இந்தியாவின் மகள் -விவாதம்

அன்புள்ள ஜெ,

உங்களின் இந்தியாவின் மகள் குறித்த கருத்துக்களுடன் முழுக்க முழுக்க ஒத்துப் போகிறேன். செறிவான புள்ளிவிவரங்களுடன், விரிவான வரலாற்றுப் பின்புலத்துடன் அணுகி இருக்கிறீர்கள். நேரமெடுத்து இதற்கு பதில் சொன்னதற்கு நன்றி.

இங்கே என் ஐரோப்பியத்தோழர் ஒருவர் “இந்தியாவில் உங்கள் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையாமே? அவர்கள் ஒன்று கற்பழிக்கப் படுகிறார்கள் அல்லது மேல் ஜாதியால் அவமதிக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள். மிகுந்த அதிர்ச்சியாயிருக்கிறது.”, என்று வெள்ளையர்களுக்குரிய சுமை தாங்கும் கனிவுடன் கேட்டார். “நீங்கள் புள்ளி விவரங்களை மட்டும் கேட்டீர்களானால், நாகரீக ஐரோப்பாவின் எந்த தேசத்தை விடவும் எங்கள் தேசம் பெண்களுக்கு மரியாதை அளிக்கும் தேசம் தான்; அத்தனை பெரிய தேசத்தில், இவ்வளவு மக்கள் தொகைப் பெருக்கத்தில் இவை ஒன்றும் ஆபத்தான சதவீதம் அல்ல என்று எளிதாக நிறுவ முடியும். அதை வைத்து நான் இதை நியாயப் படுத்த முயலவில்லை. நீங்கள் சொல்வது போல ஒட்டுமொத்தமாக பாதுகாப்பு அற்றுப் போன தேசம் அல்ல என்னுடையது. ஆனால் சராசரி இந்திய ஆண் மனதில் ஓர் மாற்றத்தின் தேவை உள்ளது. அதை நோக்கி நிச்சயம் நாங்கள் செல்வோம். எவ்வகையில் ஆனாலும் இத்தகைய செயல்கள் எங்களுக்கு தலைகுனிவே. ஆயினும் இந்தியா ஓர் மேலும் மேலும் குடிமைப் படுத்தப்பட்ட சமூகமாக மாறத் தேவையான விதிகளை இத்தகைய சம்பவங்களின் மூலம் நாங்கள் அடைகிறோம். சீக்கிரம் அந்த மாற்றம் வந்து சேரும்” என்றேன். “இந்த நாகரீக உலகில் இது காட்டுமிராண்டித்தனம் அல்லவா? எவ்வளவு நாளில் அம்மாற்றத்தை எதிர்பார்க்கிறீர்கள்?” என்றார் அவர். “தேவாலயத்தைக் கேள்வி கேட்ட பெண்களை எரித்தும், கூண்டுகளில் அடைத்து தேவாலய உச்சியில் தொங்கவிட்டு பறவைகளுக்கு உணவாக்கியும் மரியாதை அளித்த ஐரோப்பா மாற எடுத்துக் கொண்டதை விடச் சீக்கிரம் மாறிவிடுவோம்” என்று பதிலிறுத்தேன். அவர் என் தலைமுறையை, அதாவது நுகர்வுத் தலைமுறை, சார்ந்தவர். எனவே அதற்கு மேல் வரலாற்று விசாரணைக்கெல்லாம் செல்லாமல், “உங்களைக் காயப் படுத்த இதைச் சொல்லவில்லை” என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்.

