‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 52

பகுதி 11 : முதற்தூது – 4

சகுனி காய்களை நிரப்பியபின் அதுவரை தன்னிலிருந்த இறுக்கத்தை முழுமையாக தளர்த்திக்கொண்டு புண்பட்ட காலை மெல்ல நீவியபடி நிமிர்ந்து அமர்ந்து கிருஷ்ணனை நோக்கினார். அவர்முன் அவரது ஏழடுக்குக் காவல்கொண்ட கோட்டை மெல்லத்திறந்த ஒற்றைவாயிலுடன் அத்தனை காய்களும் ஒன்றுடன்ஒன்று நுணுக்கமாக இணைக்கப்பட்டு ஒற்றை உடலாக மாறி நின்றது. பசித்தது போல அஞ்சியது போல சலிப்புற்றது போல ஒரேசமயம் தோற்றமளித்தது அது.

அதன் அமைப்பை நோக்கி அவரே வியந்துகொண்டார். ஒவ்வொருநாளும் அமர்ந்து ஆடி ஆடி கற்றுக்கொண்ட அனைத்தும் அவரது கைவிரல்களிலேயே குடியேறிவிட்டிருந்தன. காய்தொட்டு எடுத்துக் கோத்து அதை அவர் அமைத்தபோது பெரும்பாலும் சிந்தையற்றிருந்தார். கூடைமுடைவதைப்போல விரல்களே அதை சமைத்தன. இல்லை, சிலந்திவலை. உள்ளிருந்து எழுந்த நச்சு ஊற்றைத் தொட்டு விரல்கள் பின்னிப்பின்னி விரித்தது. மெல்லிய ஒளியால் ஆனது. இருப்பதா இல்லாததா என விழிமயக்குவது. அதன் நடுவே முடிசூடி அவர் அமர்ந்திருந்தார்.

மறுகணம் அவர் மென்மையாக எழுந்து வலுத்துப்பரவிய ஐயத்தை அடைந்தார். உள்ளத்தால் கிருஷ்ணன் பக்கம் சென்று நின்று அதை உடைக்கும் வழிகளை நோக்கினார். ஒவ்வொரு வழியையும் அவர் முன்னரே கண்டு மூடிவிட்டிருந்தார். எத்திசையில் இருந்து கிருஷ்ணன் உள்ளே வந்தாலும் கோட்டைவாயிலில் கொலைப்படை காத்திருந்தது. இருபக்கமும் நண்டின் கொடுக்குகளாக நின்ற இரு குதிரைப்படைகள் வெளித்தெரிந்தவை. ஆனால் அவற்றை வென்று உள்ளே வருபவனை ஏழு வழிகளினூடாக வந்து சூழ்ந்துகொள்ளும் சிறியபடைகள் உள்ளே பெரிய படைகளுக்குள் எப்போதுவேண்டுமென்றாலும் பிரிந்து எழுவதாக கரந்திருந்தன. அவையே மேலும் ஆபத்தானவை.

பெரியபடைகளை அவை பெரிதென்பதனாலேயே எதிரி கூர்ந்து நோக்குவான். அவற்றை நோக்கி அவன் எச்சரிக்கை கொண்டிருப்பதனாலேயே சிறிய உண்மையான கொலைக்கருவிகளை காணமாட்டான். அதை நண்டு என்றனர் சதுரங்கத்தில். நண்டின் பெரிய முன்கொடுக்குகள் எழுந்து அசைய உள்ளே சிறிய கூர்க்கொடுக்குகள் பசித்த வாயிலிருந்து நீண்டிருந்தன. மீண்டும் மீண்டும் அதை உடைக்கும் வழிகளை நோக்கி நோக்கி அவரது உள்ளம் சலித்தது.

கிருஷ்ணன் அவரது கண்களை சிலகணங்கள் நோக்கியபின் புன்னகையுடன் தன் கருக்களை கையில் எடுத்தான். சகுனி அவன் செய்வதை பாராதவர் போல தாடியை நீவிக்கொண்டு சாளரத்தினூடாக வந்த ஒளியை நோக்கியபடி அமர்ந்திருந்தார். கிருஷ்ணன் மிகவிரைவாகவும் உளம்நிறுத்தாமலும் பன்னிரு காய்களை மட்டும் வைத்து ஒரு சிறிய குதிரைப்படையை அமைத்தான். அவனுடைய பெரும்பாலான காய்கள் களத்திற்கு வெளியே வெறும் குவியலாகக் கிடந்தன. தாறுமாறாக அள்ளிவைப்பவன் போல மிகவிரைவிலேயே படையை அமைத்தபின் நிமிர்ந்து கைகளை உரசிக்கொண்டபடி “சித்தமாகிவிட்டேன் காந்தாரரே” என்றான்.

