பகுதி 12 : நச்சுமலர்கள் – 1
திருதராஷ்டிரரின் அணுக்கச்சேவகரான விப்ரர் மெல்ல கதவைத்திறந்து கிருஷ்ணனையும் சாத்யகியையும் அவர்களை அழைத்துவந்த கனகரையும் தன் பழுத்த கண்களால் பார்த்துவிட்டு ஆழ்ந்தகுரலில் “யாதவர் மட்டும் வருவதாகத்தான் அரசர் சொன்னார்” என்றார். “நான் என் மருகனுடன் வந்துள்ளதாக சொல்லும்” என்றான் கிருஷ்ணன். விப்ரர் மூச்சு ஒலிக்கத்திரும்பி கதவை மூடிவிட்டு சென்றார். மூடியகதவின் பொருத்தை நோக்கியபடி அவர்கள் காத்து நின்றனர். மீண்டும் கதவு திறந்து விப்ரர் “உள்ளே செல்லுங்கள்” என்றார்.
கிருஷ்ணனுடன் அறைக்குள் செல்லும்போது விப்ரர் விழியிழந்தவர் என்ற எண்ணம் ஏன் தனக்கு முதலில் ஏற்பட்டது என்று சாத்யகி வியந்துகொண்டான். அவரது விழிகள் எதையும் பாராதவை போலிருந்தாலும் அவை நோக்கிழந்தவை என தோன்றவில்லை. அவரது அசைவுகளில் விழியின்மை இருந்தது. புருவச்சுளிப்பில் உதடுகளின் கோடலில் தலையை சற்றே திருப்பிய விதத்தில் அதுவே வெளிப்பட்டது. விப்ரர் வெளியே சென்று கதவை மூடிக்கொண்டார். அறையில் நெய்விளக்குகளுடன் அவர்கள் மட்டும் நின்றிருந்தனர்.
அந்த நீண்ட அரையிருட்டான அறையில் நெய்விளக்குக் கொத்துகளின் செவ்வெளிச்சம் தேன்மெழுகுபூசப்பட்டு மின்னிய கரியமரத்தரைப்பரப்பில் குருதி போல சிந்திப்பரவியிருந்தது. உலோகத்தாலானவை என மின்னிய மரத்தூண்களின் வளைவுகளில் அச்செவ்வொளி விளக்கேற்றியிருந்தது. எரியும் நெய்யுடன் சேர்க்கப்பட்ட தேவதாருப்பிசின் மணத்தது. சாளரத்துக்கு வெளியே நின்றிருந்த மரத்தின் இலைகளின் சலசலப்பு கேட்டுக்கொண்டிருந்தது. எதிர்ப்பக்கம் சிறிய அறைவாயில் பாதி திறந்திருக்க அப்பாலிருந்து வந்த வெளிச்சம் நீண்டு தரையில் விழுந்து சுவரில் மடிந்து எழுந்து கூரையில் சிதறித்தெரிந்தது.
மிகப்பழைமையான மரக்கட்டடம் அது என சாத்யகி நினைவுகூர்ந்தான். அவ்வரண்மனை பாரதவர்ஷத்தின் தொடக்ககால கட்டடங்களில் ஒன்று. அதன்பின் குரு அதை மீளக்கட்டினார். பிரதீபர் பழுதுபார்த்தார். அதைக்கட்டியதன் கதைகளை அவன் இளமையிலேயே கேட்டிருந்தான். காட்டில் எந்தெந்த பெருமரங்களின் கனியை பல்லுதிர்ந்த முதுகுரங்கு தேடிச்சென்று உண்கிறதோ அவை மட்டும் அடையாளப்படுத்தப்பட்டு வெட்டிக்கொண்டு வரப்பட்டன. இலைகுறுகி கனிஅருகி இனிமைபெருகிய முதிர்மரங்கள் நூறாண்டுவாழ்ந்து நிறைந்தவை. அம்மரங்களுடன் வந்த மலைத்தெய்வங்கள் அனைத்தும் அஸ்தினபுரியின் அருகே புராணகங்கையின் மலைக்காடுகளுக்குள் குடியிருத்தப்பட்டன.
இயல்பான நடையில் சென்ற கிருஷ்ணன் அந்தச்சாளரத்தின் அருகே விரிந்த மரப்பீடத்தில் அமர்ந்திருந்த திருதராஷ்டிரரை அணுகி தலைதாழ்த்தி வணங்கி “அஸ்தினபுரியின் அரசரை வணங்குகிறேன்” என்றபின்னர்தான் அவரை சாத்யகி கண்டான். அவர் அங்கிருப்பதை ஏன் தன்னால் காண முடியவில்லை என வியந்தான். ஒருவர் அறைக்குள் இருப்பது அளிக்கும் புலன்கடந்த இருப்புணர்வுகூட எழவில்லை. அவர் விழியிழந்தவர் என்பதனாலா? விழிதான் ஒருவரை இருப்புணர்த்துகிறதா? அல்லது விழியிழந்தவர்கள் அப்படி இருளுடன் கலந்து இன்மையென இருக்கும் இயல்புகொண்டவர்களா?
