‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 63

பகுதி 13 – பகடையின் எண்கள் – 4

மத்ரநாட்டுக்கு பூரிசிரவஸ் அறியா இளமையில் ஒருமுறை வந்திருந்தான். அன்று வந்த ஒரு நினைவும் நெஞ்சில் எஞ்சியிருக்கவில்லை. அன்னையுடனும் அரண்மனைப்பெண்களுடனும் அரசமுறைப்பயணமாக மலைப்பாதை வழியாக மூடுவண்டிகளில் வந்ததும் இருபக்கமும் செறிந்திருந்த மரக்கூட்டங்களை நோக்கியபடி கம்பளிக்குவைக்குள் சேடியின் மடியில் சுருண்டு அமர்ந்திருந்ததும் மட்டும் சற்று நினைவிலிருந்தன. சௌவீரமும் மத்ரமும் எல்லைப்புறச்சாலைகளை அமைப்பதற்கு முந்தைய காலம் அது. அன்று மத்ரநாடே பால்ஹிகர்களுக்கு நெடுந்தொலைவு.

மத்ரநாட்டு அரசர் சல்லியரின் முதல்மைந்தன் ருக்மாங்கதனை பட்டத்து இளவரசராக அறிவிக்கும் விழா அது. பால்ஹிகநாடுகள் பத்தும் அதில் பங்கெடுத்தன. மலைக்குடிகளை தன் குடைக்கீழ் தொகுக்க சல்லியர் செய்த முதல்முயற்சி. அஸ்தினபுரியிலிருந்து பீஷ்மபிதாமகர் தன் படைகளுடன் வந்து அவ்விழாவில் கலந்துகொண்டார். பீஷ்மர் வருவதை பலமாதங்களுக்கு முன்னரே சல்லியர் சூதர்களைக்கொண்டு மலைநாடுகளெங்கும் பாடவைத்தார். மத்ரநாட்டு அடையாளத்துடன் அஸ்தினபுரியின் முத்திரையும் இடப்பட்டு எழுதப்பட்ட அழைப்பை புறந்தள்ள பால்ஹிகர்களால் முடியவில்லை. அவர்கள் ஒவ்வொருவரும் நாட்கணக்கில் எண்ணியபின் வரமுடிவெடுத்தனர்.

நூறாண்டுகளுக்கும் மேலாக மத்ரர்களும் சௌவீரர்களும் பிற பால்ஹிகர்களுடன் பகைமைகொண்ட அரசியலையே செய்துவந்தனர். அவர்களின் உறவு ஐயங்களாலேயே முடிவுசெய்யப்பட்டு வந்தது. பால்ஹிகர்களில் எவருக்கும் சிந்துவெளிநோக்கி இறங்கும் மையப்பாதை ஒன்றை அமைப்பதென்றால் சௌவீரமோ மத்ரமோ கைக்கு வந்தாகவேண்டும். மத்ரர்களுக்கும் சௌவீரர்களுக்கும் அவர்களுடைய எல்லைக்கு அப்பால் ஏதேனும் நிலத்தை கைப்பற்றவேண்டுமென்றால் அது பால்ஹிகமண்ணிலேயே இயல்வது. சிந்துவெளி, கங்காவர்த்த நாடுகள் அவர்களின் வாயில் அடங்குபவை அல்ல. ஆகவே விழிகோத்து உடல் சிலிர்த்து மெல்ல உறுமியபடி தாக்கப்பதுங்கியிருக்கும் காட்டுவிலங்குகள் போல அசைவற்றிருந்தன பால்ஹிகநாடுகள்.

எச்செயலும் மற்றவர்களுக்கு எதிரானதாக உடனடியாக விளக்கம் கொண்டது. எல்லைப்புறத்தில் ஒரு காவல்மாடம் அமைப்பது, பத்துவீரர்கள் எல்லைவழியாக கண்காணிப்பில் ஈடுபடுவது, ஒரு வணிகத்தூதுக்குழு அரசரை சந்திப்பது அனைத்துமே மற்ற நாடுகளில் நிகரான மறுசெயலை உருவாக்கின. அத்தனை நாடுகளிலும் பிறநாடுகளின் ஒற்றர்கள் நிறைந்திருந்தனர். பத்து நாடுகளிலும் ஒரேவகையான மக்கள் வாழ்ந்தனர். அவர்களுக்கு நாடு என்னும் எல்லைகள் இல்லை. பால்ஹிகநாடுகள் முழுக்க மேய்ச்சல் மக்கள் காற்றுபோல சுழன்றலைந்துகொண்டிருந்தனர். ஆகவே ஒற்றர்களை கண்டுபிடிப்பதோ கண்காணிப்பதோ எளிதாக இல்லை.

சௌவீரம் பாண்டவர்களால் தாக்கப்படும் வரை பால்ஹிகர்கள் பிறநாட்டு எதிரிகளைப்பற்றி எண்ணிப்பார்க்கவேயில்லை. அதன்பின் அனைத்தும் மாறிவிட்டது. பொது எதிரி என்பது பால்ஹிகமூதாதையர் எண்ணிக்கூட பார்க்கமுடியாத ஒற்றுமையை உருவாக்கியது. சலன் சொன்னான் “மத்ரர் பாண்டுவுக்கு தங்கையை அளித்தபோது பால்ஹிகநாடுகளை தன் குடைக்கீழ் கொண்டுவரும் கனவு கொண்டிருந்தார் இளையோனே. அன்று அவர் அஸ்தினபுரியின் படைகள் தன் உதவிக்கு வருமென எண்ணினார். ஆனால் பாண்டு காடேகியதும் அவரது திட்டங்கள் கலைந்தன. மீண்டும் அஸ்தினபுரி எழவேயில்லை. படைகளை தங்கள் எல்லைகளைவிட்டு விலக்கும் நிலையில் அவர்கள் எப்போதும் இருக்கவில்லை.”