சகுனி நிமிர்ந்து அவனை நோக்கியபோது புருவங்களில் ஒரு முடிச்சு விழுந்து விலகியது. குனிந்து காய்களை நோக்கிய பச்சைவிழிகள் எதையும் காட்டவில்லை. “ம்” என தலையசைத்தார். அவனுடைய உத்தி என்ன என அவருக்குப்புரியவில்லை. தனக்கு ஆடவே தெரியாதென அவரை ஏமாற்ற எண்ணுகிறானா? அவர் அவன் விழிகளை மீண்டும் நோக்குவதைத் தவிர்த்து உதடுகளை இறுக்கியபடி அவன் அமைத்த மிகச்சிறிய படையை மட்டுமே நோக்கினார். அவை ஒருபோதும் அவரது பெரிய கோட்டைக்காவல் அமைப்பை வந்து தொடமுடியாது என தெரிந்தது. என்ன நினைக்கிறான்? ஆனால் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அப்படி என்ன நினைக்கிறான் என குழம்பவைத்துவிட்டான். அதுவே வெற்றிதான்.

கிருஷ்ணன் பகடைகளை எடுத்து உருட்டினான். மூன்று விழுந்ததும் இரு விரல்களால் மூன்றுகாய்களை நகர்த்திவைத்தான். மூன்று புரவிகள் அம்புபோல நீண்டு கோட்டையின் முகப்பை நோக்கி வந்தன. சகுனி பகடைகளை உருட்டினார். பகடைகள் ஒன்றுடன் ஒன்று முட்டி மெல்லிய நகைப்பொலியுடன் உருள ஏழு விழுந்தது. ஏழு காய்களைக்கொண்டு என்ன செய்வதென்று அவரால் முடிவெடுக்கமுடியவில்லை. யானையை நெருங்கும் எலி என அவரை நோக்கி வந்த அவனுடைய சிறிய படையை புறக்கணிப்பதுதான் நல்லது. ஆனால் ஆடியாகவேண்டும்.

சிலகணங்களுக்குப்பின் அவர் காய்நீக்கம் செய்தார். காலாட்கள் கிளம்பி கிருஷ்ணனின் குதிரைகளை சூழ்ந்துகொண்டனர். கிருஷ்ணன் நான்கு நகர்வுகள் மூலம் தன் சிறியபடையை மேலும் மேலும் பின்னிழுத்து தன் பின்எல்லை நோக்கி கொண்டுசென்றான். சகுனி கிருஷ்ணனை நோக்குவதை முற்றிலும் தவிர்த்து மீண்டும் பகடை உருட்டி ஆறு நகர்வுகளை அடைந்து மேலும் காலாட்களைக் கொண்டுவந்து கிருஷ்ணனின் குதிரைகளை வளைத்தார். மும்முறை கிருஷ்ணன் பின்னகர்ந்து தன் இறுதி எல்லையை அடைந்தான். அஞ்சிய குழந்தை என அவனுடைய சிறுபடை சுவரோடு ஒட்டி நின்றது.

சகுனி செய்வதற்கு ஒன்றே இருந்தது, அச்சிறு படையை தொடர்ந்து துரத்திச்சென்று வளைக்க முயல்வது. ஆனால் அதுதான் அவன் விரும்புவதா? நாயை விரும்பிய இடத்திற்கு கொண்டுசெல்வதுபோல தன்னை உசுப்பி கூட்டிச்செல்கிறானா என எண்ணிக்கொண்டார். ஆனாலும் அதையே செய்தார். அங்கே தயங்குவது அச்சம்கொள்வதாக ஆகும். அச்சத்தை ஆட்டத்தின் தொடக்கத்தில் வெளிக்காட்டுவது பிழை. எச்சரிக்கையாக இருப்பதும் அச்சத்தையே காட்டும்.

அதேசமயம் தன் காலாட்களை மையப்படையிலிருந்து அறுபட்டுச்செல்ல விடமுடியாது என உணர்ந்த சகுனி தொடர்ச்சியாக காலாட்களை ஒருவருடன் ஒருவர் எனத் தொடுத்து அனுப்பிக்கொண்டே இருந்தார். கிருஷ்ணனுக்கு மூன்றும் ஆறும் விழுந்தன. அந்நகர்வுகள் மூலம் அவன் படைகள் முழுமையாக பின்வாங்கி பரவி தனித்தனிக் காய்களாக மாறி ஒடுங்கிவிட்டன. நால்வர் மட்டும் எஞ்சிய அவனுடைய சிறியபடை பொந்தில் இருக்கும் முயலென அமர்ந்திருக்க நரிக்கூட்டம் போல அவரது காலாட்கள் அதைச் சூழ்ந்து நின்றிருந்தனர். முற்றிலும் தனக்குரிய இடம். ஆட்டமே முடியலாமெனத் தோன்றும் தருணம். ஆனால் அத்தனை எளிதாக அவன் தோற்கமாட்டான். அவர் அவனை உள்ளூர அறிந்திருந்தார்.

