‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 71

பகுதி 15 : யானை அடி – 2

பள்ளியறைக்குள் துரியோதனன் சாளரத்தருகே வெளியே நோக்கி நின்றிருந்தான். அமைதியிழக்கும்போது எப்போதும் செய்வதுபோல மீசையை நீவிக்கொண்டிருந்தவன் நேரத்தை உணர்ந்து திரும்பி நோக்கினான். நெடுநேரம் ஆகவில்லை என்று தெரிந்தது. பெருமூச்சுடன் மீண்டும் வெளியே நோக்கினான்.

பூங்கா மிகவும் இருட்டியிருந்தது. இருள்வடிவாக தெரிந்த மரக்கிளைகளுக்குள் நூற்றுக்கணக்கான பறவைகள் இருக்கின்றன என்று அப்போது நம்பமுடியாது. மரங்களின் உள்ளம் அவை, காலையில் விழிப்பு கொண்டதும் சூரியனை நோக்கி எழுகின்றன என்ற சூதர்களின் வரி நினைவுக்கு வந்தது. சற்று மதுவருந்தியிருக்கலாமென நினைத்துக்கொண்டான். ஐயினிமையின் சுவை நாவில் புளிப்பாக மாறிவிட்டிருந்தது.

காலடியோசைகள் கேட்டன. இப்போது என்ன செய்யவேண்டும் என்று அவன் ஒருகணம் உடல்தவித்து பின் மீண்டும் சாளரம் நோக்கியே திரும்பிக்கொண்டான். சிரிப்பொலிகளும் அடக்கப்பட்டபேச்சுகளும் கேட்டன. கதவு திறந்து மூடும் ஒலியும் மெல்லிய சொற்களும் உரத்த சிரிப்பொலிகளும் எழுந்தபின் அமைதி நிலவியது.

அவன் வெளியே நோக்கியபடி அசையாமல் நின்றிருந்தான். எக்கணமும் திரும்பிப்பார்க்கக்கூடும் என்று தோன்றியதை வெல்ல இருள்நோக்கி தன் விழிகளை ஆழமாக பதித்தான். இருளுக்குள் மரங்கள் அசைவதை காணமுடிந்தது. இருண்டநீரில் நிழல்கள் போல பார்க்கப்பார்க்க அவற்றின் முப்பரிமாணச்சித்திரம் தெளிந்து வந்தது.

பின்னர் அவன் ஒரு சிறிய பறவையை நோக்கினான். சிறுகிளைச்சந்திப்பில் அது வெண்ணிறமாக தெரிந்தது. ஒரு சங்கை அங்கே வைத்ததுபோல. என்ன பறவை? புறாவல்ல. புறா மரங்களில் அமைவதில்லை. கொக்கா? கொக்கு அந்தத் தோட்டத்தில் வருவதில்லை. எந்தப்பறவை? அவன் அதையே கூர்ந்து நோக்கினான். எதையாவது எடுத்து எறிந்து அதை பறக்கவிட்டால் அறிந்துவிடலாமென்ற எண்ணம் வந்ததுமே அதை இறுக்கி தவிர்த்தான்.

இருளுக்குள் மீண்டும் மீண்டும் விழிகூர்ந்தான். ஆனால் ஓர் எல்லைக்குமேல் அதன் சித்திரம் தெளியவில்லை. இல்லை ஏதாவது நிழலா? பறவை எடுத்துச்சென்ற துணி அங்கே கிடக்கிறதா? பறவை இத்தனை அசைவில்லாமலிருக்குமா?

அவன் பெருமூச்சுடன் விழிதிருப்பி அதே அசைவில் திரும்பிப் பார்க்கவிருந்தான். உடனே தன்னை மீண்டும் தடுத்துத் திரும்பி அந்தப் பறவையை நோக்கியதும் அதை கண்டறிந்தான். பகுளம். அத்தனை உயரமான மரத்தில் வந்தமருமா அது? புராணகங்கைக்குள் புல்வெளிகளில்தான் அதை கண்டிருந்தான்.  துணைவந்த வேடன் அதற்கு ஒரு பெயர் சொன்னான். என்ன பெயர் அது?

புராணகங்கையின் புல்வெளிகளில் எருமைகளைத்தான் கூடுதலாக பார்க்கமுடியும். ஈரமும் பசுமையும் கலந்த அந்தச் சூழலில் அவற்றை புகையென சிற்றுயிர்கள் மூடியிருக்கும். குருகு. அதை உண்ணிக்குருகு என்றான் வேடன். எருமைகளின் மேல் அவை அமர்ந்திருக்கும். கரியபாறைக்குமேல் வெண்ணிறக்கொடி பறப்பதுபோல.

வெண்சங்கில் கரிய கால்களும் கழுத்தும் எழுந்ததுபோல. கொக்குபோல அத்தனை நீளமான கழுத்தும் காலும் கொண்டவை அல்ல. மிக அமைதியானவை அவை என்றான். மணமற்றவை என்பதனால் அவை புதருக்குள் இருப்பதை வேட்டைநாய்கள் உணரமுடியாது. புதருக்குள் அவை இருக்கையில் அருகிலேயே அவற்றை காணாமல் நாள்முழுக்க செலவிடமுடியும்.

