இந்தியாவின் மகள்

t

அன்பு ஆசிரியருக்கு,

கண்டிப்பாக இது தங்களுடைய வேலை பளுவில், கேட்ககூடாத விசயம்தான்.தேவை அற்ற சர்ச்சை கிளப்பி தங்களை எப்படி தொந்தரவு செய்யலாம் என்று காத்திருக்கும் கூட்டத்திற்கு இது அவலாக போய் விடும் என்று கேட்காமல் இருந்தோம்.

ஆனால் மிகவும் விவாதிக்கப்படும் ஒவ்வொரு சமுதாய நிகழ்விலும், நாங்கள் எவ்விதம் நோக்குவது என்று குழம்பும் பொழுது தங்கள் எழுத்து தெளிவடைய செய்யும்.

இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்ட விதம் சரியானதா என்ற கேள்வியே முதலில் எழுகிறது. அதை எடுத்தவர் எதோ சிறு சிறு சினிமா படங்கள் எடுத்து வேலை இல்லாமல் இருந்த பொழுது BBC-க்கு இந்த நிகழ்வை எதோ ஒரு விறு விறுப்பான சினிமாவாக எடுத்து தருகிறேன் என்று உறுதி அளித்து, கற்பழிப்பு காட்சி, கற்பழித்தவனின் பேட்டி, அவன் வழக்கறிஞரின் பேட்டி இவற்றை எடுத்து, சில குப்பங்களின் வீடியோ பதிவுடன் இந்தியாவின் மகள் என்று வெளியிட்டு இருக்கிறார்.

மிகுந்த சமுதாய பொறுப்புடன் இதை செய்து இருப்பதாகவும் இந்தியா எந்த பொறுப்பும் பெண்கள் மீது இல்லாமல், அதை தடை செய்து விட்டதாகவும் ஊடகங்களுக்கு சொல்லி கொண்டு இருக்கிறார்.

உண்மையிலேயே இந்த ஆவணப்படம் எடுத்த விதம் சரியானதா? அதில் இடம் பெற்று இருக்கும் காட்சிகளும், தொகுக்கப்பட்ட விதமும் சரியா? அந்த மிருகத்தின் பெட்டியை எடுத்து அதை இந்தியாவின் ஆண்களின் கருத்தாக சித்தரித்து இருப்பது சரியா? முதலில் அவன் பேட்டி எதற்கு? ஆவணத்தில், சாதாரண குடிமகன் கருத்து, அரசியல்வாதிகளின் கற்பழிப்புக்கு எதிரான நடவடிக்கை, காவல் துறையின் நடவடிக்கை, இந்தியாவில் பெண்களின் முன்னேற்றம் என பலதும் கலந்திருந்தால் கூட ஏற்றுக்கொள்ளலாம்.

இங்கிலாந்தில் ஒரு நாளைக்கு 350 பாலியல் வன்முறைகள் நடைபெறுகின்றனவாம். ஆனால் இந்தியா கற்பழிக்கும் கயவர்களின் நாடு என்பது போல் உலக ஊடகங்கள் சித்தரிப்பது சரியா?

எங்களுக்குள் மிகுந்த விவாதங்களுக்கு பிறகு, ஜெயமோகன் அவர்களின் கருத்தே இறுதியானது என்று முடிவு செய்து இதை தங்களுக்கு இங்கு எல்லோர் சார்பாகவும் எழுதுகிறேன்.

நேரம் கிடைத்தால் இது குறித்து தங்களின் கருத்தை எதிர்பார்க்கிறோம்.

தாழ்மையுடன்,
சரவணகுமார்.

அன்புள்ள சரவணக்குமார்,

இந்த விஷயமாக பேசப்பட்டதில் மருதன் என்ற மார்க்ஸியர் தமிழ்பேப்பர் இணையதளத்தில் எழுதியது என்கவனத்தைக் கவர்ந்தது. இந்தியாவில் இந்துமதம் இருப்பதனால்தான் பாலியல் வல்லுறவுகள் நிகழ்கின்றன என்று அவர் வாதிட்டிருந்தார்.

