”அடையாளங்கள் நிரந்தரமற்றவை. நிரந்தரமற்ற எதுவும் பொய்யே. நிரந்தரத்தைக் கண்டு நடுங்குபவன் அடையாளத்தை நாடுகிறான். காலத்தின் இடுக்கில் புகுந்து கொண்டு முடிவின்மையை நிராகரிக்கிறான். அவன் எந்தப்பொந்தில் நுழைந்தாலும் காலம் துரத்தி வரும். காதைப்பிடித்து தூக்கி கண்களைப் பார்த்துச் சிரிக்கும். அப்போது அவன் உடைந்துபோய் அழுகிறான்.”
(காசியபனான வசுதனிடம் மகாகாலன் எனுஞ் சித்தன்)
அன்பு ஜெயமோகன்,
காலம் நம்மை விடாது துரத்துவதாக சொல்லிக்கொண்டே இருக்கிறோம். காலத்தின் வேகமான நகர்வைக் கண்டு அஞ்சவும் செய்கிறோம். காலனென்று எமனைக் குறிப்பிடுவதன் வழியாக காலத்தின் மீதான நமது அச்சத்தைக் கண்டுகொள்ளலாம். மனித வாழ்வின் தலையெழுத்தே அவன் பிறந்த நேரத்தால்தான் தீர்மானிக்கப்படுகிறது என்பதான நம்பிக்கையை நினைவுகூர்வோம். குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கும் ஒருவனின் வாழ்வியல் சம்பவங்களை முன்கூட்டியே சொல்லிவிட முடியும் என நம்மில் பெரும்பாலானோர் அசட்டுத்தனமாக நம்பியும் கொண்டிருக்கின்றனர். இங்கு ஒரு கேள்வியை எழுப்பிக் கொள்வோம். காலம் நம்மை அலைக்கழிக்கிறதா அல்லது காலமெனும் ஒன்றை உருவகித்து நாமே அலைபாய்ந்து கொண்டிருக்கிறோமா? காலமென்ற ஒன்று தனித்து இல்லை. நாமே உருவாக்கிக் கொண்ட மாயஆடி அது. தண்ணீல் தெரியும் தன் பிம்பத்தைக் கண்டு பயப்படும் நரி போன்று அவ்வாடியில் தெரியும் நம் பிம்பத்தைக் கண்டே அதிகம் அஞ்சுகிறோம்.
காலத்தின் மூலத்தை நம்மால் திட்டமாகச் சொல்லிவிட முடியாது. அறிவுக்கு நிறைவளிக்கு வகையில் ஓரளவு ஊகிக்க முடியும். எப்போது பெருவெடிப்பு நிகழ்ந்த புள்ளியிலிருந்து காலம் துவங்கியிருக்கலாம் என நாம் கருத அதிக வாய்ப்பு இருக்கிறது. பெருவெடிப்புக் கொள்கையின்படி பேரண்டம் தோன்றிய கணத்திலிருந்து இன்றையநாள் வரையிலான காலத்தின் மதிப்பு சற்றேறக்குறைய 14 பில்லியன் ஆண்டுகள். அதாவது, 1400 கோடி ஆண்டுகள். ஆக, காலத்தின் வயதும் 1400 கோடி ஆண்டுகள் எனச் சொல்லலாம் அல்லவா? அதற்கு முன்பு காலம் நிச்சயம் இருந்திருக்க வாய்ப்பில்லை. அப்படியானால் காலம் நிரந்தரமானதன்று. நிரந்தரமற்ற காலம் எப்போதைக்குமான உண்மையாக இருக்க முடியுமா? நிச்சயம் வாய்ப்பில்லை. அப்படி இருக்க காலத்தை முன்வைத்து நாம் பயப்படுவதும், நம்பிக்கை இழப்பதும் எப்பேர்ப்பட்ட அறிவீனச் செயல்கள்?
ஒரு மனிதனின் வாழ்வு அவன் தலையெழுத்தைக் கொண்டே அமைகிறது என மனிதச்சமூகம் தொடர்ந்து நம்பி வருகிறது. தலையெழுத்தை இரண்டு காரணிகள் தீர்மானிப்பதாகவும் அது கருதுகிறது; அவை பிறந்த இடம் மற்றும் பிறந்த நேரம். பிறந்த நேரம் காலத்தைக் குறிப்பது. பிறந்த இடம் என்பது வெளியின் பகுதியோடு தொடர்புடையது. ஒரு குறிப்பிட்ட நபரின் சாதகம் என்பது அவர் பிறந்த இடம் மற்றும் நேரத்தைக் கணக்கில் கொண்டே கணிக்கப்படுகிறது என்பதை நாம் நினைவுகூர்வோம். முதலில் காலம்தான் மனிதனைப் பயமுறுத்துகிறது என்றோம். இப்போது அத்தோடு வெளியின் குறிப்பிட்ட பகுதியையும்(இடத்தையும்) இணைத்துக் கொண்டிருக்கிறோம். குழப்பம் வேண்டாம். ஒரு மனிதனால் காலத்தையும், இடத்தையும் அள்வீடுகளாகக் கொள்ளாமல் அவன் இருப்பை அடையாளப்படுத்திவிட முடியாது. இப்புள்ளியிலிருந்து மனிதன் தன்னை அடையாளப்படுத்துவதாக நம்பும் காலம் மற்றும் இடத்தைக் கணக்கில் கொண்டே பேச ஆரம்பிக்கலாம்.
