”எனக்கு ஓர் உரிமை உள்ளது. கனவு காணும் உரிமை. அதை யாரும் எதுவும் செய்ய முடியாது. அக்கனவும் நானும் ஒருபோதும் பிரிய முடியாது. எனக்கு அதுபோதும். நீ ஒருபோதும் அறியப்போவதில்லை. வெற்றுத் தருக்கங்களில் அகங்காரத்தைத் திருப்தி செய்தபடி உயிர்வாழ்ந்து உதிரப்போகும் பதர் நீ. நீ மேதையாக இருக்கலாம். எனக்கு நீ சருகுதான். உன் ஞானம் வனாந்திரத்தில் சுமக்கும் தங்கம் போல் உன்னை அழுத்தும். கீழே விழுந்து தாகநீர் கேட்டு நீ கை நீட்டும்போதுதான் அதன் பாரம் என்ன என்று உனக்குப் புரியும்.”
(பிங்கலனிடம் சாருகேசி)
அன்பு ஜெயமோகன்,
கனவுகளின் வண்ணங்கள் நீர்க்குமிழிகள் போன்று நிலையற்றவைதான். எனினும், அவை உருப்பெறும் நேரங்களில் உலகின் அபத்தங்களில் இருந்து நம்மை விடுகின்றன. ஒரு செடிக்கு, ஒரு பறவைக்கு, ஒரு விலங்குக்கு கனவு சாத்தியமா எனத் தெரியவில்லை. மனிதர்களான நமக்கு கனவுகள்தான் உற்சாகமூட்டிகள். எதார்த்தத்தில் நாம் அணிந்து கொண்டிருக்கும் முகமூடிகள் தரும் சலிப்பைக் கனவுகளே போக்குகின்றன. பெருங்கடலொன்றின் நடுப்பரப்பில் கப்பலின் விளிம்பில் நின்று கொண்டு தவிப்பவர்களாகவே வாழ்க்கை நம்மை அடையாளப்படுத்துகிறது. கனவுகளே அவ்வச்சத்திலிருந்து நம்மைக் கொஞ்சம் மீட்டு வானத்தையும், மேகங்களையும் பார்க்க வைக்கின்றன. ”ஒரு மரத்தடி நிழல் போதும் / உன்னைத் தைரியமாக நிற்க வைத்துவிட்டுப் போவேன்” எனும் தேவதேவனின் கனவிலிருந்து இன்றுவரை என்னால் மீண்டுவர இயலவில்லை. “மரம் உனக்கு பறவைகளை அறிமுகப்படுத்தும் / பறவைகள் உனக்கு வானத்தையும் தீவுகளையும் / வானமோ அனைத்தையும் அறிமுகப்படுத்தி விடுமே” எனும் அவர் கனவின் நீட்சியில் என்னை ஆட்கொண்ட கனவுகள் ஏராளம். அக்கனவுகளில் நீந்திய சமயங்களில் நான் பெற்ற பரவசங்களைப் பகிர்ந்து கொள்வதென்பது சாத்தியமே இல்லை.
தேவதேவனின் கவிதைகள் எனக்குக் கனவுகளைத் தொடர்ந்து அளித்தபடியே இருக்கின்றன. அவரைப் பலமுறைச் சந்தித்திருக்கிறேன். சிலமுறை அவரோடு பேசியும் இருக்கிறேன். ஏனோ, அவரின் கவிதைகள் தரும் நெருக்கத்தை அவரோடு என்னால் உணர முடிந்ததே இல்லை. ’கவிதைகள் வழி நான் பார்க்கும் தேவதேவன்’ அவரன்று என்றும் என்னால் சொல்ல முடியும். என் கனவு தேவதேவனை அவரால் நிரப்பிவிட முடியாது என்றும் அறிவேன் நான். “சூழலை எதிர்கொள்ளும் மெளனமே அடிமரம் / ஒளியை நாடும் விழைவே கிளைகள்”, “விருப்பமோ தீர்மானமோ இன்றி இலையில் தங்கியிருந்த நீர்”, “மரத்தடியில் நிற்கையில்தான் நீ அழகாய் இருக்கிறாய்”, “வானமெங்கும் பறவைகள் ஆனந்தமாய் பரவ / மெய்சிலிர்த்து நின்றது அந்த மரம்”, “தனிமரம் ஏழையன்று / அது தனக்குள் வைத்திருக்கிறது ஒரு சோலைவனக்காட்டை” என்பன போன்ற அவரின் வரிகளில் எனக்கான கனவுகள் நிரம்பி இருந்தன; இன்னும் நிரம்பி இருக்கின்றன. என் ரசிப்பில் சலிப்பு சாத்தியமே இல்லையோ எனும்படி நான் கண்டாக வேண்டிய கனவுகள் ஆயிரமாயிரம் இருக்கின்றன. அவற்றுக்காகவே நான் வாழ்கிறேன். நான் தளர்ந்துபோனதாய் புறவாழ்வு எள்ளி நகையாடும்போது உள்ளுக்குள் கிளைக்கும் புதுக்கனவொன்று என்னை உற்சாகமடையச் செய்கிறது. ஒரு கனவு நம்மை வந்தடைய நாம் எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளத் தேவையில்லை; நம் முயற்சிகளைக் கொஞ்சம் கைவிட்டு வெறுமனே இருந்தால் போதுமானது. நதியின் போக்கில் மிதந்தபடியே செல்லும் இலைக்கு வானமும் அதனுடன் நகரும் அற்புதக் கனவு சாத்தியப்படுகிறது. நதியின் போக்கை ஆராயத்துவங்கும் இலைக்கோ கரைகள் கூட கண்ணுக்குத் தெரிவதில்லை.
