கலங்காது கண்ட வினைக்கண் -கிருஷ்ணன்

வினைத்திட்பம் ஒரு நீர்ச் சுழல் அதில் அறிந்தோ அறியாமலோ கால் பட்டு விட்டால் சுழற்றி இழுத்து ஆழத்துக்கு கொண்டு சென்று விடும். ராய் மாக்ஸமின் உப்பு வேலி தேடலும் இவ்வாறே. நம்முன் ஏராளமாகக் குவிந்து கிடக்கும் ஓய்வு நேர ஆய்வாளர்கள் முன் இப்புத்தகம் மூலம் ஒரு தரக்கோடு வரைகிறார் தன்னை ஆய்வாளர் என கூறிக் கொள்ளாத ஐரோப்பிய ஆய்வாளர்.

‘உப்பு வேலி’ மிகச் சரளமாக மொழியாக்கம் செய்யப் பட்ட ஒரு வரலாற்றுத் தேடல் நூல் . இது ஒரு புனைவுக்கு ஒப்பானது, ஒரு அபுனைவின் சான்றுகள் உள்ளது. இன்றைய நமது “புனைவு கலந்த அபுனைவு” என்கிற இலக்கியப் போக்குக்கு வெகு அருகில் வருவது, ஒரு வித்தியாசம் இதில் உள்ள அனைத்தும் நிஜம் என்பது மட்டுமே.

சுமார் 2500 கி மீ , 12 அடி உயரமும் 6 அடி அகலமும் ஒரிசாவில் இருந்து பாகிஸ்தான் பஞ்சாப் வரை, கி பி 1830 முதல் 1880 வரை சுமார் 50 ஆண்டுகள் , ஒரு மயிலுக்கு 4 காவல் ஊழியர்கள் வீதம் 14000 ஊழியர்களுடன் பராமரிப்பிலும் புழக்கத்திலும் இருந்த ரயில்வே போன்ற ஒரு மாபெரும் அமைப்பு குறித்த ஒரு வரலாற்றுக்கண்டுபிடிப்பு ராயுடைய இந்த உப்பு வேலி .

இப்புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கும் போதெல்லாம் நமக்குள் அடிக்கடி தோன்றுவது , எவ்வளவு அயராத பின்தொடர்வு என்பதே. இவரின் தேடல், தர்க்கத்தை மீறி ஒரு உள்ளுணர்வு தந்த உந்துதலே. தையல் ஊசி போல அடைந்த சில பெரும் கண்டுபிடிப்புகளுக்கு தகவல்செறிவை விட இந்த உள்ளுணர்வே காரணமாக அமைந்திருக்கிறது. ராய் இந்தியா வரும் முன்பே அனைத்து வாயில்களும் மூடியே இருக்கிறது , தர்க்க அறிவு இம்முயற்சிக்கு எதிராகவே உள்ளது. இது பற்றி யாரும் அறியவில்லை , இது கைவிடப் பட்டு 150 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது , வேறு யாரும் இதைப் பற்றி எழுதவில்லை, Sleeman னுடையதைத் தவிரமூல ஆவணங்கள் கிட்டத் தட்ட இல்லவே இல்லை. இருந்தும் ஒவ்வொரு முறையும் நம்பிக்கை குறைந்தாலும் ராயை இந்தியாவுக்கு மூன்று முறை இழுத்து இழுத்து வந்த நீர் சுழல் எது என்றால் அது அவரின் உள்ளுணர்வும் நம்பிக்கையுமே. ஒரு வகையில் இதை மூட நம்பிக்கை என்று கூடச் சொல்லலாம்.

இதில் இரண்டு முக்கிய கூறுகள் உள்ளது ஒன்று அவரின் இந்திய பயணமும் தேடலும் அதில் கிடைத்த சில வினோத சுவாரஸ்ய அனுபவமும் . இரண்டாவது இது உள்ள தகவல் சேகரிப்பும் முயற்சியும்.

முதலில் இந்தியா வந்தபோதே மும்பை ஆட்டோ ஓட்டுனர்கள் ஒட்டுண்ணிகளாக வந்து சூழ்ந்து இன்று போக்குவரத்து வேலை நிறுத்தம் எனச் சொல்லி அழைத்துச் சென்று காசு பிடுங்கிய அனுபவம் முதல் , இறுதியாக சாம்பலில் பரமத் லைன் எனச் சொல்லப் படும் உப்பு வெளியின் எச்சங்களை ஒரு தற்போதைய துறவியும் முன்னாள் கொள்ளைக்காரருமான ஒரு நபர் காண்பிப்பது , இவருக்கு உதவிய சந்தோஷ் மற்றும் தீதி . இந்தியாவின் குக்கிராமங்களில் எல்லாம் ரயிலிலும் , பட் பாட்டிலும், ஜீப்பிலும் , குதிரையிலும், நடந்தும் என ‘அலைந்து திரிந்தது ‘ ஒரு பயணிக்கு ஆர்வமூட்டக் கூடியது. அங்கு முன் பின் தெரியாதவர்கள் வீட்டில் தங்குகிறார் , அவர்களுடன் வினோதமான உணவுகளை உண்கிறார் , இதுவே அவருக்கு சாதாரண இந்தியா மீதும் சராசரி இந்தியர்கள் மீதும் ஒரு அன்பை உருவாக்குகிறது.

