ஆர் சிவலிங்கமும் கலேவலாவும்

 

கலேவலா – தமிழ் விக்கி

வணக்கம்.

தங்கள் கணினி வலைப் பக்கங்களில் பின்லாந்து என்னும் நாட்டைப் பற்றிய சிறு குறிப்பைப் பார்த்தேன்.பின்லாந்தின் தேசிய காவியமான “கலேவலா” என்னும் காவியத்தை தமிழில் மொழிபெயர்த்தவர் திரு மு.சிவலிங்கம் அல்ல.

நான் பின்லாந்தில் 1983 தொடக்கம் 25 ஆண்டுகள் வாழ்ந்த பின்னர், 2008ஆம் ஆண்டில் கனடாவுக்குப் புலம்பெயர்ந்தேன். பின்லாந்தில் வாழ்ந்த காலத்தில் அந்த நாட்டு மொழியைக் கற்றதன் பலனாக ஹெல்சிங்கி பல்கலைக் கழகத்தில் பத்தொன்பது ஆண்டுகள் ஆய்வு உதவியாளராகவும், இந்தியவியல் கற்ற முதுநிலைப் பட்டதாரி மாணவருக்குத் தமிழ் மொழி கற்பிக்கும் விரிவுரையாளராகவும் கடமையாற்றினேன்

“கலேவலா” என்பது பின்லாந்தின் தேசிய காவியம். ஐம்பது பாடல்களில் 22,795 அடிகளைக் கொண்டது. இதனை பின்லாந்து மொழியான பின்னிஷ் மூல நூலிலில் இருந்து நேரடியாகத் தமிழுக்கு அடியடியாக (ஆசிரியப்பா) மொழிபெயர்த்தேன். அவ்விதம் தமிழ் மொழிபெயர்ப்பும் 50 பாடல்களில் 22,795 அடிகளாக 1994இல் வெளிவந்தது.

பேராசிரியர் சிவத்தம்பி போன்ற அறிஞர்கள், இந்த மரபுக்கவிதை மொழிபெயர்ப்பு, அறிஞர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் மட்டுமே பயன்படும் என்றும் சாதாரண வாசகர்கள் விளங்கிக்கொள்ளச் சிரமப் படுவார்கள் என்றும் தெரிவித்தார்கள். அதனால் மீண்டும் மூலநூலில் இருந்து நேரடியாகத் தமிழில் ஒரு வசனநடைத் தமிழாக்கத்தைத் தயாரித்தேன். “உரைநடையில் கலேவலா” என்னும் இந்நூல் 1999இல் வெளிவந்தது.

மேற்படி இரு நூல்களையும் ஹெல்சிங்கி பல்கலைக்கழகம் வெளியிட்டது.

பின்லாந்தின் தேசிய காவியமான கலேவலா இதுவரையில் 61 உலக மொழிகளில் வெளிவந்துள்ளது.

பின்லாந்தில் 25 வருடங்கள் வாழ்ந்த அனுபவ நினைவுகளை “பின்லாந்தின் பசுமை நினைவுகள்” என்ற தலைப்பில் “தாய்வீடு” என்னும் கனடா மாத இதழில் கடந்த நான்கு வருடங்களாகத் தொடராக எழுதி வருகிறேன். இதனை நூலாக்கும் முயற்சி நடைபெற்று வருகின்றது

அன்புடன்;
ஆர்.சிவலிங்கம் – ‘உதயணன்’

ஆர் சிவலிங்கம் விக்கி பக்கம்

முந்தைய கட்டுரைஉப்புவேலி விழா காணொளி
அடுத்த கட்டுரைசலசலப்புகளுக்கு அப்பால்…