பகுதி 15 : யானை அடி – 5
மருத்துவர் உடலை தொட்டதும் துரியோதனன் விழித்துக்கொண்டான். நண்பகல் என்று தெரிந்தது. ஆதுரசாலைக்குள் வெயிலொளி நிறைந்திருந்தது. அவன் கண்கள் கூசி கண்ணீர் நிறைந்து வழிந்தது. அவர் அவன் நெஞ்சைத்தொட்டு மெல்ல அழுத்தி “வலி எப்படி இருக்கிறது?” என்றார். “இருக்கிறது” என்று அவன் முனகியபடி சொன்னான். “இளையோன் எப்படி இருக்கிறான் மருத்துவரே?” மருத்துவர் “உயிர்பிழைத்துவிட்டார். ஆனால் எழுந்து நடமாட மேலும் ஒருமாதம் ஆகலாம்” என்றார். துரியோதனன் விழிகளை மூடிக்கொண்டு “அது போதும்” என்றான்.
அவர் தன் கைகளால் அவன் நெஞ்சை அழுத்திக்கொண்டே சென்றார். “தாளமுடியாத வலி இருக்கையில் சொல்லிவிடுங்கள்.” அவன் முனகியபடியே இருந்து ஓர் இடத்தில் அலறினான். அவர் கையை எடுத்து “நுரையீரல் கிழிந்திருக்கிறது. நெஞ்சுக்குள் இரண்டு எலும்புகள் உடைந்துவிட்டன” என்றார். துரியோதனன் பற்களால் உதடுகளை கடித்துக்கொண்டான். “எப்படி முதுகெலும்பு முறியாமல் போயிற்று என்பதுதான் வியப்பு” என்றார் மருத்துவர். “தசைகளனைத்தும் கட்டுடைந்து இழுபட்டுவிட்டன. எத்தனைநேரம் அவரிடம் மற்போரிட்டீர்கள்?” துரியோதனன் ஒன்றும் சொல்லவில்லை.
மருத்துவர் பெருமூச்சுடன் எழுந்து “உண்பதற்கான மருந்துகளை தவறாமல் அளிக்கச் சொல்லியிருக்கிறேன். உடலெங்கும் மருந்து ஓடிக்கொண்டிருக்கவேண்டும். உள்ளே சீழ்கட்டினால் பின்னர் ஒன்றும் செய்யமுடியாது. உடல்வெப்பு வராமலிருக்கவேண்டும். ஒவ்வொரு நாழிகைக்கும் உங்களை வந்து நோக்கி செய்திகளை எனக்கு அளிக்கும்படி சொல்லியிருக்கிறேன்” என்றார். துரியோதனன் “கர்ணன் எப்படி இருக்கிறான்?” என்றான். “அவருக்கு பெரிய அடி இல்லை. நுரையீரலுக்குள் புண் வந்திருக்கலாம். நாலைந்துநாட்கள் மூச்சில் குருதி வந்தது. இப்போது தேறிவிட்டார். ஆனால் எழுந்தமர இன்னும் ஒரு வாரமாகலாம்.” துரியோதனன் அவர் போகலாம் என்று தலையசைத்தான்.
அவரது காலடிகளை கேட்டுக்கொண்டு கண்மூடிக்கிடந்தான். மூச்சுவிடுவது அத்தனை கடும் பணியாக ஆகுமென எண்ணவே முடியவில்லை. பெருமூச்சு விடவேண்டும் என்ற உந்துதல் நெஞ்சுக்குள் இருந்தபடியே வந்தது. ஆனால் தும்மலும் பெருமூச்சும் வரவேகூடாதென்று வைத்தியர் சொல்லியிருந்தார். நெஞ்சு விம்மும்போதெல்லாம் வலிகுறித்த எச்சரிக்கை எழுந்து அவன் மெல்ல மூச்சை குறைத்து விட்டான். புரண்டுபடுக்கவேண்டும் என்று தோன்றியதுமே வலி குறித்த அச்சம் வந்து உடலை இறுகச்செய்தது. பின்னர் உடலின் ஒவ்வொரு தசையையும் அசைத்து மிகமெல்ல நெஞ்சைத் தூக்கி புரண்டான். நெஞ்சு அன்றி எதுவுமே உடலில் இல்லை என்பதுபோல.