திருதராஷ்டிரர் “அமர்க யாதவரே” என்றபின் “உமது மருகன் இன்னும் களப்பயிற்சி கொள்ளவில்லை இல்லையா?” என்றார். “ஆம்” என்றான் கிருஷ்ணன். “அவன் காலடியோசை சீராக இல்லை. மேயும் விலங்கின் காலடியோசை“ என புன்னகைத்து “வேட்டைவிலங்கின் சீர்நடையை அடைந்தவனே வீரன்” என்றார். கிருஷ்ணன் “அவனை பார்த்தனுக்கு மாணவனாக ஆக்கலாமென எண்ணுகிறேன்” என்றான். “ஆம், அது நன்று. பார்த்தனுக்கு உகந்த மாணவன் இன்னமும் அமையவில்லை. நல்ல மாணவனை அடைந்தவன் தான் கற்றவற்றை மேலும் அணுகிக்கற்கிறான்” என்றார் திருதராஷ்டிரர்.
சாத்யகி விளக்கொளியை தூண்டலாமா என எண்ணி திரும்பப் போகையில் கிருஷ்ணன் வேண்டாம் என விழிகாட்டினான். அவன் கிருஷ்ணன் அருகே பீடத்தில் அமர்ந்துகொண்டான். “நீண்ட அவைநிகழ்வுக்குப்பின் ஓய்வெடுக்க விழைந்திருப்பீர்கள். உடனே வரச்சொன்னமைக்கு வருந்துகிறேன்” என்றார் திருதராஷ்டிரர். “நாளை சந்திக்கலாமென்றே எண்ணினேன். ஆனால் இன்றிரவு முழுக்க நான் பேசப்போவதை எண்ணி எண்ணி துயிலழிவேன். ஆகையால் வரச்சொன்னேன்.” கிருஷ்ணன் “அரசரை சந்திக்கும் நல்வாய்ப்பை முந்திப்பெறவே விழைந்தேன்…” என்றான். திருதராஷ்டிரர் புன்னகைத்து “ஆம், நீர் விளையாட விழைபவர்… இன்னொரு களம் என எண்ணியிருப்பீர்” என்றார்.
கிருஷ்ணன் ஒன்றும் சொல்லவில்லை. திருதராஷ்டிரர் பெருமூச்சுடன் தன் கைகளை ஒன்றுடன் ஒன்று சேர்த்து இறுக்கிக்கொண்டார். அவரது பெரிய தசைகள் இறுகி அசைவதை சாத்யகி வியப்புடன் பார்த்தான். மானுட உடலின் உச்சநிலை என்று தோன்றியது. பல்லாயிரம் கொண்ட மந்தையில் ஒரே ஒரு எருது மட்டுமே மாடு என்னும் வடிவின் உச்சத்தை அடைந்திருக்கும் என யாதவர் சொல்வதுண்டு. ஒன்றென ஆகிவிட்டதனாலேயே மாடுகளை ஆளும் அனைத்து தெய்வங்களும் அதில் குடியேறிவிடும். கொம்புகளில் இந்திரனும், கண்களில் அக்னியும், வாயில் வருணனும், மூக்கில் வாயுவும், புள்ளிருக்கையில் குபேரனும், இரு விலாக்களிலும் வான்மருத்துக்களும், வாலில் வாசுகியும் குளம்புகளில் தாளமென கைலாயநந்தியும் அமைவர். அதன் ஒவ்வொரு உறுப்பும் முழுமையடைந்திருக்கும். முழுமையின் உச்சத்தில் அது முகில்களில் ஏறி விண்ணகம் செல்லும்…
“நான் உம்மிடம் சில வினாக்களை கேட்க விழைந்தேன்…” என்று திருதராஷ்டிரர் சொன்னார். “நீர் உள்ளே வந்தகணம் தெரிந்தது அவை வினாக்களே அல்ல. நானே அறிந்தவை. நான் உம்மிடம் பேசவிழைவது அவற்றையும் அல்ல. அவை பொருளிழந்து நிற்பதை உணர்ந்து திகைத்து விட்டேன்… இப்போது என்னிடம் சொற்களில்லை.” கிருஷ்ணன் “நீங்கள் எதையாவது சொல்லத்தொடங்கலாம் அரசே. எதைச்சொன்னாலும் அங்குதான் வந்து சேர்வீர்கள்” என்றான். “ஆம், அது உண்மை” என்ற திருதராஷ்டிரர் “ஆனால் எங்கு தொடங்குவது…?” என்றார்.