கணங்களின் எடை மிகுந்தபடியே சென்றபோது சட்டென்று சகுனி உணர்ந்தார். இருவருமே பன்னிரண்டுக்காக காத்திருப்பதை. பன்னிரண்டு விழாமல் சகுனியால் கிருஷ்ணனின் குதிரைப்படையை முழுமையாக வெல்லமுடியாது. ஏனென்றால் அது சிதறியது. ஆனால் பன்னிரண்டை அளிப்பது பகடை உருளும்போதெல்லாம் வந்து விண்ணகத்தை நிறைத்திருக்கும் தெய்வங்களின் கணக்கு மட்டுமே. பகடையை முழுவாழ்க்கையாகவும் முடிவற்ற பிரபஞ்சநாடகமாகவும் ஆக்கும் உள்ளாழத்தை அவர்களே உருவாக்குகிறார்கள்.

பொறுமையை இழக்காமலிருக்க அவர் தன் கைகளால் களத்தை சீரான தாளமாக தட்டிக்கொண்டு காய்களை மட்டும் நோக்கிக்கொண்டிருந்தார். அவரது அகம் எதிர்நோக்கித்தவித்த அந்த கணத்தில் கிருஷ்ணன் பன்னிரண்டை அடைந்தான். அவர் ஒருவகையான விடுதலையை அடைந்ததுபோல உடல் தளர்ந்தார். அவனுடைய படை வலையென மாறி சூழ்ந்து கொண்டது. அவரது இருபத்தேழு காலாட்களை வென்று அள்ளிக் குவித்தான் கிருஷ்ணன். பின்பு இயல்பாக பகடையை வைத்தபடி “தாங்கள்” என்றான்.

சகுனி புன்னகையுடன் நிமிர்ந்து அவனை நோக்கியபடி பகடையை உருட்டினார். அவனுடைய ஆட்டமுறையை அவர் கற்றுக்கொண்டுவிட்டார். அவனுடையது குழியானை முறை. மென்மையான மண்சுழலில் சிக்கவைத்து தாக்குவது. இவ்வளவுதான் உன் உத்தியா? நான் இதிலிருந்து என் ஆட்டத்தை ஆடத்தொடங்கியவன். அவர் தாடியை நீவி தலையை அசைத்தபடி காய்களை நீக்கினார். அவனுடைய முறைமையை தான் கற்றுக்கொண்டதை அவன் அறியக்கூடாதென எண்ணினார்.

பின்னர் தன் காலாட்களை நீண்டு செல்ல அவர் விடவில்லை. அவரது படை பெரிய வலை போல ஒட்டுமொத்தமாக மெல்ல விரிந்தது. ஆனால் இம்முறை கிருஷ்ணன் தன் குதிரைகளை அம்புபோல குவித்து விரைந்து அவரது காலாட்படைப்பரப்பின் மையத்தைத் தாக்கி உடைத்து கோட்டையின் வாயில்வரை சென்றுவிட்டான். அவர் தன் முழுப்படைகளையும் அவனை நோக்கிக் குவிக்க நான்குமுறை பகடையுருட்டவேண்டியிருந்தது. அதற்குள் அவரது ஏழுகுதிரைகளையும் ஆறுகாலாட்களையும் வீழ்த்திவிட்டு தனக்கு ஒரே ஒரு குதிரையிழப்புடன் கிருஷ்ணனின் படை மீண்டும் தன் பாதுகாப்பு எல்லைக்குள் சென்றுவிட்டது.

சகுனி மெல்ல முனகினார். அவனுடைய தாக்குதலை வல்லூறு முறை என்பார்கள். கூரிய பாய்ச்சலால் ஒற்றைப்புள்ளியை தாக்குவது. அவனுடைய ஆட்டமுறை என்பது எந்த வரையறைக்குள்ளும் அடங்காமல் தொடர்ந்து பலகோணங்களில் தாக்கி தன்னுடைய அணியை உடைத்துக்கொண்டே இருப்பதுமட்டுமே என தோன்றியது. அவனுடைய வலக்கையருகே கிடந்த காய்க்குவியலை ஓரவிழியால் நோக்கினார். எந்த உருவைவேண்டுமானாலும் எடுக்கக்கூடிய பாதாளமூர்த்திகள் போல அவை அங்கே கிடந்தன. அவற்றைப் புரிந்துகொள்ள அவன் உள்ளத்தை புரிந்துகொள்ளவேண்டும். அவனோ தன் உள்ளமென ஒரு குழந்தைவிளையாட்டை உருவாக்கி இக்களத்தில் வைத்திருக்கிறான்.

