”ஞானத்தின் படியேறிச் சென்றும் பரிபூரணத்தை அடையலாம். ஞானத்தை ஒவ்வொன்றாக உதிர்த்தும் அதே பரிபூரணத்தை அடையலாம். ஞானத்தருக்கத்தை உதறுவது எப்படி? உணர்ச்சிப் பெருக்காலும் பரவசநிலையாலும்தானே அது சாத்தியமாகும்? அத்தகைய உச்சகட்ட உணர்ச்சிகளும் அழகனுபவ நிலைகளும் இணைந்து உருவானதுதான் இந்த மாபெரும் ஆலயம். இதன் நூறாயிரம் சிற்பங்கள். இதன் காவியங்கள். அனைத்துக்கும் மையமாய் கால்நீட்டிப் படுத்திருக்கும் கரியமலை மேனி. நீ அன்று கேட்டாயே எதற்கு இந்தப் பொய்யை இங்கு ஸ்தாபித்திருக்கிறார்கள் என்று? மெய்யை மனித மனம் எதிர்கொள்வது சுலபம் அல்ல குழந்தை. உன்னைப் போன்ற அசாதாரணமான மனங்களுக்கே அது இத்தகைய வலியைத் தருகிறது என்றால் சாமானியர் கதி என்ன? மெய்யை பொய்யால் மூடி வைக்க வேண்டும். மேலும் மேலும் பொய்மையைக் குவிக்க வேண்டும். அதன் உச்சத்தில் ஏறி நின்றால் தெரிவதும் அதே பரிபூரணம்தான். எத்திசையில் நகர்ந்தாலும் பூரணத்தைச் சென்றடைகிறோம்”
(பிங்கலனை நோக்கி மகாபிரபு)
அன்பு ஜெயமோகன்,
சமயம், வழிபாடு, ஞானம் போன்ற பதங்களைப் புனிதப்படுத்தியதன் வாயிலாக அவற்றின் அடிப்படைகளை மறந்தவர்களாகிப் போனோம். அவை பரிந்துரைத்த சில தெளிவான உண்மைகளையும் அறிய மறந்தவர்களானோம். அத்தோடு நின்றிருந்தால் பரவாயில்லை. சமயத்தின் மூலத்தைச் சுற்றிப் பலவகையான பொய் அடுக்குகளையும் எழுப்பி விட்டோம். அப்பொய் அடுக்குகளில் மாட்டிக் கொண்டு சில நூற்றாண்டுகளாக அவதியுறவும் செய்கிறோம். குறிப்பாக ’கடவுள்’ எனும் சொல்லைச் சூழ்ந்து நாம் நிறுத்தி வைத்திருக்கும் அடுக்குகள் மலைப்பைத் தருகின்றன. மனிதர்களான நம் இயல்பு அப்படியானதுதான் என்பதால் அதுகுறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. எனினும், பொய் அடுக்குகளையே கடவுள், வழிபாடு என்பதாக முன்வைக்கும் அபத்தத்தைப் பரிசீலித்தாக வேண்டும். சமயத்தை ஆதரிக்கும், எதிர்க்கும் தரப்புகள் இப்பொய் அடுக்குகளையே தங்களுக்குச் சாதகமாகக் கொண்டிருக்கின்றன என்பதால் அப்பரிசீலனை அவசியமுமாகிறது.