“நான் உள்ளே நுழைந்த கணம் நீங்கள் எண்ணிக்கொண்டிருந்ததை” என்றான் கிருஷ்ணன். “நான் என் மைந்தனைப்பற்றி எண்ணிக்கொண்டிருந்தேன்” என்று திருதராஷ்டிரர் சொன்னார். “இன்று அவையில் அவன் உடைவாளை தன் கழுத்தை நோக்கி எடுத்தகணம் மின்னலென என் மீது இறங்கி என்னை எரிய வைத்த புத்தம்புதிய அறிதல் ஒன்றை…” அவர் மரக்கட்டை உரசும் ஒலிகளுடன் கைகளை உரசிக்கொண்டார். பற்கள் கடிபட தாடை இறுகி அசைந்தது. “யாதவரே, இப்புவியில் எனக்கு அவனன்றி எதுவும் பொருட்டல்ல. குலம், குடி, அறம், தெய்வம் எதுவும். அவனில்லாமலான பின்னர் என் வாழ்வில் எஞ்சும் பொருளென ஏதுமில்லை…”
பக்கவாட்டில் கிருஷ்ணனின் விழிகளில் சுடரொளி தெரிந்தது. “அதிலென்ன வியப்பிருக்கிறது கௌரவரே? என்றும் இங்கு வாழும் அழியாத உண்மை அல்லவா அது?” திருதராஷ்டிரர் கையை விரித்து “ஆம், மீளமீள நூல்கள் சொல்லி அறிந்த ஒன்றுதான் அது. ஆனால் நாம் அதை நம்புவதில்லை. ஏனென்றால் அதை ஏற்றுக்கொண்டால் நாமும் இம்மண்ணிலுள்ள பிற தந்தையருக்கு நிகராகிவிடுகிறோம். தன்னை சற்று மாறுபட்டவன் என நம்பாத எவருண்டு?” வெற்றுவிழிகள் அதிர உதடுகளை இறுக்கினார். கழுத்துத் தசைகள் இழுபட்டு தளர்ந்தன. “ஆக, நானும் வெறுமொரு தந்தையே. என் குலமும் நான் கற்ற கல்வியும் அமர்ந்திருக்கும் தொல்பெரும் அரியணையும் அனைத்தும் பொருளற்றவை.” கிருஷ்ணன் “உண்மை” என்றான். அச்சொல் அவரை கூர்முனையால் தாக்கியது போல அவர் சற்று விதிர்த்து மீண்டும் பெருமூச்சு விட்டார்.
“யாதவரே, நீர் கற்ற வேதமுடிபு கொள்கையில் மனிதன் இறைவடிவென்று சொல்லப்பட்டிருக்கிறதல்லவா?” என்றார் திருதராஷ்டிரர். “ஆம், காமகுரோதமோகங்களும் இறைவடிவே. ஆக்கமும் அழகும் மெய்மையும் மட்டுமல்ல அழிவும் இழிவும் பொய்மையும் கூட முழுமுதன்மையின் வடிவங்களே” என்று கிருஷ்ணன் சொன்னான். அவர்கள் வேறு எதையோ சுற்றிவருவதைப்போல தோன்றியது. அதை மட்டுமே உணர்ந்து அதை சொல்லாமல் பிறவற்றைச் சொல்லி ஆனால் அதுவே சொல்லப்படுகிறதென்று ஆழத்தில் அறிந்து. திருதராஷ்டிரர் எதுவரை செல்லப்போகிறார் என்று சாத்யகி வியந்தான்.
“காம்பில்யப்போரைப்பற்றி என்னிடம் விரிவாகவே சொல்லப்பட்டது” என்று மறுகணமே திருதராஷ்டிரர் சொன்னார். சாத்யகி அதிர்ந்து கிருஷ்ணனை நோக்கி பின் திருதராஷ்டிரரை நோக்கினான். திருதராஷ்டிரர் தன் விழிகளை நோக்கமுடியாதவர் என்பது அவனை அமைதியிழக்கச்செய்வதாகவே இருந்தது. வேறு ஏதோ வழியில் அவர் அவனை நோக்கக் கூடும். அவர் உடனே அதைச்சொல்லத் தொடங்கியது கிருஷ்ணனை வியப்பிலாழ்த்தவில்லை. சாத்யகி திருதராஷ்டிரரின் முகத்தை கூர்ந்து நோக்கினான். அவர் சொல்தேர்வது தெரிந்தது.
“காம்பில்யத்தில் ஒரு களிப்போர் நிகழ்ந்தது என்றார்கள் என் மைந்தர்கள். பாண்டவர்கள் தங்களுடனிருப்பதனால் சற்றே தருக்கு கொண்ட பாஞ்சாலப்படைகள் நம் எல்லைக்குள் மீறிவந்திருக்கின்றன. என் மைந்தரும் அங்கநாட்டரசனும் படைகொண்டு சென்று அவர்களை துரத்தியிருக்கின்றனர். துரத்திய விரைவில் கோட்டையருகே சென்றுவிட்டனர். அஸ்தினபுரியின் படையினர் கோட்டையை தாக்குகிறார்கள் என்றெண்ணி பாண்டவர்கள் படைகொண்டு எதிர்வர ஒரு சிறு பூசல் நிகழ்ந்திருக்கிறது. நமது படகுகள் கோட்டையின் சதக்னிகளால் எரிக்கப்பட்டன… தருமன் சொல்லால் போர் நின்றது. நம் இளையோர் மீண்டனர்.”