பகுளம்! அதன் பெயர் பகுளம். பிறை நிலவு போன்றது. அழகிய பெயர். பறவைகளில் ஒரு வெண்முத்து அது. அவன் புன்னகையுடன் திரும்பி அவளை நோக்கினான். வாயிலருகே எரிந்த நெய்யகலின் ஒளியில் அவள் நின்றிருந்தாள். அவன் திரும்பிய ஓசையில் அவள் விழிகள் நிமிர்ந்து அவனை நோக்கின. விழிதொட்டதும் அவள் பார்வையை தாழ்த்திக்கொண்டாள்.

“இங்கே வா” என்று துரியோதனன் அழைத்தான். அவள் நிமிர்ந்தாள். “அருகே வா” என்றான். அவள் மெல்ல வளையல்களும் மேகலைமணிகளும் சரப்பொளி அடுக்குகளும் குலுங்க சிலம்பு ஒலிக்க அருகே வந்தாள். சற்று தடித்த வெண்ணிற உடல். உருண்டையான பெரிய புயங்களில் தோள்வளைகள் அழுத்திக் கவ்வியிருந்த மென்தசை பிதுங்கியிருந்தது. கழுத்தெலும்புகள் தெரியாதபடி திரண்டிருந்த தோள்களின்மேல் சரப்பொளி நன்றாக பதிந்திருந்தது.

வட்டமுகம். அவன் அத்துணை துல்லியமான வட்டமுகத்தை அதற்கு முன் பார்த்ததில்லை. மிகச்சிறிய மூக்கு. மிகச்சிறிய செவ்வுதடுகள் சிறிய குமிழ்மொட்டுகள்போல. சிறிய மலரிதழ்கள்போன்ற காதுகள். கொழுவிப்பூரித்த கன்னங்களில் சிறிய பருக்களின் செம்மொட்டுகள். எப்படியோ அவள் மிக குளிர்ந்திருப்பாள் என்ற எண்ணம் அவனுக்கு வந்தது. கடற்சங்கின் குளுமை. அந்த நிறத்தால் அப்படி தோன்றியதா?

அவள் அருகே வந்து சற்று தள்ளி நின்றாள். “இந்தத் தோட்டத்தில் ஒரு பறவையை நான் பார்த்தேன்… எங்கே சொல்!” அவள் கைகளை சாளரவிளிம்பில் ஊன்றி வெளியே நோக்கினாள். திரும்பி “அதோ அந்த மாமரத்தின் சிறுகிளையில்… பகுளம்” என்றாள். “காசியில் நிறையவே உண்டு இது. இதை அங்கே சங்குக்குருகு என்று சொல்வோம். பார்ப்பதற்கு வெண்சங்கு போலவே இருக்கும்” என்றாள். துரியோதனன் அவளை நோக்கி “சற்று முன் உன்னைப்பார்த்ததும் அப்படித்தான் நினைத்தேன், சங்கு போலிருக்கிறாய் என்று” என்றான்.

அவள் சட்டென்று சிரித்து “ஆம், எனக்கு இடையே இல்லை என்று காசியில் சொல்வார்கள். இளமையில் எப்போதும் செவிலி இடையில் அமர்ந்து உண்டுகொண்டே இருப்பேன்” என்றாள். துரியோதனன் சிரித்து “இங்கும் உனக்கு உணவுக்கு குறைவிருக்காது. முடிந்தால் பேரரசரிடம்கூட நீ உணவுண்ணும் போட்டியில் இறங்கலாம்” என்றான். பானுமதி சிரித்தபோது அவளுடைய பற்களும் மிகச்சிறியவை என்பதை துரியோதனன் கண்டான். அவள் தோளில் கைவைத்ததும் அவள் விழிகள் மாறின. அந்தக் கையை அவள் ஒரக்கண் வந்து தொட்டுச்சென்றது.

அவன் குனிந்து “உன் உடல் பெரிதாக இருக்கிறது. ஆனால் விழிகளும் மூக்கும் சிறியதாக இருக்கின்றன” என்றான். “பிடிக்கவில்லையா?” என்று அவள் கேட்டாள். அவள் விழிகளுக்கு சிரிக்கத்தெரிகிறது என்று அவன் நினைத்துக்கொண்டான். “சொல்லுங்கள்!” அவன் தடுமாறி “பிடித்திருக்கிறது என்றல்லவா சொன்னேன்?” என்றான். “பெண்ணை நலம்பாராட்டுவதை இப்படியும் செய்யமுடியும் என்று இன்றுதான் அறிந்தேன்” என்று சிரித்தாள். சுடர் ஏற்றப்பட்ட வெண்கலப்பாவைவிளக்கு போல தோன்றினாள். அதை சொல்லலாமா, இழிவானதாக போய்விடுமா என்று அவன் எண்ணினான்.

