பகுதி 12 : நச்சுமலர்கள் – 4
ஹஸ்தவனம் என்றபெயர் அதற்கு ஏன் வந்திருக்கும் என்று பார்த்ததுமே தெரிந்தது. சுதுத்ரியின் கிளைச்சிற்றாறுகளால் அந்தக்காடு பகுக்கப்பட்டு ஐந்து பசும்விரல்களென நீண்டிருந்தது. உயரமான மருதமரங்கள் நீரெல்லையில் கற்கோட்டை என எழுந்து குறுங்கிளைகள் விரித்து நின்றன. அப்பால் பச்சைக்குவைகளாக இலுப்பையும் அத்தியும் வேங்கையும் கடம்பும் செறிந்த காடு காற்றில் குலுங்கியது. அதனுள்ளிருந்து பறவையொலியும் நீரொலியும் கலந்த முழக்கம் எழுந்துகொண்டிருந்தது.
சுதுத்ரியின் கரையில் அமைந்த பெரிய படகுத்துறையில் இருந்து பரிசலில் ஏறிக்கொண்டு நீரோட்டத்திற்கு எதிராக துழாவிச்சென்று பின் பாய்ந்துவரும் சிற்றாறின் வெண்பெருக்கில் மரங்களில் கட்டப்பட்ட கயிற்றைப்பற்றி இழுத்தபடி பரிசலை சுழற்றி சுழற்றி பாறைகளினூடாக மெல்லமெல்ல உள்ளே செல்வதே காட்டுக்குள் செல்வதற்கான வழி. சிற்றாற்றில் வந்துசேரும் ஓடைகள் பாறைகளை ஓசையுடன் அறைந்து வெண்நுரையெழுந்து பளிங்கு என வளைந்து குமிழிகளும் நுரைவலைப்பிசிறுகளும் சருகுகளும் மிதந்து சுழித்து எதிரே வர பரிசலில் சுழன்று மேலேறும்போது ஏறுகிறோமா விழுகிறோமா என ஒரு கணம் விழிமயக்கு ஏற்பட்டது.
நீர்பெருகிய மலையோடை வழியாகச் சென்று பரிசலில் இருந்து இறங்கியபோது சாத்யகி தலைசுழன்று பேருருவ நாரையின் கால்கள் என வேர் விரித்து நீருள் இறங்கி நின்ற மருதமரத்தை பற்றிக்கொண்டு நின்றுவிட்டான். சூழ்ந்த காடு சுழல்வதுபோலவும் மண் நீரலைகளாக மாறிவிட்டதுபோலவும் தோன்றியது. கிருஷ்ணன் இடையில் கைவைத்து நின்று “இங்கிருந்தால் சிந்தையில் ஏதும் நிலைக்காது. செவிநிறைக்கும் இந்தப் பேரோசை அமைக்கும் தாளத்தில் சொற்கள் மீள மீள ஒழுகிக்கொண்டிருக்கும்” என்றான். சாத்யகி விழிகள் பஞ்சடைய நிமிர்ந்து காட்டை நோக்கியபின் குமட்டி ஓங்கரித்தான்.
காட்டுக்குள் இருந்து பீஷ்மரின் இளம் மாணவனாகிய ஓஜஸ் இலைகளை ஊடுருவி வந்து தலைவணங்கினான். ”பீஷ்மபிதாமகரின் சார்பில் தங்களை வரவேற்கிறேன் யாதவரே” என முகமன் சொன்னான். “வங்கத்து இளவரசனை வாழ்த்துகிறேன். நலம் சூழ்க!” என்று மறுமொழி சொன்ன கிருஷ்ணன் “பிதாமகர் என்ன செய்கிறார்?” என்றான். “பிதாமகர் பேசாநெறியில் ஒழுகுகிறார். தங்கள் வரவை சொன்னேன். தலையசைத்தார்” என்றான் ஓஜஸ். கிருஷ்ணன் “செல்வோம்” என்று சாத்யகியை நோக்கி சொல்லிவிட்டு காட்டுக்குள் நடந்தான்.
சிற்றோடை உருவாக்கிய இடைவெளி மட்டுமே அக்காட்டுக்குள் செல்லும் வழியாக இருந்தது. நீரில் நனைந்து நின்ற பாறைகள்மேல் தாவித்தாவி சென்றனர். சில இடங்களில் நீரைக்கடந்து செல்ல கொடிகள் கட்டப்பட்டிருந்தன. பசும்புதருக்குள் ஒட்டுக்கொடிகள் படர்ந்தேற படுத்திருக்கும் யானைபோல் தெரிந்த பாறைக்குமேல் பீஷ்மரின் சிறிய குடில் அமைந்திருந்தது. மூங்கில்தட்டிகளால் கட்டப்பட்டு களிமண் பூசப்பட்ட சுவர்களும் ஈச்சஇலைமுடைந்து வேய்ந்த கூரையும் கொண்டது. அதன்மேல் காவிக்கொடி பறந்துகொண்டிருந்தது.
