அன்புள்ள ஜெயமோகன்,
முதலில் இணையத்தில் தொடர்ந்து எழுவதற்கு நன்றி. இல்லையேல் பெருத்த ஏமாற்றம் அடைந்திருப்பேன். உங்களைப் போன்ற எழுத்தாளர்கள் தீவிரமான வாசகர்களுடன் பண நோக்கம் ஏதுமில்லாமல் உரையாடமுற்படுவது மிகவும் நல்ல விஷயம். இது ஒரு நல்ல போக்கை ஆரம்பித்து வைக்கும்.
ஆன்கிலத்தில் எழுதுவதற்கு மன்னிக்கவும். தமிழில் தட்டச்சு செய்ய நான் இன்னும் பழகவில்லை. என் மடிக்கணினியை அதற்காக இன்னும் மாற்றவில்லை. நெடுங்காலம் முன்னர் தமிழ் தட்டச்சு படித்து வென்றிருக்கிறேன். விரைவிலேயே பழகிக்கொண்டுவிடுவேன்
உங்கள் கட்டுரையில் பட்டாசுகளைப் பற்றி சொன்ன பகுதியுடன் என்னால் உடன்பாடு கொள்ள முடியவில்லை. நாம் பண்டிகைகளை குழந்தைகளுடன் இணைந்து முழு ஈடுபாட்டுடன் கொண்டாடுவது நல்லது என்பதை ஒத்துக்கொண்டால்கூட பட்டாசு வெடிப்பது, அதுவும் ஆயிரம்சரம் என்பது ஒரு பண்பட்ட செயல்பாடு அல்ல. அதை சொல்லிக்கொள்வது உங்களைப்போன்ற எழுத்தாளருக்கு அழகல்ல. அதில் உள்ள ஆபத்துகள் ஒருபுறம் இருக்க அவை பெரிய அளவில் சூழியல் அழிவுகளை உருவாக்குகின்றன. அதைப்போன்ற செயல்களில் உள்ள இன்பங்களெல்லாம் வெறும் பழக்கங்கள் மட்டுமே. அத்தகைய பழக்கங்களை மரபுகள் என்று சொல்லிக்கொள்ளக் கூடாது
ஜெ.ரவிச்சந்திரன்
அன்புள்ள ரவிசந்திரன்,
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. பட்டாசுகளை நாம் தவிர்ப்பதே நல்லது. முற்றிலும்கூட தவிர்த்துவிடலாம். பட்டாசுகள் தீபாவளியின் இயல்பான கொண்டாட்டம் அல்ல. 1920களில் ஆரம்பித்த வழக்கம் அது. சிவகாசி தலையெடுத்தபின்னர். ஆனால் இந்த விஷயங்களை எப்படிச் சொன்னாலும் பிள்ளைகள் வரை கொண்டுசெல்ல முடிவதில்லை. அவர்கள் பக்கத்துவீட்டு பிள்ளைகளைத்தான் பார்க்கிறார்கள். கட்டாயப்படுத்துவதும் கண்டிப்பதும் என் வழக்கமும் அல்ல. அத்துடன் எனக்கே இயல்பாகவே இம்மாதிரி விளையாட்டுகளை வேடிக்கைபார்க்கும் முதிரிச்சியற்ற மனநிலை கொஞ்சம் உண்டு. நான் நெடுநாட்களாக பட்டாசுகள் வாங்குவதில்லை– மத்தாப்புடன் சரி. ஆனால் உறவினர் நண்பர் என யாரோ கொண்டுவந்து தந்துவிடுகிறார்கள். நீங்கள் சொல்வதுசரிதான். பிறர் சொல்லிக்கேட்கும்போது இன்னமும் சரி என்று தோன்றுகிறது. பிள்ளைகள் இப்போது வளர்ந்துவிட்டார்கள். சற்று தீவிரமாகவே சொல்லிப்பார்க்கலாம் என்று எண்ணுகிறேன். நன்றி
தமிழில் எழுதுவது எளிது.
