மாமத யானை தரும் பயமும், தெளிவும்(விஷ்ணுபுரம் கடிதம் ஒன்பது)

”எதையும் உன் அனுபவ வட்டத்திற்குள் கொண்டு வந்து யோசி. உன் அனுபவத்தை மீறியவை கூட அனுபவத்தின் தர்க்கத்திற்கு உட்பட்டவையாக இருந்தாக வேண்டும். அதுவே ஞானவழி. மீதியெல்லாம் சுய ஏமாற்று. ஞானவழியில் நிம்மதி இல்லை. ஆனால் கர்வமும் சுயதிருப்தியும் உண்டு. ஆனந்தத்தில் பெரிய ஆனந்தம் இதுவே.”
(பிங்கலனிடம் பிரசேனன்)

அன்பு ஜெயமோகன்,

கடவுளுக்கு அடுத்தபடியாய் மனிதரை அதிகம் அலைக்கழிக்கும் வார்த்தையாக ஞானம் இருக்கிறது. ”ஞானி என்பவன் எல்லாவற்றையும் உணர்ந்தவன்” எனும் பொதுச்சித்திரம் ஞானியை எல்லாம் அறிந்தவனாக முன்நிறுத்துகிறது. ’எல்லாம்’ எனும் வார்த்தைதான் நம்மால் சிக்கலாக்கப்பட்டிருக்கிறது. மற்றபடி, ஞானி என்பவனை நாம் உள்ளபடியேதான் புரிந்து வைத்திருக்கிறோம். ‘எல்லாம்’ எனும் சொல்லுக்கான பொருளை ‘வாழ்வின் சம்பவங்கள்’ என்பதான நிலையிலிருந்து ‘அனைத்துக்குமான மூலம்’ என்பதாகப் புரிந்து கொள்ளலே நலம் பயக்கும். இங்கு நமக்கு இன்னொரு கேள்வி எழும். அறிவு, ஞானம் இரண்டும் வேறா? இல்லை. ஒன்றின் உதவியில்லாமல் இன்னொன்றை விளங்கிக்கொள்வது சாத்தியமே இல்லை. அறிவின் உதவியில்லாமல் நாம் ஞானத்தைக் கற்பனைகூட செய்ய முடியாது. அறிவை மட்டுமே முன்வைக்கும் ஒருவன் அதுவே எல்லாவற்றையும் அறியச் செய்திடாது எனப்புரிந்து கொள்ளும் தருணம் ஞானியாகிறான். எளிமையாகச் சொல்வதானால், அறிவு எனும் காய் கனியும்போது ஞானம் எனும் பழமாகிறது. ஞானத்தின் காய்நிலையே அறிவு; அறிவின் கனிநிலையே ஞானம். ”அறிதொறும் அறியாமை” காணும்போது தடுமாறும் அறிவு தனித்திருக்கும்போது தனது ஆணவத்திலிருந்து விடுபடும் சூழல் வாய்க்கலாம். அதுவே அறிவு ஞானமாகும் தருணம். ”தன்னால் முடியாதது எதுவுமில்லை” என அறிவு கருதும் நிலையே ஆணவம். அந்நிலையிலேயே அது இருந்து கொண்டிருக்கும்வரை அறிவாகவே இருக்கிறது. அப்போது அது தருக்கங்களால் மட்டுமே திருப்தியுறுகிறது. “தன்னுடைய செயல்களுக்கு சூழலே அடிப்படையாய் அமைகிறது” எனப்புரிந்து கொள்ளும் அறிவில் ஞானத்தின் சுடர் அரும்பத்துவங்கி விடுகிறது. அவ்விடத்தில் அது தனது அனுபவங்களாலேயே திருப்தியுற்றுவிடுகிறது.