சமயத்தின் அடிப்படை உறுப்பாகச் சொல்லப்படும் கோவிலை எடுத்துக் கொள்வோம். இன்றைய நாட்களில் நாம் காணும் கோவில்களைப் போன்றே துவக்கத்திலும் அவை இருந்திருக்க வேண்டும் என்பதான மனப்பிம்பம் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. அது தவறு. மேலும், “பக்திக்கு மட்டுமே உரிய இடம் கோவில்” என்பதான சிந்தனையும் நம்மிடம் ஊறிப்போய் இருக்கிறது. அதுவும் தவறு. கோவில் எனும் சொல்லைக் கொஞ்சம் ஆய்வோம். கோ+இல் > கோவில். கோ என்பது அரசனைக் குறிக்கும். இல் என்பது இருப்பிடத்தைக் குறிக்கும். ஆக, கோவில் என்றால் ’அரசனின் இருப்பிடம்’ என்பதே பொருளாகும். அச்சொல்கூட துவக்கத்தில் புழக்கத்தில் இல்லை. கோட்டம், மன்றம், அம்பலம் போன்ற சொற்களே வழக்கில் இருந்தன. அவையும் இன்றைய காலத்தைப் போன்று பெருங்கட்டிடங்களைக் குறியாமல் ஊரின் ஒரு குறிப்பிட்ட சிறுபகுதியில் அமைக்கப்படும் எளிய அமைவிடங்களையே குறித்தன. சொல்லப்போனால் துவக்கத்தில் கருவறை மட்டுமே இருந்திருக்கிறது. அதற்கு முன்பு மரத்தின் அடியில் ஒரு கல்லை நட்டு வழிபடுவதைப் போன்ற பழக்கங்கள் இருந்திருக்கின்றன. பல்லவர் காலத்தில்தான் முதன்முறையாக பாறைக்குடைவரைகளும், கற்றளி(ஒற்றைக் கல்லில் எழுப்பப்படும் கோவில்)களும் அறிமுகமாகின. காலப்போக்கில் ராஜகோபுரம், மண்டபங்கள், பிரகாரங்கள் என கோவில்கட்டிடக்கலையின் வளர்ச்சி விரிந்தது. இன்று நாம் காணும் தஞ்சைப் பெரிய கோவிலின் வயது ஆயிரம் ஆண்டுகள் என்பதைக் கொண்டு கோவில் கட்டுமான வளர்ச்சியை ஓரளவு விளங்கிக்கொள்ளலாம்.
கோ என்றால் அரசன் எனக்கூறினோம். அரசைக் குறிக்க இறை எனும் சொல்லை முன்னோர்கள் கையாண்டிருக்கின்றனர். திருக்குறள் அதற்கு வலுவான சான்று. இறைமாட்சி எனும் அதிகாரத்தலைப்பில் வள்ளுவர் அரசனின் பெருமைகளையே கூறுகிறார். ”முறைசெய்து காப்பாற்று மன்னவன் மக்கட்கு / இறையென்று வைக்கப் படும்” எனும் குறள் மக்களை நன்முறையில் காத்த அரசர்களை இறைவனாகப் போற்றும் மரபைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. அவ்வகையில் இறைவனாக, கடவுளாக நம்மால் வழங்கப்படுபவர்கள் நம்மை ஆண்ட முன்னோர்களே. ‘ஆண்டவன்’ எனும் சொல்லாட்சியும் அதற்குத் தக்க சான்றாக இருக்கிறது. அரசுருவாக்கம் என்பது வேளாண்சமூகத்தில்தான் நிகழ்ந்திருக்கிறது. நிலைத்தகுடிகளாக வேளாண்சமூகத்தில்தான் நாம் இருக்கிறோம். அப்படியானால் நாடோடிகளாக நாம் திரிந்த வேட்டை மற்றும் மேய்ச்சல் சமூகக் காலகட்டங்களில் யார் நம்மை ஆண்டனர் எனும் கேள்வி நிச்சயம் எழும். அக்காலகட்டங்களில் யாரும் நம்மை ஆளவில்லை. மாறாக, நாம் இனக்குழுக்களாக ஒருங்கிணைந்து இருந்தோம். ஒவ்வொரு இனக்குழுவுக்கும் ஒரு தலைவன் இருப்பான். அவனின் தலைமையில்தான் அவ்வினக்குழு செயல்படும். இனக்குழுத்தலைவனுடைய பொறுப்பு அக்குழுவுக்குத் தலைமையேற்பது மட்டுமன்று; அக்குழுவில் ஒருவனாகச் செயல்படுவதும்தான். அவ்வகையில் முருகனை குறிஞ்சிநிலம் சார்ந்த இனக்குழுத்தலைவன் என்றும் சிலர் குறிப்பிடுவர். பழம் இலக்கியங்களில் அவன் குறிஞ்சிக்கிழான் எனச் சொல்லப்பெறுவதும், வேட்டுவப்பெண்ணான