ஜெ ,
உண்மையில் இத்தைகைய ஒரு பகடி (அ) ஒப்புதல் வாக்கு மூலத்திற்காக நான் காத்திருந்தேன் எனலாம். இந்த சுய /பிற பாராட்டுகள் மேல் உங்களுக்கு இருக்கும் மோகம் குறித்து விமர்சிக்கும் நோக்கில் ஏற்கனவே நான் ஒரு கேள்வியோ கடிதமோ எழுதியதாக ஞாபகம். தோற்றாலும் சில இடங்களை பட்டவர்த்தனமாக பொதுவெளியில் தொட்டு விட்டுவது உயர்ந்த செயல்.
//…..ஞானி தவிர// வரியை மிக ரசித்தேன்.
வெண் முரசு எழுதுவதன் வழி இதுபோன்ற பல உயர்மதிபீடுகளை அடைய எனது ஆசீர்வாதங்கள்
கிருஷ்ணன்
இனிய ஜெயம்,
எப்போதுமே உங்களைக் கேட்டு வித விதமான போன் கால்கள் வரும். உங்கள் கதை ஒன்றை வாசித்து விட்டு, உங்களுக்கு நிச்சயம் ரசவாதம் தெரியும், உங்கள் முகவரியை அவருக்கு அளிக்காவிட்டால் உயிர் தரிக்கேன், என்று ஒரு குரல் கெஞ்சும்,
குலாம் தஸ்தகீர் ஜாமூன் பாபாவை சந்திக்க வழி கேட்டு பக்த சிரோண்மணி யாரேனும் தொலை பேசுவர். பிரபல இயக்குனர் யாரேனும் அழைப்பர்.கடந்த வாரம் ஒரு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உங்கள் இன்றைய காந்தியை வாசித்து விட்டு , கண்ணீர் மல்க சூளுரைத்தார் ”தம்பி நான் முதலமைச்சரா இருந்தா அவருக்குதான் பாரத ரத்னா’… ”சார் நான் கவிஞர் ………….பேசுறேன் சாருக்கு என் கவிதை தொகுப்ப அனுப்பனும் சார் அட்ரெஸ் வேணும்” நான் ” சார் தளத்த தொடர்ந்து வாசிக்கரீன்களா?” ” இல்லைங்க அக்சுவலா எனக்கு நிறைய வேல, அதுக்கு எடைல ….”, அரங்காவுக்கான வியாபார வாய்ப்பு, உங்களுக்கான கொலை மிரட்டல், என அது ஒரு ரகளையான கலவைக் களம். நேற்று இரவு வழமை போல ஒரு புதிய அறிமுக வாசகரின் அழைப்பு. உங்கள் நூல்கள் கிடைக்கும் மையங்கள் பற்றி கேட்டுக் கொண்டிருந்தார். பேச்சு தொடர்ந்து நீங்கள் சுட்டி அளித்த எஸ்ரா கதைகள் நோக்கி நகர்ந்தது.
உனக்கு முப்பத்தி நாலு வயதாகிறது, கதை பேசும் சிக்கலை நேரடியாக அனுபவித்த இரு தோழிகள் எனக்கு உண்டு. சராசரிக்கு மேலே தன்னை உணரும் பெண்கள் எல்லாம் சந்திக்கும் முதல் சிக்கல் திருமண வாழ்வுக்குள் நுழைவதா வேண்டாமா? என்பது அடுத்து தனக்கொரு குழந்தையை விரும்பாத பெண்களே கிடையாது. திருமண வாழ்வு மீதான ஐயம், இந்த இரண்டும் சந்திக்கும் புள்ளியில் அவளது ஒழுக்கம் கேள்விக்கு உட்படுத்தப் படுகிறது. குறிப்பாக அந்த மகளுக்கு ஏதேனும் கவுன்சிலிங் தேவையா என்று தந்தையே கேட்கும் கணம். [பல தருணங்களில் தந்தை சொல்லி, தாய் இதை மகள் வசம் கேட்பாள். மகள் நல்வாழ்வு மீதான அக்கறை] தமிழில் மிக குறைவான கதைகளே இந்த தருணத்தை மையம் கொண்டவை. [ கிட்டத் தட்ட இதற்க்கு இணையான தளத்தை பேசும் கதை ‘இரவில் கரையும் நிழல்கள்”. ;கவின் மலர் ]
ஒரு படைப்பு வடிவத்தில், கூறு முறையில் பலவீனமாக இருக்கலாம் ஆனால் அதில் இலங்கும் உண்மை, மற்றும் தனித்தன்மை அதை குறிப்பிடத்தக்க படைப்புஆக மாற்றி விடும். பெண்கள் மீது போலி கரிசனத்துடன் எழுதி சமீபத்தில் வெளியான லக்ஷ்மி சரவண குமாரின் முகம் அற்றவள் [அக் கதை ,உருவத்தால் உள் அடக்கத்தால், சாரத்தால் போலி] கதை உடன், எஸ்ராவின் இக் கதையை ஒப்பிட்டால் , எஸ்ராவின் தீவிரம் விளங்கும்.
”உண்மையின் ஒளி கொண்டு, உயிர் பெற்ற கற்பனையே இலக்கியம்” இது லலிதாம்பிகா அந்தர்ஜனம் எனும் எழுத்தாளர் சொன்னது. ஆம் உண்மையின் ஒளி அது போதும். எஸ்ராவின் புனைவுகளில் , ஏற்றத் தாழ்வு இருக்கலாம், ஆனால் உண்மையின் ஒளி எப்போதும் உண்டு.
கடலூர் சீனு