இந்த வருடம் ஓடியவேகத்தை திரும்பிப்பார்த்தால் திகைப்படையச் செய்கிறது. பிப்ரவரி 9 ஆம் தேதி தொடங்கியது இது. வெண்முரசின் அத்தியாயங்களை சில பகுதிகள் முன்னரே எழுதிவைக்கலாமே என முயன்றேன். அது பற்றிக்கொள்ள இரவுபகலாக நீண்ட அவஸ்தை. உள்ளம் கொந்தளித்துக்கொண்டே இருந்தாலும், தூக்கம் அனேகமாக சற்றும் இல்லாமலிருந்தாலும், உடல்நிலை மிகச்சிறப்பாகவே இருந்தது. ஆனால் எப்போதும் உடலில் ஒரு சின்ன விதிர்ப்பு. தோல் மென்மையாக ஆகிவிட்டதுபோல. காய்ச்சலில் இருப்பதுபோல.
ஏழாம் தேதிதான் மெல்ல அடங்கி நிலம் தொட்டேன். இப்போது நினைக்கும்போது அது ஒரு வெறும் கனவாக மிகமிகப்பின்னால் இருந்துகொண்டிருக்கிறது. அது ஓர் அபாயகரமான ஆட்டம் என இன்று நினைக்கிறேன். இனி அந்த எல்லைக்குக்குஅப்பால் செல்லக்கூடாது என உறுதிகொள்கிறேன். இனி ஒவ்வொரு அடியிலும் ஒரு சிறு கவனம் கூடவே இருக்கவேண்டும். ஆனால் அதன் லாபம் என்னவென்றால் 15 அத்தியாயங்கள் வெண்முரசு முன்னால் சென்றுவிட்டது. பித்தில் எழுதும்போது ஞாபகம் கொள்ளும் துல்லியம் பிறகெப்போதும் வருவதில்லை
பிப்ரவரி ஏழாம் தேதி மாலை கோவை சென்றேன். எட்டாம் தேதி பூமணிக்குப் பாராட்டுவிழா. 9 கோவையில் இருந்தேன். பத்தாம் தேதி காலையில் நாகர்கோயில் திரும்பி அன்று மாலையே கிளம்பி 11 ஆம்தேதி சென்னை. மறுநாள் 12 அன்று மதியம் வடகிழக்குப் பயணம்.சூரியதிசையைப் பார்த்துவிட்டு 27 ஆம்தேதி காலை நாகர்கோயில் வந்தேன். வந்ததுமே வெண்முரசை தொடரும் பணி. நான்காம் தேதி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் உரை. ஐந்தாம்தேதி ஈரோட்டில் விஸ்வம் மகன் திருமணம். ஆறாம் தேதி மார்த்தாண்டம் கிறித்தவக்கல்லூரியில் உரை.
பதினொன்றாம் தேதி மாலை ராய் மாக்ஸம் என் வீட்டுக்கு வந்துவிட்டார். அதற்கு முன் இரண்டுநாட்கள் அருண்மொழி வீட்டை சுத்தம்செய்யும் பணியில் என்னையும் இணைத்துக்கொள்ள உடம்பெல்லாம் தூசியாக ஒரு குட்டி வாழ்க்கை. சொந்தசெலவில் சாரதா நகரின் குப்பைமேடுகள் மூன்றை அகற்றித் தூய்மை செய்தோம்.
ராய் வந்தபின் தொடர்பயணங்கள். 12 அன்று பத்மநாபபுரம், வில்லுக்குறி. 13 அன்று கால்டுவெல்லின் இடையன்குடி மற்றும் மணப்பாடு. 13 மாலை செல்வேந்திரனும் திருக்குறளரசியும் வந்தனர். மறுநாள் 14 அன்று கன்யாகுமரிக்கு குமாரி இளவெயினி தலைமையில் பயணம். அன்றே மாலையில் ரயிலில் கிளம்பி சென்னை. 15 ஆம்தேதி சென்னையில் ராய் மாக்ஸம் விழா. வளசரவாக்கத்தில் நண்பர் மதியின் விருந்தினர் இல்லத்தில் தங்கியிருந்தேன். நண்பர்கள் காலைமுதல் குழுமி தொடர் உரையாடல். மாலையில் கூட்டம்
மறுநாளும் சென்னை. விசாவுக்கான விண்ணப்பம். அருண்மொழியின் அப்பா அம்மா இருவரும் நாகர்கோயிலுக்கு 14 ஆம் தேதி மாலையிலேயே வந்தனர். அவள் அம்மாவுக்கு சற்று உடல்நிலை சரியில்லை. அம்மாவும் பெண்ணும் குலவ விரும்பியதனால் ஒருவாரம் வீட்டுப்பக்கமே வராதே என அருணா ஆணையிட்டாள். அதைச் சொன்னதும் அரங்கசாமியும் மதியும் மேகமலைக்குப்போகலாமே என்றனர்
மேகமலைக்கு 17 ஆம்தேதி மதியம் சென்றுசேர்ந்தேன். ஒரே ஒரு தங்கும்விடுதியும் பக்கத்தில் சின்ன உணவகமும் மட்டும் கொண்ட மலைவாசஸ்தலம். நல்ல குளிர் இருந்தது. செந்தில்குமார்தேவன் 18 மாலை வந்துசேர்ந்தான். அங்கிருந்து எழுதிக்கொண்டும் ஏரியைச்சுற்றி தனிமையில் நடைசென்றுகொண்டும் இருந்தேன். மலைப்பகுதிகளுக்கே உரிய இனிய வெயில். வானம் மேகமே இல்லாமல் துல்லியமான நீலத்தில் மின்னியது. ஆகவே ஏரிப்பரப்பும் இலைத்தழைப்புகளும் எல்லாம் ஒளிகொண்டு கண்களை நிறைத்தன
21 ஆம் தேதி கீழிறங்கி போடிநாயக்கனூரில் ஒரு ஓய்வு விடுதியில் இருந்தேன். அரங்கசாமியும் மதியும் வந்தனர். 22 நள்ளிரவில் கிளம்பி 23 காலை நாகர்கோயில் வந்தேன். இன்றுபகல் மட்டும்தான் இங்கே. மாலை 930 ரயிலில் எர்ணாகுளம். ஒரு சினிமா. அன்றுமாலையே விமானத்தில் சென்னை. சென்னையில் இருநாட்கள். திருவண்ணாமலைக்குச் செல்ல வாய்ப்பு
இத்தனைக்கும் நடுவே வெண்முரசு ஓடிக்கொண்டிருக்கிறது. கவனித்திருக்கிறேன், பெரும் நெருக்கடியில் எழுதிய அத்தியாயங்கள்தான் பெரும்பாலும் மிகச்சிறப்பானவை. என் கணிப்பில் சகுனியும் கிருஷ்ணனும் பகடைஆடும் காட்சி முக்கியமான ஒன்று. அதை அங்குமிங்கும் அலைந்து ‘பறந்துகொண்டு’ எழுதியிருந்தேன்