைவாத மதமாக ஆகிவிட்டிருக்கிறது இவர்களிடையே!
தன் அனுபவம் சார்ந்து சிவா எழுதிய கடிதத்துக்கு என்னுடைய அனுபவம் சார்ந்து ஒரு எதிர்வினை ஆற்றியிருக்கிறேன். காரணம் அனுபவம் சார்ந்து ஒருவர் எழுதும் ஒன்றுக்கு அனுபவம் சார்ந்தே பதில் சொல்லமுடியும். ஆதரித்தோ எதிர்த்தோ. இரு கட்டுரைகளும் சாதி அல்லது நிறம் குறித்த வரலாற்றுச் சித்திரத்தை அளிக்க முனையவில்லை. அப்படி அளித்து வேறு கட்டுரைகளை எழுதலாம், இங்கே உள்ளது அனுபவப் பதிவு மட்டுமே.
கறுப்பர்கள் தாழ்வுணர்ச்சி கொள்வது தவறு என்ற சித்திரத்தை சிவாவின் கட்டுரையிலும் சாதி தேவை என்ற குரலை என் கட்டுரையிலும் வலிந்து உருவி எடுக்க முனைவதன் நோக்கம் ஒன்றுதான், எந்த விவாதத்தையும் தாங்கள் அறிந்த ‘ஒன்றும் ஒன்றும் இரண்டு’ என்ற எளிமையான வாய்ப்பாட்டுக்குள் கொண்டுசென்ற பின்னரே பேச முடியும் என்ற அறிவார்ந்த வறுமை அல்லது சிறுமை.
உங்களுக்கும் நண்பர்களுக்கும் இன்னும் புரியவில்லை என்றால் மீண்டும் சொல்கிறேன். சிவாவின் கடிதம் சென்றகால கட்டம் நவீன வாழ்க்கையில் உருவாக்கிய உளச்சிக்கல்கள் எப்படி முக்கியமான இடம் வகிக்கின்றன, அவற்றை எப்படி கவனமாகக் கையாளவேண்டியிருக்கிறது என்பதைப்பற்றி மட்டுமே சொல்கிறது. இத்தகைய பல்வேறு கவனங்களுடன்தான் நாம் எல்லாவற்றையும் செய்துகொண்டிருக்கிறோம், இந்த கவனம் இல்லாமல் நவீன காலத்தில் வாழ்வதற்கு மிகச்சிறந்த வழி என்பது அந்த உளச்சிக்கல்களை வரலாற்று ரீதியாக ஆராய்வதும் பொதுவான வேடிக்கையாக ஆக்கிக்கொள்வதும்தான் என்று என் கட்டுரை சொல்கிறது
உண்மையை நேரடியாக விவாதித்து புரிந்துகொள்வது உங்கள் நோக்கம் என்றால் இதுவே புரியும். தமிழக வழக்கப்படி அப்பழுக்கற்ற முற்போக்குப்பிழம்பாக அச்சிலும் மேடையிலும் தோற்றமளிப்பதும் அதன் வழியாக சொந்த வாழ்க்கையின் அப்பட்டமான பிற்போக்குத்தனத்தை மூடிக்கொள்வதுமே உங்கள் இலக்கென்றால் இந்தக் கட்டுரையிலும் நீங்கள் பிற்போக்கைக் கண்டுபிடிக்கலாம். அந்த முற்போக்குப் போர்வை வெதுவெதுப்பானது, உள்ளே இருக்கும் எதையும் வெளியே விடாதது
ஜெ
http://www.jeyamohan.in/?p=1330 அரசியல்சரிநிலைகள்
http://www.jeyamohan.in/?p=4157 நாடார்,நாயர்,மிஷனரிகள்…
விவாதம் என்னும் முரணியக்கம்
பண்பாட்டின் பலமுகங்கள்.. http://www.jeyamohan.in/?p=4014
http://www.jeyamohan.in/?p=5296 பசும்பொன்,கடிதம்
சாதியை வைத்துக்கொண்டு என்ன செய்வது? http://www.jeyamohan.in/?p=5256
தெருநாயும் பிராமணியமும்:ஒருகடிதம் http://www.jeyamohan.in/?p=5173
பசும்பொன்
மிஷனரி வரலாறு, வாஞ்சி, சக்கிலியர் http://www.jeyamohan.in/?p=4495