”இந்தக் கணத்தில் பாவனைகள் இன்றி முழுமையாக இருக்க நான் எதற்காக என்னுடைய நேற்றையும் முந்தைய தினத்தையும் உங்களுக்குக் கூற வேண்டும்? உங்களுக்காகவோ எனக்காகவோ அதை மாற்றாமல் அப்படியே கூறத்தான் முடியுமா? இந்தப் பூமியில் எவரும் என்னைப் புரிந்து கொள்ள முடியாது. நான்கூட சந்தர்ப்பங்களில் என்னைப் பொருத்தித்தான் என்னைப் புரிந்து கொள்ள முடிகிறது”
(கவிஞர் சங்கர்ஷணனிடம் பத்மா)
அன்பு ஜெயமோகன்,
எச்சூழலிலும் பாவனைகள் இன்றி நம்மால் வாழ்ந்துவிட முடிவதில்லை. அதிலும் ’நான் நல்லவன்’ எனும்படியான பாவனையையே நம்மில் பெரும்பாலானோர் விரும்புகிறோம். ’நான் நல்லவன்’ என நிரூபிக்க நமக்கு அக்கணம் எவ்விதத்திலும் பயன்படாது. நேற்றிலும், முந்தைய தினத்திலும் நான் எப்படி இருந்தேன் என்பதைக் கொண்டே அதை நிலைநாட்ட வேண்டி இருக்கிறது. நேற்றைய வரலாற்றையும் நாம் உள்ளவாறே சொல்வதில்லை. அவற்றில் நம்மைக் குறைவாக மதிப்பிட்டுவிடும்பாடியான சம்பவங்களைத் தவிர்த்தே பேசுகிறோம். ஆக, எந்நிலையிலும் பாவனைகளற்ற வாழ்வு நமக்குச் சாத்தியமில்லை. “வாழ்க்கை ஒரு நாடகமேடை” எனச் சொல்லும் சேக்ஸ்பியரின் கூற்றேகூட நாம் முன்வைக்கும் பாவனைகளை அடையாளம் கண்டு சொல்லப்பட்டதுதான். நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமன்று; நாம் சார்ந்திருக்கும் இனத்தின், மொழியின், நாட்டின் வாழ்வும் பெரும்பாலும் பாவனைகளால் கட்டப்பட்டிருக்கிறதோ என்றும் சிந்திக்க வேண்டி இருக்கிறது.
வரலாறுகளாக இன்று நாம் அறிகின்றவற்றில் பெரும்பாலும் பாவனைகளே மிகுந்திருக்கின்றன. நம் இன வரலாற்றை முன்வைக்கும் ஒருவர் ‘உலகின் மூத்த இனம் நம்முடையது’ எனச்சொல்லும் பாவனைகளையே முன்வைக்கிறார். ஓரளவு அதில் உண்மை இருப்பினும் மிகுந்திருக்கும் பாவனைகளால் அவரின் வாதம் சலிப்பை ஏற்படுத்தி விடுகிறது. அதற்குச் சான்றாக அவர் முன்வைக்கும் எப்படியான தரவுகளையும் பிறிதொரு இனத்தினர் எதிர்கொண்டுவிட முடியும். உலகின் பல இன்ங்களிலும் இத்தகைய வரலாற்று முயற்சிகளே ஊக்குவிக்கப்படுகின்றன. பன்முகப்பட்ட வாழ்வியல் தளங்களில் பல்வகையான இனங்கள் இருப்பதை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும். மேலும், நம் இனத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள் எல்லாம் இன்று நமக்கு துரோகம் செய்கிறார்கள் என்பதாகப் பேசிக்கொண்டிருப்பது ஒருவகையான பாவனையோ என்றும் படுகிறது. “நம் இனம் மூத்த இனம்” என்பதை வலியுறுத்துவதன் ஊடாக நவீனச்சமூகத்தில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறோம் என்பதை அறியாதவர்களாகவே நாம் இருக்கிறோம். ஒரு இனத்திற்கு முக்கியமானது மொழி மட்டுமன்று; அவ்வினத்தின் வாழ்நிலம், வாழ்வியல் மற்றும் சமயங்களும் இன்றியமையாதவை. அவை எப்போதும் ஒரே வடிவில்தான் இருந்தாக வேண்டும் என்பதான கருத்தியலை சமகாலத்தில் கட்டமைக்க முயல்வது பேராபத்தையே விளைவிக்கும். நவீனச் சமூகத்திற்கான தளத்தில் இனத்தையும் மொழியையும் அதன் வாழ்வியலையும் ஓரளவு உள்ளவாறே பதிவுசெய்வதே நேர்மையானதாக இருக்கும். முழுக்க பாவனைகளற்று நம்மால் எவ்வரலாற்றையும் சொல்லிவிட முடியாது. குறைந்தபட்ச பாவனைகளுடனாவது அதைச் சொல்லப்பார்க்கலாம்.
