பழமொழிகள்

நகைச்சுவை

”ஆனை கெடந்து சவிட்டு பெடுது பின்னயில்லா ஆனைப்பிண்டம்?” என்று பின்பக்கம் ஒரு குரல் கேட்டது. பிண்டம் என்றால் யானைச்சாணி. தக்கலை நாகர்கோயில் பஸ்ஸில். உச்சரிப்பு அது எங்களூர் என்று தெரிவித்தது. கன்யாகுமரி மாவட்டத்தில் உள்ள வட்டாரவழக்கு பொதுவாகப் பார்த்தால் மூன்றுவகை என்று சொல்லலாம். நாஞ்சில்நாடன் எழுதும் நாஞ்சில் வழக்கு. தோப்பில் முகமது மீரான் எழுதும் கடற்கரை வழக்கு. மூன்று எங்களூர் மலைவழக்கு. அல்லது மலையாள வழக்கு. மலையாளத்துடன் வழக்கு ஒன்றும் இல்லைதான். இதில் குலசேகரம் வட்டாரத்துக்கு அங்கே பிறந்தவர்கள் மட்டுமே அறியும் நுண்ணிய வேறுபாடு உண்டு. வல்லினங்களை வல்ல்ல்ல்லினங்களாக்குவது ஓர் அம்சம் அதில். நிறம் என்று சொன்னா அந்த றவில் இரும்பு உரசும் ஒலி கேட்கவேண்டும்.

”மக்கா அவனை நீ அப்பிடி நெனைக்காதே கேட்டியா, தாளி அவன் ஆளு மத்தவனாக்கும். தீட்டத்தில அரி பெறக்குத பய…” மலத்தில் செரிக்காத அரிசியைப் பொறுக்குபவன். எங்களூர்ப் பழமொழிகளை வேறு நிலத்தில் பார்க்க முடியாது. எங்கேயிருந்து ஊறி வருகின்றன, எங்கே சேமிக்கப்படுகின்றன? அழியாத ஒரு மரபு. நாட்டாரியல் ஆய்வாளர்கள் பதிவுசெய்ய ஆரம்பித்தால் கலைக்களஞ்சியம் தேவைப்படும்.

”எல்லாவனும் கணக்குதான் மாமா.தொளவடைக்கு ஒரு தொளையானா தோசைக்கு ஆயிரம் தொள. என்ன சொல்லுதே?” இது பழமொழி தானா? இதை சொல்லாட்சி என்று சொல்லலாம். யார் கண்டது அந்தக் கணம் அந்தப் பேருந்தில் பிறந்து வந்ததாகக் கூட இருக்கலாம். வரலாறு அப்படி துளித்துளியாகத்தானே கடலாக ஆகிறது.

”மக்கா லே நீ ஒரு காரியம் எண்ணிக்கோ கேட்டியா? சிரிக்கப்பட்ட சாயிப்பையும் சிரிக்காத்த நாயரையும் நம்பப்பிடாது. [சாயிப்பு – முஸ்லீம்] என்ன செல்லுதே? அவனைப்பாத்தா நல்ல நாயருக்கு பெத்தவனை மாதிரியாலே இருக்குவு? நாயரு களுவின வெள்ளம் விளுந்து முளைச்சவன் மாதிரில்லலே இருக்கான்?”

”மார்த்தாண்டவர்மாவுக்கு கஸாயம் போடுகதுக்கு கொட்டைய பிடுங்கி குடுத்தாண்ணாக்கும் பேச்சு”. என்றான் சின்னவன்

மூத்தவர் ”அது பின்ன நாயம்மாருக்க ரோகமாக்குமே அது. மகாராஜா இங்கிணதான் தாற அவுத்தாருண்ணு திண்ணையக் காட்டுவான். அதுசெரி ,மகாராஜாவுண்ணா ஆரு? நாயி மாதிரி ஒரெடத்தில தண்ணி குடிச்சு ஒம்பதெடத்தில மோளுதவன்லா? செரி போட்டு. நீ இவனுக்க காரியத்த கணக்குல வச்சுக்கோ. லே, இவன் மச்சுல காஞ்ச மூத்த தேங்கால்லா? ஏது வெள்ளத்திலயும் மெதப்பான் கேட்டுக்கோ”

”பைசாய எண்ணிட்டு அதுக்க சிங்கத்தையுமில்லா எண்ணுகான்? இவனையாக்கும் இந்நேற்று பிராஞ்சியண்ணன் நிலாவெட்டத்தில நிரோத்து தைச்சு போடுத பயண்ணு சென்னது… வெளங்காப்பய..” இது பழமொழியே அல்ல. கிழிந்த நிரோத்தை தைத்து போடுபவன். அதுவும் விளக்கைப் போடச் சிக்கனம் பார்த்து நிலா வெளிச்சத்தில். எப்படி விளங்க?

