ஆதிமெய்ப்பொருளான வெளியின் பெருந்தரிசனம்(விஷ்ணுபுரம் கடிதம் ஆறு)

”எல்லையற்ற நாதப்பெருவெளியில் இந்த விஷ்ணுபுரம் ஒரு சொல்தான். எல்லா சொல்லுக்கும் முன்னும் பின்னும் மெளனம் உள்ளது. நாதத்தின் உச்சம் மெளனம். அதில் ஒரு துளியை அர்த்தம் ஒரு அபூர்வ தருணத்தில் தொடுகிறது. காலப்பிரவாகத்தின் முடிவின்றி நகரும் அந்த ஒலி அந்தக் கணத்தில் அந்த அர்த்தத்திற்கு உரியதாக ஆகிறது. அந்தச் சுமையுடன் அது காற்று வெளியிலிருந்து பிரிந்து வருகிறது. அதன் மகத்தான முழுமையும் உள்ஒழுங்கும் சிதறி விடுகின்றன. பிறகு அது தன் முழுமையை ஆதியைத் தேட ஆரம்பிக்கிறது. ஈரம்பட்ட விதைபோல் அதற்குள் இயக்கத்தின் முதல் துடிப்பு உருவாகி விடுகிறது. தன் கூட்டைப்பிளந்து அது வெளிவருகிறது. முளையாகி செடியாகி மரமாகி விழுதுகளாகி காடாகிப் பரவுகிறது. பெருவெளியில் எதிர்த்திசையில் ஓடுகிறதா அது? திசைகளற்ற வெளியில் எந்தத்திசையும் முன்னோக்கியதுதானே? அதன் சுழற்சி முடிந்து மீண்டும் அது தன் ஆதி முழுமைக்குத் திரும்பும். காலவெளியில் அதன் பிறவி நாடகம் ஒரு கணம் மட்டும்தான்.”
(பிங்கலனை நோக்கி மகாபிரபு)

அன்பு ஜெயமோகன்,

சொற்களை நாம் எழுத்துக்களின் தொகுப்பாகவே புரிந்து வைத்திருக்கிறோம். ஒரு மொழியின் கிடைத்தற்கரிய வளமாகவும் சொற்களை வியந்தோதுகிறோம். சொற்களை அடுக்கிக் கலைக்கும் சொல்விளையாட்டுகளில் மனதைப் பறிகொடுத்து மயங்கியும் நிற்கிறோம். என்றாலும், சொற்களைச் சொற்களாகப் பார்ப்பதோடு நாம் நின்று விடுகிறோமோ எனச் சிந்திக்கிறேன். ஒரு சொல் சொல்லன்று என்பதே நாம் விளங்கிக் கொள்ள வேண்டியது. சொல்லின் பொருளே சொல்வடிவாக இருக்கிறது என்பதே நாம் உணர்ந்து கொள்ள வேண்டியது. “சொல்லுக்குள் ஓடிவந்து – முருகா / சூட்சமம் ஆனவனே” எனும் எளிய நாட்டுப்புறப்பாடல் ஒன்றின் வழியேதான் அவ்வனுபவத்தை நான் அடைந்தேன். ’முருகன்’ எனும் சொல் குறிக்கும் பொருளே முருகன். அதாவது, முருகன் எனும் சொல்வடிவத்திற்குள்(பருமை) இருக்கும் சூட்சுமப்பொருளே(நுண்மை) முருகன். இன்னும் எளிமையாகச் சொல்வதானால், முருகன் எனும் உருவம்(சொல்) முருகனன்று; அது உள்ளடக்கி நிற்கும் அருவமே(அர்த்தம் அல்லது பொருள்) முருகன். உருவ வழிபாட்டின் அடிப்படையை மனதில் கொண்டால் இன்னும் தெளிவு கிடைக்கலாம். உருவ வழிபாட்டின் அடிப்படை என்பது உருவத்தை வழிபடும் சடங்கன்று; உருவம் கொண்டிருக்கும் அர்த்தத்தை(பொருளை) உள்வாங்கி அதை வாழ்க்கைக்குக் கொண்டு வருவதாகும். காலங்காலமாக உருவ வழிபாட்டை நாம் விட்டுக்கொடுக்காமல் இருக்கிறோம். அவ்வாறே, உருவங்களைக் கடந்து அதன் வழியே பெற வேண்டிய அனுபவங்களைச் சிந்திக்காதும் இருக்கிறோம். நம்மை நினைக்கும்போது வெறுப்பாக வருகிறது. “சொல்லும் பொருளும் ஆனார்தாமே / தோத்திரங்களும் சாத்திரங்களும் ஆனார்தாமே” எனும் திருநாவுக்கரசரின் வரிகள் சமயத்தளத்தில் அதையே சொல்லி நிற்கின்றன.