உலகமெங்கும் பெண்களுக்கெதிரான வன்கொடுமை நிகழ்ந்துவருகிறது.கறாரான சட்டங்கள் கொண்ட நாடுகளில்கூட இது மிக அதிகம். பெண்ணுரிமைகள் கட்டுப்படுத்தப்படும் நாடுகளிலும் சரி பெண்ணுரிமை முழுமையாகத் திகழும் நாடுகளிலும் சரி பாலியல் வல்லுறவு என்பது தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதிகரித்தும் வருகிறது.

பாலியல் வல்லுறவுகள் பெண்களுக்கும் சிறார்களுக்கும் எதிராக நிகழ்வதில் மதஅமைப்புகளுக்குரிய பங்குகள் தொடர்ந்து வெளியாகின்றன. மேலைநாட்டுப் பல்கலைகளில் பாலியல்வல்லுறவு பெருகி வருவதைப்பற்றிய விவாதத்தை இணையத்தில் நீங்கள் ஏராளமாக வாசிக்கலாம்.

மருதனின் ‘ஆய்வுக்கருத்தை’ வாசிக்க நேர்ந்த அதே நாளில்தான் இணையத்தில் இன்னொன்று வாசிக்கக் கிடைத்தது. ஓர் ஆஸ்திரேலியப் பேராசிரியரின் பேச்சு. அதில் உயராய்வு மாணவிகள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானால் புகார் செய்யவேண்டாம், அதனால் ஒன்றும் ஆகப்போவதில்லை என்றிருந்தார்.

பாலியல் வல்லுறவு குறித்த விவாதத்தை மூன்று தளங்களில் விரிவாக முன்னெடுக்கலாம். ஒன்று உயிரியல் தளம். மானுடருக்கு மிக அண்மையான விலங்காகிய சிம்பன்ஸி போன்றவற்றில் பாலுறவு பெரும்பாலும் வல்லுறவுதான் என ஆய்வுகள் காட்டுகின்றன. இந்த மனநிலைக்கு மனிதனின் உயிரியல்பரிணாமத்தில் வேர்கள் உண்டா, பண்பாடுமூலம் அதை வென்று அடக்கித்தான் மானுடம் முன்னகர முடியுமா என்பது ஒரு முக்கியமான வினா

நிலவுடைமைச் சமூகம் குலம், குடி போன்ற அடையாளத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டது. அவற்றின் அடையாளத்தைப் பேணுவது பெண்ணின் கருப்பை. இன்னார் மகன் இன்னார் என்பது, இன்னகுடியினன் என்பது பெண்ணை கட்டுப்படுத்துவதன் மூலமே சாத்தியம். ஆகவே பெண் குலத்தின், குடியின் உடைமையாகக் கருதப்பட்டாள்.

அந்நிலையில் பெண்ணைக் கைப்பற்றுவதென்பது பிறகுலங்களை கைப்பற்றுவதுதான். ஆகவே பாலியல் வல்லுறவு என்பது அச்ச்சமூகங்கள் அனைத்திலும் போரின் ஒருபகுதியாக நிகழ்ந்தது.பாலியல் வல்லுறவு ஆண் பெண்ணை வன்முறைமூலம் அடைவதென்பது ஆண்மையாக, வெற்றிகொள்ளலாக எண்ணப்பட்டது

நிலவுடைமைச்சமூகம் இருந்த அத்தனை நாடுகளிலும் இம்மனநிலை ஒரேமாதிரித்தான் இருந்தது. இன்றும் இம்மனநிலை நிலவுடைமைச்சமூகத்தின் எச்சமாக உலகமெங்கும் நீடிக்கிறது. நிலவுடைமைச்சமூக மனநிலைகள் குல ஆசாரங்கள், மதநம்பிக்கைகள் வடிவில்தான் நீடிக்கமுடியும். ஆகவே அவற்றை அவ்வாறு விளக்கிக்கொள்ளவும் இடமுள்ளது.உலகமெங்கும் நிகழும் பாலியல் வல்லுறவ்ன் இரண்டாம்தளம் இது.