“பாண்டவர்கள் முடிசூடும் நிலைவந்தபோது எவரும் எண்ணியிராதபடி துவாரகை எழுந்து வந்தது. பாண்டவர்களின் வெற்றி துவாரகையின் வெற்றி என்றே இன்று பொருள்படுகிறது.” சலன் மெல்ல நகைத்து “சௌவீரத்தை பாண்டவர்கள் தாக்கியதை மத்ரரால் நம்பவேமுடியவில்லை. அரசியலாடலில் படைவல்லானுக்கு சிறியோர் அடிமைகள் மட்டுமே என அவர் புரிந்துகொள்ள இத்தனை பிந்தியிருக்கிறது” என்றான். பூரிசிரவஸ் புன்னகைத்தான். “அவர் பால்ஹிகக்கூட்டமைப்பை அமைக்க முன்வந்தபோது தெரிந்தது அவரிடம் மேலாண்மை கனவு இன்றில்லை. அவர் தன் நாட்டை காத்துக்கொள்ளும் அச்சத்தில் மட்டுமே இன்றிருக்கிறார்.”

கோட்டைவாயில் வரை அவனுடன் சலனும் குதிரையில் வந்தான். “நீ அவர்களிடம் அரசியலேதும் பேசவேண்டியதில்லை. நடந்தவற்றை மட்டும் சொல். சல்லியரை எந்த வகையிலும் குறைத்து எண்ணாதே. அவர் அரசு சூழ்தலில் எல்லாவகையிலும் பீஷ்மருக்கு நிகரானவர் என்கிறார்கள்” என்றான். “அரசு சூழ்தலென்பது அறிவை முதன்மையாகக் கொண்டது அல்ல இளையோனே. அது பெரும்பாலும் வாழ்வறிவையே சார்ந்திருக்கிறது. ஆகவே முதியோரை இளையோர் அரசுசூழ்தலில் மட்டும் பெரும்பாலும் வெல்லமுடிவதில்லை. சொற்களை எண்ணிப்பேசாதே. நீ எண்ணுவதையும் சேர்த்தே அவர் கேட்டுக்கொண்டிருப்பார். உன்னை முழுமையாகவே திறந்து அவர் முன் வை…”

மலைப்பாதை வழியாக குதிரைகளில் செல்லும்போது வணிகர்கூட்டங்கள் நிறைய சென்றிருப்பதை பூரிசிரவஸ் பாதையில் படிந்திருந்த குளம்படித்தடங்கள் வழியாக அறிந்தான். அவ்வப்போது கம்பளிஉருளைகள் போல வணிகர்கள் வண்டிகளில் அமர்ந்து எதிரே வந்தனர். குளிர்காலம் அணுகிவிட்டது. இன்னும் சிலநாட்களுக்குப்பின் வணிகப்பாதைகள் அனைத்தும் ஓய்ந்துவிடும். சாலைகளில் கூலம் சிதறியதைப்பொறுக்க காட்டுப்பறவைகள் கூட்டமாக அமர்ந்திருந்தன. வண்டிச்சகட ஒலிகேட்டு அவை மெல்ல எழுந்து விலகி மீண்டும் அமர்ந்தன. வணிகர்கள் வீசும் உணவை உண்ண சாலையோரங்களில் நின்ற காட்டுநாய்கள் நாசுழற்றி வாயை நக்கி வாலாட்டின. நடுப்பகலிலும் வானம் கன்றுத்தோலை இழுத்துக்கட்டியதுபோல மங்கலான ஒளியுடன் இருந்தது. பேருடல் விலங்கொன்றின் நான்குகால்களுக்கு அடியில் சென்றுகொண்டிருப்பதுபோல.

காற்றில் கம்பளிகளையும் ஊடுருவிவந்து மயிர்க்கால்களை எழச்செய்யும் குளிர் நிறைந்திருந்தது. மலையிலிருந்து பனிக்காற்று இறங்கிக்கொண்டிருந்தமையால் இரவுகளில் பயணம் செய்யமுடியவில்லை. உத்தரபால்ஹிக நாடுகளில் தொடங்கி மத்ரநாடு வழியாக கங்காவர்த்தம் நோக்கி செல்லும் அந்தப்பாதை முதன்மையான வணிகத்தடம் என்பதனால் பயணிகள் தங்குவதற்கான விடுதிகள் வழி முழுக்க அமைக்கப்பட்டிருந்தன. அவை வணிகர்களின் பொற்கொடையாலும் அரசர்களின் நிலக்கொடையாலும் மலைக்குடிகளின் உணவுக்கொடையாலும் வாழ்ந்தன. எப்போதும் வற்றாத சுனையொன்றின் கரையிலேயே அமைந்த அந்த விடுதிகளை சுனைவீடுகள் என்றனர்.

சாலையை ஒட்டியே அமைந்திருந்த மணிபத்ரனுக்கான சிறிய சுதைக்கோயிலின் மேல் பறக்கும் காவிக்கொடியே சுனைவீடு இருப்பதன் அடையாளம். சாலைவணிகரின் தெய்வமான மணிபத்ரன் வலக்கையில் பொற்குவையும் இடக்கையில் அடைக்கலச்சின்னமுமாக நின்றிருந்தான். அருகே மண்ணாலான நான்கு கருநிறச்சிலைகளாக அமண அருகர்கள் அமர்ந்த நீளமான சிற்றாலயம் இருந்தது. ஆடைகளும் அணிகளும் ஏதுமின்றி கால்களை மலர்மடிப்பென அமைத்து அதன் மேல் கைகளை தாமரைக்குவையென வைத்து விழிமூடி தம்முள் தாம் நோக்கி ஊழ்கத்தில் அமர்ந்திருந்த நீர்க்கரைப்படிவர்கள். நடுவே புள்ளிருக்கை பெருத்த மாகாளை பொறிக்கப்பட்ட காளையர். வலப்பக்கம் தலைக்குப்பின்னால் ஐந்துதலை நாகம் பத்திவிரித்து நின்ற பக்கவர். அமுதகல முத்திரையுடன் முல்லையர். அவர் அருகே இளம்பிறை முத்திரையுடன் சந்திரர்.