நெஞ்சை சுற்றியிருந்த பெரிய கட்டுக்குள் தோலில் சிறிய வண்டுகள் ஊர்வதுபோல நமைச்சல் எடுத்து அது பெருகிப்பெருகி வரும். கைகள் துடித்து விரல்களை இறுக்கிக்கொண்டு அந்த எழுச்சியை வெல்லவேண்டியிருக்கும். ஒவ்வொரு வண்டையாக உணரமுடிவதுபோலிருக்கும். கட்டை பிய்த்து வீசி… ஆனால் அந்த எண்ணமே வலியளிக்கும். பின்னர் அந்த நமைச்சலை கூர்ந்து நோக்க பயின்றான். தவிக்கும் கைகளை அடக்கிக்கொண்டு ஒவ்வொரு வண்டையாக கூர்வான். ஒவ்வொன்றுக்கும் ஒருதிசை. ஒரு முறை. பின்னர் அவை மெல்ல அமைந்து மறையும். வண்டுகளுக்காக ஏங்கியபடி அவன் தோல் காத்துக்கிடக்கும்.
எப்போதும் சற்று அகிபீனாவின் மயக்கில்தான் இருந்தான். ஆகவே முழுமையான துயில் ஒருபோதும் அமையாவிட்டாலும் சிறிய துயில்களின் தொடராக சென்றுகொண்டிருந்தன நாட்கள். விழிக்கும்போது ஒவ்வொருமுறையும் இப்போது என்ன நேரம் என்ற எண்ணம் வரும். பகலா இரவா என்ற திகைப்பே நெடுநேரம் நீடிப்பதுண்டு. எங்கிருக்கிறோம் என்பது மட்டும் மயங்குவதில்லை. துயில்கையில் நெஞ்சுகுறித்த பதற்றத்துடன் விழிதளர்ந்து விழிக்கையில் முதல் உணர்வாக அது தன்னுடனிருப்பதை உணர்வான். துயிலுக்குள் கூட அந்த தன்னுணர்வு அவனுடனிருந்தது. கனவுகளுக்குள் கூட அவன் நெஞ்சுக்கட்டுடன்தான் நீந்திக்கொண்டிருந்தான்.
மீண்டும் விழித்தபோது வாயும் தொண்டையும் நன்கு வறண்டிருந்தன. மஞ்சத்தை கைகளால் தட்டினான். ஏவலன் ஓடிவந்து வணங்கி நிற்க “நீர்” என்றான். ஏவலன் கொண்டுவந்து தந்த நீரை அருந்திவிட்டு குவளையை திருப்பிக்கொடுத்தான். “இளையோன் என்ன செய்கிறான்?” என்றான். “துயில்கிறார்.” துரியோதனன் “ம்” என்றான் மார்பில் சொட்டிய நீரை துடைத்துக்கொண்டே. ”இப்போது என்ன நேரம்” என்றான். “மாலையாகிறது…” என்றான் ஏவலன்.
வெளியே இருந்து காவலன் வந்து வணங்கி நின்றான். அவன் விழிதூக்கியதும் “காசியிளவரசி” என்றான். துரியோதனன் தலையசைத்ததும் அவன் சென்றான். அந்தத்திசையையே நோக்கியபடி துரியோதனன் கிடந்தான். அவளுடைய உருவம் வாசலில் தெரிந்ததும் நெஞ்சில் ஏற்பட்ட அதிர்வில் உடலெங்கும் வலி பரவியது. முதல்முறையாக வலி இனிமையாக இருந்தது. அவள் அருகே வரும் ஒலி இனிய சொற்கள் போல. கைவளை அணிந்தபெண் யாழில் விரல்மீட்டுவதுபோல. மேலும் அவள் அருகே வர அவ்வொலியை கூர்வதற்காக அவன் விழிமூடினான். காதுக்குள் ஆடையின் சரசரப்பு ஒலித்தது. சிலம்புகளின் தண்ணொலி. மெல்லிய மணம். மலர்மணம், ஆடைமணம், அவளுடைய கழுத்தின் முலையிடுக்குகளின் மணம்.
“எப்படி இருக்கிறார்?” என்றாள். அவன் விழிதிறந்தான். “துயில்கிறீர்களோ என நினைத்தேன்” என்றாள். “இல்லை, உன் காலடிகளை கேட்பதற்காக விழிமூடினேன்” என்றான். அவள் சிரித்துக்கொண்டே அமர்ந்தாள். “மிக நுட்பமாக அவற்றை கேட்கவிரும்பினேன்” என்றான். “ஏன்?” என்று மெல்லியகுரலில் கேட்டாள். “அந்த ஓசையை நான் கனவிலும் கேட்கமுடியும்.” அவள் அவன் கைகளை தொட்டாள். கண்கள் கனிய “என்ன இது? உங்களைப்பற்றி நான் இப்படி நினைக்கவில்லை” என்றாள். “என்ன நினைத்தாய்?” என்றான். “அஸ்தினபுரியின் இளவரசர் கல்லினும் கடினமானவர் என்றார்கள்.” துரியோதனன் “ஆம், உண்மை. இல்லையேல் இப்போது உயிருடனிருப்பேனா என்ன?” என்றான்.
