பஞ்சம்,சுரண்டல்,வரலாறு

images (2)

அன்பு ஆசிரியருக்கு,

இங்கு (துபையில்) வழக்கம்போல தங்கள் பதிவுகளையும், நூல்களையும் விவாதித்து கொண்டிருக்கும் பொழுது உப்பு வேலி குறித்து இங்கு பணி புரியும் பிரிட்டிஷ் நண்பர்கள் நம்பவே மறுத்து விட்டனர்! 19ஆம் நூற்றாண்டில் மட்டும் கிட்டத்தட்ட 6 கோடி பேரை பலி வாங்கியது பிரிட்டிஷ் ஆட்சி என்று சொன்னதிற்கு, ஒரு வயதான ஆங்கிலேயர், கோபித்து எழுந்து சென்று விட்டார்.

இங்கு வழக்கமாக பேசும் பொழுது, ஆங்கிலேய ஆட்சியினால்தான் எல்லா வளர்ச்சிகளும் என்று ஏதோ நமக்கு நாகரீகத்தையே இவர்கள்தான் கற்று தந்தது போல பேசுவார்கள். Great Hedge நூல் பற்றி இணையத்தில் இருந்து எடுத்து காட்டி புரிய வைத்தோம். நம்பவே முடியாதவர்களாக தினமும் அதை பற்றியே பேசி கொண்டிருக்கின்றனர். ராய் அவர்களை தொடர்பு கொண்டு இது பற்றி பேச வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருக்கின்றனர்.

இவ்வளவு கொடூரமானதா பிரிட்டிஷ் ஆட்சி என்று அவர்களுக்கே தெரியவில்லை. நமக்கே தெரியாத பொழுது அவர்களுக்கு எப்படி?

உப்புவேலி வெளியீட்டுக்காகக்காத்திருக்கிறோம். அதைப்படிக்கப்படிக்க இங்கு வெள்ளையர்கள் மத்தியில் காரசாரமாக விவாதிக்கலாம்.

நன்றிகள்!

தாழ்மையுடன்,
சரவணகுமார்.

அன்புள்ள சரவணக்குமார்,

இந்தியர்களாகிய நம்மிடையேகூட ஒரு சதவீதம்பேருக்காவது இந்தப்பஞ்சம் பற்றித்தெரியுமா? செத்துக்குவிந்தவர்கள் நாம். நமக்கே தெரியாதபோது குற்றவுணர்வு கொண்ட அவர்கள் நினைவுகூரவேண்டும் என எதிர்பார்ப்பது மடமை அல்லவா?

ஜெ

images (1)

திரு ஜெயமோஹன் அவர்களுக்கு,

தங்களுடய செட்டியார்களும் பர்மாவும் படித்தேன். அதில் திரு ராய் என்பவரின் கருத்து பதிவு செய்துள்ளீர்கள் .
நான் ஒரு ஆர்டிகல் பகிர்ந்து கொள்ள விரும்பிகிறேன்.

https://seap.einaudi.cornell.edu/sites/seap.einaudi.cornell.edu/files/2007fFeature-Chettiars.
அவரை படித்து பார்க்க சொல்லவும். அன்று செட்டியார்களின் வட்டி விகிதம் பற்றியும் , பர்மியர்களின் வட்டி விகிதம் என்ன என்று சொல்லப்பட்டு உள்ளது. ஒரு தேசிய வங்கி ஏஜென்ட் ஆக நியமித்தும் உள்ளது.

கடன் வாங்கி பயன் படுத்த தெரியாமல் நஷ்டம் அடைவோர் சொல்லும் அற்ப காரணம் தான் அவர் செட்டியார் சொத்துக்களை பற்றி மிக கேவலமாக சித்தரித்துள்ளார். அப்படி பார்த்தால் தேசிய வங்கிககளின் சொத்தும் அக்கிரமம் தான்.

கம்யூநிஸம் பேசுபவர்கள் பேசி கொன்டே இருக்கலாம்.