நிலவுடைமைச்சமூகம் அழியும்தோறும் பெண்மீதான இந்த அடையாளச்சுமை குறைகிறது. பெண் உடைமையாக அல்லாமல் ஆளுமையாகக் கருதப்படுகிறாள். பெண்ணின் பாலியல் உரிமை அங்கீகரிக்கப்படுகிறது. ஆனால் இது அடுத்தகட்ட பிரச்சினைகளை உருவாக்குகிறது.

சுதந்திரமான பாலுறவு உருவாகும்தோறும் உண்மையில் அனைவருக்கும் பாலுறவுக்கான வாய்ப்புகள் கூடுவதில்லை. ‘தகுதியான’ ஆண்களுக்கே அந்த வாய்ப்புகள் கிடைக்கின்றன. அதுவே உயிரியல் விதி. தெருநாய்களில் பெரும்பாலானவை வாழ்க்கையில் ஒருமுறைகூட உடலுறவுகொள்வதில்லை என்று தெரியுமா? அச்சூழலில் தகுதிவாய்ந்த ஆண்கள் வன்முறையால் மோதிக்கொண்டு அதில் வெல்பவனுக்கு வாய்ப்பு கிடைக்கவேண்டும். மனிதர்கள் அதை அனுமதிக்கமுடியுமா என்ன?

சுதந்திரமான பாலியல் பெருகும்தோறும் பணம், அதிகாரம், இனஅடையாளம் என பலவகைகளில் வெளித்தள்ளப்பட்டவர்கள் பாலியல்ரீதியாக ஒதுக்கப்படுகிறார்கள். நான் இதை பல மேலைநாட்டினர் மனம் உடைந்து புலம்பிக் கேட்டிருக்கிறேன். குறிப்பாகப் பெருநகர்களில் கடுமையான பாலியல் வரட்சி உருவாகிறது.

மறுபக்கம் பெண்ணை பாலியல் பண்டமாக அல்லாமல் பார்க்கப்பழகிய நவீன முதலாளித்துவ சமூகம் கூடவே பாலுறவை கேளிக்கையாக பண்டமாக பார்க்கத் தொடங்குகிறது. பாலுறவு சார்ந்த எழுத்தும் கலையும் உற்பத்திசெய்து குவிக்கப்படுகின்றன. பாலுறவுசார்ந்த செய்திகள் காட்சிகள் பெருகி சராசரி ஆணைச் சூழ்கின்றன.

அதாவது ஆண் ஒருபக்கம் பாலியல் வறுமை அடைகிறான். மறுபக்கம் பாலியலால் வரையின்றி சீண்டப்படுகிறான். நவீனச் சூழலில் பெருகும் பாலியல்வன்முறையின் பின்னணி இது. இது மூன்றாவது தளம். இந்த மூன்று தளங்களிலும் இன்று உலகளாவிய தளத்தில் நிகழும் பாலியல் வல்லுறவை விளக்கமுடியும்.

நான் சொல்வது மிக எளிய ஒரு வரைபடம். இதை எப்படியெல்லாம் அணுகலாம், என்னென்ன சிக்கல்கள் உள்ளன என்பதற்கான ஒரு வழிகாட்டு. ஆனால் இந்துமதம் இந்தியாவில் இருப்பதனால்தான் பாலியல் வல்லுறவு பெருகுகிறது என்று ஒரு மார்க்ஸியர் வாதிடுகிறார்.

மருதனின் இந்த மனநிலையை கூர்ந்து நோக்குங்கள்.ஓரளவு எழுதப்படிக்கத்தெரிந்த ஒருவருக்கே மருதன் சொல்வது உளறல் மட்டுமே என புரியும். அப்படியென்றால் இந்த அபத்தமான வாதத்தை அவர் ஏன் சொல்கிறார்?