”என்ன எண்ணம்?” என்று அவள் அவன் மேல் மெல்ல சாய்ந்தபடி கேட்டாள். அவள் அத்தனை அருகில் வந்திருப்பதை அப்போதுதான் உணர்ந்தான். எந்தப்பெண்ணிடமும் அவன் அப்படி நடுங்கியதில்லை. அவன் தொடை ஆடிக்கொண்டே இருந்தது. மூச்சுத்திணற “இல்லை” என்றான். “சொல்லுங்கள்!” துரியோதனன் “இல்லை, நான் எண்ணினேன்… நீ சிரிக்கையில் சுடர் ஏற்றப்பட்ட பாவை விளக்குபோலிருக்கிறாய்  என்று” என்றான்.

அவள் நிமிர்ந்து “இதுதான் நலம் பாராட்டல்” என்றாள். “இதை சொல்வதற்கென்ன?” துரியோதனன் “நான் எவரிடமும் இதையெல்லாம் சொன்னதில்லையே” என்றான். “என்னிடம் சொல்லுங்கள்.” துரியோதனன் அவள் இடையை வளைத்து தன்னுடன் சேர்த்துக்கொண்டான். “சரிதான்” என்று அவள் சொன்னாள். “என்ன?” என்றான். “இடை பெரிது என்றார்கள். போதவில்லை என்று தோன்றுகிறது” என்றாள்.

அவன் உரக்கச்சிரிக்க அவள் அவன் வாயில் கையை வைத்து “என்ன சிரிப்பு?” என்றாள். “ஏன், சிரித்தால் என்ன?” பானுமதி “என்ன நினைப்பார்கள்?” என்றாள். “யார்?” அவள் புருவங்களை சுளித்து “கேட்பவர்கள்” என்றாள். “கேட்பவர்களா? இங்கே எவர் கேட்கிறார்கள்?” என்று கேட்டான். “கேட்பார்கள். வெளியே நின்றிருப்பார்கள்” என்றாள். “யார்?” என அவன் தன் இடையில் கைவைத்தான் . அங்கே வாள் இல்லாதது கண்டு திரும்பினான்.

அவள் “சேடியர் விறலியர்… அங்கே எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று யாருக்குத்தெரியும்? நாளை என்னை கேலிசெய்யவேண்டும் அல்லவா?” என்றாள். “உடனே வாளுக்குக் கைநீட்டுவது… என்ன பழக்கம் இது?” துரியோதனன் “அப்படியே பழகிவிட்டது” என்றான். “வாருங்கள்” என அவள் அவன் கைகளைப்பிடித்து மஞ்சத்தை நோக்கி கொண்டுசென்று அமரச்செய்தாள்.

அவளும் அருகே அமர்ந்துகொண்டு “ஏன் நடுங்குகிறீர்கள்?” என்றாள். “இல்லையே. நான்…” என்றான் துரியோதனன் தடுமாறியபடி. “உண்மையில்…” என்று சொல்லி முடிக்காமல் புன்னகைத்தான். “மது அருந்தவில்லை என்பதனாலா?” அவன் அந்த சொல்லை பிடித்துக்கொண்டான். “ஆம்” என்றான். “வேண்டுமென்றால் அருந்துங்கள், ஏவலனை வரச்சொல்கிறேன்.” துரியோதனன் அவள் கைகளைப்பிடித்து “வேண்டாம்” என்றான்.

“ஏன்?” என்று அவள் கேட்டாள். “மதுவைவிட உளமயக்குடன் இருக்கிறேன். அகிபீனாவைவிட சிவமூலியைவிட.” அவள் அவன் மேல் சாய்ந்து விழிகளில் சிரிப்புடன் “எது?” என்றாள். அவன் அவள் விழிகளை அப்போதுதான் அண்மையில் பார்த்தான். கருணைகொண்ட விழிகள் என்று கிருபை சொன்னது நினைவுக்கு வந்தது. “நீ” என்றான். “உன் கண்கள் கருணை நிறைந்தவை என்றார் கிருபை.”

பானுமதி சிரித்து “ஆம், என்னிடமும் சொன்னார்” என்றாள். “அந்தக் கருணையில் இருந்து நான் தப்பவே முடியாது என்றார்.” அவள் அவன் மேல் முகத்தைவைத்து மெல்லியகுரலில் “தப்ப விழைகிறீர்களா?” என்றாள். “இல்லை” என்று அவனும் மெல்லியகுரலில் சொன்னான். மலர்மணத்துக்கு ஆடைமணத்துக்கு அப்பாலிருக்கும் உடல்மணம். ”என்ன சொன்னார்கள்?” என்றான். “யார்?” என்றாள். “இப்போது உன்னை உள்ளே விட்டுச்சென்ற பெண்கள்.”

அவள் சிரித்து ”உள்ளே அங்கநாட்டரசரும் துச்சாதனரும் இருக்கிறார்களா என்று பார்த்துக்கொள் என்றார்கள்” என்றாள். துரியோதனன் உரக்க நகைத்தான். அது அவனை அந்தத் தருணத்தின் அத்தனை செயற்கையான இறுக்கங்களிலிருந்தும் விடுவித்தது. சேக்கையில் மல்லாந்து படுத்தபடி “உண்மையை சொல்லப்போனால் நான் அதைத்தான் எண்ணிக்கொண்டிருந்தேன். நான் இளையோன் இன்றி இருந்த நாட்கள் மிகமிகக்குறைவு. நான் பாதியாகி விட்டதுபோல தோன்றும்” என்றான்.