என்ற பக்கத்தை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து முகப்புப் பக்கத்தில் சேமித்துக்கொள்ளவும். மேலே உள்ள பக்கத்தில் தமிழை ஆங்கில எழுத்துக்களில் தட்டச்சு செய்து ரோமனைஸ்ட் என்ற துளையை அழுத்தினால் தமிழாக மாறும். யூனிகோடு. அதை வெட்டி எங்கும் ஒட்டி அனுப்பலாம். இது உங்களுக்கே தெரிந்திருக்கலாம்.
ஜெ
அன்புள்ள ஜெயமோகன்,
உங்கள் வார்த்தைகளில் உள்ள நேசம், அதிக நாள் பழகிய நண்பராக விரிகிறது. நன்றி. உங்களது உழைப்பு (நள்ளிரவில் பதில்) மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கிறது.
தீபாவளியின் வட மற்றும் தென் இந்திய வேறுபாடுகள் உங்களுக்கு தெரிந்து இருக்கலாம் – வட இந்தியாவில் இராமர் பட்டாபிஷேகம் தென் இந்தியாவில் நரகாசுர வதம். நீங்கள் சுட்டி காட்டிய பௌத்த பின்னணி இது வரை எனக்கு தெரியாது. ஆனால், சீன, ஜப்பானிய மற்றும் கொரிய புது வருடங்களில், தீய சக்திகளை, விரட்ட koto பாணியில் முரசுகளை முழக்கி நடனத்துடன் இணைத்து கொண்டாடுவார்கள்.
ஒரே நிகழ்வுகளும் பண்டிகைகளும், வெவ்வேறு பின்னணி ஆக விரிவது (in different demographics), நம் கலாச்சாரத்தின் தனித்வம்.
குட்டி இளவரசன் உங்களை தொடாமல் போனது, சற்று ஏமாற்றம்தான். நீங்கள் குறிப்பிட்ட மற்ற புத்தகங்களை வளர்ந்த பின் படித்ததாலும், தம்பி தங்கை மற்றும் அடுத்த தலைமுறைக்கும் படித்து காட்டியதாலும், அவைகளை சிறுவர்கள் படிக்க கூடிய புத்தகங்களாகவே பரிந்துரைத்து வருகின்றேன்.
எனக்கு cholestrol சிக்கல் உள்ளதால் (பிதுரார்ஜித சொத்து), பால் சார்ந்தவைகளும், எண்ணையில் பொரி-த்தவைகளும் விலக்க வேண்டும். இனிப்பில் விருப்பம் இல்லை. சாப்பிட கூடியவை கொஞ்சம் என்றாலும், அதில் எனக்கு மகிழ்ச்சியே.
மீண்டும்.. அன்பிற்கு நன்றி
முரளி
***
அன்புள்ள ஜெயமோகன்,
தீபாவளி குறித்த கட்டுரையில் பண்டிகைகள் கொண்டாட்டங்களுக்கான சந்தர்ப்பங்கள் , ஆகவே அவற்றைத்தவற விட்டு விடக் கூடாது எனும் பொருளில் எழுதி இருந்தீர்கள்.
அதையொட்டி மேலும் சிந்திக்கும்போது ,இன்றைய அறிவியல் அளிக்கும் கேளிக்கைக்கான வாய்ப்புக்கள் , நமது தொன்மையான பண்டிகைகள் முந்தைய தலைமுறைக்கு அளித்த ஒரு உச்சக்கட்ட மனமகிழ்ச்சியை அடுத்த தலைமுறைக்கும் மிகவும் குறைத்து விட்ட்து போலத் தோன்றுகிறது. உதாரணமாக, நான் சிறுவனாக இருக்கும்போது தீபாவளிக்கான மனத்தயாரிப்பு ஒரிரு மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிடும். துணியைத் தேர்ந்து எடுத்து தையல்காரரிடம் கொடுத்துத் தைப்பது பதினைந்து நாள் வைபவம். அன்று புதுத் துணிகள் ஆண்டுக்கு இரு பண்டிகைக்களுக்கு மட்டுமே என்பதால் எதிர்பார்ப்பை இன்னும் எகிறச்செய்யும்.இன்று பொருளாதாரம் பல முறைகள் துணியெடுக்கும் வாய்ப்பளிக்கிறது.எனவே தீபாவளிக்கு துணி எடுப்பது ,ஆயத்த ஆடைக் கடையில் அரை மணி நேர வேலை.