அவரை உள்நோக்கம் கொண்டவர் என நான் சொல்லமாட்டேன். ஒருவகை அப்பாவி [அதாவது அசடு] என்றே நான் மதிப்பிட்டிருக்கிறேன். அவர் சொல்வது இங்கு சென்ற இருநூற்றாண்டுக்காலமாக தொடர்ந்து நிகழ்ந்துவரும் ஒரு பெரும்பிரச்சாரத்தின் எளிய எதிரொலியை மட்டுமே.

இந்தியாவின் வறுமை, அசுத்தம், குற்றங்கள், அனைத்துக்குமே இந்தியமாபு, இந்தியப்பண்பாடு, இந்துமதம் மட்டுமே காரணம் என திரும்பத்திரும்ப இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. கல்விமுறை, ஊடகங்கள், பொதுவான அறிவியக்கம் வழியாக நாலைந்து தலைமுறைகளாக சராசரி இந்திய மனம் அப்படி நம்பும்படிப் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த மூளைச்சலவையில் இருந்து வெளிவருவது அத்தனை எளிதல்ல. சொல்லப்போனால் இன்றைய சூழலில் அது சாத்தியம்கூட அல்ல. ஏனென்றால் அந்த மூளைச்சலவைக்கு ஆளானால் நீங்கள் ‘நவீனச்சிந்தனை’ கொண்டவர், மறுத்தால் ‘மதவாதி’ என ஆக்கப்பட்டிருக்கிறது.

இச்சூழலில்தான் இந்தியாவின் மகள் போன்ற ஆவணப்படங்கள் வருகின்றன. இவை உருவாக்கும் பிம்பங்கள் இந்தியா மீது அக்கறையுடன், இச்சமூகத்தை சீர்திருத்த எண்ணும் சிந்தனைகளுடன் இணைந்துகொள்வதில்லை. அவை இந்தியாவை எதிர்மறையாகச் சித்தரிக்கக்கூடிய, இந்தியப்பண்பாட்டையும் மதத்தையும் இழிவுபடுத்தக்கூடிய வலுவான சிந்தனைப்போக்கின் ஆதாரங்களாகவே மாறுகின்றன. ஆகவேதான் இவற்றை ஐயத்துடன் பார்க்கப்படுகின்றன.

இந்தியாவின் மகள் அத்தகைய நுண்மையான காட்சிச்சித்தரிப்புகள் கொண்ட ஆவணப்படம். அதில் இந்தியாவின் சராசரி ஆணின் மனநிலை வெளிப்படுத்தப்பட்டிருப்பதாகவே கொள்வோம். அந்த பாலியல்வல்லுறவுக்கு எதிராக இந்தியா முழுக்க எழுந்த மாபெரும் தார்மீகக் கோபம், அரசையே அதிரவைத்த அலை பதிவாகியிருக்கிறதா? இல்லை. ஏனென்றால் அது அந்த அம்மாள் இந்தியாபற்றி உருவாக்க எண்ணும் மனநிலைக்கு எதிரானது

அந்தப்படம் தடைசெய்யப்பட்ட போது அவர் கொடுத்த பேட்டியில் இந்தியா நோயுற்ற சமூகம் என்கிறார். அவர் காட்டவிரும்பியது அதை மட்டுமே.