அப்பால் மூங்கில் கால்கள் மேல் அமர்ந்த பெரிய மரக்கட்டடங்களால் ஆன விடுதிகள் அதற்குரிய குடியால் புரக்கப்பட்டன. புரவிகளுக்கும் வெப்பமூட்டப்பட்ட கொட்டகைகள் இருந்தன. உலர்புல் உணவும் மரத்தொட்டிகளில் நீரும் காத்திருந்தன. இரும்பாலான கணப்பில் செங்கனல் சீறிக்கொண்டிருக்கும் சிறிய மரச்சுவர் அறைகள். புல்லடைத்த மெத்தைகள். வறுத்த உலர்ஊனும் தணலில் சுட்ட அப்பமும் இளஞ்சூடான மலைமதுவும். வணிகர்கள் மயக்கில் தடித்த இமைகளுடன் உடல்குறுக்கி அமர்ந்து குரல் குழைய பேசிக்கொண்டிருந்தனர். குளிர்காலம் போல மனிதரின் அண்மை இனிதாக ஆகும் காலம் பிறிதொன்றில்லை.

இரவுமுழுக்க வெளியே கடுங்குளிர்க்காற்று மரங்களை சுழற்றியபடி ஊளையிட்டது. காலையில் தரைமுழுக்க சருகுகள் பரவிக்கிடந்தன. முதல் புலரிக்கதிர் மெல்லிய நிணநீர்க்கசிவாக வானத்தோல்பரப்பில் ஊறி வரும்போது விழிதொடும் மலைவெளிகளனைத்தும் ஊசிமுனையால் தொட்டு வரையப்பட்டவை போல துல்லியம் கொண்டன. ஒவ்வொரு மலைவிளிம்பையும் ஒவ்வொரு பாறைக்குவடையும் விழிகளால் தொட்டறியமுடிந்தது. தொலைவில் காற்றுப்பரப்பில் சுழலும் செம்பருந்தின் இறகுகளின் பிசிறுகளைக்கூட நோக்க இயன்றது. அதன் நிழல் வருடிச்சென்ற மலைச்சரிவில் எங்கும் கீரிகள் இரைதேடி பாறைகளுக்கு அடியிலிருந்து இடுக்குகளை நோக்கி நாணல்பூக்குலை வால்குலைத்து சுழன்றோடின.

மெல்லிய ஒளியில் செல்லும்போது விழிகள் துல்லியம் கொண்டன. விழிகள் தெளிந்தபோது அகமும் தெளிவதாகத் தோன்றியது. குளிர் செறிந்து வானத்து நீரெல்லாம் மண்ணில் பனியாகப் படிவதுவரை அந்த இளவெயிலே பகல் முழுக்க இருக்கும். அதன்பின் காற்றுவெளி பளிங்காலானதாக மாறிவிடும். வெயில் உருகிய வெள்ளிவிழுதுகளாக மாறும். வெறுந்தோலில் வெயில்படும் இடம் அக்கணமே கன்றிச்சிவந்து தொட்டால் தோலுரிந்துவிடும். நீரூற்றி குளிரச்செய்தால் சீழ்கட்டும். மெல்லிய ஆடையால் மறைத்துக்கொள்வதன்றி வழியே இருக்காது.

அந்தப்பயணத்தில் பூரிசிரவஸ் அதுவரையிலான அனைத்தையும் மறந்துவிட்டான். ஒவ்வொரு மலையும் ஒவ்வொரு முகத்துடன் அவனை குனிந்து நோக்கியது. ஒவ்வொரு மலைமுடிக்குமேலும் வெண்புகைச்சுருள்கள் என முகில்கள் திரண்டிருந்தன. சூரியன் மேலெழுந்து ஒளிமிகுந்தபோது அவற்றின் வெண்மையான வடிவம் துலங்கி முப்பரிமாணம் கொண்டு தொங்கும் பளிங்குமலைகளாக மாறி உச்சிகடந்ததும் மீண்டும் மங்கலாகத் தொடங்கி மெல்ல கரைந்து சாம்பல்பரப்பாக மாறிய வானத்தில் முழுமையாக மறைந்தது.

உச்சி கடந்த வேளையில் அசிக்னியின் மூன்று வேராறுகளில் ஒன்றான பிரகதியின் கரையில் அமைந்த மத்ரநாட்டின் வடபுலத்து எல்லையை அவர்கள் கடந்தபோது முதல்காவல்கோட்டத்திலேயே அவனுக்கு அரசமுறை வரவேற்பு அளிக்கப்பட்டது. கலப்பைக்கொடி ஏந்திய ஏழுவீரர்கள் அணிவகுத்து வர முரசும் கொம்பும் துணைசேர்த்தன. அவர்கள் கொடிதாழ்த்தி வாழ்த்துக்கூவி வணங்கி அவனை எல்லைக்குள் அழைத்துச்சென்றனர். எல்லைக்காவல் மாடத்தில் இளைப்பாறி நீரும் உணவும் கொண்டு பின்னர் வீரர் மூவர் துணைவந்து வழிகாட்ட மத்ரநாட்டின் தலைநகரான சகலபுரி நோக்கி கிளம்பினர்.