மேலும் மூன்றுமுறை காய்களை நீக்கியபோது அவர் தன்னுள் கணக்கிட்டுக்கொண்டே இருந்தார். அவனுடைய உள்ளம் நோக்கி செல்ல முயல்வதைப்போல வீண்வேலை ஏதுமில்லை. முடிவெடுக்கப்படாததும் அறியப்படாததும் எல்லையற்ற ஆழம் கொண்டவை. எல்லையின்மையை தன் படைக்கலமாக வைத்திருப்பவன் பேருருக்கொண்டவன். அவர் அவனை நிமிர்ந்து பார்க்க அப்போது அஞ்சினார். அவன் களத்தில் பல்லாயிரம் காய்கள் பெருகலாம். அவை மழைபோல அவரது களத்தில் பெய்து நிறையலாம். எதுவும் நிகழலாமென்பதுபோல அச்சமூட்டுவது பிறிதேது? அதை வைத்து விளையாடுபவன் இவன்.

அவன் களத்தில் முன்வைக்கும் காய்களை மட்டும் நோக்குவதே சிறந்தது என சகுனி கண்டடைந்தார். அது அவரது ஆற்றல் சிதறாமல் தடுக்கும். ஓரிரு ஆட்டங்களுக்குள் அதன் பெரும்பாலான வழிகள் தெரியத்தொடங்கிவிடும். எப்படியானாலும் களம் கண்முன் திடமாக உள்ளது. காய்களும் விழிதொடக்கூடியவையாக உள்ளன. எத்தனை அருவமானதாக இருந்தாலும் உள்ளம் அவற்றில்தான் நிகழ்ந்தாகவேண்டும். அவனை எதிர்கொள்ளும் ஒரே வழி அதுதான். அவன் தன் பேருரு சுருக்கியாகவேண்டும்.

இம்முறை அவனுடைய முன்னகர்வை அவர் இயல்பாக முறியடித்தார். உள்ளே நம்பிக்கை மேலெழுந்தது. மீண்டும் அவனை தோற்கடித்தார். அவன் முழுமையாக பின்வாங்கி தன்னை மீண்டும் தொகுத்துக்கொள்ளவேண்டியிருந்தது. அவர் நிமிர்ந்து அவனை நோக்கி புன்னகை செய்தார். நம்பிக்கையிழப்பவனை முழுமையாக தோற்கடிக்க அப்புன்னகை உதவும். அது அவன் நெஞ்சில் நஞ்சாகக் கலக்கும். அவன் கைகள் நடுங்கத்தொடங்கும். அவர் பின்னர் அவனை முழுமையாகவே தவிர்த்து காய்களை நோக்கினார்.

கிருஷ்ணன் தன்னை முழுமையாக கலைத்துக்கொண்டு களத்தில் பொருளற்ற காய்களாக சிதறிக்கிடந்தான். மலைச்சரிவில் விழுந்து உடைந்து பரவிய உச்சிப்பாறை. அவர் தன் குதிரைகளை வெறுமனே நகர்த்தினார். காலாட்களை ஒருவரோடொருவர் வெறுமனே இணையவும் பிரியவும் செய்தார். நீ பொருளற்றவனாக இருக்கையில் நான் உன்னுடன் மோதமாட்டேன், கரியவனே. நீ கொள்ளும் பொருளை மட்டுமே என்னால் கையாளமுடியும். அப்பொருளாக நீ உன்னை குவித்தாகவேண்டும் என்னும்போது நீ என் களத்திற்குள் அடங்கும் எளிய எதிரி. உன் உள்ளமெனும் களமல்ல, என் கையும் கண்ணும் கருத்துமறிந்த இக்களத்தில் நிகழும் போர் இது.