”யாரையும் நம்மால் புரிந்து கொள்ள முடியாது” என்பதே நிஜம். புரிந்துகொண்ட மாதிரி நாம் பாவனை செய்கிறோம். கொஞ்சம் தனியே அமர்ந்து யோசித்துப் பார்த்தால் உண்மை புரிய வரும். “நம்மையே நம்மால் புரிந்து கொள்ள முடியாது” என்பதை யோசிப்பின் தொடர்ச்சியில் நாம் விளங்கிக்கொள்வதற்கும் வாய்ப்புண்டு. நண்பரைப் பற்றி நாம் கொள்ளும் பாவனைகளால்தான் அவருடன் நாம் நட்பு கொண்டிருக்கிறோம். அப்பாவனைகளில் நமக்கு ஏதாவது குழப்பம் நேரிடின் அவருடனான நட்பைத் துண்டித்து விடுகிறோம். “நான் நினைப்பது போன்று நடப்பவர்தான் என் நண்பர்” எனும் நம் பாவனை ஓரளவு சரியாக இருக்கும் வரை நட்பைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறோம். அப்பாவனையை அசைத்துப் பார்க்கும்படியான எதிர்மறைச்சம்பவம் ஏதேனும் நிகழ்ந்தால் நண்பரிடமிருந்து விலகிவிடுகிறோம். கொஞ்சம் நுட்பமாகப் பாருங்கள். நாம் நண்பருடன் நட்பு கொண்டிருக்கவில்லை. அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கும் பாவனையோடுதான் நட்பு கொண்டிருந்திருக்கிறோம். உடனே “அப்படி நடந்து கொள்வார் என நான் நினைக்கவே இல்லை” எனும் பாவனையை உருவாக்கி அவரின் நட்பிலிருந்து அழகாக நகர்ந்துவிடுவோம். பாவனைகளே நம் உளச்சிக்கல்களுக்கும் காரணமாகின்றன. அப்போது அவற்றைப் பிறரிடம் பகிர்ந்து கொண்டாலே தெளிந்து விடலாம். நாமோ உளவியல் மருத்துவர்களை நாடுகிறோம். ஒரு குறிப்பிட்ட மனிதனின் தனிப்பட்ட அகச்சிக்கலைப் பொதுமைப்படுத்தப்பட்ட முன்கூட்டிய காரணிகளாலேயே அவர்கள் ஆராய்கிறார்கள். அதன் அடிப்படையிலேயே மருந்துகளையும் பரிந்துரைக்கின்றனர். உளவியல் சிக்கல் தீர்ந்து விட்டால் தாம்தான் தீர்த்து வைத்ததாகச் சாதிக்கவும் செய்கின்றனர். உண்மையில் உளவியல் சிக்கல்களுக்கும், தீர்வுகளுக்கும் மூலம் நாம்தான். ”தீதும் நன்றும் பிறர்தர வாரா” எனும் புறநானூற்று வரியை ஒருவனின் அகச்சிக்கல்களுக்கான அடிப்படையைப் புரிந்து கொள்ளவும் பயன்படுத்தலாம். ஒரு பாவனையின் மீதான அதிதீவிர எழுச்சியே உளவியல் சிக்கலாகிறது. அவ்வெச்ழுச்சியிலிருந்து விடுபடலே அதற்கான தீர்வுமாகிறது.