எல்லையில் இருந்து சகலபுரிக்குச் செல்ல சேற்றுமண்ணில் மரப்பட்டைகள் பதிக்கப்பட்ட புரவிப்பாதை இருந்தது. நூற்றுக்கணக்கான சிற்றாறுகளும் மலையோடைகளுமாக இமையத்திலிருந்து இறங்கும் நீரும் வண்டலும் மத்ரநாட்டை ஒவ்வொரு வருடமும் முழுக்காட்டுவதனால் அங்கே கற்கள் பரப்பி சாலையிடுவது இயல்வதல்ல என்று தெரிந்தது. மரத்தாலான சாலையை ஒவ்வொருமுறையும் சேற்றுக்குள் இருந்து மேலே தூக்கி அமைத்துவிடலாம். அசிக்னியின் கரையோரமாகவே மலையிறங்கிச் சென்ற சாலை ஒரு பெரிய ஏணிப்படி போல தோன்றியது. முன்னும் பின்னும் செல்லும் குளம்படிகளால் முழங்கிக்கொண்டிருந்தது. சினந்து துடித்துக்கொண்டே இருக்கும் கொலைவிலங்குபோல.

“இது வணிகர்களுக்கு இறுதி வாரம் பால்ஹிகரே. வரும் கருநிலவுடன் மலையிறங்கி வரும் அனைத்து வணிகவழிகளும் மூடிவிடும்” என்றான் துணைவந்த மத்ரநாட்டுக் காவலன். “ஆகவே வணிகர்கள் வந்தபடியே இருக்கிறார்கள். வணிகவாரம் முடியும்போது மணிபத்ரனுக்கும் குபேரனுக்கும் ஊன்கொடை அளித்து வழிபடுவார்கள். அருகநெறி கொண்ட வணிகர்கள் அரிசிமாவில் வெல்லம் சேர்த்து செய்த மண்டையப்பம் படைப்பார்கள். இரவெல்லாம் நகரில் மதுவும் உணவும் நகையும் களியாட்டும் நிறைந்து வழியும். அதன்பின் கங்காவர்த்தத்தில் இருந்தும் சிந்துதடங்களில் இருந்தும் நகருக்குள் வந்துள்ள அத்தனை பரத்தையரும் திரும்பி சென்றுவிடுவார்கள்… நகர் முழுக்க குளிர்பரவும்.”

பூரிசிரவஸ் “இங்கே வெண்பனி விழுவதுண்டா?” என்றான். “ஒவ்வொருமுறையும் வருவதில்லை. ஆனால் குளிர் முதிர்ந்த காலத்தில் சிலநாட்கள் காலையில் வீட்டைச்சுற்றி வெண்பனிப்பொருக்குகள் நிகழ்ந்திருக்கும்” என்றான். அசிக்னி அங்கே சிறிய ஓடை போலிருந்தது. அஞ்சி ஓடும் செம்மறியாட்டுக்கூட்டம் போல நீர் கொப்பளித்துச் செல்ல நீரின் ஒலி தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது. அசிக்னி விரைவழிந்து அலைத்தொடராக மாறி ஒளிகொண்டு செல்லத்தொடங்கியது. மலைப்பாதை சீர்நிலத்தில் அமைந்தது. புரவிகள் மூச்சிரைக்க நடைமாற்றிக்கொண்ட ஓசை எழுந்தது.

அசிக்னியில் அதன் கிளையாறான தலம் வந்து கலக்கும் முனையில் இருந்தது சகலபுரி. தொலைவிலேயே அதன் பெரிய காவல்மாடத்தின் மேல் பறந்த கலப்பைக்கொடியை பூரிசிரவஸ் பார்த்துவிட்டான். சற்று நின்று கைகளைத் தூக்கி உடலைநெளித்தபின் புரவியை பெருநடையில் செல்லவிட்டான். சற்றுநேரத்திலேயே காவல்கோட்டத்தைப்பற்றிய ஐயம் வந்தது. அது மரத்தாலான கோபுரமேடை என அவன் எண்ணியிருந்தான். ஆனால் அது ஒரு பசுங்குன்றின்மேல் அமைந்திருப்பதாக தோன்றியது. சிந்துவின் கரைகளில் எங்கும் பெரிய குன்றுகள் இல்லை என அவன் அறிந்திருந்தான். அதையே விழி நிலைத்து நோக்கியபடி சென்றான்.

மெல்ல அது எப்படி கட்டப்பட்டது என்று தெரிந்தது. உயரமாக வளரும் மரங்களை நட்டு அவற்றின் உச்சிக்கிளைகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து கட்டப்பட்டிருந்தது அந்தக் காவல்மாடம். உயிருள்ள கோபுரம் என எண்ணியபோதே விந்தையாக இருந்தது. அதை நோக்கியபடியே சென்றுகொண்டிருந்தான். அவை தேவதாரு மரங்கள் என தோன்றின. ஆனால் இமயமலைச்சரிவின் தேவதாருக்களைவிட இருமடங்கு உயரம் கொண்டிருந்தன. தடிகள் கல்லால் ஆன தூண்கள் என்றே தோன்றின. காவலன் “அவை மணிதேவதாருக்கள் பால்ஹிகரே. அவை இந்த சேற்றுமண்ணில் மட்டுமே இத்தனை உயரமாக வளரும்” என்றான்.

மரத்தின் பசுமையிலைக்கூம்புகளுக்குமேல் முகிலில் எழுந்த மண்டபம் போல தெரிந்த காவல்மாடத்தை நோக்கியபடி சென்றமையால் பூரிசிரவஸ் சகலபுரியின் கோட்டையைக் காண சற்று பிந்திவிட்டான். அவனுக்குப்பின்னால் வந்த வீரன் “மரத்தாலான கோட்டை” என்றபோதுகூட மரப்பட்டைகளால் கட்டப்பட்டது என்ற எண்ணம்தான் இயல்பாக எழுந்தது. மறுகணம் அதை உள்ளம் கண்டதும் குதிரையின் கடிவாளத்தை இழுத்து நிறுத்தி அதை நோக்கி அமர்ந்துவிட்டான். அவன் முகம் மலர்ந்துவிட்டது.