ஆகவேதான் ஒரு ஜெர்மானியப்பேராசிரியர் இந்தியா என்பது கற்பழிப்பின் தேசம், இந்திய ஆண்களுக்கு உயர் ஆய்வில் இடமளிக்கமுடியாது என்று முடிவு எடுக்கிறார். சிந்தனைசெய்து பாருங்கள், ஒரேயொரு ஆவணப்படம் அப்படிச் சொல்லவைக்குமா என்ன?. அது தொடர்ச்சியாக நிலைநிறுத்தப்படும் ஓர் பிம்பம், இந்தப்படம் அதில் சென்று சேர்ந்துகொள்கிறது. பிரச்சினை இருப்பது இங்குதான். [University of Leipzig ன் பேராசிரியர்
Annette Beck-Sickinger]

இந்தியாவில் பாலியல் வல்லுறவுக்குற்றங்கள் அதிகமா? அதற்கு இந்திய ஆண்களின் சராசரி மனநிலை காரணமா? இந்தியாவின் இன்றுள்ள சமூகமனநிலை பாலியல் வல்லுறவை மறைக்கவும் அதன் மூலம் ஊக்குவிக்கவும் செய்கிறதா? இந்தியச்சட்டமும் காவல்துறையும் பாலியல் வல்லுறவுக்கு சாதகமானவையா? எல்லாவற்றுக்கும் என் பதில் ஆம் என்பதே.

அதை வெளிப்படுத்தி இந்திய உளவியல் மேல் வலிமையான தாக்குதலைத் தொடுக்கவேண்டுமா? ஆவணப்படங்கள், திரைப்படங்கள் தேவையா? அனைத்துக்கும் என் பதில் ஆம் என்பதே

ஆனால், இந்த தேசத்தின் மக்கள் மீதான அன்புடன், நன்மதிப்புடன் அது செய்யப்படவேண்டும். லெஸ்லியின் இந்த ஆவணப்படத்தை இந்தியாவின் சமூகசீர்திருத்தவாதி ஒருவர் எடுத்திருந்தால் அதன் பொருள் வேறு. இங்கே இவரது நோக்கம் சீர்திருத்தம் அல்ல. இந்த அம்மணி இந்தப்படத்தை இந்தியாவிற்காக எடுக்கவும் இல்லை. இது வெளிநாடுகளுக்காக இந்தியா பற்றி எடுக்கப்பட்ட ஒரு பிரச்சாரப்படம்.

இந்தப்படத்தை முழுமையான நல்லெண்ணத்துடன் நோக்கி இதை ஆதரிப்பவர்களின் பரந்தஉள்ளம் பாராட்டுக்குரியது. ஆனால் நான் ஆதரிக்கவேண்டும் என்றால் எனக்கு இதை எடுப்பவர்களின் வரலாறு தடையாக உள்ளது.

ஏன் இந்தியாமீதான இந்த தொடர்அவதூறு நிலைநிறுத்தப்படுகிறது? முதற்காரணம், இது இந்தியாவை வெள்ளையர் ஆண்டபோது உருவாக்கப்பட்ட கருத்துநிலை. இந்தியர்களுக்கு தங்களைத்தாங்களே ஆண்டுகொள்ளும் அறிவுத்திறனும் அறவல்லமையும் இல்லை என்று அவர்கள் ஊட்டிய எண்ணமே இங்கே காலனியாதிக்கத்தை நிலைநாட்டியது. இன்றும் காலனியாதிக்கமனநிலையை தக்கவைத்துக்கொள்ளவே மேலைநாட்டு ஊடகங்களில் ஒருசாரார் விழைகிறார்கள். பிபிஸி எப்போதுமே அந்த எண்ணம் மேலோங்கிய ஊடகம்

இரண்டு, இவ்வாறு இந்தியர் மனதில் உருவாக்கப்படும் தன்வெறுப்பு மதமாற்ற சக்திகளுக்கு மிகமிகச் சாதகமானது. இந்தியாவின் பண்பாடு, மதம், வரலாறு மீதான மதமாற்ற சக்திகளின் தொடர்தாக்குதலை காந்தி , அம்பேத்கர் முதல் பலர் தொடர்ந்து எழுதிவந்திருக்கிறார்கள். இந்தியர் மனதில் அது உருவாக்கும் தாழ்வுணர்ச்சி ஒருபக்கம். மறுபக்கம் இங்கே மதமாற்ற நோக்கங்களுக்காக அங்கிருந்து நிதியளிப்பவர்களுக்கு மதமாற்ற சக்திகள் அங்கே உருவாக்கியிருக்கும் சித்திரத்துடன் அது ஒத்துபோகிறது என்பது. ஆகவே அவர்களுக்கு அது உவப்பானது.