பானுமதி “அங்கநாட்டரசர் நீண்டநாள் தெற்கே சென்றிருந்தாரே” என்றாள். “ஆம், ஆனால் அவனை நான் எண்ணாமலிருந்ததில்லை. என் இளையோன் யுயுத்ஸு பலவகையிலும் கர்ணனைப்போன்றவன். அவனை ஒவ்வொரு நாளும் வரவழைத்து பேசிக்கொண்டிருப்பேன்.” பானுமதி “அவர்களுக்கு என்மேல் சினமிருக்கும்” என்றாள். “சினமா?” என்றான் துரியோதனன். “ஆம்” என்றாள் பானுமதி. “ஏன் சினம்? நீ என் மனைவி. அவர்கள் என் அணுக்கத்தினர்.” பானுமதி “அதெல்லாம் சொற்கள். அவர்கள் தங்கள் உள்ளத்தில் நிறைத்துள்ள இடத்தை நான் சற்று பறித்துக்கொள்கிறேன் அல்லவா?” என்றாள்.

துரியோதனன் சிரித்து “அத்தனை குழந்தைகள் அல்ல அவர்கள்” என்றான். “அன்பை பொறுத்தவரை அத்தனைபேரும் குழந்தைகளே” என்றாள். துரியோதனன் சிலகணங்கள் எண்ணத்திலாழ்ந்தபின் “ஆம், அவர்களிடம் அந்த மாற்றத்தைக் கண்டேன்” என்றான். “அது சில நாட்களில் அகன்றுவிடும்” என்றாள். “எப்படி?” என்றான் துரியோதனன். “நான் மிகச்சிறிய இடத்தைத்தான் எடுத்துக்கொள்ளப்போகிறேன். மலர்நுனியில் அமர்ந்திருக்கும் வண்ணத்துப்பூச்சி எடுத்துக்கொள்ளும் அளவுக்கு சிறிய இடம்” என்றாள் பானுமதி.

“சூதர்களைப்போல பேசுகிறாய்” என்றான் துரியோதனன். பானுமதி “சற்றுமுன் சூதர்களைப்போல பேசியது நீங்களும்தானே?” என்றாள். அவன் அவளை அடித்து “சொல்லிக்காட்டுகிறாயா?” என்றான். அடி அவளுக்கு வலித்தது. “எவ்வளவு பெரிய கை… இனிமேல் விளையாட்டுக்குக் கூட அடிக்கவேண்டாம்” என்றாள். துரியோதனன் சிரித்தபடி “இல்லை” என்றான்.

அவள் எழுந்து அறையிலிருந்த பழத்தாலத்தை எடுத்து வந்து அவன் முன் வைத்தாள். “உண்கிறீர்களா?” என்றாள். அவன் கைக்கு ஒன்றாக பழங்களை எடுத்தபடி “நான் பதற்றத்தில் நெடுநேரமாக உணவுண்ணவில்லை. பசிக்கிறது” என்றான். “அதை விழிகளிலே கண்டேன்” என்றாள் பானுமதி. “உண்மையாகவா? எப்படி?” என்றான். “சொல்லத்தெரியாது. ஆனால் தெரிந்துகொள்கிறேன்.” துரியோதனன் “பொய் சொல்கிறாய்” என்றான். “இல்லை, இனிமேல் ஒருமுறையேனும் உங்கள் பசியை நான் அறியாவிட்டால் நான் சொல்வது பொய் என்று கொள்ளுங்கள்” என்றாள்.

அவன் பழங்களை மிகவிரைவாக உண்டான். தாலம் ஒழிந்தபோது “நீ? உனக்கு வேண்டுமல்லவா? நான் எண்ணவேயில்லை” என்றான். “ஆனால் உண்ணும்போது துச்சாதனர் உண்டாரா என எண்ணிக்கொண்டீர்கள்.” துரியோதனன் சிரித்து “ஆம், அவனை எண்ணாமல் நான் எப்போதுமே எதையும் உண்பதில்லை” என்றான். “உன்னை எண்ணவேயில்லை. நீயும் பசிமிகுந்தவள் என்றாய்.” பானுமதி “நான் உண்டுவிட்டுத்தான் வந்தேன்” என்றாள் “எனக்குத்தேவை என்றால் தயங்காமல் உண்பேன், அப்படி பழகிவிட்டேன்.”

துரியோதனன் அவள் கைகளைப்பற்றிக்கொண்டு “இந்த அரண்மனை உனக்கு பிடித்திருக்கிறதா?” என்றான். “ஆம், ஹஸ்தி கட்டிய அரண்மனை. பழையது, ஆனால் முதுகளிறுபோல நிமிர்வு கொண்டது.” துரியோதனன் “நான் அரண்மனையில் வாழ்பவர்களை கேட்டேன்” என்றான். “அவர்களை நான் இன்னும் அறியத் தொடங்கவில்லை அல்லவா?” என்றாள்.

