பேயோன்

அன்பு ஜெமோ,

இணையத்தில் புதுவிதமாக கருத்துக்களை முன் வைக்கும் பேயோன் www.writerpayon.com பற்றி உங்கள் கருத்து என்ன ?

செந்தில்நாதன் ஆறுமுகம்

images [வுடி ஆலன்]

அன்புள்ள செந்தில்நாதன்

பேயோன் எழுதுவதை நான் தொடர்ந்து வாசிக்கிறேன். கணிசமான பக்கங்கள் ரசிப்புக்குரியவை. தமிழின் முக்கியமான எழுத்தாளர் அவர் என்பதில் ஐயமில்லை. தமிழில் இப்படி தொடர்ச்சியாக மென்மையான அங்கத எழுத்து வந்துகொண்டிருப்பது அரிய விஷயம்.

வுடி ஆலன் எனக்குப்பிடித்தமான எழுத்தாளர். பிற இலக்கியப்படைப்புகள் தங்கள் ஆழ்பிரதிக்கான சுட்டுதளமாக வாழ்க்கையைக் கொண்டிருக்கின்றன. வாழ்க்கையை வைத்தே அவற்றின் அடித்தளத்தை நாம் ஊகித்தறிந்து ரசிக்கிறோம். ஆனால் வூடி ஆலனின் எழுத்துக்களின் ஆழ்பிரதி பிற இலக்கியப்பிரதிகளை நோக்கிச் சுட்டுகிறது. இலக்கியவாசகன் பிரதிகளைக்கொண்டு வாசிக்கும் பிரதிகள் என அவற்றை சொல்லலாம்

வூடி ஆலனின் எழுத்துக்கு ஐரோப்பிய மொழிகளின் எழுத்துமரபில் ஒரு முன்வரலாறு உண்டு. பதினெட்டாம்நூற்றாண்டு முதல் ஐரோப்பிய இலக்கியம் ஒன்றாக இணைந்து வளர்ந்தபோது ஓர் இலக்கியப்பெருக்கம் உருவானது. அவ்வாறு வந்து குவிந்த படைப்புகளில் கணிசமானவை மேலோட்டமானவை, தேய்வழக்குகள் கொண்டவை. அந்த தேய்வழக்குகளை கேலிசெய்யும் பொருட்டு எழுதப்பட்ட அங்கத எழுத்துக்கள் உருவாகி வந்தன. அவற்றில் பேரிலக்கியம் என்பது செர்வாண்டிஸின் டான்குயிசாட்.

பின்னர் முதன்மையான பெரும்படைப்புகள் உருவாக்கும் வாழ்க்கைத்தளத்தையே அப்படி அங்கதப்பொருளாக்கும் படைப்புகள் வெளிவந்தன. பிரிட்டிஷ் நகைச்சுவை இதழான பஞ்ச் அத்தகைய படைப்புகளின் களமாக இருந்தது. ஸ்டீவன் லீகாக் எழுதிய பல கதைகள் குறுங்கட்டுரைகள் நினைவுக்கு வருகின்றன.E.M.Delafield [அவரது Men in fiction உடனே நினைவுக்கு வருகிறது] மற்றும் Saki எனக்குப்பிடித்தவர்கள்.

வுடி ஆலன் அவ்வகை எழுத்தின் நுட்பமான சமகால வடிவம்.அவரது புகழ்பெற்ற சினிமாக்களை என்னால் ரசிக்கமுடியவில்லை.என் வரையறைகள்தான் காரணம். ஆனால் அவரது எழுத்துக்கள் முக்கியமானவை. [ஆஸ்திரேலியாவில் ஆழியாள் வீட்டில் தங்கியிருந்தபோது ரகுநாதன் அவர்களின் நூலகத்தில் இருந்த வுடி ஆலனின் முழுத்தொகுப்பை மீண்டும் வாசித்தேன். அப்போது மேலும் பல இடங்கள் திறந்துகொண்டு அந்நாட்களை இனியவையாக்கின]

பேயோனை தமிழில் வுடி ஆலனை முன்னோடியாகக் கொண்டு எழுதுபவர் என்று சொல்லலாம். அவருக்கு தமிழில் முன்னுதாரணமாக எவரும் இல்லை. ஓரளவுக்கு மறைந்த ஐராவதம் சுவாமிநாதன் எழுதிய சில கதைகளைக் குறிப்பிடமுடியும். இத்தகைய ஓர் எழுத்து தமிழில் நிகழ்வது வியப்புக்கும் பாராட்டுக்கும் உரியது.

பேயோன் எழுத்தின் நகைச்சுவை என்பது அவர் சமகால இலக்கியத்தில் எந்தெந்த உட்குறிப்புகள் மூலம் தன் பகடியை அமைத்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளும் வாசகர்களுக்குரியது. அவர்கள் மிகக்குறைவே. ஆகவே அவரது வாசகப்பரப்பும் குறைவானதாகவே இருக்கமுடியும்.