அவனுடைய கருக்கள் மீண்டும் உருவாகி வந்தன. நீர்ப்பாம்பு போல அவை உருக்கொண்டு தயங்கித்தயங்கி நீந்தி வந்து அவரது கோட்டையைத் தாக்கி உடனே கலைந்து மீண்டன. மறுகணமே உருக்கொண்டு அவரது கோட்டைக்காவல்முனை ஒன்றை தாக்கி நான்கு குதிரைகளை சிதறடித்தன. அவர் தாக்க முனைந்தபோது பின்வாங்கி தன்னை தொகுத்துக்கொண்டான். பின்னர் அவன் ஒன்றையே செய்யத்தொடங்கினான். அஞ்சும் கைவிரல் நுனி என அவன் படை வந்து அவர் கோட்டையை தொட்டது. அவரது படை எழுந்ததும் விரைந்து பின்வாங்கியது. மீண்டும் வந்தது.

விளையாடத்தொடங்குபவர்களின் எளிய உத்தி. எதுவும் நிகழாமல் நெடுநேரம் விளையாட இளையோர் அதை கையாள்வதுண்டு. குழந்தைகளின் விளையாட்டு. ஆனால் மீண்டும் மீண்டும் அவன் சலிக்காமல் அதையே விளையாடினான். ஒரு கணத்தில் சகுனியின் அகம் திகைத்தது. இவன் யார், குழந்தையேதானா? ஒரு கோப்பையையும் கரண்டியையும் வைத்துக்கொண்டு சலிக்காமல் விளையாடும் கைக்குழந்தை என அவன் அதையே திரும்பத்திரும்ப செய்துகொண்டிருந்தான். மாறுதல் இல்லை. வளர்ச்சி இல்லை. மீண்டும் மீண்டும் மீண்டும்.

சலிப்படையாதே என சகுனி தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். இது இவன் எனக்கு விரிக்கும் வலையாக இருக்கலாம். என்னை சோர்வடையச்செய்கிறான். என் பொறுமையை அழிக்கிறான். நிலைகுலைந்து நான் கூரிழக்கையில் தன் கரவுக்கொலைக்கருவியை வெளியே எடுப்பான். இப்போது இவனை பொறுமைவழியாகவே வெல்லமுடியும். இவனுடைய வலையில் சிக்கப்போவதில்லை. சிறியமீன்களுக்குத்தான் வலை. பெரியவற்றுக்கு ஒவ்வொரு மீனுக்கும் தனித்தனியாக அமைக்கப்படும் கோடரித்தூண்டில் வேண்டும் கரியவனே!

ஆனால் மெல்லமெல்ல அவர் பொறுமை அழிந்துகொண்டிருந்தது. மானுடனின் அறிவு சற்றேனும் ஒரு புதுமையை எதிர்பார்க்கிறது. உள்ளம் கொஞ்சமேனும் உணர்வை விழைகிறது. ஆனால் அங்கே மீளமீள ஒன்றே நிகழ்ந்துகொண்டிருந்தது. சிறியகுதிரைப்படையாக வந்து தாக்கிச்சென்றவன் அதேபோன்று அதே எண்ணிக்கை குதிரைகளுடன் மீண்டும் வந்தான். மீண்டும் வந்தான். மீண்டும் வந்தான்.

இல்லை, இவன் குழந்தையேதான். முதிர்ந்த உள்ளம் இத்தனை முறை ஒன்றையே திரும்பத் திரும்ப செய்யாது. அவர் அவன் கண்களை நோக்கினார். அவற்றில் சற்றும் சலிப்பில்லை என்பதைக் கண்டு திடுக்கிட்டு விழிவிலக்கிக்கொண்டார். புதுவிளையாட்டைக் கண்டடைந்த குழந்தையின் உவகை மட்டுமே அவற்றில் இருந்தது. ஒவ்வொருமுறையும் பெருஞ்செயலை செய்யப்போகும் எழுச்சி, செய்வதன் துடிப்பு, செய்துவிட்டதன் களிப்பு. மீண்டும் மீண்டும். மீண்டும் மீண்டும். அப்படியே…

தெய்வங்களே, என்ன செய்துகொண்டிருக்கிறேன்! இல்லை முடியாது. இப்படி திரும்பத்திரும்பச் செய்தால் நானும் இயற்கைப்பருப்பொருட்களில் ஒன்றாக ஆகிவிடுவேன். என் சித்தம் இதோ உறைந்து பொருளிழக்கிறது. இதை ஆட என் கைகளே போதும்… என் அறிவு தேவையில்லை. நான் கற்றவை தேவையில்லை. நானே தேவையில்லை. புல்லும் புழுவும் புள்ளும் புன்விலங்கும் செய்யும் அதுவேதான் இதுவும்…