லட்சுமணன்

அன்புள்ள லட்சுமணன்,

ராய் ஒரு பிரிட்டிஷ் ஆய்வாளர். தன் நாட்டினரின் பிழைகளை ஒத்துக்கொண்டு ஆவணப்படுத்துபவர்.அப்படிப்பட்டவர் நம்மைப்பற்றிச் சொல்லும்போது அவரையும் அவரது கருத்தையும் சமநிலையுடன் பார்ப்பதற்குப்பெயரே சிந்தனைத்திறன் என்பது

ஒரு குற்றச்சாட்டு வந்ததுமே சொன்னவரைப்பற்றி தெரியாமல், சொன்னது என்ன என்றுகூட தெரியாமல், பாய்ந்து பேச ஆரம்பிப்பது எந்தவகையிலும் ‘கருத்து’ அல்ல. வெறும் நியாயப்படுத்தல் மட்டுமே

பிரிட்டிஷார் இந்தியாவைச் சுரண்டினர். ஆனால் இந்தியாவுக்கு ஐரோப்பியக் கல்வியை, நீதிமுறையை, நிர்வாக அமைப்பை அளித்தனர். இந்தியாவின் பண்பாட்டுச் செல்வங்களைப் பாதுகாத்தனர்.

செட்டியார்கள் பர்மாவுக்காக என்ன செய்தனர் என்று ராய் மாக்ஸம் கேட்டால் என்ன சொல்லமுடியும்? எவர் செய்திருந்தாலும் வட்டித்தொழில் உற்பத்திநோக்கம் கொண்டது அல்ல. நலம்நாடுவதும் அல்ல. பர்மா அன்று வெறும் விவசாய நாடு. வட்டித்தொழில் விவசாயிகளைச் சுரண்டவே பயன்பட்டது

நம்மையும் பிறரையும் கொஞ்சம் சமநிலையுடன் பார்க்கத்தொடங்குவோம். தற்பெருமை, தற்பாதுகாப்பில் இருந்து வரலாறுகளை எழுதவேண்டியதில்லை

ஜெ
download

அன்புள்ள ஜெ,

முன்ஷி பிரேம்சந்தின் உப்பு இலாகா அதிகாரி (தாரோகா) கதை பற்றி ஆராய்ந்து பார்த்திருந்தால், நாம் உப்பு வேலியைப் பற்றியும் தெரிந்து கொண்டிருக்ககூடும்.

ஸ்ரீதர் திருச்செந்துறை

DSC_0066
அன்பார்ந்த ஜெயமோகன் அவர்களுக்கு

வணக்கம் பல. நான் வித்யாசுப்ரமணியம். திரு கிஷ்ணகுமார் சத்யவாகீஸ்வரன் மூலம் நீங்களும், திரு Roy Moxham அவர்களும் கையெழுத்திட்ட “உப்புவேலி” புத்தகம் என் கைக்கு வந்து சேர்ந்தது. உங்கள் கையொப்பத்திற்கு மிக்க நன்றி. “அறம்” படித்ததுமே உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்ப நினைத்தேன். தள்ளிக் கொண்டே சென்று விட்டது. “உப்புவேலி” படித்ததும் எழுதியே ஆக வேண்டும் எனத் தோன்றி விட்டது.

இந்த வேலி குறித்து பத்தாண்டுகளுக்கு முன்னரே நான் சிறு குறிப்பு ஒன்றின் மூலம் அறிந்திருந்தேன். அதிகத் தகவல்கள் கிடைக்கவில்லை. தற்போது உப்புவேலி மூலம் அனைத்தயும் அறிய முடிந்தது. தமிழாக்கம் செய்த சிறில் அலெக்ஸ் அவர்களுக்கும் அவர்களை எழுதச செய்த உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

இந்த உப்புவேலி புத்தகம் பற்றிய எனது கருத்துக்களை இன்று எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளேன். https://www.facebook.com/nilavidya/posts/906296376059827

வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகத்தின் பின்னணியில் நான் நிஜங்களோடு சேர்ந்த ஒரு புனைவு புதினம் “உப்புக் கணக்கு” என்ற தலைப்பில் எழுதியுள்ளேன்.

அன்புடன்
வித்யா சுப்பிரமணியம்

http://vidyasubramaniam.blogspot.com

அன்புள்ள வித்யா சுப்ரமணியம்,

நான் தங்கள் நூலை வாசிக்கவில்லை. தங்கள் நண்பர் சொல்லி அறிந்தேன். வாசிக்கிறேன். உப்புசத்தியாக்கிரகத்தை நாம் புதிய கோணத்தில் பார்க்கவேண்டிய நிலை இன்று. இன்று தங்கள் நாவல் புதிய பொருளை பெறக்கூடும்

ஜெ

முந்தைய கட்டுரைமின்தமிழ் பேட்டி 4
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 52