‘ஜெகே ‘ கடலூர் சீனு

w

இனிய ஜெயம்,

நள்ளிரவு வழக்கம்போல வெண்முரசு வாசிக்க மொபைலை திறந்தேன். முதல் பதிவாக ஆசானுக்கான அஞ்சலியை கண்டேன். மிகுந்த சோர்வு அழுத்த , மொட்டை மாடி சென்று அப்படியே மல்லாந்து படுத்தேன். இந்த வீட்டுக்கு குடி வர, இந்த வீட்டை சுத்தம் செய்கையில், தோட்டத்தில் பிறந்து சில வாரமே ஆன கருப்பு குட்டி நாய் ஒன்று கிடந்தது. தெரு நாய். அம்மா பிளாக்கி என பெயர் இட்டார்கள். தெரு நாய். கல்லடி பட்டு ஒரு காலும், கண்ணும் ஊனம்,ஆனது. இரவு தவிர்க்காமல் எங்கள் இல்ல மொட்டை மாடி, தண்ணீர் டேன்க் கீழேதான் படுத்துக் கிடக்கும். ஓடி வந்து என் வாசம் முகர்ந்து, என் மூக்கை ஒருமுறை சலப் என்று நக்கிவிட்டு என்னருகே சுருண்டு படுத்துக் கொண்டது.

ஜெயகாந்தன் தன்னை நாடிவந்த குட்டி நாய் ஒன்றினை விரட்டி அடித்த சம்பவம் ஒன்றினை எழுதி இருப்பார். ஜெயகாந்தனுக்கு நாய்களை பிடிக்காதா? என் தாத்தாவுக்கு நாய்கள் பிடிக்கும், அவர் குஸ்தி பயில்வான். உருவத்தால், குரலால் அவர் இன்னொரு ஜெயகாந்தன். ஆம் ஜெயகாந்தன் குறித்த முதல் பிரேமை எனக்கு அங்கிருந்துதான் துவங்குகிறது. ஜெயகாந்தனின் மறைவும் எனக்கு அந்தப் புள்ளியில் சென்று தைக்கும் ஒன்றே.

இனிய ஜெயம் உங்களுக்கு நினைவு இருக்குமா தெரியவில்லை, நீங்கள் உங்களது சேகரிப்பில் இருந்து தேடி [1955 வருடத்து பதிப்பு என்று நினைவு] ஐகர் குசெங்கோ எழுதிய ”வீழ்ச்சி” என்ற நாவலை வாசிக்க சொல்லி தந்தீர்கள். சர்வாதிகார ரஷ்யாவில், மிகேல் கோர் எனும் எழுத்தாளரை கொல்லும் பணி, நோவிக்கோவ் என்பவனுக்கு அளிக்கப்படுகிறது. அரசு, எழுத்தாளர், உளவாளி இந்த மூவரை அடிப்படையாகக் கொண்டு விரியும் நாவல்.

மாக்சிம் கார்க்கிதான் மிக்கேல் கோர். மிக்கேல் கோர் தன் கண் முன்னால், தனது படைப்பால் கட்டி எழுப்பிய கனவு சரிவதை காண்கிறார். ஆனால் அதை நம்ப மறுக்கிறார். தனது படைப்பு தனது காலத்திலேயே கடுகி மறைவது, ஒரு படைப்பாளிக்கு எத்தகையதொரு துயர். தருக்கி வாழும் தகப்பன், அவனது ஒரே மகனை, மெல்லக் கொல்லும் நோய் ஒன்றுக்கு இழப்பது போல் அல்லவா அது? இந்த நாவலை வாசிக்கும்போதெல்லாம் என் அகத்தில் கூடவே எழுந்த சித்திரம் ஜெயகாந்தனுடையது. மிக்கேல் கோரின் நிலையில் ஜெயகாந்தன் இருந்திருந்தால் , ஜெயகாந்தன் இதை செய்திருப்பாரா? கண் முன் நிகழும் ‘உண்மையை’ ஒப்புக்கொள்ள மிக்கேலை. தடுத்தது எது? இந்த எல்லையில்தான் ஜெயகாந்தன் மிக்கேலை தாண்டிச் செல்கிறார். இனிய ஜெயம் ஜெயகாந்தன் தனது சமூக அரசியல் நிலைப்பாடுகளை , தானே மறுத்து முன் சென்ற முரண்களை நான் இதைக்கொண்டே தொகுத்துக் கொண்டேன்.

ஆம் ஜெயகாந்தன் தான் உருவாக்கியவைதான் தான் என்று நின்றுவிட வில்லை. மாறாக இங்கே என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறதோ அதன் முரண் இயக்கமாக திரண்டு வந்தார். லட்சியவாதத்தின் வீழ்ச்சி, பஞ்சம், விடுதலை அரசியல் தந்த ஏமாற்றம் இவை விளைவாக இலக்கியத்தில் அதன் கருத்தியலில் நவீனத்துவம் பிறந்து வர, அந்த அவநம்பிக்கை குரலின் எதிர் நிலையாக நம்பிக்கை ஒளியின் சிம்ம கர்ஜனையை முன்வைத்தார் ஜேகே.