பானுமதி பெருமூச்சுவிட்டு “அரசரும் விப்ரரும் சப்தகோடிக்கு சென்றுவிட்டார்கள் என்று செய்தி வந்தது” என்றாள். “தனியாகவா?” என்றான் துரியோதனன். “ஆம், வேறு எவரும் உடன் வரலாகாது என்று அவர் சொல்லிவிட்டார். இருவரையும் சப்தகோடியின் சிறுதுறை அருகே கொண்டுசென்று இறக்கிவிட்டார்கள். அவர்கள் தங்க அங்கே ஒரு குடில் அமைக்கப்பட்டிருக்கிறது.” துரியோதனன் கண்களை மூடி “நான் இனிமேல் அவர் முன் செல்லக்கூடாது என்று அவர் சொல்வதை கேட்டேன்” என்றான். பானுமதி “அது எந்தத் தந்தையும் சினமெழுகையில் சொல்வதுதானே? அவர் இங்கு வராமலா இருக்கப்போகிறார்?” என்றாள்.
“வருவார்” என்ற துரியோதனன் “அதுகூட உறுதியில்லை. ஒருவேளை வராமலும் போகலாம். இளையதந்தை செல்லும்போது அவர் மீண்டுவருவார் என்றுதான் தந்தை எதிர்பார்த்தார். இல்லையேல் அவரே கிளம்பிச்சென்றிருப்பார். ஒவ்வொரு வருடமும் மழைக்காலத்திற்கு முன் வருவார் என்று எண்ணி காத்திருப்பார். மழைக்காலம் முடிந்தபின் வரமுடியாது போனமைக்காக ஒரு செய்தியை இளையதந்தை அனுப்புவார். அப்படியே வருடங்கள் சென்றன.” வலியுடன் பெருமூச்சுவிட்டு “அஸ்தினபுரியின் அரசர்களுக்கு காட்டுக்குள் சென்று மறைய ஒரு விருப்பம் உள்ளே எங்கோ இருக்கிறது. மூதன்னையர் சத்யவதியும் அம்பிகையும் அம்பாலிகையும் காடுபுகுந்து மறைந்தனர். காடு அவர்களுடைய இடம் என்றும் இங்கு நகருக்கு வந்து வாழ்ந்து மீள்வதாகவும் எண்ணிக்கொள்கிறார்கள்” என்றான்.
“அரசர் அங்கே நெடுநாள் இருக்க முடியாது” என்றாள் பானுமதி. “அவர் தன் மைந்தர்களின் முடிசூடலை தவிர்க்கலாம். பாண்டவர்களின் முடிசூடலை ஒருபோதும் தவிர்க்கமுடியாது. அவர் வந்தாகவேண்டும், இல்லையேல் அது பிழையாகவே பொருள்படும்.” துரியோதனன் “அதைத்தான் நானும் நம்பிக்கொண்டிருக்கிறேன். அவர் தருமனின் முடிசூடலை தவிர்க்கமாட்டார்” என்றான். பானுமதி “அன்னைதான் துயர்கொண்டிருக்கிறார். நேற்று பகல் முழுக்க அவருடன்தான் இருந்தேன். தானும் அவருடன் வனம்புகுந்திருக்கவேண்டும் என எண்ணுகிறார். அவர் தனித்துச்சென்றது தன்னை விலக்கவே என்கிறார். அவரை ஆறுதல்படுத்தவே முடியவில்லை” என்றாள்.
அவன் முகம் மாறியதைக் கண்டதும் அவள் உடனே புன்னகைசெய்து “என்னை விட அன்னையை துச்சளை நன்கறிவாள். அவள் துவாரகையில் யாதவ அரசி என்னசெய்கிறார் என்று பேசத்தொடங்கிவிட்டாள். அங்கே யாதவ அரசிதான் குலமுதல்வியாக கருதப்படுகிறாள் என்றதும் முகம் குருதியென சிவந்துவிட்டது. அவள் குலம் என்ன என்று நான் அறிவேன் என்று சொன்னபோது அன்னை முழுமையாகவே மீண்டு வந்துவிட்டார் என்று தோன்றியது” என்றாள். துரியோதனன் புன்னகைசெய்தான். “குண்டாசி என்ன செய்கிறான்?” என்றான். “இங்கு என்னை பார்க்க வந்தான். என் காலடியில் தலைவைத்து கதறி அழுதான். இனிமேல் மதுவை தொடமாட்டேன் என்றான்.”
