”நான் என்று கூறும்போது உன் மனம் பிரபஞ்சம் நோக்கி விரிவடையட்டும். பிரபஞ்சத்தை ஒருபோதும் உன்னை நோக்கிக் குறுக்காதே.”
(பிங்கலனிடம் மகாபிரபு இறுதியாகச் சொல்வது)
அன்பு ஜெயமோகன்,
பிரபஞ்சம் எனும் சொல் சமஸ்கிருதச்சொல். அதன் பொருள் ‘நன்கு விரிந்தது’ என்பதே. நன்கு விரிந்த அல்லது விரிந்து கொண்டிருக்கும் அமைப்பைக் குறிக்கும் சொல்லே பிரபஞ்சம். தமிழில் பேரண்டம் எனச் சொல்லலாம். பிரபஞ்சத்தை நம்மால் ஒருபோதும் முழுமையான புறவயத்தில் கண்டுவிடவே முடியாது. அறிவியலே கூட அதைச் சில கருதுகோள்களின் உதவியுடனேயே வரையறுத்திருக்கிறது. ஆக, பிரபஞ்சத்தின் வடிவத்தை அதுகுறித்த பொதுக்கருத்திலிருந்தே வரைந்து கொள்ள வேண்டி இருக்கிறது. அவ்வடிவமும் உத்தேசமானது என்பதை எச்சூழலிலும் நாம் மறந்துவிடக்கூடாது.
பிரபஞ்சம் உள்ளிட்ட எல்லாவற்றுக்கும் அடிப்படையாய் இருப்பது வெளி ஆகும். அதை வெட்டவெளி எனச் சித்தர்கள் குறிப்பிடுகின்றனர். அதுவே மெய்ப்பொருள் அல்லது ஆதி என்றும் நம்பப்படுகிறது. வெட்டவெளி > பேரண்டங்கள் > அண்டங்கள் > விண்மீன் குடும்பங்கள் > கதிரவக்குடும்பம் > பூமிக்கோள் > உயிர்கள் > மனிதன் என்பதாக ஒரு நேர்வாக்கியத்தை அமைத்தால் நம்மால் பரிணாமத்தை ஓரளவு விளங்கிக் கொள்தல் சாத்தியம். வெட்டவெளியில் பிரபஞ்சம் தோன்றியதை பெருவெடிப்புக் கொள்கையின் வழியாக நம்மால் அறிய முடிகிறது. பெருவெடிப்புக்கு சில மைக்ரோ வினாடிகள் முன்பு என்ன நிகழ்ந்திருக்கும் என்பது இதுவரை ஆய்வாக மட்டுமே இருந்து கொண்டிருக்கிறது. அறிவியலுக்குள் போனால் கொஞ்ச நேரத்திற்குள்ளாகவே நம்மில் பெரும்பாலானோர் சலிப்படைந்துவிடக்கூடும். ஆதலால், பேரண்டத் தோற்றத்தை எளிமையான வழியில் புரிந்து கொள்ளப் பார்ப்போம். எவ்வித இயக்கமும் இல்லாதிருக்கும் வெட்டவெளியில் திடீரென ஒரு இயக்கம் நிகழ்கிறது. அவ்வியக்கமே பேரண்டம் உள்ளிட்டவைகளுக்கு அடிப்படையாகவும் அமைகிறது. திடும்மென வெட்டவெளியின் ஒரு புள்ளியில் நிகழும் வெடிப்பு(இயக்கம்) விரியத்துவங்குகிறது. அவ்விரிவால் அண்டங்கள் உள்ளிட்ட அமைப்புகள் முளைக்கின்றன. அசைவின்றி இருக்கும் வெட்டவெளியில் திடும்மென்று நிகழும் அசைவைக் காட்சியாக்கிக் கொண்டால் பிரபஞ்சத்தின் தோற்றத்தையும் நம்மால் மனதுக்குள் கண்டுகொள்ள முடியும்.