சைவ சித்தாந்தத்தில் இறைவனின் இலக்கணங்களாக இரண்டைக் குறிப்பிடுகின்றனர். அவை சொரூப இலக்கணம் மற்றும் தடத்த இலக்கணம். இறைவன் எனும் சொல்லின் இரு வடிவங்களாக அவற்றைப் பார்க்கலாம். ஒன்று சொல்வடிவம்(பருமை- புறம்); மற்றது சொல்லின் பொருள்(நுண்மை -அகம்). தடத்த இலக்கணத்தை சொல்வடிவாகவும், சொரூப இலக்கணத்தை சொல்லின் பொருளாகவும் பொருத்திக் கொண்டு பார்ப்போம். தடத்த இலக்கணத்தின் வாயிலாக நமக்கு அறிமுகப்படுத்தப்படும் இறைவனின் உண்மையான இயல்பு சொரூப இலக்கணமே. அதாவது, நுண்மையை விளக்கவே பருமை இருக்கிறது. நாம் அதை விளங்கிக்கொள்வது இல்லை. விளங்கிக்கொள்ளா விட்டாலும் பரவாயில்லை. தவறாக விளங்கிக்கொண்டு சமயத்துக்கு அவப்பெயர் தேடித்தருபவர்களாகி விடுகிறோம். சொரூப இலக்கணத்தில் இறைவனைக் குணங்குறியற்றவனெ எனச் சொல்வார்கள். தடத்த இலக்கணத்திலே அவர் மூன்றுவிதமான வடிவங்களில்(அருவம், உருவம், அருஉருவம்) இருப்பதாகச் சொல்வர். மூன்றுவிதமான வடிவங்களும் இறைவனின் குணங்குறியற்ற தன்மையை உணர்ந்து கொள்ள உதவும் வடிவங்களே தவிர அவை இறைவனன்று. மேலும், இறைவன் என்பவன் மனிதனைபோன்ற நபரன்று. எங்கேயோ அமர்ந்து கொண்டு நம் வாழ்க்கைக் கணக்கைக் கவனித்துக் கொண்டிருக்கும் கணக்காளனும் அன்று. பெருவெடிப்புக்கு முன்னும், பின்னும் வெளியை நிறைத்திருக்கும் ஆற்றலின் குறியீடே இறைவன். இறைவனின் வேர்ச்சொல் இறை. இறை என்றால் இறைந்து கிடப்பது. இறைந்து கிடக்கிற ஆற்றலே இறைவன். “ஓருருவம் ஒருநாமம் ஒன்றுமில்லார்க்கு / ஆயிரம் திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ” எனும் மாணிக்கவாசகரின் இருவரிகளைக் கவனிப்போம். முதல்வரி சொரூப இலக்கணத்தையும், இரண்டாவது வரி தடத்த இலக்கணத்தையும் சுட்டி நிற்கின்றன.

சொற்களை நாம் வடிவங்களில் அணுகக்கூடாது. அதன் அர்த்தங்களிலேயே விளங்கிக்கொள்ள வேண்டும். ’நான்’ எனும் சொல்லை எடுத்துக் கொள்வோம். ’நான் மனிதன்’, ‘நான் தமிழன்’, ‘நான் படித்தவன்’, ‘நான் நண்பன்’, ‘நான் நல்லவன்’ என ஆயிரம் அடையாளங்களை நாம் சொல்லிக்கொண்டே போவோம். ‘நான்’ எனும் சொல்லை மனித வாழ்வை மட்டுமே முதன்மைப்படுத்திப் பார்த்ததால் வந்த விளைவு அது. உலகம் என்பது மனிதர்களை மட்டும் உள்ளடக்கியதன்று. அக்குறுகிய வட்டத்தில் இருந்து கொஞ்ச நேரம் வெளியே வருவோம். இப்போது எல்லா அடையாளங்களையும் கடந்து ‘நான்’ எனும் சொல்லைக் கவனிப்போம். அது ‘நான் உயிர்’ என்பதாகவே எஞ்சி நிற்கும். இதுவரை ’நான்’ எனுஞ்சொல்லைக் குறித்து நாம் கொண்டிருந்த அர்த்தங்கள் தடுமாறத்துவங்குகின்றன அல்லவா? ’உலக உயிர்களில் நானும் ஒன்று’ என இப்போது நாம் உணரும் நிலையையே “எவ்வுயிரும் தம்முயிர்போல்” என வள்ளலார் குறிப்பிடுவதாகச் சொல்லலாம். நமக்குள் எழும் சிறுஒளிப்புள்ளியை அப்படியே பின்தொடர்வோம். உலகம் > அண்டங்கள் > பேரண்டங்கள் > பேரண்டங்களை உள்ளடக்கிய வெளி(மெய்ப்பொருள் அல்லது ஆதி) என காட்சி பெருந்தரிசனமாய் நமக்குள் நீண்டிருக்கும். விசுவரூப தரிசனம் என நம் சமயங்களில் சொல்வதைப் பொருத்திப்பாருங்கள். அத்தரிசனத்தின் அனுபவத்திலிருந்து உலக வாழ்வைப்பாருங்கள். நாம் எவ்வளவு அற்பமானவர்கள் என்பது தெரிய வரும். முன்பு நாம் விடாப்பிடியாய் நம்பிக்கொண்டிருந்த அடையாளங்கள் எவ்வளவு போலியானவை என்பது தெரியவரும்.