“துச்சளை? அவளைப்பற்றி என்ன நினைக்கிறாய்?” பானுமதி “அவளைத்தான் என் வாழ்நாள் முழுக்க அன்புடன் நினைத்திருப்பேன் என நினைக்கிறேன். ஏனென்றால், அவள் பெண்ணாகிவந்த நீங்கள்தான்” என்றாள். துரியோதனன் சிரித்து “அதை பலர் சொல்லியிருக்கிறார்கள்” என்றான். “என் கைகளை பற்றிக்கொண்டு அஸ்தினபுரியின் வழித்தோன்றல்களிடையே எந்தப்பூசலும் வராமல் பார்த்துக்கொள்வதே அவள் பணியென்றும் அதற்கு நான் உதவவேண்டும் என்றும் சொன்னாள்.”

துரியோதனன் “நீ என்ன சொன்னாய்?” என்றான். “நான் அவள் அடிமை என்றேன்.” துரியோதனன் “சிறப்பாக பேசக் கற்றிருக்கிறாய்” என்றான். “அன்னையை பார்த்தாயல்லவா?” “ஆம், அவர்களைப்பற்றி சூதர்கள் பாடியது நினைவுக்கு வந்தது.” துரியோதனனின் விழிகள் மாறுபட்டன. “என்ன?” என்றான். ”அனைவரையும் பெற்று அமைந்திருக்கும் அன்னைத்தேனீ” என்றாள் பானுமதி. “அவர்களிடம் எப்போதும் இருந்துகொண்டிருக்கும் ஒரு சலிப்பைக் கண்டேன். அதுதான் அன்னை தெய்வங்களின் இயல்பு என்று தோன்றியது.”

துரியோதனன் “ஆம், அன்னை மிகவும் உளம் சலித்துவிட்டார். விழியின்மையால் அவர் அகம் நோக்கி நெடுந்தொலைவு சென்றுவிட்டார்” என்றான். “அவர்களின் புறம்தான் தங்கையராக அவர்களை சூழ்ந்திருக்கிறதே” என்றாள் பானுமதி. “ஒவ்வொரு சிற்றரசியும் ஒவ்வொரு பாங்கு. ஆனால் அனைவரும் இணைந்து ஒன்றாகவும் தெரிகிறார்கள்.”

துரியோதனன் “அன்னை என்னை நோக்கி விழிநீர் சிந்தினார்” என்றான். “எப்போது?” என்றாள் அவள். “மதுபர்க்கத்திற்கு வந்தபோது.” பானுமதி புன்னகைசெய்து “அது இயல்புதானே?” என்றாள். “ஏன்?” “அவர்கள் நெஞ்சுக்குள் பொத்திவைத்திருந்த வைரம்.” துரியோதனன் எச்சரிக்கையுடன் “எது?” என்றான்.

அவள் அவன் நெஞ்சில் தொட்டு “இது” என்றாள். துரியோதனன் “அதற்கு ஏன் அழவேண்டும்? நான் எப்போதும் அவர் மைந்தன் அல்லவா?” என்றான். “அதை மைந்தருக்கு சொல்லி புரியவைக்க அன்னையரால் இயலாது.” துரியோதனன் “நீ பேசுவதை புரிந்துகொள்ள நான் இன்னொரு குருகுலம் செல்லவேண்டும் போலிருக்கிறது” என்றான்.

”இளையோனைப்பற்றி எண்ணிக்கொண்டிருந்தீர்கள் அல்லவா?” என்றாள் பானுமதி. “பலந்தரையை இழந்தது அவர் உள்ளத்தை வருத்துகிறது போலும்.” துரியோதனன் சிலகணங்களுக்குப்பின் “அதை அவன் சொல்லவில்லை. ஆனால் வருந்துகிறான் என்றே நான் உணர்கிறேன்” என்றான். “பலந்தரைக்கு ஒரு தங்கை இருக்கிறாள். எந்தையின் இரண்டாவது அரசியின் மகள் அவள். அசலை என்று பெயர். அவளை இளையவருக்கு மணம்கொள்வோம்.”

துரியோதனன் சற்று சலிப்புடன் “மீண்டும் படையெடுப்பா?” என்றான். “தேவையில்லை. நானே எந்தையிடம் பேசுகிறேன். அவர் ஒப்புக்கொள்ளாமலிருக்கமாட்டார். ஏனென்றால் நான் இங்கிருப்பதனால் என்னுடன் அவளும் இருப்பதே சிறப்பு என எண்ணுவார். இன்னொரு நாட்டுக்குச்சென்றால் இந்த மதிப்பு அவளுக்கிருக்காது.”

துரியோதனன் மலர்ந்து “ஆம், அதை செய்யலாம்… அதுவே உகந்தது” என்றான். “நான் நாளையே எந்தையிடம் தூதனை அனுப்புகிறேன். அவரது ஒப்புதல் வந்ததும் அஸ்தினபுரியின் முறைமைத்தூதர்கள் செல்லட்டும்.” துரியோதனன் “விதுரரிடமே சொல்கிறேன். அவர் சென்று பேசினால் அனைத்தும் முடிந்துவிடும்னென்றான். பானுமதி “அத்துடன் அங்கநாட்டரசருக்கும் துணைவியை தேடவேண்டும்” என்றாள்.