வெட்டவெளியின் சிறுபுள்ளியில் திடீரென நிகழும் வெடிப்பு அல்லது விரிவின்போது எழும் சத்தமும்(ஒலி), வெளிச்சமும்(ஒளி) பேரண்டத்திற்கான முதற்புள்ளிகள். சமயத்தில் அவ்வொலியை ஓங்காரம் என்றும், அவ்வொளியை சோதி என்றும் குறிப்பிடுவதாக நான் கருதுகிறேன். இங்கு ஒன்றைத் தெளிவுபடுத்துவது அவசியமாக இருக்கிறது. நம் முன்னோர் நமக்களித்திருக்கும் சமயத்தை அறிவியல் என நிரூபிக்க நான் முயற்சிக்கவில்லை. அப்படியாக முயற்சிப்பது சமயத்தைக் கேவலப்படுத்தும் செயல் என்பதும் என் தீர்மானமான எண்ணம். முன்னோர்கள் எனக்களித்திருக்கும் குறியீடுகளைக் கொண்டு பிரபஞ்சம் உள்ளிட்டவை குறித்த என் பார்வையை முன்வைக்கிறேன்; அவ்வளவே. மீண்டும் ஒலி, ஒளிக்கு வருவோம். நாதம், விந்து என இரண்டு சொற்களை சமயத்தில் தோற்றக்குறியீடுகளாகக் குறிப்பிடுவர். நாதம் என்பது ஒலி; விந்து என்பது ஒளி. ”நாத விந்து கலாதி நமோநம” எனும் அருணகிரிநாதரின் பழனித்திருப்புகழ் ஒரு சான்று. நாதம்(ஒலி) முதலிலும், விந்து(ஒளி) பிற்பாடும் என்பதாகவும் அப்பாடலே சொல்கிறது. சமயத்தில் இறைவனை நாதன் என்றும் சொல்வதை நினைவுகூரவும். பிரபஞ்சத்தோற்றத்திற்கு அடிப்படையான நாதத்திற்கு மூலமான பொருளைச் சுட்டும் குறியீடு நாதன்.
சைவசமயத்தில் சில குறியீடுகள் இருக்கின்றன. அவை வெட்டவெளி, பேரண்டம் உள்ளிட்டவற்றை இன்னும் எளிதாகப் புரிந்து கொள்ள நமக்கு உதவுகின்றன. சிவம், சக்தி எனும் முதன்மைக் குறியீடுகளை முதலில் பார்ப்போம். சிவம் என்பது வெட்டவெளியைக் குறிப்பது. சவம் என்றால் உயிரற்றது என நாமறிவோம். அப்படியானால் சிவம்? ஆம், உயிருள்ளது. சவத்தை இன்னும் நுட்பமாக அணுகினால் உயிரற்றதோடு இயக்கமும் அற்றது எனத் தெரிந்து கொள்ளலாம். சிவத்தை நுட்பமாக அணுகினால இயக்கமற்று உயிருள்ளதாகக் காட்சியளிக்கும். அதாவது, இயக்கமில்லாமல் உயிரோடு இருக்கும் வெளியே சிவம். திடீரென வெளியில் நிகழும் அழுத்தமே வெடிப்பு அல்லது விரிவாகிறது என்று ஏற்கனவே பார்த்தோம். அந்நிலையில் சிவம் உயிருள்ள இயக்கமாக மாறுகிறது. அவ்விடத்தில் அதன் பெயர் சிவமன்று, சக்தி. நினைவில் கொள்வதற்காக மீண்டும் பார்ப்போம். உயிருள்ள இயக்கமற்ற வெளியான சிவம் இயக்கத்திற்கு வரும்போது சக்தி எனச்சொல்லப்படுகிறது. இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், உயிருள்ள இயக்கமற்ற வெளியைச் சிவம் என்றும் உயிருள்ள இயக்கங்கள் நிகழும் வெளியை சிவசக்தி என்றும் கொள்ளலாம். இப்போது பிள்ளையார், முருகன் குறியீடுகளுக்கு வருவோம். ஓங்கார வடிவாகச் சொல்லப்படுபவன் பிள்ளையார். வெட்டவெளிக்குள் நிகழும் இயக்கத்தின் துவக்கமாய் வெளிப்படும் ஒலியைச் சுட்டி நிற்பவன் அவன். அவன், இவன் எனும்போது அதை நபர்களாகப் புரிந்துகொள்ளும் அபத்தமே இன்றுவரை நிலவிவரும் கொடுமைக்கு எப்போதுதான் விடிவு கிடைக்குமோ? ஒலியைத் தொடர்ந்து கிளைக்கும் பேரொளியைச் சுட்டும் குறியீடே முருகன். “ஆதிநடுஅந்தம் கடந்த நித்தியானந்தப் போதமாய் / பந்தம் தண்ந்த பரஞ்சுடராய்” எனும் குமரகுருபரரின் கந்தர்கலி வெண்பா வரிகளைக் கவனியுங்கள். ”சோதிப்பிழம்பதோர் மேனியாக” எனும் கந்தபுராண வரியையும் நினைவு கூர்வோம். ”ஓங்காரத்து உள்ளொளிக்குள்ளே முருகனுருவங் கண்டு” என்று கந்தர் அலங்காரத்தில் அருணகிரிநாதர் குறிப்பிடுவதைக் கவனியுங்கள். வெட்டவெளியின் சிறுபுள்ளியொன்றில் திடும்மென நிகழும் வெடிப்பு அல்லது விரிவே பிரபஞ்சத்தோற்றத்துக்கான அடிப்படை என்பதை நினைவுக்குக் கொண்டு வாருங்கள். “ஓமென்ற சிறுமுட்டை உள்வீடு அவன்வீடு / நம்வீடும் அந்த இடமே” எனும் கண்ணதாசனின் எளிய பாடல்வரிகளை அக்காட்சியோடு பொருத்திப்பாருங்கள். அறிவியல் விளக்கங்களால் பெற்றுவிட முடியாத ஆனந்தத்தை நாம் உணரலாம். அதுதான் நம் மரபின் வேரும்கூட.