பெருவெடிப்பு நிகழ்வதற்கு முன் காலமும், இடமும்(வெளியின் பகுதிகள்) எங்கும் இல்லை. அப்போது இருந்தது ஒன்றே ஒன்றுதான். வெட்டவெளி; வெறும் வெட்டவெளி. அதை வரையறுப்பதன் வழியாகத்தான் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் கால, இட எல்லைகளற்ற பரப்பு என்று சொல்லலாம். அதுவே அனைத்துக்கும் ஆதி; அனாதி. அனாதி எனும் சொல்வழியாக அதற்கு அடிப்படையாக எதுவுமில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம். அவ்வகையில் அதுவே தனித்துவமான ஆதிமூலம். மற்றபடி, அதை நாம் உள்ளவாறே உணர்ந்து கொள்வது என்பது சாத்தியமில்லை. “மன வாக்கு செயலாலே அடைதற்கரிதாகி / அரு உருவாகி ஒன்றுபோலே இருக்கும் பொருளை / எவ்வாறு புகல்வதுவே” எனும் அருணகிரிநாதரின் கந்தர் அலங்காரப் பாடல்வரிகள் போன்று வியந்தோத முயலலாம். ”அரியுமல்ல அயனுமல்ல அப்புறத்தில் அப்புறம் / கருமைசெம்மை வெண்மையைக் கடந்துநின்ற காரணம் / பெரியதல்ல சிறியதல்ல பற்றுமின்கள் பற்றுமின்கள் / துரியமும் கடந்துநின்ற தூரதூர தூரமே” என்பான் சிவவாக்கியன். ”அண்டமாய் அவனியாகி / அறியொணாப் பொருளதாகி” எனும் பாம்பன் சாமிகளின் வரியும் குறிப்பிடத்தக்கது. மற்றபடி, வெட்டவெளியை இனி எத்தனை காலம் மனிதகுலம் வாழ்ந்தாலும் அறிந்து கொள்ளவே முடியாது.
வெட்டவெளியில் திடீரென ஒரு அழுத்தம் நிகழ்ந்து அதனால் அதன் ஒரு புள்ளியில் வெடிக்கிறது. அதுவே பெருவெடிப்பு எனச் சொல்லப்படுகிறது. அவ்வெடிப்பால் ஒலியும், ஒளியும் தோன்றுகின்றன. அதிலும் குறிப்பாக ஒலியே முதலாவதாக இருக்கிறது. ஒலி இடமாகவும், ஒளி காலமாகவும் மாறுகிறது. ஒலி எப்படி இடமாக மாறுகிறது என்பதைப் புரிந்து கொள்வது எளிது. ஒலி என்றால் சத்தம் எனும் பொருள் மட்டும் உடையதாய்க் கருதக்கூடாது. ஒலி என்றால் ஆகாயம். ஐம்பூதங்களின் ஒன்றான ஆகாயம். அதிலிருந்து காற்று எனும் பூதம். தொடர்ந்து நெருப்பு, நீர் பூதங்கள். இறுதியாக நில பூதம். ஆக, பெருவெடிப்பின் ஒலி ஆகாயமாகி, ஆகாயத்திலிருந்து கிளைத்த பூதங்களால் இடமான நிலம் சாத்தியமாக இருக்கிறது. ”பாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி / நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி / தீயிடை மூன்றாய் திகழ்ந்தாய் போற்றி / வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி / வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி” எனும் மாணிக்கவாசகனின் போற்றித் திருவகவல் பாடல் வரிகளைக் கவனியுங்கள். வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றியில் இருந்து துவங்கி மேலே செல்வது நன்று. பெருவெடிப்பின் ஒலியில் இருந்து பார்(நிலம்) உருவான சித்திரத்தை ஓரளவு நாம் நெருங்கலாம். விளைந்தாய் எனும் சொல்லை அழகாகக் கையாண்டிருக்கும் மாணிக்கவாசகனின் பாதங்களைப் பணிகிறேன். ஒளி என்பது வெளிச்சம். வெளியிலிருந்து விளைந்த பகுதிகளையும், அவற்றின் இடைவெளியையும் ஒளியே நிரப்பி