வள்ளியை அவன் காதலித்த செய்தியும் வேட்டைச் சமூக வாழ்வியலோடு நெருங்கிய தொடர்புடையதாக இருக்கிறது. முருகனின் கையில் இருக்கும் வேலும் அதற்குத் தகுந்த சான்று. பாம்பும், மயிலும் குறிஞ்சிநிலத்தின் முக்கிய உயிரினங்கள். மேய்ச்சல் சமூகத்தின் இனக்குழுத்தலைமையின் குறியீடாக திருமால்(இன்று கண்ணன்) இருந்திருக்க வேண்டும். புல்லாங்குழல் முல்லை நிலத்துக்கான இசைக்கருவி. மேய்ச்சல் சமூகத்தின் முக்கிய விலங்கு மாடு. மாடு எனும் சொல்லுக்கு தமிழில் செல்வம் என்ற பொருள்கூட உண்டு. மேய்ச்சல் சமூகக் காலகட்டத்தில் மாடுகள்தான் முக்கியமான சொத்து. முருகன், திருமால் போன்றவை அந்தந்த சமூக இனக்குழுக்களை முதன்மைப்படுத்தும் குறியீடுகளாகக் கொள்வதில் நமக்குச் சிக்கல் இருக்காது என்றே நம்புகிறேன். நான் சொல்லிக்கொண்டிருப்பதை அப்படியே ஒப்புக்கொள்ளச்சொல்லி வற்புறுத்துவதல்ல என் நோக்கம். சமயம் முன்வைக்கும் குறியீடுகளுக்குள் நான் பயணித்துப் பெற்றுக்கொண்ட அனுபவங்களில் சாரத்தை மட்டுமே பகிர்ந்து கொள்வதே என் விருப்பம்.
வேளாண்சமூகத்துக்கு வருவோம். அரசனின் இருப்பிடமான அரண்மனைக்கு கொஞ்சமும் குறையாத வகையில் கோவில்கள் அமைக்கப்படுகின்றன. அரசனுக்குச் செய்யப்படும் மரியாதைகள் யாவும் கோவிலிலும் அரங்கேறுகின்றன. அரசனுக்கு இருப்பது போன்றே கொடியும், தேரும் கோவிலிலும் இருக்கிறது. அரசனின் நிதிப்பெட்டகம் போன்றதே கோவிலின் உண்டியல். அரசரிடம் நீதி வேண்டுவதற்காய் ஒரு மணி அரண்மனையில் கட்டப்பட்டிருக்கும். அதைப்போன்றே ஒரு மணி கோவிலிலும் இருக்கும். இசைக்கும், நடனத்துக்கும் தனித்தனி அரங்குகள் அரண்மனையில் இருக்கும். கோவிலிலும் அப்படியான அரங்குகள் கட்டாயம் இருக்கும். மக்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் அரண்மனையில் அதற்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை. அரசர்கள் காலத்துக்குப் பின்னும் சில பொதுப்பிரச்சினைகள் கோவிலில் பேசப்பட்டுத் தீர்க்கப்படுவதை நாம் கண்டுகொண்டுதான் இருக்கிறோம். அரசனிடம் முறையிட்டால் நமக்கு வேண்டியதை அவன் நிச்சயம் செய்து கொடுப்பான் என்பது நம் உறுதியான நம்பிக்கை. அதனடிப்படையிலேயே கோவிலில் வேண்டவும் செய்கிறோம். தமிழில் ஆற்றுப்படை எனும் இலக்கியவகை உண்டு. அவ்விலக்கியம் வறுமையைத் தீர்க்க வேண்டிப் பயணம் மேற்கொள்ளும் புலவன் ஒருவனைக் குறிப்பிட்ட அரசனிடத்து மற்றொரு புலவன் ஆற்றுப்படுத்துவதாக(வழிசெலுத்துவதாக) அமைவது. கடைச்சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான திருமுருகாற்றுப்படையில் வழிப்போக்கனை முருகனிடத்து ஆற்றுப்படுத்துவதாகச் சொல்லப்பட்டிருக்கும். கொஞ்சம் கூர்ந்து நோக்கினால் அவ்விலக்கியத்தின் வழியாக நம்மை வழிநடத்திய, ஆண்ட முன்னோர்களையே இறைவனாகக் கருதி வழிபடும் மரபைக் கண்டு கொள்ளலாம். அப்படியானால், முன்னோர்கள்தான் கடவுளரா எனக்கேள்வி வரும். அங்குதான் வழிபாட்டை நாம் இன்னும் விரித்துப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.