கொடிஏணி வழியாக அவர்களை மேலே கொண்டுசெல்கையில் ஓஜஸ் “பிதாமகர் பெரும்பாலும் காட்டுக்குள்தான் இருப்பது வழக்கம். இன்று உங்களுக்காக காத்திருக்கிறார்” என்றான். பாறையை சுற்றியிருந்த மரங்களின் இலைகள் அதன்மேல் நீரலைகள் என வந்து மோதி அசைந்துகொண்டிருந்தன. காற்று மேலே அலையடித்துக்கொண்டிருக்க குடில் வானில் பறந்துகொண்டிருப்பதுபோல தோன்றியது.
குடிலின் முன்னால் மூங்கில்பரப்பி செய்யப்பட்ட திண்ணையில் பீஷ்மர் கைகளை இருபக்கமும் போட்டு கால் நீட்டி அமர்ந்திருப்பதை சாத்யகி கண்டான். மூன்று முதல்தெய்வங்களில் ஒருவரை நேரில் காண்பதுபோன்ற உளஎழுச்சி அவனுக்கு ஏற்பட்டது. இளமையில் மீளமீள கேட்டு மயங்கிய கதைகளில் வாழும் மீமானுடன். விழிகள் அவரைப்பார்ப்பதை உள்ளம் ஏற்காதது போன்ற தத்தளிப்புடன் அவன் கால்தடுமாறினான்.
பீஷ்மர் மிக மெலிந்திருந்தமையால் அவரது உயரமான உடல் மேலும் நீண்டு தெரிந்தது. கால்களும் கைகளும் உடலில் இருந்து ஒழுகி ஓடியவை என தோன்றின. வெண்தாடி நீண்டு மார்பில் விழுந்திருக்க நரைத்த குழல்கற்றைகள் தோளில் ஒழுகி முதுகில் இழைந்தன. அவர்களின் காலடியோசை கேட்டும் அவர் திரும்பிப்பார்க்கவில்லை. பேசாநோன்பினால் நெஞ்சுள் அலைவது மிகுதியாகி அவ்வொழுக்கிலிருந்து விலகி மீள்வது அவருக்கு கடினமாகிவிட்டிருக்கிறது என்று சாத்யகி உய்த்துக்கொண்டான்.
ஓசையற்ற காலடிகள் வைத்து அவர் அருகே சென்று நின்ற கிருஷ்ணன் குனிந்து நிலம்தொட்டு வணங்கி “பிதாமகர்முன் எட்டுறுப்புகளும் ஐம்புலன்களும் சித்தமும் ஆன்மாவும் பணிய வணங்குகிறேன்” என்றான். அவருடைய தோளில் தொடங்கி மலையோடை என இறங்கி கைகளை அடைந்து கிளைகளாகப்பிரிந்த நீல நரம்பு அசைந்தது. வெண்ணிறக் கல்போல நரைத்திருந்த விழிகள் அவனை வியந்தவை என, பொருள்கொள்ளாத ஒன்றென நோக்கின. கரித்துண்டு பற்றிக்கொள்வதுபோல மெல்ல நுனிகனன்று பின் எரிந்து அவரது விழிகள் நோக்குகொண்டன. மூச்சின் ஒலியுடன் அசைந்து அமர்ந்து வலக்கையை நீட்டி அவன் தலையைத் தொட்டு வாழ்த்தினார்.
அவரை வணங்கும்போது சாத்யகி உடலெங்கும் மெல்லிய நடுக்கமாகப் பரவிய அகஎழுச்சியை உணர்ந்தான். அவரது கை அவன் தலையைத் தொட்டபோது விழிநீர் துளிர்த்து கைவிரல்கள் குளிர்ந்தன. கிருஷ்ணன் அவர் காலடியில் மூங்கிலில் அமர்ந்தான். சாத்யகி பின்னால் தூண்சாய்ந்து நின்றான். கிருஷ்ணன் பணிந்த குரலில் “அஸ்தினபுரியின் செய்திகளை அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்” என்றான். அவர் இல்லை என விழியசைத்தார். “பாண்டவர்கள் பாஞ்சாலன் மகளை மணம்கொண்டு அங்கேயே தங்கியிருக்கிறார்கள். நிலமின்மை மெல்லமெல்ல குலமின்மையென பொருள்கொள்ளத்தொடங்குவதைக் கண்டு என்னை திருதராஷ்டிர மாமன்னரிடம் தூதென அனுப்பினர்” என கிருஷ்ணன் சொல்லத்தொடங்கினான்.
