நல்ல சினிமாவைப்பற்றி நண்பர்களிடம் பேசும்போதெல்லாம் நான் குறிப்பிடும் ஒரு பெயர் உண்டு ஜெனரல் பிக்சர்ஸ் ரவி.தமிழில் நமக்கு நடிகர்களும் இயக்குநர்களும் எழுத்தாளர்களும் இல்லையென்றில்லை. முற்றிலும் இல்லாதவர்கள் ரவியைப்போன்றவர்கள்.ரவி எந்தவகையிலும் கலைஞர் அல்ல. ஆனால் அவர் இல்லாவிட்டால் மலையாளத் திரைப்பட உலகின் கலைப்பட இயக்கம் இல்லை. அவர் ஒரு தயாரிப்பாளர்
அச்சாணி ரவி அல்லது ஜெனரல் பிக்சர்ஸ் ரவி என அறியப்படும் கே.ரவீந்திரன் நாயர் பிறப்பிலேயே செல்வந்தர். அவரது குடும்பத்தொழில் முந்திரிப்பருப்பு ஏற்றுமதி. இளமையிலேயே அதில் ஈடுபட்டு மேலும் செல்வம் ஈட்டினார். அதேசமயம் கல்லூரிநாட்கள் முதலே இலக்கியத்திலும் திரைப்படத்திலும் இசையிலும் நாட்டம் கொண்டிருந்தார்.
ரவி மலையாளக் கவிஞரும் பாடலாசிரியரும் இயக்குநருமான பி.பாஸ்கரனுடன் நெருக்கமான நட்பு கொண்டிருந்தார். 1967ல் அவர் தன் நண்பருக்காக ஒரு திரைப்படத்தை தயாரித்தார். பி பாஸ்கரன் இயக்கிய அன்வேஷிச்சு கண்டெத்தியில்லா [தேடியும் கண்டடையவில்லை] மலையாளத்தின் முக்கியமான படங்களில் ஒன்று. அன்றைய மலையாளம் இலக்கியத்தரமான திரைநாடகங்களால் ஆனது அவ்வரிசையில் சிறந்த படம் அது
தொடர்ந்து வந்த காட்டுக்குரங்கு மலையாளத்தின் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவரான கே.சுரேந்திரன் எழுதிய புகழ்பெற்ற நாவலின் திரைவடிவம். திரைக்கதையையும் சுரேந்திரனே எழுதியிருந்தார். பி.பாஸ்கரன் இயக்கம். இவ்விரு புகழ்பெற்ற படங்களுக்குப்பின் வந்த லக்ஷப்பிரபு சரியாக அமையவில்லை. பி.பாஸ்கரன் அதை இயக்கியிருந்தார்
ஐந்தாண்டு இடைவெளிக்குப்பின் 1973ல் ரவி கே.வின்செண்ட் இயக்கத்தில் அச்சாணி என்ற படத்தைத் தயாரித்தார். எழுபதுகளின் இந்தியமனநிலையின் ஆவணமாகக் கொண்டாடப்படும் படம் இது. ஒருபக்கம் கல்விகற்றவர்களின் அன்னியமாதலும் அழிவும். மறுபக்கம் வேலையில்லாத்திண்டாட்டத்தால் சிதையும் படிக்காத இளைஞர்கள்.
அச்சாணி ஒரு மாபெரும் வெற்றிப்படம். ரவி திரைப்படத்திற்கு செலவழிக்கும் பணம் ஓர் அறச்செயல் என நம்பிக்கைகொண்டவர். ஆகவே அந்த படத்தின் லாபத்தை அவர் கொல்லத்தில் ஒரு நூலகம் அமைக்கச் செலவிட்டார். அது இன்றும் கொல்லத்தின் முக்கியமான பண்பாட்டு மையம்.நான்கூட அதில் பேசியிருக்கிறேன்.