சாலமரங்களையும் தேக்குமரங்களையும் நெருக்கமாக நட்டு அவற்றின் கிளைகளை ஒன்றுடன் ஒன்று பிணைத்து கட்டப்பட்ட பச்சைமரங்களாலான பெருங்கோட்டை பன்னிரண்டு ஆள் உயரமிருந்தது. அதன் அடித்தூர்கள் கற்தூண்கள் போல நிரைவகுத்து நின்றன. யானைமத்தகங்களோ தண்டுகளோ அவற்றை அசைக்கமுடியாதென்று தெரிந்தது. “பன்னிரு அடுக்குகளாக இந்த மரங்கள் நடப்பட்டுள்ளன பால்ஹிகரே… கோட்டையின் சுவரை வாயில் வழியாகக் கடக்கவே அரைநாழிகை நேரமாகும்” என்றான் காவலன். நெருங்கிச்சென்றபோது அடிமரங்களின் இடைவெளியில் செறிவாக முட்செடிகள் நடப்பட்டு அவை ஒன்றுடன் ஒன்று வலையாக பின்னப்பட்டிருப்பது தெரிந்தது.

“முன்பு இங்கிருந்தது மண்கோட்டை. அசிக்னியின் களிமண்ணைக்கொண்டு கட்டியது. அதை ஒவ்வொருவருடமும் மழைக்குப்பின் பழுதுபார்க்கவேண்டும். அசிக்னி சினந்தால் கோட்டை இருந்த இடம் தெரியாமல் கரைந்துசென்றுவிடும். இங்கே கற்கோட்டைகள் கட்டமுடியாது. அசிக்னியின் உருளைக்கற்களை சேறால் இணைத்துக் கட்டவேண்டும். நீர்ப்பெருக்கை அவை தாங்காது. இருநூறாண்டுகளுக்கு முன் மத்ரநாட்டை ஆண்ட கஜபதிமன்னரின் அமைச்சர் கிருஷ்ண ஃபால்குனரால் இந்தக்கோட்டை அமைக்கப்பட்டது. தேவதாருக்களும் சாலமரங்களும் தேக்குமரங்களும் தடிமுழுத்து எழ நூறாண்டுகளாகின. இன்று இக்கோட்டையை அசிக்னியால் ஏதும் செய்யமுடியாது” காவலன் சொன்னான்.

நகருக்குள் செல்ல பெரிய கொடிப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது. அசிக்னியின் இருபக்கமும் தேவதாருமரங்களும் தேக்குமரங்களும் செறிவாக நடப்பட்டிருந்தன. நூற்றுக்கணக்கான மரங்களில் இருந்து தடித்த வடங்கள் கிளம்பிச்சென்று ஒன்றுடன் ஒன்று நுட்பமாகப் பின்னி சிலந்தி வலையென மாறி பின்னர் குவிந்து நீண்டு அசிக்னியின் அலைநீர்வெளிக்குமேல் பாலமாக அமைந்தன. அசிக்னியின் நடுவே இருந்த சேற்றுமேடுகளில் நடப்பட்டிருந்த மரக்கூட்டங்களில் அவை மீண்டும் வேர்ப்பரவலாக இறங்கின. மீண்டும் வலையாகி எழுந்து பாலமாக குவிந்து நீண்டன.

அவ்வாறு ஏழு கட்டங்களாக சென்ற பாலம் சகலபுரியின் கான்கோட்டையின் அருகே ஒரு குறுங்காட்டுக்குள் சென்று புதைந்து மறைந்தது. பாலத்தில் சென்ற வண்டிகளும் புரவிகளும் அக்காட்டுக்கு அப்பால் மீண்டும் தோன்றி அங்கே சென்ற மரப்பாதை வழியாக கான்கோட்டை நோக்கி மெல்ல ஏறிச் சென்றன. கோட்டைநோக்கி செல்வதற்கு ஒருபாலமும் வருவதற்கு இன்னொருபாலமுமாக இணையாக அமைந்திருந்தன. இருபாலங்களையும் இணைக்கும் சிறிய கொடிவழிகளால் பாலங்கள் ஆங்காங்கே கைகோர்த்துக்கொண்டன. அவற்றில் பாலத்தை கண்காணிக்கும் காவலர் படைக்கலங்களுடன் நின்றிருந்தனர்.

மரப்பட்டைகள் பரப்பப்பட்ட பாலத்தில் ஒரேசமயம் பத்து வண்டிகளும் ஐம்பது புரவிகளும் மட்டுமே செல்லவேண்டுமென அதன் நுழைவாயிலில் நின்ற சுங்க மண்டபத்தின் பலகை அறிவித்தது. காவலர் ஒவ்வொரு வண்டியையும் புரவியையும் எண்ணி ஏற்றிவிட்டனர். மறுபக்கம் ஒருவண்டி பாலத்தைவிட்டு இறங்கியதும் அங்கிருந்த காவலர் ஒரு சரடை இழுக்க நுழைவாயிலில் மணி ஒன்று அடித்தது. அதைக்கேட்டபின்னரே காவலன் இன்னொரு வண்டியை பாலத்தில் நுழைய விட்டான்.

கொடிப்பாலத்தில் ஏறியதுமே குதிரை சற்று மிரண்டு கனைத்தது. படகில் நிற்பதுபோல ஓர் அசைவு இருந்துகொண்டே இருந்தது. கீழே பெருகிச்சென்ற அசிக்னியை நோக்கியபோது அடிவயிற்றை அச்சம் கவ்விக்கொண்டது. ஆற்றின் நடுவே பாலம் ஊசல்போலவே ஆடியது. காவலர் முகங்களில் அச்சமும் உவகையும் கலந்த கிளர்ச்சி தெரிந்தது. மீண்டும் தேவதாருக்காட்டுக்குள் நுழைந்து இருண்ட தழைச்செறிவைக் கடந்து அடுத்த பாலத்தில் ஏறிக்கொண்டனர். ஏழாவது பாலத்தைக் கடந்து குறுங்காட்டுக்குள் நுழைந்து மறுபக்கம் உறுதியான மண்மேல் அமைந்த மரச்சாலையில் ஏறியபோது உள்ளத்தில் ஆட்டமிருந்தமையால் உடல் திகைத்தது.