பானுமதி சிரித்து “அன்று மாலைதான் முழுமையாக களிகொண்டு என்னை பார்க்கவந்தார். நான் வந்தபின்னர்தான் இப்படியெல்லாம் நிகழ்கிறது, உடனே காசிக்கு திரும்பிச்செல்லவேண்டும் என்று சொல்லி வசைபாடினார்” என்றாள். “அவன் மீளமாட்டான்” என்றான் துரியோதனன். “ஆம், அவர் தாயும் மீளவில்லை அல்லவா?” என்றாள் பானுமதி. அவள் என்ன சொல்கிறாள் என்று புரியாமல் துரியோதனன் நிமிர்ந்து நோக்கினான். அவள் புன்னகையுடன் “அரண்மனையிலிருந்து அணங்கை தாங்கிய உடல் ஒன்று அகன்று சென்றுவிட்டது. அணங்கு இன்னமும் அப்படியே உலவுகிறது என்று சொல்கிறார்கள் சேடிப்பெண்கள். மணமுடித்து நகருக்கு வரும் அரசகுலமகளிரில் எவரை அது பற்றிக்கொள்ளும் என்று அவர்களுக்குள் சொல்லாட்டம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது” என்றாள்.
துரியோதனன் கண்களை மூடிக்கொண்டு “அன்னையை நான் ஓரிருமுறை சென்று பார்த்திருக்கலாமோ என இப்போது தோன்றுகிறது. அவர்களை பார்க்காமலிருக்கத்தான் இன்றுவரை முயன்றிருக்கிறேன் என்று படுகிறது. அவர்கள் அப்படி இருப்பதில் எனக்கும் ஒரு பங்கு உண்டு என்று உள்ளம் சொல்லியிருக்கிறது” என்றான். பானுமதி “பார்த்தால் மட்டும் என்ன ஆகப்போகிறது?” என்றாள். “இந்த வெறுமை இருந்திருக்காது. இத்தனை உளச்சுமை இருந்திருக்காது” என்றான்.
பானுமதி பேசாமலிருந்தாள். துரியோதனன் “தந்தை சம்படை அன்னையின் எரிசடங்குக்கு வந்ததை நினைவுறுகிறேன்” என்றான். “அவர் குருதியனைத்தையும் இழந்தவராக நடுங்கிக் கொண்டிருந்தார். சஞ்சயன் அவரை தாங்கிக்கொண்டு வருவதுபோல தோன்றியது. சஞ்சயனிடம் மீண்டும் மீண்டும் எதையோ கேட்டுக்கொண்டிருந்தார். என்ன கேட்டார் என்று அவனிடம் பின்னர் கேட்டறிந்தேன். தருமனுக்கும் குந்தியன்னைக்கும் சொல்லிவிட்டீர்களா என்றே கேட்டுக்கொண்டிருந்திருக்கிறார்.”
”அவர் உள்ளத்தில் ஏதோ நினைவு ஓடிக்கொண்டிருந்திருக்கிறது” என்று துரியோதனன் சொன்னான். “எரியூட்ட குண்டாசியை கொண்டுவந்தபோது அவர் திரும்பிக் கொண்டார். குண்டாசி மதுமயக்கில் உடல் தொய்ந்து போயிருந்தான். ஏவலர் அவனை தூக்கிக்கொண்டு சென்று சிதைமுன் நிறுத்தியபோது விழித்துக்கொண்டு சிவந்த கண்களால் என்ன என்று பார்த்தான். எரியூட்டச் சொன்னபோது வியக்கத்தக்க நிலையுறுதியுடன் எரியூட்டினான். அனைத்துச்சடங்குகளையும் இறுகிய முகத்துடன் சீராக செய்தான். அனைவருக்கும் வியப்பும் ஆறுதலும் ஏற்பட்டது.”
”பீஷ்மபிதாமகர் மட்டும் எங்கோ இருந்தார். அவர் எங்களவரே அல்ல என்று தோன்றியது. மறுஎரி போட தந்தையை அழைத்தபோது அவர் கைகளை தலைக்குமேல் அசைத்து மறுத்துவிட்டார். விதுரர் அருகே சென்று அழைத்தபோது கைகளால் முகத்தை மூடி உடலை குறுக்கிக்கொண்டார். பீஷ்மபிதாமகர் அதைக் கண்டபின் விதுரரை விலக்கிவிட்டு மறுஎரியை அவரே போட்டார். அதன்பின்னர்தான் நானும் தம்பியரும் எரியூட்டினோம்.”
“நல்லூழ் கொண்டவர். எத்தனை தீ அவருக்கு” என்றாள் பானுமதி. அவள் முகத்தை ஏறிட்டு நோக்கிய துரியோதனன் “நீ என்ன சொல்கிறாய் என்று புரிகிறது” என்றான். “நான் அவளை நினைத்ததே இல்லை. நான் எதையுமே நினைத்ததில்லை. நான் வாழ்ந்த உலகமே வேறு” என்றான். பின் குரல் தாழ்த்தி “சரி, நீ சொல், நான் என்ன செய்திருக்க முடியும்?” என்றான்.