”பிரிந்து பிரிந்து பரவும் உள்விழைவு நிலத்திற்குள் குடிகொள்கிறதா என ஐயம்கொண்டிருக்கிறேன் பிதாமகரே. முழுமைகொண்டு திரண்டிருக்கும் நிலம் ஒவ்வொருநாளும் தன்னை பகுத்துக்கொள்கிறது. எழுந்து நின்று வரலாற்றை நோக்கினால் ஏரியின் அடிச்சேற்றுப்பரப்பு உலர்ந்து வெடிப்பதைப்போல நிலம் பிரிந்துகொண்டே செல்வதையே காணமுடிகிறது. மானுடர் அதன் கருவிகள் மட்டுமே. அஸ்தினபுரி மட்டுமல்ல பாரதவர்ஷமே பிரிந்துசிதறுவதை எவராலும் தடுக்கமுடியாது. ஏனென்றால் புவியின் இயக்கத்திலேயே அதற்கான தேவை ஒன்று உள்ளது. பிரிவதனூடாகவே அது மேலும் திறம்படச்செயல்படமுடியுமென அது அறிந்திருக்கிறது.”
“பாரதவர்ஷம் பிரிவுபடும் பிதாமகரே. ஆனால் அப்பிரிவுகளுக்குள் ஓர் உயிரிணைவு இருக்குமென்றால் அப்படி பிரிந்திருப்பதே அதன் ஆற்றலாக அமையமுடியும். வேட்டையாடும் சிறுத்தையின் உடற்கட்டங்கள் போல இங்குள்ள நாடுகள் இணைந்து இயங்க முடியும். ஒருநாள் இப்புவியே அப்படி வெளிப்பிரிந்தும் உள்ளிணைந்தும் செயல்படமுடியும்” கிருஷ்ணன் சொன்னான். “நானியற்றும் பணி என்பது அதுவே. இப்பேரியக்கத்தின் விசைக்கு எதிராக ஏதும் செய்யலாகாது என எண்ணுகிறேன். இந்நாடுகள் என்பவை இந்த மதகளிறின் மேல் படிந்த மண்தீற்றல் மட்டுமே. மானுடம் அதன்மேல் வாழும் சிற்றுயிர்கள். அதை நாம் செலுத்தமுடியாது. அதனுடன் இணைந்து வாழமுடியும்.”
அவன் சொல்லி முடிப்பதுவரை பீஷ்மர் விழிகள் பாதிமூடியிருக்க கேட்டுக்கொண்டு அசையாமல் இருந்தார். பின்பு நிமிர்ந்து இடக்கையால் தாடியை நீவியபடி வலக்கையை தூக்கி வாழ்த்து சொன்னார். எழப்போகிறவர் என அவர் அசைய கிருஷ்ணன் “அஸ்தினபுரியை இரண்டாக ஆக்கியமை எனக்கும் துயரமளிக்கிறது பிதாமகரே. யயாதியால் உருவாக்கப்பட்டு ஹஸ்தியாலும் குருவாலும் வளர்க்கப்பட்ட தொல்குடி அதன் பிதாமகராகிய தங்கள் விழிநோக்கவே பிளவுபட நான் நிமித்தமாக ஆகிவிட்டேன். ஆனால் வேறுவழியில்லை. இதன்வழியாக குடியொருமை காக்கப்படுமென்றே நினைக்கிறேன்” என்றான்.
அச்சொற்களுக்கு எப்பொருளும் இல்லை என சாத்யகி எண்ணினான். மிகத்தேர்ந்த பொதுவான சொற்களால் அனைத்தையும் அவன் ஏற்கெனவே சொல்லிவிட்டிருந்தான். அவர் தன் வாழ்த்தை தெரிவித்தும் விட்டார். விடைபெற்று மீள்வதொன்றே செய்யக்கூடுவது. கிருஷ்ணன் இலக்காக்குவதென்ன என்று அவனுக்குத் தெரியவில்லை. ”ஆனால், அணையாநெருப்பென விடாய் நிறைந்த உள்ளத்துடன் சகுனி அங்கிருக்கிறார். உடன்பிறந்தார் தங்களுக்குள் ஒருமைகொண்டமைய அவர் ஒருபோதும் ஒப்பமாட்டார். மறுபக்கம் அத்தையின் விழைவும் நிறைவடையப்போவதில்லை. அனைத்துக்கும் மேலாக துருபதன் மகள். அவள் கொல்வேல் கொற்றவை என குருதிவிதைத்துச்செல்பவள்.”
பீஷ்மரின் விழிகளில் எந்த மாறுதலும் தெரியவில்லை. சொல்லி முடி என்ற சொல்லே அவற்றில் துளித்திருந்தது. “இறுதியாக என்னை அமைதியிழக்கச்செய்தது நான் திருதராஷ்டிர மாமன்னரிடம் கண்ட மாற்றம். பிதாமகரே, பால் மோரென மாறத்தொடங்கும் முதற்கணம் எது என்று அஸ்வினிதேவர்கள் மட்டுமே அறிவர் என்று யாதவர் சொல்வதுண்டு. முதல் மணம் எழுவதை இல்லத்தரசி அறிவாள். நான் அந்த முதல்மணத்தை அறிந்துவிட்டேன். உண்மையில் அவரும் இன்னும் அதை அறியவில்லை. ஆனால் நதி திசைமாறிவிட்டது. பெருகப்பெருக விலகிச்செல்லும் விசை அது.”