திருதராஷ்டிரர் கிருஷ்ணன் ஏதேனும் சொல்வான் என எதிர்பார்த்தபின்னர் ”இதுவே உண்மையா என விதுரனிடம் கேட்டேன். ஆம் என்றான். அதன்பின்னரும் ஐயம் எஞ்சியது. என் ஒற்றர்களை அனுப்பி நேரடியாகவே உசாவியறிந்தேன். ஜயத்ரதனும் அஸ்வத்தாமனும் படைகொண்டு வந்திருக்கிறார்கள். அங்கு நிகழ்ந்தது காம்பில்யக்கோட்டையை வெல்வதற்கான முழுப்போரேதான். என் சிறுவர்கள் தோற்கடிக்கப்பட்டனர்” என்றார் திருதராஷ்டிரர். “யாதவரே, காம்பில்யத்தை வென்று அஸ்தினபுரிக்கு ஆவதொன்றும் இல்லை. இந்தப்போர் அதை வெல்வதற்காக அல்ல.”
தலையை மெல்ல அசைத்து “இது உடன்பிறந்தாரின் போர்” என்று திருதராஷ்டிரர் சொன்னார். “அந்தக்களத்தில் நிகழ்ந்தது அதுதான். அது மீண்டும் நிகழலாகாதென்ற பதைப்பிலேயே என் நாட்கள் கழிகின்றன… வேறு ஒரு சிந்தை என் நெஞ்சில் வந்து நீணாளாகிறது.” கிருஷ்ணன் “இன்று அவையில் உடன்பிறந்தார் பூசல் குறித்து சொன்னதுமே நீங்கள் விம்மி அழுததைக் கண்டதும் நான் அதை அறிந்துகொண்டேன் கௌரவரே” என்றான். திருதராஷ்டிரர் அவனை நோக்கி தன் முகத்தைத் திருப்பி “அதை எப்போது எண்ணினாலும் என் நெஞ்சு பதறுகிறது. மிக அண்மையில் அது வந்துவிட்டதென்பதுபோல… யாதவரே, என்றேனும் அது இம்மண்ணில் நிகழுமா? நீர் என்ன நினைக்கிறீர்?” என்றார்.
சாத்யகி திரும்பி கிருஷ்ணனை நோக்கினான். அவன் தன் அணிகள் மெல்லென ஒலிக்க “வாழ்க்கைக்கு என பொருள் ஒன்று இருக்குமென்றால் அது இதை எவ்வகையிலும் முன்னரே வகுத்துவிட முடியாது என்பதே” என்றான். அவன் சொன்னதற்கு என்ன பொருள் என சாத்யகியின் உள்ளம் வியந்தது. திருதராஷ்டிரர் சிலகணங்கள் செவிகூர்ந்துவிட்டு “நீர் சொல்வது எனக்கு பொருளாகவில்லை. நிகழலாமென நீர் சொல்வதாகவே எடுத்துக்கொள்கிறேன். யாதவரே, என்னால் முடிந்தவரை அதைத் தடுக்க இயன்றதை செய்துவிட்டுச் செல்வேன்” என்றார்.
பின்னர் தன்னிலை திரும்பி “இன்று அவையில் பேசிக்கொண்டிருந்தபோது நான் உணர்ந்த மேலுமொன்று என் அச்சத்தை வளர்த்தது. என் இரு தரப்பு மைந்தர் மட்டும் அல்ல, மொத்த அவையினரே இந்நாட்டை தங்கள் உள்ளத்தால் பலநூறு முறை பகிர்ந்து பகிர்ந்து ஆடிப்பார்த்திருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் அதில் தரப்பும் எதிர்தரப்பும் உள்ளன. எதையும் உணராத விழியற்றவனாக நான் இருந்திருக்கிறேன்…” என்றார். “யாதவரே, கைநழுவிவிட்ட அரியபொருள் ஒன்று நிலத்தைத் தொடும் ஒற்றைக்கணம் நீண்டு நீண்டு சென்றதாகவே இந்த அவைகூடல் அமைந்தது எனக்கு. அப்பொருள் மென்மணலில் உடையாது சென்றமைந்தது போல முடிந்தது… நான் கண்ணீர்விட்டது அந்த நிறைவினாலும் கூடத்தான்.”
“இந்தக் குடியும் நிலமும் ஏற்கெனவே பிளந்து விட்டன யாதவரே. இன்று உண்மையில் அது மேலும் பிளக்காதபடி செய்துவிட்டோம். சற்றுமுன்புவரை நான் அந்தப்புரத்தில் காந்தாரியிடம் பேசிக்கொண்டிருந்தேன். நீர் இக்குலத்தை பிளந்துவிட்டீர் என்றாள். அவள் நோக்கில் இருதரப்பு மைந்தரையும் ஓர் ஊட்டவையில் அமரச்செய்து அவள் கையால் அமுதூட்டி பேசச்செய்தால் அனைத்தும் நன்றே முடிந்துவிடும். அன்னையென அவள் அப்படி நினைப்பதை நான் தடுக்கவும் விரும்பவில்லை” திருதராஷ்டிரர் சொன்னார்.