“செய்வதற்கு ஒன்றுதான் உள்ளது அரசே. அனைத்தையும் நிகழாமலாக்கவேண்டும். அவர் இங்கு வந்ததை. அதற்கு முன் இங்கே அணங்கு கொண்டிருந்த ஒவ்வொரு அரசியும் அரசியாக ஆனதை… அப்படியே பின்னால் பின்னால் என்று சென்று இந்த அரண்மனை கட்டப்பட்ட காலம் வரை செல்ல வேண்டும். இங்கு முதல்முறையாக அணங்குகொண்டு அமர்ந்திருந்த முதல் அன்னையை அஸ்தினபுரிக்கு கொண்டுவந்திருக்கக்கூடாது.”
துரியோதனன் சிரித்துவிட்டான். “என்ன சொல்கிறாய்? நான் என்ன தெய்வமா, காலத்தை திருப்பிக்கொண்டுசெல்ல?” பானுமதி “முடியாதல்லவா? பிறகென்ன? விடுங்கள்” என்றாள். அவள் முகம் சிவந்திருப்பதைக் கண்ட துரியோதனன் “என்ன?” என்றான். “ஒன்றுமில்லையே” என்றாள் சிரித்தபடி. “ஏன் மூச்சிரைக்கிறாய்?” பானுமதி “வழக்கமாக இவ்வளவு நீளமாக நான் பேசுவதில்லை” என்றாள்.
துரியோதனன் சற்றுநேரம் நோக்கிவிட்டு “ஒன்று சொல், உனக்கு அணங்கு கூட வாய்ப்புள்ளதா?” என்றான். பானுமதி “எனக்கா?” என்றாள். பின்னர் தலைமுடிப்பிசிறுகளை நெற்றியிலிருந்து ஒதுக்கிவிட்டு “நான் என்ன சொல்லமுடியும்? தெய்வங்கள் அல்லவா அந்தத்தேர்வை நிகழ்த்துகின்றன?” என்றாள். “ஆனால் ஓர் இளவரசி அணங்கு கொள்வாள் என்று நீயும் உறுதியாக எண்ணுகிறாயா?”
பானுமதி “அது வெறும் நம்பிக்கை என்றுதான் எனக்கும் பட்டது. ஆனால் பிறகு எண்ணியபோது அப்படி அல்ல என்று உணர்ந்தேன். அன்னை மறைந்தபின்னர்தான் நான் இங்கு வந்தேன். அன்னை மறைந்ததும் அவருடைய ஆடைகள் அணிகள் அனைத்தையும் அவருடன் சேர்த்து சிதையில் வைத்துவிட்டார்கள்” என்றாள். துரியோதனன் “அவர் அணிகளையுமா? ஏன் அவற்றை எவருக்கேனும் கொடுத்திருக்கலாமே?” என்றான். “எவராவது அதை வாங்குவார்களா என்ன?” என்றாள்.
“அணங்கு அவருடைய உடலின் ஏதேனும் ஒரு பகுதியில்தான் வாழமுடியும். அதில் எஞ்சியிருந்து இப்புவியில் அதற்குரிய ஊர்தியை தேடிக்கொண்டிருக்கும். ஆகவே அவரிருந்த அறையை ஏழுமுறை நீர்விட்டு கழுவினார்களாம், அவருடைய ஒரு தலைமுடி எஞ்சியிருக்காமல் பார்த்துக்கொண்டார்களாம். ஆனால் நான் இங்குவந்த முதல்நாளே அவரைப்பற்றிதான் கேட்டேன். சேடிகள் பேசிக்கொண்டிருந்தார்கள். என்ன என்றேன். மறைத்து மறைத்து அவர்கள் பேசியதைக்கேட்டு சினம் கொண்டு ஒருத்தியை அழைத்து அதட்டினேன். அவள் அன்னையைப்பற்றி சொன்னாள். அன்னை அமர்ந்திருந்த மேடையை அவள்தான் காட்டினாள்.”
“அங்கே அவரிருந்த தடம் ஏதுமில்லை. முதல்நாள் அந்த சாளரமேடை எனக்கு எதையும் சொல்லவில்லை. ஆனால் மறுநாள் காலை எழுந்ததுமே அதை பார்க்கவேண்டுமென தோன்றியது. அங்கே செல்லும் வழியில் என் நெஞ்சு படபடத்து கால்கள் தளர்ந்தன. அங்கே அன்னை அமர்ந்திருப்பார் என்ற விந்தையான கற்பனை இருந்தது என் உள்ளத்தில். அங்கு அவரில்லை என்று கண்டதும் எனக்குள் ஒரு நிம்மதியும் ஏற்பட்டது. அவரையே எண்ணிக்கொண்டிருக்கிறேன் என்று உணர்ந்தபின் அவ்வெண்ணத்தை நெஞ்சிலிருந்து விரட்ட முயன்றேன். அவரையன்றி வேறெதை எண்ணினாலும் எண்ணம் அங்கேயே சென்று நிற்பதை கண்டேன்.”