பீஷ்மரின் விழிகளில் எதுவும் தெரியவில்லை என சாத்யகி கண்டான். அச்சொற்களை அவர் கேட்கிறாரா என்றே ஐயமாக இருந்தது. “நேற்றுமுன்தினம் நான் குருகுலம் சென்று கிருபரையும் துரோணரையும் பார்த்தேன். திருதராஷ்டிரமாமன்னரிடம் உருவாகும் அகமாற்றத்தை இருபக்கமும் கரைகளென நின்று அவர்கள் கட்டுப்படுத்தவேண்டுமென்று சொல்லவே நான் சென்றேன். துரோணர் மும்முறை பழுத்த திருதராஷ்டிரர் என மாறியிருந்தார் பிதாமகரே” என்றான் கிருஷ்ணன். “அவர் என்னிடம் அஸ்வத்தாமனைப்பற்றி மட்டுமே பேச விரும்பினார். நான் அவரை மீளமீள அஸ்தினபுரியைப்பற்றிய பேச்சுக்கு இழுத்தேன். அவர் நீர்தேடும் விடாய்கொண்ட கன்று என என்னை தன் முழுவிசையாலும் இழுத்துச்சென்றார். சலித்துப்போய் மீண்டேன்.”
”காம்பில்யத்தை தாக்கி தோற்று மீண்ட அஸ்வத்தாமன் இரவுபகலாக குடித்துக்கொண்டிருக்கிறார். தன்னினைவு என்பதே அரிதாகிவிட்டது. அவரது உடல் பழுத்துவிட்டது. உள்ளம் இருளில் புதைந்துவிட்டது” என கிருஷ்ணன் தொடர்ந்தான். ”ஆனால் துரோணர் காம்பில்யத்தை அஸ்வத்தாமன் பெரும்பாலும் வென்றுவிட்டதாகவும் கர்ணனும் துரியோதனனும் செய்த பிழையால் அவர் பின்வாங்கநேரிட்டதாகவும் என்னிடம் நிறுவ முயன்றார். அனைத்து அரசப்பொறுப்புகளிலும் இருந்து விலகி தன் மைந்தன் கடுந்தவம் செய்வதாகவும் விரைவிலேயே காம்பில்யத்தை தன்னந்தனியாகத் தாக்கி வெல்லவிருப்பதாகவும் சொன்னார்.”
“படைக்கருவிகளில் களிம்புபடியும் விதத்தை நெடுநாட்களாக கூர்ந்துநோக்கிவருகிறேன் பிதாமகரே” என்றான் கிருஷ்ணன். “அவற்றின் ஆணிப்பொருத்தில்தான் முதலில் களிம்பு செறிகின்றது. அவ்வாறு முதலில் அவற்றை அசைவில்லாமலாக்குகிறது. அசைவின்மை களிம்பின் பரவலை மேலும் விரைவுகொள்ளச்செய்கிறது. மானுட உள்ளங்களில் பாசம் படிவதும் அவ்வண்ணமே.” பீஷ்மர் மிகமிக விலகிச்சென்றுவிட்டார் என அவரது விழிகளைக்கண்டு சாத்யகி அறிந்தான். ஆயினும் ஏன் கிருஷ்ணன் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறான் என்று அவன் உள்ளம் வியந்தது.
“கிருபர் போர்க்கருவிகளை அன்றி எதையும் அறியாதவராக மாறிவிட்டிருக்கிறார். மானுட உள்ளம் எந்தக் கொலைக்கருவியிலும் முழுமையாக ஒன்றலாகாது பிதாமகரே. ஏனென்றால் அவற்றை முதன்முதலில் அறியாப்பெருவெளியிலிருந்து கண்டடைந்து திரட்டி எடுத்தவன் உச்சகட்ட கொலைமனநிலையில் இருந்திருப்பான். பின்னர் அந்தக் கருவியை மேம்படுத்திய ஒவ்வொருவரும் அது செய்யவேண்டிய கொலையைக் குறித்தே அகம்குவித்திருப்பார்கள். அதை கையிலெடுக்கையில் அந்தக் கொலைவிழைவின் உச்சத்தை நாமும் சென்றடைகிறோம். அது அந்த அகநிலையின் பருவடிவம். விழிதொட்டு கைதொட்டு அதைமட்டுமே அது தொடர்புறுத்துகிறது.”
“படைக்கலம் பயில்பவன் அக்கருவியைக்கொண்டே தன் உணவை வெல்லவேண்டும். மண்ணைக்கிளறவேண்டும். விளையாடவேண்டும். தன் உடலை சொறிந்துகொள்ளவும் அவன் அதையே கையாளவேண்டும். அப்போதுதான் அது கொலையெனும் பொருளை இழக்கிறது. தன் கருவியை இழிவுபடுத்தாதவன் அதை வெல்லமுடியாது” என்றான் கிருஷ்ணன். “கருவியை அடிமையாக்கியவனே திறல்வீரன். படைக்கலப்பயிற்சியாளராகிய கிருபர் கருவிகளை வழிபட்டார். அவை தெய்வங்களெனப்பெருகி அவரை அள்ளி தம் இடையில் வைத்திருக்கின்றன.”