அச்சாணி வந்த அதே காலகட்டத்தில்தான் மலையாளத்தில் கலைப்பட இயக்கம் தொடங்கியது. திருவனந்தபுரத்தில் சூர்யா திரைப்பட இயக்கத்தை நடத்திக்கொண்டிருந்த அடூர்கோபாலகிருஷ்ணன் மற்றும் சூர்யா கிருஷ்ணமூர்த்தி இருவரும் 1972ல் சித்ரலேகா ஃபிலில் கோபாவபரேட்டிவ் என்னும் அமைப்பை நிறுவி மிகக்குறைந்த செலவில் சுயம்வரம் என்னும் படத்தை எடுத்தனர். அது மலையாளத்திரையுலகில் ஒரு புதிய திருப்பமாக அமைந்தது
அச்சாணியின் மாபெரும் வணிகவெற்றி ரவியை வணிகப்படங்களில் இருந்து விலகச்செய்தது. திரைவணிகர் என்ற பெயரை அவர் விரும்பவில்லை. அச்சாணிபோன்ற படங்கள் தொடர்ந்து வரத்தொடங்கின. ஆகவே ரவி கலைப்படங்களில் ஈடுபாடு கொண்டார். அவர்களுடைய புரவலராக அமைந்தார். வணிகப்படங்களை எடுப்பதை நிறுத்திக்கொண்டு தொடர்ந்து கலைப்படங்களை மட்டுமே எடுக்கத்தொடங்கினார்.
ஜி.அரவிந்தனுடன் அவருக்கு நெருக்கமான உறவு இருந்தது. அரவிந்தன் இயக்கிய முதல்படமான காஞ்சனசீதா ரவி தயாரித்த அடுத்த படம்.1977ல் வெளிவந்த இந்தப்படம் மலையாள கலைப்பட வரலாற்றில் ஒரு ‘கல்ட் மூவி’ என அழைக்கப்படுகிறது. சி.என்.ஸ்ரீகண்டன் நாயரின் புகழ்பெற்ற நாடகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் ராமாயணத்தை மத்தியப்பிரதேச கோண்ட் பழங்குடிகளைக்கொண்டு சித்தரிக்கிறது. ராமன் சீதை அனைவருமே பழங்குடிகள் இதில். சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப்பெற்றது. அரவிந்தன் தேசிய விருது பெற்றார்.
தொடர்ந்து 1978 ல் அரவிந்தன் இயக்கிய தம்பு [கூடாரம்] ரவி தயாரிப்பில் வெளிவந்தது. மறுவருடம் அரவிந்தனின் இரண்டு படங்கள் வெளிவந்தன. குழந்தைகளுக்கான படமாகிய கும்மாட்டி, [அன்னக்காவடி] கடலோரத்தொன்மம் ஒன்றை கையாளும் எஸ்தப்பான். இப்படங்களெல்லாமே பெரிய அளவில் விமர்சக வரவேற்பை பெற்றவை. சர்வதேச அளவில் மலையாள சினிமாவுக்கு இடம் தேடித்தந்தவை
1981ல் அரவிந்தன் இயக்கத்தில் போக்குவெயில் என்ற திரைப்படத்தையும் அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் எலிப்பத்தாயம் என்ற படத்தையும் ரவி தயாரித்தார். போக்குவெயில் இந்திய சினிமாவின் ஒரு புதிய முயற்சி. நக்சலைட் இயக்கத்தின் சரிவு உருவாக்கிய உளவியல் நெருக்கடிகளைச் சித்தரிப்பது. எலிப்பத்தாயம் இந்திய சினிமாவின் முக்கியமான ஆக்கங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.பிரிட்டிஷ் ஃபிலிம் இன்ஸ்டிடியூட் விருதையும் லண்டன் திரைவிழா விருதையும் தேசியவிருதுகளையும் பெற்றது
1982ல் ரவி எம்.டி.வாசுதேவன் நாயர் இயக்கத்தில் மஞ்சு [பனி] என்றபடத்தை தயாரித்தார். 1984ல் இடதுசாரி இயக்கங்களின் சரிவை பேசிய முகாமுகம் வெளிவந்தது. அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கம். 1997ல் அடூர் இயக்கிய அனந்தரம். 1993ல் ரவி தயாரித்த விதேயன் சகரியாவின் ‘பாஸ்கரப்பட்டேலரும் பின்னெ ஞானும்’ என்ற கதையை அடிப்படையாகக் கொண்டது. அந்தப்படத்துடன் ரவி திரையில் அவரது ஓய்வை அறிவித்தார்
இருபது வருடம் தொடர்ச்சியாக மலையாளக் கலைப்பட இயக்கத்தின் தலைமகனாக விளங்க ரவியால் முடிந்தது. ஜெனரல் பிக்சர்ஸ் என்ற பெயரே ஓர் அடையாளமாக ஆகியது. பதிநான்கு ப்டங்களை தயாரித்த ரவி அப்படங்களுக்காக 18 விருதுகளைப் பெற்றிருக்கிறார். சிறந்த திரைச்சேவைக்காக கேரள அரசின் ஜே.சி.டானியல் விருது அவருக்கு வழங்கப்பட்டது.