“மெல்ல அனைத்தும் சீரடைய நாட்களாயின. ஆனால் அதன்பின் அச்சாளரமே அன்னையாகிவிட்டிருந்தது. அதை அன்னையென எண்ணவும் செல்லும்போது அதை நோக்கி புன்னகைசெய்யவும் பயின்றிருந்தேன்” பானுமதி சொன்னாள். “இப்போது என்னால் சம்படை அன்னையை மிக அண்மையில் பார்க்கமுடியுமென தோன்றுகிறது. அழைத்தால் வந்துவிடுவார் என நினைத்துக்கொள்வேன்.”
துரியோதனன் உண்மையான அச்சத்துடன் “வேண்டாம்” என்று அவள் கையை பற்றினான். “வேண்டாம் பானு. அந்த அணங்கு உண்மையிலேயே அங்கே இருக்கக்கூடும்.” பானுமதி நகைத்து “அவள் என்னைப்பிடிக்க முடிவுசெய்துவிட்டால் நான் என்ன செய்யமுடியும்?” என்றாள். அவன் கைமேல் தன் கையை வைத்து “அஞ்சவேண்டாம். ஒன்றும் நிகழாது. என்னை எனக்குத்தெரியும்” என்றாள்.
துரியோதனன் பெருமூச்சுவிட்டு “எப்போது அஸ்தினபுரியின் அரசன் நான் என முடிவாகியதோ அப்போதே என் அச்சங்கள் தொடங்கிவிட்டன. மன்னன் செய்யும் தவறுகள் அருகம்புல் போல் பெருகிப்பெருகி காட்டைநிறைப்பவை என்பார்கள் சூதர்கள்… அது தெய்வங்களிழைக்கும் பிழை. மன்னனும் மானுடனே. அவன் மேல் அத்தனை பெரிய சுமையை தூக்கி வைக்க தெய்வங்களுக்கேது உரிமை?” என்றான்.
பானுமதி புன்னகைசெய்து “தந்தையர் பிழைகள் மைந்தர்களுக்கும் அவர்களின் கொடிவழிகளுக்கும் விளைகின்றன என்கிறார்கள். நாம் வாழும் ஒவ்வொரு கணமும் இன்னமும் பிறக்காத பல்லாயிரம் பேருக்கு கடமைப்பட்டிருக்கிறோம் அல்லவா?” என்றாள். துரியோதனன் உடல் நடுங்கத் தொடங்கியது. அவன் அதை வெல்ல கைகளை கோத்துக்கொண்டான்.
“ஏன், என்ன செய்கிறது?” என்றாள் பானுமதி. “குளிரடிக்கிறது” என்று துரியோதனன் சொன்னான். அவன் பற்கள் கிட்டித்துக்கொண்டிருந்தன. “இப்போது குளிர் இல்லையே. காய்ச்சல் இருக்கிறதா என்ன?” என்றபடி அவள் அவனைத் தொட்டு “காய்ச்சல் இல்லை… நான் சூடாக ஏதேனும் தரச்சொல்கிறேன்” என்று திரும்பினாள். “இல்லை பானு, வேண்டாம்” என அவன் அவள் கைகளை பற்றினான். “வைத்தியரை அழைக்கிறேன்” என அவள் மேலும் திரும்ப அவன் உரக்க “வேண்டாம் என்றேன்” என்றான். அவள் திகைத்து நோக்கினாள். “நீ அருகே இருந்தால் போதும்.”
அவள் அவன் கைகளை தன் கைகளில் எடுத்துக்கொண்டு “ஆம், அருகே இருக்கிறேன்” என்றாள். துரியோதனன் அவள் கைகளை இறுகப்பற்றிக்கொண்டான். “நான் இறந்திருக்கலாம். மிகச்சிறந்த முடிவாக அது இருந்திருக்கும்” என்றான். “தந்தையிடம் மற்போரில் இறப்பதா? நல்ல கதை” என்றாள். துரியோதனன் “மற்போரா?” என்றான். “சௌனகர் என்ன சொன்னார்?”
பானுமதி “மற்போருக்கு அவர் உங்களை அழைத்தார் என்றார். களிப்போர் நிகழ்ந்து உச்சம்கொண்டபோது தந்தையால் தன்னை கட்டுப்படுத்த முடியவில்லை. அவர் மதம்கொண்டதைக் கண்டு அங்கரும் இளையோனும் தடுக்கவந்தனர். அவர்களையும் அவர் தாக்கினார்…” துரியோதனன் கண்களை மூடி “இல்லை” என்றான். பானுமதி “ஏன்?” என்று மெல்லியகுரலில் கேட்க “அவருள் கூடியது ஓர் அறத்தெய்வதம்” என்றான். அவள் “ம்” என்றாள். “ஏன் என்றால்…” என அவன் தொடங்க “வேண்டாம்” என்றாள். “இல்லை, நான்…” என துரியோதனன் சொல்லத்தொடங்க அவள் “வேண்டாம்” என்று அழுத்தமாக சொன்னாள்.