ஒரு கணத்தில் பெருந்திகைப்புடன் அவர் உணர்ந்தார். தன்னைச்சுற்றி அனைத்துமே அப்படித்தான் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்று. பொருளற்ற சுழற்சி. மீண்டும் மீண்டும். மீண்டும் மீண்டும். தெய்வங்களே, பொருளென நான் காண்பதெல்லாம் நானே உருவாக்கிக்கொள்வதா என்ன? இப்பொருளற்ற பெருஞ்சுழற்சியை வெல்ல ஒவ்வொன்றிலும் என்னைப்பெய்து நான்தான் வேறுபடுத்திக்கொள்கிறேனா? நானறியும் வேறுபாடென்பது நானெனும் துளி மட்டும்தானா? என்ன எண்ணங்கள் இவை? எப்போது இத்தகைய வீண்சிந்தைகளை அடையத்தொடங்கினேன்? ஏதோ ஆகிவிட்டிருக்கிறது எனக்கு. இவன் தன் மாயத்தால் என் அகத்தை மயக்கிவிட்டிருக்கிறான். விழித்துக்கொள்ளவேண்டும். இப்போதே…

என்னை சலிப்பூட்டிவிட்டான். ஆம், அதுதான் இவன் வழி. சலிப்பை வெல்வது வழியாகவே இவனை கடப்பேன். இந்த வீண்சுழற்சியில் என் கற்பனையை பெய்கிறேன். என் பொருள்கோடலை நிகழ்த்துகிறேன். இந்தக்குதிரைப்படை ஒரு அம்பு. இந்தக் காலாள் ஓர் அலை. குதிரையின் அலை. அலையிலெழும் குதிரை. குதிரையில் ஏறிவருகிறது ஒரு மலர். ஐந்து கைகள் கொண்ட மலர். என் காய்களால் குதிரைகளை மலருக்குள் அடைக்கிறேன். மலரிதழ்களை இறுக்கி மூடுகிறேன். மலர்வட்டம் சிலந்திவலையானதென்ன? சிலந்தி எட்டு கைகளுடன் நச்சுக்கொடுக்குகளுடன் எழுந்து வந்து நின்றது. புல்லிவட்டமாக சிதர் விரித்து மகரந்தம் காட்டியது. நீண்ட அல்லிவிரித்து கொட்டியபின் நண்டாக மாறி பக்கவாட்டில் நடந்தகன்றது.

இல்லை, இது சரியான வழி அல்ல. இதற்கு முடிவே இல்லை. இது நுரையெனப்பெருகி என்னை சூழ்கிறது. முடிவிலா பொருளிலிச் சுழற்சியை வெல்ல இந்த பொய்ப்பொருள்கொண்ட முடிவிலிச்சுழற்சி என்பது ஒரு நல்ல வழி அல்ல. இது ஆடி முன் ஆடி. முடிவிலியில் நின்றிருக்கிறேன். ஆயிரமெனப்பெருகி. ஆயிரத்திலும் ஒன்றே நிகழும் பொருளிலியின் பொருளாகி. என் சித்தம் திகைத்துச் சலிப்பது ஏன்? வானமென விரிந்த என் சலிப்பின் வெளியில் எப்படி நான் ஒரு அணுத்துளியாக சிறுத்தேன்?

என்ன செய்கிறான்? என்னை மூடன் என எண்ணுகிறான். என் பொறுமையை இழந்து நான் இவன் முன் சிதறுவேன் என திட்டமிடுகிறான். இத்தனை சிறிய உத்தி வழியாக என்னை வென்றுவிடலாமென எண்ணுகிறான் என்றால் என்னை என்னவென்று எண்ணினான்? என் உளத்திறனையும் பயிற்சியையும் இவன் மதிக்கவில்லை. என்னையும் ஓர் எளிய விலங்கென்றே மதிப்பிட்டிருக்கிறான். நான் சுபலமைந்தனாகிய சகுனி. நான் காந்தாரன். அழிப்பவன். அழிவில் திளைத்து முளைத்தெழுந்து விரிந்து கிளையிலைத்தளிர்மலர்மகரந்தமென நிறையும் நஞ்சு நான்.

சினம் கொண்டிருக்கிறேன். சினமே நான் இவனுக்களிக்கும் கடைத்திறப்பு. சினமில்லை. சினத்தை அழுத்தி அழுத்தி இறுக்குகிறேன். குளிரச்செய்கிறேன். கல்லாக்குகிறேன். இதோ நான் கல்லென்றாகிவிட்டிருக்கிறேன். என்னிடம் எந்த உணர்ச்சியும் இல்லை. இதோ என் கரங்கள் இதை செய்துகொண்டிருக்கின்றன. என்னை சூழ்ந்திருக்கும் வெளியில் அனைத்தும் எவ்வண்ணம் நிகழ்கின்றனவோ அவ்வாறு பொருளிலாது. மீண்டும் மீண்டும். இதற்கு அறிவு தேவையில்லை. உணர்வுகள் தேவையில்லை. இதில் மிதப்பது. இதில் பொருத்திக்கொள்வது. இதில் இருந்துகொண்டிருப்பது.