“ஆனால் அவள் பேசப்பேச மறுபக்கம் என் உள்ளம் உறுதிகொண்டபடியே வந்தது. அனைத்தும் சிதறுவதிலிருந்து நீர் இக்குடியை காத்திருக்கிறீர். அதற்கு மறுகொடையாக நீர் அடையப்போவது குலத்தைப்பிளந்தவர் என்ற பழியை மட்டுமே. இருந்தும் இத்தொலைவு வந்து இன்று அவையை நடத்திச்சென்று முடிவை அடைந்தமைக்காக அஸ்தினபுரியும் நானும் உமக்கு கடன்பட்டிருக்கிறோம்” என்றார் திருதராஷ்டிரர். “நீர் எவரென என் நெஞ்சு சிலசமயம் துணுக்குறுகிறது. நானறியாத எவரோ என. நான் அறியவே முடியாத எவரோ என… உள்ளம் கொள்ளும் ஆடல்களுக்கு அலகில்லை.”
புன்னகையுடன் கிருஷ்ணன் “அனைத்தும் இப்போது முடிவுக்கு வந்ததை எண்ணி நானும் மகிழ்கிறேன்” என்றான். ”ஆம், இம்முடிவு எனக்கு முதலில் நிறைவை அளித்தது. இருதரப்பினரும் விழைந்தவை அடையப்பட்டுவிட்டன என்று எண்ணினேன். ஆனால் நேரம் செல்லச்செல்ல அப்படியல்ல என்று தோன்றத்தொடங்கியது. யாதவரே, இப்பூசல் நிலத்தின்பொருட்டு அல்ல.” கிருஷ்ணன் சிலகணங்கள் கழித்து “ஆம்” என்றான். “நிலத்தின் பொருட்டென்றால் மட்டுமே அது நிலத்தால் முடியும்…” என மீண்டும் திருதராஷ்டிரர் சொன்னார். கிருஷ்ணன் ஒன்றும் சொல்லவில்லை.
“பாஞ்சாலன் மகள் பேரழகி என்றனர்” என்று திருதராஷ்டிரர் சற்றுநேரம் கழித்து மெல்லியகுரலில் சொன்னார். “அவள் எவ்வகை அழகி?” கிருஷ்ணன் புன்னகைத்து “விளங்கவில்லை அரசே” என்றான். “யாதவரே, மந்தார மலை பாற்கடலை என பெண்ணுள்ளத்தை அறிபவர் நீர் என்பது சூதர் சொல். சொல்லும், அவள் எத்தகையவள்? அகந்தை கொண்டவளா? ஆட்டிவைப்பவளா? கடந்துசென்று அமைபவளா? இல்லை அன்னைவடிவம்தானா?” கிருஷ்ணன் “ஏன், அவையனைத்தும் கொண்ட அன்னைவடிவாக அமையக்கூடாதா?” என்றான். திருதராஷ்டிரர் சற்று திகைத்து “ஆம், அதுவும் இயல்வதே. அதுவும்கூடத்தான்” என்றார்.
பின்னர் மெல்லியகுரலில் “அவள்பொருட்டு குருதிசிந்தப்படுமா?” என்றார். கிருஷ்ணன் “குருதி சிந்துவதை அவளால் நிறுத்தமுடியுமா?” என்றான். ”யாதவரே, அவள் எவளென என்னால் உய்த்துணரவே முடியவில்லை. நூறு கோணங்களில் என் சிந்தை திரும்பியும் என் அகம் அவளை கண்டுகொள்ளவில்லை. ஆனால் நேற்று அவள் நகர்நுழைவதை, அஸ்தினபுரியின் அரியணையில் அமர்ந்து தேவயானியின் மணிமுடியை சூடுவதை எண்ணிக்கொண்டபோது அச்சத்தால் என் அகம் நடுங்கியது. அது அவள் மேல் கொண்ட அச்சம் அல்ல. அதற்கும் அப்பால். மேலும் பெரிய ஒன்றைப்பற்றிய அச்சம். அச்சமென்றுகூட சொல்லமுடியாது. ஒருவகை நடுக்கம் மட்டும்தான் அது.”
சாத்யகி அவரது உணர்வை தன்னால் துல்லியமாக புரிந்துகொள்ளமுடிவதை உணர்ந்தான். ஒருவேளை அத்தனைபேராலும் பகிர்ந்துகொள்ளக்கூடிய உணர்வுதானா அது? மிக அடிப்படையான ஓர் உள்ளுணர்வு? “நான் உம்மை அழைத்தது, இதைச் சொல்லவே. அவள் இந்நகர்புகுவதும் சரி, அரியணை அமர்வதும் சரி, இனிமேல் தவிர்க்கக்கூடுவது அல்ல. ஆனால் அவள் இங்கு மிகச்சிலநாட்கள் மட்டுமே இருக்கவேண்டும். அனைத்தும் சேர்ந்து ஒருவாரகாலத்திற்குள் முடிந்தால் மிக நன்று. ஏனென்றால்…” திருதராஷ்டிரர் சொல்லுக்காக தத்தளித்து “ஏனென்றால் அனைவரும் இணைந்து ஓரிடத்தில் இருக்கக் கூடாது” என்றார்.