பகுத்தறிவு என்றபேரில் ஒரு காலகட்ட தமிழகமே பிராமண வெறுப்பில் திளைத்துக் கொண்டிருந்த போது, பகுத்தறிவுப் பகலவன் இருந்த அதே மேடையில், இலக்கியவாதியாக தன்னை நிறுவினார். காமராஜருக்கு நேரடியாகவே கூட்டம் கூட்டும் அபத்த அரசியலை சுட்டி கடிதம் எழுதினார். தமிழ் திரையில், பொழுதுபோக்கு என்ற அதன் வணிக சூத்திரங்களுக்கு முற்றிலும் எதிரான சீரிய படைப்புகளை முன்னெடுத்தார். [எனது விருப்பம் நாகேஷ் நடித்த யாருக்காக அழுதான்]. ஒரு காலக்கட்ட இல்லத்தரசிகள் யாவருக்கும் ஜெயகாந்தன் அவர்களின் கனவு நாயகன் என்பதை நான் பல சமயம் நெருங்கி அறிந்திருக்கிறேன். அனைத்துக்கும் மேலான நிலை,, ஓங்கி ஒலித்த ஜெகேவால் மௌனித்தும் இருக்க முடித்த தன்மை.

அதிகாலை கோடை சாரல் மழை பொழிந்து, மண்வாசம் எழுந்த வீதிகள் வழியே நடந்து ஜேகேவை நான் முதன் முதலாக [ அவரை பார்த்ததே இரண்டு முறைதான்.. அதுவும் தூரத்தில் வைத்து] பார்த்த ஞானியார் மடத்தின் வாசலை அடைந்தேன். அன்றுபோலவே இன்றும் உள்ளே செல்லாமல், வெளியில் நின்றே பார்த்துக் கொண்டிருந்தேன். இங்கிருந்து ஜேகே எதை பெற்றாரோ அறியேன். ஆனால் ஜேகே இங்கிருந்துதான் வந்திருக்கிறார்.

இயல்பாக பெட்டிக்கடை முகப்புகளில் தொங்கும், நாளிதழின் தலைப்பு பதாகைகளை நோட்டம் விட்டேன், ஒன்று அதிகாரியின் தற்கொலை பின் இலங்கும் அரசியல் நெருக்கடியை இயம்பியது, உண்மையின் உரைகல் தமிழக நகை கடைகளில் வந்து குவிந்த இரண்டாஎரம் கிலோ தங்கம் பற்றி கூவியது. செய்திகளை முந்தித் தருபவர் கமல் படத்துக்கு நிகழ்ந்த திடீர் தடை குறித்து இயம்பினார், தினமணி அரசு நிரப்பப் போகும் பணி இடங்கள் குறித்து முரசறைந்தது, விதி விலக்கின்றி எவர்க்கும் ஜேகே எனும் நிகழ்வு தலைப்பு செய்தியாக வரவேண்டிய ஒன்று என்ற சொரனையே இல்லை. ஒரு எல்லையில் சுராவுக்கு நேர்ந்த துர்பலம் ஜெக்கேக்கு நிகழவில்லை. சுரா மறைவை தினமணி மட்டும், நான்காம் பக்கம், ஒரு தபால்தலை அளவு சுரா புகைப்படத்துடன் வெளி இட்டு இருந்தது. ஜெயகாந்தன் ஞானபீடம், பத்ம பூஷன் எல்லாம் பெற்றிருக்கிறார் அல்லவா? அகவே ஜெக்கேவால் அனைத்து தினசரிகளிலும் இடம் பிடிக்க முடிந்தது.

தமிழக அரசியலில், திரு மு கருணாநிதி எப்படியோ, இசையில் இளையராஜா எப்படியோ, அப்படி ஜேகே. அவரை தவிர்த்துவிட்டு தமிழக பண்பாட்டு சூழலில் ஒரு காலகட்டமே இல்லை. இந்த எளிய சொரணை கூட நாளிதழ்களுக்கு இல்லை.

அன்று மடத்தில் கேட்ட ஜெயகாந்தனின் ஒரு சொல்லை மீள மீள நினைவில் அவரது குரலில் ஒலிக்க வைத்துக் கேட்டுக் கொண்டிருக்கிறேன் . அன்று அவர் சொன்னார்,

”என் நிலையிலும் நான் நம்பிக்கைவாதி”….

இனிய ஜெயம். இன்றைய நாள் ஆசான் ஜெயகாந்தன் அவர்களின் நினைவுக்கு.

முந்தைய கட்டுரைஅஞ்சலி : ஜெகே
அடுத்த கட்டுரைஜெகே நீடிப்பாரா? – கே ஜே அசோக் குமார்