அறிவையும், ஞானத்தையும் இன்னும் எளிமையாகவும் விளக்கலாம். எப்போதும் தனக்கான கேள்விகளுக்கான பதில்களைப் புறத்தில் தேடிச் சலிப்புறுவது அறிவு. கேள்விகளும் பதில்களும் எப்போதும் நம்மை நிறைவுறச் செய்துவிடாது என்பதை அகத்தில் உணர்ந்து இன்புறுவது ஞானம். அறிவு இயக்கத்தைச் சுட்ட, ஞானமோ இயக்கமின்மையைக் குறிக்கிறது. இயக்கம், இயக்கமின்மை போன்றவற்றை பருவடிவில் புரிந்து கொள்வது நம்மை மேலும் சிக்கலாக்கி விடும். வெட்டவெளியின் பெரும்பரப்பில் மிகச்சிறு புள்ளியான நாம் அதை மறந்திருக்கும்போது நம் செயல்களால் அலைக்கழிக்கப்படுகிறோம்; அதுவே ‘இயக்கம்’. வெட்டவெளியின் மிகநுணுக்கமான துகள் எனத் தன்னைக் கண்டுகொள்ளும்போது நம் செயல்களால் அலைக்கழிக்கப்படுவதில்லை; அதுவே ’இயக்கமின்மை’. இயக்கத்திற்கு மூலமாய் இருப்பதே இயக்கமின்மைதான். ஆதிசங்கரரின் அத்வைதத்தை இங்கு நினைவுகூரலாம். ”இருப்பது பிரம்மம் மட்டுமே. மற்றவை எல்லாம் அதன் தோற்றங்கள்” என்பது அவரின் பார்வை. பிரம்மம் இயக்கமின்மையைக் குறிப்பதாகவும், அதன் தோற்றங்களை இயக்கங்களாகவும் கொள்ளலாம். ஆதிசங்கரரை அவரது மாயாவாதக் கொள்கைக்காகவே இன்று நம்மவர்கள் கேலிபேசி வருகின்றனர். நான் அத்வைதியல்ல என்றாலும், அவரின் மாயாவாதத்தை நான் புரிந்து கொண்ட விதத்தைச் சொல்லியாக வேண்டும். பிரம்மம் மட்டுமே உண்மை என்று சொல்வதால் மற்றவற்றை அவர் புறந்தள்ளுகிறார் என்பதே அவரின் மாயாவாதத்தின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு. அவர் குறிப்பிடும் உண்மை, பொய் போன்ற சொற்களை நிரந்தரமான, தற்காலிகமான எனும் அர்த்தங்களில் விளங்கிக்கொண்டால் குழப்பம் நீங்கலாம். அவர் தோற்றம் எனும் சொல்லையே கையாள்கிறார். வானமாக நாம் காண்பது வெறும் தோற்றமே. அதற்காக அதைப்பொய்யென்று சொல்லிவிட முடியுமா அல்லது எதிர்நிலையில் அத்தோற்றம் நிரந்தரமானது என்றும் சொல்லிவிட முடியுமா? யோசிப்போம்.

ஆதிசங்கரரின் பிரம்மத்தை வெட்டவெளியாகக் கொள்வோம். பேரண்டங்கள் உள்ளிட்ட அமைப்புகள் அதிலிருந்தே கிளைக்கின்றன. அதனால் அவற்றை பிரம்மத்தின்(வெட்டவெளியின்) தோற்றங்களாகச் சொல்லலாம் அல்லவா? என்றாலும், அத்தோற்றங்கள் பிரம்மமாகி விடாது. ஏனென்றால் பிரம்மம் எப்போதும் நிரந்தரமாக இருப்பது(கால-இட எல்லைகளுக்கு உட்படாத அநாதி). அதன் தோற்றங்களோ தற்காலிகமானது(கால-இட எல்லைகளுக்கு உட்பட்டது). வெட்டவெளியின் ஒருபுள்ளியில் கிளைத்த பேரண்டங்கள் உள்ளிட்ட அமைப்புகள் ஒருகட்டத்தில் அப்புள்ளியில் ஒடுங்கிவிடும் என்றும் சொல்கிறார்கள். அப்போது தோற்றங்கள் இருக்காது; பிரம்மம் நிச்சயம் இருக்கும். அதனால்தான் பிரம்மத்தை மட்டுமே உண்மை எனச் சங்கரர் குறிப்பிடுகிறார். மற்றபடி, தோற்றங்களின் இயல்புகளைக் குறித்து அவர் கவலைப்படவே இல்லை. பூர்வ மீமாம்சத்தை எதிர்த்துக் கிளம்பிய உத்திர மீமாம்சக்குரலில் முக்கியமானது அவருடையதுதான். அவரின் பெயரைப் பயன்படுத்தியே இன்று நாம் அவர் தத்துவத்துக்கு எதிரான சடங்குகளைச்(வேள்வி, யாகம் போன்றவற்றை) செய்து வருகிறோம். தத்துவத்தளத்திலும் அவர் முன்வைத்த மாயாவாதத்தை உலகியல் பார்வையில் மட்டுமே அணுகும் ஆபத்தும் நேர்ந்திருக்கிறது. இந்துமதத்தையும், அதன் பிரிவுகளையும் அவர் வகுத்தளித்திருக்க மாட்டார் என்பதே என் தீர்மானமான கருத்து. ஆதிசங்கரின் மூலச்சிந்தனையை எனக்குச் சரியாக அடையாளம் காட்டியவர் நீங்கள் மட்டுமே. நான் விளங்கிக்கொண்டதில் அனுபவ மாறுபாடு இருக்கலாம். என்றாலும், சங்கரரை அவருக்கு எதிர்நிலையில் புனிதப்படுத்தி அடையாளமற்றுப்போகச் செய்தவர்களை நினைத்தால் நெஞ்சு குமுறுகிறது. அத்வைதத்தை இராமானுசர் விளங்கிக் கொண்ட அனுபவமாகவே நான் விசிஷ்டாத்வைதத்தைப் பார்க்கிறேன். இருவரும் தென்னாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதில் ஒரு மழலையின் மகிழ்ச்சியும் கூட.