இருக்கிறது. ஒளியால்தான் பேரண்டங்கள், அண்டங்கள், விண்மீன் குடும்பங்கள், கோள்களை நம்மால் அறியமுடிகிறது. இப்போது ஒளி எப்படி காலமானது என்பதைப் பார்ப்போம். நம் தற்போதைய காலக்கணக்கில் முக்கியமானது மாதமும், வருடமும். சூரியனுக்கும், பூமிக்குமான உறவை அடிப்படையாகக் கொண்டது வருடக் கணக்கு. நிலவுக்கும், பூமிக்குமான உறவை அடிப்படையாகக் கொண்டது மாதக்கணக்கு. வருடத்தையும், மாதத்தையும் இருகூறாகப் பிரிக்கின்றனர். வருடக்கணக்கில் அது தட்சிணாயனம்(சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வு), உத்திராயனம்(சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு) எனும் பிரிவுகளாக கணக்கில் கொள்ளப்படுகிறது. மாதத்தில் வளர்பிறை(சுக்கிலபட்சம்), தேய்பிறை(கிருஷ்ணபட்சம்) எனக்கொள்ளப்படுகிறது. வார நாட்களுக்கு அடிப்படையாய் இருப்பவை கதிரவக்குடும்பத்தில் பூமியைத் தவிர்த்த பிறகோள்களும், சூரியனும், நிலவும். இன்னும் விரித்துக் கொண்டே போனால் பஞ்சாங்கம் போலாகிவிடும். ஒளி எவ்வாறு காலமானது என்பதை ஓரளவு இப்போது நாம் விளங்கிக் கொண்டிருப்போம். சூரியனும், நிலவும் விண்மீன்கள்(ஒளிமீன்கள்) என்பதை நினைவுக்குக் கொண்டு வந்து கவனிப்போம். நேரமென நாம் கற்பித்துக் கொண்டிருக்கும் காலத்தின் முகம் நெருக்கத்தில் தெரிகிறதா? மாயஆடியான காலத்தை உருவாக்கியது யாருமன்று; நாம்தான். அவ்வாடியின் முன்நின்றுகொண்டு அதில் தெரியும் பிம்பத்தை நாமென்று கருதிக்கொள்வதும் நாம்தான். பிறபாடு அப்பிம்பத்தால் அலைக்கழிக்கப்படுவதும் நாம்தான். ”தானே தனக்கு பகைவனும் நட்டானும் / தானே தனக்கு மறுமையும் இம்மையும்” எனும் திருமூலரின் எளிய வரிகளில் காணக்கிடைக்கிறது ஆழமான நுட்பம்.
திரும்பவும் நம் உலக வாழ்வுக்கு வருவோம். கால, இட பகுப்புகள் கொண்டு வெளியில் நமக்கான அடையாளத்தை வரையறுத்துக் கொள்வதில் தவறே இல்லை. ஆனால், நம் புறவாழ்வில் நடக்கும் சம்பவங்களை முன்கூட்டியே கண்டுவிடலாம் என்பதற்காக அல்லவா அப்பகுப்புகளைப் பயன்படுத்துகிறோம்? பிறந்த நாள், நேரம், இடம் மூன்றையும் கொண்டு ஒருவனின் வாழ்க்கை நிகழ்வுகளை முன்கூட்டியே சொல்லிவிட முடியும் என்பது சமயத்தின் அடிப்படைக்கே எதிரானது என்பதை நாம் இக்காலத்தில் பேசியாக வேண்டும். ”அஞ்சுவது யாதொன்றுமில்லை, இனி அஞ்ச வருவதுமில்லை” எனும் துணிச்சலோடு வாழ்வை நகர்த்த நம்மைத் தூண்டுவதே உண்மைச்சமயமாக இருக்க முடியும். சோதிடம் எனும் சொல்லே ஒளியை அடிப்படையாகக் கொண்டிருக்கிறதைக் கவனிக்கவும். அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள சோதிடத்தைக் காட்டாகக் கொள்ளலாம். மற்றபடி, ஒருவனின் வாழ்க்கை நிகழ்வுகளைச் சோதிடம் கொண்டு சொல்லிவிடலாம் என்பதான நம்பிக்கையை ஒருபோதும் நாம் ஆதரித்துவிடவே கூடாது. அது நம்மை வேறுதிசைக்கு இழுத்துச்சென்று நம் மரபின் மூலச்சிந்தனைக்கு எதிரானவர்களாக்கிவிடும்.
முருகவேலன்,
படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,
கோபிசெட்டிபாளையம்.