ஜெர்மானியப்பேராசிரியர் இந்தியா கற்பழிப்பின் நாடு , ஆகவே இந்திய ஆய்வுமாணவன் சகமாணவிகளை கற்பழிப்பான் என முடிவுகட்ட இதுவே காரணம். அவன் அங்குள்ள ஒரு சர்ச்சிற்குச் சென்றுவருவான் என்றால் அந்த எண்ணத்தை மாற்றமுடியும்! நான் லெஸ்லியின் இந்த ஆவணப்பட விவகாரத்தை இங்குள்ள மதப்பிரச்சாரகர்கள் தொடர்ந்து மேடையில் பேசிவருவதைக் காண்கிறேன். கற்பழிக்கும் இந்துக்களின் மனம் மாற அருளும் கர்த்தாவே என நெக்குருகுகிறார்கள்!

காலனியாதிக்கக் காலகட்டத்தில் உருவான இந்த இந்திய வெறுப்பு, இந்தியப்பண்பாட்டு எதிர்ப்பு, இந்துமதநிராகரிப்பு மனநிலையை ஏன் ஐரோப்பா, குறிப்பாக பிபிஸி போன்ற பிரிட்டிஷ் அமைப்புகள் நீடிக்க விழைகின்றன?

சமீபத்தில் ராய் மாக்ஸம் சொன்னார், இந்தியாவில் பெரும் செயற்கைப்பஞ்சங்களை பிரிட்டிஷ் ஆட்சி உருவாக்கியது என்பதை பெரும்பாலான பிரிட்டிஷார் அறிந்திருக்கவில்லை. அறிஞர்களுக்குக் கூட அது தெரியாது. அது ஆதாரபூர்வமாகச் சொல்லப்படும்போது சராசரி பிரிட்டிஷ்மனம் கொதிப்படைகிறது. நாகரீகம் இல்லாமல் பஞ்சத்தில் செத்துக்கொண்டிருந்த இந்தியாவை பிரிட்டிஷார் மீட்டனர் என்பதே அவர்கள் நம்புவது. அவர்களுக்குச் சொல்லப்பட்டிருப்பது அதுவே

சமீபத்தில் நீங்களே எழுதிய கடிதத்திலும் இதைக் குறிப்பிடுகிறீர்கள். பஞ்சம் பற்றிய தகவல்கள் சொல்லப்படும்போது பிரிட்டிஷார் எப்படி கொந்தளிக்கிறார்கள் என்று. அதாவது சராசரி பிரிட்டிஷ்குடிமகன் எதை அறியவேண்டும், எதை நினைக்கவேண்டும் என்பதை இந்த வகையான ஆவணப்படங்கள்தான் நிர்ணயிக்கின்றன

இந்தியாவில் பிரிட்டிஷார் உருவாக்கிய செயற்கைப்பஞ்சத்தைப் பற்றி, அது உருவாக்கிய பேரழிவுகளைப்பற்றி பேச அங்குள்ள ஊடகங்கள் விரும்புவதில்லை. அந்த அழிவுகளுக்குக் காரணம் இந்தியாவின் பின்தங்கிய உற்பத்திமுறை, இந்தியப்பண்பாட்டில் உள்ள சாதிமுறை, இந்துமதம் போதிக்கும் மனிதாபிமானம் அற்ற கருத்துக்கள் மட்டுமே என நூறு வருடமாக திரும்பத்திரும்ப வாதிட்டு வருகிறார்கள். அதை மறுக்கும் எதையும் அவர்கள் அனுமதிப்பதில்லை.