மரப்பாதை வடக்குக் கோட்டைவாயிலை நோக்கி சென்றது. அங்கிருந்து நோக்கியபோது அசிக்னி வடக்கிலிருந்து வழிந்து வளைந்து கிழக்காக கோட்டையை வளைத்துப் போவதை காணமுடிந்தது. அதன் நீர்ப்பெருக்கின் மேல் சகலபுரியின் துறைமுகம் கால்கள் ஊன்றி நீட்டி நின்றது. ஆழமற்ற நீரில் செல்லும் சிறிய படகுகள் துறைமேடையை ஒட்டி கொடிகள் படபடக்க நின்றிருந்தன. அங்கிருந்து எழுந்த ஒலிகள் மூட்டமாக இறங்கியிருந்த வான்குளிருக்குள் அழுந்தி ஒலித்தன.

சகலபுரியின் வடக்குக் கோட்டை முகப்பு அணுகும்தோறும் அதன் பேருருவம் கண்முன் எழுந்து வந்தது. மரங்களின் முதல் கிளைப்பிரிவே தலைக்கு மிக உயரத்தில் எங்கோ இருந்தது. மாலையாகிக்கொண்டிருந்தமையால் அங்கே பறவைகளின் ஒலிகள் சேரத்தொடங்கியிருந்தன. கோட்டை வாயிலில் பெரிய அகழி இருந்தது. சகலபுரியின் மண் மென்மையான வண்டலால் ஆனது என்பதனால் அதன் கரைகள் செங்குத்தாக இல்லாமல் சதுப்புபோல கரைந்து சரிந்து சென்றிருந்தன. அகழிக்குள் நிறைந்திருந்த நீரின் கரைகளில் முதலைகள் கரையொதுங்கிய காட்டுமரச்செத்தைகள் போல நெருக்கமாக படுத்திருந்தன. சேற்றுநிறம் கொண்ட அவற்றின் சரல்முதுகின்மேல் சிறிய பறவைகள் எழுந்தும் அமர்ந்தும் சிறகடித்தன.

அகழிக்குள் மரங்களை நட்டு அவற்றை பலகைகளால் இணைத்து பாலம் கட்டியிருந்தனர். அந்தப்பாலத்துக்கு அப்பால் திறந்திருந்த கோட்டைவாயில் தடித்துருண்ட பெருமரங்களின் இடைவெளி வழியாகச் சென்ற பாதையை காட்டியது. கோட்டைக்கு வாயிலென ஏதுமிருக்கவில்லை. “இதை மூடுவதில்லையா?” என்று பூரிசிரவஸ் கேட்டான். “ஒவ்வொருநாளும் மூடுவதில்லை இளவரசே. போர் என்றால் பெரிய மரங்களைக்கொண்டு விரைவில் மூடிவிடமுடியும்” என்றான் காவலன்.

காட்டுக்குள் நுழைவதுபோலவே பசுமையின் குளிரும் ஈரத்தின் மணமும் வந்தன. மரங்களின் அடித்தடிகளில் படிந்த பாசியின் மணமும் பூசணத்தின் மணமும் எழுந்தன. கோட்டைக்காவலரின் மாடங்கள்கூட மரங்களுக்குமேல் இரண்டாள் உயரத்தில்தான் அமைந்திருந்தன. மூங்கிலேணிகள் வழியாகவே அவர்கள் ஏறி இறங்கினர். உள்ளே இருளாக இருந்தமையால் பந்தங்கள் எரிந்தன. கீழே பெருகிச்சென்ற நீரில் செவ்வொளி அலையடித்தது. காவலர் நோக்கி அனுப்புவதற்காக காத்திருந்த புரவிகளில் ஒன்று பொறுமையிழந்து கால்களை மிதித்து கனைத்தது. ஓர் அத்திரி சிறுநீர் கழித்தது.

கோட்டைக்காவலர்தலைவன் தன் மாடத்திலிருந்து இறங்கிவந்து பூரிசிரவஸ்ஸை வாழ்த்தினான். “இளவரசே, தங்கள் வருகைக்காக அரண்மனை காத்திருக்கிறது. இளவரசர் ருக்மரதரும் அமைச்சர் சுதீரரும் அரண்மனை முற்றத்தில் தங்களை வரவேற்பர்” என்றான். பூரிசிரவஸ் இருண்டிருந்த கோட்டைவாயில் வழியாக சென்று மறுபக்கம் திறந்த நகர்முற்றத்தை அடைந்தபோது கண்களுக்குள் ஒளி பெருகியதைப்போல் உணர்ந்தான். ஆனால் விரைந்து அந்தி சரிந்துகொண்டிருந்தது. தரை நீர் பரவி வானை காட்டியமையால்தான் அந்த வெளிச்சம் என அவன் உணர்ந்தான்.

நகர் முழுக்க மரப்பட்டைகளால்தான் சாலை அமைக்கப்பட்டிருந்தது. நகரெங்கும் ஊறிப் பெருகிய சிற்றோடைகள் இணைந்து ஒளியாக வழிந்தோடி கான்கோட்டையை ஊடுருவி மறுபக்கம் அசிக்னி நோக்கி சென்றன. அப்போதுதான் அந்த கான்கோட்டையின் பணி அவனுக்குப்புரிந்தது. வேறெந்த கோட்டையாக இருந்தாலும் நகரில் பெருகும் அந்த நீரை தடுக்கமுயன்று வலுவிழக்கும். கட்டடங்கள் அனைத்தும் வலுவான மரங்களை நட்டு அதன்மேல் இரண்டாள் உயரத்தில் அமைக்கப்பட்டிருந்தன. மூங்கில் ஏணிகளில் மக்கள் ஏறியிறங்கிக்கொண்டிருந்தனர். அரசப்பெருவீதி ஒரு காட்டுப்பாதை போல இருபக்கமும் எழுந்த மரங்களின் கிளைகள் வந்து கூரையிட நீண்டு சென்றது.