இலக்கியத்தளம் எனக்களித்த கனவுகளின் எண்ணிக்கை மிகக்குறைவே. சமயத்தளத்தில்தான் இன்னும் அதிக எண்ணிக்கையிலான கனவுகளால் நான் நிரம்புகிறேன். குடைவரைகள், கற்றழிகள், கோவில்கள், கோபுரங்கள், மண்டபங்கள், சிலைகள், ஓவியங்கள், இசைப்பாடல்கள், நடனங்கள் என என் கனவுகளுக்குத் தூண்டுதலாக அமைய ஆயிரம் காரணிகள். ஒரு கோவிலில் வெறுமனே நின்றிருக்கும் சிலையைக் குறித்த தருக்கம் அதைக் கல்லென்பதாகவே இறுதியில் முன்வைக்கும். அச்சிலையைக் கனவாகக் காணும் ஒருவனுக்கே அதன் தொன்மம் விளங்கும். புரண்டு படுக்கும் சிலையொன்று உங்கள் கனவுகளைத் தூண்டியதால்தான் விஷ்ணுபுரமே சாத்தியமாகி இருக்கிறது. நீங்கள் கண்ட சிலையை கோடிக்கணக்கானோர் கண்டிருக்கலாம். அப்படிக் கண்டவர்களில் பலருக்கு அது ஏதாவது கனவைத் தூண்டி இருக்கலாம். அத்தூண்டுதலை அவர்கள் பொருட்படுத்தாது நகர்ந்திருக்கக் கூடும். உங்களால் அப்படி நகர்ந்துவிட முடியவில்லை. அதனால்தானே விஷ்ணுபுரம் எனும் மாபெருங்கனவு வடிவங்கொண்டிருக்கிறது. மேலும், அக்கனவுக்குள் ஓரளவு வரலாற்றையும் உங்களால் விரிக்க முடிந்திருக்கிறது.
கனவு என்றவுடன் அதை முற்றிலும் கற்பனை என்பதாக விளங்கிக்கொள்ளும் அறிவாளிகள் நிறைந்த நாடு நம்முடையது. நாம் பேசிக்கொண்டிருக்கும் கனவுகள் கற்பனைக்குள் அடங்காதவை. புறவாழ்வின் இயலாமைகளை எதிர்கொள்ளப் பயன்படுபவை கற்பனைகள். பொதுமைப்படுத்தப்பட்டிருப்பதால் அவை தட்டையானவை. குறிப்பிட்ட காலத்திற்கு மேல் பயனற்றவை. கனவுகளோ ஒரு தனிமனிதனின் அகவாழ்வு சார்ந்தவை. வாழ்வைச் சலிப்பாகக் கருதத்துவங்கும் அறிவை அவையே கேள்வி கேட்கின்றன. அக்கேள்வியின் முன் தருக்கங்கள் பயனற்றுப்போய் விடுகின்றன. வானத்தில் பறக்கும் ஒரு பறவை அடுத்த கணம் வானத்தால் தனக்கு ஆபத்து வருமோ என அஞ்சுவது கற்பனை. அதே பறவை தன் உடலில் வானம் மிதந்து செல்வதாக உணர்வதே கனவு. கற்பனைகள் சிறுசிக்கலையும் பெரிதுபடுத்தி விடுபவை; கனவுகளோ பெருங்சிக்கல்களையும் ஒன்றுமில்லாமல் செய்துவிடுபவை. “அஞ்சுவது யாதொன்றுமில்லை, இனி அஞ்ச வருவதுமில்லை” எனும் திருநாவுக்கரசரின் வரி எனக்குள் தூண்டும் கனவில் பேரண்டம் என்முன் மண்டியிட்டு உட்கார்ந்திருக்கிறது.
முருகவேலன்,
படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,
கோபிசெட்டிபாளையம்.