இவ்வளவுதான். இதோ நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இதுதான் என்றும் நிகழ்ந்துகொண்டிருக்கிறதா என்ன? இக்குழந்தை என் முன் அமர்ந்து ஒருதுளியும் குன்றாத பேருவகையுடன் விளையாடுகிறது. நான் அதன் துல்லியமான ஆடிப்பாவையென அமர்ந்திருக்கிறேன். பொருளற்று ஆடும் குழந்தை நான். குழந்தை அறியும் குழந்தை அவன். குழந்தைகளின் நடுவே குழந்தைகள் மட்டுமே அறியும் வெளியென இக்களம்.

ஆனால் நான் பிரிந்துவிட்டிருக்கிறேன். ஆடுபவனை அப்பால் நின்று செயலற்று நோக்கிக்கொண்டிருக்கிறேன். களம் என்னை மீறி நிகழ்கிறது. என் விழிகளன்றி எதனாலும் அதை நான் தீண்டமுடியாமலாகிவிட்டிருக்கிறது. பேரச்சத்துடன் சகுனி நோக்கினார். அவன் விரியத்தொடங்கினான். நான்கு எட்டு பதினாறு முப்பத்திரண்டு அறுபத்துநாலு நூற்றுஇருபத்தெட்டு இருநூற்று ஐம்பத்தாறு என விரியும் கரங்களின் காடு. நெஞ்சப்பெருவெளி. கண்களின் கடுவெளி.

அவன் கையில் விழுந்தவை அனைத்தும் பன்னிரண்டுகள். அவன் காய்களனைத்தும் இடி முழங்கும் கருமுகில்குவைகளாக மாறின. அவற்றை அள்ளிவந்த புயல் அவரது கோட்டைகளை முழுமையாக சூழ்ந்துகொண்டது. அவர் தன் கோட்டையின் காவலரண்களனைத்தும் நுரைக்குமிழிகளென உடைந்து சரிவதை வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தார். ஒவ்வொன்றாக சரிந்தது. ஒன்றுகூட எஞ்சாமல். ஏன் நான் பார்த்திருக்கிறேன்? ஏதாவது செய்யவேண்டும். பகடைகளை உருட்டி பன்னிரண்டுகளாக அள்ளவேண்டும். என் காவலரண்களுக்குச் சுற்றும் புரவிகளை நிறுத்தவேண்டும். என் கோட்டையை நோக்கி முன்னேறும் இப்படைவெள்ளத்தை அரண்கட்டி அடக்கவேண்டும்.

ஆனால் நான் கனவுகண்டுகொண்டிருக்கிறேன். கனவைக் காண மட்டுமே முடியும். கனவை மாற்றியமைக்கும் வல்லமை அதை காண்பவனுக்கு அளிக்கப்படவில்லை. பதைபதைக்க அதை வெறுமேனே பார்த்திருப்பதனாலேயே அதன் வதை பெருகிப்பெருகி சூழ்ந்து அள்ளிக்கொள்கிறது. கடலில் தனிமீன் என அதில் திளைக்கும் என்னைச்சூழும் ஆயிரம் ஆயிரம் அலையெண்ணப்பெருக்குகளின் நுரைகளை தொடுகிறேன். அத்தனை குளிராக. அத்தனை அமைதியாக. அத்தனை மென்மையாக. அத்தனை நுணுக்கமாக. துளித்துளியென விரியும் பெருங்கடல்.

ஒருகணம் எஞ்சியிருந்தது. சகுனி தன்னை அரக்கிலிருந்து மீட்டுக்கொள்ளும் ஈயென விடுவித்துக்கொண்டு மொத்த ஆற்றலாலும் பகடையை உருட்டி பன்னிரண்டை அடைந்தார். பன்னிரண்டு பன்னிரண்டு பன்னிரண்டு. அவர் அள்ளக்கூடிய அத்தனைகுதிரைகளையும் கொண்டு தன் கோட்டைவாயிலை வெளியே இருந்து மூடினார். மீண்டுமொரு எட்டு. தன் அமைச்சர்களையும் படைத்தலைவர்களையும்கொண்டு வாயிலை உள்ளிருந்து மூடினார். உள்ளே அவரது அரசன் நடுங்கியபடி தனித்து அமர்ந்து செவிகூர்ந்தான்.