“சரி” என்று சொல்லி துரியோதனன் பெருமூச்சுவிட்டு வலியால் முனகினான். “நான் அவர் கையால் இறந்திருக்கவேண்டும். அதுதான் அனைத்துக்கும் ஈடு.” பானுமதி “அதெல்லாம் வீண்பேச்சு. நீங்கள் வாழ்கிறீர்கள், அரசாள்வீர்கள்” என்றாள். துரியோதனன் விழிகளை விலக்கிக்கொண்டு “பானு, நான் எப்படி பிழையீடு செய்யமுடியும்?” என்றான்.
அவள் “கொன்றபிழை தின்றால் போகும் என்பார்கள். அரியணைக்காகத்தானே? அரியணையில் அமருங்கள். அரியணைக்குக் கீழ் வாழும் அனைவருக்கும் தந்தையாக இருங்கள். உங்கள் கோல்கீழ் புழுவும் புள்ளும் விலங்குகளும் மானுடரும் மூதாதையரும் தெய்வங்களும் மகிழ்ந்திருக்கட்டும்” என்றாள். அவன் அக எழுச்சியுடன் அவளை நோக்கி “உண்மையாகவே சொல்கிறாயா? நூல்கள் அதை சொல்கின்றனவா?” என்றான்.
“ஆம், பராசரநீதியும் பிங்கலநீதியும் அஸ்வினிதேவஸ்மிருதியும் அதை சொல்கின்றன. அரசன் அனைத்தையும் அரசநீதி வழியாக ஈடுகட்டிவிடமுடியும். வளையாத கோலேந்தியவனை தெய்வங்கள் நெஞ்சோடு அணைத்துக்கொள்ளும்.” துரியோதனன் கண்களிலிருந்து நீர் வழியத்தொடங்கியது. “என்ன இது?” என்றாள் பானுமதி. அவன் மெல்லிய ஓசையுடன் விசும்பி அழுதான். “என்ன இது அரசே?” என்று அவள் மெல்லியகுரலில் சொன்னாள். “நான் ஏன் உயிர்வாழவேண்டும் என்று சொன்னாய்… இதற்காக நான் கடன்பட்டிருக்கிறேன். என் ஞானாசிரியை நீதான்.”
“இதென்ன பேச்சு?” என்று அவள் அவன் கைகளை இறுக்கினாள். “மிகவும் இறங்கிவந்து பேசவேண்டாம். பின்னர் அகம் நாணுவீர்கள்.” துரியோதனன் “நாண ஏதுமில்லை” என்றான். அவன் உடல் குறுகுவதுபோல அசைந்தது. “நான் அகம் நாணத்தொடங்கி நீண்டநாளாகிறது. அதில் உச்சமென்பது முதல் விழிப்பில் நான் கண்ட கனவுதான்.” பானுமதி விழிகளால் என்ன என்றாள்.
“கரிய உருவுடன் ஒருவன் நீரிலிருந்து எழுந்து வந்து என் கைகளை பற்றினான். நான் அஞ்சி திமிறினேன். அவன் குளிர்ந்து பிணம்போலிருந்தான். வா என்றான். இல்லை அந்த நீர் இருண்டிருக்கிறது, குளிர்ந்திருக்கிறது என்றேன். ஆம் அது எப்போதும் அப்படித்தான். வந்துவிடு என்றான். நான் திமிறிக்கொண்டிருக்கையில் அவன் திரும்பி அருகே நின்றிருந்த என் இளையோனை பார்த்தான். அவன் கையைப்பற்றிக்கொண்டு நீரில் இறங்கி மறைந்தான். ஒருகணம் என் நெஞ்சில் ஆறுதல் நிறைந்தது. அந்த ஆறுதலுடன் விழித்துக்கொண்டேன். இடமறிந்ததும் பதறிப்போய் கூவி இளையோன் நலமாக இருக்கிறானா என்று கேட்டேன். நலம் என அறிந்தபின்னர்தான் உள்ளம் அமைதிகொண்டது.”