சொன்னதுமே அச்சொற்றொடர் மிகத்தட்டையானது என உணர்ந்தாலும் அது தொடர்புறுத்திவிட்டதையும் அவரால் அறியமுடிந்தது. பெருமூச்சுடன் “அதை நீர் எனக்காக செய்யவேண்டும். இங்கே அவள் முடிசூடியதுமே துவாரகைக்கு அவளை ஒரு விருந்துக்காக அழையும். அல்லது… அல்லது வேறு ஏதோ ஓர் அழைப்பு. அவள் உம்முடன் வரட்டும். அஸ்தினபுரியில் அவள் இருக்கலாகாது. அவர்கள் அடையும் புதுநிலத்தை ஓரிருமாதங்களுக்குள் பங்கிட்டு எல்லை வகுக்க நான் விதுரனிடம் ஆணையிடுகிறேன். அந்நிலத்தில் அவர்கள் புதுநகர் ஒன்றை அமைப்பார்கள் என எண்ணுகிறேன்” என்றார்.
கிருஷ்ணன் “ஆம்” என்றான். “அங்கே அவர்கள் குடியேறட்டும். அவள் அங்கே கோலேந்தி அமரட்டும். எப்போதேனும் குடிவிழவுகளில் மட்டுமே அவர்கள் சந்தித்துக்கொள்ளட்டும்.” கிருஷ்ணன் “அதை செய்வேன் என நான் உறுதியளிக்கிறேன் கௌரவரே” என்றான். “ஆனால்…” என சிலகணங்கள் தயங்கி “அண்மையை விட சேய்மை உணர்வுகளை விரைவுடையதாக ஆக்கும் அல்லவா?” என்றான். திருதராஷ்டிரரால் அதை உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை. சிலகணங்கள் உறைந்து அமர்ந்திருந்துவிட்டு புரிந்துகொண்டதும் தலை அறியாமல் முன்னால்நீள “ஆம், எண்ணத்திலிருந்து விலக்குதல் எளிதல்ல. ஆனால் கண்முன்னிருக்கும் உருவம் மேலும் மேலும் வளரக்கூடியது. அதன் ஒவ்வொரு சொல்லும், ஒவ்வொரு அசைவும் கொல்லும் நஞ்சாகக்கூடும்” என்றார்.
“அதை தவிர்ப்பதைப்பற்றியே நான் பேசுகிறேன் யாதவரே. இப்போது நான் செய்யக்கூடுவதென பிறிதொன்றுமில்லை.” மேலும் எழுந்துவந்த சொற்களை அவர் உள்ளேயே அடுக்கியமைப்பது தெரிந்தது. “அங்கநாட்டரசனை அவன் நாட்டுக்கே செல்லும்படி ஆணையிட்டேன். அங்கே அவன் அவனுக்குரிய இளவரசியை மணக்க ஆவன செய்ய விதுரனிடம் சொன்னேன். என் மைந்தன் முடிசூடுவதற்குள் அவனுக்கும் உரிய மணமகளை தேடவேண்டும். காசிநாட்டு இளவரசி உகந்தவள் என்று முன்னரே சொன்னார்கள். அவன் அரியணைக்குரியவன் அல்ல என்பதனால் காசிநாட்டரசன் தயங்கினான். இப்போது தடையிருக்கப்போவதில்லை.”
“ஆம், அது மிகச்சிறந்த முடிவு. பெண்களுக்கு நம்மைவிட இவ்வகையில் கூர்மை மிகுதி” என்றான் கிருஷ்ணன். “தருமனுக்கும் பிறபாண்டவருக்கும்கூட தனித்தனியாக மனைவியர் அமைந்தாகவேண்டும்…” என்றார் திருதராஷ்டிரர். கிருஷ்ணன் “அதை அவர்களின் அன்னை அல்லவா முடிவெடுக்கவேண்டும்?“ என்றான்..”அவளிடம் நீர் இதைப்பற்றி பேசும். நான் உம்மை வரவழைத்தது அதற்காகவும்தான்” என்றார் திருதராஷ்டிரர். “யாதவரே, அத்தனை பெருந்தெய்வங்களும் பலவகையான துணைத்தெய்வங்களால் சூழப்பட்டுள்ளன. ஏனென்றால் பெருநதி கரைகடக்காமலிருக்க அமைக்கும் அணைகள் அவை.” கிருஷ்ணன் புன்னகைத்து “இதையே நான் அத்தையிடம் சொல்கிறேன். அவர் புரிந்துகொள்வார்” என்றான்.