துரியோதனன் முகம் சற்று மாறியது. “நீ அதை அறியமாட்டாய். அவன் பிறப்பால்…” என தொடங்க “அறிவேன்” என்றாள் பானுமதி. “அவர் இன்று அங்கநாட்டுக்கு அரசர். அஸ்தினபுரியின் அரசனின் முதற்துணைவர். நாம் கோருவது பெண் மட்டும் அல்ல. நட்பும் கூட. அதை மறுப்பவர் பகையை தேடிக்கொள்கிறார் . அதை அவர்களுக்கு தெளிவுபடுத்துவோம்.”

“மெல்லமெல்ல அரசு சூழ்தலுக்குள் வருகிறாய். பேரரசியின் மொழிகளை பேசுகிறாய்” என்றான் துரியோதனன். “நானும் ஓர் அரசின் அவையில் பத்துவருடங்கள் அமர்ந்தவள்தான்” என்றாள் பானுமதி. “புளிந்தநாட்டு இளவரசி சுப்ரியையை அவருக்காக கேட்டுப்பார்ப்போம்.” துரியோதனன் “கேட்கலாம்…” என்றான். ”நான் அவளை மூன்றாண்டுகளுக்குமுன் குடப்பெருக்கு விழாவில் கண்டிருக்கிறேன். தன் தந்தையுடன் கங்கைநீராட வந்திருந்தாள். எங்கள் அரண்மனையில்தான் என்னுடன் தங்கியிருந்தாள். அவள் பேசியதெல்லாம் வசுஷேணரைப்பற்றித்தான்.”

துரியோதனன் முகம் மலர்ந்து “அவனை பெண்கள் விரும்புவர் என்று நன்கறிவேன்…” என்றான். “புளிந்தர்கள் அவந்திநாட்டின் கீழ்க்குடியினராக இருந்தவர்கள். தனிநாடாக மாறி மூன்றுதலைமுறை ஆகவில்லை. அவர்களை மீண்டும் அவந்தி அடிமைகொண்டுவிடும் என அஞ்சிக்கொண்டிருக்கிறார்கள். நர்மதைக்கரையின் அடர்காடுகளுக்குள் அவர்களின் சிறுநகர் இருப்பதனால்தான் இன்னமும் அவர்கள் வெற்றிகொள்ளப்படவில்லை. ஆனால் அவர்கள் நர்மதை வழியாக செய்துவந்த வணிகம் முழுமையாகவே நின்றுவிட்டது. அவர்களுக்கு வசுஷேணரின் மணத்தூது மூழ்குபவன் முன்னால் நீட்டப்பட்ட கையாகவே இருக்கும்” என்று பானுமதி சொன்னாள்.

“ஆனால் புளிந்தர்கள் மலைமக்கள் அல்ல. அவர்கள் மகதத்திற்கு இணையான தொல்குடியினர். மகதத்தின் கிளைவழிகளில் ஒன்று தாயாதிகளால் துரத்தப்பட்டு காடுகளுக்குள் சென்று அந்நகரை அமைத்ததாகச் சொல்லப்படுகிறது… இன்று வசுஷேணருக்குத்தேவை வல்லமை வாய்ந்த நாட்டின் உறவல்ல. குலத்தொன்மை வாய்ந்த வலிமையற்ற ஒருநாட்டின் உறவுதான்”

துரியோதனன் உளம் விம்ம ”இதை முடித்துவிடுகிறேன். நாளையே…” என்றான். பானுமதி “இரு மணங்களும் முடிந்தால் தாங்களும் சற்று விடுபடமுடியும்” என்றாள். அவன் அவளை மீண்டும் அடிக்க கையோங்கி பின் தாழ்த்தி “சரிதான். அதற்காகத்தான் இந்தத் திட்டமா?”என்றான்.

பானுமதி விழிகள் மெல்ல மாறுபட்டன. “நான் ஒன்று கேட்கலாமா?” என்றாள். “சொல்” என்றான் துரியோதனன். ”நாளை காலை நான் சேடியருடன் சென்று கோட்டைக்கு அப்பாலிருக்கும் அம்பையன்னையின் ஆலயத்தில் ஒரு பலிவழிபாடு செய்து வரலாமா?” துரியோதனன் விழிகள் சுருங்க “அதற்கு முறைமையுண்டா என்று தெரியவில்லையே” என்றான்.

“இல்லை, அரசகுலத்தவர் எவரும் செய்வதில்லை. ஆனால் ஏவலரையும் பூசகரையும் அனுப்பி பூசை செய்கிறார்கள்.” துரியோதனன் “அதை பீஷ்மபிதாமகர் விரும்புவாரா என்று தெரியவில்லையே…” என்றான். “நான் அவரிடம் அதைப்பற்றி கேட்கமுடியாது. வேண்டுமென்றால் உனக்காக நான் ஹரிசேனரிடம் பேசுகிறேன்.”