”ஒரு தொளிலுண்ணாக்க அதில பலதும் உண்டாவும். மலைத்தண்ணிக்கு மட்டுண்டா மாமா? தவள சாடி பசுவுக்கு செனைன்னா கேக்கவனுக்கு மனசிலாவ வேண்டாமா? நாம என்ன வேணும்ணு செய்யுகோமா…அதது அததுக்க நேரத்தில நடக்குவு. விதியத்தவன் வாறது பாத்தா தெங்கு மட்டை போடுது? அதுக்கு  நிண்ணு சவுட்டுதான், ஏழு நீலி சேந்து கேறின அம்மன் கொண்டாடி மாதிரி…ஒரு கணக்கு வேண்டாமா? இல்ல கேக்கேன்…”’

”கெடக்கட்டுடே. ஓரோருத்தனுக்கும் அதுக்குண்டானத அளந்துல்லா குடுத்திருக்கு….ஆட்டுக்கு வாலும் கழுதைக்குக் கோலும்…என்ன சொல்லுதே”

”பின்ன, உள்ளதாக்குமே…ஆனா அவனுக்க அச்சி வந்து நிண்ணு பேசினா பாருங்க…சகிக்க ஒக்காது. அவளுக்க வாயிலே ஒரு பிடி நெல்லு வாரியிட்டா பொரியாவும்… அப்பம் அவளையும் கொண்ணுட்டு நானும் செத்திருக்கணும். கல்லு நிக்கா காலம் வரையில்லா சொல்லு நிக்கும்…. எனக்க அம்மைக்க முலையில மூத்திரமாவே வந்தது?”

”செரிடே ஆனமேல கேறினா விட்டிலும் நெளிஞ்சுதான் இருக்கும்…”

”ஒருபாடு நெளிஞ்ச மூங்கிலு பல்லக்கு தூக்கும்… மாமா அதறியணும் மனுசனானா.. பல்லு நிரப்பு கொண்டுல்ல அழகு வாறது சொல்லு நிரப்பு வேணும்”

”பின்ன அல்லாம? நாய் பெற்ற எடமும் நாரி மூப்பெடுத்த எடமும் வெளங்குமா?”

” பொம்பிளைக இருக்க வேண்டிய இடத்துல இருக்கணும் மாமா… கடுவனுக்கு மூத்திரம் அடியோடி பெட்டைக்கு மூத்திரம் பொறத்தோடி……எல்லாம் கண்டுல்லா வச்சிருக்கான் மேலே உள்ளவன்…”

”அது போட்டுடே…நீ மனசில வச்சுகிடாதே… இஞ்சிக்காட்டில வெளைஞ்சா சீனிக்கெழங்கும் காந்தும்”’

”அதுகொண்டு, சுக்க காட்டிலும் சுக்கு காப்பி எரிக்கப்பிடாதுல்ல..? .நான் அவளுக்கு வச்சிட்டுண்டு. நான் மனசில குறிச்சது செட்டி ஏட்டில குறிக்கது மாதிரியாக்கும். எண்ணமறியா எலி எண்ணாயிரம் குட்டி போடுத மாதிரியாக்கும் எனக்க கணக்கு. அவள நான் எடுப்பேன்…”

”அத விடுடே அவ கண்ட ஆணாப்பெறந்தவன் அப்பிடி… ஊத்துல பிறந்த விராலுக்கு ஆறு என்னலே தெரியும்…”

”மாமா, குளிக்கொளம் எவ்ளவு குண்டி கண்டிருக்கும். என்னைப்பத்தி அவளுக்கு தெரியாண்டாமா? நாட்டு நாயை நாடறியாட்டாலும் நாயறியணும்ல? என்ன பேச்சு பேசிப்போட்டா தெரியுமா? அந்தப் பேச்சு அவளுக்க கெட்டினவனிட்ட பேசணும்… எனக்க கிட்ட பேசினா ஒலக்கைய கேற்றிப்போடுவேன்…”

”விடுலே கெழக்கே கோட்டையில மொளை கொண்டு போறதுல என்ன ?”

”ஆங்ஹா அப்டி ஆச்சா அவளுக்கு? அதெல்லாம் அவளுக்க மத்தவனுக்கு…சக்கை கொழையும்போது சக்கைக்குருவும் கொழையாது பாத்துக்கிடுங்க”

”லே, இது பார்வதிபுரம்லா..எறங்காண்டாமா?”

”ஓ…என்னத்த எறங்க? இனியிப்பம் எறங்கினாலும் காரியமில்ல….