இந்தியாவின் மகள் உலகெங்கும் சாதிக்க விரும்புவது இதையே. அந்த ஆவணப் படம் இங்கே இந்தியா என்பது பாம்பாட்டிகளின் தேசம் என்பதில் இருந்து கற்பழிப்பாளர்களின் தேசம் என்ற பெயர் மாற்றத்திற்கே பயன்படுகிறது. நீங்கள் சொல்லியிருந்தது போல், அந்த நிகழ்வுக்குப் பிறகு ஒட்டு மொத்த இந்தியாவும் அதற்காக ஒன்றிணைந்ததை அந்த ஆவணப் படம் காத்திரமாகக் காட்சிப்படுத்தவில்லை. அப்பெண்ணின் குடும்பத்தினர் இக்கொடுமையைக் கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்கும் அவல நிலையைத்தான் இந்தியா அளித்திருக்கிறது என்ற பிம்பத்தை ஏற்படுத்தும் வகையில் இரு சாராரின் குரல்களில் அத்துயர நாளை மீளுருவாக்கம் செய்கிறது அந்த ஆவணப் படம். உண்மையில் அது கற்பழித்தவனின் தரப்பு மட்டுமே ஓங்கிப் பேசப்பட்ட ஒரு ஆவணப் படம். அது பற்றிக்கேள்வி வரக்கூடாது என்பதற்காக அந்த அம்மையார் ஓர் பேட்டியில் அப்பெண்ணின் தோழன் இச்சம்பவம் பற்றிப் பேச பணம் கேட்டதாகவும், தான் கொடுக்க மறுத்ததால் தான் அவன் இப்படத்தில் இடம்பெறாமல் போய் விட்டதாகவும் பேசுகிறார். முகேஷ் சிங்கிற்கு நாற்பதாயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டதாக ஓர் தகவல் இணையத்தில் படிக்க நேர்ந்தது. அந்த வக்கீல்கள் தாங்கள் கூறியதையே மீண்டும் மீண்டும் ஆணித்தரமாகச் சொல்வது அவர்களுக்கும் ஏதேனும் பொசிந்திருக்கலாம் என்றே எண்ணத் தோன்றுகிறது. அந்த சம்பவம் இந்தியாவில் எத்தகைய அதிர்வலைகளைத் தோற்றுவித்தது, இந்திய அரசாங்கம் அதை எவ்வாறு எதிர்கொண்டது போன்றவற்றைப் பற்றியும் பேசியிருந்தால் ஆவணப் படம் என்ற அளவிலாவது முழுமையான ஒன்றாக இருந்திருக்கும். ஆனால் அது அவர்கள் எதிர்பார்த்த பிம்பத்தை ஏற்படுத்தாதே!

ஆனால் அதைத் தடை செய்தது என்னைப் பொறுத்தவரை தவறான முன்னுதாரணம். அதற்குப் பதிலாக அப்படம் விட்ட கோட்டைகளை, அது சொல்லாமல் விட்ட தகவல்களை தொகுத்து பரப்பியிருந்திருக்க வேண்டும். தடை செய்யாமல், அப்படத்தின் பின்னணியை மேலும் தெளிவாக இந்தியாவிடமும், உலகத்திடமும் எடுத்துரைத்திருக்க வேண்டும். அப்படத்திற்கான நமது கண்டனங்களை, அக்கண்டனங்களுக்குப் பின்பு உள்ள நமது உணர்வுகளை சோர்வில்லாமல் எடுத்து வைத்து இருக்க வேண்டும். இதைச் செய்யும் பலம் தற்போதைய அரசுக்கு உண்டு. ஆனால் அவர்கள் இந்த வாய்ப்பைத் தவற விட்டுவிட்டனர் என்றே நினைக்கிறேன். இங்கே மேற்குலகில் அந்த அம்மையார் இனி ஐ.நா வின் பெண்ணுரிமைக் காவலாரக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கலாம்.

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்

அன்புள்ள அருணாச்சலம் மகாராஜன்,

இந்தியாவின் துரதிருஷ்டங்கள் இரண்டு. ஒன்று சற்றேனும் இந்த நாடு, மக்கள் மேல் நன்மதிப்பில்லாத மூளைச்சலவைக்கூட்டம். இன்னொரு பக்கம் தெருச்சண்டை, அதிகார மொண்ணைத்தனம் அன்றி அறிவார்ந்த செயல்பாடுகளே இல்லாத இன்னொரு கூட்டம். இருவரும் மற்ற தரப்புக்கான நியாயங்களை உருவாக்கி அளிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். இந்தியாவின் மகள் தடைசெய்யப்பட்டிருக்கக் கூடாது. அது விரிவாகக்கருத்துத் தரப்பில் முறியடிக்கப்பட்டிருக்கவேண்டும். ஒரு ஐம்பது லட்சம் ரூபாயை நல்ல ஆவணப்பட இயக்குநர் ஒருவருக்கு அளித்து இந்த ஆவணப்படத்தின் உள்விளையாட்டுகளையும் உண்மைகளையும் எடுத்திருந்தாலே போதும்.