நம்முடைய அறிவிலிருந்து பார்த்தால் வெளி மட்டுமே மூலமானது. வெளியின் எல்லைக்குள்தான் பேரண்டங்கள், அண்டங்கள், விண்மீன் குடும்பங்கள், உலகங்கள், உயிர்கள் எல்லாம் கிளைத்திருக்கின்றன. பேரண்டங்கள் உள்ளிட்ட அமைப்புகள் மாறிக்கொண்டே(வளர்ந்து கொண்டும், பரிணாமம் பெற்றபடியும்) இருக்கின்றன என்பதால் அவை நிலையற்றவை. அதாவது நிலைபெயர்ந்து கொண்டே இருப்பவை. வெளியோ நிலையானது. எப்போதும் தன்னளவில் எவ்வித மாற்றமும் இல்லாமல் இருப்பது. ”வெட்டவெளி தனையன்றி வேறு தெய்வமில்லையே” எனும் சிவவாக்கியனின் பாடல்வரி நினைவுக்கு வருகிறது.

ஆதிமெய்ப்பொருளான வெளி என்றும் இருப்பதோடு, எல்லாவற்றுக்கும் ஆதாரமாக இருப்பதால் அதை ’சத்’ எனக்குறிப்பிடுகின்றனர். என்றைக்குமான, எப்போதிருக்கும் உண்மையே ’சத்’. அதனுள் தோன்றி, மறையும் அல்லது ஒடுங்கும் பேரண்டங்கள் உள்ளிட்ட அமைப்புகள் நிலைபெயர்ந்து கொண்டே இருப்பவை. குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமேயான தற்காலிகமானவை. அதனால் அவற்றை ’அசத்’ எனக் குறிப்பிடுகின்றனர். ’சத்’தையும், ‘அசத்தை’யும் சமயத்தளத்தில் சிலர் சகட்டுமேனிக்குக் குழப்பி வைத்திருக்கின்றனர். அதில் நாம் சிக்கிக் கொள்ளவே கூடாது. ’சத்’தையும், ‘அசத்தை’யும் விளங்கிக்கொள்வதே ‘சித்’. அதாவது ’மெய்யறிவு’. சைவசித்தாந்தத்தில் இறைவனை சச்சிதானந்தம்(சத்+சித்+ஆனந்தம்) எனச் சொல்வர். ’சத்’தை விளங்கிக்கொள்ளும் ‘சித்’தால் நாம் பெறும் ‘ஆனந்தமாக’ அதைக் கொள்ளலாம். ’ஆனந்தம்’ என்பது குழந்தைகளைப் போல் காரணமற்று மகிழ்வுடன் இருப்பது. ஒரு சமயம் இந்நிலை நோக்கிய பயணத்திற்கே நம்மைத் தூண்டுகிறது. தனியே சமயத்துக்குள் நுழையும் ஒருவனுக்கே இந்நிலையும் சாத்தியப்படுகிறது. சமயத்தையும், இறைவனையும் தனித்தே விளங்கிக் கொள்ள வேண்டும்.

முருகவேலன்,
படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,
கோபிசெட்டிபாளையம்.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 52
அடுத்த கட்டுரைஇந்தியாவின் மகள்