பொதுவான முருகன் வடிவம் ஒன்றினை மனதுக்குள் கொண்டு வருவோம். அவ்வடிவத்தைப் புதிதாகப் பார்ப்பது போன்று கவனிக்கத் தொடங்குவோம். அதில் மனிதனைப் போன்ற தோற்றமுள்ள ஒருவர் வேலைப்பிடித்தபடி நின்றிருப்பார் அல்லது மயில்மீது உட்கார்ந்திருப்பார். அவர் காலடி அருகே பாம்பு இருக்கும். கையில் சேவல் கொடியையும் வைத்திருப்பார். முகத்துக்குப் பின்னே ஒளிவட்டம் தெரியும். இப்போது அப்படத்தை இரண்டு நிலைகளாகப் பகுப்போம். ஒளிவட்டத்தைத் தவிர்த்துவிட்டு நாம் பார்த்தால் உலகியல் வாழ்வு வெளிப்பட்டிருக்கும். ஒளிவட்டத்தைச் சேர்த்துப்பார்த்தால் உலகியல் கடந்திருக்கும் பரப்பிலிருந்து உலக வாழ்வு கிளைத்திருப்பது புலனாகும். இன்னும் எளிமையாகப் பார்ப்போம். உலக வாழ்வில் நம்மால் பார்த்தறிய முடிகிற, நமக்கு உதவுகிறவற்றை செய்நன்றி காரணமாக வணங்குகிறோம். அப்படி அவற்றை வணங்குவதன் ஊடாக நம் வாழ்வுக்கு எவ்விதப் பங்கமும் நேராமல் காத்துக் கொள்ளலாம் என்றும் நம்புகிறோம். ஆக, உலகியல் வாழ்வில் வழிபாடு என்பது கதிரவ வழிபாடு > இருப்பிட வழிபாடு > போர்க்கருவி வழிபாடு > உயிரின வழிபாடு > முன்னோர் வழிபாடு > உணவு வழிபாடு என்பதாக இருக்கிறது. இப்படியான தெளிவாக நம்பிக்கை கொண்டு நாம் வாழ்ந்திருப்பின் சிக்கல்கள் இருந்திருக்காது. எளிய பாமர மக்கள் தங்கள் நம்பிக்கைகளைச் சந்தேகிப்பதில்லை. அதனால் அவர்கள் குழம்புவதில்லை. நாமோ வழிபாட்டை வாழ்வியல் நிகழ்வுகளோடு முடிச்சு போட்டு விதி, தலையெழுத்து என்பதான கண்ணிகளையும் சேர்த்துக்கொண்டு – பொய்க்கு மேல் பொய்சூடி – நிலைகுலைந்திருக்கிறோம். இப்போது ஒளிவட்டத்தைச் சேர்த்துப் பார்ப்போம். ஆதிமெய்ப்பொருள்(வெட்டவெளி) > பேரண்டங்கள் > அண்டங்கள் > கதிரவக்குடும்பம் > கோள்கள் > ஐம்பூதங்கள் > உலகம் > இருப்பிடம் > போர்க்கருவி > உயிரினங்கள் > முன்னோர்கள் > வாழ்வியல் என்பதான ஒரு முழுச்சித்திரம் கிடைக்கும்.