“இக்கணத்தில் வாழ்” எனச் சான்றோர்களும், ஞானிகளும் சொல்லிக்கொண்டே இருக்கின்றனர். நமக்கு அதன் பொருள் இன்றைக்கு வரைக்கும் விளங்கவில்லை என்பதுதான் நிஜம். விளங்கியிருந்தால்தான் பாவனைகளில் சிக்கிக்கொண்டு ஊசலாடி இருக்க மாட்டோமே? “இக்கணத்தில் வாழ்” என்பதைப் பகிர்ந்து கொள்வது எளிது. இக்கணம் ஒரு செம்பருத்திப்பூவைப் பார்க்கிறோம். அப்பூவைப்பற்றி நமக்களிக்கப்பட்டிருக்கும் தகவல்களை(இறந்தகாலம்) மறந்துவிட வேண்டும். அதைப் பார்ப்பதால் ஏற்படும் விளைவுகளை(எதிர்காலம்) யோசியாது இருக்க வேண்டும். அச்சமயத்தில் அப்போதுதான் அப்பூவைப் பார்ப்பதாக(நிகழ்காலம்) நாம் உணரும் தருணத்தில் காரணமற்ற மகிழ்ச்சி ஒன்று தோன்றுமே? அதுவே இக்கணத்தில் வாழ்வதன் பயன். குழந்தைகளே பெரும்பாலும் கணந்தோறும் வாழ்கிறார்கள். காலத்தை அவர்கள் கடந்த காலம், எதிர்காலம் எனப்பகுப்பதில்லை; அவர்களுக்கு இருப்பது நிகழ்காலம் மட்டுமே. அதனால்தான் ஒரே செயலைகூட அவர்களால் சலிப்பின்றிச் செய்ய முடிகிறது. நம் பாவனைகளுக்கு முக்கியக் காரணங்கள் நம்மைப் பற்றி நாம் கொண்டிருக்கும் அடையாளங்களும், காலத்தைப் பிரிவுகளாக்கியதும்தான். “ஞானத்தைத் தேடத் தேவையில்லை. அது அங்கேயே இருக்கிறது. நீ கண்டுகொண்டால் போதும்” எனச் சொல்வர். ஆம், நிகழ்காலத்தில் மட்டுமே வாழ்பவனே ஞானி. அவன் வாழ்வை அக்கணத்தில் எப்படி இருக்கிறதோ அப்படியே ஏற்றுக்கொள்வான். இறந்த காலச் சம்பவங்களையும், எதிர்காலக் கற்பனைகளையும் அதனுடன் இணைத்துக் குழம்பிக்கொள்ள மாட்டான். முழுக்க பாவனைகளற்று நம்மால் வாழ முடியாது. நம் பாவனைகளின் இயல்பை மாற்றிக்கொள்ள முயற்சிக்கலாம். ஒரு சாதாரண மனிதனின் பாவனைகளில் இருந்து விடுபட்டு ஒரு ஞானியின் பாவனைகளை அணிந்துகொள்ளப்பார்க்கலாம். தொடர்ச்சியான அப்பாவனை நம்மைக் கொஞ்சம் கொஞ்சமாகப் புறச்சூழலின் தடுமாற்றங்களை எதிர்கொள்ளத்தயார் செய்துவிடும். சமயத்தளத்தில் அருணகிரிநாதரைச் சான்றாகக் கொண்டு பாவனைகளைப் பேச முடியும். கந்தர் அலங்காரத்தில் “பாதித்திருவுரு பச்சென்றவர்க்குத் தன் பாவனையைப் / போதித்த நாதனைப் போர்வேலனைச் சென்று போற்றி உய்ய” எனக் குறிப்பிடுகிறார் அவர். சிவனுக்கு பிரணவ மந்திரத்தைப் போதித்த நிகழ்வைப் பாவனை என்றே அருணகிரிநாதர் குறிப்பிடுவதைத் தூண்டுதலாகக் கொள்ளலாம். பிரணவ மந்திரத்தை சிவனின் காதருகே சொல்வதாகச் சொல்லும் கதைகளில் என்ன சொன்னார் என்பது பற்றிய குறிப்புகள் இல்லை. அவை படிப்பவரின் பாவனைக்காய் விடப்பட்டிருப்பதாக நான் கருதுகிறேன். படிப்பவருக்கும், அக்கதைக்கும் உறவை அப்பாவனையே அர்த்தமுள்ளதாக்குகிறது என நம்புகிறேன்.
முருகவேலன்,
படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,
கோபிசெட்டிபாளையம்.