அவனிடம் எஞ்சியது ஒரு பகடை. அதுவும் பன்னிரண்டு. உச்சங்களில் ஏன் பன்னிரண்டுகள் இத்தனை எளிதாக நிகழ்கின்றன. அவன் படையின் அலை எழுந்து வந்து அவரது கோட்டைவாயிலை அடைந்தது. மீண்டுமொருமுறை அவன் பகடையை உருட்டமுடியும். ஆனால் அவன் பகடைகளை கீழே போட்டுவிட்டு சிரித்தபடி “இனி ஆடியும் பயனில்லை சௌபாலரே. பிறிதொரு களம், பிறிதொரு தருணம்” என்றான்.

நூறுகல் எடையை இறக்கி வைத்ததுபோல சகுனியின் உடல் தளர்வுற்றது. பெருமூச்சுடன் தாடியை நீவியபடி சற்று அசைந்து அமர்ந்து கணிகரை நோக்கினார். கணிகர் ஆட்டத்தை சற்றும் நோக்கவில்லை என்பதை அவரது விழிகளில் கண்டு திகைத்து சாத்யகியை நோக்கினார். அந்த யாதவ இளைஞன் கணிகரையே நோக்கிக்கொண்டிருந்தான். அப்படியென்றால் அவரும் அவனும் மட்டுமே அறிந்ததாக ஓர் ஆட்டம் நிகழ்ந்து முடிந்திருக்கிறது. “ஆம், அடுத்த ஆடல்” என்றார்.

“நிகரியில் முடிந்தது உவகை அளிக்கிறது” என்று கிருஷ்ணன் சொன்னான். “வெற்றியோ தோல்வியோ நம் முதல் சந்திப்பை சோர்வுறச்செய்திருக்கும்.” சகுனி இதழ்களை புன்னகை போல நீட்டி “ஆம்” என்றார். அவர் திரும்பி நோக்க ஏவலன் வந்து காய்களையும் கருக்களையும் எடுத்து பேழையில் அடுக்கத் தொடங்கினான். அவர் வலியுடன் தன் காலை எடுத்து கீழே வைத்து “ஏதேனும் அருந்துகிறீர்களா?” என்றார். “ஆம், எதையாவது” என்றான் கிருஷ்ணன். “தாங்கள் விரும்பியதை அருந்தலாம்” என்றார் சகுனி. கிருஷ்ணன் “நான் விழைவது குருதியை” என்றான்.

சகுனி திடுக்கிட்டு அவனை நோக்க அவன் நகைத்து “அஞ்சிவிட்டீர்களா?” என்றான். “துவாரகையில் திராட்சைமதுவை நாங்கள் குருதி என்போம். முன்பு நான் என் மாதுலர் கம்சரைக் கொன்றபோது அவரது குருதியைக் குடித்ததாக சூதர்கள் பாடத்தொடங்கினர். அதுவே நீடிக்கட்டும் என விட்டுவிட்டேன்… அன்றுமுதல் இப்பெயரை சூட்டியிருக்கிறோம்.” சகுனியும் நகைத்து “ஆம், நல்ல பெயர்தான்” என்றபின் திரும்பி ஏவலனிடம் செம்மது கொண்டுவரச்சொன்னார். அந்த ஒரு கணநேர நடுக்கம் ஏன் வந்தது என வியந்துகொண்டார். அதை வெளிக்காட்டிவிட்டேனா என்ன?

செம்மதுவை அருந்தியதும் கிருஷ்ணன் எழுந்துகொண்டு “மாலை அவையில் சந்திப்போம் காந்தாரரே. அனைத்தும் இந்த விளையாட்டைப்போல எளிதாக முடியுமென நினைக்கிறேன்” என்றான். “முடியவேண்டும். ஏனென்றால் இது நம் வாழ்வல்ல. பாரதவர்ஷத்தின் மக்களின் வாழ்க்கை” என்ற சகுனி திரும்பி கணிகரிடம் “என்ன சொல்கிறீர்?” என்றார். எங்கிருந்தோ மீண்டு வந்து “ஆம் ஆம்” என்றார் கணிகர்.

அவர்கள் கிளம்பியபோது அவர் எழுந்து வாயில்வரை வந்து வழியனுப்பினார். அவர்கள் பேசிச்சிரித்தபடி தேரில் ஏறிக்கொள்வதை வாயிலில் நின்று நோக்கிக்கொண்டிருந்தார்.

முந்தைய கட்டுரைபஞ்சம்,சுரண்டல்,வரலாறு
அடுத்த கட்டுரைஆதிமெய்ப்பொருளான வெளியின் பெருந்தரிசனம்(விஷ்ணுபுரம் கடிதம் ஆறு)