“இன்று பாரதவர்ஷத்தில் கொலைக்கென காத்திருப்பவர் அவரே. எவர் இறந்தாலும் அவருக்கு அது பொருட்டல்ல. நான் உடன்பிறந்தாரிடையே போர் தவிர்க்கப்படவேண்டுமென பேசிக்கொண்டிருந்தபோது இயல்பாக அவர் போர் நிகழ்ந்து முடிவு எட்டப்படுவதே சிறந்தது என்றார். மேற்கொண்டு சொல் இன்றி நான் வணங்கி எழுந்துகொண்டேன்” என்று கிருஷ்ணன் சொன்னான். சாத்யகி அவன் சம்படையிடம் ஒருதலையாக பேசிக்கொண்டிருந்ததை நினைவுகூர்ந்தான்.
கிருஷ்ணன் “தங்களை நான் சந்திக்கவந்தது அஸ்தினபுரியில் குருதிசிந்தப்படாமல் காக்கும் வல்லமை தங்களுக்குண்டு என்பதனாலேயே” என்றான். “அது பிதாமகர் என்னும் முறையில் தங்கள் கடமை. இன்றுவரை அஸ்தினபுரியை இணைக்கும் மையமாக தாங்களே இருந்துள்ளீர்கள். தாங்கள் அமைதிகொள்ளும்போது அந்நகர் கொந்தளிக்கத் தொடங்கிவிடுகிறது. தாங்கள் நாடுதிரும்பும் தருணம் இது என்று உணர்கிறேன். அதைச்சொல்லவும்தான் நான் வந்தேன்.”
பீஷ்மர் அவனை சிலகணங்கள் பொருளில்லா வெறிப்புடன் நோக்கியபின் திரும்பி வானை சுட்டிக்காட்டினார். ஒளிதேங்கிய வெளியில் ஒரு சிறிய பறவை சுழன்று சுழன்று விளையாடிக்கொண்டிருந்தது. “ஆம், நானறிவேன், தாங்கள் மெல்ல ஓடுக்குள் சுருங்கி வருகிறீர்கள். உதிரவிழைகிறீர்கள். ஆனால் எந்தக் கனியும் உதிரும் கணத்தை தான் முடிவுசெய்வதில்லை” என்றான் கிருஷ்ணன். ”பற்று என எஞ்சுவது செயல்களின் விளைவுகளே. அதை தாங்களும் அறிவீர்கள்.”
பீஷ்மர் கைகூப்பிவிட்டு எழுந்து திரும்பிச் செல்லப்போனார். கிருஷ்ணன் அவருடன் எழுந்து கூடவே ஒரு அடிவைத்து “இவர்கள் எவரும் திரௌபதியை வெல்லமுடியாது பிதாமகரே. தருமனின் அறநூலும் பீமனின் கதையும் பார்த்தனின் வில்லும் நகுலனின் சம்மட்டியும் சகதேவனின் வாளும் ஏந்தி அடைக்கலமும் அருளுமென கைகள் காட்டி அமர்ந்திருக்கும் பன்னிருபுயத் தெய்வம் அவள் என்கின்றனர் சூதர். அஸ்தினபுரியின் மண் அவளுடைய தட்டகம்” என்றான்.
சொல்லிகொண்டே பீஷ்மரின் பின்னால் கிருஷ்ணன் சென்றான். “மண்ணிலிறங்கும் விண்விசைகள் பெண்ணுருக்கொள்வதையே விரும்புகின்றன. அஸ்தினபுரியின் கங்கைக்கரை நுழைவாயிலில் அம்பையன்னை கொடுவிழிகளும் கொலைவேலுமாக காத்திருக்கிறாள் என்கின்றனர் சூதர். இவள் அனலுருக்கொண்ட அம்பையின் ஆழிவடிவம் என்று இப்போதே பாடத்தொடங்கிவிட்டனர்.” சாத்யகி அறியாமல் தூண்மூங்கிலை பற்றிக்கொண்டான். பிதாமகரின் முதுகில் தோள்களில் கால்களில் எங்கும் எந்த அசைவும் தெரியவில்லை. ஆனால் கிருஷ்ணன் விரும்பியது நிகழ்ந்துவிட்டதென்று புரிந்தது.
“ஐவரும் மணம்கொள்ளவேண்டும். தார்த்தராஷ்டிரர்களுக்கும் துணைவியர் தேவை. தங்கள் கைதொட்டு மங்கலநாண் எடுத்தளித்தால் அவர்கள் நிறைவாழ்வுகொள்ள முடியும். அவர்களுக்குரிய மகளிரையும் தாங்களே கண்டடைந்து ஆணையிடவேண்டும் என்று திருதராஷ்டிரரும் அத்தையும் விரும்பினர். அச்செய்தியை சொல்லவே வந்தேன். சொல்லடக்கி சிந்தை வென்று விடுதலைகொள்ள தாங்கள் விழைவதைக் கண்டபின் அதை அழுத்த நான் விரும்பவில்லை. என் கடன் சொல்வது. அது ஆனது” என்று கிருஷ்ணன் தலைவணங்கினான். “அருள் விழைகிறேன் பிதாமகரே” என்றபின் பணிந்தபடி திரும்பி விலகிச்சென்றான்.