உதாரணமாக பஞ்சம் பற்றி எழுதும் ராய் மாக்ஸம் போன்ற நடுநிலை எழுத்தாளர்களின் நூல்கள் அங்கே விற்பதில்லை. ராய் எழுதிய உப்புவேலி அமெரிக்காவில்தான் விற்றது. பிரிட்டனின் புறக்கணிக்கப்பட்டது. இந்தியாவில் அது கிடைக்காமலேயே பார்த்துக்கொள்ளப்பட்டது. அதை டாலர்விலையில் இணையம் மூலம் வெளிநாட்டில் இருந்துதான் வாங்கமுடியும்.இத்தனைக்கும் ராயும் இந்தியா மேல் கடுமையான விமர்சனத்துடன்தான் இருக்கிறார்.கூடவே கொஞ்சம் பிரிட்டிஷ் வரலாற்றையும் சொல்கிறார்.

ராய் மாக்ஸம் கேட்டார், ஏன் இந்தியா ஒட்டுமொத்தமாக பஞ்சத்தை மறந்துவிட்டது? இடதுசாரி ஆய்வாளர்கள், கல்வியாளர்கள் எவரும் அதைப்பற்றிப் பேசவில்லை என. நான் சொன்னேன். இடதுசாரி ஆய்வாளர்கள் ஐரோப்பாவே உலகை காக்கும் என்றும் பிரிட்டன் இந்தியாவின் ரட்சகன் என்றும்ம் கார்ல் மார்க்ஸ் எழுதியதை மதநம்பிக்கையாகக் கொண்டவர்கள். அவர்களின் ஐரோப்பியவழிபாட்டு மனநிலை பஞ்சங்களை நோக்கி கண்மூடவைத்தது. அவர்கள் இந்தியாவை பின்தங்கிய பண்பாடு என்று சொல்லவே எப்போதும் முயல்கிறார்கள். நமது கல்வியாளர்களைப் பொறுத்தவரை அவர்கள் நாடும் அங்கீகாரம் முழுக்க மேலைநாட்டில் இருந்தே வரவேண்டும். மேலைநாட்டு அறிஞர்களுக்குப் பிரியமற்ற எதையும் அவர்கள் பேசமாட்டார்கள்.

இச்சூழலில் வந்திருக்கிறது இந்த ஆவணப்படம். இதில் உண்மை இருக்கிறதா என்பதைப்பார்ப்பதற்கு முன்னால் இது எவரால் எவருக்காக எடுக்கப்பட்டிருக்கிறாது என்பதையே பார்க்கவேண்டும். எந்த மனநிலையை இது உருவாக்குகிறது என்றே பார்க்கவேண்டும். இதைச் சொல்பவர்கள் எதையெல்லாம் மறைக்கிறார்கள் எதையெல்லாம் மிகைப்படுத்துகிறார்கள் என்பதை கவனிக்கவேண்டும்.

ஆக, ஓர் இந்தியனாக நான் இந்த ஐரோப்பியர்களின் நல்லெண்ணத்தை நம்பவேண்டுமென்றால் முதலில் இவர்கள் கொஞ்சமேனும் தன்னைப்பற்றிய உண்மைகளைச் சொல்லவேண்டும். கொஞ்சமேனும் தங்கள் செயல்களை மறுபரிசீலனை செய்துகொள்ள வேன்டும். பஞ்சம், அதன் காரணங்கள், பின்விளைவுகள் பற்றி ஒரு பத்து உண்மையான ஆவணப்படங்களை பிபிஸி எடுக்கட்டும். பிரிட்டிஷ் மக்களிடம் உண்மையைப் பேசட்டும். அதன் ‘மனிதாபிமான- அற -ஒழுக்க உணர்ச்சியை’ நானும் ஏற்றுக்கொள்கிறேன்.

ஜெ

முந்தைய கட்டுரைஆதிமெய்ப்பொருளான வெளியின் பெருந்தரிசனம்(விஷ்ணுபுரம் கடிதம் ஆறு)
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 53