உதாரணமாக அருந்ததி ராய் என்ற இன்னொரு லெஸ்லி காந்தியைப்பற்றி அவதூறாகவும் திரிபாகவும் அம்பேத்கர் நூலுக்கு முன்னுரை என்ற பாவனையில் எழுதியதை ராஜ் மோகன் காந்தி அம்பலப்படுத்தியதைச் சுட்டிக்காட்டலாம். அருந்ததியின் திரிபுகளை, உள்நோக்கம் கொண்ட பிழைகளை, திட்டமிட்ட பொய்கள நிதானமாக அம்பலப்படுத்தும் அந்தக்கட்டுரை அருந்ததி எழுதியதை முற்றிலுமாக காலிசெய்துவிட்டது. இதுவே அறிவுத்தள எதிர்வினை. [காலச்சுவடு அருந்ததி எழுதியதை நூலாக வெளியிடவிருக்கிறது]

நம்மூர் டிவியில் லெஸ்லியின் படம் பற்றி ஒரு விவாதம் வரட்டும். எந்த நியாயமும் பேசப்படாது. எச். ராஜா மாதிரி ஏதாவது ஒருவர் வந்து அமர்ந்து லெஸ்லியின் கையை உடைப்போம் என்று பேசுவார். மறுபக்கம் அய்யோ கருத்துசுதந்திரம் அழிக்கப்படுகிறது என கூச்சல் கிளம்பும். அவ்வளவுதான்

ஜெ

Sh Jeeyamohan

I am an ardent reader of your books. (I nowadays cut and paste your shortstories from the internet and send to all my relatives and friends to share what I enjoyed, cried and laughted with.)

I am writing this mail in English, because you will laugh at my Tamizh, and also it would take lot of time for me to write this in Tamizh.

I read your post about Indias daughter documentary. I was surprised at your reaction. Hence this …

My point is this:

1. Look at the documentary as a documentary. It shows up what happened in India and even now such incidents happen routinely, some get reported some go unnoticed. Whether it happens outside India – of course yes, But that does not mean you cannot have a documentary on what happened here.
2 You may agree or disagree, (but that after seeing the documentary, not based on the opinions of certain parties or persons). A documentary film needs to be looked at irrespective of the nationality of the maker of the documentary. Bringing in the atrocities committed by the British (of course it is true) does not mean we should not watch a documentary by a Britisher!
3. Banning something does no good to anyone. More people will end up seeing it. And I did not understand the logic of the banning – is it because it is portraying India in a bad way? It portrays the type of administration we have in the country. Where Law and order machinery is used only for protecting politicians of all hues.
4. And now I read that the Court feels that the Judges of the Supreme court may be swayed by the rapists interview. Are we having some duffers as Judges of the Supreme Court of India? At least till this time I was lead to believe that this was not true.
5. Indian Parliament discusses the issue – the ruling party finds the earlier ruling dispensation at fault because the documentary maker was allowed in jail. While there may be merit in what they said, still the product cannot be banned because the rules were not adhered to.
6. If we get into this mind set of banning anything and everything, soon we will be like the Talibanised Afghanistan. We just do not seem to understand the great democracy that we are. I realised this when I spent quite some time in the Gulf. (Perhaps the soft corner for BJP and for what it stands for originated during those days. My late father would be aghast to know of my views today!)

I am not saying NDTV is the holy grail. But Sonia Singh’s religion and that her husband was a Congress minister etc. should in no way influence our decision to watch the documentary and decide for ourselves.