உப்பு அவசியத் தேவை தானா என்பதையும் பிற நாடுகளில் இவ்வாறு உப்பு வரி உள்ளதா என்பதையும் ஆராய்கிறார். உப்பு நாம் உயிர்வாழ மிக அவசியமான பொருள் எனவும் , பெங்கால் பஞ்சத்தில் இறப்பை உப்பு துரிதப் படுத்தியிருக்கிறது எனவும் , நீருக்கு தாகம் போல , உணவுக்கு பசி போல , உப்புக்கு நமது உடல் ஏங்குவதில்லை ஆனால் உப்புக் குறை பாடு உயிரிழப்பில் முடியும் என்பதையும் அறிகிறார். உப்பு வெறும் ஒரு சுவையூட்டி அல்ல.இதுவே காந்தியின் உப்பு சத்தியாகிரகத்திற்கும் தண்டி யாத்திரைக்கும் காரணமாக அமைகிறது எனலாம். உப்பு வரி இந்தியாவில் கிட்டத் தட்ட ஒரு சராசரி நபரின் 2 மாதச் சம்பளம். இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி ஆகும் உப்பின் விலையே இந்தியாவிவிலும் உள்ளபடி பார்த்துக் கொள்ளப் பட்டது. இந்தியாவில் உப்பு தயாரிப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டது, உப்புவயல் சொந்தக்கார இந்தியர்கள் தொடர்ந்து உப்புவரியை உயர்த்தும் படி அரசை கோரிக் கொண்டே இருந்திருக்கிறார்கள் . ராபர்ட் கிளைவு தனியாக ஒரு நிறுவனம் தொடக்கி அரசுக்குப் போட்டியாக ஊழலில் திளைக்கிறார் , A.O. Hume வரியை தீவிரப் படுத்துகிறார் , வெளியை உறுதியாக்குகிறார் , மீறுபவர்கள் மீது பெருமளவில் வழக்குத் தொடுக்கிறார் , பின்னர் பணி முடிந்து இந்தியாவிலேயே தங்கி அரசுக்கு எதிராக காங்கிரஸ்சை துவக்குகிறார் . வரி கொடாமல் இந்த வேலி வழியே உப்பை கொண்டு செல்ல சில கொள்ளையர்களின் தந்திரமும் , வழக்குகளும் , பிடிபடுதலும் உப்பு ஒரு அதி முக்கிய பொருள் எனச் சான்று கூறுகிறது.

அதே காலத்தில் பிரான்சிலும் , 2000 ஆண்டுகள் முன் சீனாவிலும் உப்பு வரி இருந்திருக்கிறது , இது உலகம் முழுக்க இருந்திருக்கிறது.பிரான்சில் உப்பு வரிக்கெதிராக ஒரு கலகமே நிகழ்ந்திருக்கிறது அது ‘கியாபெல்’ கலக்கம் , வன்முறையால் கலக்கம் வென்றிருக்ருக்கிறது. ஆபிரிக்காவில் உப்புக்கு ஊதியம் அளிக்கப் பட்டிருக்கிறது , ஒரு பண்டமாற்றுப் பொருளாகவும் இருந்திருக்கிறது. உப்புக்கு தனி சாம்பளமான salarium என்கிற சொல்லில் இருந்து தான் salary பிறந்திருக்கிறது. ‘உப்பு’ நாம் மதிப்பிடுவதை விடவும் இன்றி அமையாதது.

பிரிட்டனில் தனியார் மற்றும் அரசு ஆவணக் காப்பகங்களில் இருந்து , வரை படங்களையும் பெறுகிறார் , அறிக்கைகளை படிக்கிறார் , நகல் எடுக்கிறார். ஒரு ராணுவ Gps கருவியை இயக்க ஒருமாதம் பழகுகிறார் நடந்து சரி பார்கிறார் ,அதனுடன் கருவியுடன் 1998 இல் இந்தியாவில் திரிகிறார், பாகைகள் பலமுறை பிழிகிறது . ஹைதராபாத் செயற்கைக் கோள் ஆய்வு மைய்யத்திற்கு செல்கிறார் , செயற்கைக் கோள் படங்கள் அவருக்கு உதவுமா இலையா எனத் தெரிவிப்பதற்கே பல நாட்களை எடுத்துக் கொள்கிறார்கள். இந்தியாவின் கால விரயமும் தள்ளிப் போடுதலும் அவருக்கு சோர்வை அளிக்கிறது.

அனைத்து இடர்களுக்கும் பிறகு இந்த உப்புவேலியின் எச்சத்தை எதிர்பாராமல் கண்டுபிடிக்கிறார்.அவருடன் நாமும் மகிழ்ச்சியில் துள்ளிக் குத்திக்கிறோம்.

நம்மை திருகிப் பிழிந்த வரலாற்றில் இவ்வளவு முக்கிய பங்கு வகித்த வேலி பற்றி ஏன் எந்த புத்தகமும் இல்லை , ஏன் எந்தப் பதிவுகளும் இல்லை , எந்த நாட்டுப்புற மற்றும் வாய்மொழி கதைகளும் இல்லை ? இந்திய சமூகமாகிய நாம் பஞ்சம்போல, கொடுந்துயர் போல , பேரழிவு போல நாம் மறக்க விருப்புவதை நாம் சுவடற்று மறந்துவிடுகிறோம். வாழ்க்கைக்கு இது ஒரு வரம், வரலாற்றுக்கு இது ஒரு நட்டம்.

கிருஷ்ணன்.

முந்தைய கட்டுரைவெட்டவெளி கண்டுவிட்டால் எல்லாமே வேடிக்கைதான்(விஷ்ணுபுரம் கடிதம் எட்டு)
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 58