சாத்யகி பீஷ்மரை ஒருகணம் நோக்கி தத்தளித்தபின் கிருஷ்ணன் பின்னால் சென்றான். கொடிஏணியில் இறங்கியபோது மூங்கில்குடில் வலிகொண்டதுபோல முனகியது. இலைதழைத்த காட்டுக்குள் கிருஷ்ணன் மூழ்கி மறைந்தான். அவனைத்தொடர்ந்து சாத்யகியும் இறங்கிக்கொண்டான். பசுமையில் புதைந்ததும் அகம் விடுதலையை அறிந்தது. கைகால்களை அதுவரை எடையுடன் அழுத்திப்பற்றியிருந்த காற்று விலகிச்சென்றதைப்போல. பெருமூச்சுடன் அவன் ஓடையினுள் எழுந்த பாறைமுகடுகளில் தாவித்தாவிச் சென்றுகொண்டிருந்த கிருஷ்ணனைத் தொடர்ந்து சென்றான்.
பச்சை இலைகளால் ஆன குகைபோலிருந்தது அப்பாதை. இருபக்கமும் தளிர்களும் மகரந்தம் செறிந்த மலர்களும் பல்லாயிரம் நாநுனிகளால் அவன் தோளையும் இடையையும் கால்களையும் தொட்டுத்தொட்டு அசைந்தன. காட்டுக்குள் இருந்து பெருகிய காற்று அந்த இடைவெளியில் திகைத்து சற்றே சுழிந்து மீண்டும் காட்டுக்குள் சென்றது. பாறைகளில் மோதிச்சிதறிய நீரின் துளிகளை அள்ளி இலைகள் மேல் வீழ்த்தி அவை ததும்பிச்சொட்டச்செய்தது. பாறைகள் அனைத்தும் பசும்பாசிப்பரப்பு கொண்டிருந்தன. அவற்றின் மென்மயிர்ப்பரப்பில் துளித்த நீர்ச்சிதர்களால் புல்லரித்திருந்தன.
எங்குசெல்கிறான் என சாத்யகி வியந்துகொண்டான். அவன் வந்த பணியனைத்தும் நிறைவடைந்துவிட்டன. இனி துவாரகைக்கு மீளலாம். அல்லது தருமனுக்கு முடிசூட்டி அழைத்துச்செல்வது அவன் இலக்காக இருக்கலாம். ஒவ்வொன்றிலும் வெற்றியை மட்டுமே அடைபவனின் உள்ளம் எத்தகையதாக இருக்கும்? அவன் வெற்றிகளில் மகிழவில்லை. அடைந்த மறுகணமே விலகிவிடுகிறான். இப்போது அஸ்தினபுரியோ பாண்டவகௌரவர்களோ மட்டுமல்ல பீஷ்மரேகூட அவன் சிந்தையில் எஞ்சியிருக்க வழியில்லை. அங்கே என்னதான் இருக்கும்? ஒன்றுமே இருக்காது என்ற எண்ணத்தை சாத்யகி அடைந்தான். ஒரு எண்ணத்துளிகூட இல்லாமல் வெட்டவெளி நிறைந்திருக்கும். இன்மையின் நீலநிறம். எதையும் தொடாத ஒளி நீலநிறம் கொண்டுவிடும்போலும்.
ஓடை கரியஅடுக்குக் கலம்போல அமைந்த பாறைகளின் நடுவே சிற்றருவியாக நுரைபெருகி சிதர்பரப்பி விழுந்து முயல்செவிகள் போல இலைகுவித்து நின்ற நீர்ப்புதர்களுக்குள் மறைந்து மிகவிலகி வேறு பாறையிடுக்குகளின் நடுவே இருந்து பலகிளைகளாக எழுந்து மீண்டும் இணைந்து வளைந்தது. அவ்வளைவு ஒரு சுனையென தேங்கிச் சுழிக்க அதில் சருகுகளும் நீர்நுரைப்பிசிறுகளும் வட்டமிட்டன. அவற்றுக்குமேல் சிறிய பூச்சிகள் நீர்த்திவலைகள் போல மெல்லிய ஒளிவிட்டபடி சுழன்றன. கிருஷ்ணன் அதனருகே சென்றதும் இடையில் கைவைத்து சற்றுநேரம் நோக்கியபடி நின்றான். பின்னர் ஒரு பாறையில் மலரமைவென கால்கோட்டி அமர்ந்தான்.