ஆகவே அவர் மெல்ல கல்கி,தேவன்,கடுகு, சுஜாதா வரையிலானவர்களின் அன்றாடவாழ்க்கை சார்ந்த எளிய கிண்டல்களுக்கு அவ்வப்போது செல்கிறார். சமீபமாக அரசியல் நக்கல்களை எழுதிக்கொண்டிருக்கிறார். அவையே அதிகம் ரசிக்கப்படுகின்றன.ஆகவே சமீபகாலமாக அவரது எழுத்து சாதாரணமான வேடிக்கைகளாக மாறுகிறதோ என ஐயமாக இருக்கிறது. இது தமிழ்ச்சூழலின் பிரச்சினை

இன்னொன்று, அவரது பிரச்சினை.வுடி ஆலன் உருவாக்கும் ஆழ்பிரதிகள் என்பவை இலக்கியப்படைப்புகள் மீதான ஆழ்ந்த வாசிப்பில் இருந்து உருவாகக்கூடியவை. எப்போதுமே பெரும் படைப்புகளின் மையத்தைத் தொடுபவை .அப்படைப்புகளை வாசித்தவர்களுக்கு வுடி ஆலனின் அங்கதம் மேலும் புதிய திறப்புகளை அளிக்கும்.

பேயோனின் வாசிப்பு மேலோட்டமானது. அவர் தமிழின் சமகாலப் படைப்புகளில் உள்ள மொழியம்சம், வடிவக்கூறுகள் போன்றவற்றை மட்டுமே கவனித்து அதிலிருந்து கிண்டல் செய்ய ஏதேனும் கிடைக்குமா என்று பார்க்கிறார். அப்படி எதையுமே கிண்டல்செய்ய முடியும்.

அத்தைய கிண்டலுக்கான முன் நோக்கம் கொண்ட பார்வையே அவரது வாசிப்பின் எல்லையை அமைத்துவிடுகிறது. எந்த ஒரு படைப்பிலும் அதன் சாரம் சார்ந்து ஒரு பகடியை அவரால் உருவாக்கமுடியவில்லை. அவர் சுட்டும் படைப்புகளை படிக்காதவர்கள், பெயரை மட்டுமே கேள்விப்பட்டவர்களுக்கு அவரது பகடி அளிக்கும் அனுபவத்தை படித்தவர்கள் அடைவதில்லை.

ஆகவே எவரும் அவற்றை சிந்தனைமூலம் வளர்த்து புன்னகைக்க முடிவதில்லை. வுடி ஆலன் நம்மை மிகவும் ரசிக்கவைப்பதே எப்போதாவது அவர் நினைவுக்கு வரும்போதுதான்.

பேயோன் பொதுவாக படைப்புகளைப்பற்றி காதில்விழும் விமர்சனங்கள் மற்றும் பொதுப்புரிதல்களைக் கொண்டு தன் பகடிகளைச் செய்கிறார். இந்த எல்லை காரணமாக ஏதோ ஒருவகையில் சமூகவலைத்தள பகடி எழுத்துக்களின் நுட்பமான வகைமாதிரியாக பேயோன் மாறிவிடுகிறார்.

சமூகவலைத்தளங்களையும் இணைய எழுத்துக்களையும் வாசிப்பவர்கள் இன்றைய பேயோனை வாசித்துரசிக்கலாம். ஆனால் இந்த சுட்டுதளம் மிகமிகத் தற்காலிகமானது. ஓரிருவருடங்களுக்குள் அவர் எதைக் கேலிசெய்கிறார் என்பதே மறைந்துவிடும்.

ஆகவே அவர் ஓரளவு காலத்தை வென்றுநிற்கும் முதன்மையான ஆக்கங்களைக்கொண்டு அந்த பகடியை அமைக்கவேண்டும். அவற்றின் சாராம்சத்தையே கோணலாக்குவதன் மூலம் அந்த அங்கதம் நிகழவேண்டும்- வுடி ஆலன் செய்வது அதையே.இப்போது கொஞ்சம் குறைவானவர்களே சிரிக்கலாம், ஆனால் அந்த பகடி நீடித்துவாழும்.

தன் எல்லைகளை அவரால் உடைத்துக்கொள்ள முடியும் என நினைக்கிறேன். ஏனென்றால் அவரது மொழியுணர்வு அபாரமானது. துல்லியமாக தன்னை வெளிப்படுத்தும் நடை கைவந்துள்ளது. சமூகவலைத்தள வாசகர்களின் உடனடி சிரிப்பை கடந்துபோக முயன்றார் என்றால் அது சாத்தியமாகலாம்.

ஜெ

முந்தைய கட்டுரைகொற்றவை பித்து-1
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 67