திருதராஷ்டிரர் பெருமூச்சுடன் “இதுவரை கொண்டுவந்து சேர்த்த உம்மால் இவற்றையும் முடிக்கமுடியுமென அறிவேன். உம்மீது கொண்ட நம்பிக்கையால்தான் நான் இனி உறங்கச்செல்லவேண்டும்” என்றார். கிருஷ்ணன் சிரித்தபடி “நான் உறங்கமுடியாமல் செய்துவிட்டீர்கள் அரசே” என்றான். “யாதவரே, நகர் பற்றி எரிந்தாலும் உறங்கக்கூடியவர் நீர். நான் அறிவேன்” என்றார் திருதராஷ்டிரர். “என்னைப்பற்றிய கதைகளுடன் போராடுவதே என் வாழ்க்கையாக அமைந்துவிட்டது” என்றான் கிருஷ்ணன். “இத்தனை காவல்களுக்கும் அப்பால் ஒன்று கூர்கொண்டு நின்றிருக்கிறது அரசே, நாம் அதைப்பற்றி பேசவேயில்லை.”
“சொல்லும்” என்றபோது திருதராஷ்டிரரின் உடலில் வந்த எச்சரிக்கையின் அசைவு சாத்யகியை வியப்படையச்செய்தது. “இங்கே காந்தாரர் இருக்கிறார்…” என்றான் கிருஷ்ணன். “ஆம், அவர் நெடுநாட்களாக இங்கிருக்கிறார்” என்று திருதராஷ்டிரர் மெல்லிய குரலில் சொன்னார். “அதையே நானும் சொல்கிறேன். நெடுநாட்களாக இருக்கிறார். அந்த அளவுக்கு பெருவிழைவுடன் இருக்கிறார். பாதிநாட்டால் அமையும் பசி அல்ல அது.” திருதராஷ்டிரர் மேலும் எச்சரிக்கையுடன் “யாதவரே, நிலவிழைவு நிறையாத ஷத்ரியநெஞ்சு எது?” என்றார். “உண்மை. ஆனால் தீங்குசெய்வதற்கான அகத்தடை ஷத்ரியர்களை கட்டுப்படுத்துகிறது. ஏனென்றால் இழிபுகழ் என்பதுதான் அவர்கள் சென்றடையும் முடிவிலா இருளுலகு.”
இலைநுனிபோல மெல்ல நடுங்கியபடி திருதராஷ்டிரர் “ஆம். அறமே ஷத்ரியர்களை கட்டுப்படுத்தும் தெய்வம்” என்றார். கிருஷ்ணன் அவரை கூர்ந்து நோக்கியபடி “காந்தாரரை இயக்குவது மண்ணாசை மட்டுமே” என்றான். “முன்னரும் அவர் அறத்தின் எல்லைக்கோட்டை கடந்திருக்கிறார்.” திருதராஷ்டிரரின் கைவிரல்கள் நடுங்குவதை காணவே முடிந்தது. ”அறத்தின் கோடென்பது நீர் தனக்கென வகுத்துள்ள விளிம்புபோல. ஓரிடத்தில் ஒருவர் அதை மீறினால் நீர்வெளியே அதை கண்டுகொள்ளும்.” திருதராஷ்டிரர் பெருமூச்சென ஒலித்த குரலில் “ஆம்” என்றார். “தார்த்தராஷ்டிரர்களை அவர் வழிநடத்துவாரென்றால்…” என்று கிருஷ்ணன் தொடங்குவதற்குள் திருதராஷ்டிரர் மறித்து பதறிய குரலில் “என் மைந்தர் என்னால் வளர்க்கப்பட்டவர்கள். நான் வெறுக்கும் ஒன்றை செய்யமாட்டார்கள்” என்றார்.
எங்கோ செல்வதுபோன்ற உடலசைவுடன் எழுந்துகொண்டு தூணைப்பற்றி நின்று திருதராஷ்டிரர் “வாரணவதத்தின் மாளிகை மகதர்களால் எரியூட்டப்பட்டபோது என்னிடம் ஒற்றர்கள் சொன்னார்கள், அது காந்தாரரால் செய்யப்பட்டிருக்கலாம் என்று. என் மைந்தர் அதற்கு துணைநின்றனர் என்று ஒற்றர்தலைவர் கோமுகர் சொன்னார். நான் சினந்து அவரை அடித்தேன். என் மைந்தர் ஒருபோதும் இழிசெயல் எண்ணார் என்றேன். இறுதியில் என்ன ஆயிற்று? மகதம் செய்த வஞ்சம் அது என தெளிந்தது…” என்றார். இருளை நோக்கி அறியாமலேயே நடந்து மெல்லப்புதைந்து திரும்பிப்பாராமல் திருதராஷ்டிரர் சொன்னார் “என் மைந்தர் இழிபிழை செய்யார். என்னை அவர்கள் ஒருபோதும் இருளில்தள்ளமாட்டார்கள்.”