துரியோதனன் உதடுகளைக் கடித்து தன்னை அடக்கிக்கொண்டான். அவள் அவனை நோக்கிக்கொண்டிருந்தாள். “நான் இதை வேறு எவரிடமும் சொல்லமுடியாது. என் அகம் முழுக்க நிறைந்திருக்கும் இந்த இருளை…” அவள் அவன் வாய் மேல் கைவைத்து “அது இருள் அல்ல. இருள் என்றால் அது இல்லாத எந்த உள்ளமும் இல்லை” என்றாள். துரியோதனன் நீர் நிறைந்த விழிகளுடன் ஏறிட்டு நோக்கி “அவன் என் மைந்தன் என்றால் அப்படி நினைப்பேனா?” என்றான். “ஆம்” என்றாள்.
துரியோதனன் சிலகணங்கள் வாய் திறந்து உறைந்திருந்தான். “அவன்…” என சொல்லி தத்தளித்து தலையை அசைத்தான். “இதை ஏன் விரித்து விரித்து பேசவேண்டும்? மானுடவாழ்க்கையை விரித்துப்பேசலாகாது, வெறுமையே எஞ்சும் என்பார்கள் முதுபாட்டிகள். வேண்டாம்” என்றாள். “ஆம்” என்று துரியோதனன் சொன்னான். பின்னர் “ஒன்றுமட்டும் கேட்கிறேன். அதைக் கேளாமலிருக்க முடியாது” என்றான். “என் தந்தையும் அப்படித்தானா?”
பானுமதி “பாம்பு கடித்த விரலை சீவி எறியத்தானே அவரும் முயன்றார்?” என்றாள். துரியோதனன் பெருமூச்சுவிட்டான். மீண்டும் மீண்டும் பெருமூச்சு வந்தபடியே இருந்தது. சட்டென்று புன்னகைத்து “என் நுரையீரல் கிழிந்திருக்கிறது. இந்த மொத்த வாழ்க்கைக்கும் தேவையான பெருமூச்சுகளை நான் இப்போதே விட்டுவிட்டேன்” என்றான். பானுமதி புன்னகை செய்து “இந்த நோயும் நல்லதே. நோய் என்பது கண்ணுக்குத்தெரியாத எவருக்கோ நாம் செய்யும் பிழையீடு” என்றாள்.
துரியோதனன் அவள் சிறிய பற்களை நோக்கியபின் “நீ இல்லையேல் நான் என்னவாகியிருப்பேன்!” என்றான். பானுமதி கண்கள் கனிய புன்னகைசெய்தாள். அவள் அருகிருக்கிறாள் என்பதை மட்டும் உணர்ந்தவனாக அவன் சற்றுநேரம் சொல்லிழந்து அமர்ந்திருந்தான். பின்னர் மெல்ல எண்ணம் மாறுபட்டு “சம்படை அன்னை விதுரரின் அன்னையை எப்போதேனும் பார்த்திருக்கிறாரா?” என்றான்.
“அதை நான் கேட்டேன். சம்படையன்னை ஒருமுறை விதுரின் இல்லத்திற்கு சென்றிருக்கிறார். விதுரர் சுருதை அன்னையை மணமுடித்து வந்தபோது. அவர்களின் இன்னிரவு முடிந்த மறுநாள். சிவை அன்னை அழுதுகொண்டிருப்பதை பார்த்திருக்கிறார். அருகே அமர்ந்து பேசமுயன்றாராம் ஆனால் சிவை அன்னை பேசவே இல்லை. எழுந்தபோது சிவை அன்னையின் மாலையிலிருந்து உதிர்ந்த ஒரு சிறிய சரப்பொளி கிடந்ததாகவும் அதை சம்படை அன்னை எடுத்துக்கொண்டதாகவும் சொல்கிறார்கள். இப்போது இவர்கள் உருவாக்கிக்கொள்ளும் கதையாகவும் இருக்கலாம். தெரியவில்லை.”
துரியோதனன் “நாம் சற்றும் அறியாதது இந்த ஆடல். தெய்வங்களையேகூட மேலும் பெரிய தெய்வங்கள் களக்கருக்களாக ஆட்டிவைக்கின்றனவோ என்னவோ?” என்றான். பானுமதி “நான் வருகிறேன். சென்று காந்தாரியன்னைக்கு உங்கள் உடல்நிலை பற்றி சொல்லிவிட்டு அரண்மனைக்குச் செல்லவேண்டும். விதுரர் இப்போது அனைத்து முடிவுகளையும் என்னிடமும் கேட்டுக்கொள்கிறார்” என்றாள்.
துரியோதனன் “அது நன்று” என்றான். “ஒரு பெண்ணின் குரல் இல்லாமலிருந்ததே அஸ்தினபுரியின் அரண்மனை இந்த அளவுக்கு நோயுற்று இருள்வதற்கு வழிகோலியது” என்றான். பானுமதி எழுந்ததும் துரியோதனன் மீண்டும் முகம் இருண்டு “பானு” என்றான். அவள் திரும்பியதும் “இளையோன் வாழவேண்டும். அவன் வாழாவிட்டால் நான் வாழமுடியாது” என்றான்.