When the Govt has so many problems to overcome, this issue is certainly not a distraction it can ill afford.

What I like is the continued silence of the Prime Minister on the subject. Only wish other guys just told the opposition to shut up and continue with the parliamentary work.

I just wanted to present my view point. May be it was too long. Still ….,

visvanathan

அன்புள்ள விஸ்வநாதன் அவர்களுக்கு

நான் ஆங்கிலக் கடிதங்களுக்கு பொதுவாக பதிலளிப்பதோ பிரசுரிப்பதோ இல்லை. தமிழில் பேசமுடியுமா என்ற முயற்சியே இந்த தளம்

என் கருத்துக்களை மையத்தில் இருந்து விலகியோ, பிழையாகவோ புரிந்துகொண்டிருந்தாலும் பதிலளிப்பதில்லை. ஏனென்றால் பெரும்பாலானவை அத்தகைய கடிதங்களாகவே இருக்கும். அவற்றை போட்டால் தளம் நிரம்பிவிடும்

உங்கள் கடிதம் முதலில் வந்திருக்கிறது என்பதனால் இதை பதிலளித்து பிரசுரிக்கிறேன்

1. நான் அந்த ஆவணப்படம் ஒரு பிரிட்டிஷ் பெண் எடுத்திருப்பதனாலேயே பிழையானது என்று சொல்லவில்லை. தெளிவான ஏகாதிபத்திய- காலனியாதிக்க மனநிலை கொண்ட பிபிஸியின் படம் அது என்பது அந்தப்படத்தை மதிப்பிட முக்கியமான பின்னணி என்றே சொல்கிறேன். பின்னணியைப்பார்க்காதே என்று வாதிடுவதெல்லாம் வெட்டிவாதம். அதைப்பாராமல் எங்கும் எவரும் கருத்துக்களை பார்ப்பதில்லை. எந்தக்கருத்தும் தனியானதும் அல்ல அது ஒரு நீண்ட கருத்துப்பிரச்சார மரபின் ஒரு பகுதியாகவே முன்வைக்கப்படுகிறது. அந்தத் தொடர்ச்சியை அறியாமல் எவரும் கருத்துக்க்களை பார்க்கமுடியாது

2 அத்துடன் லெஸ்லியின் படம் படமாக மட்டுமே பார்க்கப்பட்டால்கூட தெளிவாகவே உள்நோக்கம் கொண்டதாகவும் அரைகுறையானதாகவும்தான் உள்ளது. நிர்பயா நிகழ்ச்சி இத்தனை பெரியதாக ஆனதற்குக் காரணமே இந்தியாவெங்கும் அது உருவாக்கிய அதிர்ச்சி அலை. அதற்கு எதிராக இந்தியாவெங்கும் உருவான கோபம் மற்றும் எதிர்ப்பு. எந்தப் பாலியல்வன்முறைக்கும் பிரிட்டனில் அப்படி ஒரு எதிர்ப்பு வந்திருக்காது. ஆனால் அப்படி ஒரு விஷயமே நிகழவில்லை என்றும் பாலியல்நிகழ்ச்சியை இந்தியா வெறுமே வேடிக்கைபார்த்தது என்றும் மானசீகமாக இந்தியச்சமூகம் அதை ஆதரித்தது என காட்டமுற்படுகிறது லெஸ்லியின் ஆவணப்படம். லெஸ்லி உலகமெங்கும் சென்று இந்தியா நோயுற்ற சமூகம் என பேட்டியளித்துக்கொண்டிருக்கிறார். ஜெர்மனிய பேராசிரியருக்கு அந்த மாணவன் மேல் எழுந்த சினம் அதனால்தான் வந்தது.பாலியல் வன்முறையை ’மௌனமாக ஆதரித்த’ இந்தியாவின் பெரும்பான்மை மக்களில் ஒருவராக அவரை அந்தப்பேராசிரியை புரிந்துகொண்டார். அந்த ஆவணப்படத்தின் நோக்கம் அதுவே

ஜெ

Hello Sir,

First my apologies for not writing in Tamil.