ஒரு மலையாள திரைவிமர்சகருடன் பேசிக்கொண்டிருந்தேன். ரவி திரைப்படத்திற்காக மிகக்குறைவான பணத்தையே செலவழித்திருக்கிறார் என்றார் அவர். ஒரு சராசரி மலையாளத் தொழிலதிபர் வாழ்நாள் முழுக்க மதுபானத்திற்காகச் செலவிடும் தொகையில் ஐம்பதில் ஒருபங்கை அவர் செலவிட்டிருக்கக் கூடும். அவரது படங்கள் மிகமிகக்குறைந்த செலவில் எடுக்கப்பட்ட கலைப்படங்கள். அவை முதலீட்டின் பெரும்பகுதியைக் கொஞ்சம் கொஞ்சமாக ஈட்டிவிடும். அவர் மேலும் சற்று பணத்தைப்போட்டு அடுத்த படத்தை எடுப்பார்.
அதேசமயம் கால்நூற்றாண்டுக்காலம் அவருக்கு கலைப்பட இயக்கம் ஒரு பொழுதுபோக்காகவும் நண்பர்களை ஈட்டித்தருவதாகவும் இருந்தது என்பதைப்பார்க்கையில் அது மிகமிகச்சிறிய செலவு. அனைத்துக்கும் மேலாக அவருக்கு வருடம்தோறும் இந்திய ஜனாதிபதியிடமிருந்து விருது பெறும் வாய்ப்பை அது அளித்தது. சர்வதேசத்திரைவிழாக்களுக்கு செல்லமுடிந்தது. அவரது வரவேற்பறையை பெருமைக்குரிய புகைப்படங்களும் பரிசுகளும் அலங்கரித்தன.
வாழ்நாளில் பெரும்பகுதியை அவர் வணிகத்துக்காகத்தான் செலவிட்டார்.ஆனால் நல்லெண்ணத்துடன் கலையில் செலவிட்ட மிகச்சிறிய நேரம்தான் அவருக்கு வாழ்நாள் கௌரவமாக ஆகியது. கேரளத்தின் எந்தத் தொழிலதிபர் பிறரால் நினைவுகூரப்படுகிறார்? ரவி பேசப்படாத ஒருநாள் கேரளத்தில் கடந்துசெல்வதில்லை.
தமிழகத்தில் ரவியைவிட ஆயிரம் மடங்கு செல்வம் உள்ள இரண்டாயிரம் தொழிலதிபர்கள் இருப்பார்கள். ரவி ஒரு சினிமாவுக்குச் செலவிட்ட பணம் என்பது அவர்களின் ஒருநாள் கேளிக்கைச்செலவு. ஆனால் தரமான கலைக்கோ இலக்கியத்திற்கோ சினிமாவிற்கோ அவர்களிடமிருந்து நூறுரூபாய் கூடப் பெறமுடியாது. ஒரு முதலீடு என்ற வகையிலெயே இது லாபகரமானது என்ற அறியுமளவுக்குக்கூட அவர்களுக்குப் பன்பாட்டுப்பயிற்சி இல்லை.
அத்துடன் அவர்கள் மிகச்சிறிய அளவுக்கு ஏதேனும் செய்தால்கூட அந்த மேடையில் தாங்களே ஏறிநின்று உளறிக்கொட்டி கேலிப்பொருளாக மாறத்தான் முயல்கிறார்கள். அவர்களின் கொடை என்பது முழுக்கமுழுக்க சுயவிளம்பரம் மட்டுமே. தங்கள் இடமென்ன, எங்கு நின்றுகொள்ளவேண்டும் என்று அறிந்தவர்கள் மிகமிகச் சிலரே.
தயாரிப்பாளர் என நம் காதில் விழுந்ததும் தோன்றுவதென்ன? முற்றிலும் லாபநோக்குடன் பணம் முதலீடு செய்து பணம் ஈட்டி செல்வந்தர்களாக வாழ்ந்து மறைந்த சிலர்தான். அவர்களை நாம் உழைப்பால் உயர்ந்தவர்கள் என கொண்டாடுகிறோம். அச்ச்சித்திரம்கூட அவர்களாலேயே பணம் செலவிடப்பட்டு உருவாக்கப்பட்டது மட்டுமே
ரவி போன்றவர்கள் அபூர்வமானவர்கள்தான். ஆகவேதான் அவர்கள் கொண்டாடப்படுகிறார்கள். ஆனால் இத்தனைபெரிய தமிழ்ப்பண்பாடு அவரைப்போன்ற ஒருவரைக்கூட உருவாக்கவில்லை என்பதை நாம் குறித்துக்கொள்ளவேண்டும்