சிலகணங்கள் அவரையே நோக்கி இருந்துவிட்டு கிருஷ்ணன் தன் கைகளால் கால்முட்டுகளை மெல்லத் தட்டிக்கொண்டு “ஆம், நானும் அதையே சொல்கிறேன். வாரணவதத்தில் நிகழ்ந்தது போல மீண்டும் ஒரு அயலவரின் வஞ்சச்செயல் நிகழலாம். அதன் பழி கௌரவர்கள் மேல் விழலாம்… பழிசுமத்தப்பட்டவர்கள் மேலும் வஞ்சம் கொள்கிறார்கள். வஞ்சம் வளரக்கூடியது…” திருதராஷ்டிரர் உடல்தளர்வதை இருளின் அசைவாக காணமுடிந்தது. “ஆம், யாதவரே. அவ்வாறு நிகழலாம். நான் நம்பியிருப்பது உம்மை மட்டுமே. உமது சொல் பாண்டவருக்கு நிகராக என் மைந்தருக்கும் துணை நிற்கவேண்டும்.”
“முதல்முறையாக பாண்டவர் என்மைந்தர் என்னும் வகைப்பாட்டை உங்கள் சொல்லில் காண்கிறேன்” என்றான் கிருஷ்ணன். திருதராஷ்டிரர் ஏதோ சொல்லமுயல்வது அவரது உடலசைவால் தெரிந்தது. அவன் தொடர்ந்து “அது உங்கள் அச்சத்தையே காட்டுகிறது அரசே. அவ்வச்சம் தேவையற்றது. தார்த்தராஷ்டிரர்கள் பிழைசெய்யாமல் தடுக்கும் காவலாக நீங்கள் இருக்கிறீர்கள். அவர்களின் அன்னையின் சொல்லும் இருக்கிறது. பாண்டவர்களும் நெறியாலும் குலத்தாலும் கட்டுண்டவர்கள். தீதென ஏதும் நிகழாது” என்றான். திருதராஷ்டிரர் உரத்த பெருமூச்சுடன் “நிகழலாகாது… தெய்வங்கள் துணைநிற்கவேண்டும்” என்றார்.
“ஆம், நாம் வேண்டிக்கொள்வோம்” என்ற கிருஷ்ணன் “தங்கள் விழைவுகளை ஆணையென கொள்கிறேன். நான் விடைகொள்ளலாமா?” என்றான். “உம்முடன் பேசியபின் நான் துயிலலாம் என்னும் நம்பிக்கையை அடைந்துள்ளேன்” என்றார் திருதராஷ்டிரர். “எப்போது கிளம்புகிறீர்?” கிருஷ்ணன் “நாளைமறுநாள் கிளம்பலாமென நினைக்கிறேன். கிருபரையும் துரோணரையும் குருகுலத்தில் சென்று சந்தித்து நிகழ்ந்தவற்றை சொல்லவேண்டும். பீஷ்மபிதாமகர் சுதுத்ரியின் கரையில் ஹஸ்தவனம் என்னும் காட்டில் இருப்பதாக சொன்னார்கள். அவரிடமும் சென்று அனைத்தையும் சொல்லவேண்டும்” என்றான்.
“நான் சௌனகரை துரோணர்குருகுலத்திற்கு அனுப்பினேன். விதுரனிடம் நாளையே ஹஸ்தவனம் செல்லும்படி ஆணையிட்டேன்” என்றார் திருதராஷ்டிரர். “அவர்கள் சென்று அரசச்செய்தி அறிவித்தபின் நீர் சென்று முறைமைச்சந்திப்பை நிகழ்த்தலாம். அவர்களுக்கு ஐயமேதும் இருப்பின் களையலாம்.” கிருஷ்ணன் “ஆம், அதன்பின்னரே நான் மீண்டும் பாஞ்சாலம் செல்லவேண்டும்” என்றான். “நகர்நுழைவுக்கான செய்தியை அனுப்பும்படி ஆணையிடுகிறேன்” என்றபோது திருதராஷ்டிரர் முற்றிலும் மீண்டுவிட்டார் என தெரிந்தது. “அனைத்திலிருந்தும் முழுமையாக விலகிவிட்டிருக்கிறார் பீஷ்ம பிதாமகர். அதைப்போல நானும் ஆகமுடியுமெனில் மட்டுமே எனக்கு விடுதலை.”
“ஒவ்வொருவிடுதலையும் முற்றிலும் தனித்தன்மை கொண்டது குருகுலமூத்தவரே” என்ற கிருஷ்ணன் சிரித்து “ஆனால் அத்தனை துயர்களும் நிகரானவை” என்றான். தலைவணங்கி முகமன் சொல்லி அவன் திரும்பியதும் வாயில் திறந்து விப்ரர் தோன்றினார். அவர்கள் வாயில் நோக்கி நடக்கையில் சாத்யகி இயல்பாக திரும்பிப்பார்த்தான். திருதராஷ்டிரர் செவிகளைத் திருப்பி அசைவற்று நின்றிருந்தார். கிருஷ்ணனை செவிகளாலேயே அவர் உற்று நோக்குவதுபோல அவனுக்குத் தோன்றியது.