This is my first email to you, couldn’t resist asking this. Aren’t you contradicting yourself in your stance with regard to Maadhorupaagan and India’s daughter?

Didn’t Maadhorupaagan also try to depict a section of Indians and Hinduism in a bad light as India’s daughter? Both the projects are foreign funded.
You rooted for Maadhorupaagan and but not doing so for India’s daughter. Am I missing something here?

Hope I’m not disturbing you amid your schedule, if possible please clarify.

I see both the projects as ill minded and made to create a distasteful perception about India and Hinduism across the world.

Thanks,
Arvinth Esvaran

கவுண்டர்வாள் சமூகத்திற்கு,

கட்டுரையில் நான் தெளிவாகவே சொல்லிவிட்டேன். இந்தியர் ஒருவர் இந்திய சமூகத்தை விமர்சித்து எடுக்கும் படத்துக்கும் இதற்கும் வேறுபாடுண்டு

இரண்டு. இத்தகைய கருத்துக்களை தடைசெய்வது ஆர்ப்பாட்டம் செய்வது வழியாக எதிர்கொள்ளலாகாது. வலுவான எதிர்க்கருத்து வழியாக, பிரச்சாரம் வழியாக எதிர்கொண்டிருக்கவேண்டும்

ஜெ

ஜெ

இந்தியாவின் மகள் தடைசெய்யப்படக்கூடாது என நீங்கள் எனக்கு எழுதிய கடிதத்தில் சொல்லியிருந்தீர்கள்

உங்கள் தரப்பை மதிக்கிறேன். ஆனால் இந்தப்படம் தடைசெய்யப்படாமலிருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்பதும் ஒருவினாவாக என்னுள் உள்ளது. தடைசெய்யபட்டதன் வழியாக பெருமாள்முருகன் பேசப்பட்டார். தடைசெய்யப்படாமலிருந்திருந்தால் இந்தப்படம் இந்தியாவெங்கும் பெரியதாகப் பேசப்பட்டிருக்கும். நம் ஊடகங்கள் இந்த விவாதத்தையே பெரிய விளம்பரதாரர் நிகழ்ச்சியாக ஆக்கியிருக்கும். அதன்வழியாக உண்மையில் அந்த ஆவணப்படம் முன்வைக்கும் ஆணாதிக்கத்தரப்பு மட்டுமே இந்தியாவெங்கும் பரவியிருக்கும்.

மேலும் இந்தியாவின் திரைப்படச்சட்டங்கள், தணிக்கைச்சட்டங்களை ஏற்காத எந்தப்படமும் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை . அப்படி இருக்க பிபிசி எதைவேண்டுமானாலும் எடுக்கும் அதையெல்லாம் இங்கே காட்டவேண்டும், அதுவே கருத்துச்சுதந்திரம் என வாதிடுவதெல்லாம் அபத்தம்

கருத்துச்சுதந்திரம் இந்தியர்களுக்கு மட்டும்தானே ஒழிய இந்தியாமேல் தாக்குதல் தொடுக்கும் அன்னிய சக்திகளுக்கு அல்ல. நாளை இந்தியமுஸ்லீம்கள் கொன்றுகுவிக்கப்படுகிறார்கள் என பாகிஸ்தான் எடுக்கும் ஓர் ஆவணப்படத்தை வெளியிடும் கருத்துச்சுதந்திரம் அளிக்கப்படவேண்டும் என சொல்லமுடியுமா என்ன?

அதை அ.மார்க்ஸும் மனுஷ்யபுத்திரனும் ஜவஹருல்லாவும் ஒவைசியும் கிலானியும் சொல்வார்கள். நான் நடுநிலையும் இந்த தேசத்தின் மேலும் ஜனநாயகத்தின்மேலும் நம்பிக்கையும் கொண்டவர்களைப்பற்றி பேசுகிறேன்

சண்முகம் கண்ணன்

முந்தைய கட்டுரைஇரண்டாயிரத்துக்குப் பின் நாவல்- கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 55