பாராட்டுக்கள்

தன்னைத்தவிர வேறு எவருமே தமிழில் எழுத்தாளர் இல்லை எனும் குழந்தைத்தனமான எண்ணம் ஜெமோவுக்கு நாளொருமேனி பொழுதோரு வண்ணம் வளர்கிறது என்கிறேன்!- இது டிவிட்டர்ல பார்த்தது. இதற்கும் ‘நேரடியான’ பதில் சொல்லுங்கள். உண்மையா?

கேஎஸ்
thumb
அன்புள்ள்ள கே.எஸ்,

குழந்தைத்தனமாக இருப்பது உற்சாகமானதுதானே? எல்லாரும் கொஞ்சுவார்கள்.மம்மு ஊட்டுவார்கள்.சுதந்திரமாக எங்கு வேண்டுமென்றாலும் மூச்சா போகலாம்.

வேடிக்கையை விடுங்கள். உண்மையில் என் சமகால எழுத்துக்களில் நான் வாசித்த அத்தனை முக்கியமான படைப்பாளிகளையும் படைப்புகளையும் பற்றிப் பேசியிருக்கிறேன். எஸ்.ரா, யுவன், ஷோபா, சாரு நிவேதிதா, இரா முருகன் அனைவரையும்.

அடுத்த தலைமுறையில் கூட ஜோ டி குரூஸ், சு.வெங்கடேசன் என முக்கியமான படைப்புகள் வந்தபோதெல்லாம் சுட்டிக்காட்டியிருக்கிறேன். சமீபத்தில் கௌதம் சன்னாவின் குறத்தியாறு வரை. நான் கவனிக்காத , விட்டுப்போன முக்கியமான ஒரு படைப்பாளியை நீங்கள் சொல்லுங்கள்.

எந்த எழுத்தாளனும் தனி அல்ல. எழுத்து என்பது ஒரு பெரிய பண்பாட்டு உரையாடல். அதில் அவன் ஒரு குரல் மட்டுமே.

சரி, இன்னும் நேரடியாக ஒன்று சொல்கிறேன். எந்நிலையிலும் தமிழ்ச்சூழலில் எழுதுபவனுக்கு பாராட்டு, ரசிப்பும் தொடர்ந்து தேவையாகிறது. இங்கே எழுதி என்ன பயன் என்ற சோர்வை அடையாமல் எவருமே இருக்கமுடியாது. மேலதிகமாக எனக்குச் சோர்வு வர காரணங்கள் அதிகம். நான் எழுதும் பரப்பும் அதிகம், என் படைப்புகளில் பெரும்பாலானவை நேரடி வாசிப்பால் அடையப்படக்கூடியவையும் அல்ல.

பாராட்டுக்கள் அந்தச் சோர்வை கடக்க உதவுகின்றன, அவ்வளவுதான். கொஞ்சம் வெட்கக்கேடான விஷயம்தான். ஆனால் தேவையாக இருக்கிறது. இதற்கிடையே நான் யுவன் சந்திரசேகர் போன்று உச்சகட்ட சோர்வில் இருப்பவர்களை அடிக்கடிக் கூப்பிட்டு உற்சாகம் வேறு கொடுக்கவேண்டியிருக்கிறது. அதற்கும் எனக்கு உற்சாகம் தேவைப்படுகிறது

எழுத்தாளன் எவனுமே ஞானி கிடையாது- . ஞானி தவிர. ஆகவே கொஞ்சம் கேனத்தனமாக இருப்பதற்கான லைசன்ஸ் அவனுக்கு உண்டு.வளர்ந்தவர்களுக்கு அறிவுரை சொல்லும் துணிச்சல் அவனுக்கு அந்த கேனத்தனத்தால்தானே வருகிறது?

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 66
அடுத்த கட்டுரைகொற்றவை பித்து-1