”லே, குடுமியிலெ தீ பிடிச்சா பேனுக்கு கேடுண்ணு நெனைக்கப்பட்டவனாக்கும்லே ஆணாப்பொறந்தவன். அதை மனசில வச்சுகிடு…  அல்லாம எருமையிட்ட சாணி மாதிரி கெடந்து கொழைஞ்சியானா ஒரு மனுசனும் மதிக்கப்பட்டான். பூவில்லேண்ணா எலையிருக்கணும். எலையில்லேண்ணா முள்ளிருக்கணும்லே மயிராண்டி…”

”நீரு போவும் மாமா…அவனவன் கொட்டைக்க கனம் அவனவனுக்குல்லா தெரியும். நாகருகோவிலுக்குப் போயி வல்ல சினிமாப்படமோ  மற்றோ பாத்துட்டு போனாத்தான் எனக்க மனசு ஆறும்…”

”நல்லாப்போச்சு…வைக்கலப் போட்டு தீய அணைக்கானே. ஏல, சினிமாலே நாலு பொட்டைக்குட்டிக வந்து நிண்ணு ஆடினா உனக்க கஷ்டம் போவுமாலே…இப்பிடி தீண்டாரி துடைச்ச துணி கணக்கா நம்ம சீவிதம் நாறிக்கெடக்கேண்ணு பின்னயுமில்லா துக்கம் கேறி வரும்..?”

”அது உள்ளதாக்கும் மாமா… செத்தவனை நெனைச்சு பத்து பத்தினி அழுதாண்ணு கதையா அண்ணைக்கு ஒரு சினிமாவுக்குப்போயி உள்ள ஒரே சாவடியந்தர வீட்டுக்க சேலு. படை பயந்து பந்தளத்துக்கு போனா அங்கிண பந்தம் கெட்டிப்படை நிக்குது..”

”லே… நாறப் பீயானாக்கூட அதையும் உருட்டிக்கிட்டுப் போறதுக்கு ஒரு சீவனை உண்டாக்கியிட்டுண்டு படச்சவன். பாம்பு சட்டைய உருவிச்சுண்ணு பரமன் கோமணத்த உருவினான்னு சொன்ன கதையா நாலாளைப் பாத்து நீயும் செண்ணு உள்ள பைசாவ செலவாக்கினா ஆருக்கிலே நட்டம்? இல்ல கேக்கேன். உனக்குண்ணு ஒருத்தி இருக்காளேல, மயிராண்டி. அவள நீ மறந்தியாக்கும்? ஆன குடுத்தாலும் ஆசை குடுக்கிலாமாலே? ஆச குடுத்து கெட்டின பெண்ணுக்கு அஞ்சும் குடுக்கவனாக்கும்லே ஆணாப்பெறந்தவன். லே, உனக்கம்மைக்கு ஒரு நெனைப்பு வந்திருந்தா நீ எனக்க பிள்ளையாக்கும் கேட்டுக்க. நான் சொல்லுகேன் பேசாம வீட்டுக்கு போ…என்னலே?”

”அப்பிடிச் சொல்லிகியாளோ”‘

”பனையோலையிலே நாயி மோண்ட கதையா பின்ன என்ன நான் இம்பிடுநேரம் சொல்லிட்டிருந்தேன்? பேயாம எனக்க கூட வந்திரு…உனக்க நல்லதுக்குச் சொல்லுகேன்”

”மாமா, நீரு பெரியமனிசரு சொல்லுகேரு…நான் கேக்கேன். நெறைஞ்ச ஆலமரத்துக்கு நெலமெல்லாம் வேருண்ணு சொன்ன மாதிரி இருக்கேரு”

”பிள்ள , லே”

”என்ன மாமா?”

”சக்கறம் வச்சிருக்கியா?”

”அம்பது இருக்கு….கெளங்கும் மீனும் வாங்கிட்டுப்போனா கொள்ளாம்ணு தோணுது…”

”கெளங்கு பஸ்டாக்கும். ஆனா உனக்கு மனசு செரியில்லேண்ணுல்லா சொன்னே?”

”ஒருமாதிரி செரியாயிட்டுது மாமா….கண்டவன் சொன்னா நாம என்னத்துக்கு நெனைக்கணும்? நிலாவு கண்டு நாயி கொரைச்சா நிலாவுக்கு என்ன?”

”இல்லலே…இப்பம் அடங்கி கெடக்கும்….இதெல்லாம் அப்டியாக்கும். காலில குத்துன காரமுள்ளுல்லா இது? போவப்போவல்லா நோவும்? நீ என்ன செய்யுகே, பேசாம எனக்க ஒப்பரம் வாறே”

”டாஸ்மாக்குக்கா?”

”நீ வாலே, மயிராண்டி…மாமன்லா விளிக்குதேன்”

போகிறவர்களுக்கு உண்மையில் என்ன நடந்தது, என்ன பிரச்சினை, ஒன்றுமே புரியவில்லை. அதைவிட முக்கியமாக அவர்கள் டாஸ்மாக்கிலிருந்து இறங்கும்போது பழமொழியில் பேசுவார்களா இல்லையா?

முந்தைய கட்டுரைசி.கே.கே.அறக்கட்டளை விருது
அடுத்த கட்டுரைதென்கரை மகாராஜா கடிதம்