அடுத்து தீபாவளிக்கான பலகாரங்கள். வீட்டுப் பெண்மணிகள் பட்டியலை பரவசத்தோடு தயாரிப்பார்கள்.அதற்கான வேலைப்பளுவை பொய்யாக அலுத்துக் கொள்வார்கள். உள்ளுக்குள் பெருமிதம் பொங்கும். இன்று ஒவ்வொரு தெரு முனையிலும் இருக்கும் ஸ்வீட் ஸ்டால்கள் அதை அடியோடு துடைத்தெறிந்து விட்டன.
அந்தந்த ஆண்டுகள் வெளியாகும் புது விதமான பட்டாசுகள், தீபாவளிக்கு முந்தைய ஒரு மாத்த்தின் முக்கிய செய்தி.பட்டாசு பட்டியல் தயாரிப்பதும், வாங்குவதும் , வாங்கிய பட்டாசுகளை தீபாவளி வரும் வரை ஒவ்வொரு நாளும் எடுத்துப் பார்த்துவிட்டு உள்ளே வைப்பது கூடுதல் பரவசங்கள்.
உச்ச கட்டமாக தீபாவளி நாளன்று புத்தாடை அணிவதும், அணிந்தவற்றைக் காட்டிக்கொள்ளவும் , பட்டாசு வெடிக்கவுமான ஒரு பெரு மகிழ்ச்சியான மனநிலை அன்று முழுவது நிலவும். நாளிறுதியில் , நீங்கள் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது போல கார்த்திகைக்காக மனம் ஏங்கும். இன்றைய நாட்களின் தீபாவளி தொலைக்காட்சிப் பெட்டிக்குள் முடங்கிப் போகிறது.
எல்லவற்றுக்கும் மேலாக, தீபாவளியன்று தெரிந்த எல்லோருக்கும் பலகாரங்கள் வழங்கி மகிழும் பழக்கமொன்று உண்டு. அன்று எல்லோரையுமே ஏதோ ஒரு காரணத்தால் நேசிக்கத் தோன்றும்.இன்று அது வெகுவாக சுருங்கிவிட்ட்து(தொலைக்காட்சி மற்றும் இன்னபிற கேளிக்கைக்கான வாய்ப்புகளால்).
ஒரு வகையில் அறிவியலின் ஒரு கரம் அன்றாட மனித வாழ்வை மேம்பட்டுத்தியபடியும் சுலபமாக்கிக் கொண்டும் செல்கிறது. அதன் இன்னொரு கரம் கை இத்தகைய சிறப்பு சந்தோஷங்களைக் குறைத்தபடியே….
அன்புடன்,
மதி
அன்புள்ள மதி,நீங்கள் சொல்வது உண்மை. தீபாவளி வணிகமயமாகிவிட்டது. தொலைக்காட்சிப்பெட்டியை அணைத்தாலே அன்றைய பொழுதை சிறப்பாக கழித்துவிடலாமென்பதே உண்மை. நடிகைகள் கூந்தலை நாலாயிரம் முறை பின்னுக்கு தள்ளுவதையும் நடிகர்கள் முனகுவதையும் ஏன் நாம் உட்கார்ந்து பார்க்க வேண்டும்? புதிய கொண்டாட்டங்களை உருவாக்கிக் கொள்ளலாம். நண்பர்களைப் பார்க்கச் செல்லலாம். சிறிய பயணங்கள். விளையாட்டுகள் என எவ்வளவோ வாய்ப்புகள் உள்ளனஜெ