ஒரு ஞானி எப்போதும் ஞானியாக இருந்துவிட முடியாது என்பதைத் தெரிந்து கொள்வதும் முக்கியம். உலகியல் அடிப்படையில் நம்மைப் பொறுத்தவரை ஞானி எனச் சொல்லப்படுபவன் கடவுளுக்குச் சமமானவன். ஞானமடைந்த(?) கணத்திலிருந்து அவன் புனிதமானவன். நம் வாழ்வில் நடக்கப்போகும் சம்பவங்களை முன்கூட்டியே அறிந்து சொல்பவன். நம் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு தருபவன். அப்படியான கருதுகோள்களே தவறு என்பது என் கருத்து. ஒரு மனிதன் அறிவை மட்டுமே ஒருமையில் தொடர்ந்து வலியுறுத்தும்போது சாதாரண மனிதனாக இருக்கிறான். அவனே அறிவு கடந்திருக்கும் பன்மைகளைப் புரிந்து கொண்டு வாழும்போது ஞானியாக இருக்கிறான். ஒரு மனிதனுக்குள் சாதாரண மனிதனும், ஞானியும் இணைந்தே இருக்கின்றனர். ஒவ்வொரு கணமும் சாதாரண மனிதனாக இருக்கவோ, ஞானியாக இருக்கவோ அவனை வேண்டி நிற்கிறது. எப்படி இருக்க வேண்டும் என முடிவு செய்பவன் அவனே. புறச்சூழலும், மனிதர்களும் நம்மைத் தூண்டலாமே ஒழிய சாதாரண மனிதனாக அல்லது ஞானியாக இருப்பதைத் தீர்மானிப்பது நாம்தான். ”மரத்தை மறைத்தது மாமத யானை / மரத்தின் மறைந்தது மாமத யானை” என்பார் திருமூலர். மரத்தால் செய்யப்பட்டிருக்கிற யானை பொம்மையைக் கவனிக்கும்போது யானையை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பவன் சாதாரண மனிதன். யானையாக அதைப்பார்ப்பதில் தவறில்லை. ஆனால் யானையாகவே அதை நம்பிப் பயப்பட்டால். ஒரு சாதாரண மனிதன் அப்படித்தான் வாழ்வைக்கண்டு பயப்படுகிறான். அப்பொம்மையின் அடிப்படையாய் இருக்கும் மரத்தை உணர்ந்து கொள்பவன் ஞானி. அதை உணர்ந்து கொண்டவனுக்கு யானை பயம் தராது. மாறாக, ஆச்சர்யத்தையே தரும். அவ்வாச்சர்யத்தையே சமயத்தில் பரவசம் என்கின்றனர். ஒவ்வொரு கணமும் யானைபொம்மையாக நம்முன் நின்றபடியே இருக்கிறது. அதைப் பயத்தோடு எதிர்கொள்வதா அல்லது பரவசமாய் எதிர்கொள்வதா என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.

முருகவேலன்,
படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,
கோபிசெட்டிபாளையம்.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 58
அடுத்த கட்டுரைசந்தைமொழி