அங்காடித்தெருவும் சாலமரங்களுக்கு மேல்தான் அமைந்திருந்தது. தரைத்தளத்தில் மரப்பட்டைக்கூரைகள் இடப்பட்ட சிறிய விற்பனை நிலைகள் மட்டுமே இருந்தன. பண்டகசாலைகள் மரங்களுக்குமேல் மரப்பட்டைக் கூரைகளுடன் கோட்டைபோல சூழ்ந்து வளைந்து சென்றன. பூரிசிரவஸ் வியப்புடன் அந்தக் கானகநகரை நோக்கியபடி சென்றான். பெருமழைக்காலத்தில் அசிக்னி பெருகி நகரில் நிறையும் என உணரமுடிந்தது. அப்போது படகுகள் வழியாக தொடர்புகொள்வார்கள் என எண்ணியதுமே மென்மரங்களில் குடையப்பட்ட சிறிய படகுகள் ஒவ்வொரு வீட்டிலும் மரக்கிளைகளில் கட்டிவைக்கப்பட்டிருப்பதை கண்டான். அப்போது சகலபுரி மிதக்கும் நகரமென நீருக்குமேல் நின்றிருக்கக்கூடும்.

இறுதிவணிகவாரம் என்பதனால் அங்காடித்தெருவெங்கும் அத்திரிகளும் கழுதைகளும் சுமைவண்டிகளும் நிறைந்திருந்தன. வணிகம் முன்னரே முடிந்துவிட்டிருந்தது. விலங்குகள் கொண்டுவந்த பொருட்களை மேலே கொண்டுசென்றுகொண்டிருந்தனர். அதற்கும் விலங்குகளையே பயன்படுத்தினர். விலங்குகள் வடங்களை இழுக்க சகடை வழியாக சென்ற அவற்றை மறுபக்கம் சாய்வான பாதையாக மேலேறிச் சென்ற மரப்பாதையில் உருளைச்சகடங்களுடன் இருந்த பொதிவண்டிகள் தூக்கி மேலேற்றிக்கொண்டுசென்றன. மேலே நின்ற வீரர்கள் கூச்சலிட்டபடி தூக்கி பண்டகசாலைக்குள் உருட்டிச்சென்றனர். ஒழிந்த பொதிவண்டிகள் மறுபக்கம் சகடங்கள் தடதடக்க இறங்கி வந்தன.

இருள் விரைவிலேயே கவிந்துவிட்டது. இல்லங்களும் அங்காடிகளும் பந்தங்களாலும் விளக்குகளாலும் ஒளிகொண்டன. நகரமே மரக்கூட்டங்களுக்குள் இருந்தமையால் குளிர்காற்று பெரும்பாலும் தடுக்கப்பட்டிருந்தது. மரங்களின் தழைப்புக்குள் இருள் குளிருடன் கலந்து தேங்கி எடைகொள்ளத்தொடங்கியது. சகலபுரத்தின் ஆலயங்கள் கூட மரங்களுக்குமேல்தான் அமைந்திருந்தன. நூற்றுக்கணக்கான வெண்கல மணிகள் சூழ்ந்து தொங்கிய ஏழன்னையர் ஆலயத்தில் பூசகர் சுடராட்டு செய்யத்தொடங்கினார். மணிகளின் பேரொலி சூழ அன்னையர் விழியொளிர நோக்கி அமர்ந்திருந்தனர். அதைத்தொடர்ந்து நகரமெங்கும் பல்வேறு ஆலயங்களில் மணிகள் முழங்கத்தொடங்கின.

அரசப்பெருவீதியின் முடிவில் ஓங்கிய தேவதாருக்கூட்டத்தின் மேல் அரண்மனைகள் அமைந்திருந்தன. அவற்றின் அத்தனை சாளரங்களும் நெய்விளக்குகளாலும் பந்தங்களாலும் ஒளிபெற காலைவானில் எழுந்த செம்முகில் போலிருந்தது அரண்மனைத்தொகை. அண்ணாந்து நோக்கியபடியே செல்லச்செல்ல அது எப்படி இயன்றது என்ற வியப்பே அவனுள் நிறைந்திருந்தது. இருபதுக்கும் மேற்பட்ட மரக்கட்டடங்கள் தேவதாரு மரங்களுக்குமேல் அமைந்திருந்தன. முதன்மையாக இருந்த மாளிகை ஏழடுக்கு கொண்டது. இருபக்கமும் மூன்றடுக்கு மாளிகைகள் இரண்டு இருந்தன.

அரண்மனைக்குக் கீழே சாலமரங்களை இணைத்துக்கட்டப்பட்ட உட்கோட்டைவாயிலின் முன்னால் ருக்மரதனும் சுதீரரும் அவனுக்காக காத்திருந்தனர். நெய்ப்பந்தங்கள் ஏந்திய காவலர் இருபக்கமும் வர முரசுகளும் கொம்புகளும் மணிகளும் முழங்க அவர்கள் வந்து அவனை எதிர்கொண்டனர். காவலர்களும் ஏவலர்களும் அவனை வாழ்த்தி குரலெழுப்பினர். அவன் புரவியிலிருந்து இறங்கியதும் ருக்மரதன் வந்து “வருக! பால்ஹிகரின் வருகையால் சகலபுரி உவகைகொள்கிறது” என்று முகமன் சொல்லி அணைத்துக்கொண்டான். அவன் சுதீரரை வணங்கி முகமன் சொன்னான். அவர்கள் அவனை அழைத்துக்கொண்டு மரப்படிகளில் ஏறி மேலே மாளிகைமுகப்புக்கு சென்றனர்.