சாத்யகி சற்று விலகி வேங்கைமரத்தின் வேர்களில் அமர்ந்தான். கிருஷ்ணன் கைகளை மடியில் வைத்து தலைநிமிர்ந்து முதுகு நேர்நிற்க அமர்ந்தான். விழிமூடி ஊழ்கத்தில் மூழ்கவிருக்கிறான் என சாத்யகி எண்ணினான். ஆனால் அவன் விழிகள் மலர்ந்திருந்தன. தன்முன் பறந்த சிற்றுயிர்களை நோக்கிக்கொண்டிருந்தான். அவற்றின் சுழற்சிக்கேற்ப அவன் விழிகள் அசைந்தன. காற்றில் தவழ்ந்திறங்கிய இலை ஒன்று மெல்ல வந்து நீர்ச்சுழியில் அமைந்தபோது அவன் அதை நோக்கி அது அலைக்கழிந்து துணிபிழியப்படுவதுபோல சுழன்று மறைந்த ஓடைப்பெருக்கில் சிக்கி விரைவுகொண்டு விழிமறைவது வரை நோக்கினான். விழி தூக்கி சிறகொளிர சென்ற தட்டாரப்பூச்சி ஒன்றை நோக்கத் தொடங்கினான்.
என்னதான் பார்க்கிறான் என எண்ணியபடி சாத்யகி நோக்கியிருந்தான். ஒவ்வொன்றிலும் அவன் காணும் அந்த விந்தைதான் என்ன? அவன் முன் கலைநடமாக, புதிராடலாக விரிந்து தன்னைக் காட்டுவதுதான் எது? இது அடர்காடு. தூய உயிரின் செறிவு. ஆனால் காமகுரோதமோகம் அலையடிக்கும் துவாரகையிலும் அதுவே அவன் முன் வந்து நிற்கிறது. அவன் விழிகளிலிருப்பது காமம். ஒவ்வொருகணமும் பொங்கிப்பொங்கி புணர்ந்துகொண்டிருக்கும் பொன்றாப் பெருவிழைவு. எரிந்து எரிந்து தீராத கந்தகமலை. தன் வாலைதானுண்டு முடியாத காலப்பாம்பு.
என்ன எண்ணிக்கொண்டிருக்கிறேன்? எத்தனை நேரம் ஆகியிருக்கும்? இந்தக் காட்டிலைக்குகைக்குள் காலமில்லை. பகலிரவுகளின் சுழற்சி காலமற்ற வெளியில் மடிந்து மடிந்து சென்றுகொண்டிருக்கிறது. இங்கிருக்கையில் இறப்பில்லை. முதுமையில்லை. ஆனால் இப்படியே இங்கேயே இருக்கவேண்டும். ஏதுமின்றி. எச்சமின்றி. வாழ்வும் முதுமையும் இறப்பும் ஒன்றே. அவை அறிதல் என்பதன் மூன்று முகங்கள். அறிய ஏதுமில்லாத அமைதலில் அவை இல்லை. இங்கிருக்கும்வரை நான் காலத்தை அறிவதில்லை. காலம் என்னையும் அறிவதில்லை. ஆனால் இவ்வெண்ணங்கள் காலமல்லவா? இவற்றின் ஒன்றுமேல் ஒன்றென ஆகும் அடுக்கில் திகழ்வது காலமல்லவா? என் காலைச்சுற்றி பற்றி சுருண்டேறி சித்தத்தில் படர்ந்து கொடிவிரிப்பது காலம்தானே?
ஆணிப்பொருத்துகளில்தான் காலம் வந்து படிகிறது. வாழ்வும் முதுமையும் இறப்புமான காலம். மலைப்பாம்பு போல கவ்விச்சுழற்றி இறுக்கி நொறுக்கி அசைவிழக்கச்செய்து பின் மெல்ல வாய்திறக்கிறது. விழுங்கி நீண்டு தானும் அசைவற்று ஊழ்கத்திலாழ்கிறது. ஊழ்கத்தில் அமைந்திருக்கும் மலைப்பாம்பு விழிமூடுவதில்லை. அதன் விழிமணிகளில் ஓடிக்கொண்டிருக்கும் காட்சித்துளிகளுக்கு அப்பால் அதன் அகம் எதை நோக்கிக்கொண்டிருக்கிறது? உண்ணப்பட்டவை உள்ளே உழல்கின்றன. நெளிந்து உடைந்து மெல்ல தங்களை கரைத்துக்கொண்டிருக்கின்றன. மலைப்பாம்பின் அமைதி. பல்லாயிரம் வேர்களால் மண்ணை உறிஞ்சி உண்ணும் பெருங்காட்டின் குளிர்பரவியது அதன் உடல். மலைப்பாம்பு ஒரு காடு. காடு ஒரு மலைப்பாம்பு.
