இந்துஞான மரபில் ஜெயமோகன்

unnamed

ஜெ,

உங்களுக்கு இந்து அமைப்புகளின் பெருவாரியான உதவி இருப்பதனால்தான் உங்கள் ‘தலைகாணி சைஸ்’ புத்தகங்களெல்லாம் உடனே மறுபதிப்பு வரும்படியாக விற்கின்றன என்று என் நண்பர்கள் சொல்கிறார்கள். அதில் எந்த அளவுக்கு உண்மை?

அரசு பார்த்திபன்

Prayagai_02

அன்புள்ள அரசு,

நேற்று ஒரு இந்து அமைப்பினர் வீட்டுக்கு வந்தனர். அதிதீவிர கிருஷ்ண பக்தர்கள். பெரிய அமைப்பு. வருடம் ஒருகோடிரூபாய் வரை புரட்டுபவர்கள். சரிதான், ஒரு பத்து வெண்முரசு இவர்களிடம் போனால்கூட பதிப்பாளருக்கு ஆசுவாசம் தானே என்று முடிவெடுத்தேன்

ஒருமணிநேரம் கடும் சொல்லுழைப்பு. மகாபாரதம் எழுதும் பணியின் சுமை. அதனால் வந்த முதுகுவலி. அதே சமயம் அதன் முக்கியத்துவம், மகாபாரதத்தை மொழியாக்கம் செய்து அரும்பணியாற்றிய தி.ஈ. ஸ்ரீனிவாசாச்சாரியாரும் ம வீ ராமானுஜாச்சாரியாரும் அடைந்த அவமதிப்புகள், அவர்களுக்குப்பின் அது மறுபதிப்பாக எழுபது ஆண்டுக்காலம் ஆன அவலம் அனைத்தையும் சொன்னேன். உச் உச் உச் கொட்டிக் கேட்டார்கள். ’நல்லா பண்ணுங்கோ… பெரிய வேலை. நல்லாவரும்” என ஒருவர் ஆசீர்வதித்தார். ஒருவர் கண்ணீர் மல்கி ‘கிருஷ்ணார்ப்பணம்’ என்றார்

சரிதான் தூண்டில் சிக்கிவிட்டது என எண்ணி கீழே போய் வெண்முரசு ஒரு செட் எடுத்துவந்தேன். திகைத்தார்கள். ‘இவ்வளவு பெரிய புக்கா?” என்றார்கள். தொடவே இல்லை. நான் எடுத்து நீட்ட வாங்கி தடவிப்பார்த்தார்கள். ஒருவரிகூட படிக்கவில்லை

”இதுக்கெல்லாம் காசு குடுப்பானா?” என்றார் ஒருவர். “கொஞ்சம் வரும். பெரிசா ஒண்ணுமில்லை” என்றேன். அவர் “கிருஷ்ணனால உங்களுக்கு ஸம்பத் வருது” என்றார் ரசீது புத்தகத்தை எடுத்து “தட்சிண திருப்பதி. புதிசா விரிவாக்கி கட்டி வருஷா வருஷம் அகண்ட நாமபஜனையும் கீதாபாராயணமும் பண்றோம். நீங்க நல்லாவே பணம் குடுக்கலாம். கிருஷ்ணன் அள்ளிக்குடுப்பான்” என்றார்

என்ன செய்வது? என் சக்தியை விட பெரிய தொகையை கொடுத்தாக வேண்டியிருந்தது. போகும்போது ஒருவர் இருப்பதிலேயே சிறியதாக நீலத்தை எடுத்தார். ‘இத உங்க அனுக்ரகமா குடுங்கோ. வேணுமானா படிச்சுட்டு குடுத்திடறேன்”. ‘இல்லீங்க வச்சுக்கிடுங்க” என்றேன்

வெண்முரசு எழுதுவதனால் நான் ஒரு பிரமுகர் ஆகி கைக்காசு மேலும் செலவழிகிறது என்பதே லாபம். இன்றுவரை இந்தியாவிலோ வெளிநாட்டிலோ உள்ள எந்த ஒரு இந்து அமைப்பும் ஒரு பிரதிகூட வாங்கியதில்லை. முழுக்க முழுக்க இலக்கியவாசகர்களின் தனிப்பட்ட ஆர்வம்தான். வாங்குபவர்களில் 90 சதம் பேரை எனக்கே அடையாளம் தெரியும்!

ஆனால் இந்து சமூகம் சாமர்த்தியமானது. ஒருபோதும் அழியாது, பிழைத்துக்கொள்ளும் என நான் அடைந்த ஆறுதலுக்கு அந்தப்பணம் கொடுத்தது தகும்தான்.

ஜெ

2

முதற்கனல் மறுபதிப்பு வந்துள்ளது. முதற்கனல் செம்பதிப்பும் பிரயாகை செம்பதிப்பும் வெளிவரவுள்ளன. தொடர்புகளுக்கு இந்த இணைப்பைச்சுட்டவும்

முதற்கனல் செம்பதிப்பு மீண்டும்

பிரயாகை வெளியீடு

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 72