அத்தனை மாளிகைகளும் கயிறுகளால் கட்டி இணைக்கப்பட்ட மரப்பலகை இடைநாழியால் இணைக்கப்பட்டிருந்தன. மரங்கள் காற்றிலாடுவதற்கு இடமளிப்பதற்காக அவை நெகிழ்வாகவே கட்டப்பட்டிருந்தமையால் பெரிய மரக்கலமொன்றில் நின்றுகொண்டிருக்கும் உணர்வையே பூரிசிரவஸ் அடைந்தான். “மேலே முதன்மை மாளிகையின் பெருமண்டபத்தில் அரசவை கூடியிருக்கிறது. தந்தையார் தங்களை தூதர்மாளிகைக்கு கூட்டிச்சென்று நீராடி உணவருந்தவைக்கும்படி என்னிடம் ஆணையிட்டார்” என்றான் ருக்மரதன். “தாங்கள் விரும்பினால் இன்றே அவையில் கலந்துகொள்ளலாம். இல்லையேல் நாளை காலை நிகழும் பொதுக்குடியவையில் கலந்துகொள்ளலாம்.”

“நான் இன்றே வந்துவிடுகிறேன். அரைநாழிகையில் நீராடி உடைமாற்றிவிடுவேன்” என்றான் பூரிசிரவஸ். “நான்குநாட்களாக அரண்மனை களிவெறியில் இருக்கிறது இளவரசே. இரவும் பகலும் மறைந்துவிட்டன” என்றார் சுதீரர். “இந்த நாட்கள் மத்ரவரலாற்றில் என்றும் நினைக்கப்படும். அஸ்தினபுரிக்கு மத்ரநாட்டு இளவரசி மணமகளாகச் செல்வதென்பது நல்லூழ் அன்றி வேறென்ன?” அத்தனை ஒலிகளும் நின்று செவிகளை உள்ளிருந்து அழுத்தும் அமைதி ஒன்று தன்னுள் எழுந்ததை உணர்ந்த பூரிசிரவஸ் அதை தன்னுள் அடக்கி முகத்தை இயல்பாக வைத்தபடி “நல்ல செய்தி… இளவரசி என்றால் யார்?” என்றான்.

“இதென்ன வினா பால்ஹிகரே? மத்ரநாட்டின் முதன்மை இளவரசி உத்தரமத்ரத்தை ஆளும் தியுதிமானரின் மகள் விஜயை அல்லவா?” என்றார் சுதீரர். “அஸ்தினபுரியில் இருந்து விதுரரே அரசப்படைகளுடனும் மங்கலப்பரிசுகளுடனும் நேரில் வந்து பாண்டுவின் மைந்தர் சகதேவனுக்காக விஜயையை மகற்கொடை கேட்டார். மறுசொல் சொல்ல என்ன இருக்கிறது. அவரது முறைப்பெண் அல்லவா விஜயை? கவர்ந்துசெல்லவும் உரிமை உண்டென்றல்லவா நூல்கள் சொல்கின்றன?” என்றார் சுதீரர். “செய்தியைக் கேட்டதுமே அரசர் அரியணைவிட்டு எழுந்து இரு கைகளையும் விரித்துக்கொண்டு விதுரரை நோக்கிச் சென்று மத்ரம் மூதாதையரால் வாழ்த்தப்படுகிறது என்று கூவினார். அப்போதே இடப்பக்கம் திரும்பி அடைப்பக்காரனின் கையில் இருந்து வெற்றிலையையும் மஞ்சளையும் வாங்கி விதுரருக்கு கையளித்து மணவுறுதியும் செய்துகொண்டார்.”

சுதீரர் மிகநுட்பமாக அச்சொற்களை அமைக்கிறார் என பூரிசிரவஸ் உணர்ந்தான். இயல்பாக எழும் சொற்களென ஒலித்தாலும் அவை சொல்லவேண்டிய அனைத்தையும் முன்வைத்தன. “செய்தியறிந்த கணம் முதல் மத்ரநாட்டில் அடுப்புகள் தோறும் இனிப்புகள் வேகின்றன. மதுக்குடங்கள் அனைத்தும் வெளிவந்துவிட்டன. அடுத்த முழுநிலவுநாளில் மணம்கொள்ள சகதேவர் வரப்போவதாக இன்று செய்தி வந்திருக்கிறது. அதற்கு பால்ஹிக நாட்டரசர்கள் அனைவரும் வரவேண்டுமென அரசர் விழைகிறார். மணச்செய்தி வந்த நாளிலேயே தாங்களும் வந்திருக்கிறீர்கள் என்பதைப்போல நன்னிமித்தம் இருக்கமுடியாது” என்றார் சுதீரர். “வருக இளவரசே, தங்களுக்காக அவை காத்திருக்கிறது.”

“பால்ஹிகநாடுகள் அனைத்தும் பெருமைகொள்ளும் தருணம்” என்று பூரிசிரவஸ் சொன்னான். “இது எங்கள் அனைவருக்கும் காப்பாகவும் மதிப்பாகவும் அமையும். இளவரசி நம் குடிகளைக் காக்க பிறந்த திருமகள். அவர்களைக் கண்டு முதல் வாழ்த்துரைக்க எனக்கு நல்லூழ் அமைந்தது உவகையளிக்கிறது. பால்ஹிகர்களின் சார்பாக ஒரு நற்பரிசையும் அவருக்கு அளிக்க விழைகிறேன்.” சுதீரர் “அவைக்குப்பின் தாங்களே இளவரசியை சந்திக்கலாம் இளவரசே” என்றார்.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்

முந்தைய கட்டுரைசலசலப்புகளுக்கு அப்பால்…
அடுத்த கட்டுரைபாவனைகளின் ஒப்பனைக்குப் பழக்கமான வாழ்வு(விஷ்ணுபுரம் கடிதம் பதிமூன்று)