இளநீலச்சிறகும் செம்பட்டுவாலும் கோதுமைமணி என மின்னிய சிற்றலகும் கொண்ட சின்னஞ்சிறு குருவி மரத்திலிருந்து தன்னைத்தானே தூக்கிவீசிக்கொண்டு நீர்நோக்கிப் பாய்ந்தது, கூர்வாள் முனையை கூர்வாளால் உரசியது போன்ற மெல்லிய ஒலியுடன். நீரைத்தொடாமல் சுழன்றுமேலேறி காற்றில் அலைக்கழிந்து மீண்டது. மீண்டும் சுழன்றிறங்கி நீரை சிறுசிறையால் வருடி மேலெழுந்தது. அது தொட்டு உருவான நீர்வளையம் கரைந்து மறைய மீண்டும் வந்து தொட்டுச்சென்றது. மீண்டும் மீண்டும் ஒன்றையே செய்துகொண்டிருந்தது அது. அதைச்செய்வதற்கென்றே ஆக்கப்பட்டு அனுப்பப்பட்டதுபோல.
கிருஷ்ணன் அதை முகம் மலர்ந்து நோக்கிக்கொண்டிருந்தான். இமைகள் துடிதுடிக்க பறக்கும் நீலவிழி. அதை விழிக்குத்துலங்காத நீர்ப்பெருக்கு ஒன்று அள்ளிச் சுழற்றி வீசிப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்தது. மறுகணம் அதை ஒரு பட்டுச்சரடின் முனையில் கட்டி எவரோ சுழற்றிவிளையாடுகிறார்கள் என்று தோன்றியது. என்ன ஒரு களியாட்டு! கட்டின்மை என்பதே அசைவுகளான கொண்டாட்டம். மலர்களுக்கு உயிரசைவு வருமென்றால் அவை பறக்கவே விழையும். சாத்யகி தன் எண்ணங்களின் அழகிய பொருளின்மையை நோக்கி புன்னகை செய்துகொண்டான்.
குருவி வீசப்பட்டதுபோல காட்டைநோக்கிச் சென்று அப்படியே பச்சை இருளில் மறைந்தது. கிருஷ்ணன் அது சென்ற வழியை சற்றுநேரம் நோக்கியபின் எழுந்துகொண்டு சாத்யகியை வெற்றுவிழிகளால் பார்த்துவிட்டு திரும்பி நடந்தான். மீண்டும் காட்டினூடாக பாறைகள்மேல் தாவித்தாவிச் சென்றனர். காட்டின் ஒளி மாறுபட்டிருப்பதை சாத்யகி கண்டான். நீர் இன்னும் சற்று கருமைகொண்டிருந்தது. இலைநுனிகளில் எரிந்த வெண்சுடர்கள் செம்மையையும் கலந்துகொண்டிருந்தன. நினைத்திருக்காமல் வந்த எண்ணமென ஒரு காற்று இலைத்தழைப்புகளை குலுங்கச்செய்தபடி கடந்துசென்றது.
மீண்டும் குடிலருகே வந்தபோது ஓஜஸ் அவர்களுக்காக காத்திருந்தான். “தங்களுக்கான குடில் ஒன்று அப்பால் பன்றிப்பாறைமேல் அமைக்கப்பட்டுள்ளது யாதவரே” என்றான். “நீராடி வந்தீர்களென்றால் உணவருந்தி ஓய்வெடுக்க ஆவனசெய்கிறேன்.” கிருஷ்ணன் புன்னகையுடன் “இந்தக்காட்டில் செய்வதெதுவும் ஓய்வே” என்றான். ஓஜஸ் “ஆம்” என்றபின் “தாங்கள் எப்போது கிளம்புகிறீர்கள்? பிதாமகருடன் அஸ்தினபுரிக்கே செல்ல எண்ணமுண்டா?” என்றான். கிருஷ்ணன் வியப்பின்றி “பிதாமகர் எப்போது கிளம்புகிறார்?” என்றான்.
“நாளை காலை இருள்வடியும்போது” என்று ஓஜஸ் சொன்னான். “அஸ்தினபுரியிலிருந்து சற்றுமுன்னர்தான் பறவைத்தூது வந்தது. இன்றுகாலை காந்தார அரசியரில் ஒருவரான சம்படை விண்புகுந்துவிட்டார். முறைமைச்சடங்குகளுக்கு பிதாமகர் அங்கிருக்கவேண்டும், கிளம்புவதற்குரியனவற்றை செய்யும்படி சொன்னார்.” கிருஷ்ணன் “நன்று” என்றான். ஓஜஸ் “தன் சொல்லடங்கலை கலைத்துக்கொண்டுவிட்டார். ஆகவே மீண்டும் இங்கு வரப்போவதில்லை என நினைக்கிறேன். நாங்களும் அவருடன் கிளம்புகிறோம்” என்றான்.
“நாங்கள் பாஞ்சாலநகரி செல்லவிரும்புகிறோம். சுதுத்ரியை கடக்கும்வரை அவருடன் வருகிறோம்…” என்றான் கிருஷ்ணன். திரும்பி சாத்யகியிடம் “நாளை காலையே நாமும் கிளம்பிவிடுவோம் இளையோனே” என்றபின் புன்னகைத்தான்.