“வேண்டாம், நானே நாளை நேரில்சென்று பிதாமகரிடம் பேசுகிறேன்” என்றாள் பானுமதி. “நீயா? பிதாமகரிடமா?” என்றான் துரியோதனன் திகைப்புடன். “இங்குள்ள பெண்கள் எவரும் அவர் முன் செல்வதில்லை.” பானுமதி சிறிய பற்கள் ஒளிவிட சிரித்து ”நான் செல்லலாம். நான் காசிநாட்டு இளவரசி” என்றாள். துரியோதனன் புரியாமல் “ஏன்?” என்றான். “அதை நாளை சொல்கிறேன்” என்றாள் பானுமதி.

அவன் பெருமூச்சுடன் படுத்துக்கொண்டு “விடியவிருக்கிறது. இதுவரை பேசிக்கொண்டே இருந்திருக்கிறோம்” என்றான். “ஆம்” என்று அவள் சொன்னாள். ”எவ்வளவு அரசியல் நடவடிக்கைகளை பேசி முடித்திருக்கிறோம்!” துரியோதனன் சிரித்து “அரசு சூழ்தலை இனி உன்னிடமே விட்டுவிடலாம் என நினைக்கிறேன்” என்றான். “விடுங்கள் நானே பார்த்துக்கொள்கிறேன்” என்றாள் பானுமதி.

அவன் அவள் இடையில் கையை வைத்து “நீ அஸ்தினபுரியின் அரசியாக விழைந்தாயா?” என்றான். “இல்லை” என்று பானுமதி சொன்னாள். “உங்கள் துணைவியாக ஆகவேண்டும் என்று மட்டுமே எண்ணினேன்.” துரியோதனன் அவள் விழிகளை நோக்கி “என் துணைவியாகவா? ஏன்?” என்றான். “அது நான்காண்டுகளுக்கு முன்பு நான் எடுத்த முடிவு.”

துரியோதனன் புன்னகைத்தபடி “நான்காண்டுகளுக்கு முன்பா? எப்படி?” என்றான். “இளைய யாதவர் சொன்னார்” என்றாள் பானுமதி. அச்சொற்களை அவன் செவிகொள்ளவில்லை. “துவாரகையை கட்டிமுடித்ததும் குடமுழுக்காட்ட கங்கைநீர் கொள்வதற்காக இளைய யாதவர் காசிக்கு வந்திருந்தார். எங்கள் அரண்மனையில் தங்கினார். அப்போதுதான்” என்று அவள் சொன்னதும் அவன் தோள் அதிரத்தொடங்கியது. புளிப்புண்டவன் போல தானாகவே சுருங்கிய விழிகளுடன் அவளை நோக்கினான்.

“அவர் அங்கிருந்த ஏழுநாட்களும் நான் என் களித்தோழனுடன் இருந்ததாகவே உணர்ந்தேன்” என்று சிறுமிக்குரிய துள்ளலுடன் பானுமதி சொன்னாள். “நான் அதுவரை ஆண்களின் உலகுக்குள் சென்றதே இல்லை. என் தமையனுக்கும் எனக்கும் இருபது வயது வேறுபாடு. அவர் என்னிடம் பேசியதேயில்லை. சிரிக்கும் ஆண் என நான் கண்டது அவரை மட்டுமே. அந்த ஏழுநாட்களும் நானும் சிரித்துக்கொண்டே இருந்தேன்.”

அவன் முகமாறுதலை காணாமல் அவள் சொல்லிக்கொண்டே சென்றாள். “அந்த ஏழுநாட்களில் நான் கற்றவையும் உணர்ந்தவையும் முழு வாழ்நாளுக்கு நிகர். அவர் துவாரகைக்கு விடைபெற்றுச் செல்லும்போது வாயில்வரைக்கும் சென்று இனி எப்போது பார்ப்பேன் கண்ணா என்று கேட்டேன். ஒரு மயிற்பீலியை எடுத்துப்பார் நான் தெரிவேன் என்று சொல்லி சிரித்துவிட்டுச் சென்றார்” என்றாள் பானுமதி. “அன்று முதல் எப்போதும் என்னிடம் மயிற்பீலி இருக்கும்.”

“அவனா என்னைப்பற்றி சொன்னான்?” என்றான் துரியோதனன் உணர்ச்சியற்ற குரலில். “ஆம், அவரும் நானும் என் அன்னையும் காலபைரவர் ஆலயத்தருகே கங்கைப்படிக்கட்டில் அமர்ந்திருக்கையில் என் அன்னை அவரிடம் எனக்குரிய மணமகன் எங்கிருக்கிறான் என்று சொல்லும்படி கோரினார். அவர் அனைத்தும் அறிந்தவர் என அவர் நம்பத்தொடங்கியிருந்தார்” என்றாள் பானுமதி. உடலில் கூடிய துள்ளலுடன் அவனருகே மேலும் நெருங்கி அமர்ந்து அவன் கைகளைப்பற்றிக்கொண்டு சொல்லலானாள்.