அறிவியலைக் கட்டுரை எனக் கொண்டால், சமயத்தை கவிதை எனச் சொல்லலாம். கட்டுரைகள் அனுபவத்தைப் பொதுப்படையானதாக மாற்ற முயல்பவை. கவிதைகளோ அனுபவத்தைத் தனிப்பட்டதாக உணரச்செய்பவை. கட்டுரையின் சொற்கள் நேரிடையானவை; அதனாலேயே நமக்குச் சலிப்பூட்டுபவை. சமயத்தின் சொற்கள் உருவகங்களாலும், உவமைகளாலும் ஆனவை. அதனாலேயே நமக்குத் தொடர்ந்து உற்சாகம் தருபவை. சமூகத்திற்கு வேண்டுமானால் அறிவியல் முக்கியமானதாக இருக்கலாம். தனிமனிதனுக்கோ சமயம்தான் முக்கியம். சமயம் என்பதை இன்றைய மதமாக அர்த்தப்படுத்திக் கொண்டால் நான் பொறுப்பல்ல. “பக்தி என்பது தனிமனிதனுக்கானது. ஒழுக்கம் என்பது சமூகத்துக்கானது” எனும் பெரியாரின் வரிகளே அதற்குத் தகுந்த சான்று. தனிமனிதனுக்கான பக்தி சரியாக இருந்தால், சமூகம் தானாகவே ஒழுக்கமாக இருக்கும். நம் நாட்டின் பெரும்பாலான ஆத்திகர்களும், பெரும்பாலான நாத்திகர்களும் பக்தியை இதுகாறும் மேலோட்டமாகவே புரிந்து வைத்திருப்பதுதான் வேதனை தருகிறது. ஒருவனை அவனிலிருந்து விடுவித்து வெட்டவெளியின் சிறுதுகளாக அவனை உணரச் செய்வதே உண்மையான சமயமாக இருக்க முடியும். மற்றவை எல்லாம் – எப்படிப்பட்ட புனித அடையாளங்களை முன்வைத்தாலும் – போலிகளே.
”வெட்டவெளி தன்னை மெய்யென்று இருப்போர்க்கு பட்டயம் ஏதுக்கடி, குதம்பாய் பட்டயம் ஏதுக்கடி”(குதம்பைச் சித்தர்), “மெய்ஞானப் பாதையிலேறு – சுத்த வேதாந்த வெட்டவெளியினைத் தேறு”(கடுவெளிச் சித்தர்), ”வெட்டவெளி தனையன்றி வேறு தெய்வமில்லையே”(சிவவாக்கியர்), ”வெட்டவெளி தன்னில் விளைந்த வெறும்பாழ் / திட்டமுடன் கண்டு தெளிவதினி எக்காலம்?”(பத்ரகிரியார்), ”வீட்டில் ஒருவரில்லை வெட்டவெளி யானேண்டி”(பட்டினத்தார்), “வெட்டவெளி யாயறிவாய் வேறுபல சக்திகளைக் / கொட்டுமுகி லாயணுக்கள் கூட்டிப் பிரிப்பதுவாய்”(பாரதியார்) போன்ற பாடல்களின் ஊடாக வெட்டவெளி அனுபவங்களைக் குறித்த வியந்தோதல் தொடர்ந்தபடிதான் இருக்கிறது. அதுவே விஷ்ணுபுரத்தின் ஒரு வாக்கியமாகவும் வந்தமர்ந்து இருக்கிறது.
முருகவேலன்,
படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,
கோபிசெட்டிபாளையம்.