துவக்கத்தில் கோவிலை உலக வாழ்வை மட்டுமே மையப்படுத்திப் பார்த்தோம். இப்போது கோவிலை உலகம் கடந்திருக்கும் பரப்பைக் கொண்டும் கொஞ்சம் பார்ப்போம். எல்லாக் கோவில்களுக்கும் இது பொருந்தாது. என்றாலும், கோவில்களுக்கான பொது அமைப்பைக் கொண்டு நாம் பேசலாம். கோவிலுக்குள் நுழைவதை வான்வெளியில் நுழைவதாகப் பாவித்துக் கொள்வோம். துவக்கத்தில் ஒன்பது கோள்களைக்(நவகிரகங்கள்) கடக்கும் நீங்கள் அவற்றுக்கு அடிப்படையான கதிரவனையும், சந்திரனையும் பார்ப்போம். பிறகு, அவற்றைக் கடந்திருக்கும் அண்டங்களையும், பேரண்டங்களையும் மண்டபங்களாகவும், பிரகாரங்களாகவும் பார்க்கிறோம். இறுதியாக நாம் சென்று சேர்வது கருவறைக்கு. கருவறை என்பது இருட்டான அறை. அதுதான் கோவிலின் முதன்மையான பகுதி. வெட்டவெளியையே கருவறை குறிப்பதாகச் சொல்லலாம். கருவறையில் நிகழும் வழிபாட்டைக் கவனிப்போம். தீபம் ஏற்றப்பட்டு உள்ளிருக்கும் சிலைக்கு(மூலவர்க்கு) காட்டப்படுகிறது. அந்நேரத்தில் பூசை செய்பவர் மணியையும் ஒலிக்கிறார். வெளிச்சத்தில் நாம் அச்சிலையைப் பார்க்கிறோம். அதாவது நம்மால் காணமுடியாத வெட்டவெளியின் தோற்றத்தைக் கண்டுகொண்டதான பரவசம் அங்கு சாத்தியப்படுவதாகவே நான் கருதுகிறேன். வெட்டவெளி, மணி ஒலி, தீப ஒளி எனப் பெருவெடிப்பின் காலப்பரப்புக்கே சென்றுவிட்டதாய் ஒரு உணர்வு. வழிபாட்டில் ஐம்பூதங்களும் மதிக்கப்பெறுவது நம் மரபின் சிறப்பம்சம். வழிபாட்டின்போது தரப்படும் திருநீறு(மண் பூதம் – எங்கள் பகுதிகளில் திருமண் என்றே சொல்வர்), தீர்த்தம்(நீர்பூதம்), மலர்கள்(காற்றுபூதம்) மற்றும் திருவமுது(மண்பூதம்) போன்றவற்றைக் கவனிப்போம். வழிபாட்டில் பாடல்கள் முக்கியம் என்பது நம் ஆன்றோர்களின் கருத்து. வாய்விட்டுப் பாடுவதற்காகவே(ஆகாய பூதம்) திருமுறைகளும், பாசுரங்களும் ஏராளமாய் நம்மிடம் இருக்கின்றன. “என்னை நன்றாக இறைவன் படைத்தனன் / தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே” எனும் திருமந்திரச்செய்யுளில் தமிழ் எனும் சொல்லுக்குப் பாடல் என்றே பொருள் கொள்ள வேண்டுமெனவும் சொல்கின்றனர். ஆகாய பூதத்தில் பிறபூதங்கள் அடக்கம் என்பது நாம் அறிந்ததே. அவ்வகையில் எவ்விதச் சடங்குகளும் இல்லாமல் பாடல்கள் பாடினாலே வழிபாடு நிறைவுறும் என்பதும் நம் சமயத்தில் இருக்கிறது. கோவில்கள்தோறும் பயணித்த நம் சான்றோர் பெருமக்கள் பாடிவைத்திருக்கும் பாடல்களே அதற்குத் தகுந்த சான்றாக இருக்கின்றன. மனம்விட்டுப் பாடும் ஒருவனிடமிருந்து உளவியல் சிக்கல்கள் தானாக நீங்கி விடுகின்றன எனும் நவீன அறிவியலின் கருத்து கவனத்தில்கொள்ளத்தக்கது. ஆக, சமயம் என்பது எவ்விதத்திலும் தன்னை இப்படியாகவே அணுக வேண்டும் என்று வற்புறுத்தாத குறியீடாக இருக்கிறது. எனினும், அதில் நுழையும் நமக்குப் பெற்றுக்கொள்ள முடியாத அளவிலான அனுபவங்களையும் தரக்காத்திருக்கிறது.
முருகவேலன்,
படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,
கோபிசெட்டிபாளையம்.