“கண்ணன் என்னை நோக்கியபின் என் தலையில் இருந்து மலர்ச்சரம் ஒன்றை எடுத்து ஏழு சிறிய மலர்களை ஒவ்வொன்றாக நீரிலிடும்படி சொன்னார். நான் ஒவ்வொரு மல்லிகையாக எடுத்து நீரிலிட்டேன். ஏழாவது மல்லிகையை நீரிலிடும்போது மேலே யானை பிளிறியது. திரும்பிப்பார்த்தேன். எங்கள் பட்டத்துயானை அப்பால் விஸ்வநாதர் ஆலயத்தின் படியேறிச்செல்வதை கண்டேன். இளைய யாதவர் என் அன்னையை நோக்கி வேழம் என்றார். வேழத்திற்கு மனைவியாகி பேரரசியாக அரியணை அமர்வேன் என்றார்.”.

“அன்னை யாரவர் என்று கேட்டுக்கொண்டே இருந்தார்” என்றாள் பானுமதி. கிளுகிளுத்துச்சிரித்தபடி “ஆனால் யாதவர் புன்னகையுடன் அதை அவளே கண்டடையட்டும் என்று சொல்லிவிட்டார். நான் திகைத்து உளம் மயங்கியிருந்தேன். வெறும் தற்செயல், யாதவர் விளையாடுகிறார் என்று ஒருபக்கம் தோன்றினாலும் மறுபக்கம் ஏதோ பொருளுண்டு என்றும் எண்ணிக்கொண்டேன். ஆனால் உண்மையில் எங்கோ உள்ளத்தில் தோன்றிவிட்டது என்று இப்போது தெரிகிறது” என்றாள்.

“அன்று மாலையே ஒரு சூதனும் விறலியும் வந்திருந்தனர். அரண்மனை மகளிர்கூடத்தில் அவர்கள் பாடியபோது அஸ்தினபுரியின் கதை வந்தது. மதவேழமான ஹஸ்தியைப்பற்றி பாடினர். பேரரசர் திருதராஷ்டிரர் பற்றி பாடினர். அதன்பின் தங்கள் புயங்களைப்பற்றி பாடத்தொடங்கினர். உங்கள் தோள்களில் வாழும் தெய்வங்களைப்பற்றி கேட்டபோது நான் கண்ணீர்வடித்துக்கொண்டிருந்தேன். அப்போதே நான் உறுதிகொண்டுவிட்டேன்.”

“அவர் அனைத்துமறிந்தவர். அனைத்துடனும் விளையாடும் மாயன்” என்றாள் பானுமதி விழிகளைச் சரித்து, கனவுடன். “சொற்கள் நிகழாது போகாதென்று எனக்குத்தெரியும்.” அவள் மார்பு ஏறியிறங்கியது. ”அவர் என் மெய்யாசிரியன், என் தந்தை, என் இறைவடிவம்.” அக்கணம் அவள் எங்கோ இருந்தாள். அவன் முன்னாலிருந்தது ஓர் ஓவியம்.

துரியோதனன் விழிகளை மூடியபடி படுத்திருந்தான். அவள் நீர்ப்பாவை விரல்பட்டு என கலைந்து பெருமூச்சுடன் “இதை முதல்நாளே உங்களிடம் சொல்லலாகாதென்றும் எனக்குத்தெரியும். ஆனால் என் அகத்தே உள்ள இந்த மயிற்பீலியை என்னால் மறைக்கமுடியாது” என்றாள்.

துரியோதனன் கண்களை மூடியபடி கிடந்தான். பானுமதி தயங்கியபடி கைநீட்டி அவனை மெல்ல தொட்டு தணிந்த குரலில் “என் மேல் சினம் கொண்டிருக்கிறீர்களா?” என்றாள். அவன் விழிகளைத் திறந்தான். அவள் அவன் சிவந்த முகத்தை நோக்கி “என்னை வெறுக்கிறீர்கள் என்றாலும் அது முறையே. நான் மகளிரறை இருளுக்குள் செல்லவும் சித்தமாக இருக்கிறேன்” என்றாள்.

துரியோதனன் சட்டென்று உரக்கச் சிரித்து “சரிதான். இங்கே எல்லா பெண்களும் இப்படித்தான் இருக்கிறீர்கள். அங்கே என் அன்னையை எழுப்பி அவள் உள்ளமென்ன என்று நோக்கினால் அவள் மடியில் கைக்குழந்தையாக அந்த யாதவனை வைத்து குலவுவது தெரியும்” என்றான். ”பத்து அன்னையரும் அவனை மைந்தனாக எண்ணுகிறார்கள். துச்சளை அவனை உன்னைவிட வழிபடுகிறாள்.”

பானுமதி உளம் எளிதாகி நகைத்து “கிருஷ்ணன் என பெயரிட ஒரு மைந்தனை நானும் கனவுகாண்கிறேன்” என்றாள். துரியோதனன் உதடுகளில் மெல்லிய புன்னகையுடன் “பெண் என்றால் கிருஷ்ணை என்று பெயரிடுவோம்” என்றான்.

முந்தைய கட்டுரைஜெயகாந்தன் நினைவஞ்சலி
அடுத்த கட்டுரைஅக்னிநதி, உப்புவேலி- கடிதம்